சுடர் – 5

 

இன்று…

அன்றைய நாளுக்கே சென்று விட்டது போல் கனவுலகத்தில் இருந்த நிலன்யாவின் மோனநிலையைக் கலைத்தது அந்த சப்தம்.

அந்த நிசப்தமான வேளையில், பட படவென கதவைத் தட்டுவது, சுமதிக்கும் நிலாவிற்கும் மனதில் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவிக்க,

பட்டென்று கட்டிலில் இருந்து இறங்கிய சுமதி,

வேகமாய் சென்று கதவைத் திறந்தார்.

அங்கே, அதீத பதற்றத்தில் முகமெல்லாம் முத்து முத்தாய் வியர்வை பூக்க நின்றிருந்த திவாகர்,

“ப்பா.. அப்பா மயங்கிட்டாரு மா… உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்.. “

எனத் தகவல் சொல்லியவன், விரைவாய் வெளிக்கதவைத் திறந்து, வீட்டின் பக்கவாட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவர்களின் காரை நோக்கி கிட்டத்தட்ட ஓடினான்.

திவாகர் சொன்ன செய்தியில் நிலன்யாவிற்கு பயத்தில் முகமெல்லாம் வெளுத்துவிட்டது.

ஒருவரின் இழப்பை கண் முன் கண்டிருந்தவளுக்கு, இப்போது, அவளின் பிரியமான தந்தைக்கும் அப்படி ஏதும் ஆகிவிடுமோ எனும் பயம், அவளின் இதயத்துடிப்பை இரட்டிப்பாக்கியது.

அதற்குள் சுமதி அழுகையுடன், கணவர் இருந்த அறைக்கு விரைய, நிலாவும் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

அங்கே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அரை மயக்க நிலையில் வலியில் துடித்துக் கொண்டிருந்த குணசீலனைக் கண்டு, இரு பெண்களுக்கும் கண்ணீர் உடைப்பெடுத்தது.

‘ என்னாச்சு??? எப்படி???’ என்று கேள்வி கேட்டு ஆராயக்கூட அவர்களுக்கு நேரமில்லை.

இது விரைந்து செயல்பட வேண்டிய நேரம் என்றுணர்ந்து, தங்கள் சோகத்தோடு கண்ணீரையும் மறைத்துக்கொண்டு, விரைவாக குணசீலனைக் கைத்தாங்கலாக இருபெண்களும் வெளியே அழைத்துக்கொண்டு வர,

அதற்குள் காரை எடுத்து வந்து வாசலில் நிறுத்தியிருந்த திவாகர், உள்ளே வந்து குணசீலனைத் தூக்கிக்கொண்டான்.

அடுத்த இருபது நிமிடங்களில், குணசீலன் அந்த பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, மற்ற மூவரும் நடந்ததை கிரகித்துக் கொள்ள முடியாமல், பித்துப் பிடித்ததைப் போல் அங்கிருந்த நாற்காலியில் சக்தியெல்லாம் வடிந்த நிலையில் அமர்ந்துவிட,

அதுவரை அடக்கி வைத்திருந்த சுமதியின் கண்ணீர் கட்டுப்பாடின்றி வெளிவந்தது.

“அய்யோ கடவுளே!!!! அப்படி என்ன பாவம் பண்ணோம் நாங்க?? இப்படி எங்க குடும்பத்துக்கு மட்டும் மாத்தி மாத்தி சோதனையா கொடுக்குறியே!!! உனக்கு கண்ணே இல்லையா???”

தன்வசமிழந்த  சுமதி, தலையில் அடித்துக்கொண்டு பெருங்குரலெடுத்து அழத் துவங்க,

“ம்மா!!! இது ஹாஸ்பிடல்!! இங்க இப்படி எல்லாம் சப்தம் போடக்கூடாது!!!”

உடனே ஒரு செவிலியர் வந்து அவரை அடக்கினார்.

“நாங்க பார்த்துக்கிறோம்!!!” என திவாகர் தான் செவிலியரை அனுப்பி வைத்துவிட்டு, தன் அன்னையை தோளோடு அணைத்து ஆற்றுப்படுத்தினான்.

“அம்மா!!! பிளீஸ்!! அப்பாக்கு ஒன்னும் ஆகாது.. அதான் நம்ம கரெக்டான டைமுக்கு பார்த்து கூட்டிட்டு வந்துட்டோமே.. அழுகாதீங்க!!!”

