கோகிலாவும் கோவிலின் இருப்பிடத்தைக் கூற, அனைவரும் வீட்டை விட்டுக் கிளம்பினர்.

முதலில் பரமேஷ் ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்தான். அவனைப் பின்தொடர்ந்து ஒவ்வொருவராகக் காரில் ஏறிக்கொண்டனர். அனைவரும் அமர்ந்ததும், கோவிலை நோக்கிக் காரைச் செலுத்தத் தொடங்கினான் பரமேஷ்.

ஓரிரு தெருக்களைக் கடந்ததும், திடீரென ஒருமுறை ஹரிக்குட்டியைப் பார்த்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று ருத்ராவின் மனதில் தோன்றியது.

உடனே, “ஒரு நிமிஷம் வண்டியை நிறுத்துங்க!” என்றாள்.

அவளது குரலைக் கேட்டு காரை ஓரமாக நிறுத்திய பரமேஷ், “என்னாச்சு ருத்ரா? ஏன் வண்டியை நிறுத்தச் சொன்ன?” என்று கேட்டான்.

“ஒரு ஐந்து நிமிஷம் மட்டும் வெயிட் பண்ணுங்க… நான் வந்திடுறேன்!” என்றுவிட்டு காரிலிருந்து இறங்கியவள், சற்று அகலமாக இருந்த தெருவிற்குள் வேகமாக ஓடினாள்.

‘இவளுக்கு வேற வேலையே இல்லை… எப்ப பார்த்தாலும் சின்னப்பிள்ளை மாதிரி ஓடுறதையே வேலையா வச்சிருக்கா!’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான் பரமேஷ்.

அந்தத் தெருவில் மூன்று வீடுகளைக் கடந்ததும், பச்சை நிறப் பெயிண்ட் பூசப்பட்டிருந்த தன் அத்தை வீட்டின் வாசலில் வந்து நின்று மூச்சு வாங்கினாள். சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின், படியேறி வீட்டிற்குள் சென்றாள்.

அவளது அத்தை வயலுக்குச் சென்றிருந்தார். ஹரிக்குட்டி மட்டும் அவனுடைய அம்மாவின் மடியில் அழகாக அமர்ந்திருந்தான்.

அவனைப் பார்த்ததும் புன்னகைத்தவள், அடுத்த நொடியே அவனைத் தூக்கித் தன் மார்போடு கட்டி அணைத்துக்கொண்டாள். அன்புடன் அவனது நெற்றியில் முத்தமிட்டவள், பிரிய மனமில்லாமல் அவனைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“செல்லக்குட்டி… சித்தியை விட்டுட்டு இருக்கப் போறியா?” என்று அவனது கன்னத்தை வருடியவள், அவன் தன்னைப் பார்த்துப் புன்னகைக்கவும் மனம் நெகிழ்ந்தாள்.

அவனைக் கையிலிருந்து இறக்க மனமில்லாமல் இன்னும் சிறிது நேரம் அணைத்துக்கொண்டிருந்தாள். ஆனால், அவனுடன் தொடர்ந்து இருக்க முடியாத நிலையை நினைத்ததும் அவளது மனம் கனத்தது.

ஒருவழியாகத் தன் மனதைத் தேற்றிக்கொண்டு, ஹரியை மீண்டும் அவனது தாயிடம் ஒப்படைத்தாள்.

“போயிட்டு வரேன்டா செல்லம்…” என்று அவனைப் பிரிய முடியாமல் கண்களில் தேங்கிய கண்ணீருடன் கையசைத்தாள்.

அவளது கண்களில் இருந்த ஏக்கத்தைப் புரிந்துகொண்ட ஹரியின் தாய், “நீ கவலைப்படாதே ருத்ரா. நான் அவனைப் பார்த்துக்கிறேன். நீ போயிட்டு வா,” என்று ஆறுதலாகக் கூறினாள்.

அவளிடம் தலையசைத்துவிட்டு, ஹரியை இன்னொரு முறை திரும்பிப் பார்த்தவள், அங்கிருந்து வெளியேறிக் காரை நோக்கி நடந்தாள்.

மீண்டும் காருக்குள் வந்து ஏறியதும், “இப்ப கிளம்பலாமா? வேற யாரையும் பார்க்கணுமா?” என்று அவளது முகத்தில் படர்ந்திருந்த சோகத்தைப் பார்த்துக் கேட்டான் பரமேஷ்.

“இல்லை… போங்க,” என்று மெதுவாகக் கூறிவிட்டு, ஜன்னலுக்கு வெளியே தெரிந்த தன் அத்தையின் வீட்டைப் பார்த்தாள்.

