ஓரமாக நிறுத்தியிருந்த தன் காரை நோக்கி சென்ற பரமேஷ், அனைவரும் அதில் ஏறியதும் வண்டியைக் கிளப்பினான்.
அவர்கள் செல்வதை மரங்களுக்கு இடையில் இருந்து, குதிரையில் அமர்ந்திருந்த அந்த முதியவர் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
மெதுவாகக் காரைக் காட்டை விட்டு ஊருக்குள் செலுத்தினான் பரமேஷ்.
அவர்களின் காரைப் பார்த்ததும், ஊர் மக்கள் ஒவ்வொருவராகத் திரண்டு வர ஆரம்பித்தனர்.
இதுவரை அந்தக் காட்டிற்குள் சென்ற யாரும் திரும்பி வந்ததில்லை. ஆனால், இவர்கள் உயிருடன் திரும்பி வந்திருப்பது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஊர் மக்களைப் பார்த்ததும், சோர்வுடன் அனைவரும் காரைவிட்டு இறங்கினர்.
ருத்ரா கீழே இறங்கிய அடுத்த நொடியே, இதுவரை இருந்த உடல் சோர்வுடன் பசி மயக்கமும் சேர்ந்து அவளைத் தள்ளாடச் செய்தது. கண்கள் இருண்டு மயங்கி விழப் போனவளை பரமேஷ் சட்டெனத் தாங்கிப் பிடித்தான்.
கூட்டத்தின் நடுவில் இருந்த ருத்ராவின் அம்மா கோகிலா, அதைப் பார்த்ததும் பதறிப்போய் ஓடிவந்தார்.
“ருத்ரா… ருத்ரா!” என்று அழைத்தபடியே, பரமேஷிடமிருந்து தன் மகளைத் தாங்கிக்கொண்டார்.
அவரைப் பார்த்த பரமேஷ், “அம்மா, உங்க பொண்ணுக்கு ஒண்ணும் இல்லை. பசி மயக்கம் தான்,” என்று ஆறுதல் கூறினான்.
அதில் சற்று அமைதியடைந்த கோகிலா, உறவினர்கள் இருவரின் உதவியுடன் ருத்ராவைத் தாங்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
அது மிகவும் குறுகலான சந்து போன்ற தெரு. அதற்குள் கார் செல்ல முடியாது. ஒருவித ஏக்கத்துடன் ருத்ராவையே பார்த்தபடி அங்கேயே நின்றுகொண்டிருந்தான் பரமேஷ்.
அந்த நேரத்தில், நண்பர்கள் நால்வரையும் சுற்றி வளைத்திருந்த ஊர் மக்களை விலக்கிக்கொண்டு பஞ்சாயத்து தலைவர் முன்னே வந்தார்.
இவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தவர், “நீங்க எப்படி தம்பி, அந்தக் காட்டுக்குள்ள போயிட்டு உயிரோட வந்தீங்க?” என்று வியப்புடன் கேட்டார்.
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒருநிமிடம் யோசித்த பரமேஷ், “நீங்க நினைக்கிற மாதிரி அங்க பேய் எல்லாம் ஒண்ணும் இல்லை… மிருகங்கள் தான் எல்லார் சாவுக்கும் காரணம்,” என்று ஓரளவு தடுமாறிச் சமாளித்தான்.
அதை நம்பிய ஊர் மக்கள் ஒவ்வொருவராகக் கலைந்து சென்றனர்.
ஆனால், பஞ்சாயத்து தலைவர் மட்டும் அங்கேயே நின்று, நால்வரின் முகங்களையும் மாறி மாறிப் பார்த்தார். அவர்களுடைய முகங்களில் மறைக்கப்பட்டிருந்த ஏதோ ஒன்றைக் கண்டுபிடிக்க முயன்றார். ஆனால், எதையும் உறுதியாகப் புரிந்துகொள்ள முடியாமல், இறுதியில் அங்கிருந்து நகர்ந்தார்.
