“என்னப்பா?? கூப்பிட்டீங்களா???” என்று கேட்டவாறே தந்தையின் அறைக்குள் நுழைந்தாள் நிலன்யா.
“ஆமா டா!!! வேலையா இருந்தியோ???”
“இல்லைப்பா!!! கோவிலுக்கு போயிட்டு அப்படியே ஆரி வொர்க் போட பீட்ஸ் தீர்ந்து போச்சு.. அதை வாங்கிட்டு வந்தேன்.. இனி தான் போய் ஒரு டிசைன் போடணும்.. சொல்லுங்க ப்பா!!!”
“அதுவந்து.. நிலா… ஒரு வரன் வந்திருக்கு டா” எனத் தயங்கித் தயங்கி குணசீலன் ஆரம்பிக்க,
அதுவரை இயல்பாய் இருந்த நிலாவின் முகம், நொடிநேரம் இறுக்கம் பெற்று மீண்டும் இயல்பானதை கவனித்துக் கொண்டிருந்தவருக்கு, மேலும் பேச தயக்கமாக இருந்தது.
“நான் தான் அன்னைக்கே சம்மதம் சொல்லிட்டேனே ப்பா!!! உங்க இஷ்டம் தான்.. நீங்க எல்லாரும் பார்த்து என்ன சொன்னாலும் எனக்கு சரி தான்!!!” என உணர்ச்சிகளற்ற குரலில் மொழிந்தவள், மேலும் அதைப்பற்றி பேசப்பிடிக்காமல் எழுந்து கொள்ளப்பார்க்க,
“உட்காருடா!!! அதுக்குள்ள என்ன அவசரம்??” என அவளின் கைபிடித்து மீண்டும் தன்னருகில் அமர்த்திக்கொண்ட குணசீலனுக்கு, மகளின் இந்த விட்டேற்றியான போக்கு பயத்தைக் கொடுத்தது.
‘ இப்படியே எதுலயும் பிடிப்பில்லாம போயிடுமோ என் பொண்ணுக்கு!!!’ என கவலை கொண்டவர், அவளின் இந்த மனநிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் தத்தளித்தார்.
“என்னாச்சுப்பா??? என்ன பேசணும்?? என்ன யோசிக்கிறீங்க??? டாக்டர் உங்களை அதிகம் ஸ்ட்ரெஸ் எடுத்துக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க தான?? உங்க முகமே சரியில்லை.. நீங்க என்னை நினைச்சுக் கவலைப்படாதீங்கப்பா… நான் நல்லா தான் இருக்கேன்.. நீங்க யாரை மாப்பிள்ளையா பார்த்திருந்தாலும் எனக்கு ஓகே தான்.. நீங்க என்னைப்பத்தியே யோசிச்சு யோசிச்சு உங்க உடம்பைக் கெடுத்துக்காதீங்க.. பிளீஸ் ப்பா!!” என அவரின் கைகளை ஆதரவாக தட்டிக்கொடுத்துக்கொண்டே நிலா பேச,
மாப்பிள்ளை யார் என்று தெரிந்த பின்பும் இதே உறுதி நிலாவிடம் இருக்குமா?? என்று பயந்த குணசீலன், நடப்பது நடக்கட்டும் என ஒருவழியாக அவளிடம் சொல்லியே விட்டார்.
“நேத்து ஹாஸ்பிடல்ல பார்த்தோம்ல சுமதி!!!”
“ஆமாப்பா.. அவங்களுக்கு என்ன???”
“அவங்க.. அவங்க பையன் விஷ்வாவுக்கு தான் நிலா உன்னைக் கேட்குறாங்க..”
“ஓஹ்..” என்றவள், பின்பே அவர் சொன்னதன் சாராம்சம் விளங்க,
“என்னது????” என அதிர்ந்து விழித்தாள்.
“ஆமா நிலா.. அவங்களே கூப்பிட்டு பேசினாங்க.. உன் முடிவைக் கேட்டுட்டு சொல்ல சொன்னாங்க..”