என்ற மகனின் வார்த்தைகளுக்கெல்லாம் சமாதானம் ஆகாமல் சுமதி இன்னும் கண்ணீரில் கரைந்து கொண்டே இருக்க, நிலா ஒரு பக்கம் தன் தந்தைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது எனும் வேண்டுதலுடன் மௌனமாய் கண்ணீர் சிந்தியபடி கலைந்து போன சித்திரமாய் அமர்ந்திருந்தாள்.

அவர்களை மேலும் சில மணி நேரம் அலைக்கழித்த பின்பே,

“ஃபர்ஸ்ட் அட்டாக்!!! ரொம்பவே சிவியர் தான்.. பட் கரெக்ட் டைமுக்கு கொண்டு வந்ததுனால எங்களால காப்பாத்த முடிஞ்சது!!! ஸ்டென்ட் வைக்கணும்… அதுக்கு பீஸ் பேய் பண்ணிருங்க.. பிரோசிஜர் ஸ்டார்ட் பண்ணனும்!!!” என்று மருத்துவர் வந்து விஷயத்தைச் சொல்ல,

“ஹார்ட் அட்டாக்கா!??” என அதிர்ந்தாலும்,

“இந்தளவேனும் தந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லையே” என்றெண்ணி பிள்ளைகள் இருவரும் சற்று நிம்மதி கொள்ள,

சுமதியோ,

“ஹார்ட் அட்டாக்கா??? மனசுக்குள்ளையே எல்லாத்தையும் போட்டு புழுங்கித் தவிச்சு, இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்து நிக்குறாரே!!!” என மீண்டும் தன் கவலையை வார்த்தைகளால் வெளிப்படுத்தத் துவங்க,

“நிலா!!! அம்மாவை பாரு.. நான் போய் பணம் கட்டிட்டு வரேன்” என தங்கைக்கு கண்ணைக்காட்டிய திவாகர் கீழே சென்றான்.

நிலாவும் சுமதியை நெருங்கி,

“ம்மா!!! அதான் ஒன்னும் இல்லை சரி பண்ணிடலாம்னு டாக்டர் சொன்னாங்க தானே?? அப்பா சரியாகி வந்துடுவாங்க.. நீங்க அழுது அழுது உங்க உடம்புக்கு இழுத்து விட்டுக்காதீங்க!!!”  என்று சமாதானம் சொல்ல,

முன்பே மனஉளைச்சலில் இருந்த சுமதியோ, சற்றும் யோசிக்காமல் வார்த்தைகளை சிதற விட்டிருந்தார்.

“சரியாகி வந்துட்டா மட்டும்!!! அந்த மனுஷனை நிம்மதியா இருக்க விட்டிடுவீங்களா நீயும் உன் அண்ணனும்??? நீங்க ரெண்டு பேரு தான் டி அவர் நிலைமைக்குக் காரணம்.. அதுவும் முக்கியமா நீ.. உன் வாழ்க்கை இப்படியே போயிடுமோன்ற பயம் தான் அந்த மனுஷனை இன்னைக்கு இங்க வந்து படுக்க வச்சிருக்கு… இத்தனை வருஷமா நானும் அவரும் இத்தனை கிடந்து போராடுறோமே கொஞ்சம் மனசிறங்கி வந்திருந்தா, நாங்க நிம்மதியா இருந்திருப்போமே..  உன் மனசு உன் கஷ்டம்னு அதுக்குள்ளேயே சிக்கி நீ சுயநலமாவே இரு!! நாங்க ரெண்டு பேரும் இப்படியே போய் சேருறோம்!!!” என உணர்ச்சிகளின் பிடியில் சிக்கியிருந்த சுமதி என்ன பேசுகிறோம் என்று உணராமலே, நிலாவின் உணர்வுகளை கொன்றுவிட்டிருந்தார்.

தாயின் வார்த்தைகளில் விக்கித்துப் போய் அமர்ந்துவிட்ட நிலாவிற்கு, அடுத்து பேச நா எழும்பவில்லை.

