அத்தியாயம் : 3-2

ஒரு கட்டத்திற்கு மேல் காரில் செல்ல முடியாமல் போகவே, காரை ஓரமாக நிறுத்திவிட்டு, தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டனர்.

தன் போனில் வீடியோவை ஆன் செய்து, எல்லாவற்றையும் படமாக எடுத்துக்கொண்டபடி அஜித் பின்னால் வர, மற்ற நால்வரும் நடக்க ஆரம்பித்தனர்.

உள்ளே செல்லச் செல்ல, இதுவரை பளிச்சென்று கண்களைக் கூசச் செய்த சூரிய ஒளி மறைந்து போனது. அடர்ந்த காடு இருட்டாகக் காட்சியளிக்க ஆரம்பித்தது.

திடீரென்று ஏற்பட்ட இந்த மாற்றத்தில் சற்று பயந்தபடியே ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின்னர் மெதுவாக காட்டுக்குள் நடக்கத் தொடங்கினர்.

ஏதாவது ஆச்சரியமான விஷயங்கள் தென்படும் என்று நினைத்தவர்களுக்கு, காட்டிற்குள் செல்லச் செல்ல எதுவுமே தென்படவில்லை. சற்று சோர்வடைந்த அவர்கள், ஒரு பாறையின் மேல் ஐவரும் அமர்ந்தனர்.

ருத்ராவிற்கோ, தன் அண்ணனை எங்கு போய்த் தேடுவது என்ற கவலை.

பரமேஸ்வரனின் மனதில் மட்டும் வேறு ஒரு கேள்வி உதித்தது. இதுவரை நடந்த பாதையில் எந்த விலங்கையோ, பறவையையோ பார்க்காததை நினைத்து யோசிக்க ஆரம்பித்தான்.

பரமேஸ்வரன் நீண்ட நேரமாக தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த ரோஸினி,

“என்னாச்சு பரமேஷ்? ஏதோ தீவிரமா யோசிக்கிற போல?” என்று கேட்டாள்.

அதைக் கேட்டவன் தலையை ஆட்டி, “இதுவரைக்கும் நம்ம எந்தப் பறவையையும், விலங்கையும் இந்தக் காட்டுக்குள்ள பார்க்கல. உங்களுக்கு அது வித்தியாசமா தெரியலையா?” என்று நாடியில் கைவைத்தபடி கேட்டான்.

அப்பொழுதுதான் ருத்ராவிற்கும் அது புரியத் தொடங்கியது.

‘அனைவரும் சொல்வது போல இந்தக் காட்டிற்குள் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது. அதை கண்டுபிடித்து என் அண்ணனை மீட்க வேண்டும்’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.

பரமேஸ்வரன் கேட்ட கேள்வியைக் கேட்டதும் அனைவருமே யோசிக்க ஆரம்பித்தனர்.

காடு நிசப்தமாக இருக்க, இவர்களின் பேச்சுக் குரல்கள் மட்டுமே தனியாக எதிரொலித்தன.

ருத்ராவிற்குத் தாகம் எடுக்கவே, ரோஸினியிடம், “தண்ணீர்…” என்றாள்.

உடனே அஜித் வைத்திருந்த பெரிய பேக்கில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினாள் ரோஸினி.

அதை வாங்கி மெல்லக் குடித்து முடித்த ருத்ரா, “நேத்து உங்களோட பேர் மட்டும் தான் கேட்டேன். நீங்களா யாரு? என்ன வேலை செய்றீங்க? எதுக்காக இந்தக் காட்டுக்குள்ள இருக்கிற மர்மத்தை கண்டுபிடிக்கணும்னு வந்திருக்கீங்க?” என்று கேட்டுவிட்டு, தன் விழிகளைப் பரமேஸ்வரனை நோக்கித் திருப்பினாள்.

அவளது கண்களைப் பார்த்ததும் அவனுக்கும் ஏதோ இனம் புரியாத உணர்வு தோன்றியது. அதை உடனே கட்டுப்படுத்திக்கொண்டவன், “நாங்க எங்க சேனலுக்காக வந்தோம்,” என்று புன்முறுவலுடன் கூறினான்.

