கால்வாசி தூரம் தான் நடந்திருப்பான் ரிஷி அவன் முன் பைக்கை நிறுத்திய ஜோ, “வா நான் டிராப் பண்றேன்”.
“வேண்டாம்” தலையை மட்டும் ஆட்டினான் ரிஷி.
“உன்னை பார்த்தாலே பத்திக்கிட்டு வருது. உனக்காக நான் வரலை. நீ தனியா போறதுனால நிது பயப்படுறா. உன்னை விட்டு வந்தால் தான் நிம்மதியா தூங்குவா. அவளுக்காக தான் இதையெல்லாம் செய்ய வேண்டி இருக்கு. எல்லாம் என் தலை எழுத்து” அவன் திட்ட, விழிகளை உயர்த்தி ரிஷி ஜோவை பார்த்தான்.
“வர்றீயா? இல்ல பசங்கள வர வச்சி உன்னை தூக்கிட்டு போகணுமா?” ரௌடி போல கேட்டான்.
எதுவும் பேசாமல் ரிஷி பைக்கில் ஏறினான். தன் பையை அவன் பின் வைத்து அதன் பின் அமர்ந்து கொண்டான்.
“என்னோட நிது உன்னால எத்தனை முறை அழுதிருப்பா. இருடா. உன்னை பழி வாங்குகிறேன்” பைக்கின் வேகத்தை அதிகரித்து பறந்தான். இவன் முயற்சியில் பயமில்லாமல் இருந்த ரிஷி மனதை அழுத்திக் கொண்டிருந்த அழுத்தம் நின்று மனம் லேசானது.
கேட்டை தாண்டி பைக்கை வீட்டின் வாசலில் வந்து பைக்கை நிறுத்தினான்.
“பிக்ப்பா ஜோ பைக் சத்தம் நம்ம வீட்ல கேக்குது” வேக வேகமாக ஓடி வந்தாள் தன்வி.
ஜோ பைக்கிலிருந்து ரிஷி இறங்குவதை அதிர்ந்து பார்த்து, “ஜோ” அழைத்தாள்.
தனு, “உன்னோட அண்ணா இனி நிது முன்னாடி வரவே கூடாது. இவனையெல்லாம் காதலிச்சா பாரு அவளை சொல்லணும். இவனை என்னோட பைக்ல்ல ஏத்த வேண்டியதா போச்சு. என்னோட தலையெழுத்து” அவளிடம் சத்தமிட்டான் ஜோ.
எல்லாரும் அவனை வேடிக்கை பார்க்க, ரிஷி நிமிர, அவன் கண்கள், கன்னம், மூக்கு சிவந்து இருப்பதையும் அவன் கண்ணீரையும் பார்த்து புருவம் சுருக்கினான்.
தனு, “உன்னோட அண்ணாவுக்கு நான் திட்டுனது உரைச்சிடுச்சுன்னு நினைக்கிறேன். தண்ணீ ஊத்தி அணைச்சிடு” ஜோ சொல்ல, “தேங்க்ஸ்” சொல்லி விறுவிறுவென அவனறை நோக்கி நடந்தான் ரிசாத்பவன்.
தம்பி, “சாப்பிட்டு போ” பாட்டி ஜோ பைக் முன் நின்றார்.
பாட்டி, “அவனிருக்கும் கோபத்தில் உங்கள ஏத்துனாலும் ஏத்திடுவான்” தனு சொல்ல, அவளை முறைத்த ஜோ “உன்னோட அண்ணன் மாதிரின்னு என்னை நினைச்சியா?” கேட்டான்.
அய்யோ! இல்லவே இல்லை. ஜோ இஸ் எ பர்பக்ட் ஃகாய்..
ஓ…ஓஹோ..பின்னிருந்து ஜெய் சத்தம் கொடுத்தான்.
பாட்டி, நான் சாப்பிடும் நிலையில் இல்லை. நான் இப்பவே போகணும்.
