4

கூடாரத்திலிருந்து வெளிவந்த ருத்ரா, யாரிடமும் சொல்லாமல் கையில் ஒரு டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு, குழந்தையின் அழுகை கேட்ட திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

அவள் அதன் அருகில் செல்லச் செல்ல அழுகை சத்தம் அதிகரித்துக்கொண்டே சென்றது. ஆனால், திடீரென்று அந்தச் சத்தம் நின்று அமைதி நிலவியது.

இதுவரை அழுகை சத்தம் கேட்ட இடம் எதுவென்றே தெரியாமல் போக, அவள் கண்முன்னே சிறுமி ஒருத்தி தோன்றினாள்.

அவளைப் பார்த்த ருத்ரா, “இந்த நேரத்துல காட்டுக்குள்ள நீ என்ன பண்ற பாப்பா?” என்று கேட்டாள்.

அதற்கு தேம்பி அழுதுகொண்டே கண்களை கசக்கியபடி, “அம்மாவைக் காணும்…” என்று தன் மழலைக் குரலில் கூறியது அந்தக் குழந்தை.

உடனே சிறுமியின் மீது பரிதாபப்பட்ட ருத்ரா, “சரி… உங்க அம்மாவை கடைசியா நீ எங்க வச்சிப் பார்த்த பாப்பா?” என்று பொறுமையாகக் கேட்டாள்.

“அதுவா… அந்த மரத்துக்கு அடியிலதான் கடைசியா பார்த்தேன்” என்று ஒரு மரத்தைச் சுட்டிக் காட்டினாள்.

“நீ என் கூட வா பாப்பா… காலையில அம்மாவைத் தேடலாம்” என்று கூறிக்கொண்டிருந்த ருத்ராவின் மனதில் ஏதோ சரியில்லை என்ற எண்ணம் தோன்றியது.

உடனே அந்த மரத்தை நோக்கிச் சென்றவள், டார்ச் லைட் வெளிச்சத்தில் அங்கு எதுவும் தெரிகிறதா என்று பார்த்தாள்.

அடுத்த நொடியே அவளது கண்கள் பயத்தில் விரிந்தன.

எந்தச் சிறுமியுடன் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தாளோ, அதே சிறுமியின் சடலம் மரத்தடியில் கிடந்தது.

அவளது இதயம் திக்… திக்… என்று வேகமாக அடித்துக்கொள்ள, மெதுவாகத் தலையைத் திருப்பி பின்னால் நின்றிருந்த சிறுமியைப் பார்த்தாள். ஆனால், அங்கு சிறுமி இல்லை.

அவள் இருந்த இடத்தில் திடீரென உருவான சூறாவளிக் காற்று ருத்ராவை வேகமாகத் தாக்க, அங்கேயே மயங்கி சரிந்தாள்.

பாதித் தூக்கத்தில் எழுந்திருந்த பரமேஸ்வரன், ருத்ராவைக் காணவில்லை என்றதும் அனைவரையும் எழுப்பினான்.

“என்னடா இப்படி நடுராத்திரியில எழுப்புற?” என்று கொட்டாவி விட்டபடி எழுந்தாள் ரோஸினி.

“டேய்… உனக்கு வேற வேலையே இல்லையாடா?” என்றான் அஜித்.

முகில் மட்டும், ‘என்ன நடந்தால் என்ன? நான் எழுந்திருக்க மாட்டேன்’ என்பது போல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.

“டேய்… ருத்ராவைக் காணலைடா!” என்று அதிர்ச்சியுடன் பரமேஷ் கூறியதும், அனைவரின் முகத்திலும் இனம் புரியாத பயம் தோன்றியது.

“சரி, வா… அவளைத் தேடிப் பார்ப்போம். இங்கதான் எங்கேயாவது போயிருப்பா”

என்ற ரோஸினி, ஒரு டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு தேடத் தயாரானாள்.

முகில் எழுந்திருப்பது போல் தெரியவில்லை என்பதால், அவளை விட்டுவிட்டு அஜித் மற்றும் ரோஸினியை அழைத்துக்கொண்டு ருத்ராவைத் தேடத் தொடங்கினான் பரமேஷ்.

கடைசியாக, ஒரு மரத்தின் அருகில் ருத்ரா மயங்கிக் கிடப்பதைப் பார்த்தவன்,” ருத்ரா ருத்ரா!” என்று அவளின் உடலை உலுக்கினான்.

அவளை எழுப்பிப் பார்த்தும் பயனில்லாமல் போக, தன் கைகளில் அவளை ஏந்தியபடி கூடாரத்திற்குள் கொண்டு வந்து சேர்த்தான்.

