“மாப்பிள்ளையும் கூட்டிட்டு வந்திருக்க வேண்டிதான?? பக்கத்துல இருக்கன்னு தான் பேரு.. ஆனா ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை தான் இந்தப்பக்கம் தலையைக் காட்டுறது!!!” என அங்கலாய்த்துக் கொண்டே தன் மூத்த மகளான துர்காவை வரவேற்றார் மாலா.
“நான் என்னம்மா பண்ண?? அங்க அவருக்கு எல்லாத்துக்கும் நான் வேணும்.. ஒரு நாள் அங்க இங்கன்னு போயிட்டாக்கூட அவர் சமாளிக்க மாட்டேங்கிறார்.. இதுல பாப்பா வேற அவங்க அப்பா இல்லாம நைட் தூங்கவே மாட்டேங்குறா.. அதான் வர முடியலை” என்று பதிலளித்துக்கொண்டு வந்த துர்காவும், தன் ஒரு வயது மகள் ஹர்ஷிதாவை தாயிடம் கொடுத்துவிட்டு அப்படியே தளர்வாக அங்கிருந்த சோபாவில் பொத்தென விழுந்தாள்.
என்னதான் மாமியார் வீடு சொர்க்கமாகவே இருந்தாலும், தாய் வீட்டில் கிடைக்கும் நிம்மதியே அலாதி சுகமல்லவா!!!!!
பேத்தியை செல்லம் கொஞ்சிக்கொண்டே,
“பாப்பாக்கு கேரட் வேக வச்சு வச்சிருக்கேன்.. அதைக் கொடுக்கவா?? இல்லை பால் ஆத்தவா??” என்று கேட்டு, மகளின் சொல்படி பேத்தியின் வயிறை நிறைத்தவர், மகளுக்கும் பருக ஆரஞ்சு பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தார்.
“அபி குட்டியையும் நீ கூட்டிட்டே வந்திருக்கலாம்.. பிள்ளையைப் பார்த்தே ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு!!!”
துர்காவின் மூத்த மகனான ஆறு வயது அபிஷித்தை நினைத்து மாலா ஏக்கப் பெருமூச்சு விட,
“அநியாயம் பண்ணாதீங்க ம்மா!! போன வாரம் தான அவன் ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் டேக்கு வந்து பார்த்திட்டு போனீங்க… இன்னைக்கு அவனுக்கு டெர்ம் எக்ஸாம்.. அதான் லீவ் போட முடியலை.. எப்படியும் ஈவ்னிங் இங்க தான வருவான் அப்புறமென்ன?” என்றவள்,
“விஷ்வா எங்கம்மா?? கார் வெளிய தான் நிக்குது!!!” என விசாரித்தாள்.
“அந்த இன்ஜினியரிங் காலேஜ் விஷயமா சென்னை போயிட்டு காலையில தான் வந்தான்.. அதான் கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுக்கிறான் போல.. வந்துடுவான்.. இன்னும் காலை சாப்பாடே சாப்பிடலை” என்று மாலா சொல்லிக்கொண்டிருக்கையிலே மேலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான் விஷ்வேஸ்வரன்.
ஹாலில் அமர்ந்திருந்த தமக்கையைக் கண்டு மெலிதாய் புன்னகைத்தவன்,
“வாக்கா!!! எப்போ வந்த?? மாமா வரலையா???” என்று கேட்டுக்கொண்டே அன்னையின் கையில் சமத்தாய் அமர்ந்திருந்த ஹர்ஷிதாவை அள்ளி முத்தமிட்டுக் கொஞ்சியவன்,
“அம்மா லேட் ஆச்சு!! சாப்பாடு எடுத்து வைங்க” என்றுவிட்டு, சிறிதுநேரம் தமக்கையுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.
“விஷ்வா!! டிபன் ரெடி.. சாப்பிட வா!!!”
“நீ போய் சாப்பிடு விஷ்வா.. இன்னும் ரெண்டு நாள் இங்க தான்.. நம்ம பொறுமையா பேசுவோம்..” என்று துர்காவும் சொல்ல, சிறு தலையசைப்புடன் எழுந்து சாப்பிட அமர்ந்தான்.
“போன வேலை என்னாச்சுடா??”