அங்க எதுவும் பிரச்சனையா ஜோ? தனு கேட்க, ஆமா..வீ தான்..
என்ன வீ? தனு கேட்க, “எல்லாத்தையும் உன்கிட்ட சொல்ல முடியாது” சீறினான்.
உள்ள வந்து ரிஷிய அடிச்சிட்டு போயிடு. இதே கோபத்துல்ல போனேன்னா வீ பாவம் என்று ஜெய்யை பார்த்தாள்.
முதல்ல சொல்லு. சொன்னால் தான் உனக்கு வழி விடுவேன்..
அம்மா, என்ன சின்னப்பிள்ளை மாதிரி பண்றீங்க? சந்திரமுகன் அதட்டினார்.
அவரை பார்த்த ஜோ பாட்டியை பார்த்து, “நிது மாதிரி வீக்கும் காதல் பைத்தியம் பிடிச்சிருக்கு. அதை நான் பார்த்துக்கிறேன்”.
“காதலா?” ஜெய் அதிர்ந்து பட்டென கேட்டான்.
ஜோ அவனை பார்த்து, “என்னோட அக்கா தான லவ் பண்றா? உங்க தங்கச்சி இல்லையே! இப்படி நீங்க ஷாக் ஆக தேவையில்லை” பாட்டியை பார்த்து…
“எப்படியும் உங்க பேத்தி நிதுவ பார்க்க நாளைக்கு வருவா. அவகிட்ட பார்சல் பண்ணுங்க. நான் சாப்பிட்டுக்கிறேன்” என்று சொல்ல, அவனது பேச்சில் மொத்த குடும்பமும் அவனை ஆவென பார்த்தனர்.
ஆமா பாட்டி, “நாளைக்கு நான் போவேன்” ஆசையாக அவனது பைக்கின் பின் சீட்டை பார்த்தவாறு சொல்லி பாட்டியை நகர்த்தினாள். ஜோ கிளம்பி விட்டான்.
என்னடி இது? இவங்க குடும்பத்துக்கே நம்ம குடும்பத்தை பற்றி தெரியுமோ? நளினி கேட்க,
இல்ல மாம். அண்ணா, என்னை பற்றி மட்டும் அவனுக்கு தெரியும் புன்னகைத்தாள் தன்வி மனதில் ஜோ மீதான காதலுடன்.
அறைக்குள் நுழைந்த ரிஷி சினமுடன் பையை தூக்கி எறிந்து விட்டு குளியலறை சென்று சவரை திறந்து அதன் கீழ் நின்று பவிதாவின் நினைவுகளில் ஆழ, அவளது கடுகடுத்தப் பார்வை ஸ்ரீநிதியால் மட்டுமல்ல தன் அண்ணனாலும் என்று எண்ணிக் கொண்டான்.
ஜெய்யை அவளுக்கு முன்பே தெரிந்து தான் அன்று பேசி இருக்கா. என்னை அவளுக்கு பிடிக்கலை. அவனை காதலிக்கிறாள். இனி அவள் வாழ்க்கைக்குள் நுழைவது நம்மை மேலும் காயப்படுத்தும். நம் திருமணத்தை நாம நிறுத்தணும் எண்ணியவாறு இருந்தான்.
டாட், “பவி வேற யாரையும் காதலிக்கிறாளோ?” ஜெய் புலம்பிக் கொண்டிருக்க, தன்வி அலைபேசியை எடுத்து பவிதாவிற்கு அழைத்து ஸ்பீக்கரில் போட்டு அமர்ந்தாள். அனைவரும் ஆர்வமுடனும் கலவர முகத்துடன் கவனித்தனர்.
அழைப்பை பார்த்த பவிதா அலைபேசியை எடுக்காமல் அழுது கொண்டிருந்தாள்.
எல்லாரும் ஜெய்யை பார்த்தனர்.