ஹரியின் நினைவு அவளது மனதை ஆக்கிரமித்துக்கொள்ள, அதற்கு மேல் எதுவும் பேசாமல் மௌனமானாள்.

அவளது அமைதியைக் கலைக்க விரும்பாத பரமேஷும் எதுவும் கேட்காமல் காரை இயக்கினான்.

கார் ஊர் எல்லையைக் கடந்து நெடுஞ்சாலையில் சீறிப்பாய்ந்தது. புதிருக்கான பதிலை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற பரமேஷின் ஆர்வம், அவன் காரைச் செலுத்திய வேகத்திலேயே தெரிந்தது.

‘தூத்துக்குடி உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற பெயர்ப்பலகை அவர்களை வரவேற்றது.

அதைக் கடந்ததும் நகருக்குள் நுழைந்த கார், சிறிது தூரம் சென்ற பிறகு ருத்ராவின் அம்மா கூறிய கோவிலை அடைந்தது.

காரை ஓரமாக நிறுத்தியதும், அனைவரும் இறங்கிக் கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

கோவிலுக்குள் கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. பல பக்தர்கள் சிவபெருமானைத் தரிசித்துவிட்டு மனநிறைவுடன் வெளியேறிக்கொண்டிருந்தனர். இன்னும் சிலரோ, எப்போது தரிசனம் கிடைக்கும் என்று கூட்ட நெரிசலுக்குள் நின்று தவித்துக்கொண்டிருந்தனர்.

அந்தக் கூட்டத்தையும் கோவிலின் ஒவ்வொரு மூலையையும் கவனமாக ஆராய்ந்தபடி, சன்னியாசிகள் யாரேனும் இருக்கிறார்களா என்று அனைவரும் தேடத் தொடங்கினர்.

ஒரு பக்கம் அஜித்தும் முகிலும் தேடிச் சென்றனர். மற்றொரு பக்கம் பரமேஷும் ருத்ராவும் தேடினர். தாரகையும் ரோஷினியும் கோவிலின் மற்ற பகுதிகளைச் சுற்றிப் பார்த்தனர்.

ஆனால், அவர்களால் ஒருவரைக்கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கோவிலைச் சுற்றிப் பலமுறை தேடியும் பலன் கிடைக்காததால், களைத்துப்போன அனைவரும் கடைசியாகக் கோவிலின் ஓரத்தில் ஒன்று கூடி அமர்ந்தனர்.

மகாபலிபுரத்திலிருந்து தொடர்ந்து பயணம் செய்ததாலும், சரியாகத் தூங்காததாலும், தாரகையைத் தவிர மற்ற அனைவரின் முகத்திலும் களைப்பு தெளிவாகத் தெரிந்தது.

“என்னடா, கோவில் முழுசா தேடியாச்சு. ஆனா, இங்க சன்னியாசிகளே இல்லையே? இப்ப என்னடா பண்றது?” என்று பரமேஷிடம் கேட்டான் அஜித்.

சில நொடிகள் யோசித்த பரமேஷ், “அதுதான்டா நானும் யோசிக்கிறேன். பேசாம இங்க ஏதாவது ஹோட்டல்ல இப்போதைக்குத் தங்குவோம். நாளைக்குக் காலையில சீக்கிரமா வந்து மறுபடியும் தேடிப் பார்ப்போம்,” என்றான்.

“நீ சொல்றதுதான் சரின்னு தோணுது டா. நாளைக்குக் காலையில வந்து தேடுவோம்,” என்று அஜித்தும் ஒப்புக்கொண்டான்.

மற்றவர்களும் அதற்குச் சம்மதமாகத் தலையாட்டினர்.

அனைவரும் எழுந்து கோவிலை விட்டு வெளியேறி மீண்டும் காரில் ஏறினர்.

ஆனால், அவர்கள் காரில் ஏறிச் செல்வதை, கோவிலின் மற்றொரு பகுதியில் இருந்து மாணிக்கம் மெல்லிய புன்னகையுடன் கவனித்துக்கொண்டிருந்தார்.

பரமேஷ் காரை இயக்கியதும், கோவிலுக்கு அருகில் ஏதாவது விடுதி இருக்கிறதா என்று அலைபேசியில் தேடினர்.

அவர்களுக்கு ஏற்றவாறு ஒரு விடுதி கிடைக்கவே, அங்கு சென்றனர்.

காவலாளி கார்களை நிறுத்தும் இடத்திற்கான கதவைத் திறந்து வழிவிட, பரமேஷ் காரை உள்ளே செலுத்தி ஓரமாக நிறுத்தினான்.