“ம்ம் ஆல்மோஸ்ட் முடிஞ்சுருச்சு”
“இன்னும் ரெண்டு இட்லி வச்சுக்கோ.. உனக்கு பிடிக்குமேன்னு தான் நாட்டுக்கோழி குழம்பு வச்சேன்” என்றதற்கும் தலையசைப்பு மட்டுமே.
மகனின் ரத்தின சுருக்கமான பதிலில் பெருமூச்சு விட்ட மாலா, மீண்டும் மகளிடத்தில் விட்ட பேச்சைத் துவங்கினார்.
“ஏண்டி!! உங்க மாமியார் வீட்டு வலசல்ல ஏதாவது நல்ல பையன் இருந்தா சொல்லேன்”
அன்னையின் வார்த்தைகளில் சாப்பிட்டுக்கொண்டிருந்த விஷ்வாவின் கரங்கள் ஒரு நொடி வேலை நிறுத்தம் செய்துவிட்டு, பின் மீண்டும் உண்ணத் துவங்கியதை யாரும் கவனிக்கவில்லை.
“யாரு நம்ம ஜெய் பொண்டாட்டியவா சொல்ற??” என்று துர்கா கேட்க,
விஷ்வாவிற்கு உணவு தொண்டைக்குழியில் இருந்து இறங்க மறுத்தது.
“ஆமா டி!! இந்த கடவுள் ஜெய் விதியை இப்படி படைச்சிருக்க வேண்டாம்.. ஹம்ம் அருமையான பிள்ளை!!” என தான் பெறாத மகனை எண்ணி வருந்தியவர்,
“இத்தனை வருஷமும் நிலாவோட அப்பா அம்மா அவளை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லி எவ்வளவோ சொல்லி பார்த்தும், அந்த பொண்ணு ஜெய் நினைப்பிலேயே இருந்துருச்சு.. இப்போ அந்தப்பொண்ணை நினைச்சே அவங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு போல.. அதுவும் இல்லாம, இவளைக் காரணம் காட்டி அவளோட அண்ணன் பொண்டாட்டியும் அவங்க அம்மாவீட்டுக்கு போயிட்டாளாம். அதுனால தன்னால எல்லாருக்கும் கஷ்டம்னு இப்போதான் அவ இன்னொரு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்கா.. பாவம் அதுவும் முழுமனசா சொல்லலை.. அதான் கனகா அக்கா, நல்ல பையனா பார்க்கச் சொன்னா.. ரொம்பவே கஷ்டப்பட்டுட்டா.. இனியாச்சும் அந்தப்பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமையணும்”
நிலாவை எண்ணி உண்மையான அக்கறையுடன் மாலா வருத்தப்பட,
“ரெண்டாவது கல்யாணம்ல.. அதுனால நம்ம நினைக்குற மாதிரி மாப்பிள்ளை கிடைக்கிறது கொஞ்சம் சிரமம் தான் ம்மா!!! இருந்தாலும் என் மாமனார் கிட்ட சொல்லி வைக்கிறேன்” என்று துர்காவும் சொல்ல,
அதற்கு மேல் அங்கு அமர்ந்திருக்க முடியாமல், உணவோடு சேர்த்து தன் வேதனையையும் தண்ணீரைக் குடித்து முழுங்கிய விஷ்வா, பட்டென்று எழுந்து கொள்ள,
“என்ன டா அதுக்குள்ள எழுந்துட்ட?? இன்னும் ரெண்டு வச்சுக்கோ!!” என்று பின்னால் கேட்ட மாலாவின் குரலுக்குக் கூட பதிலளிக்காமல் கையைக் கழுவிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
“இவன் ஏன் டி இப்படி ஓடுறான்??” என மாலா புரியாமல் விழிக்க,
“காலேஜ்ல இருந்து ஏதாவது மெசேஜ் வந்திருக்கும் மா.. அதான் சாப்பிடாமக் கூடப்போறான்.. முதல்ல இவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணுங்க.. அப்போதான் இவன் சரிப்படுவான்… ஜெய் போனதுல இருந்து ரொம்பவே இறுக்கமாகிட்டான்..” தம்பியை எண்ணி துர்கா ஆதங்கம் கொள்ள,
“பிறந்ததுல இருந்து அவன் கூடவே வளர்ந்தவன்.. ஜெய் இல்லாதது எனக்கே இன்னும் ஜீரணிக்க முடியலை.. பின்ன விஷ்வாவுக்கு எப்படி இருக்கும்?? ஹம்ம் நீ சொன்ன மாதிரி கல்யாணம் பண்ணி அவனுக்குன்னு ஒருத்தி வந்தா மாறுவான்.. அவனுக்கும் பார்த்துட்டே தான் இருக்கேன்.. ஒன்னும் மனசுக்கு பிடிச்ச மாதிரி அமைய மாட்டேங்குது”
“எங்க மாமியாரோட ஒன்னு விட்ட தங்கச்சி பொண்ணு சொல்லிருந்தேனே.. அது செட் ஆகலையா??”