“ரோஸினி… கொஞ்சம் தண்ணி கொண்டு வா” என்றதும், அவளும் தண்ணீர் பாட்டிலை அவன் கையில் கொடுத்தாள்.

அதை வாங்கிய பரமேஷ், ருத்ராவின் முகத்தில் தண்ணீரைத் தெளித்தான். அவள் கண்கள் மெல்ல அசைந்து திறந்தன.தன் முன்னால் நின்றிருந்த பரமேஷையும், கூடாரத்தில் இருந்த அனைவரையும் பார்த்தவள், “நான் எப்படி இங்க வந்தேன்?” என்று பரமேஷிடம் கேட்டாள்.

“காட்டுக்குள்ள மயங்கி கிடந்தீங்க. நாங்கதான் அங்க இருந்து உங்களை கூட்டிட்டு வந்தோம்”

இதுவரை நடந்தது ஒருவேளை கனவாக இருக்குமோ என்று நினைத்துக்கொண்டிருந்த ருத்ராவுக்கு, தான் கண்ட அனைத்தும் உண்மை என்பது புரிந்தது.

அவளது உடல் பயத்தில் நடுங்க ஆரம்பித்தது. அவளது பயத்தைப் புரிந்துகொண்ட பரமேஷ், “அதான் நாங்க எல்லாரும் இருக்கோம்லா… பயப்படாதீங்க” என்று தைரியப்படுத்தினான்.

“நா பயப்படலையே…” என்று உள்ளுக்குள் பயத்தை வைத்துக்கொண்டு, வெளியில் தைரியமாக இருப்பது போல் காட்டிக்கொண்டாள்.

அதனைப் புரிந்துகொண்ட பரமேஷ்,

“நீங்க எப்படி அங்க போனீங்க? என்ன நடந்துச்சு?” என்று கேட்டான்.

“அது… ஒரு குழந்தை சத்தம் கேட்டது. அது யாருனு போய்ப் பார்த்தேன். ஒரு சிறுமி அழுதுட்டு இருந்தா. ஏன் அழுறேன்னு கேட்டேன். அம்மாவைக் காணும்னு சொன்னா. அம்மாவை கடைசியா எங்க பார்த்தேன்னு கேட்டேன். ஒரு மரத்தைக் காட்டுனா. ஏதோ சரியில்லன்னு தோணுச்சு. மரத்துப் பக்கம் போய்ப் பார்த்தா… அந்தச் சிறுமியோட சடலம் தான் இருந்தது ” என்று மூச்சு வாங்கியபடி கூறி முடித்தாள்.

“அப்போ… அந்தச் சிறுமி பேயா?” என்று பரமேஷ் கேட்க, அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

காலையில் காட்டிற்குள் நுழைந்ததில் இருந்து இப்போது வரை எந்த உயிரினத்தையும் காணவில்லை.அஜித் சிகரெட் பற்றவைக்க முயன்றபோது காற்று அடித்து அணைந்தது. குதிரையின் மேல் வந்த விசித்திரமான முதியவர்… எல்லாவற்றிற்கும் மேலாக, காட்டிற்குள் ஒரே இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது…என்று அடுத்தடுத்து நடந்த அனைத்தையும் நினைத்துப் பார்த்தபோது, எல்லோருக்கும் ஏதோ சரியில்லை என்ற உணர்வு ஏற்பட்டது.

அதனால், நாளை காலை விடிந்ததும் எப்படியாவது காட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று அனைவரும் முடிவு செய்துகொண்டனர்.

இவர்கள் மட்டும் நினைத்தால் போதுமா?அந்த விதியும் நினைக்க வேண்டும் அல்லவா?அவ்வளவு எளிதில் இந்தக் காட்டிலிருந்து வெளியேறிவிட அவர்களை அந்த விதி அனுமதிக்குமா? “நீங்கள் வந்த கடமை இன்னும் முடியவில்லை…” என்று அவர்களைப் பார்த்து விதியே சிரித்தது.

அனைவரும் அந்த இரவில் மீண்டும் உறங்கச் சென்றனர். ஆனால், அவர்களுக்குப் பாதுகாப்பாக பரமேஸ்வரன் மட்டும் தூங்காமல் விழித்திருந்தான்.

சூரிய ஒளி கண்களில் பட, அனைவரும் எழுந்தனர். அன்றிலிருந்து தங்களுக்காகத் தொடங்கப்போகும் மிகப்பெரிய போராட்டத்தை அறியாமல், தங்கள் பொருட்களை எடுத்துவைத்துக்கொண்டு காட்டை விட்டு கிளம்பத் தயாராகிக்கொண்டிருந்தனர்.