அனைவரும் காரிலிருந்து இறங்கி விடுதியின் உள்ளே சென்றனர்.

மகாபலிபுரத்தில் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர விடுதியைப் போல ஆடம்பரமாக இல்லாமல், இது சாதாரணமான தோற்றத்தைக் கொண்டிருந்தது. வாசலுக்கு மேலே ‘மகாராஜா பேலஸ்’ என்ற பெயர்ப்பலகை பெரிதாகத் தொங்கிக்கொண்டிருந்தது.

உள்ளே சென்றதும், வரவேற்பறையில் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“எத்தனை ரூம் சார் வேணும்?” என்று இனிமையான குரலில் கேட்டாள்.

பரமேஷ் ருத்ராவையும் தாரகையையும் ஒருமுறை பார்த்துவிட்டுச் சிறிது நேரம் யோசித்தான்.

“மூணு ரூம்,” என்றான்.

அந்தப் பெண் மூன்று அறைகளின் சாவிகளையும் பரமேஷிடம் நீட்டினாள். அவற்றை வாங்கிக்கொண்டவன், அனைவருக்கும் அறைகளைப் பிரித்துக் கொடுத்தான்.

ஒரு அறையில் அஜித்தும் பரமேஷும் தங்கிக்கொள்ள, மற்றொரு அறையை முகிலும் ரோஷினியும் எடுத்துக்கொண்டனர். மீதமிருந்த அறையைத் தாரகையும் ருத்ராவும் எடுத்துக்கொண்டனர்.

அனைவரும் அவரவர் அறைகளுக்குச் சென்றனர்.

சற்று தயக்கத்துடனே அறைக்குள் நுழைந்தாள் ருத்ரா. அவளுக்கு முன்பாகவே உள்ளே சென்றிருந்த தாரகை, மெத்தையில் அமர்ந்திருந்தாள்.

அவளுக்கு அருகில் சென்று அமர்ந்த ருத்ரா, இத்தனை நாட்களாகத் தன் மனதிற்குள் உறுத்திக்கொண்டிருந்த கேள்வியை இறுதியாகக் கேட்டுவிட்டாள்.

“என்னை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?”

அந்தக் கேள்வியைக் கேட்டதும் தாரகையின் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.

“தெரியுமே,” என்றவள், ருத்ராவின் முகத்தை உற்றுநோக்கினாள்.

அந்த ஒரு வார்த்தையைக் கேட்டதும் ருத்ராவின் முகம் பிரகாசித்தது. தன்னைப் பற்றி ஏதாவது கூறுவாள் என்ற ஆவலில் அவளது முகத்தையே எதிர்பார்ப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஆனால், தாரகையின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

“அப்படின்னா, உங்களுக்கு என்னைப் பத்தி தெரியுமா? எனக்கு என்னோட முன் ஜென்மம் பத்தி எதுவுமே தெரியல. உங்களுக்குத் தெரிஞ்சதைச் சொல்லுங்களேன்,” என்று ஆர்வம் தாங்காமல் கேட்டாள் ருத்ரா.

தாரகை சிறிது நேரம் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தாள். பின்னர், “உண்மை தெரிய வேண்டிய நிலை இன்னும் வரவில்லை, ருத்ரா,” என்றாள்.

அந்த வார்த்தை ருத்ராவின் எதிர்பார்ப்பை உடைத்தது. அவளது முகத்தில் ஏமாற்றத்தின் ரேகைகள் படர்ந்தன.

“எப்போ உண்மை தெரிய வேண்டிய நேரம் வரும்? நான் என்னைப் பத்தி எப்ப தெரிஞ்சுக்க ?” என்று ஆதங்கத்துடன் கேட்டாள்.

“கொஞ்சம் பொறுமையா இரு, ருத்ரா. எல்லாத்துக்கும் ஒரு நேரம் இருக்கு,” என்றாள் தாரகை.

அதற்கு மேல் எதுவும் பேச விரும்பாத ருத்ரா, அமைதியாக மெத்தையில் படுத்துக்கொண்டு ஆழ்ந்த யோசனையில் மூழ்கினாள்.

அன்றைய இரவுப் பொழுது முடிந்து, மறுநாள் காலைப் பொழுது விடிந்தது.

அனைவரும் மீண்டும் கோவிலுக்குச் செல்லத் தயாராகிக் காரினுள் ஏறிக்கொண்டனர். இந்த முறை அஜித் ஓட்டுநர் இருக்கையில் அமர, பரமேஷ் அவருக்கு அருகில் அமர்ந்துகொண்டான். பின்னால் நான்கு பெண்களும் அமர்ந்துகொண்டனர்.