“சேனல்னா டிவி சேனலா? எங்க ஒர்க் பண்றீங்க?” என்று ஆவலுடன் கேள்விகளை அடுக்கினாள்.

காரணம், அவளுக்குள் ரிப்போர்ட்டராக வேண்டும் என்ற பெரிய கனவு ஒன்று இருந்தது. ஆனால், இன்றுவரை அது கனவாகவே இருந்து வந்தது.

அதைக் கேட்ட முகில், “நாங்க நியூஸ் சேனல்ல இருந்து வரல, ருத்ரா. எங்க யூடியூப் சேனல்ல பல மர்மங்கள் இருக்கிற இடங்களுக்குப் போய், அங்க உள்ள மர்மங்களை எடுத்து சொல்லுவோம்,” என்றான்.

“யூடியூப் சேனல்” என்றதும், இதுவரை சூரியனைப் போல் பிரகாசித்த அவளது முகம் அஷ்டகோணலாக மாறியது.

அவளது முகபாவனையிலேயே அவள் என்ன நினைக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்ட முகில், “நீ நினைக்கிற மாதிரி வெத்து வேட்டு சேனல் இல்லை எங்களோடது. எங்களுக்கு மில்லியன் கணக்குல சப்ஸ்கிரைபர்ஸ் இருக்காங்க,” என்றான்.

அதைக் கேட்ட ருத்ரா ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தபடி,

“மில்லியனா?!” என்றாள்.

“ஆமா,” என்று தலையசைத்தான் முகில்.

தானும் அவர்களுடன் வீடியோவில் வருவோம் என்றும், அதை லட்சக்கணக்கான மக்கள் பார்ப்பார்கள் என்றும் நினைத்த ருத்ரா, கனவு உலகில் மிதக்க ஆரம்பித்தாள்.

நெடுநேரமாக அமைதியாக அமர்ந்திருக்கப் பிடிக்காத அஜித் எழுந்து, அவர்களை விட்டு சற்று தள்ளிச் சென்றான்.

சிகரெட்டை வாயில் வைத்துக்கொண்டு, லைட்டரால் அதைப் பற்ற வைக்க முயன்றான்.

லைட்டரை சிகரெட் அருகில் கொண்டு சென்றதும், திடீரென்று வீசிய காற்று தீயை அணைத்தது.

‘சரி, இந்தத் திசையில் காற்று வேகமாக அடிக்கிறது போல,’ என்று நினைத்தவன், வேறு திசையில் நின்று மீண்டும் பற்ற வைக்க முயன்றான்.

எவ்வளவு முயன்றும் சிகரெட்டைப் பற்ற வைக்க முடியவில்லை.

மீண்டும் பாறைக்கு அருகில் வந்தவன், நடந்தவற்றை அவர்களிடம் கூறினான்.

“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம். அப்படி இருக்கு நீங்க சொல்றது,” என்று கூறிச் சிரித்தாள் ருத்ரா.

அவளது சிரிப்பொலியைத் தாண்டி வேறு ஒரு சத்தம் வருவதைக் கவனித்தான் பரமேஸ்வரன்.

உடனே வாயில் விரலை வைத்து அனைவரையும் அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான்.

அவனது செய்கையைப் பார்த்து அனைவரும் அமைதியாகினர்.

“டொக்… டொக்…” என்ற குதிரையின் காலடி சத்தம் அருகில் வர வர அதிகமாகக் கேட்டது.

குதிரை வரும் திசையை நோக்கி அனைவரும் பார்த்தனர். வேகமாக வந்த குதிரை ஒன்று புழுதி பறக்க இவர்களுக்கு அருகில் வந்து நின்றது. அதிலிருந்து முதியவர் ஒருவர் இறங்கினார்.

முகத்தில் இருந்த தோல்கள் சுருங்கி, மிகவும் வயதானவராகக் காட்சியளித்தார். ஆனால் அந்த வயதிலும் சிறிதும் தளராமல் கம்பீரமாக நின்றார்.

அவரைப் பார்த்து அனைவரும் திகைத்துக் கொண்டிருக்க, பரமேஸ்வரனுக்கு அருகில் வந்த முதியவர், “இன்று அவனால் நீ தப்பித்தாய். மீண்டும் அதைச் செய்யாதே,” என்று பரமேஸ்வரனை நோக்கிக் கைகாட்டிக் கூறிவிட்டு, மீண்டும் குதிரையில் ஏறி சிட்டாகப் பறந்தார்.

