அவளின் மனப்போராட்டம் விஷ்வாவிற்கு நன்றாகப் புரிய, அவன் முகத்தில் சிறு இளக்கம்!!!

“ஹாய்!!!” என சம்பிரதாயமாக அவனே பேச்சைத் துவங்க,

அவளும், “ஹ.. ஹலோ!!!” என்றாள் மெதுவாக.

“சொல்லுங்க பேசணும்னு வரச் சொன்னீங்களாம்” என்று கைகளைக் கட்டியபடி அவளைப் பார்த்திருந்தான்.

பேச வேண்டும் என்று வரச் சொன்னது அவள்தான்!!! ஆனால் இப்போது அவன் முன்பு ஏனோ வார்த்தைகள் அனைத்தும் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டு வெளிவராமல் போராட்டம் செய்ய,

“ஈஸி!!! ரொம்ப டென்ஷன் ஆக வேண்டாம்.. எனக்கு உங்களைப் புரியுது!!!” என அவன் அனுசரணையாகப் பேசவும் மெதுவாய் நிமிர்ந்து அவனின் கண் நோக்கியது அந்த நிலவு..

“உங்களை நிச்சயம் கம்பெல் பண்ணி தான் இதுக்கு சம்மதிக்க வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்..  அப்படித்தான??” என்று அவன் கேள்வியாய் நிறுத்த,

அவள் தலை ஆம் என்பதாய் அசைந்தது.

“இந்தக் கல்யாணத்தை நான் நிறுத்தனுன்றதுக்காக தானே என்கூட பேசணும்னு சொன்னீங்க??” என்று அடுத்ததாக அவன் கேட்க,

பட்டென தலையசைத்து இல்லை என்பதாய் மறுத்தவள்,

“இல்லைங்க.. ” என்று அவன் எதிர்பாரா பதிலைச் சொல்லி அவனை ஆச்சரியப்படுத்தினாள்.

“பின்ன வேறென்ன???” என்றான் இன்னும் ஆச்சர்யம் குறையாமல்.

“எனக்கு… எனக்குக் கொஞ்சம் டைம் வேண்டும்.. “

முழுதாகச் சொல்லி முடி என்பதைப்போல கைகளைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்திருந்தான் விஷ்வா.

“இப்போவே எல்லாத்தையும் சொல்லி முடிச்சிடனும்னு நினைக்கிறேன்.. தப்பா எடுத்துக்காதீங்க!!!” எனும் முன் அறிவிப்போடு தான் துவங்கினாள்.

“என் உலகம் ரொம்ப சின்னதுங்க.. அப்பா, அம்மா, அண்ணன், நான்.. பெருசா பிரண்ட்ஸ் கூட எனக்கு இல்லை.. அப்பா தான் அவரை(ஜெய்) எனக்கு மாப்பிள்ளையா கூட்டிட்டு வந்தாங்க.. அவங்களை பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. இதுதான் வாழ்க்கைன்னு வாழத் தொடங்கிறதுக்கு முன்னாடியே என் கண்ணு முன்னாடியே எல்லாம் முடிஞ்சு போச்சு!!!!”

இந்த இடத்தில் லேசாய் கண் கலங்கும் போலிருந்தது அவளுக்கு. இருந்தும் கண்களை சிமிட்டி கண்ணீரை உள்ளிழுத்தவள்,