“உன் சைட் வேணாம் டி.. அப்பறம் இங்க தொட்டா அங்க ஷாக் அடிக்கும்ன்ற கதையா மாறிடும்.. கொஞ்சம் அசல்ல தான் பார்க்கணும்”
என அவர்களின் பேச்சு நீண்டு கொண்டே போனது.
இங்கே அவர்களின் பேச்சில் இருந்து தப்பித்து ஓடி வந்ததைப் போல் வெளியே வந்தவனுக்கு இன்னும் மனம் சமன்படவில்லை.
அவனைத் துரத்தும் ஈர நினைவுகளிலிருந்து வெளிவர வழி தெரியாமல் கை போன போக்கில் காரை இயக்கிக் கொண்டிருந்தான்.
அதே சமயம்,
“நினைவால் இனி நான் வாழ
நதி போல் இனி நாள் போக
எதனால் இனி ஆறும் ஆறும்
என் காயம்”
என்று வெளியே எங்கோ ஒலித்த பாடல் வரிகள் அவன் மனநிலையைத் துல்லியமாகச் சொல்ல, அதற்கு மேல் தாங்கமாட்டாமல் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஸ்டியரிங்கில் அப்படியே தலைசாய்த்து கண்மூடிவிட்டான்.
அவன் மனதில் முகம் முழுக்க புன்னகையுடன் ஜெய்யும் நிலாவும் திருமணக்கோலத்தில் இருந்த காட்சியே மனக்கண்ணில் தோன்றி மறைய, அவன் இதயத்தில் இருக்கும் காயத்தைப் போல் விழியோரத்தில் வழிந்த இரு துளி நீரையும் அறிந்தோர் யாருமில்லை.
***
“கமலி!!! மாப்பிள்ளை வந்திருக்காரு பாரு” என உள்ளறையில் படுத்திருந்த மகளுக்கு குரல் கொடுத்தார் அவளின் தாய்.
அவரின் கூற்றில் பட்டென்று படுக்கையில் இருந்து எழுந்து கொண்டவள்,
தயக்கத்துடன் தன்னுடைய அறைக்குள் காலெடுத்து வைத்த திவாகரைக் கண்டு இளகிய மனதை இறுக்கிப் பிடித்தாள்.
இந்த ஒரு மாதத்தில் ஆளே மாறிப் போயிருந்தான்.
இளைத்து கருத்துப் போயிருந்த அவனின் தோற்றம் காதல் கொண்ட மனதை பாதித்தாலும், முகத்தில் எதையும் காட்டாமல் இறுக்கமாகவே நின்றவள்,
“வாங்க!!!” என சம்பிரதாயமாக அழைப்பு விடுத்தாள்.
இந்த பிரிவு, தன் வாழ்வில் கமலியின் முக்கியத்துவத்தை அவனுக்கு தெள்ளத் தெளிவாக உணர்த்திவிட, அவளுக்கு தான் செய்த அநியாயத்திற்கு தண்டனையாக இந்தப் பிரிவை ஏற்றுக் கொண்டவனுக்கு, அதற்கு மேல் அவளில்லாமல் இருக்க முடியவில்லை.
எனவே ஒரு வேகத்தில் கிளம்பி வந்துவிட்டாலும், கமலியின் முகத்தை எதிர்கொள்ளவே அவனுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது.