அனைவரின் முகத்திலும் யோசனை ரேகைகள் மின்னின.

‘யார் இவர்? இந்தக் காட்டிற்குள் குதிரையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இந்த வயதிலும் எப்படி இவ்வளவு வலுவுடன் குதிரை ஓட்டுகிறார்? எதற்காக பரமேஸ்வரனைச் சுட்டிக்காட்டி, “இவனால் இன்று நீ தப்பித்தாய்” என்று அஜித்தை எச்சரித்தார்?’ எதுவுமே அவர்களுக்கு விளங்கவில்லை.

காட்டிற்குள் நுழைந்து நீண்ட நேரமாகிவிட்டதால் அனைவருக்குமே பசிக்க ஆரம்பித்திருந்தது.

பசி அவர்களுக்குள் இருந்த கேள்விகளைச் சற்று நேரம் மறக்கச் செய்தது.

சாப்பிடுவதற்குத் தேவையான பொருட்களைப் பையில் இருந்து எடுத்து வைக்க ஆரம்பித்தாள் ரோஸினி.

முதலில் வட்டவடிவில் சிறியதாக இருந்த ஏதோ ஒன்றை எடுத்துவைத்தவள், பின்னர் ஆளுக்கொரு பர்கரை எடுத்து அவர்களிடம் கொடுத்தாள்.

இதுவரை பர்கர் சாப்பிட்டுப் பழக்கமில்லாத ருத்ரா, வேறு வழியில்லாமல் அதை வாயில் வைத்து ஒரு கடி கடித்தாள். அவள் நினைத்ததைவிட அதன் சுவை அருமையாக இருக்கவே, ரசித்து உண்டாள்.

நடுவிலேயே தண்ணீர் தாகம் எடுக்க, “தண்ணீர்…” என்று கேட்டாள்.

உடனே ரோஸினி அந்த வட்டவடிவில் இருந்த பொருளை மேல்நோக்கிப் பிடித்து இழுத்தாள்.

அவ்வளவுதான்…அது உடனே ஒரு டம்ளராக மாறியது.

‘இப்படியெல்லாம் பொருட்கள் இருக்கிறதா?’ என்று சற்று வியப்புடன் நினைத்த ருத்ரா, அதை வாங்கிக் குடித்து முடித்தாள்.

பின்னர் தங்கள் கைகளைச் சுத்தம் செய்துகொண்டவர்கள், அலைபேசியில் நேரத்தைப் பார்த்தனர்.

மணி ஐந்தைக் காட்டியது.

‘இப்போது சென்றால்தான் காட்டிற்கு வெளியே இருட்டுவதற்குள் சென்றுவிட முடியும்,’ என்று நினைத்தவர்கள், அங்கிருந்து வெளியே செல்லும் பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

போகும் வழியில், “எல்லாம் வதந்திதான். இந்தக் காட்டுல மக்கள் சொல்ற மாதிரி எந்த அமானுஷ்யமும் இல்லை,” என்றாள் முகில்.

அஜித்தோ தனக்கு நடந்ததையும், குதிரையில் வந்த அந்தத் தாத்தாவைப் பற்றியும் கூறி, அதுவும் அமானுஷ்யம்தான் என்றான்.

காட்டில் அமானுஷ்யம் இல்லை என்றும், இருக்கிறது என்றும் இருபுறமாக வாதிட்டுக்கொண்டே நடந்தனர்.

நேரம் செல்லச் செல்ல நடந்துகொண்டே இருந்தனர்.

ஆனால், வெளியே செல்லும் பாதை மட்டும் வந்தபாடில்லை.

நெடுநேரமாக நடந்தும் இன்னும் காட்டைவிட்டு வெளியே செல்ல முடியவில்லை என்பதை முதலில் கவனித்தாள் ருத்ரா.

அப்போது அவள் கண்ணில் பட்ட ஒரு பாறை, அவளைத் திடுக்கிட வைத்தது.