“நடந்ததை நம்பவே முடியலை.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் கூட சிரிச்சு சந்தோஷமா பேசிட்டு வந்தவங்க இப்போ உயிரோட இல்லன்னு என்னால சத்தியமா அப்போ நம்பவே முடியலை.. பித்துப்பிடிச்ச மாதிரி இருந்தது.. ஒருவேளை நான் அன்னைக்கு அவர் கூட வெளிய போகாம இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காதோ, என்னால தான் இப்படி ஆச்சோன்னு குற்ற உணர்ச்சி ஒரு பக்கம், இவர் தான் இனி என் வாழ்க்கைன்னு நம்பிட்டு இருந்தப்போ அவர் இல்லவே இல்லைன்ற உண்மை தந்த வலி ஒரு பக்கம், இது எல்லாத்தையும் விட என் சொந்தக்காரங்களே, என்னோட ராசி தான் அவர் இப்படி அல்ப ஆயுசுல இறந்துட்டாருன்னு என் முன்னாடியே பேசி என் மனசை ஒடைச்சது ஒரு பக்கம்னு என்னைப் போட்டு அழுத்த, ரொம்பவே டிப்ரஷன்குள்ள போயிட்டேங்க…”

அன்று இருந்த வலி தற்போது குறைந்திருந்தாலும், காயம் இன்னும் ஆறவில்லை என்பது அவளின் கசங்கிய முகத்திலிருந்தே தெரிய, விஷ்வாவிற்கு இதயத்தில் சுருக்கென்று ஒரு வலி.

அவனால் நிலாவின் நிலையைத் துல்லியமாக உணர்ந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் அந்த சமயத்தில் கிட்டத்தட்ட அவனும் அதே வலியை அடைந்திருக்கிறான் அல்லவா??

ஆனாலும் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் அவள் பேசுவதை அமைதியாகக் கேட்டபடியே நின்றிருந்தான்.

“அதுவுமில்லாம, என்னைசுத்தி இருந்த அம்மா, அப்பா, அண்ணா எல்லாருமே என் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னு என்னைப்பத்தி நினைச்சு அழுது, கஷ்டப்பட்டுட்டு இருந்தது என்னை இன்னுமின்னும் அந்த டிப்ரஷன்குள்ள தள்ளிடுச்சு.. நானே வெளிவரணும்னு நினைச்சாலும் என்னால அது முடியும்னு தோணலை.. அப்பறம்”

அதுவரை இரு வேகத்தில் சொல்லிக்கொண்டு வந்தவள் மேலும் சொல்ல முடியாமல் அவன் முகம் பார்த்துத் தயங்க,

அதைப் புரிந்துகொண்டு,

“எனக்கு உங்களைப் புரியுது!!! நான் உங்களை ஏதும் நினைக்க மாட்டேன்.. தயவுசெஞ்சு இன்னைக்கே உங்க மனசுல இருக்க எல்லாத்தையும் கொட்டிடுங்க.. யு வில் ஃபீல் பெட்டர்!!!”

என்று ஊக்கமளித்தான் விஷ்வா.

“கொஞ்ச நாள் தான் எனக்கு அவங்களை(ஜெய்) தெரியும் அப்படினாலும், அவர் என் மேல காமிச்ச நேசம் என் மனசுல ஆழமா பதிஞ்சிருச்சுங்க.. என்னால அவரை மறக்கவே முடியலை..”

இந்த வார்த்தை விஷ்வாவின் மனதைப் பலமாய் பதம் பார்த்தாலும், உண்மை அதுதானே என நினைத்து மனதை சமன் படுத்திக்கொள்ள முயன்றான்.

“அவங்களை நினைச்சுட்டு இன்னொருத்தரைக் கல்யாணம் பண்ணுறது, அவங்களுக்குப் பண்ணுற துரோகம் தானே!!! அதுனால தான் இத்தனை வருஷமா நான் கல்யாணமே வேண்டாம்னு இருந்தேன்.. ஆனா இனியும் அப்படியே இருக்க முடியாதுன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு”

வலியுடன் லேசாய் புன்னகைத்தவள்,

“இவங்க எல்லாரோட நிம்மதியும், எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணுறதுல தான் இருக்கு.. என்னால இவங்க ரொம்பவே கஷ்டப்பட்டுடாங்க. .. இனியும் அவங்களைக் கஷ்டப்படுத்த எனக்கு மனசு வரலை.. அதே சமயம், இவங்க யாருக்கும் தொல்லை தராம, எனக்கு யாரும் வேண்டாம்னு இதுல இருந்து ஓடிப் போகவும் தைரியம் இல்லை!!! அப்ப இருந்தே முதுகெலும்பு இல்லாமையே இருந்துட்டேன்.. ம்ப்ச்!!!”