“என்ன விஷயம்??” அதற்கு மேல் அவனின் அமைதியைப் பொறுக்க மாட்டாமல் கமலியே வாயைத் திறக்க,
“நிலா.. நிலா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டா…”
இதற்காகத் தானே மனைவி தன்னை விட்டு விலகி வந்தாள், இப்போது நிச்சயம் இந்த செய்தியைக் கேட்ட பிறகு அவள் தன்னோடு வந்துவிடுவாள் என வெகுவாய் நம்பிக் கொண்டிருந்தான் திவாகர்.
ஆனால் அவன் மனையாளோ, வெகு சாதாரணமாக இரு கைகளையும் கட்டியபடி அவனைப் பார்த்திருந்தவள்,
“தெரியும்!!! நிலாவே சொல்லிட்டா!!!!” என்று சொல்லிவிட,
திவாகருக்கு மனைவியின் இந்த புது அவதாரத்தில் அடுத்து பேசவே நா எழும்பவில்லை.
அதுவும் அவனை ஊடுருவுவதைப் போல் அவளின் அழுத்தமான பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியவன்,
“நிலா தானே உன் பிரச்சனை!!! அதான் அவ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாளே.. இன்னும் நீ ஏன் இங்க இருக்க?? நம்ம வீட்டுக்கு வா போகலாம்” என்று ஒரு வழியாக அவன் கேட்டே விட,
கமலியிடம் ஒரு ஏளனச் சிரிப்பு!!!!
அது அவனை சீண்டிவிட,
“ஹேய்!!! என்னடி நக்கலா சிரிக்குற??? இன்னும் உனக்கு என்ன தான் பண்ணனும்?? நான் உன் காலில வந்து விழுக்கணுமா???” என்று அவன் சீற,
அவளிடம் அதே அமைதி!!!!
ஆனால் அவளின் உள்ளம் மட்டும், இவன் என்றும் தன்னை புரிந்தே கொள்ள மாட்டானா என்று ஊமையாய் அழுது கொண்டிருந்ததை அவள் மட்டுமே அறிவாள்.
“நான் பேசிட்டே இருக்கேன்.. என்ன டி அப்படியே பார்த்துட்டே பதில் பேசாம நிக்கிற?? அவ்வளவு திமிரா??”
“அமைதியா இருக்கது எப்போதும் திமிர் கிடையாது.. சில சமயம் எதிர்ல இருக்கவங்களுக்கு என்ன பேசினாலும் புரியாதுன்றப்போ, அமைதியா இருக்கது தானே பெட்டர் ஆப்ஷன்”
“என்ன?? என்ன டி ஓவரா பேசுற?? என்ன எனக்குப் புரியலை.. ஏதோ தப்பு பண்ணிட்டோமேன்னு கொஞ்சம் அமைதியாப் போனா நீ ஓவரா போய்கிட்டு இருக்க.. ரொம்பப்பேசி வாழ்க்கையைக் கெடுத்துக்காம கிளம்பு!! நம்ம வீட்டுக்கு போறோம் இப்போ!!!”
அவனின் பேச்சில் கமலிக்கும் கோபம் வர,
“வர முடியாது!!! என்ன பண்ணுவீங்க??” என அடமாய் நின்றாள்.
ஒரு நிமிடம் நின்று அவளை உறுத்து விழித்தவன்,
“உன்னைத்தேடி வந்தது இதுவே கடைசி முறையா இருக்கட்டும்!!!! இனி என்னைக்கும் உன்னைத்தேடி நான் வரவே மாட்டேன்.. நீ இங்கேயே இரு!!! அப்போதான் உனக்கு புத்தி வரும்!!” என்று சொல்லியவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் விறுவிறுவென வெளியே சென்று விட,
“மாப்பிள்ளை!! மாப்பிள்ளை கொஞ்சம் நில்லுங்க!!” என்று கமலியின் பெற்றோரின் வார்த்தைகளுக்கு கூட செவி சாய்க்காமல், தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பியே விட்டான்.
அதுவரை தன்னை தைரியமாக காட்டிக்கொண்ட கமலி, அவன் சென்றுவிட்ட பின் அப்படியே சக்தி எல்லாம் வடிந்ததைப் போல் கீழே அமர்ந்து கால்களை கட்டிக்கொண்டு அதில் தலையைப் புதைத்துக் கொண்டாள்.