கார் மலை அடிவாரத்தை நோக்கி சீரான வேகத்தில் நெருங்கிக் கொண்டிருக்க, திடீரென்று காரை பிரேக் பிடித்து நிறுத்தினான் அஜித்.
ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று அனைவரும் முன்னால் பார்க்க, அஜித்தின் கண்களோ ஸ்தம்பித்து நின்றன.
முன்னால் பார்த்த அனைவரும் அஜித் பேயறைந்தது போல் அமர்ந்திருப்பதைப் பார்த்து, “டேய், என்னடா ஆச்சு? ஏன் வண்டியை நிறுத்துன?” என்று கேட்டான் பரமேஷ்.
இன்னும் பீதியிலேயே அமர்ந்திருந்த அஜித், “அங்க… அங்க…” என்று திக்கித் திணறி கூற முடியாமல், தன் கையைச் சாலையை நோக்கிக் காட்டினான்.
அவன் காட்டிய இடத்தில் ஒன்றும் இல்லாமல் இருக்க, “அங்க என்னடா? அங்க ஒண்ணுமே இல்லையே!” என்றான் பரமேஷ்.
மீண்டும் சாலையைப் பார்த்த அஜித் அதிர்ந்து, “நான் பார்த்தேன் டா… அங்க ஒரு பெரிய குழி இருந்தது. இப்ப பார்த்தா அது இல்லை!”
அஜித் குழி என்று கூறியதும் அவனைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்.
“ரோட்டுல எப்படி டா குழி வரும்? அதுவும் பெரிய குழி?” என்று கூறி கேலி செய்தனர்.
அதில் கோபமடைந்த அஜித், “நான் தான் சொல்றேன்லா… அங்க பெரிய குழி இருந்தது!” என்று கத்தினான்.
அதில் அனைவரும் அமைதியாக இருக்க, “அஜித், நீ பின்னாடி வா. நான் வண்டியை ஓட்டுறேன்,” என்று கூறிக்கொண்டு காரில் இருந்து இறங்கிய பரமேஷ், ஓட்டுநர் அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டு காரை இயக்க ஆரம்பித்தான்.
அவனது அருகில் அஜித் பயத்துடன் அமர்ந்திருந்தான். திடீரென்று ஏற்பட்ட பெரிய பள்ளம் எப்படி அதற்குள் மறைந்தது என்று ஒன்றும் புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தான். என்ன யோசித்தும் ஒன்றும் புரியாமல் குழம்பினான்.
மற்றவர்கள் அஜித் கூறியதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், ருத்ரா மட்டும் அதுகுறித்து தீவிர ஆலோசனையில் ஆழ்ந்தாள்.
மலை அடிவாரக் கிராமத்தை அவர்கள் வந்தடைந்தபோது இருட்ட ஆரம்பித்திருந்தது. இன்று இந்தக் கிராமத்திலேயே தங்கிக் கொள்ளலாம் என்று அனைவரும் முடிவு செய்தனர்.
மற்றவர்கள் இங்கு வந்து பழக்கம் என்பதால், அவர்களுக்கு எதுவும் ஆச்சரியப்படும்படி இல்லை. ஆனால் ருத்ராவோ எல்லாவற்றையும் ஆச்சரியத்துடனே பார்த்தாள்.
மலைக் கிராமம் என்றால் குடிசை போன்ற அமைப்பில் தங்கி இருப்பார்கள் என்று நினைத்த ருத்ராவிற்கு, அந்தத் தோற்றம் வியப்பளித்தது. அதற்கு நேர்மாறாக ஒரு சிறிய நகரம் போல காட்சியளித்தது. செங்கற்களால் ஆன கட்டிடங்கள், பழமையான கோவில்கள், கடைகள் மற்றும் தங்கும் விடுதிகள் என்று எல்லா வசதிகளும் அங்கு நிறைந்திருந்தன.
காரை மெதுவாக இயக்கிக் கொண்டு சாலை ஓரமாக எதுவும் தங்கும் இடம் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு வந்தான் பரமேஷ். அவன் நினைத்தது போல் ஒன்று கண்ணில் தென்பட, அதற்கு அருகில் காரை நிறுத்தினான்.