“ப்பா!!! இது.. இது எப்படிப்பா சரியா வரும்?? நினைச்சுப் பார்க்கவே முடியலைப்பா.. தயவு செஞ்சு இது மட்டும் வேண்டாமேப்பா.. என்னால இது முடியும்னு தோணலை!!!”
தந்தையிடம் மறுக்கிறோமே என குற்ற உணர்வு ஒரு புறம், அவர் சொல்லியதை நம்பவும் முடியாமல் நம்பியதை ஜீரணித்துக்கொள்ளவும் முடியாமல் தனக்குள்ளே மிகவும் போராடியவள்,
“இது வேண்டாம் ப்பா!!!” என மீண்டும் ஒரு முறை முடிவாகச் சொல்லியவள் அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் வெளியேறி விட்டாள்.
மகளின் முடிவு இதுவாகத்தான் இருக்கும் என்று தெரிந்தே தான் இந்தப்பேச்சைத் தொடங்கியிருந்தாலும், அவளின் மறுப்பு குணசீலனை மிகவும் சோர்ந்து போக வைத்தது.
அப்போது உள்ளே வந்த சுமதி,
“எதுக்கு இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சிருக்கீங்க??? நீங்க பேசுனதும் உங்க மக சரிப்பான்னு உடனே ஒத்துப்பான்னு நினைச்சீங்களா??? இல்லை தான?? பின்ன என்ன?? விடுங்க.. இவளை நான் பார்த்துக்கிறேன் .. நீங்க இதுல தலையிடாதீங்க.. ” என்று சொல்லிவிட,
“ம்ஹூம் வேண்டாம்.. நீ அவ வருத்தப்படுற மாதிரி ஏதாவது பேசி வச்சிடுவ.. வேண்டாம்.. நானே பார்த்துக்கிறேன்”
“இத்தனை வருஷமும் உங்களை மாதிரி நானும் கொஞ்சிகிட்டே இருந்தது தான் அவ இப்படி இருக்கதுக்கே காரணம்.. ஒரு நல்லது நடக்குறதுக்காக நான் கெட்டவளா அவ கண்ணுக்குத் தெரிஞ்சா தெரிஞ்சுட்டு போறேன்.. அதைப்பத்தி எனக்குக் கவலை இல்லை.. எப்படியோ அவ நல்லா இருக்கணும்… ” என்றவருக்கு மகளை எண்ணி கண்ணீர் வர, புடவைத் தலைப்பால் அதை துடைத்துக் கொண்டவர், குணசீலனிடம் சொன்னதைச் செய்து காட்டியிருந்தார்.
ஆம், நிலாவை நன்றாக மூளைச்சலவை செய்து குழப்பி விட்டிருந்தார்.
“என்ன தான் முடிவுல இருக்க நிலா?? உன்னைப்பத்தி யோசிச்சு கவலைப்பட்டே நானும் உங்க அப்பாக்கு பக்கத்துல பெட்டை போட்டு படுத்துருவேன் போல.. இப்போ என்ன பிரச்சனை உனக்கு?? ஊர் உலகத்துல அண்ணன் செத்துட்டா அவங்களோட கூடப்பிறந்த தம்பிக்கே அவங்க பொண்டாட்டியை கட்டி வைக்கிற சம்பவம் எல்லாம் இன்னும் பல இடத்துல நடந்துட்டு தான் இருக்கு.. அப்படிப்பார்த்தா விஷ்வா ஒன்னும் கூடப்பிறந்த தம்பி கூட இல்லை.. நீ ரொம்ப யோசிச்சு எல்லார் நிம்மதியும் கெடுக்காத நிலா.. இதுக்கு மேல எங்களுக்கு நிஜமாவே தெம்பில்லை.. நீயே பார்த்த தான??? அந்த ஆளு அன்னைக்கு நாங்க இருக்கப்போவே எப்படி வந்து பேசிட்டு போனான்னு… இப்போவே இந்த நிலைமையினா நாளைக்கு எங்களுக்கு ஏதாவது ஆன பின்னாடி உனக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு செத்தும் நாங்க நிம்மதி இல்லாம அலையனும்னு ஆசைப்படுறியா??