அஜித் காரை இயக்கி மெதுவாக ஓட்டினான். சில நிமிடங்களிலேயே கோவிலை வந்தடைந்தனர். அனைவரும் ஒன்றன்பின் ஒருவராக இறங்கினர்.

கோவிலுக்குள் நுழைந்த அவர்கள், முந்தைய நாள் போலவே ஒவ்வொரு பகுதியையும் தேட ஆரம்பித்தனர்.

ஆனால், இம்முறை அவர்களை எதிர்பார்த்துக் கோவிலின் ஓரத்தில் முகத்தில் புன்முறுவலுடன் அமர்ந்திருந்தார் மாணிக்கம்.

தாடி வளர்ந்த முகம், காவி உடை, அமைதியான கண்கள் எனச் சன்னியாசிக்குரிய தோற்றத்துடன் அமர்ந்திருந்த அவரைக் கண்டதும் ருத்ராவின் கால்கள் அப்படியே நின்றுவிட்டன.

அந்த முகத்தை அவளால் மறக்க முடியுமா?

தன் தந்தை மாணிக்கம்தான் அவர் என்பதைப் புரிந்துகொண்டாள் ருத்ரா.

அவளது கண்களில் நீர் துளிர்த்தது. சில அடிகள் முன்னேறியவள், அவரை நெருங்கி நின்றாள்.

“நீங்க ஏன் எங்களை விட்டுட்டு ஓடி வந்தீங்கப்பா?” என்று நா தழுதழுக்கக் கேட்டாள்.

இதுவரை தந்தையின் பாசத்திற்காக ஏங்கித் தவித்தவளுக்கு, இன்று தந்தை தன் கண்முன்னே இருந்தும் அவரை ஓடிச்சென்று கட்டியணைக்க முடியவில்லை. இத்தனை நாட்களாக மனதில் தேக்கி வைத்திருந்த கேள்விகள் அவளைத் தடுத்தன.

“நீங்க செத்துட்டதா நினைச்சுட்டு இருந்தேன் இத்தனை நாளா இப்பதான் நீங்க  எங்களை விட்டுட்டு வந்துட்டீங்கனு தெரியும்…ஏம்பா எங்களை எல்லாம் விட்டுட்டு வந்தேங்க?” என்றவளின் குரல் உடைந்தது.

மாணிக்கம் அமைதியாக அவளைப் பார்த்தார். அவரது முகத்தில் அதே மெல்லிய புன்னகை நிலைத்திருந்தது.

“எல்லாம் அவன் செயல், குழந்தாய்,” என்றார்.

அவரது பதில் ருத்ராவுக்கு எந்த ஆறுதலையும் தரவில்லை. இன்னும் ஏதாவது சொல்வார் என்ற எதிர்பார்ப்புடன் அவரைப் பார்த்தாள்.

ஆனால், மாணிக்கம் அதற்கு மேல் எதுவும் கூறவில்லை.

அப்போது பரமேஷ் தன் கையிலிருந்த ஓலைச்சுவடியை அவரிடம் நீட்டினான்.

“சாமி… இதுக்கு மேல நாங்க எங்க போய் சாவியைத் தேடுறது?” என்று நேரடியாகக் கேட்டான்.

மாணிக்கம் ஓலைச்சுவடியைப் பார்த்தார். பின்னர், பரமேஷின் முகத்தையும் ருத்ராவின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தார்.

சில நொடிகள் அமைதியாக இருந்தவர், “பதில்… உன்னிடமே உள்ளது, குழந்தாய்,” என்றுவிட்டு அங்கிருந்து எழுந்து நடக்கத் தொடங்கினார்.

“சாமி!” என்று மீண்டும் பரமேஷ் அழைத்தும் அவர் திரும்பிப் பார்க்கவில்லை.

அவரது பின்னால் சென்ற அனைவரும் கோவிலுக்கு வெளியே வந்தனர். ஆனால், அதற்குள் மாணிக்கம் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. சில நொடிகளுக்கு முன்பு தங்கள் கண்முன்னே நடந்து சென்றவர், இப்போது காணாமல் போயிருந்தார்.

“என்னடா… இவர்கிட்ட பதில் கிடைக்கும்னு நினைச்சா, ஒண்ணுமே சொல்லாம போறாரு!” என்று எரிச்சலுடன் கூறினான் அஜித்.

