பாறைகளுக்கு நடுவே ஆற்று நீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. குனிந்து, தன் கைகளால் நீரை அள்ளி முகத்தைக் கழுவினான் விக்கிரமன்.

பின்னர் மீண்டும் தன் கைகளைத் தண்ணீருக்குள் விட்ட அந்தக் கணத்தில்… ஏதோ ஒன்று திடீரென அவனது கைகளை உள்ளிழுத்தது. விக்கிரமனின் முகத்தில் பதற்றம் அதிகரித்தது. உடனே வெடுக்கென்று தன் கைகளைத் தண்ணீரிலிருந்து வெளியே எடுத்தான். அவனது கைகளைச் சுற்றிக்கொண்டிருந்த நாகம் ஒன்று, படமெடுத்தபடி அவனை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது.

சற்றும் தாமதிக்காமல், அதனை லாவகமாகப் பிடித்த விக்கிரமன், மீண்டும் தண்ணீருக்குள் விட்டான்.

அவன் விட்டதும் அந்த நாகம் ஆற்றின் மறுகரையை நோக்கி நீந்திச் சென்று, அங்கிருந்த மரங்களுக்குள் மறைந்தது.

வேறு எதுவும் இல்லை என்று எண்ணிய விக்கிரமன், நிம்மதிப் பெருமூச்சு விட்டான். இயற்கை சூழலும், குளிர்ந்த காற்றும் அவனுக்கு ஓர் அழகிய அமைதியை அளிக்க, கரையோரத்தில் சிறிது நேரம் அமர்ந்தான்.

மறுபுறம், ஆற்றின் மறுகரையை அடைந்ததும் நாக உருவிலிருந்து மனித உருவிற்கு மாறிய தாரகை, ஒரு மரத்தின் பின்னால் நின்றுகொண்டு இயற்கை சூழலை ரசித்துக்கொண்டிருந்த ஆடவனை கூர்ந்து நோக்கினாள்.

தன்னை கொல்லாமல், மெதுவாக மீண்டும் தண்ணீருக்குள் விட்ட அவனது குணம் அவளுக்குப் பிடித்திருந்தது.

மீண்டும் அவனருகில் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும், நாகமாக உருமாறிய தாரகை, ஆற்றைக் கடந்து அவனிடம் சென்றாள்.

தண்ணீருக்குள் தான் விட்ட நாகம் மீண்டும் தன் முன்னால் வந்து நிற்பதைக் கண்ட விக்கிரமன், அங்கிருந்து செல்ல நினைத்து எழ முயன்றான். அதற்குள் அவன் அடுத்து என்ன செய்வான் என்பதை ஊகித்த தாரகை, வேகமாக ஊர்ந்து சென்று அவனது மடியில் ஏறி, தன் உடலைச் சுருட்டிக்கொண்டு படுத்துக்கொண்டாள்.

அந்த நாகத்தின் செயல்கள் விக்கிரமனுக்கு விசித்திரமாக இருந்தன. இருப்பினும், தன்னிடம் நன்றி தெரிவிக்கும் நோக்கில்தான் அது தன் மடியில் வந்து படுத்துக்கொண்டதாக எண்ணினான். அவனது மனமும் அதனைத் தூக்கி வீசத் தோன்றாததால், அமைதியாக  அதனின் செயல்களை உற்று கவனித்தான்.

அந்த நாகம் ஆபத்தற்றது போலத் தோன்றியதால், அதன் வழவழப்பான உடலை மெதுவாகத் தடவிக் கொடுத்தான்.

விக்கிரமனின் கை அதன் மீது பட்டதும் நெளிந்த நாகம், அவனது மடியிலிருந்து இறங்கி அவனது கைகளைச் சுற்றிக்கொண்டது. பின்னர் அவனது முதுகைச் சுற்றி வந்து, சிறுபிள்ளையைப் போல் அவனுடன் விளையாடத் தொடங்கியது. நாகம் என்பதாலேயே விக்கிரமனும் அதன் விளையாட்டை ரசித்துக்கொண்டிருந்தான்.