அண்ணா, “நான் மறுபடியும் அழைக்கிறேன்” தனு மீண்டும் அழைத்தாள். பவி அறைக்குள் வந்தார் லட்சுமி. அலைபேசியை கட் செய்கிறேன் என்று ஆன் செய்து விட்டு லேம்ப் அருகே வைத்து விட்டாள்.
“பவிம்மா” லட்சுமி அக்கா அழைக்க, “லட்சும்மா” அழுது கொண்டே அவரை அணைத்துக் கொண்டாள்.
ஏம்மா அழுறீங்க? அவர் கேட்க, தலையை மெதுவாக பவிதா அறைக்குள் காட்டினாள் ஸ்ரீநிதி.
“எல்லாம் உன்னால வந்தது” பவிதா ஸ்ரீநிதியை பார்த்து தலையணையை தூக்கி ஸ்ரீநிதி மீது அடித்தாள்.
பவிம்மா, நிதுக்குட்டிக்கு ஏற்கனவே உடல் சரியில்லை. மறுபடியும் அவங்க மயங்கிடாம?
“அக்கா..உங்க அவரு…அதான் மாமா யாருன்னு சொல்லுங்க. நான் போயிடுறேன்” கண்ணடித்தான்.
அழுவதை நிறுத்தி அவனுடன் சண்டைக்கு சென்றாள் பவிதா.
நேத்து புறந்த புள்ள மாதிரி இருந்துட்டு கண்ணடிக்கிற? அவன் மீது தலையணையை தூக்கி போட்டாள். அவன் அதை பிடித்து அவள் மீது எறிந்து,
யாரு நானா நேத்து புறந்த புள்ள? நான் காலேஜ் போயிட்டு இருக்கேன். நீ மாமா யாருன்னு சொன்னேன்னா அதுக்கு ஏத்தவாறு பணம் சேமிக்க ஆரம்பிப்பேன்.
என்ன? ஸ்ரீநிதி கேட்க, நிதுக்கா..உங்க மேரேஜூக்கு ஜோ அண்ணா பணம் நிறைய செய்வாரு. தம்பியா நானும் செய்யணும்ல்ல? உடனே பணம் என் கைக்கு வர பணமரமா வச்சிருக்கேன்?
ஸ்ரீநிதி பவிதாவை பார்க்க, பவிதா மேலும் செல்லமாக அழுதாள்.
இப்ப எதுக்குடி அழுற?
“ராகவ் எம் மேல எவ்வளவு பாசமா இருக்கான்” சொல்லிக் கொண்டே அழ, அலைபேசியில் கேட்டுக் கொண்டிருந்த ஜெய் குடும்பம் அவனை பார்த்து சிரித்தனர்.
மகனே! “என் மருமக ரொம்ப டஃப்ன்னு கேள்விப்பட்டேன். எல்லாம் உல்ட்டாவா இருக்கு” சந்திரமுகன் சிரிக்க, அவரை முறைத்த ஜெய்…”டாட் அவ யார சொல்லப் போறான்னு நான் டென்சன்ல்ல இருக்கேன். எல்லாரும் அவள ரசிச்சிட்டு இருக்கீங்களா?” முகத்தை உம்மென வைத்து கேட்டான்.
யக்கா, “உன்னோட பாசத்துல்ல எனக்கு மயக்கமே வருது. முதல்ல மாமா யாருன்னு சொல்லு?” அவன் கேட்க, “ஆ”வென மீண்டும் அழுதாள்.
ஸ்ரீநிதி அவளருகே அமர்ந்து, “உனக்கு ஜோ தான் பிரச்சனையா? நீ தான் அவனை அசால்ட்டா ஹேண்டில் பண்ணுவேல்ல?”
அய்யோ நிது! மத்த விசயம் எதுவானாலும் சமாளித்து விடுவேன். இவரை எப்படி அவனிடம் சொல்வேன்? அவள் கேட்க,
“வாயால தான் சொல்லணும். முடியலைன்னா புகைப்படம் இருந்தா காட்டுங்க” ராகவன் வெறுப்பேற்றினான்.