அவளின் வார்த்தைகள் அவனை வலிக்கச் செய்தது அதிகத்திற்கும் அதிகமாய்.

“இப்போ என்னால அவங்களுக்குத் தர முடிஞ்ச சந்தோஷம் நீங்க தான்.. அதாவது உங்க கூட நடக்கப்போற இந்தக் கல்யாணம்!! அதை அவங்களுக்கு கொடுக்க ஆசைப்படுறேன்… “

என்றவள் அவனின் முகத்தை தயக்கமாக ஏறிட,

“சொல்லுங்க.. நான் என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்க??” என்றான் விஷ்வா.

” எனக்குக் கொஞ்சம் டைம் வேண்டும்.. உடனே இது எல்லாத்தையும் என் மைண்ட் அக்செப்ட் பண்ணிக்காது… உண்மையை சொல்லணும்னா இந்த நிமிஷம் வரைக்கும் இன்னொரு வாழ்க்கைக்குள்ள போகிற தைரியம் எனக்கு வரலை.. மனசளவுல நான் அதுக்கு இன்னும் தயாராகலை.. இன்னொருத்தரை மனசுல நினைச்சுட்டு உங்களை கல்யாணம் பண்ணிக்கிறது ரொம்பவே தப்பு தான??? உங்களுக்குக் கல்யாணத்தைப் பத்தி நிறைய கனவுகள் இருந்திருக்கும்..  என்னால தான் இப்போ உங்க லைஃபும் ஸ்பாயில் ஆகுதோன்னு கில்ட்டா இருக்கு.. அதான் கொஞ்சம் டைம் கொடுத்தீங்கன்னா நான் கொஞ்சம் கவுன்சிலிங் அட்டென்ட் பண்ணி, இந்த வாழ்க்கையை ஏத்துக்க கொஞ்சம் முயற்சி பண்ணுவேன்.. பிளீஸ் புரிஞ்சுக்கோங்க”

நிலாவின் மறுப்பை எதிர்பார்த்து வந்தவனுக்கு, இந்தப்பேச்சு பெரும் வியப்பைக் கொடுத்தது.

அதுவும் மனநல மருத்துவரிடம் ஆலோசனை செய்வதைப் பற்றியெல்லாம் அவள் யோசித்திருக்கக் கூடும் என நினைத்தும் பார்த்திராதவன், உண்மையில் அவளின் முன்னேற்றத்தைக் கண்டு மனமார மகிழ்ந்தான்.

தான் பேசிய பின்பும் அவன் இன்னும் பதிலளிக்காமல் இருக்கையில்,

எங்கே தவறாக ஏதும் பேசிவிட்டோமோ என்று பயந்த நிலா,

“இதெல்லாம் கட்டாயம் இல்லை.. உங்களுக்கு பிடிக்கலைனா நீங்க சொல்லலாம்.. நீங்க வேணாம்னு சொன்னா எங்க வீட்டுல யாரும் கம்பெல் பண்ண மாட்டாங்க” என்று அவனுக்காக யோசித்து சொல்ல,

‘ பிடிக்கலையா???’ என தனக்குள்ளே கேட்டுக்கொண்டு தலையை இடவலமாக அசைத்து மறுத்தவன்,

“நீங்க இந்த அளவுக்கு யோசிச்சிருப்பீங்கன்னு எக்ஸ்பெக்ட் பண்ணலை.. அதான் சர்ப்ரைஸ் ஆகிட்டேன் உங்க பேச்சுல” என்றவன்,