‘ அப்போ.. அப்போ நான் தான் அப்பாவோட இந்த நிலைமைக்குக் காரணமா?? என்ன வார்த்தை சொல்லிட்டாங்க?? நான் சுயநலமா இருக்கேனா??? இவங்க பார்த்து நடத்தி வச்ச கல்யாணம் தானே?? ஒரு வாரம் வாழ்ந்தாலும், அவர் என் புருஷன் இல்லைன்றது ஆகிடுமா??? அப்பறம் எப்படி அவ்வளவு ஈசியா அவரை மறந்துட்டு வேறொரு வாழ்க்கையில என்னை நுழைச்சுக்க முடியும்??? அதை ஏன் யாரும் புரிஞ்சுக்கவே மாட்டேங்குறாங்க??? எந்த ஒரு ஆணோட துணையும் இல்லாம ஒரு பொண்ணால கடைசி வரைக்கும் வாழ முடியாதா?? ‘ என மனதிற்குள் எண்ணி குமைந்தவள், அடுத்த நொடியே அவளுக்காக இத்தனை வருடங்களும் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்த தந்தையின் முகம் கண் முன் தோன்றவும் குற்ற உணர்ச்சியில் தத்தளித்தாள்.

‘ உண்மை தானே!!!! அப்பாக்கு என்னைப்பத்தின கவலை தானே?? அதுதான் அவரை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கு.. அம்மா சொல்ற மாதிரி நான் சுயநலமா இருந்துட்டேனோ?? என் மனசைப்பத்தி மட்டுமே இத்தனை வருஷமா யோசிச்சு இவங்களைப் பத்தி யோசிக்க மறந்துட்டேன்தானே!!! நான் நல்லா வாழணும்னு தானே அவங்க ஆசைப்படுறாங்க.. என் சந்தோஷம் என்கிட்ட இல்லை.. ஆனா அவங்க சந்தோஷம் என்கிட்ட தான இருக்கு!!!! நான் மனசு வச்சா அவங்க நிம்மதியா இருப்பாங்க தானே!!!’

என அவள் மனம் தெளிவாக சிந்திக்கத் துவங்க, அடுத்த நொடியே,

‘ அவ்வளவு சீக்கிரம் என்னை மறந்துவிடுவாயா நீ??’ என்பது போல் அழகாய் அவள் மனக்கண்ணில் வந்து நின்று புன்னகைத்தான் ஜெய்!!!!!

அவனை நினைத்ததும் பெண்ணின் முகம் வேதனையில் கசங்கிப் போக,

ஜெய்யின் மனைவியாக அவனை மறந்து வேறொரு வாழ்க்கையில் அடி எடுத்து வைக்க சிந்திக்கக் கூட பிடிக்காமல் ஒரு மனம் போராட,

இன்னொரு மனமோ, இத்தனை வருடமாக அவளை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்ட தந்தைக்கு இப்போதாவது நிம்மதி கொடுக்க வேண்டும் என குற்றஉணர்வுடன் தவித்தது.

இப்படி அவளின் மனமே இரண்டாய் பிரிந்து வாதம் செய்ததில் மொத்தமாக சோர்ந்து விட்ட நிலா தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட, சுமதிக்கு தான் பேசியது அதிகப்படி என்று புரிந்தாலும், அப்படியாவது மகள் ஏதேனும் நல்ல முடிவை எடுக்க மாட்டாளா?? எனும் நப்பாசையுடன் நிலாவின் பக்கம் திரும்பாமல், மனதைக் கல்லாக்கிக்கொண்டு அதே இறுக்கத்துடன் அமர்ந்துவிட்டார்.

திவாகரும் பணம் செலுத்திவிட்டு வந்துவிட, சற்று நேரத்தில் குணசீலனுக்கு சிகிச்சை தொடங்கியது.

“நல்லபடியா ஸ்டென்ட் வச்சாச்சு… இப்போ அவர் ஓகே தான்.. ரூம்க்கு ஷிஃப்ட் பண்ணதும் போய்ப் பாருங்க!!!” என்று மருத்துவர் வந்து சொல்லும் வரையிலும் மூவரும் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.

அதுவரை இருந்த பதற்றம் குறைந்து, சிறிதாய் ஒரு ஆசுவாசம் அவர்களிடத்தில்.

இத்தனை நேரமும் குணசீலன் நல்லபடியாக திரும்ப வரவேண்டுமே எனும் எண்ணமே அவர்களுக்கு பிரதானமாக இருக்க, மற்றதெல்லாம் சிந்தையிலே இல்லை.