ஒழுங்கா ஓடிருடா..
யாராக இருந்தாலும் சொல்லு பவி. ஜோகிட்ட நான் பேசிக்கிறேன்.
நீயா? ஸ்ரீநிதியை மேலிருந்து கீழ் வரை பார்த்து, “உன்னால முடியாதுடி”.
“யாருன்னு சொல்றாளான்னு பாரு” நளினி கூற, ஜெய் தலையை பிடித்து அமர்ந்தான்.
“நிது நாம மட்டும் அன்று தியேட்டர் போகலைன்னா அவரை பார்த்திருக்க மாட்டேன்” பவிதா சொல்ல, ஜெய் அலைபேசியை கையில் எடுத்தான்.
எப்ப போனதை சொல்ற?
பைனல் இயர் முதல் வாரம் புகழ்கிட்ட நம்ம தல படத்துக்கு போகணும்ன்னு ஜோ அடம்பண்ணான். நினைவிருக்கா..நான் வரலைன்னு சொன்னேன்ல்ல. நான் வரலைன்னா நீயும் போகமாட்டேன்னு சொன்னேல்ல.
ஆமா, அன்று என்ன?
அந்த தியேட்டரில்..
அப்பவே உனக்கு ஒருவர் மேல் காதல் இருந்ததை மறச்சிருக்க? ஸ்ரீநிதி முறைத்தாள்.
யாருன்னு தெரிஞ்சா இப்படி பேச மாட்ட?
“நான் கூட அன்றிலிருந்து ஒரு வாரம் அவரை அடிக்கடி பார்த்தேன். பேச எண்ணும் போது தான் அவர் ரிஷியோட அண்ணான்னு தெரிஞ்சது. அப்புறம் எப்படி நான் சொல்றது? ஜோக்கு தெரிஞ்சது என்னை கொன்னே போட்ருவான்” அவள் அழுதாள்.
அறையை விட்டு ஒரு முடிவோடு வெளியே வந்த ரிஷியும் கேட்டு விட்டான். ஜெய்க்கோ தலை கால் புரியவில்லை. தனுவோ அவனை விட குதித்து, “அண்ணா கங்கிராட்ஸ்” என்றாள்.
முகமெங்கும் புன்னகையுடன் ஜெய் அலைபேசியை பார்க்க, “இப்ப நிம்மதியாடா உனக்கு?” சந்திரமுகன் கேட்டார்.
“ஹம் மாமா இன்னும் முடியல. கேளுங்க” நளினி இழுக்க, எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டே கீழே வந்தான் ரிசாத்பவன்.
“என்னது ஜெய் சாரா?” ஸ்ரீநிதி சிரித்தாள்.
“ஏன்டி சிரிக்கிற? அவருக்கென்ன?”
“ஹம்..நிதுக்கா அவருக்கு குறைன்னு சிரிக்கலை. உன்னை வச்சி எப்படி அவரு மேய்க்கப் போறாருன்னு சிரிக்கிறாங்க. அப்படிதானக்கா?” ராகவன் கேட்க, ஸ்ரீநிதி சிரிப்புடன் ராகவனுடன் “ஹை பை” போட்டாள்.
ஐய்யோ! “சோ க்யூட்” ராகவன் அவளை நெருங்க, “ராகவா” சத்தமிட்டார் லட்சுமி.
தியேட்டர்ல்ல பார்த்த எப்படி லவ் வந்தது? ஸ்ரீநிதி கேட்டாள்.
அழுது கொண்டிருந்த பவிதா குதித்து படுக்கையில் அமர்ந்தாள்.
ஆத்தாடி,” பயமா இருக்கே! இப்ப தான் அழுதாங்க, சிரிச்சாங்க, இப்ப எனர்ஜியோட இருக்காங்க.. இந்த காதல் வந்த பைத்தியமாவங்கன்னு கேள்விட்டேன். இப்ப தான் நேர்ல பாக்குறேன்”.