அவர் சென்றதும், தங்கள் காரை எடுத்துக்கொண்டு அவர்கள் தங்கியிருந்த அருகிலுள்ள ஊரை நோக்கிப் புறப்பட்டனர். வழிநெடுக அனைவரும் தங்களுக்குள் ஒவ்வொரு எண்ணத்தில் மூழ்கியிருந்தனர்.
அஜித்தின் மனமோ, அந்தக் கதவுக்குப் பின்னால் இருப்பதாக நம்பிய புதையலைச் சுற்றியே சுழன்றுகொண்டிருந்தது.
முகிலுக்கு நடந்தது கனவா, நிஜமா என்பதே இன்னும் புரியவில்லை. அந்த ஐந்து தலை நாகம் அவளுடைய கண்களுக்குள்ளேயே நின்றுகொண்டிருந்தது.
இதுவரை நடந்த அனைத்தையும் ஏதோ ஒரு வகையில் அறிவியலின் மூலம் விளக்கிவிடலாம் என்று நினைத்திருந்தாலும், தன் கண்களால் பார்த்த அந்த நாகத்தை மட்டும் எந்த விளக்கத்துக்குள் கொண்டுவருவது என்று அவளுக்கே புரியவில்லை.
ரோஸினியின் மனமோ வேறு ஒன்றிலேயே சிக்கிக்கொண்டிருந்தது.
பரமேஷ் ருத்ராவைப் பார்த்த அந்தப் பார்வை மீண்டும் மீண்டும் அவளுடைய நினைவுக்குள் வந்துகொண்டிருந்தது. அவன் தன்னிடம் ஒருபோதும் காதலுடன் பார்த்ததில்லை. ஆனால், இப்போது ருத்ராவைப் பார்க்கும் அவனுடைய கண்களில் இருந்த அந்த மாற்றம்… அவளுக்குள் அடக்கி வைத்திருந்த பயத்தைத் தூண்டியது.
‘இவள் என் காதலை என்னிடமிருந்து பறித்துவிடுவாளோ?’ என்ற எண்ணம் முதன்முறையாக அவளுக்குள் வேர்விட ஆரம்பித்தது.
பரமேஷோ, ருத்ராவின் நினைவிலேயே மூழ்கியிருந்தான்.
இதுவரை அவன் பார்த்த பெண்களுக்கும் ருத்ராவிற்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதை அவன் உணர்ந்திருந்தான்.
இதுவரை அவனைச் சுற்றி வந்த பல பெண்களும், அவனைத் தங்கள் காதல் வலையில் வீழ்த்த எவ்வளவோ முயன்றிருக்கிறார்கள்.
ஆனால், அவர்களிடம் இல்லாத ஏதோ ஒன்று ருத்ராவிடம் இருந்தது. அதுதான் பரமேஷை அவளிடம் இழுத்துக்கொண்டிருந்தது.
அனைவரும் தங்களுக்குள் ஒவ்வொரு எண்ணத்தில் மூழ்கியபடி, தாங்கள் தங்கியிருந்த சிறிய லாட்ஜின் முன்பு வந்து இறங்கினர்.
காரை ஓரமாகப் பார்க் செய்துவிட்டு உள்ளே சென்றனர்.
அழகிய ரிசப்ஷனிஸ்ட் ஒருவர் அவர்களைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டாள்.
இரண்டு நாட்களுக்குள் திரும்பி வந்துவிடுவோம் என்று கூறிச் சென்றவர்கள் என்பதால், அவர்களைப் பார்த்ததும் புன்னகையுடன்,
“வாங்க சார், மேடம்,” என்று வரவேற்றாள்.
“அதே இரண்டு ரூம் சாவி கொடுங்க” என்று கேட்டுப் பெற்ற பரமேஷ், அறையை நோக்கி நடந்தான்.
தன் கையில் இருந்த சாவிகளில் ஒன்றை ரோஸினியிடம் கொடுத்தான்.