அது நாக உருவில் இருக்கும் ஒரு பெண் என்று அவனுக்குத் தெரிந்திருந்தால், நிச்சயம் எப்பொழுதோ அவளைப் பிடித்து தூக்கி வீசியிருப்பான்.

சிறிது நேரம் அவனைச் சுற்றி விளையாடிய நாகம், மீண்டும் தண்ணீருக்குள் சென்று மறைந்தது.

நேரமாகிவிட்டதை உணர்ந்த விக்கிரமன், ஆயுதப்பட்டறைக்குத் திரும்புவதற்காக எழுந்துகொண்டான்.

அவன் அங்கிருந்து செல்வதை, பாறையின் மீது நாக உருவில் அமர்ந்திருந்த தாரகை, கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மனிதர்கள் என்றாலே நாகத்தை அடித்துக் கொன்றுவிடுவார்கள் என்று இத்தனை நாட்களாக தாரகை தன் மனதில் கட்டி வைத்திருந்த எண்ணத்தை, இன்று விக்கிரமன் முற்றிலுமாக உடைத்துவிட்டுச் சென்றிருந்தான்.

அவனது குணத்தால் ஈர்க்கப்பட்ட அவளது உள்ளம், தன்னுடன் விளையாடிய அந்த ஆடவனை நேசிக்கத் தொடங்கியது.

————————————–

ஆயுதப்பட்டறைக்குத் திரும்பிய விக்கிரமன், கல்நீர் தொட்டியிலிருந்து ஆறியிருந்த ஈட்டியை மெதுவாக வெளியே எடுத்தான். அருகிலிருந்த பருத்தித் துணியை எடுத்து, ஈட்டியில் படிந்திருந்த நீர்த்துளிகளை முழுமையாகத் துடைத்துச் சுத்தம் செய்தான்.

அதன்பின் மூலிகை எண்ணெயை ஈட்டியின் மீது தடவி, மீண்டும் நெருப்பில் காட்டி வாட்டினான். சில நேரத்தில் ஈட்டி மெதுவாகப் பழுப்பு நிறத்திற்கு மாறியிருந்தது. அதன் தோற்றத்திலேயே அது முன்பைவிட திடமாகவும் உறுதியாகவும் மாறியிருப்பது தெரிந்தது. அதைக் கண்டு விக்கிரமன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

வேலை முடிந்து மாலை ஐந்து மணியை நெருங்கியபோது, மணியோசை கேட்கத் தொடங்கியது. அதைக் கேட்டதும் பணியாட்கள் அனைவரும் ஆயுதப்பட்டறையிலிருந்து வெளியேறத் தொடங்கினர்.

விக்கிரமனும் அங்கிருந்து வெளியேறி, தன் குடிலை நோக்கி நடக்கத் தொடங்கினான்…

—————————————————————-

மறுபுறம், இளவரசி காய்த்திரி தேவி தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

கோட்டையை விட்டு வெளியே செல்ல முடியாதபடி அவள்மீது அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதுவே அவளுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. தான் ஒரு இளவரசியாக இருந்தும், ஒரு சிறைக் கைதியைப் போலவே கோட்டைக்குள் அடைபட்டிருப்பதாக உணர்ந்தாள்.

தற்போது அவளால் கோட்டைக்கு வெளியே செல்ல முடிந்த ஒரே இடம் அந்தக் கோவில் மட்டுமே. மற்றபடி வேறு எங்கும் செல்ல அவளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

தனிமையில் அமர்ந்திருக்க முடியாமல் போகவே, போர் பயிற்சி நடைபெறும் இடத்தை நோக்கிச் சென்றாள்.

அங்கு சென்றதும், தன் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஐந்து அம்புகளை எடுத்தாள். அவற்றை நாணில் பூட்டி, மரப்பொம்மைகளின் தலையைத் துல்லியமாகக் குறிவைத்து ஒன்றன்பின் ஒன்றாக எய்தாள்.

ஐந்து அம்புகளும் குறி தவறாமல் சென்று, மரப்பொம்மைகளின் தலையைத் துளைத்தன.

அவளது திறமையைத் தொலைவில் நின்று பார்த்துக்கொண்டிருந்த தளபதி அகத்தியன், கைத்தட்டி பாராட்டினார்.