“அஜித்… எல்லாம் எடுத்து வச்சிட்டியா?” என்று கேட்டாள் முகில்.

“எல்லாம் முடிஞ்சது டி” என்று அவனும் கூறினான்.

“சரி… அப்போ எல்லாரும் கிளம்புவோம்” என்றான் பரமேஷ்.

காட்டிற்கு வெளியே செல்லும் பாதையைப் பார்த்தபடி அனைவரும் நடக்கத் தொடங்கினர்.

ஆனால், அவர்கள் நடக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே…மீண்டும்  அதே பாறையின் அருகிலேயே வந்து நின்றனர். அனைவரின் முகத்திலும் இப்போது தான் உண்மையான பீதி ஏற்பட்டது.

என்ன நடக்கிறது என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி பயத்தில் நின்றனர்.

“இது என்னடா? எங்க சுத்துனாலும் இங்கதான் வந்து நிற்கிறோம். எனக்கு பயமா இருக்கு டா…” என்று ரோஸினி கூறியதும், அனைவரின் முகத்திலும் பயத்தில் வியர்வை வழியத் தொடங்கியது.

இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் திகைத்து நிற்க…

திடீரென மரக்கிளைகளை உடைத்துக்கொண்டு வெளிப்பட்ட அந்த உருவத்தைக் கண்டு, அனைவரின் இதயமும் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. உடல் வேறு பயத்தில் நடுங்கியது. அவர்களுக்கு முன்னால் வந்து நின்றது…

ஐந்து தலை கொண்ட நாகம்!

அவர்களைப் பார்த்தபடி, அது சீறிக்கொண்டிருந்தது.

அதனைப் பார்த்து அனைவரும் பின்னால் நகர, ருத்ரா மட்டும் ஏதோ ஒரு சக்திக்குக் கட்டுப்பட்டவள் போல் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தாள்.

அதனைப் பார்த்த பரமேஷ், அவளது கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடினான்.

மற்றவர்களும் நாகத்தைப் பார்த்து பயந்து ஓட ஆரம்பித்தனர். நாகமும் அவர்களைச் சீறியபடி துரத்த ஆரம்பித்தது.

அனைவரும் காட்டிற்குள் சுற்றி முற்றி ஓடியபடி, மீண்டும் அதே பாறையின் அருகில் வந்து நின்றனர். அந்தப் பாறையைத் தாண்டி வேறு எங்கும் அவர்களால் செல்ல முடியவில்லை.

ஓடிய களைப்பில் பரமேஷும் ருத்ராவும் கைகோர்த்தபடி பாறையின் மீது கைகளை வைத்து மூச்சு வாங்கினர்.

அப்பொழுது திடீரென்று அந்தப் பாறை அசைந்து நகர, அதன் அடியில் இருந்த குழி போன்ற அமைப்பிற்குள் அனைவரும் விழுந்தனர்.

சுற்றிலும் ஒரே இருளாக இருக்க, பாக்கெட்டில் இருந்த அலைபேசியை அந்த இருட்டில் தேடி எடுத்த அஜித், அதில் டார்ச் லைட்டை ஆன் செய்து சுற்றிலும் அடிக்க ஆரம்பித்தான்.

அது ஏதோ ஒரு மண் குழியாகத்தான் இருக்கும் என்று அவர்கள் நினைத்திருந்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக இருந்தது அந்த இடம்.

ஏதோ ஒரு பாதாள அறை போல் காட்சியளித்தது.

சுற்றிலும் கற்களால் ஆன சுவர்கள். அங்கங்கே பந்தங்கள் வைப்பதற்காக அமைக்கப்பட்ட கைப்பிடிகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீண்டு சென்றிருந்தன.

ருத்ராவிற்கு மட்டும் அந்த இடம் ஏற்கனவே பரிச்சயமானது போலத் தோன்றியது.

மீதமிருந்தவர்கள், “என்ன இடம் இது? பாறைக்கு அடியில எப்படி இப்படி ஒரு இடம் இருக்க முடியும்?” என்று பலவாறாக எண்ணிக்கொண்டனர்.

அதேசமயம், ஐந்து தலை நாகத்திடமிருந்து தப்பித்துவிட்டோம் என்ற நிம்மதி அனைவரிடமும் பரவ, நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இதுவரை பலவிதமான யோசனையில் இருந்த ருத்ரா, இப்பொழுதுதான் தான் எதன் மீதோ படுத்திருப்பது போன்ற உணர்வை அடைந்தாள்.