அஜித்தும் பரமேஷும் ஒரு அறைக்குள் நுழைந்தனர்.முகிலும் ரோஸினியும் எதிரில் இருந்த அறைக்குள் சென்றனர்.சோர்வுடன் சென்று படுக்கையில் விழுந்தான் பரமேஷ்.
அவனருகில் வந்து படுத்த அஜித்,“எப்ப ஜவ்வாது மலை போறோம்?” என்று தன் ஆசைக்கான அடித்தளத்தைப் போட ஆரம்பித்தான்.
“ஒருநாள் ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பிப் போவோம் டா.”
உடனே உற்சாகமடைந்த அஜித்,“சரி டா” என்று தலையாட்டினான்.
மறுபுறம், ருத்ரா கண்விழித்தபோது அவளைச் சுற்றி ஊரே கூடியிருந்தது.
சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்று ஏராளமான சொந்தங்கள் வீட்டில் கூடியிருந்தனர்.
அவர்களில் இருந்த பாட்டி ஒருவர், ருத்ராவைப் பார்த்தபடி கோகிலாவை வசைபாட ஆரம்பித்தார்.
“பொட்டப்பிள்ளை இப்ப வந்து பசங்களை நம்பிக் காட்டுக்குள்ள போகலாமா? என்னடி கோகிலா, இப்படி பிள்ளையை வளர்த்து வச்சிருக்க? அவதான் போறேன்னு சொன்னா, உனக்கு அறிவில்லையா?”
மற்றொருவரும் உடனே சேர்ந்து கொண்டார்.
“என்ன ருத்ரா, நீ அறிவில்லாம அந்தக் காட்டுக்குள்ள போயிருக்க? அந்தக் காடு எவ்வளவு ஆபத்தானது! ஏதோ நம்ம குடும்பக் குலதெய்வம் அந்தக் காளி தாய்தான் உன்னைக் காப்பாத்தியிருக்கா” என்று சித்தி ஒருவர் கூறினார்.
ஆளுக்கொன்றாக ருத்ராவிற்கும் கோகிலாவிற்கும் அறிவுரை வழங்க ஆரம்பித்தனர்.
அதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ருத்ராவிற்கு கோபம் தலைக்கேறியது.
அவள் ஏதாவது பேசுவதற்குள் கோகிலா குறுக்கிட்டார்.
“என் பிள்ளையை எப்படி பார்த்துக்கணும்னு எனக்குத் தெரியும். நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம். இதுவரை என் பிள்ளையைப் பார்த்து பைத்தியம்னு சொன்ன கூட்டம் தான நீங்க எல்லாம்?எந்த முகரகட்டையை வச்சிட்டு இப்ப வந்து நிக்கீங்க? எனக்கு சொந்தம் பந்தம்னு யாரும் வேண்டாம். எனக்கு என் பிள்ளை நல்லாயிருந்தா போதும். நீங்க எல்லாம் வீட்டை விட்டு வெளியே போங்க!” என்று ஆக்ரோஷமாகக் கத்தினார்.
அவருடைய கோபத்தைப் பார்த்து மிரண்ட அனைவரும், இனியும் அங்கே இருந்தால் மரியாதை இருக்காது என்பதை உணர்ந்து, ஒவ்வொருவராக அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
அவர்கள் அனைவரும் சென்றதும், ருத்ராவைப் பார்த்த கோகிலா, தன் சேலை முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவளருகில் அமர்ந்தார்.
பொறுமையாகக் காட்டிற்குள் நடந்ததைப் பற்றி கேட்க ஆரம்பித்தார். ருத்ராவும் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்ல ஆரம்பித்தாள்.
அதைக் கேட்டுக்கொண்டிருந்த கோகிலாவின் கண்கள் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் விரிந்தன.
“அருண்… நாகமாயிட்டானா?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டார்.
“ஆமாம்மா” என்று தலை ஆட்டினாள் ருத்ரா.