ஒருவேளை நீ மத்த பொண்ணுங்க மாதிரி தைரியமா இருந்தா, தனியா இருந்தாக்கூட, அவளை அவளே பார்த்துப்பான்னு எங்களுக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும்.. ஆனா நீயோ பூஞ்சை மனசுக்காரி.. நீ எப்படி இந்த பொல்லாத உலகத்துல தனியா வாழுவ??? எங்க பயம் உனக்கு புரியவே புரியாதா நிலா!? நல்ல வாழ்க்கை அதுவா தேடி வந்திருக்கு அதைக் காப்பாத்திக்கிற வழியைப்பாரு!!!” என இந்த இரண்டு நாட்களாக இதுபோல் பேசிப்பேசி சுமதி நிலாவை நன்றாக குழப்பி விட்டிருக்க,
நிலாவிற்கு மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் நிலை தான்.
அவளின் நலனிற்காக என்றாலும், வீட்டில் அனைவரும் கொடுக்கும் அழுத்தம் அவளை தனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக இறுகிப் போக வைத்ததை யாரும் அறியவே இல்லை.
இதில் திவாகர் வேறு தன் பங்கிற்கு அறிவுரை சொல்கிறேன் என,
“உன்னைப்பார்த்தே எங்க வாழ்க்கை எல்லாம் போச்சு!!!” என வார்த்தையை விட்டிருக்க,
மொத்தமாய் விட்டுப்போனது நிலாவிற்கு.
‘ இப்போ என்ன!!! கல்யாணம் பண்ணி முதல்ல இங்க இருந்து நான் கிளம்பனும்!!! அப்போ எல்லாரும் நிம்மதியா இருப்பாங்க ‘ என்று விரக்தியாக நினைத்தவள் அதற்கு மேல் யோசிக்கவில்லை.
“எனக்கு சம்மதம் ப்பா!!! ஆனா ஒருமுறை நான் அவர்கிட்ட பேசணும்!!” என்றுவிட்டாள்.
அவளின் முடிவைக்கேட்டு முழுதாய் மகிழ முடியவில்லை என்றாலும், என்றாவது ஒருநாள் தாங்கள் அவளுக்கு நல்லது தான் செய்துள்ளோம் என நிலா புரிந்து கொள்வாள் எனும் நம்பிக்கையோடு அமைதியாக இருந்தனர்.
நிலாவின் சம்மதம் கிடைத்ததும் உடனடியாக மாலாவிற்கு சுமதி அதைத் தெரிவிக்க,
“வேற வழி இல்லைங்களே” என வேதனையுடன் மொழிந்தார் சுமதி.
“நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க.. நிலா இத்தனை வருஷம் பட்ட கஷ்டமெல்லாம் கனவு மாதிரி கலைஞ்சு போகிற அளவுக்கு சந்தோஷமா இருப்பா.. என் பொண்ணு மாதிரி நான் பார்த்துப்பேன்!!!”
“அதை சொல்லணுமாங்க!!! உங்க மேல இருக்க நம்பிக்கையில தான் நாங்களே இதுக்கு சம்மதிச்சோம்.. நிச்சயம் நீங்க நிலாவை நல்லா பார்த்துப்பீங்கன்னு எங்களுக்குத் தெரியும்”
“அட இன்னும் என்னங்க யார்கிட்டயோ பேசுற மாதிரி மொட்டையா கூப்பிடுறீங்க.. உரிமையா கூப்பிடுங்க அண்ணி!!” என்றார் அதிரடியாக மாலா..