கீழே குனிந்து பார்த்தவளுக்கு, அது பரமேஷ் என்பது தெரியவர, சட்டென அவன் மீது இருந்து எழுந்து நின்றாள்.

ருத்ராவிற்கு இது வித்தியாசமாகத் தெரியவில்லை என்றாலும், பரமேஷிற்கு அவளது செயல் வித்தியாசமாகத் தெரிந்தது.

இதுவரை அவனைச் சுற்றி வராத பெண்களே இல்லை. ஏன், ரோஸினி கூட அவனை நெருங்க முயற்சித்திருக்கிறாள். இப்படிப்பட்ட பெண்களையே பார்த்துப் பழகியவனுக்கு, இப்படி ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்தும் சட்டென விலகிய ருத்ராவின் செயல் ஆச்சரியமாகவே இருந்தது.

‘இப்படியும் பெண்கள் இருப்பார்களா?’ என்று அவனுக்குள் தோன்றியது.

அனைவரும் எழுந்து தங்களது அலைபேசிகளை எடுக்க, முகிலின் அலைபேசி கீழே விழுந்ததில் உடைந்து, ஆங்காங்கே தொடுதிரையில் கீறல்கள் விழுந்திருந்தன.

“ச்ச… இப்பதான் இது நடக்கணுமா?” என்று எரிச்சலுடன் கூறியவள், அலைபேசியை முறைத்துப் பார்த்தாள்.

மீதமிருந்தவர்கள் தங்களது டார்ச் லைட்டுகளை ஆன் செய்து, அனைத்து பகுதிகளிலும் வெளிச்சத்தைப் பாய்ச்ச ஆரம்பித்தனர்.

இதுவரை இருந்த இருள் மறைந்து, வெளிச்சத்தில் அனைத்தும் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது.

நீண்ட குகை போன்ற அந்த அமைப்பில், சிறிய சிற்பங்கள் செதுக்கப்பட்டு வரிசையாக நீண்டுகொண்டே சென்றன.

அவற்றுக்கு இடையில் பந்தங்கள் வைப்பதற்காக அமைக்கப்பட்ட கைப்பிடிகளும் ஆங்காங்கே நீட்டிக்கொண்டிருந்தன.

சிவனின் வெவ்வேறு வடிவங்களான நடராஜர், திரிபுராந்தகர், வீரபத்திரர் என்று பல்வேறு சிற்பங்கள் காட்சியளித்துக்கொண்டிருந்தன.

அவற்றை அனைவரும் வியப்புடன் பார்த்தனர். அதனைப் பார்த்த ருத்ராவின் கண்களில் பக்தி தோன்ற, கைகூப்பி வணங்கினாள்.

அவளது செயலைப் பார்த்து சிரித்த முகில்,“ருத்ரா… அது ஜஸ்ட் ஒரு சிலை, அவ்வளவுதான். அதை போய் கையெடுத்துக் கும்பிட்டுட்டு இருக்க” என்று கூறினாள்.

கடவுள் மீது பற்றில்லாத முகில், கடவுள் என்பது வெறும் சிலை என்றும், புராணங்கள் அனைத்தும் கட்டுக்கதை என்றும் நம்புபவள்.

‘சிலை’ என்று அவள் கூறியதும் கோபமடைந்த ருத்ரா, “பார்க்கிற விதத்துலதான் எல்லாமே இருக்கு. உங்க கண்ணுக்கு சிலையா தெரியுறவரு, என் கண்ணுக்கு கடவுளா தெரியுறார். உங்க கண்ணுக்கு உண்மை தெரியாம இருக்கிறதால, அவர் கடவுள் இல்லைன்னு ஆயிடாது” என்று ஆக்ரோஷமாகக் கூறினாள்.

இதுவரை அமைதியாக இருந்தவள் இப்படி பேசுவாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

ருத்ராவின் பேச்சைக் கேட்ட முகில் மீண்டும் சிரித்துக்கொண்டு, “கடவுள் காப்பாத்துவாருனு அந்த ஐந்து தலை நாகத்துக்கு முன்னாடியே நின்றிருக்க வேண்டியதுதானே. இவ்வளவு பேசுறவ… எதுக்கு ஓடி வரணும்? உன் சிவன்தான் காப்பாத்தி இருப்பாரே!” என்றவளின்  பேச்சில் ஏளனம் நிறைந்திருந்தது.

“இப்பவும் நம்மளை அந்த சிவன்தான் காப்பாத்தி இருக்காரு. அதனாலதான் அவர் இருக்கிற குகையில நம்மளை வந்து சேர்த்திருக்காரு” என்று உறுதியாகப் பதிலளித்தாள் ருத்ரா.