அடுத்த நொடியே ஏதோ நினைவுக்கு வந்தவள் போல எழுந்த கோகிலா, வீட்டிற்குள் எதையோ தேட ஆரம்பித்தார்.
வீடு முழுவதும் தன் அம்மா எதையோ தேடுவதைப் பார்த்த ருத்ரா,
“என்னம்மா தேடுற?” என்று கேட்டாள்.
“நீ கொஞ்ச நேரம் அமைதியா இருடி” என்று அதட்டிய கோகிலா, கட்டிலின் மீது ஒரு நாற்காலியைப் போட்டார். அதன் மீது ஏறி, பரணுக்குள் கையைவிட்டு எதையோ தேடினார்.
சிறிது நேரத்தில் பழைய ஓலைச்சுவடி ஒன்றை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார்.
அதை ருத்ராவின் கையில் கொடுத்தார்.
அதைத் திறந்து பார்த்த ருத்ரா, படிக்க முயன்றாள்.
ஆனால், அதில் இருந்த வட்டெழுத்துகளும் பழங்காலத் தமிழ் வடிவமும் அவளுக்குப் புரியாத புதிராக இருந்தன.
சில நொடிகள் அதைப் பார்த்துவிட்டு, ஓலைச்சுவடியை மூடியவள் கோகிலாவைப் பார்த்தாள்.
“இது என்னம்மா?”
“அதைப்பத்தி இப்ப கேட்காத. என்னால சொல்ல முடியாது”
சிறிது நேரம் அமைதியாக இருந்த கோகிலா, பிறகு ருத்ராவை நேராகப் பார்த்தார்.
“ஆனா, இது உனக்கு நிச்சயமா உதவும்னு மட்டும் என்னால சொல்ல முடியும்”
தன் அம்மாவின் வார்த்தைகளைக் கேட்ட ருத்ராவுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவருடைய கண்களில் வழிந்த கண்ணீரைக் கண்டவள், தன் விரல்களால் அதை மெதுவாகத் துடைத்தாள்.
பின்னர் அவரை இறுக அணைத்துக்கொண்டாள்.
இரண்டு நாட்கள் கழித்து, பரமேஷின் கார் ருத்ரா வசிக்கும் தெருவின் முன்பாக வந்து நின்றது.
தனக்குத் தேவையான பொருட்களை ஒரு பையில் எடுத்து வைத்திருந்த ருத்ரா, அதோடு சேர்த்து அந்த ஓலைச்சுவடியையும் பத்திரமாக எடுத்துக்கொண்டாள்.
கோகிலா அவளைக் கண்ணீருடன் வழியனுப்பினார்.
“நீ ஒண்ணும் கவலைப்படாத மா. எனக்கு ஒண்ணும் ஆகாது. நீ பத்திரமா இரு. நேரத்துக்கு சாப்பிடுமா” என்று கூறிவிட்டு, கைகாட்டியபடி காரில் ஏறிக்கொண்டாள்.
‘என் பிள்ளையை நீ தான் தாயி காப்பாத்தணும்…’ என்று மனதிற்குள் வேண்டிக்கொண்ட கோகிலா, கார் நகரும் வரை அதையே பார்த்துக்கொண்டிருந்தார்.
பிறகு தன் சேலை முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.
காருக்குள் ஏறி அமர்ந்த ருத்ரா, பரமேஷ் மட்டும் இருப்பதைப் பார்த்ததும்,
“மத்தவங்க எங்க?” என்று கேட்டாள்.
இதுவரை ருத்ராவைப் பிரிந்து, அவளது நினைவிலேயே தவித்துக்கொண்டிருந்த பரமேஷுக்கு, இப்போது அவளை நேரில் பார்த்ததும் உள்ளுக்குள் சொல்ல முடியாத சந்தோஷம் பொங்கியது.
அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.
அவனைப் பார்த்த ருத்ரா,“உங்களைத் தான் கேட்கிறேன். மத்தவங்களை எங்க?” என்று சற்று குரலை உயர்த்திக் கேட்டாள்.