அனைவரும் காரில் இருந்து இறங்கி, “கண்ணன் லாட்ஜ்” என்று பெயர்ப் பலகை பொறிக்கப்பட்டிருந்த அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்தனர்.
வரவேற்பறையில் ஒருவர் அமர்ந்திருந்தார். தலையில் நரை முடி, தாடி, சுருங்கிய தோல் என்று அவரை அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவராகக் காட்டிக் கொண்டிருந்தது.
இவர்கள் வருவதை மகிழ்ச்சியுடன் பார்த்த பெரியவர், “வாங்க தம்பி, ரூம் வேணுமா?” என்று புன்னகையுடன் கேட்டார்.
“ஆமா,” என்று அனைவரும் தலையசைத்தனர்.
“எத்தனை அறை வேணும் தம்பி?”
“மூணு ரூம் ஐயா,” என்றான் பரமேஷ்.
இதுவரை ஆண்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த பெரியவர், பெண்களைப் பார்த்தார்.
“தம்பி, இவங்களா யாரு?” என்று யோசனையுடன் கேட்டார்.
“நாங்க எல்லாரும் பிரண்ட்ஸ். இங்க ஜவ்வாது மலையைச் சுத்திப் பார்க்க ரொம்ப தூரத்துல இருந்து வந்திருக்கோம் ஐயா,” என்று மென்மையாகப் பதில் கூறினான் பரமேஷ்.
அதனைக் கேட்ட பெரியவர், இவர்களின் பெயர் மற்றும் போன் நம்பரை ஒரு நோட்டில் எழுதிக் கொண்டு, சாவியை எடுத்து பரமேஷிடம் நீட்டினார்.
அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட பரமேஷ், “நன்றி,” என்று கூறிவிட்டு அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
சொல்லிக் கொள்ளும்படி அதிக அறைகள் இல்லாவிட்டாலும், அந்தத் தளத்தில் மட்டும் ஆறு அறைகளைக் கொண்டிருந்தது அந்தக் கட்டிடம்.
“மொத்தம் மூணு அறை இருக்கு. ஒண்ணுல நானும் அஜித்தும் தங்கிப் போம். இன்னொண்ணுல ரோஸினியும் முகிலும் தங்கிப்பாங்க. நீ தனியா ஒரு ரூம்ல இருந்துப்பியா?” என்று ருத்ராவைப் பார்த்துக் கேட்டான்.
“இருந்துப்பேன்,” என்று உறுதியாகப் பதில் கூறினாள்.
அவனுக்கும் அவளைத் தனியாக விட விருப்பம் இல்லை. ரோஸினி, முகில் இருவரும் ருத்ராவை ஏதாவது வம்பிழுப்பார்கள் என்று நினைத்தவன், ருத்ரா தனி அறையில் இருப்பதுதான் நல்லது என்று நினைத்தான்.
“சரி,” என்று கூறி ருத்ராவின் கையில் அறைச் சாவியைக் கொடுத்தான்.
அவரவர் அறைக்குச் சென்று விட, இவ்வளவு நேரம் தைரியசாலியாக முகத்தை வைத்திருந்தவள், சற்று பயத்துடனே கதவைத் திறந்து கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.
ஒரு சிறிய அறையில் கட்டில் ஒன்று போடப்பட்டிருக்க, அதில் மெத்தை விரிப்பு நேர்த்தியாக இருந்தது. சற்று கவலையுடன் மெத்தையில் சென்று படுத்தவள், தன் அலைபேசியை எடுத்து கோகிலாவிற்கு அழைப்பு விடுத்தாள்.
மறுபக்கம் அலைபேசியை எடுத்ததும், “ஹலோ, நீங்க யாரு?” என்று கேட்க, சற்று அதிர்ந்தாள். பின் யோசித்தவளுக்கு, இந்தக் குரல் தன் மதினியின் மகள் என்பது நினைவுக்கு வர, “ஓய், நா ருத்ரா பேசுறேன். என் அம்மாட்ட போனை கொடு,” என்று கூறினாள்.
“ஓஓ… நீயாக்கா? நில்லு, கொடுக்கிறேன்,” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே, மற்றொரு மழலைக்குரல் கேட்டது.
“அக்…கா… அக்…கா…”
அதனைக் கேட்டதும் மகிழ்ச்சியில், “அடேய் ஹரி!” என்று கூறிச் சிரித்தாள்.
