Advertisement

அபியுதித் அவள் கழுத்தில் தாலி கட்டியதும் அழுத்தமான கோபப் பார்வையுடன், “நினைச்சதை சாதிச்சிட்டீங்கல?” என்றாள்.
அவன் அமைதியாக தோளைக் குலுக்க,
அவளோ, “ஆனா இனி நீங்க நினைக்காதது தான் நடக்கும்” என்றாள்.
அதற்கும் அவன் தோளைத் தான் குலுக்கினான் ஆனால் இம்முறை அவனது உதட்டோரம் சிறு மென்னகை பூத்திருந்தது.
அய்யர் இருவரையும் அக்னியை வலம் வரக் கூற, அவளோ எழுந்து நின்று தன்னை முறைத்துக் கொண்டு இருந்த அபியுதித்தின் அன்னையைப் பார்த்து நக்கலும் கோபமும் நிறைந்த குரலில், “உங்க மகனை கூட்டிட்டு கிளம்பலாம்” என்றாள்.
அவளது அன்னை அதிர்வுடன் ஏதோ பேச வர, அதற்கு முன் கோபத்துடன், “இவருடன் வாழ்வேன்னு எப்படிமா நினைச்சீங்க? அப்பா சாவுக்கு காரணமானவங்களை எப்படி உறவா ஏத்துக்கிறீங்க! உங்களால் முடிந்தாலும் என்னால் முடியாது” என்றிருந்தாள்.
அவர், “நம்ம அபி..” என்று ஆரம்பிக்க,
அதற்குள் அபியுதித்தின் அன்னை ஆவேசத்துடன், “அப்புறம் எதுக்குடி என் பையனை கல்யாணம் செய்த?” என்று கத்தினார்.
அவள் அலட்சியத்துடன், “உங்க மகன் தான் நடக்க இருந்த கல்யாணத்தை கட்டம் கட்டி நிறுத்தி, என்னை கல்யாணம் செய்து இருக்கார்” என்றாள்.
சிறு அதிர்வுடன் மகனை பார்த்தவர், மகனின் முகபாவனையில் இருந்து அது தான் உண்மை என்பதை கண்டு கொண்டார். மகனை திட்ட முடியாத கோபத்தையும் இவளிடமே காட்ட நினைத்து இன்னும் கோபத்துடன் பேச வர,
அவளோ நக்கலும் சிறு வன்மமும் கலந்த பார்வையுடன், “அது என்ன பொண்ணு மட்டும் தான் வாழாவெட்டியா!! கல்யாணம் ஆகி தனியா இருக்கும்  பையனும் அதே வாழாவெட்டி தான்..
இங்க யாரும் உங்க மகனை மயக்கவும் இல்லை, ஆசைப்பட்டு வாழ ஏங்கியும் நிற்கலை.. உங்க மகனை வாழாவெட்டியா உங்க கூடவே கூட்டிட்டு போங்க” என்று கூறியிருந்தாள். அவள் பனிமலர், நெருங்கிய உறவுகளின் வஞ்சகத்தினால் மென்மையே உருவாய் இருந்தவள் நெருப்பாய் மாறிய பனிமலர்.
“அவன் ஆம்பளை சிங்கம்டி! அவனுக்கு இன்னொரு கல்யாணத்தை செய்து வைப்பேன்”
“நான் கம்ப்ளைண்ட் கொடுத்தா, ஜெயிலில் உங்க சிங்கம் சிங்கி அடிக்கும்” 
“இந்த கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணலை.. இது சட்டப்படி கல்யாணமே இல்லை” என்று அவர் எகத்தாளத்துடன் கூற,
“ஹஹான்” என்றபடி நக்கலுடன் பார்த்தவள், “முடிந்தா உங்க மகனோட சம்மதத்தை வாங்குகளேன்!” என்று சவாலிடும் குரலில் கூறினாள்.
——————————————————————– 
அபியுதித் புன்னகையுடன், “பொண்ணு தான் வரணும்னு இல்லை.. நான் வீட்டோட மாப்பிள்ளையா வந்துட்டு போறேன்” என்றான்.
அவளோ அகமும் முகமும் இறுகிய நிலையில், “உங்களுக்கு என் வீட்டிலும், மனசிலும் இடம் இல்லை” என்றாள்.  
மாயக்கண்ணனின் புன்னகையுடன் அவளை நோக்கியவன், “அன்னைக்கும் என்னைக்கும் உன் இதயத்தில் எனக்கு மட்டும் தான் இடம் உண்டு” என்றான்.
“நல்ல ஜோக்” என்றபடி அவள் சத்தமாக சிரிக்க,
அவனோ அதை கண்டுகொள்ளாமல் அவள் அன்னையிடம், “என்ன அத்தை! உங்க வீட்டில் எனக்கு இடம் இல்லையா?” என்றான் புன்முறுவலுடன்.
அவரோ, “இனி அது உன் வீடும் தான்பா” என்று கூறினார்.
பனிமலர், “அம்மா!” என்று கத்த,
அபியுதித்தின் அன்னை, “என்னங்கடி ஆத்தாலும் மவளும் நாடகம் போட்டு என் மகனை உங்க பக்கம் இழுக்குறீங்களா! நான் உயிரோட இருக்கும் வரை அது நடக்காது” என்று கத்தினார்.
அபியுதித்தின் அன்னையை கண்டுகொள்ளாத அவளது அன்னை அவளிடம், “இதான் என்னோட முடிவு.. என்னை மீறி செய்யணும்னா செய்” என்று கூறிவிட,
அவள் கோபத்துடன் அவனை முறைக்க, அவனோ வெற்றி புன்னகையை உதிர்த்தான்.
அதில் இன்னும் கோபம் கொண்டவள் உதட்டோர நக்கல் புன்னகையுடன், “கிளினிக்கில் ஈ ஓட்டிட்டு இருக்கிறீங்களா! அதான் என் கூட ஒட்டிக்க வாரீங்களா?” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூற,
அவனோ விஷம புன்னகையுடன், “ஒட்டிக்கலாமா?” என்று கேட்டு கண்ணடித்தான்.

பனித்துளி குளிர காத்திருப்போம்…

Advertisement