Advertisement

நெஞ்சுகுள்ளே ஒரு சுகவேதனை

அத்தியாயம் 14.

 விக்ரமும் கிருஷ்ணாவும் அவர்களின் வேலை பளுவின் நடுவில் கிருஷ்ணாவின் வீட்டிற்கு இருவரும் வந்தனர்..

வாழும் நாட்களில் கூட யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் வாழ்ந்த திலகவதி வாழ்வின் இறுதிக் கட்டத்திலும் குடும்பத்திற்கோ அவரை சுற்றியுள்ளவர்களுக்கோ எவ்வித உதவிகளோ நன்மைகளோ செய்யாமல் அவரது காலத்தை கழித்தார்..

 கிருஸ்ணா முதல் முறையாக அவனது வீட்டிற்கு விக்ரமை அழைத்து வந்தான்..

 விக்ரமோ திலகவதியை பார்ப்பதற்காக பழங்கள் மற்றும் இன்னும் சில பொருட்களை வாங்கி வந்து மீனாட்சியிடம் கொடுத்துவிட்டு திலகவதி இருக்கும் அறைக்குள் கிருஸ்ணாவுடன் சென்றான்..

கடத்தல் கேஸ் சம்பந்தமான ஒரு பைலை அவனே எடுத்து மறைத்து வைத்துவிட்டு அதை கிருஸ்ணாவிடம் கொடுத்ததாக கூறி அவனது வீட்டில் தேடி பார்க்கலாம் என்று கூறிக்கொண்டு அத்தோடு பாட்டியையும் பார்ப்பதற்காக விக்ரம் கிருஸ்ணாவின் வீட்டிற்கு வந்தான்..

” கிருஷ்ணா நீ போய் நான் சொன்ன கேஸ் பைஃல் வீட்ல இருக்கான்னு தேடி பார். நமக்கு டைம் இல்ல. நம்ம சீக்கிரம் போகணும் நான் பாட்டியை பாத்துட்டு வரேன்.. ” என்று கிருஸ்ணாவிடம் கூறி அவனை வெளியே அனுப்பி வைத்துவிட்டு திலகவதியிடம் பேசுவதற்கு தயாரானான் விக்ரம்..

 திலகவதி பணத்திற்காக அதிகம் ஆசைப்பட்டவர்.. நகை பணம் பகட்டான வாழ்க்கை போன்ற மோகத்தை அடைவதற்கு அவர் எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயாராக இருந்தார்..

 ஆனால் யார் செய்த புண்ணியமோ அவ்வாறு இல்லாமல் பருவகாலத்தில் அவரின் நெருங்கிய நண்பி பார்வதி மூலம் அவரது சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டார்..

 கண் நிறைந்த திலகவதியின் அழகே அவரை செல்வந்தர் ஒருவர் திருமணம் முடிப்பதற்கு காரணமாகிவிட்டது..

அவரது காலத்தின் பயனாக அவர் ஆசைப்பட்ட பகட்டான பணக்கார வாழ்க்கை அமைந்ததால் அவரை யாராலும் பிடிக்க முடியவில்லை.. சிறுவயதிலிருந்து ஆசைப்பட்ட உணவுகள் உடை நகை அலங்காரம் என்று அவரது சிந்தனை செயல்பாடு என அனைத்தும் அதிலேயே ஊறிவிட்டது.

 ஈஸ்வர மூர்த்தியின் தந்தை அதை எதையும் பெரிதாக எடுக்காமல் அவருக்கு அழகான மனைவி ஒரு மகன் அவரது தொழில் என்று அவரது வாழ்வை கழித்து விட்டார்..

 கேட்பார் யாரும் இல்லாமல் ஈஸ்வரமூர்த்தியின் தந்தை உழைக்கும் பணம் அனைத்தையும் தவறான வழியில் பயன்படுத்தாவிட்டாலும் அவரது அழகுக்கும் ஆடம்பரத்திற்கும் அதிகமாக செலவழித்தார் திலகவதி..

 திலகவதியின் குடும்பம் ஏழ்மை குடும்பமே தவிர கௌரவமான குடும்பம்.. அவரின் தந்தை சாதி மத இனம் என அதையே கட்டிக்காத்து யாரிடமும் கைநீட்டி பணம் வாங்காமல் அவரது வருமானத்திற்கு என்ன முடியுமோ அதை வீட்டிற்கு கொடுத்து அவரது வாழ்வை கழிந்து விட்டார்..