சிறிது நேரம் மழலையின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாள். சிறு பிள்ளைகள் அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த கோகிலா, உடனே அலைபேசியை வாங்கி, “ஹலோ,” என்றார்.
“அம்மா, நான் தான் பேசுறேன்.”
“சொல்லுடி, மலைக்கு போய் சேர்ந்துட்டீங்களா? ஒண்ணும் பிரச்சனை இல்லையே? நீ நல்லாயிருக்க தானே?” என்று அன்பினால் கேள்விகளைப் பொழிந்தார்.
“நா நல்லாயிருக்கேன் மா. நீ எப்படி இருக்க?”
“எனக்கு என்னடி? எப்போதும் போல நல்லாதான் இருக்கேன்,” என்றவரின் குரலில் கவலை தெரிந்தது.
அதனைக் கவனித்த ருத்ரா, “நா சீக்கிரமா வந்திருவேன் மா. நீ கவலைப்படாம இரு,” என்று கூறினாள்.
அவளது கண்களில் நீர் துளிர்த்தது. இதற்கு மேல் பேசினால் அம்மா கவலைப்படுவார் என்று எண்ணியவள், அழைப்பைத் துண்டித்தாள்.
அறை முழுவதும் சுற்றிப் பார்த்தாள். எங்கும் அமைதி நிலவியது. திடீரென்று கதவு “டொக்… டொக்…” என்று தட்டப்பட, சற்று பயத்துடன் கதவை நோக்கிச் சென்றாள்.
திறந்து பார்த்தவளின் கண்களுக்கு யாரும் தெரியவில்லை. சரி, கதவை அடைக்கலாம் என்று நினைத்தவளின் முன் பாய் நின்றது ஒரு சிறிய உருவம். அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். காரணம், மிகவும் சிறியதாகவும் குட்டையாகவும் காட்சியளித்தது அந்த உருவம்.
சற்று பதறினாலும், தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு, “உங்களுக்கு என்ன வேணும்? ஏன் கதவைத் தட்டுனீங்க?” என்று கீழே குனிந்து அந்த மனிதனைப் பார்த்தபடி கேட்டாள்.
“என் பெயர் கிட்டன். தாங்கள் என்னுடன் வரவேண்டும்” என்று கூறி கைகூப்பி ருத்ராவை வணங்கினான்.
அதில் ஒன்றும் புரியாமல் விழித்த ருத்ரா, “நீங்க நினைக்கிற ஆள் நான் இல்லை. தயவு செஞ்சு இங்கிருந்து போங்க” என்றாள்.
“நீங்கள் தானே ருத்ரா? நான் சரியான நபருடன்தான் பேசிக்கொண்டு இருக்கிறேன். தாங்கள் என்னுடன் வரவேண்டும்” என்று மீண்டும் கூறினான்.
தன் கையில் கட்டியிருந்த கயிற்றைக் கவனித்தாள். அதன் நிறம் மாறினால் துர்சக்தி அருகில் இருக்கிறது என்று அருண் கூறியது நினைவுக்கு வந்தது. அதன் நிறத்தைக் கவனித்துப் பார்த்தபோது எந்தவித மாற்றமும் இல்லை.
இருப்பினும், இந்த இருட்டில் அவனை நம்பிப் போக சற்று தயங்கியவள், “எதுவா இருந்தாலும் நாளைக்குக் காலையில போகலாமே” என்று கூறினாள்.
“இன்னைக்கே நீங்கள் செய்ய வேண்டிய காரியம் உள்ளது. இப்பொழுதே வாருங்கள்” என்று மீண்டும் கூறி அழைத்தான் கிட்டன்.
இதற்கு மேலும் எதுவும் பேச விருப்பம் இல்லாதவள் அவன் பின்னால் நடக்க ஆரம்பித்தாள். அதேசமயம், ருத்ரா தனியாக இருப்பாள் என்று அவளைப் பார்க்க வந்த பரமேஷும் இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டான்.