அதில் கனவில் இருந்து மீண்டவன் போல சிரித்துக்கொண்டு,“அவங்க ரெடியாயிட்டு இருக்காங்க. போகுற வழியில அவங்களை ஏத்திக்கிட்டு போயிடலாம்”என்றான்.
அதைக் கேட்ட ருத்ரா சரியென்று தலையாட்டிவிட்டு அமைதியானாள். சிறிது நேரத்தில் லாட்ஜின் முன்பு கார் வந்து நின்றது.
காரைப் பார்த்ததும் ரோஸினி, அஜித், முகில் ஆகிய மூவரும் தங்கள் பைகளுடன் வெளியே வந்து ஏறிக்கொண்டனர்.
இதுவரை இருந்த அமைதியான சூழல் மாறியது.அஜித் தன் அலைபேசியை எடுத்து நேரலையைத் தொடங்கினான்.
“வணக்கம் நண்பர்களே… நாங்க இப்ப எங்க போகப்போறோம்னா, ஜவ்வாது மலைக்கு. அங்குள்ள மலைத்தொடர்கள், அங்குள்ள கிராமங்களைப் பார்க்கப் போறோம். அது மட்டுமில்லாம, அங்குள்ள மர்மத்தையும் கண்டுபிடிக்கப் போறோம்” என்று உற்சாகமாகப் பேசி முடித்தான்.
அதன்பின் அலைபேசியை வாங்கிய ரோஸினி, “ஹாய் செல்லக்குட்டீஸ்… எல்லாரும் எப்படி இருக்கீங்க? என்னை ரொம்ப நாள் மிஸ் பண்ணியிருப்பீங்கன்னு தெரியும். நானும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன். லவ் யூ ஆல்” என்று கூறிவிட்டு நேரலையை நிறுத்தினாள்.
அனைவரின் முகத்திலும் ஜவ்வாது மலைக்குச் செல்கிறோம் என்ற மகிழ்ச்சி இருந்தது. ஆனால், அதே நேரத்தில், உள்ளுக்குள் சிறிதளவு பயமும் ஒளிந்திருந்தது.
அதை வெளிக்காட்டாமல், இயற்கையை ரசித்தபடி பயணத்தைத் தொடர்ந்தனர்.
சிறிது நேரம் கழித்து ருத்ரா ரோஸினியிடம், “இங்க இருந்து ஜவ்வாது மலைக்குப் போக எவ்வளவு நேரம் ஆகும்?” என்று கேட்டாள்.
“எப்படியும் ஏழுல இருந்து எட்டு மணி நேரம் ஆகும்னு நினைக்கிறேன்” என்று பதிலளித்தாள் ரோஸினி.
‘அவ்வளவு நேரம் ஆகுமா?’ என்று மனதிற்குள் நினைத்த ருத்ரா, ஜவ்வாது மலை பற்றி இதுவரை எதுவும் தெரிந்திருக்காததால், அதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில், “அந்த மலை எங்க இருக்கு?” என்று சிறுபிள்ளை போலக் கேட்டாள்.
“உனக்கு ஜவ்வாது மலை எங்கிருக்குனு தெரியாதா?” என்று சற்றே நக்கலுடன் கேட்டாள் ரோஸினி.
“தெரியாது” என்று அப்பாவியாகத் தலை ஆட்டினாள் ருத்ரா.
அவளது முகத்தைப் பார்த்த ரோஸினி ஒரு கணம் அமைதியாக இருந்தாள்.
பின்னர் வேண்டுமென்றே அவளைப் பயமுறுத்தும் தொனியில், “நம்ம இப்ப போற ஜவ்வாது மலை திருவண்ணாமலைல இருக்கு. அதுலையும் இந்த ஜவ்வாது மலை பத்தி நிறைய மர்மங்களும் இருக்கு. அங்குள்ள கிணத்துல நிறைய கெட்ட ஆத்மாக்கள் இருக்கிறதா அங்குள்ளவங்க சொல்றாங்க” என்றாள்.