“நீங்க பேசுனதுல இருந்தே தெரிஞ்சது.. நீங்க இதைப்பத்தி நிறைய யோசிச்சிருக்கீங்கன்னு.. இன்ஃபாக்ட் நானுமே நிறைய யோசிச்சேன் இது எப்படி சரியா வரும்னு.. உங்ககிட்ட அதைப்பத்தி தான் பேசலாம்னு வந்தேன்..” என ஒருவிரல் கொண்டு நெற்றியில் கோடிழுத்தவன்,

“நீங்க நினைக்கிற மாதிரி எனக்கு கல்யாணத்தைப் பத்தி பெருசா கனவோ ஆசையோ இருந்ததே  இல்லை.. சொல்லப்போனா எனக்கு கல்யாணம் பண்ணிக்குற ஐடியாவே இல்லை.. அதுனால அம்மா இதைப்பத்தி சொல்றப்போ எனக்கும் உடனே வேண்டாம்னு தான் தோணுச்சு.. அப்பறம் தான் பொறுமையா யோசிச்சுப் பார்த்தேன்”

“உங்களுக்கும் கல்யாணத்துல இன்ட்ரெஸ்ட் இல்லை, எனக்கும் இன்ட்ரெஸ்ட் இல்லை.. நம்ம இந்த பிரோப்போசலுக்கு வேண்டாம்னு சொன்னாலும் உங்க வீட்டுல உங்களுக்கு வேறொரு பையனைப் பார்க்கத்தான் போறாங்க.. எங்க வீட்டுலயும் அதே கதை தான்.. அதுக்கு பேசாம நம்மளே ஓகே சொல்லி, கணவன் மனைவின்ற போர்வைக்குள்ள, ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ் அஹ் ஒரு ரிலேஷன்ஷிப் லீட் பண்ணலாமே அப்படின்னு தோணுச்சு.. நம்ம பேரண்ட்ஸும் ஹேப்பியா இருப்பாங்க.. நம்மளும் ஃப்ரீயா இருக்கலாம்.. என்ன சொல்றீங்க??” என்று அவன் புருவம் உயர்த்த,

நிலாவிற்கு அவனின் கூற்று புரிந்தும் புரியாத நிலை.

“நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு சரியா புரியலை!!!” என்றாள் அவனிடமே.

சட்டென அவளின் முன் தன் கரத்தை நீட்டியவன்,

“லெட் அஸ் பீ ப்ரெண்ட்ஸ்!!!!”

“கல்யாணம் பண்ணிக்கலாம்.. உங்களுக்குள்ளயும் ஆறாத காயங்கள் நிறைய இருக்கு.. எனக்குள்ளேயும் அதே மாதிரி சொல்லப்படாத பல சோகங்கள் இருக்கு!!! காலம் போகப்போக நம்ம காயங்களும் மறையலாம்.. அது வரைக்கும் நல்ல நண்பர்களா இருப்போமே???” என்று அவன் சிநேக புன்னகையுடன் கரங்களை நீட்டியபடி இருக்க,

அவனின் இந்த நட்பான அணுகுமுறை, அவளின் மனதை மயிலிறகாய் வருடியது!!!!

அத்தனை நேரம் தான் பேசுவதை அவன் சரியான விதத்தில் புரிந்து கொள்ள வேண்டுமே எனும் தவிப்புடன் இருந்தவளுக்கு, அவனின் இந்த பரிமாணம் நிம்மதியைக் கொடுக்க, ஒரு வித தயக்கத்துடன் அவனின் கரத்தில் தன் கரத்தை பட்டும் படாமல் வைத்து குலுக்கினாள்.

காதலால் தொடங்கிய உறவு தான் கண்மூடித் திறப்பதற்குள் முடிந்திருக்க, நட்புடன் கரம் கோர்த்திருக்கும் இந்த பந்தமாவது நெடுங்காலம் வரை நீடூழி வாழவேண்டும் எனும் பிரார்த்தனை தொடங்கியது இருவரின் மனதிலும்!!!