‘யார் கூப்பிட்டாலும் உடனே இவ போயிடுவா… அப்படித்தான் போன தடவை அந்தச் சிறுமி கூப்பிட்டதுன்னு போய் மயங்கி விழுந்தா. இப்ப என்ன ஆகப் போகுதோ?’ என்று மனதில் நினைத்துக்கொண்டவன் மெதுவாக அவர்கள் இருவரையும் பின்தொடர்ந்தான்.
விடுதியை விட்டு வெளியே வந்து தெருக்களில் இருவரும் நடக்க ஆரம்பித்தனர். இப்பொழுதும் ஒரு சில கடைகள் திறந்து இருக்க, மக்கள் கூட்டம் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தது. அதையெல்லாம் கடந்து யாரும் இல்லாத ஒரு பகுதிக்கு கூட்டிச்சென்ற கிட்டன், அங்கிருந்த சிவன் கோவில் ஒன்றைக் கை காட்டினான்.
பாழடைந்து கிடந்த அந்த சிவன் கோவிலைக் கண்டவள் அதிர்ச்சியுடன் நின்றாள்.
“இந்தக் கோவிலுக்கு எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க?” என்று கேட்டபடி திரும்பி கிட்டனைப் பார்த்தாள்.
அங்கு கிட்டனைக் காணவில்லை என்றதும், “கிட்டன்… கிட்டன்!” என்று சற்று குரலை உயர்த்திக் கத்தினாள்.
அந்த நிசப்தத்தைத் தாண்டி அவளது குரல் எதிரொலித்தது. ஆனால் கிட்டன் பதில் கூறவில்லை.
அந்த இருட்டில் சுற்றுமுற்றும் அவனைத் தேடினாள். யாரும் இல்லாத அந்தப் பாழ் இருளில் தனியாக இருப்பதை உணர்ந்த ருத்ராவிற்கு இதயம் படபடக்க ஆரம்பித்தது. தனியாக கோவிலுக்குள் நுழைவது அபாயம் என்று அவளது மூளை எச்சரித்து பயமுறுத்தியது. அதில் தடுமாறிக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தாள்.
அவளுக்குப் பின்னால் வந்து மெல்ல தோளின் மீது கை வைத்தான் பரமேஷ்.
தன் மீது ஒரு கை பட்டதும் பயந்து, “ஆ…!” என்று அலறினாள் ருத்ரா. அந்தச் சத்தம் அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்தது.
“நான் தான் ருத்ரா… பரமேஷ்” என்று அவன் கூற, சிறிது சங்கடத்துடன் தலை குனிந்தாள்.
“நான் வேற யாரோனு நினைச்சிட்டேன்”
“சரிங்க, பரவாயில்லை. விடுங்க. இப்ப இந்தக் கோவிலுக்குள்ள போய் என்ன இருக்குனு பார்க்கலாம்” என்று கூறியவன் முன்னால் நடக்க ஆரம்பித்தான்.
“மத்த யாரையும் கூப்பிட வேண்டாமா?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் வேண்டாம். நம்மளே போதும் இந்தக் கோவிலுக்கு” என்று கூறிக்கொண்டு முன்னேறி கோவிலுக்குள் நடக்க ஆரம்பித்தான்.
இதுவரை இருட்டாகக் காட்சியளித்த கோவிலுக்குள் தன் அலைபேசியில் இருந்த டார்ச் லைட் வெளிச்சத்தை அடித்து, கோவிலின் கட்டிடங்களில் படரவிட்டான்.
அவனே பிரமித்துப் போகும் அளவிற்கு சிற்பங்கள் ஆங்காங்கே நேர்த்தியாகவும் மிகவும் அழகாகவும் செதுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றையும் பார்த்து பிரமித்துக்கொண்டே, கோவில் கருவறையை இருவரும் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
‘அந்தக் குள்ளன் யார்? எப்படி உடனே மாயமானான்? என்னை எப்படி அவனுக்குத் தெரியும்? ஏன் இந்தக் கோவிலைக் காட்டிவிட்டு சென்றான்?’ என்று பல கேள்விகளை யோசித்தவாறே அந்த இருட்டில் நடக்க ஆரம்பித்தாள் ருத்ரா.
அவளுக்கு முன்னதாகச் சென்றான் பரமேஷ். தன் கண்களைக் கூர்மையாக்கி ஒவ்வொரு இடமாகப் பார்த்தான். ஆனால் எந்தவித வித்தியாசமும் தெரியவில்லை.