தலையணையை தூக்க கையை படுக்கையில் துலாவினாள் பவிதா.
அங்க எந்த தலையணையும் இல்லை. எல்லாத்தையும் அப்பவே என்னையும் நிது அக்காவையும் அடிச்சே கீழ போட்டுட்டீங்க..
அவன் இருக்கட்டும். நீ சொல்லு? ஸ்ரீநிதி கேட்க, புன்னகையுடன் நடந்ததை கூறினாள்.
படம் பார்க்கும் இடையில் பாப்கார்ன் வேணும்ன்னு புகழையும் ஜோவையும் வாங்கிட்டு வரச் சொன்னேன்ல்ல? அவங்க இடைவேளை வரட்டும்ன்னு சொன்னாங்கன்னு நானே போனேன் உனக்கு நினைவிருக்கா?
ஆமா, வரும் போது பாப்கார்ன் வாங்காம கோக் மட்டும் வாங்கிட்டு வந்தேல்ல..
“பவியக்கா..வெட்கப்படுறாளா? அய்யய்யோ!” அவன் கத்த, அவன் வாயை அடைத்து, “ராகவ் நீ வாய திறந்த நைட் நீ சாப்பிடும் சாப்பாட்டுல்ல கீரையை சேர்த்து விட்ருவேன்” ஸ்ரீநிதி அவனை மிரட்டி “லட்சும்மா என்ன வேடிக்கை பாக்குறீங்க? அவன் வாயை திறக்காம பார்த்துக்கோங்க”.
சொல்ல வேண்டியதை சொல்லி முடிடி. நீ பேசுறதுக்குள்ள ஜோ வந்துருவான் போல..
பாப்கார்ன் வாங்கி வரும் போது, அலைபேசியில் பேசிக் கொண்டே வந்தவன் மேல இடித்து என்னோட பாப்கார்ன் எல்லாமே கொட்டி போச்சு. நான் அவனை திட்டினேன். அவன் அலைபேசியை அணைத்து விட்டு ஏதும் பேசாமல் என் கை பிடித்து அழைத்து சென்று பாப்கார்ன் வாங்கித் தந்து லைட்டா ஸ்மைல் பண்ணி சாரி சொன்னான் பாரு..
ரொம்ப க்யூட்டா இருந்ததுடி..
“இடிச்சி பாப்கார்ன் வாங்கி கொடுத்துட்டா லவ் வந்துருமா? நானும் ட்ரை பண்ணலாம்ன்னு இருக்கேன். என்னக்கா சொல்ற?” ஸ்ரீநிதியிடம் புருவத்தை உயர்த்தினான்.
“அய்யோ அம்மா! சும்மா சொன்னேன். நான் இதெல்லாம் பண்ணவே மாட்டேன். நான் அம்மாவோட செல்லப்பையன்ல்ல?” அவன் சொல்ல, பவியும் ஸ்ரீநிதியும் சிரித்தனர்.
“வெளிய வாடா” லட்சுமி அவனை இழுத்து வாசல் அருகே சென்று திகைத்து பவிதா, ஸ்ரீநிதியை பார்த்தார்.
“ஜோ” லட்சுமி அழைக்க, இருவரும் அதிர்ந்து அவனை பார்த்தனர்.
பவி, “என்ன பேசிட்டு இருந்தீங்க?” சினமுடன் உள்ளே வந்தான்.
“நிது” முகத்தை பாவம் போல் பவிதா வைக்க, கண்ணை மூடி திறந்தாள் ஸ்ரீநிதி.
ஜோ, “வெளிய வா” ஸ்ரீநிதி ஜோஜித்தை வெளியே அழைக்க, அவளை முறைத்து…“வா வீ” சீற்றமுடன் கத்தினான்.