 தந்தையின் சாதிமத பேதமும் கணவனின் பணமும் சேர்ந்து திலகவதியை ஒழுக்கமற்றவராக மாற்றி விட்டது..

 அதுவே ஈஸ்வரமூர்த்தி மீனாட்சியை திருமணம் செய்து வந்த பொழுதும் சரி அதைத் தொடர்ந்து வந்த காலங்களிலும் மினாட்சியின் சாதி மற்றும் ஏழ்மை நிலையை காரணம் காட்டி மீனாட்சியை துன்பப் படுத்துவதற்கு வசதியாக போய்விட்டது..

 வாழும் நாட்களிலும் சரி வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் பொழுதும் சரி யாருக்கும் நேர்மையாக உண்மையாக யாருடனும் உண்மையான அன்புடன் பழகாமல் அவரது பணவெறி மட்டுமே மனதில் கொண்டு எந்த ஒரு மனிதனும் அதிலும் பெண் ஒரு தாய் செய்யக்கூடாத ஒரு காரியமும் இறைவனாலும் கூட மன்னிக்க முடியாத ஒரு அவ செயலை செய்தார்.. அச்செயலுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போன்று இத்தனை வருடங்களாக எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வாழ்ந்து விட்டார்..

இதோ வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தும் அவர் செய்த கொடுமையை ஒத்துக்கொண்டு அதற்குரிய பரிகாரம் செய்ய விரும்பாமல் அதை தன்னுடனே புதைக்க

வேண்டும் என நினைத்துக்கொண்டார்..

ஆனால் இறைவன் என்று ஒருவன் இருக்கும் பொழுது எந்த ஒரு உண்மையும் யாருடனும் புதைந்து போக முடியாது என்பதை மறந்துவிட்டார் திலகவதி..

 இதோ விக்ரம் சாகர் திலகவதி தன்னோடு போக வேண்டும் என நினைத்த உண்மையை கண்டுபிடித்து அதன் தீவிர தன்மையையும் அதன் பலனையும் திலகவதிக்கு அளிப்பதற்கு வந்துவிட்டான்..

 கடவுள் திலகவதி வாழ்ந்து செய்த பாவங்களின் காலம் முடிந்துவிட்டது என நினைத்து விட்டார் போல் .. அவர் அன்று கோயிலுக்கு சென்று வந்ததும் அவர் செய்த பாவத்திற்கு அங்கேயே தண்டனை தீர்மானிக்கப்பட்டு விட்டது.. அன்று இரவு நேரம் யாரின் உதவியும் இல்லாமல் பாத்ரூம் சென்றவர் நீரில் வழுக்கி கீழே விழுந்து அடிபட்டதனால் ஸ்ட்ரோக் வந்து இதோ படுத்த படுக்கையாகி விட்டார்..

திலகவதி நன்றாக இருந்த காலம் தொட்டு இதோ படுக்கையில் இருக்கும் காலம் வரை மீனாட்சியே அவருக்கு அனைத்தையும் செய்து வருகிறார்..

 கதவு திறந்து விக்ரமும் கிருஸ்ணாவும் வந்ததை பார்த்து விட்டு தூங்குவது போல் கண்களை மூடிக் கொண்டார்..

 ஆனால் விக்ரமின் தீவிர பார்வையால் பார்வை வட்டத்தில் இருக்கும் அனைத்தையும் ஒருமுறை பார்த்தால் அவனது மனதிலும் மூளையிலும் பதிந்துவிடும்..

 அதேப்போன்று உள்ளே வரும் போதே திலகவதி கண் திறந்து அவர்களை பார்த்துவிட்டு கண்ணை மூடுவதை கண்டு அவர் தூங்காமல் கண் விழித்து இருப்பதை அறிந்து கொண்டான்..