இவர்களின் பேச்சு எல்லை மீறுவதை உணர்ந்த பரமேஷ், “முதல்ல இரண்டு பேரும் வாக்குவாதத்தை நிறுத்துங்க. இப்ப இங்க இருந்து எப்படி வெளியே போறதுன்னு பார்ப்போம் ” என்று கூற, இருவரும் அமைதியாகினர்.

அந்த நீண்ட பாதையில் மெதுவாக அனைவரும் நடக்க ஆரம்பித்தனர். ஆங்காங்கே புரியாத ஓவியங்களும் வரையப்பட்டிருந்தன. அதில் ஒரு ஓவியம் மட்டும் பரமேஷின் கண்களை கவர்ந்து இழுத்தது.

நடப்பதை நிறுத்தியவன், அந்த ஓவியத்தின் அருகில் சென்றான்.

அதில் கருட முக அமைப்புடன், மனிதனின் கைகால்களையும், இருபுறமும் சிறகுகளையும் கொண்ட ஓர் உருவம் கருடனைப் போன்ற தோற்றத்தில் இருந்தது. அந்த உருவம் இரண்டு பெண்களுக்கு நடுவில் இருப்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது.

அதைப் பார்த்த பரமேஷின் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது.

‘கருட வாகனம் விஷ்ணுவினுடையது. ஆனால், சிவனுக்குத் தொடர்புடைய சிற்பங்கள் இருக்கும் இந்த இடத்தில் ஏன் இந்தக் கருடர் ஓவியம்?’ என்ற எண்ணம் அவனுக்குள் உதித்தது.

பரமேஷ் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த மற்ற நால்வரில் ரோஸினி,

“ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்க, பரமேஷ்?” என்று கேட்டாள்.

அவளது குரல் கேட்டதும் தன் யோசனையிலிருந்து விடுபட்டவன், அந்த ஓவியத்தைத் தாண்டி நடக்க ஆரம்பித்தான்.

ஆனால், அந்த ஓவியம் அவனது மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.

அது தன்னிடம் ஏதோ சொல்ல வருவது போல் அவனுக்குத் தோன்றியது. ஆனால், அது என்னவென்று புரிந்துகொள்ள முடியாமல், முன்னால் சென்றுகொண்டிருந்த முகிலைப் பின்தொடர்ந்தான்.

சிறிது நேரத்தில் அந்தக் குகைப் பாதை முடிவடைந்தது. இதுவரை இருளாக இருந்த இடம் திடீரென வெளிச்சமாகக் காட்சியளித்தது. சிறிது தூரத்தில் சிவலிங்கம் ஒன்று மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது.

ஆனால், குகையிலிருந்து வெளியேறும் வழி எதுவும் தெரியாததால், அனைவரின் முகத்திலும் முன்பைவிட அதிகக் குழப்பம் ஏற்பட்டது.

முகில் மட்டும் பின்னால் திரும்பி ருத்ராவைப் பார்த்து, “என்னமோ உன்னோட சிவன்தான் காப்பாத்துனாருனு சொன்ன… இந்தக் குகைக்குள்ளேயே கடைசிவரை மாட்டிக்கிட்டு சாக வேண்டியதுதான்” என்று கடுப்புடன் கூறினாள்.

அதனைக் கேட்ட ருத்ரா, “கடவுள் கண்டிப்பா கைவிட மாட்டாரு. இந்தக் குகையில இருந்து வெளியே போக கண்டிப்பா ஒரு வழி இருக்கும். எல்லாம் வல்ல சிவபெருமான் அந்த வழியைக் காட்டுவாரு” என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறினாள்.

“நீ சொல்ற மாதிரி ஏதாவது அதிசயம் நடக்குதான்னு பார்ப்போம். கல்லைப் போய் சாமின்னு கும்பிடுற பைத்தியக்காரக் கூட்டம்தான நீங்க எல்லாம்” என்று ஏளனமாகக் கூறினாள் முகில்.

இதுவரை அமைதியாக இருந்த பரமேஷ்,

“முகில்… உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லைங்கிறதுக்காக, மத்தவங்க நம்பிக்கையைப் பத்தித் தப்பா பேசாத” என்று எச்சரித்தான்.

பரமேஷின் கோபத்தைப் பார்த்தவள் சிறிது அமைதியானாள்.

பின்னர், சிவலிங்கம் இருந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். சரியாக ஒரு அடி எடுத்து வைத்தவளுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.

அடுத்த நொடியே…அங்கே நடந்தது அந்தச் சம்பவம்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம் 😊

நண்பர்களே, உங்கள் விமர்சனங்களுக்காகக் காத்திருக்கிறேன்…