அந்த எழுத்துக்களைக் கண்ட அடுத்த நொடியே… காயத்திரி தேவியின் முகம் சட்டென்று இருளடைந்தது. நெற்றியில் வியர்வைத் துளிகள் மின்னின. ‘ராஜ்யத்திற்கு பேராபத்து!’ என்று அவளது உள்ளுணர்வு எச்சரிக்கத் தொடங்கியது.
‘அலிஃப்’ என்று பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்களைப் பார்த்ததுமே, அது எதிரி ராஜ்யத்தினரின் சதி என்பதைப் புரிந்துகொண்டாள். இருப்பினும், இவ்வளவு தூரம் வந்து தங்களைத் தாக்கும் அளவிற்கு அவர்களுக்கு யார் உதவியிருக்கக்கூடும் என்ற கேள்வி அவளது மனதில் எழுந்தது.
அவள் ஆழ்ந்த சிந்தனையில் இருந்த நேரத்தில், இளவரசியின் அருகில் வந்தார் முதன்மை தளபதி அகத்தியன்.
நாற்பது வயதை நெருங்கியிருந்தாலும், அந்த வயதை நம்ப முடியாத அளவிற்கு இளமைத் தோற்றத்தைக் கொண்டிருந்தார். முகத்தில் குடிகொண்டிருந்த கம்பீரத்தையும் மீறி, கன்னங்களிலும் கைகளிலும் போரில் பெற்ற வெற்றித் தழும்புகள் அவரது வீரத்தைப் பறைசாற்றின.
“இளவரசியாரே… உயிருக்கு ஆபத்து நிறைந்த பணிக்கு தாங்கள் சென்றது முறையல்ல. தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதால், இனி தாங்கள் கோட்டையை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று மன்னர் உத்தரவிட்டிருக்கிறார்,” என்றார் அகத்தியன்.
அவரது குரலில், இளவரசியின் சிறுபிள்ளைத்தனமான துணிச்சலை நினைத்துக் கவலைப்படும் ஒருவரின் அக்கறை அப்பட்டமாகத் தெரிந்தது.
“ஏன் தளபதியாரே? பெண் என்பதால் உயிருக்கு அஞ்சி கோட்டைக்குள் முடங்கிக் கிடக்கச் சொல்கிறீர்களா? கோட்டைக்குள் பதுங்கி உயிரைக் காத்துக்கொண்டு வாழும் கோழை அல்ல நான், தளபதியாரே!” என்றாள் காயத்திரி.
அவளது வார்த்தைகள் சூடான மூச்சுக்காற்றுடன் உஷ்ணமாக வெளிப்பட்டன.
அவளது பதிலைக் கேட்ட அகத்தியனின் மனம் பெருமிதத்தில் திளைத்தது. இருப்பினும், கோட்டையைச் சுற்றி ஆபத்து சூழ்ந்திருப்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.
“தங்களின் கருத்துக்களுக்கு நான் மதிப்பளிக்கிறேன், இளவரசியாரே. இருப்பினும், மன்னரின் கட்டளை இதுவே,” என்றார் அகத்தியன்.அவ்வாறு கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
சற்று தூரம் சென்றதும், இரு நம்பிக்கைக்குரிய காவலர்களை ரகசியமாக அழைத்த அகத்தியன், இளவரசியைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு உத்தரவிட்டார்.
தன் தந்தையின் கட்டளையை அறிந்த காயத்திரியின் முகம் கோபத்தில் சிவந்தது.
:இதே உத்தரவு நான் ஒரு ஆணாக பிறந்திருந்தால் இப்படிக் கூறியிருப்பாரா? பெண் என்பதால்தானே என்னை பலவீனமானவளாக நினைத்துவிட்டார்!’
என்று மனதிற்குள் எரிச்சலடைந்தாள்.
மறுபுறம்…
தளபதி அகத்தியன் மன்னர் வீரமாறனின் முன்னிலையில் நின்றுகொண்டிருந்தார்.