” ஹிட்லர் திலகவதி நீங்க தூங்கவில்லை என்று எனக்கு தெரியும். கண்விழித்து என்னைப் பாருங்க.. நீங்க செய்த மாபெரும் நன்மையின் ஒரு தொகுப்பு.. ஏதோ ஒரு பழமொழி சொல்லுவாங்க பூனை கண்ணை மூடிக் கொண்டால் அதுக்கு இருட்டு ஆகிடுமாம். ஆனா அது உலகமே இருட்டாகி விட்டது என்று நினைத்துக்கொள்ளுமாம்.. அதே மாதிரி நீங்க செய்த நல்ல காரியம் இந்த வீட்ல இருக்கிறவங்களுக்கு வேண்டுமென்றால் தெரியாம இருக்கலாம். ஆனால் சமீபத்தில் எனக்கு குறும்படம் மூலம் தெரிய வந்து விட்டது.. நல்லா கண்ண விரிச்சி பாருங்க நான் காட்டுறேன்.. “, திலகவதி யாருக்கும் தெரியாது என நினைத்து செய்த காரியம் அனைத்தையும் படம் மூலம் காட்டி அவரது பிரஷரை இன்னும் எகிற வைத்தான்..

 அதைப் பார்த்துவிட்டு திலகவதி படுக்கையில் இருந்து எழுந்து இருக்க முயன்றார். ஆனால் அவரால் கையை ஊன்றி எழ முடியாததால் மீண்டும் படுக்கையில் விழுந்து விட்டார்.. அதை பார்த்தும் இரக்கம் வராமல் அவர் படும் துன்பத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் விக்ரம்..

 திலகவதி வாய் திறந்தால் மூடாமல் பேசிக்கொண்டிருந்தவர் தேவைப்படும் நேரத்தில் பேச முடியாமல் வாய் ஒரு பக்கம் இழுத்துகொண்டதை நினைத்து வருந்திக் கொண்டு. சைகை மூலம் சத்தமிட்டு விக்ரமிடம் ஏதோ கூற வந்தார். ஆனால் அது ஏசிபிக்கு அவர் கூறாமலே புரிந்து விட்டது..

“ம்ம்ம் —” என்றார் திலகவதி.

” ஓஹோ வெயிட் வெயிட் பொறுமை பொறுமை நீங்க என்ன பேச போறீங்கனு எனக்கு நல்லாவே தெரியும்.. நானே சொல்றேன் இது எப்படி உனக்கு தெரிய வந்துச்சு?. அது தானே இப்போ உங்களோட கேள்வி.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு.. ஒரு தாயா நீங்கள் செய்யக் கூடாத தீய செயலை தகாத செயலை செய்துவிட்டு அதை வெளியே தெரியப்படுத்தாமல் உங்களுடனே இத்தனை வருடமும் வச்சு இருக்கீங்க.. அதுக்கு நடமாடும் காலத்தில் உங்களுக்கு தண்டனை கிடைக்காமல் இந்த வயது போன நேரத்தில் தண்டனை கிடைத்து விட்டது.. அதன் மூலம் பல துன்பம் அனுபவித்து அடுத்தவருடைய உதவி இல்லாமல் நீங்க வாழ முடியாத ஒரு நிலை உங்களுக்கு வந்துவிட்டது.. அதுவும் உங்க சாதி வெறியால் யாரை ஒதுக்குனீங்களோ அந்த மீனாட்சி செய்யும் உதவியை அனுபவிப்பது தான் கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கும் பெரிய தண்டனை.. இது என்ன துன்பம். தண்டனைகளிலும் பெரிய தண்டனை இனி தான் உங்களுக்கு காத்திருக்கு.. எது நீங்க நடக்க கூடாதுன்னு நினைச்சு யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்திங்களோ அதுவே உங்க கண்ணுக்கு முன்னாடி கூடிய சீக்கிரம் நடத்தி காட்டி எல்லாருக்கும் தெரியப்படுத்தி காட்டல நான் ஏசிபி விக்ரம் இல்லை. அந்த தண்டனை அனுப்பவிக்கிறதுக்கு இன்னும் கொஞ்ச நாள் இந்த உயிரை கையில் பிடித்து வச்சிருங்க. வரட்டா.. ” என்று கெத்தாக கூறி அங்கிருந்து வெளியேறினான்.

 விக்ரமுக்கு கமிஷ்னர் கொடுத்த வேலையும் சேர்த்து திலகவதியின் தீய செயலையும் வெளி உலகத்துக்கு அம்பலப்படுத்தும் மிகப்பெரிய பொறுப்பும் வந்து விட்டது…

முன்பைவிட இன்னும் அதிகமாக அவனது வேலைப்பளு கூடிவிட்டது.. உறங்குவதற்கு கூட அவனுக்கு நேரமில்லை..