“ப்ளீஸ் ஜோ. நாம பேசிக்கலாம்” ஸ்ரீநிதி கூற, “பேசணுமா? என்ன பேசணும்? அந்த குடும்பத்து பசங்க யாரையும் நீங்க இருவருமே பார்க்கவே கூடாது” கத்தினான்.
“அண்ணா, இப்ப அதுல என்ன?” ராகவன் இடைபுகுந்தான்.
“என்னவா? அந்த ரிஷியை நிது லவ் பண்ணி புகழை இழந்துருக்கோம். அதுவும் இல்லாமல் நிது உயிர் பிழைச்சி வந்ததே பெரிய விசயம். மறுபடியும் அந்த வீட்ல யாரிடமும் நீங்க யாரும் பேசவே கூடாது” கத்தினான். லட்சுமியும் அவன் கூறுவது “சரி” என்பது போல நின்றார்.
ஜெய் வீட்டினர் திகைத்து கவனிக்க, “என்னையும் சேர்த்து இவன் பேசுறான்?” மூக்கை உறிஞ்சினாள் தன்வி.
“ரிஷி மாதிரி ஜெய் சார் இல்லைடா ஜோ” ஸ்ரீநிதி கூறினாள்.
என்ன இல்லை. எவனும் எப்படியும் இருக்கட்டும். இனியும் நான் யாரையும் இழக்க மாட்டேன். கண்டிப்பா முடியாது..
பவிதா அழுதாள்.
“பவி நீ பேசுடி” ஸ்ரீநிதி சத்தமிட்டாள்.
“அவள என்ன பேச சொல்ற? நாங்க நீயும் புகழும் இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா? நீ பைத்தியமா இருந்தீயோ என்னமோ நாங்க பைத்தியமா தான் திரிஞ்சோம்” கத்தி விட்டான்.
ஸ்ரீநிதி அழுது கொண்டே அமர்ந்தாள்.
“அண்ணா, எதுக்கு இப்படி பேசுனீங்க?” ராகவன் ஜோவிடம் சண்டைக்கு வந்தான்.
ஜோ அவனை தள்ளி விட்டு, “உங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது” கத்த, அமரேசன் அங்கு வந்தார்.
“ஜோ” அவர் அழைக்க, “தாத்தா” பவிதா அவரிடம் அழுது கொண்டே வெளியே ஓடினாள்.
அவர் என்னவென்று கேட்டுக் கொண்டே அழும் ஸ்ரீநிதியை பார்த்தார். ராகவன் விசயத்தை கூற..
“ஜோ பவிக்கு தான் பிடிச்சிருக்குன்னு சொல்றால்ல? நாம கேட்டு தான் பார்ப்போமே!”
தாத்தா, நீங்களும் புரியாம பேசுறீங்க? அவன் கேட்க, சினமுடன் அவனை பார்த்த பவிதா, “நான் நாளைக்கே அவரிடம் பேச தான் போறேன்” பிடிவாதமாக அழுது கொண்டே கத்தினாள்.
ஜோ அவளை அடித்து விட்டான்.
“ஜோ” அனைவரும் சத்தமிட்ட, இவர்களின் கத்தலில் வெளியே இருந்த அழகியும் தர்மேந்திரனும் ஓடி வந்தனர். ஜோ பவிதாவை அடிப்பதை சரியாக பார்த்து விட்டனர்.
பொம்பள பிள்ளய அடிக்க எவ்வளவு தைரியம்டா உனக்கு? ஜோவை கண்டபடி அடித்தார் தர்மேந்திரன்.
“விடுங்க தர்மா” என்ற அழகி, பேசும் போது எதுக்கு அடிக்கிற ஜோ?
“அத்தை இவளுக்கு லவ் பண்ண ஆளா கிடைக்கலை. அந்த ரிஷியோட அண்ணனை லவ் பண்றேன்னு சொல்றா?” கோபமாக கேட்டான்.
“அம்மூ” அவர் அழைக்க, அவரை பார்த்த ஸ்ரீநிதி மேலும் அழுது கொண்டே அறையை படாரென அடித்து சாற்றினாள்.