வயதின் காரணமாக அவரது முகத்தில் ஆங்காங்கே சுருக்கங்கள் படர்ந்திருந்தன. தடித்த மீசை அவரது கம்பீரத்தை மேலும் கூட்டியது. மேலாடையாக அணிந்திருந்த பட்டுத்துணி இரு தோள்களிலும் தொங்கிக்கொண்டிருந்தது.மார்பில் போரில் பெற்ற வெற்றித் தழும்புகளாக இரண்டு நீண்ட காயங்கள் தெரிந்தன. அவற்றுக்கு இடையே விலையுயர்ந்த நவரத்தின மாலைகள் தொங்கின. இடுப்பில் கட்டியிருந்த கச்சையில் ஒரு குறுவாள் சொருகப்பட்டிருந்தது. பட்டுவேட்டியின் மடிப்புகளுக்கு நடுவே காலில் அணிந்திருந்த தங்கச் சிலம்பு மின்னியது.அவரது வலதுபுறத்தில், காளைச் சின்னம் பொறிக்கப்பட்ட வாளின் கைப்பிடி உரையுடன் வைக்கப்பட்டிருந்தது.
சில நொடிகள் அமைதியாக இருந்த அகத்தியன் பேசத் தொடங்கினார்.
“அரசே… நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. நம் நாட்டிற்குள் எதிரி ராஜ்யத்தைச் சேர்ந்த பலர் அத்துமீறி நுழைந்திருப்பதாக ஒற்றர்படைத் தளபதியிடமிருந்து செய்தி வந்துள்ளது.அவர்களை உடனடியாகக் கண்டறிந்து வேரறுக்க வேண்டும். அர்சலான் அலிஃபின் செயல்கள் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கின்றன. நம் அண்டை ராஜ்யத்தின் கோவில்களில் இருந்த நகைகளைச் சூறையாடியதோடு நின்றுவிடாமல், தற்போது கோவில்களையே அழித்து வருகின்றனர். மக்களைத் துன்புறுத்தி அடிமைப்படுத்துகின்றனர்.இந்த நிலையில், மக்கள் கூட்டம் கூட்டமாக அகதிகளாக நம் நாட்டிற்குள் தஞ்சம் புகுந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களில் யார் உண்மையான அகதி, யார் எதிரி நாட்டின் உளவாளி என்பதை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது, அரசே,” என்றார்.
அதன் பின்னர் மன்னரின் பதிலை எதிர்பார்த்து அமைதியாக நின்றார்.
“உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்யுங்கள் தளபதியாரே. உங்களின் மன ஓட்டத்தை நான் நன்கு அறிவேன்,” என்றார் மன்னர்.
ஆனால் அவரது முகத்தில் கவலைக்கோடுகள் படர்ந்திருந்தன. முகம் இறுகியிருந்தது.
அதைக் கவனித்த அகத்தியன்,
“அரசே… தங்களின் கவலை இளவரசியாரைப் பற்றியது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இளவரசியாருக்குத் தனிப்பட்ட பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டேன். அவருக்கு ஒன்றும் நேராது,” என்று நம்பிக்கையுடன் கூறினார்.
அதைக் கேட்டதும் மன்னரின் முகத்தில் சிறிது நிம்மதி தோன்றியது.
“நான் வருகிறேன், அரசே,” என்று கூறி அகத்தியன் அங்கிருந்து விடைபெற்றார்.
தனது பணிகளில் மும்முரமான அகத்தியன், அகதிகள் தங்கியிருந்த குடில்களைச் சோதனையிட வீரர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், தன்னாட்டைச் சேர்ந்த இரு ஒற்றர்களை அங்கேயே தங்கி, அங்குள்ள நிலைமையை ரகசியமாகக் கண்காணிக்குமாறும் கட்டளையிட்டார்.
‘விரைவில் போர் மூளப்போகிறது’ என்று அவரது உள்ளுணர்வு எச்சரித்துக்கொண்டிருந்தது.
மறுபுறம்…கோவிலில் கண்ட விக்கிரமனின் நினைவில் மூழ்கியிருந்தாள் காயத்திரி.அவனது நினைவுகள் அவளை வாட்டி வதைத்துக்கொண்டிருந்தன.
மனம் அவனை ஏற்றுக்கொண்டாலும், மூளை மட்டும் எச்சரித்தது.
‘அவன் எப்படி அங்கே வந்தான்? ஒருவேளை அவன் எதிரிப் படையைச் சேர்ந்தவனாக இருப்பானோ?’என்ற சந்தேகம் அவளுள் எழுந்தது.ஆனால் அடுத்த நொடியே,’இருக்காது…’ என்று அவளது மனமே அந்த எண்ணத்தை மறுத்தது.
அவள் உடனே தனக்கு விசுவாசமான காவலனை அழைத்தாள்.
இளவரசியின் முன் வந்து கைகட்டி நின்றான் அவன்.