 இதோ நிஷாவின் பிடிவாததால் மீரா துளசி மற்றும் ரிஷி நால்வரும் மாலைப் பொழுதில் பீச்சுக்கு வந்தார்கள்..

 நிஷாவும் மீராவும் ஒருவரையொருவர் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்..

 மீரா வாய் திறந்து ரிஷியிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் நிஷா கேட்ட அனைத்தையும் மீராவுக்கும் எந்த பாகுபாடும் இல்லாமல் பார்த்து பார்த்து உணவு பண்டங்கள் வாங்கிக் கொடுத்து மீராவின் சிரிப்பும் சந்தோஷதையும் பார்த்து அவனது மனதிலும் ஏதோ இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி ஒன்று தோன்றியதை உணர்ந்தான்..

குழந்தைகள் அங்கே விளையாடிக் கொண்டிருக்கும்போது துளசிக்கு சற்று இடைவெளி விட்டு ரிஷி அமர்ந்தான்..

” துளசி இன்னும் இரண்டு நாளில் என்னோட தங்கச்சி வந்தனாவும் மாப்பிள்ளையும் ஜெர்மனியிலிருந்து இங்கே வாரங்க.. தங்கச்சிக்கு குழந்தை பிறந்து ஒருவயது முடிஞ்சி மொட்டை அடித்து காது குத்து விழா எல்லாம் முடிச்சுத்தான் திரும்ப ஜெர்மனிக்கு அனுப்பி வைப்பேன்.. சொல்லுறேன்னு தவறாக நினைக்காதீங்க எங்க அப்பாவோட தங்கச்சி தேவி ஆன்ட்டி கொஞ்சம் மனசு நோகும்படி வாய் தூடுக்கா பேசுவாங்க. நான் வீட்ல இல்லாத நேரம் அவங்க அப்படி பேசினா நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்க. நானும் சொல்லி புரிய வைக்க முயற்சி செய்றேன்.. மாப்பிள்ளை கிட்டயும் வந்தனா கிட்டயும் நான் உங்கள பார்த்துக்கொள்ள சொல்லிட்டு தான் ஆபீஸ் போவேன்.. அவங்க பார்த்துக்கொள்வாங்க வந்தன இருக்கும்போது ஆன்ட்டி எதுவும் பேச மாட்டாங்க.. இருந்தாலும் நீங்க அவங்கள தனியா சந்திக்கிற வாய்ப்பு தவிர்த்துவிட்டால் எதுவும் பிரச்சினை வராமல் தடுக்கலாம்.. மீராவை பத்தி ஏதாவது கேள்வி வந்தால் என்கிட்ட சொல்லுங்க அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.. உங்களுக்கு ஏதாவது தர்மசங்கடமான விஷயம் நடந்தால் நான் ஆபீஸ் முடிந்து வரும்வரை எனக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்க. நான் வந்து ஆன்ட்டியிடம் பேசிக்கிறேன்.. ” என்று கூறிவிட்டு அவளது பதிலுக்காக முகத்தை பார்த்து இருந்தான்..

” நீங்க சம்பளம் தரும் முதலாளி நான் உங்க வீட்ல வேலை பார்க்கும் வேளையாள்.. இந்த வேலை இல்லாட்டி எனக்கு வேற வேலை கிடைக்கும் அதுவும் இல்லன்னா நான் முதல் பார்த்த வேலைக்கு இப்பயும் போகலாம்.. நான் போனா நிஷா கொஞ்சம் பாதிக்கப்படுவாள் ஆனால் காலப்போக்கில் அதையும் நீங்க சரி படுத்தி விடுவீங்க.. எனக்கு ஏதாவது ஒன்னுனா நான் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளலாம் ஆனால் என் பொண்ணு மீராவுக்கு ஒண்ணுன்னா நான் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.. அதை கொஞ்சம் நீங்க நல்லா புரிஞ்சு கொள்ளுங்க. அது யாராக இருந்தாலும் சரிதான்.. நான் உயிர் வாழும் வரை எனக்கு மீராவுக்கு அடுத்து தான் யாராயிருந்தாலும்.. ” என்று அவளும் அவளது நிலையைக் கூறி விட்டு கையில் இருந்த மண்ணை தட்டிக்கொண்டு அங்கிருந்து குழந்தைகள் விளையாடும் இடத்திற்கு சென்றுவிட்டாள்..