“நிது” அனைவரும் பதற, அலைபேசி உள்ளே தான இருந்தது. முதலில் இருந்ததை விட ஸ்ரீநிதி அழும் சத்தம் அதிகமாக கேட்க, ஜோ உட்பட அனைவரும் பதறி கதவை தட்டினார்கள்.
எல்லாரையும் நகர்த்தி விட்டு கதவை ஒட்டி நின்று, “நிது..எதுவுமே வேண்டாம். நானும் உன்னை போலவே இருந்துக்கிறேன். காதலிக்கிற எல்லாரையும் நம்மால் கல்யாணம் பண்ணிக்க முடியாது. நான் அவரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். இந்த பிரச்சனையை இதோட விட்டுறலாம். நீ கதவை திற. பயமா இருக்கு” அழுதாள் பவிதா.
உள்ளே இருந்த ஸ்ரீநிதிக்கு எதுவும் காதில் விழவில்லை. ஆனால் அலைபேசியில் கேட்டுக் கொண்டிருந்த மொத்த குடும்பமும் புரியாமல் பார்த்தனர்.
ஸ்ரீநிதி அழுகையுடன் “கத்தாத…கத்தாத…” சொல்லிக் கொண்டே மேலும் அழுதாள்.
“பிக்ப்பா, நா இப்பவே அங்க போறேன்” அவள் நகர, அவளது அலைபேசியை பிடுங்கி அணைத்த ரிஷி, “வேற யாருக்காவது கால் பண்ணி உடனே கதவை திறக்க சொல்லு” என்றான்.
“ஆமாம்மா நீ போவதற்குள் பிள்ளைக்கு ஏதும் ஆகிடாமல்” பாட்டி கூற, “அந்த பையன் ஜோவுக்கு கால் பண்ணு” மான்விழி கூறினார்.
ம்ம்! தனு ஜோவிற்கு அழைக்க, அவன் எடுத்தவுடன் அவளை திட்டினான்.
என்னை அப்புறம் திட்டுடா. முதல்ல நிதுவை எப்படியாவது வெளிய கொண்டு வா. அவங்க முதல்ல அழுதுட்டு தான் இருந்தாங்க. இப்ப ஏதோ சொல்லி சொல்லி அழுறாங்க. உடனே கதவை உடைத்தாவது பார்த்துத் தொலை கத்தினாள்.
ராகவ், “வா கதவை உடைக்கலாம்” கூற, இருவரும் ஓடி வந்து கதவை நான்காவது முறை இடித்து கதவை திறந்தனர்.
நிது, எல்லாரும் பதற அவள் அதையே சொல்லி அழுது கொண்டிருந்தாள்.
“அம்மூ இங்க பாரு…” அழகி அவள் கன்னத்தை தட்ட, இமைகளை படபடவென அடித்து அவரை பார்த்து, “அத்த..தல ரொம்ப வலிக்குது” அழுதாள்.
“தண்ணீ எடுத்துட்டு வாங்கடா” அழகி சத்தமிட, “அத்த..அத்த..யாரோ ஒரு பொண்ணு அழுறா. எனக்கு கேட்டுக்கிட்டே இருக்கு” காதை மூடி அவர் மீதே மயங்கினாள்.
ஜோ தனு சொன்னவுடன் அலைபேசியை வைத்திருப்பான்.
தன்வி அவளது வீட்டில் நடந்து கொண்டே அலைபேசியை பார்க்க, மற்றவர்கள் அவளையும் அலைபேசியையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நேரம் கழிந்தது. அழைப்பே வரவில்லை. இன்னும் என்ன செய்றான்? எனக்கு ஒன்றுமே புரியலையே! தனு புலம்பிக் கொண்டிருக்க, ரிஷி காதில் ஹெட் போனை மாட்டிக் கொண்டு பாடல் கேட்டுக் கொண்டிருந்தான்.