அகத்தியனை கண்டதும் காய்த்திரி தேவியின் முகத்தில் எரிச்சல் தோன்றியது. அவரால்தானே இன்று கூண்டுக்குள் அடைக்கப்பட்ட பறவையைப் போல கோட்டைக்குள் கிடக்கிறாள்! அவரிடம் எதுவும் பேசாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு, மீண்டும் பயிற்சியில் கவனம் செலுத்தினாள்.

மீண்டும் குறி தவறாமல் ஓர் அம்பை எய்தாள்.

அடுத்த கணமே தளபதி அகத்தியனின் கைத்தட்டல் ஓசை மீண்டும் அவளது கோபத்தைத் தூண்டியது.

உடனே அவரை நோக்கித் திரும்பியவள், “தளபதியாரே… தாங்கள் இங்கிருந்து சென்றால் நலமாக இருக்கும்!” என்றாள்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட தளபதி புன்னகைத்தார்.

அவளது அருகில் நெருங்கி வந்து, கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த வாளை எடுத்துத் திடீரென அவளிடம் வீசினார். அதனை லாவகமாகப் பிடித்துக்கொண்டாள் காய்த்திரி. அடுத்த கணம், தானும் ஒரு வாளை கையில் ஏந்திய அகத்தியன், அவளுடன் சண்டையிடத் தயாரானார்.

அவரை எதிர்த்து சண்டையிடுவதில் பெரிதாக எந்த முனைப்பையும் இளவரசி காட்டவில்லை.

அதைக் கவனித்த அகத்தியன், “இளவரசியாரே! தாங்கள் என்னை வென்றுவிட்டால், இந்தக் கோட்டையை விட்டு வெளியே செல்ல மன்னரிடம் அனுமதி வாங்கித் தருகிறேன்!” என்றார்.

அதைக் கேட்டதும் இளவரசியின் கண்கள் மின்னின. வாளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டவள், தளபதியாரை எதிர்த்து சண்டையிடத் தயாரானாள்.

அடுத்த நொடியே இருவருக்குமிடையே வாள் சண்டை தொடங்கியது.

“டங்… டங்…” என்று இரு வாள்களும் அசாத்தியமான வேகத்தில் ஒன்றோடொன்று மோதிக்கொள்ள, அந்த ஓசை பயிற்சித் திடல் முழுவதும் எதிரொலித்தது.

முதலில் சாதாரணமாகவே இளவரசியின் வாள் வீச்சுகளைத் தடுத்து முறியடித்துக்கொண்டிருந்தார் அகத்தியன். அந்த வேகம் போதாது என்பதை உணர்ந்த காய்த்திரி, இன்னும் வேகத்தை அதிகரித்து முழு மூச்சுடன் வாளைச் சுழற்றினாள். அவளது வேகத்தைச் சமாளிக்க முடியாமல் இரண்டு தாக்குதல்களைத் தடுத்துக்கொண்டே அகத்தியன் சில அடிகள் பின்வாங்கினார்.அதைக் கண்ட இளவரசியின் முகம் வெற்றிக் களிப்பில் மின்னியது.

அதனை கவனித்த அகத்தியன், அடுத்த கணமே தன் முழுப் பலத்தையும் பயன்படுத்தி அவளைத் திருப்பித் தாக்கத் தொடங்கினார். அவரது தாக்குதலின் வேகம் முன்பைவிடப் பலமடங்கு அதிகரித்திருந்தது. அந்த வேகத்தை எதிர்கொண்டு சில நிமிடங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது காய்த்திரியால். சிறிது நேரத்திலேயே அவள் பலமிழந்து பின்வாங்கத் தொடங்கினாள்.

கண் இமைக்கும் நேரத்தில் அகத்தியனின் வாள், அவளது வாளைத் தட்டி கீழே விழச் செய்தது.

தளபதியாரிடம் தோற்ற அவமானத்தில் காய்த்திரி தலைகுனிந்தாள். ஆனால் அவளது மனதிற்குள், இன்னும் தீவிரமாகப் பயிற்சி செய்து ஒருநாள் அவரை முறியடித்தே தீர வேண்டும் என்ற வைராக்கியம் உருவானது.