 மாமா பையா அழைத்து சென்ற பெண்களை எந்தப் பிரச்சினையிலும் மாட்டிக் கொள்ளாமல் கை மாற்றிவிட்டு மீண்டும் சென்னைக்கு வந்து விட்டான்..

 அவன் வந்ததும் சந்தோஷ் அவனை கட்டி கொண்டு கண்ணீர் விட்டான்..

” ரொம்ப ஈஸியா சொல்லிட்டு போயிட்டீங்க உங்களுக்கு அடுத்தது நான் தான்னு ஆனா இந்த மூன்று நாளில் நீங்க இல்லாம இங்க என்னால எதுவுமே செய்ய முடியல மாமா பையா.. உங்களை இப்ப பார்த்ததுக்கு பிறகு தான் எனக்கு உயிரே வந்துச்சு.. ” என்று கண்ணீர் வடித்துக் கொண்டு ஒரு கணவனை காணாமல் மனைவி தேடி தவித்து போனதுபோல் புலம்பி தீர்த்தான் சந்தோஷ்..

” டேய் டேய் போதும் போதும் நிறுத்து என்ன கட்டி கிச்சு கிச்சு மூட்டுவதை விட நீ அந்த பொண்ண சீக்கிரம் கல்யாணம் கட்டு இதுதான் என்னோட கட்டளை.. ” என்றான் பையா..

” பையா நீங்க இருக்கும் போது நான் எப்படி கல்யாணம் பண்றது.. ” என்றான் சந்தோஷ் வெட்கப்படுவது போன்று கோமாளி கூத்து கட்டிகொண்டு.

” டேய் இதுபோன்ற தொழிலுக்கு கல்யாணம் ஒன்னு தான் இப்ப இல்லைனு குறை.. நம்ம தலைக்கு மேலேயே காத்தி தொங்கிட்டு இருக்கு. இதுல என்னை நம்பி ஒருத்தி வந்து அப்புறம் எங்க மூலம் ஒரு குழந்தை வந்து. நான் தொழிலை பார்க்கிறதா?.. இல்லை அவங்களுக்கு காவல் பார்க்கிறதா?. இந்த கல்யாண வாழ்க்கை எல்லாம் நமக்கு சரிவராது.. தொழில் பண்ணினோமா. அதன் மூலம் நாலு காசு பார்த்தோமா அதை வச்சி சரக்கு அடிச்சுட்டு ஒவ்வொரு நாளையும் கடந்து இருக்குற மிச்ச வாழ்க்கையும் கழிச்சிட்டு போய்க்கிட்டே இருக்கணும்..” என்றான் பையா.

” அதெல்லாம் சரிதான் பையா ஆனால் உங்களோட பிற்காலத்தில் உங்களுக்குனு யாரும் வேணாமா?.. ” என்றான் சந்தோஷ்.

” டேய் அதுக்குதான் உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றேன்.. எனக்கு தம்பி நீ இருக்க. உன் பையனும் பொண்ணும் எனக்கும் குழந்தைங்க தான். அவங்களை பார்த்துகிட்டாலே என்னோட காலம் போயிடும்.. உனக்கு அதை பத்தி கவலை வேண்டாம்.கூடிய சீக்கிரம் அந்த பொண்ண கல்யாணம் பண்ணுறதுக்கு உரிய வழியை பாரு.. ” என்று கூறி சந்தோஷின் தோளில் தட்டி விட்டு அங்கிருந்து அறைக்கு சென்றான் மாமா பையா..

ரிஷி எது நடக்கக்கூடாது என்று துளசியிடம் அவ்வளவு கெஞ்சிக் கேட்டுக் கொண்டானோ அதுவே தேவி வந்து இறங்கிய அன்றே சிறப்பாக நடந்தேறிவிட்டது..

 வந்தனா ஜெர்மனியில் இருந்து வந்த பயண களைப்பினால் சற்று உறங்கிவிட்டாள்.. இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவி துளசியை தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்து விட்டார்..

 தனி ஒரு பெண்ணாக வறுமையில் வாழும் போதும் ஒழுக்கம் மானம் என வாழும் துளசிக்கு அவர் கூறிய தகாத வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியாமல் மீராவை கையில் பிடித்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்..