கருவறையில் சிவலிங்கம் இருக்க, அதில் ஒன்றைக் கவனித்தாள் ருத்ரா. கோவிலே பாழடைந்து கிடக்க, சிவலிங்கம் மட்டும் எந்தவித தூசியும் இல்லாமல் இருந்தது. அதைப் பார்த்ததும் சற்று யோசிக்க ஆரம்பித்தாள்.
உடனே முதலில் சிவனை இருகரம் கூப்பி வணங்கினாள்.
“நீங்கதான் எனக்கு உதவி செய்யணும் பா. இங்குள்ள மர்மத்தை அத்தனையும் கண்டுபிடிச்சு, நாங்க அந்தச் சாவியை கண்டுபிடிக்க உதவியாக இருக்கணும். ஓம் நமச்சிவாய…” என்று கூறி முடித்ததும், சிவலிங்கத்திற்கு அருகில் சென்று அதனைத் திருப்ப முயன்றாள்.
அந்த சிவன் கோவிலைப் போல இங்குச் சங்கிலி எதுவும் இல்லாமல், கையாலேயே முயன்றாள்.
“அதெல்லாம் திரும்பாது ருத்ரா” என்று கூறிய பரமேஷ் சிரித்துக்கொண்டிருக்க, அடுத்த நொடியே,”அம்ர்ர்…” என்ற மெல்லிய உராயும் சத்தத்துடன் சிவலிங்கம் அசைந்தது.
அதனைக் கண்ட பரமேஷின் கண்கள் வியப்பில் விரிந்தன.
பரமேஷும் ருத்ராவுடன் இணைந்து சிவலிங்கத்தைத் திருப்ப, இறுதியாக அதன் அடிப்பாகம் தெரிந்தது.
இருவரும் எதுவும் கீழே சுரங்க வழி இருக்குமோ என்று பார்க்க, அங்கே இருந்தது ஒரு பழைய மண்பானை. அதைக் கண்ட இருவரின் முகத்திலும் வியப்பின் ரேகை படர்ந்தது.
அந்தப் பானையை மெல்ல மேலே தூக்க, பரமேஷ் அலைபேசி வெளிச்சத்தை அதன் மீது படுமாறு அடித்தான். அதில் இருந்த அனைத்தும் மின்ன ஆரம்பித்தன.
பழங்காலத் தங்க நாணயங்கள் மின்னிக்கொண்டிருந்தன.
அதனைப் பார்த்து தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள் ருத்ரா.
‘இந்தத் தங்க நாணயங்களுக்காகவா அந்தக் குள்ளன் என்னை இங்கே வரவழைத்தான்? நம் அண்ணன் ஜவ்வாது மலைக்குப் போகச் சொன்னதும் இதற்காகத்தானா?’ என்று மனதில் யோசித்துக்கொண்டிருந்தாள்.
பரமேஷோ வேறு எதுவும் உள்ளே இருக்கிறதா என்று தேடினான். பானைக்குள் இருந்த சிறிய கத்தி ஒன்றை எடுத்து ருத்ராவின் கைகளில் கொடுத்தான்.
கத்தியின் கைப்பிடி தங்கத்தால் செய்யப்பட்டிருக்க, அதன் மத்தியில் வைரக்கல் ஒன்று பதிக்கப்பட்டு மிகவும் அழகாகக் காட்சியளித்தது.
அதனைத் திருப்பிப் பார்த்து ஆராய்ந்தவள், “இதுக்காகத்தான் அந்தக் குள்ளன் என்ன இங்க கூட்டிட்டு வந்தான்னு நினைக்கிறேன். ஆனா இந்தக் கத்தி எதுக்குப் பயன்படுத்துறதுன்னு தெரியலையே?” என்று கேட்டாள் ருத்ரா.
“கத்தி எதுக்குப் பயன்படும்… கொல்லத்தான். ஆனா யாரையோ கொல்ல நமக்கு இந்தக் கத்தி உதவப் போகுதுனு நினைக்கிறேன்” என்று கூறியவன் யோசித்துப் பார்த்தான்.