அவளுக்கு எதிரில் நின்ற அகத்தியனோ, அவளது திறமையைக் கண்டு மனதிற்குள் பெருமை கொண்டார்.

வாள் வீச்சில் பெயர்பெற்ற தன்னையே சில கணங்கள் பின்வாங்க வைத்துவிட்டாள் என்பதில் வந்த பெருமிதத்துடன் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

அவரிடம் தோற்ற அவமானமும், இதுவரை சண்டையிட்ட களைப்பும் அவளது உடலைச் சோர்வடையச் செய்தன.

தன் தோழிகளுடன் சிறிது நேரம் கழித்தால் மனமும் உடலும் சற்று இலகுவாகும் என்று தோன்றியதால், அந்தப்புரத்தில் அமைந்திருந்த நீச்சல் குளத்தை நோக்கிச் சென்றாள்.

சதுர வடிவில் பெரிதாக, செயற்கையாக அமைக்கப்பட்டிருந்தது அந்த நீச்சல் குளம். அதனைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த அகழிகளில் நீர் ஓடிக்கொண்டிருந்தது.

நீச்சல் குளத்திற்குள் அவளது தோழிகள் சிலர் குளித்துக்கொண்டிருந்தனர். இளவரசி வருவதைக் கண்டதும், அனைவரும் அவளுக்காக வழிவிட்டனர்.

குளத்திற்குள் இறங்கிய காய்த்திரி, தன் தோழிகளுடன் பேசி மகிழ்ந்தபடி சிறிது நேரத்தைச் செலவிட்டாள்.

பின்னர் குளத்திலிருந்து வெளியே வந்து உடையை மாற்றிக்கொண்டபோது, விக்கிரமனின் நினைவு மீண்டும் அவளது கண்முன் வந்து நின்றது.

மாலை இருள் சூழத் தொடங்கியிருந்தது.

‘இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பான்?’ என்ற எண்ணம் அவளது மனதில் எழுந்தது.

‘நாளைக் காலையில் அவனைச் சந்திப்போமே… அப்போது பார்த்துக்கொள்ளலாம்!’ என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டாள்.

———————————————-

மறுபுறம், குடிலுக்குத் திரும்பிய விக்கிரமன் உணவை உண்டுவிட்டு, எப்போதும் போல் மரத்தடியில் சென்று படுத்துக்கொண்டான்.

முதியவர் யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் இருள் சூழத் தொடங்கியதும், அவர் தன் குடிலுக்குள் சென்றுவிட்டார்.

நேற்றைப் போலவே இன்றும், இளவரசியின் நினைவுகள் அவனைத் தனிமையில் ஆக்கிரமிக்கத் தொடங்கின. அவள் திரும்பி வந்து தன் முன்னால் நின்றது…தன் பெயர் காய்த்திரி தேவி என்று கூறியது… பின்னர் சிறுபிள்ளையைப் போல ஓடிச்சென்று மறைந்தது…என அனைத்தையும் நினைத்துப் பார்த்தவனின் உதட்டில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.

“காய்த்திரி தேவி…” என்று அவளது பெயரை மெதுவாக முணுமுணுத்துக்கொண்டான்.

அந்தப் பெயரை உச்சரிப்பதில் அவன் என்ன இன்பத்தைக் கண்டானோ தெரியவில்லை…அவளது பெயரே வானில் மிதப்பதைப் போன்ற ஓர் இனிய உணர்வு அவனது உள்ளத்தை நிறைத்துக்கொண்டிருந்தது.

நேரம் கடக்கத் தொடங்கியது…

நேற்றைப் போலவே இன்றும் சரியாகப் பன்னிரண்டு மணி.”கீரீச்… கீரீச்…” என்ற பூச்சிகளின் ரீங்கார ஓசை இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு கேட்கத் தொடங்கியது.

அந்த ஓசையைக் கேட்டதும், விக்கிரமன் தன் காதுகளை கூர்மையாக்கினான்.

பின்னர் மெதுவாகத் திரும்பி, முதியவரின் குடிலை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்…

தொடரும் ..