 நிஷா துளசியுடன் தூங்குவதால் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்ததும் அங்கு சென்று நிஷாவையும் மீராவையும் பார்த்துவிட்டு அவனது அறைக்கு செல்வதே அவனது தற்போதைய வழமை ஆனது..  

அன்று இரவும் ரிஷி வீட்டிற்கு வந்து அவர்கள் தங்கி இருக்கும் கெஸ்ட் ஹவுஸில் அவர்களை பார்க்க சென்றபோது அங்கே அவர்கள் இல்லாமல் போனதால் அவனுக்கு சந்தேகம் வந்தது.. உடனே அதை கேட்க தேவியின் அறைக்கு சென்றான்..

அங்கே தேவியும் தேவியின் கணவரும் பேசிக்கொண்டதை கேட்டதும் ஒரு நிமிடம் உறைந்து போய் விட்டான்.. அவ்வாறு தகாத வார்த்தைகளால் துளசியைத் திட்டியுள்ளார்கள்.. அவர்கள் பேசியதை கேட்டதும் அவனால் அவர்களை கழுத்தை நெரித்து கொல்லும் அளவிற்கு கோபம் வந்தும் அதைக் காட்டும் நேரம் இது இல்லை என்று புரிந்து கொண்டு அங்கிருந்து துளசி முன்பிருந்த வீட்டுக்கு அவளை தேடி சென்றான்..

 அன்றைய நாளின் நிறைவிலும் தூங்காமல் விக்ரம் கேஸ் பைல் பார்த்துக் கொண்டிருந்தான்..

அப்போது கமிஷ்னரிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது..

” விக்ரம் எல்லாம் ரெடி தானே நம்ம பிளான் படி எல்லாத்தையும் பக்காவா பண்ணிடனும்.. ரொம்ப கேர்ஃபுல்லா இரு. எந்த நேரம்னாலும் எனக்கு கால் பண்ணி என்ன ஹெல்ப் வேணுமென்றாலும் கேளு. எல்லா கேடுகெட்ட நாய்களையும் பக்காவா கைது பண்ணிடனும்.. ஓகே டீம் எல்லாம் ரெடி தானே விக்ரம்.. ” என்றார் கமிஷ்னர்..

அதற்கு விக்ரம் ” எந்தவித பிரச்சினையும் இல்ல சார் எல்லாமே பக்காவா ரெடியா இருக்கு டீம் அலர்ட்ட இருக்காங்க. சரியான டைம் வந்ததும். களத்துல இறங்கிடுவோம்.. நீங்க எதை பற்றியும் யோசிக்காமல் இருங்க நல்லா ரெஸ்ட் எடுங்க..” என்று கூறினான் விக்ரம்..

” ஃபர்ஸ்ட் நல்லபடியா எல்லாத்தையும் முடிச்சுட்டு பொண்ணுங்க குழந்தைங்க எல்லாம் இனி பாதுகாப்பா இருப்பாங்க அப்படின்னு ஒரு நம்பிக்கை நிலை வந்ததும் நம்ம ஒரு பார்ட்டி பண்ணி ஜாலியா என்ஜாய் பண்ணி கொண்டாடி முடிச்சதும் நிம்மதியாக ரெஸ்ட் எடுக்கலாம் விக்ரம்.. இப்போ ஒரு அவசரமும் இல்ல. நம்ம வேலையை நாம முதல்ல முடிப்போம். ஓகே நாளைக்கு பார்ப்போம்.. ” என்று கூறி கமிஷ்னர் அழைப்பை துண்டித்தார்..

 விக்ரம் தீவிரமாக கைது பண்ண வேண்டிய ஆட்களின் லிஸ்ட் எடுத்து சரிபார்த்துக் கொண்டான்..

 முதலாவதாக இருந்தவனின் பெயரை பார்த்ததும் மனதில் ஒரு இனம் புரியாத சந்தோசம் தோன்றியது விக்ரமிற்கு..

 யார் அது?..

 துளசி ரிஷியிடம் என்ன முடிவு கூறுவாள்?..

திலகவதி மீனாட்சிக்கு என்ன கொடுமை பண்ணினார்.?..

என்ற இந்தக் கேள்விகளுக்கு பதிலாக இனிவரும் அத்தியாயங்களளை தொடர்ந்து படிக்க என்னுடன் இணைந்திருங்கள்..

Advertisement