“சரிங்க அண்ணி… அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. நிலாவுக்கு மாப்பிள்ளைகிட்ட ஏதோ பேசணுமாம்”
எங்கே தவறாக எடுத்துக்கொள்வார்களோ என பயந்து பயந்தே சுமதியிடமிருந்து வார்த்தைகள் வெளிவர,
“அடடே!! நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க அண்ணி!!! நாளைக்கே விஷ்வாவைக் கூட்டிட்டு நான் அங்க வரேன்.. எனக்கும் நிலாவைப் பார்க்கணும் போலயே இருந்துச்சு”
என்று பேசிய மாலாவை அத்தனை பிடித்தது சுமதிக்கு.
நிச்சயம் நிலா நன்றாக இருப்பாள் என்று சுமதிக்கு உள்ளுக்குள் தோன்றிக்கொண்டே இருக்க, வெகுநாளைக்குப் பின் அவரின் முகத்தில் சிறு மலர்ச்சி.
“வாங்க.. வாங்க அண்ணி!! வாங்க தம்பி!!!” என முறையாக குடும்பமே வாசலுக்குச் சென்று அவர்களை வரவேற்க,
மாலாவும் முகம் கொள்ளா புன்னகையுடன் அவர்களுக்கு தலையசைத்தபடி உள்ளே செல்ல, விஷ்வாவிற்குத் தான் உள்ளே செல்ல முடியாதபடி பழைய நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி அலைக்கழித்தது.
இதற்கு முன்னால், சில வருடங்களுக்கு முன்பு இதே வீட்டிற்குள் வந்த நிகழ்வுகள் மனக்கண் முன் தோன்ற, தலையைக் குலுக்கி அந்த நினைவுகளை விரட்டி அடித்தவன், வரவேற்றவர்களுக்கு சிறு தலையசைப்புடன் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தான்.
“உட்காருங்க அண்ணி!! உட்காருங்க தம்பி!! என்ன சாப்பிடுறீங்க?? டீயா?? காஃபியா??” எனத் தண்ணீர் வந்து கொடுத்தபடி சுமதி உபசரிக்க,
“அவ்வளவு முக்கியமான வேலையை வச்சிட்டு எதுக்குங்க அண்ணி உடனே தம்பியை கூட்டிட்டு வந்தீங்க.. பொறுமையா வேலையெல்லாம் முடிச்சிட்டு இன்னொரு நாள் வந்திருக்கலாமே”
எங்கே விஷ்வாவை அலைக்கழிக்கின்றோமோ என்று சுமதி பதற,
“இதை விட வேற எதுவும் முக்கியமான வேலை இல்லை அண்ணி.. அதெல்லாம் விஷ்வா ஒன்னும் நினைச்சுக்க மாட்டான்.. நீங்க நிலாவை வரச்சொல்லுங்க.. இல்லை வெளிய பின் பக்கம் கூட விஷ்வாவை நான் போக சொல்றேன்.. இப்படி எல்லார் முன்னாடியும் வர அவளுக்கு சங்கடமா இருந்தாலும் இருக்கும்.. அவளைப் பின்னாடி போகச் சொல்லுங்க” என்று நிலாவிற்காக யோசித்து மாலா சொல்ல, அவளைப் பெற்றவர்களுக்கு அத்தனை நிம்மதி.
உள்ளறையில் இவர்கள் பேசுவதைக் கேட்டபடி இருந்த நிலாவின் முகத்திலும் சிறு ஆசுவாசம்.
அன்னையின் சொல்படி விஷ்வா பின் பக்க தோட்டத்திற்குச் சென்று காத்திருக்க, இரண்டு நிமிட இடைவெளியில் அவன் செவியைத் தீண்டியது அந்த மெல்லிய கொழுசொலி!!!!
நிலா வந்துவிட்டதை அறிந்தவன், தன் மனதை நிலைப்படுத்திக்கொண்டு ஒரு பெருமூச்சுடன் அவளை நோக்கித் திரும்ப,
நிலாவோ மிகுந்த தயக்கத்துடன் குனிந்தபடியே நின்றிருந்தாள்.