சாதாரண குள்ள மனிதன் அவன் இல்லை என்பதை அறிந்திருந்தான் பரமேஷ். அதுவும் மறைவதற்கு முன்பு பரமேஷை ஒரு பார்வை பின்னால் திரும்பிப் பார்த்துவிட்டு அந்தக் குள்ளன் மறைந்திருந்தான்.
இந்த மலைக்கு வருவதற்கு முன்பு இதைப் பற்றி சிறிது கூகுள் செய்து அறிந்து வைத்திருந்தான். அதில் ஒன்று, ஜவ்வாது மலையின் உயரமான பகுதிகளில் பழங்கால குள்ள மனிதர்கள் வாழ்ந்ததற்கான கட்டிடங்கள் இருப்பதாகப் படித்திருந்தான்.
ஆனால் அந்தக் குள்ள மனிதன் ஏன் ருத்ராவிடம் வந்தான்? இந்தக் கத்தி யாரைக் கொல்வதற்கு? விடை தெரியாத கேள்விகளுக்கு பதிலை யோசித்துக்கொண்டிருந்தான்.
அதனைப் பார்த்த ருத்ரா, “ஹலோ… உங்களைத் தான். என்ன கனவு உலகத்துக்கு ஏதும் போயிட்டீங்களா?” என்று கேட்டாள்.
“இல்லை, இல்லை. இந்தக் கத்தி பத்தித்தான் யோசிச்சேன். வேற ஒண்ணும் இல்லை.”
“அப்போ சரி. இந்தத் தங்க நாணயத்தை என்ன பண்றது?”
“அதை அப்படியே மறுபடியும் புதைச்சு வச்சிருவோம்” என்று கூற, ருத்ரா அவனின் கண்களைப் பார்த்தாள்.
‘இந்தக் காலத்தில் தங்க நாணயங்களுக்கு ஆசைப்படாத மனிதன் இருக்க முடியுமா?’ என்று நினைத்தவளுக்கு, பரமேஷின் இந்தக் குணம் பிடித்திருந்தது.
“நீங்க சொல்ற மாதிரியே செஞ்சிடலாம்”
அதனைக் கேட்ட பரமேஷ், “இந்தத் தங்கம் உனக்கு வேண்டாமா?” என்று கேட்டான்.
“எனக்குச் சொந்தமில்லாத எந்தப் பொருளுக்கும் நான் ஆசைப்படுறது கிடையாது. எனக்கு இது வேண்டாம்” என்று உறுதியாகக் கூறினாள்.
பரமேஷின் மனதில் இன்னும் ருத்ராவைப் பற்றிய மதிப்பு கூடியது. ‘இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு பெண் இருக்க முடியுமா?’ என்றே அவளைப் பார்த்தான்.
இதுவரை அவன் வாழ்க்கையில் மேலும் மேலும் செல்வத்தைக் குவிக்கும் மக்களைத்தான் பார்த்திருக்கிறான். அவர்கள் செய்வதையெல்லாம் நினைத்து சிரித்தும் இருக்கிறான். பிறக்கும்போதும் ஒன்றும் கொண்டுவரவில்லை, இறக்கும்போதும் ஒன்றும் கொண்டு போகப் போவது இல்லை என்பதனை ஆணித்தரமாக நம்புகிறவன் பரமேஷ். அதனாலேயே அவனுக்கு செல்வத்தின் மீது மோகம் இல்லாமல் போய்விட்டது.
இருவரும் சேர்ந்து அந்த மண்பானையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு, மீண்டும் சிவலிங்கத்தைத் திருப்பி பழைய நிலைக்குக் கொண்டு வந்தனர்.
அவ்வளவுதான் முடிந்தது என்று இருவரும் அந்தப் புதிரான கத்தியுடன் வெளியேறினர்.
அவர்கள் வெளியேறியதும் அந்தப் பாழடைந்த கோவில் மீண்டும் அமைதியில் மூழ்கியது.
ஆனால்…அந்த இருட்டுக்குள், பாழடைந்த கோவிலுக்குள் இருந்த இரு விழிகள் மட்டும் அவர்கள் சென்ற திசையையே கூர்மையாகப் பார்த்துக்கொண்டிருந்தன.
அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம், நண்பர்களே! 🤗🤗🤗
முடிந்த அளவு சப்போர்ட் பண்ணுங்க… விமர்சனம் மறக்காம கொடுங்க…