அதைக் கவனித்த பரமேஷ் உடனே, “ரோஸினி, நீ அவ பயப்படுற மாதிரி எதுவும் சொல்லாத” என்று சற்று கடுமையாகக் கூறினான்.
அதில் ருத்ராவை ஒரு கணம் முறைத்துப் பார்த்த ரோஸினி, பதில் எதுவும் சொல்லாமல் ஜன்னலுக்கு வெளியே பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.
சிறிது தூரம் சென்றதும், சாலையோரமாக இருந்த ஒரு சிறிய கடைக்கு அருகில் காரை நிறுத்தினான் பரமேஷ்.
இதுவரை பயணத்தில் தூங்கிக்கொண்டிருந்த அஜித், திடீரென கார் நின்றதும் விழித்தான்.
“என்னடா வண்டியை நிறுத்திட்ட?” என்று தூக்கத்திலிருந்து எழுந்த அஜித், கொட்டாவி விட்டபடி கேட்டான்.
“இனிமே போகப் போக நிறைய மரங்கள் வர ஆரம்பிச்சிடும். ரொம்ப தூரம் தள்ளிப் போனா தான் சாப்பிட முடியும். அதான் இங்கேயே நிறுத்திட்டேன் டா” என்றான் பரமேஷ்.
அஜித் தன் அருகில் இருந்த முகிலை எழுப்பினான். முகிலும் ரோஸினியையும் ருத்ராவையும் தூக்கத்திலிருந்து எழுப்பினாள்.
கொட்டாவி விட்டபடி எழுந்த ருத்ரா, “அதுக்குள்ள ஜவ்வாது மலைக்கு வந்துட்டோமா?” என்று முகிலிடம் கேட்டவள், ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள்.
“ஜவ்வாது மலைக்கு இல்ல… இன்னும் கொஞ்ச தூரம் போகணும். வா, இப்ப சாப்பிடலாம்” என்றாள் முகில்.
காரிலிருந்து கீழே இறங்கிய அனைவரும், அந்தச் சிறிய உணவகத்திற்குள் நுழைந்தனர்.
சொல்லிக்கொள்ளும் அளவுக்குக் கூட்டம் இல்லை. ஆங்காங்கே ஒரு சிலர் மட்டும் அமர்ந்து உணவு உண்டுகொண்டிருந்தனர்.
ஐந்து பேர் அமர்வதற்கு ஏற்ற வெற்று மேசை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்தனர்.
உணவகத்தில் வேலை செய்யும் இளைஞன் ஒருவன் வந்து, உணவுப் பட்டியல் அடங்கிய அட்டையை மேசையில் வைத்துவிட்டுச் சென்றான்.
அதைப் பார்த்த அனைவரும் தங்களுக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுத்தனர்.
ருத்ரா மட்டும் என்ன சாப்பிடுவது என்று தெரியாமல் நீண்ட நேரமாக யோசித்துக்கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்த பரமேஷின் முகத்தில் மெதுவான புன்னகை மலர்ந்தது.
அதே நேரத்தில் அந்த இளைஞன் மீண்டும் வந்து,
“சார், ஆர்டர்?” என்று கேட்டான்.
அவரவர் தங்களுடைய ஆர்டரைச் சொல்லி முடித்துவிட்ட நிலையில், ருத்ரா மட்டும் இன்னும் யோசித்துக்கொண்டிருந்தாள்.
அதைக் கவனித்த பரமேஷ்,“உனக்கு சப்பாத்தி ஓகேவா?” என்று கேட்டான்.
வேறு வழியில்லாமல் ருத்ரா சரியென்று தலையசைத்தாள்.
“சப்பாத்தி வித் பன்னீர் பட்டர் மசாலா” என்று அந்த இளைஞனிடம் ஆர்டர் கூறிவிட்டு, ருத்ராவைப் பார்த்தான்.