காவலன் வந்ததுகூட தெரியாமல் விக்கிரமனின் நினைவில் மூழ்கியிருந்தாள் காயத்திரி.
அவளது மௌனத்தைப் பார்த்த காவலன், “கட்டளையிடுங்கள், இளவரசியாரே,” என்று பணிவுடன் கேட்டான்.
அந்தக் குரலில் தன் நினைவுலகிலிருந்து மீண்டவள், இன்று கோவிலில் தான் சந்தித்த இளைஞனின் அடையாளங்களையும் தோற்றத்தையும் அவனிடம் விவரித்தாள்.
“அவன் யார் என்பதை விசாரித்து வந்து எனக்குத் தெரிவி,” என்று கட்டளையிட்டாள்.
காவலன் தலைவணங்கி வெளியேறினான்.
ஆயுதப் பட்டறை…
இங்கே காயத்திரி அவனது நினைவுகளில் மூழ்கிக் கிடக்க…
அங்கே விக்கிரமனோ, தனது வியர்வைத் துளிகள் தரையில் சிந்தும் அளவிற்கு, உலைக்களத்தின் நெருப்புக்கு நடுவே நின்று சுத்தியலால் இரும்பை அடித்துக்கொண்டிருந்தான். அவன் உருவாக்கிக்கொண்டிருந்த ஈட்டியின் முனை மெதுவாக வடிவம் பெற்றுக்கொண்டிருந்தது. ஆனால் அவனது கண்முன்னால் மீண்டும் மீண்டும் தோன்றியது இளவரசியின் அழகிய முகமே.
அவளது முகம் நினைவில் தோன்றிய ஒவ்வொரு முறையும், அவனது உதடுகளில் அறியாமலேயே புன்னகை மலர்ந்தது. இருப்பினும், அந்தப் புன்னகைக்குப் பின்னால் ஒருவித பயமும் பதுங்கியிருந்தது.
அந்த உணர்வை ஒதுக்கிவிட்டு, மீண்டும் தனது வேலையில் கவனம் செலுத்தினான்.
சிறிது நேரத்தில் சூரியன் மேற்கு வானில் மறையத் தொடங்கியது. அப்போது காவலன் ஒருவன் அனைவரின் முன்பாக வந்து, “வேலை நேரம் முடிந்தது அனைவரும் இங்கிருந்து புறப்படுங்கள்” என்று அறிவித்தான்.
விக்கிரமன் உடனே சுத்தியலைக் கீழே வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேற முற்பட்டான். அதுவே அவனது முதல் நாள் வேலை.வாசலைக் கடக்கும் முன் காவலன் அவனைத் தடுத்து நிறுத்தினான்.
அவனது ஆடைகளுக்குள் இரும்புத் துண்டுகள் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்று முழுமையாகச் சோதித்த பின்னரே அவனை வெளியே அனுப்பினான்.
வெளியே வந்ததும் விக்கிரமன் ஆழமாக மூச்சை இழுத்து விட்டான்.
பின்னர் சிறிது தொலைவில் இருந்த அகதிகள் முகாமை நோக்கி, ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினான்.
தொலைவில் இருந்த அறச்சாலையில் காவலர்கள் பலர் அகதிகளுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தனர். அகதிகள் பலரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட மண்சட்டிகளுடன் வரிசையாக நின்றுகொண்டிருந்தனர்.
விக்கிரமன் ஓரமாக அமர்ந்திருந்த முதியவரை நோக்கி நடந்துசென்றான்.
அவனைக் கண்டதும் அந்த முதியவரின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
விக்கிரமன் எதற்காக வந்திருக்கிறான் என்பதை முன்கூட்டியே புரிந்துகொண்டவரைப் போல, தனது துணிப்பையில் இருந்த முடிச்சை அவிழ்த்து, அதற்குள் வைத்திருந்த மண்சட்டியையும் குவளையையும் அவனிடம் கொடுத்தார்.
அவற்றைப் புன்னகையுடன் பெற்றுக்கொண்ட விக்கிரமன்,“நன்றி, ஐயா,” என்றான்.
முதியவர் எதுவும் கூறவில்லை. புன்னகையுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவரிடம் விடைபெற்ற விக்கிரமன், நீண்டிருந்த வரிசையில் சென்று நின்றான்.மெதுவாக கூட்டம் குறைந்தது.