“எல்லாரும் ஒரு நிமிஷம் நில்லுங்க!” என்று கத்தினாள் ருத்ரா.

அவள் ஏன் இப்படிக் கத்துகிறாள் என்று புரியாமல் அனைவரும் அவளைப் பார்த்தனர்.

“அங்க பாருங்க!” என்று பாறையை நோக்கித் தன் ஆள்காட்டி விரலை நீட்டிக் காட்டினாள்.

அதைக் கண்ட அனைவரின் கண்களிலும் வியப்பு தோன்றியது.

‘இது எப்படி சாத்தியம்?’ என்று தங்களுக்குள் கேட்டுக்கொண்டனர்.

அப்போதுதான் அவர்களுக்கு உண்மை உரைத்தது.

அவர்கள் ஒரே இடத்தைச் சுற்றியே நடந்து கொண்டிருந்தனர்.

உண்மை புரிந்ததும் நால்வரின் முகங்களிலும் வியர்வைத் துளிகள் தோன்றின.

காட்டில் அமானுஷ்யம் இருப்பதை நம்பாத முகில், “காட்டுக்குள்ள வழி தெரியாம தொலையுறது சகஜம்தான். அதுவும் இந்த இருட்டுக்குள்ள, நல்லா காட்டைப் பற்றி தெரிஞ்சவங்களே தொலைஞ்சு போவாங்க. நீங்க நினைக்கிற மாதிரி அமானுஷ்யம் ஒண்ணும் இல்லை,” என்றாள்.

அதைக் கேட்டு மூவரும் அவள் சொல்வது சரிதான் என்று ஒத்துக்கொண்டனர்.

ஆனால், பரமேஸ்வரனுக்கு மட்டும் இன்னும் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.

“அப்போ இன்னைக்கு நைட் இங்கேயே தங்கிட்டு, காலையில விடிஞ்சதும் போகலாம்,” என்றாள் ரோஸினி.

அனைவரும் அதற்குத் தலை ஆட்டி ஒப்புக்கொண்டனர்.

தன் பையில் போர்வை போல் மடித்து வைக்கப்பட்டிருந்த ஒன்றை எடுத்தான் அஜித்.அது என்னவென்று புரியாமல் பார்த்தாள் ருத்ரா.  அதைத் தரையில் வைத்து, அதன் நடுவில் சிறிய கம்பிகளைச் செருகி விரித்தான்.

அவ்வளவுதான்…அடுத்த சில நொடிகளில் டெண்ட் தயாராகி இருந்தது.

அனைவரும் அதற்குள் செல்ல, ருத்ரா மட்டும் ‘ஐந்து பேருக்கும் இது போதுமா?’ என்ற எண்ணத்துடனே உள்ளே நுழைந்தாள்.

ஆனால், உள்ளே சென்றதும் அவள் எதிர்பார்த்ததைவிட அந்த இடம் பெரிதாகவே இருந்தது. அனைவரும் அதற்குள் சென்று உறங்க ஆரம்பித்தனர்.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ருத்ராவிற்கு மட்டும்…

குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. அதிர்ச்சியுடன் கண்களைத் திறந்தவள், சுற்றிலும் பார்த்தாள்.

மற்றவர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

மீண்டும்…“வீல்… வீல்…” என்று குழந்தையின் அழுகை சத்தம் தெளிவாகக் கேட்டது.

அந்தச் சத்தம் வந்த திசையை நோக்கி, யாரிடமும் சொல்லாமல் ருத்ரா கூடாரத்திலிருந்து வெளியே வந்தாள்.

காட்டின் இருளுக்குள் தனியாக நடக்க ஆரம்பித்தாள்.

காட்டிற்குள் குழந்தையின் அழுகை சத்தம் எப்படி கேட்கிறது?சுற்றிச் சுற்றி அவர்கள் ஒரே இடத்திற்கு வரக் காரணம் என்ன?அந்த முதியவர் யார்? குழந்தையைத் தேடிச் செல்லும் ருத்ராவிற்கு அடுத்து என்ன நடக்கப் போகிறது?

இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தெரிந்துகொள்ள அடுத்த அத்தியாயத்தைத் தொடர்ந்து படியுங்கள், நண்பர்களே…

தொடரும்..