அவளது விழிகள் அவனைச் சந்தித்த அந்த நொடியே, பரமேஷின் பார்வை அங்கேயே நிலைத்துவிட்டது.
அவளது விழிகளைத் தாண்டி வேறு எங்கும் பார்க்க முடியாதபடி, அவளுக்குள் மூழ்கியிருந்தான்.
அதை எதிரே அமர்ந்திருந்த ரோஸினி கவனிக்காமல் இல்லை.பல வருடங்களாகப் பரமேஷின் தோழியாக இருந்தவள் அவள். அவனிடம் தன் காதலை வெளிப்படையாகச் சொல்லியிருந்தாள்.அவன் அவளது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால், அவளுடைய நட்பை மட்டும் இழக்க விரும்பாமல், வழக்கம்போல அவளைத் தன் நெருங்கிய தோழியாகவே வைத்திருந்தான்.
அந்த உண்மையை ஏற்றுக்கொண்டு அவனுக்கு அருகிலேயே இருந்தாலும், இப்போது அவன் வேறொரு பெண்ணை இவ்வளவு ஆழமாகப் பார்த்துக்கொண்டிருப்பது அவளுக்குள் ருத்ராவின் மீது கோபத்தை ஏற்படுத்தியது .
முகத்தில் எதுவும் தெரியாதபடி போலிப் புன்னகையுடன் ருத்ராவைப் பார்த்தாள்.
பின்னர் அவளுக்கு முன்னால் இருந்த தண்ணீர் குவளையை எடுத்துக் குடித்துவிட்டு, மீண்டும் மேசையில் வைத்தாள்.
சிறிது நேரத்தில் அனைவருக்கும் உணவு வந்தது.பரமேஷின் பார்வை இன்னும் ருத்ராவை விட்டு விலகவில்லை.
ரோஸினியின் விரல்கள் அவளுக்கு முன்னால் இருந்த ஸ்பூனைச் சுற்றிக்கொண்டன. முதலில் மெதுவாகப் பிடித்தவள், அடுத்த நொடியே அதை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.
அவளுக்குள் கொதித்துக்கொண்டிருந்த கோபம் அந்த விரல்களின் அழுத்தத்தில் வெளிப்பட்டது. ஸ்பூனை இறுக்கமாகப் பிடித்தபடியே சில நொடிகள் அமர்ந்திருந்தாள்.
பின்னர் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டவள், எதுவும் நடக்காதது போல அதைத் தட்டில் வைத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
ருத்ராவோ, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே கவனிக்காமல், தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த உணவை ரசித்து உண்டுகொண்டிருந்தாள்.
ஒருவழியாக அனைவரும் உணவை முடித்துவிட்டு, உணவகத்தை விட்டு வெளியே வந்து காரில் ஏறிக்கொண்டனர்.
இந்த முறை அஜித் காரை ஓட்ட, பரமேஷ் பின்னால் வந்து ருத்ராவிற்கு அருகில் அமர்ந்துகொண்டான்.
கார் மலை அடிவாரத்தை நோக்கி சீரான வேகத்தில் நெருங்கிக்கொண்டிருந்தது.
சாலையின் இருபுறமும் மரங்கள் அடர்ந்து கொண்டே வந்தன. அந்த நேரத்தில், திடீரென்று அஜித் காருக்கு பிரேக் பிடித்து நிறுத்தினான்.
“என்னாச்சு டா?” என்று பரமேஷ் கேட்க, அஜித் எதுவும் பதில் சொல்லவில்லை.
அவனுடைய பார்வை காருக்கு நேராக முன்னால் இருந்த ஏதோ ஒன்றின் மீது நிலைத்திருந்தது.
அவனுடைய கண்கள் மட்டும் அசையாமல் ஸ்தம்பித்திருந்தன.
அவன் பார்த்தது என்னவென்று புரியாமல், மற்ற நால்வரும் மெதுவாக முன்னால் திரும்பிப் பார்த்தனர்.