அவனது முறை வந்ததும், காவலன் ஒருவன் கேழ்வரகக் கூழை அவனது மண்சட்டியில் ஊற்றினான். அதை வாங்கிக்கொண்டு அருகே ஓடிக்கொண்டிருந்த ஆற்றின் கரைக்குச் சென்றான்.ஆற்றின் நீர் சற்றுக் கலங்கலாகத் தெரிந்தது. உடனே கையில் வைத்திருந்த சிறிய பருத்தித் துணியால் குவளையின் வாய்ப்பகுதியை மூடி, அதை நீருக்குள் முக்கி எடுத்தான்.
குவளையை வெளியே எடுத்தபோது, பருத்தித் துணியில் மண் படிந்திருந்தது.
அதை நன்றாகத் துடைத்துவிட்டு, குவளைக்குள் இருந்த தெளிந்த நீரைப் பார்த்தான். கூழையும் குடிநீரையும் எடுத்துக்கொண்டு, முதியவர் அமர்ந்திருந்த மரத்தடிக்குச் சென்று அமர்ந்தான்.
முதியவரும் மண்சட்டியைக் கையில் வைத்துக்கொண்டு கூழ் குடித்துக்கொண்டிருந்தார். அவரை ஒரு கணம் கவனித்த விக்கிரமன், பின்னர் தனது கூழை குடித்து முடித்தான்.
உடலுக்குள் புது தெம்பு பிறந்தது போல உணர்ந்தான்.
இரவு மெதுவாகக் கவிழ்ந்தது. நிலா தன் ஒளியை வீசத் தொடங்கியிருந்தாள்.
அண்டை நாடுகள் அனைத்திலும் போர்கள் வெடித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. எப்போது என்ன நடக்கும் என்ற அச்சம் நிலவியதால், இரவு நேரங்களில் வெளியில் தேவையற்ற விளக்குகள் எதுவும் ஏற்றப்படவில்லை.சுற்றிலும் இருள் சூழத் தொடங்கியது.
குடும்பங்களாக வந்திருந்த அகதிகளில் பெண்களுக்கும் முதியவர்களுக்கும் மட்டும் கூரை வேயப்பட்ட குடில்கள் வழங்கப்பட்டிருந்தன.
விக்கிரமன் அங்கு வந்து இரண்டு நாட்களே ஆனதால், அவனுக்கு இன்னும் எந்த வசதியும் வழங்கப்படவில்லை.
அதே அரசமரத்தின் அடியில் தனது துண்டை விரித்தான்.துணி மூட்டையைத் தலைக்கு தலையணையாக வைத்துக்கொண்டு, வானில் தெரிந்த நிலவைப் பார்த்தபடியே படுத்துக்கொண்டான்.
ஆனால் கண்களை மூடியதும் காலையில் கோவிலில் கண்ட இளவரசியின் முகமே அவனது கண்முன்னால் தோன்றியது. அவளது நினைவு அவனைத் தூங்கவிடாமல் இம்சித்துக்கொண்டிருந்தது.நேரம் மெதுவாக நகர்ந்தது.
இரவு பன்னிரெண்டை நெருங்கியது. தூக்கம் வராமல் புரண்டு படுத்துக்கொண்டிருந்தான் விக்கிரமன்.
அப்போது…வண்டுகளின் ரீங்காரம் ஒலிக்க அதன் பின்
“சரக்… சரக்…” என்ற மெதுவான காலடி ஓசை அந்த இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு அவனது காதுகளில் விழுந்தது.
விக்கிரமன் சட்டென்று கண்களைத் திறக்கவில்லை. பாதிக் கண்களை மட்டும் திறந்து, தூங்குவது போலப் பாசாங்கு செய்தபடி, அந்த ஓசை வந்த திசையை கவனிக்கத் தொடங்கினான்.
அந்த முதியவர் மெதுவாகத் தனது குடிலிலிருந்து வெளியே வந்தார். ஒரு கணம் நின்று, இருபுறமும் யாரும் கவனிக்கிறார்களா என்று நோட்டமிட்டார்.
பின்னர்…யாருக்கும் தெரியாமல் அமைதியாக ஆற்றைக் கடந்து, காட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
முதியவரின் இந்தச் செயல் விக்கிரமனின் மனதில் சந்தேகத்தை எழுப்பியது.மெதுவாக எழுந்தவன், சற்றுத் தொலைவு விட்டு அவரைப் பின்தொடரத் தொடங்கினான்.