“பதிலைச் சொல்லச் சொன்னா ஓவராத்தான் பண்றாரு!” என்று கோபமாகக் கூறினாள் ரோஷினி.

“இப்படிப்பட்டவங்க பாதிப்பேர் ப்ராடாத்தான் இருப்பாங்க, ரோஷினி. அவருக்கு எப்படியோ கிடைச்ச ஓலைச்சுவடியை ருத்ரா அம்மாகிட்ட கொடுத்திருக்காரு. அவருக்கு வேற எதுவும் தெரியாது போல!” என்றாள் முகில்.

அவர்கள் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ருத்ராவுக்குக் கோபம் வந்தது.

“கொஞ்சம் எல்லாரும் பேசுறதை நிறுத்துறீங்களா?” என்று திடீரெனக் கத்தினாள்.

அனைவரும் அமைதியாகினர்.

சில நொடிகள் எதுவும் பேசாமல் நின்ற ருத்ரா, மாணிக்கம் கூறிய வார்த்தைகளை மனதிற்குள் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்த்தாள்.

‘பதில் உன்னிடமே உள்ளது, குழந்தாய்!’

அவரது வார்த்தைகள் அவளது மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்தன.

‘பதில் என்கிட்டேயே இருக்குன்னா… என்ன அர்த்தம்? என்னிடம் இருக்கும் விஷயங்களில் எது அந்தப் பதிலைக் கொடுக்கும்?’ என்று தனக்குத்தானே யோசித்தாள்.

அடுத்த நொடியே அவளது மூளையில் ஒரு மின்னல் வெட்டியது.’ஓலைச்சுவடி! ‘

உடனே தன் அலைபேசியை எடுத்துக் கூகுளில் வேகமாக எதையோ தேட ஆரம்பித்தாள்.

அவள் என்ன தேடுகிறாள் என்று புரியாமல் அனைவரும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

‘அருகில் ஏதேனும் பாலைவனப் பகுதி உள்ளதா?’ என்று தேடியவளுக்கு, அவள் எதிர்பார்த்ததைப் போலவே திரையில் ஓர் இடத்தின் பெயர் தோன்றியது.

அந்தப் பெயரைப் பார்த்ததும் ருத்ராவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

அதைக் கவனித்த பரமேஷ், “என்னாச்சு ருத்ரா? அது என்ன இடம்னு கண்டுபிடிச்சிட்டியா?” என்று ஆர்வத்துடன் கேட்டான்.

ருத்ரா உடனே அனைவரிடமும் அலைபேசித் திரையில் தெரிந்த பெயரைக் காட்டினாள்.

“இங்கிருந்து கொஞ்சம் கிலோமீட்டர் தள்ளி தேரிக்காடுனு ஒரு இடம் இருக்காம். அது பாலைவனத்தை நினைவுபடுத்துற மாதிரி மணல் நிறைஞ்ச பகுதின்னு போட்டிருக்கு!”

அந்த இடத்தின் பெயரை மீண்டும் ஒருமுறை பார்த்தவள், “எனக்குத் தெரிஞ்சு… நம்ம தேடிவந்த சாவி அங்கதான் இருக்கணும்!” என்று உறுதியுடன் கூறினாள்.

“சூப்பர், ருத்ரா!” என்று உற்சாகமாகக் கூறினான் பரமேஷ்.

“ஆனா, அங்க போனதும் சாவி கிடைச்சிடும்னு உறுதியா சொல்ல முடியாது. இருந்தாலும், இதுவரைக்கும் நமக்குக் கிடைச்ச குறிப்புகளோட பொருத்திப் பார்த்தா, அந்த இடத்தைத் தேடிப் பார்க்கிறதுதான் சரியா இருக்கும்,” என்றாள் ருத்ரா.

“அதுவும் சரிதான். இவ்வளவு தூரம் வந்துட்டோம். இனி கிடைக்கிற ஒவ்வொரு குறிப்பையும் விட்டுடக் கூடாது,” என்றான் அஜித்.

அனைவரும் உடனடியாகக் காரினுள் ஏறிக்கொண்டனர். இம்முறை பரமேஷ் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை இயக்கினான்.

அவர்களின் அடுத்த இலக்கான மர்மம் நிறைந்த தேரிக்காட்டை நோக்கிக் கார் புறப்பட்டது.

அங்கே அவர்களுக்காக என்ன காத்திருக்கிறது என்பதை அறியாமல், புதிய நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடர்ந்தனர்.

தொடரும்…

கதை எப்படி இருக்கிறது என்று உங்கள் விமர்சனங்களைக் கூறுங்கள், நண்பர்களே!