“திவா!!! உன் பெரியப்பா, மாமா எல்லாருக்கும் போன் பண்ணி விவரம் சொல்லிரு!! அப்பறம் அவங்களுக்கா தெரிஞ்சு வந்தா, அது நாளைப்பின்ன மனஸ்தாபம் ஆகிடும்!!!”  என உறவுகளின் மனநிலை அறிந்து சுமதி அறிவுறுத்த, திவாகரும் தலையசைத்தான்.

“மறக்காம கமலிக்கும் அவ வீட்டுக்கும் முதல்ல சொல்லிடு திவா.. உங்களுக்குள்ள என்ன பிரச்சனை இருந்தாலும் அதை இதுல கொண்டு வராத!!”

கமலியின் பெயரைக் கேட்டதும் தன்னாலே திவாகரின் மனது அவன் மனைவியின் அண்மையை நாடி ஏங்கியது.

துவண்டு போகும் நேரங்களில் தோள் கொடுக்க துணையாக, மடி தாங்க மனைவியாக ஒரு இணை கிடைத்தால், அதுவே வாழ்வின் வரமல்லவா???

அப்படி ஒரு வரம் கிடைத்தும், அதை தக்கவைத்துக் கொள்ளாத ஒரு முட்டாளாய் நின்ற திவாகருக்கு, இந்த நொடி ஏனோ மனைவியை அதிகத்திற்கும் அதிகமாய் மனம் தேடியது.

ஒரு பெருமூச்சுடன் தன் ஏக்கத்தை மறைத்தவன், சுமதி சொன்னதைப் போல் முக்கியமான உறவுகளுக்கெல்லாம் விஷயத்தைப் பகிர்ந்தவன், பின் மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு கமலிக்கு அழைப்பு விடுக்க,

அழைப்பு முடியும் தருவாயில் அது ஏற்கப்பட்டது.

“ஹலோ!! க.. கம.. லி!!” என அவன் தவறு செய்துவிட்ட தவிப்புடன் அவளை எதிர்கொள்ளத் தயங்க,

“ஹலோ மாப்பிள்ளை!!! கமலி குளிக்குறா.. வந்ததும் கூப்பிடச் சொல்றேன்.. ” என அவளின் தாயார் குரல் கேட்கவும்,  சட்டென தெளிந்தவன்,

“இல்லை.. இல்லத்தை.. அப்பாக்கு கொஞ்சம் முடியலை.. ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம்.. அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்… மாமாகிட்டயும் சொல்லிருங்க!!” என அவன் தகவல் சொல்ல,

“அச்சச்சோ!!! என்னாச்சு!!” என்று பதறியவர் தற்போதைய நிலைமையைக் கேட்டறிந்து கொண்டு,

“உடனே கிளம்பி வரோம் மாப்பிள்ளை!!!” என்று  அழைப்பைத் துண்டித்தார்.

கமலி உண்மையாகவே குளிக்கச் சென்றுவிட்டாளா?? இல்லை தன்னைப் புறக்கணிக்கிறாளா என்று திவாகரின் மனதின் ஓரம் ஏதோ ஒன்று குடைந்தாலும், அதை யோசித்து வருத்தம் கொள்ள வேண்டிய நேரம் அது அல்ல என்றுணர்ந்து, பொறுப்பாக அடுத்த என்ன என்று அங்கே பார்க்கலானான்.

சற்று நேரத்தில் குணசீலனை அறைக்கு மாற்றிவிட்டாலும்,

“ஹார்ட் பேஷண்ட்ஸ் வார்ட் சார் இது.. உள்ள உங்க அப்பா மாதிரி இன்னும் நாலு பேஷண்ட்ஸ்  இருக்காங்க.. அதுனால சப்தம் காட்டாம போய் பார்த்திட்டு வாங்க.. இன்னும் அவருக்கு முழுசா மயக்கம் தெளியலை.. ரொம்ப பேச்சு கொடுக்க வேண்டாம்.. முக்கியமா அவரை ஸ்ட்ரெஸ் ஆகுற மாதிரி எதுவும் பேசாம, கொஞ்சம் தைரியமா பேசிட்டு வாங்க” என செவிலியர் வந்து அறிவுறுத்த,

திவாகர் மற்ற இருவரையும் அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல, அங்கே மருத்துவமனை உடையில் ஒரே இரவில் தளர்ந்து போய் கண் மூடி படுத்திருந்தார் குணசீலன்.