இதை எதுக்கு இவ்வளவு நேரம் யோசிச்சேன்? சாட்ஜிபிடி கிட்டேயே மணல் கடன்னா என்னன்னு கேட்டிருக்கலாம் !’ என்று இவ்வளவு நேரம் யோசித்துத்ததை நினைத்துச் சிரித்துக்கொண்டவளின் மனதில் மீண்டும் ஒரு கேள்வி எழுந்தது.
‘சரி, பாலைவனம்னு தெரிஞ்சாச்சு… ஆனா, அந்தப் பாலைவனம் எங்கே இருக்கு?’
மற்றொரு கேள்வியாக, ‘இந்த ஓலைச்சுவடியைப் பற்றிப் பரமேஷ்ட்ட சொல்லவா? வேண்டாமா?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
மனமோ, “இதைக் காட்டு” என்றது; மூளையோ, “வேண்டாம்” என்று சண்டையிட்டது. அதனைப் பற்றிப் பிறகு யோசிக்கலாம் என்று நினைத்தவள், மீண்டும் ஓலைச்சுவடியை எடுத்து அடுத்த பக்கத்தைப் பார்த்தாள். அதில் ஒன்றுமே இல்லை. ஒன்றும் புரியாதவள், அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டினாள். அவற்றிலும் எதுவும் இல்லை. மிகுந்த குழப்பத்துடன் ஓலைச்சுவடியைக் கையில் வைத்துக்கொண்டு ஆழமாகச் சிந்தித்தாள்.
அப்போது, இவள் எதிர்பாராதவிதமாக அறைக்குள் நுழைந்த பரமேஷ், ஓலைச்சுவடியைக் கையில் வைத்துக்கொண்டு எதையோ தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த ருத்ராவைப் பார்த்தபடியே அவளருகில் வந்தான்.
“இது என்ன ஓலைச்சுவடி, ருத்ரா?” என்று பரமேஷின் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டவள், ஓலைச்சுவடியைத் தன் கைகளால் மறைத்தாள்.
“அது வந்து…” என்று முதலில் மழுப்ப முயன்றாள். பின்பு, அவனிடம் இருந்து மறைக்க மனமில்லாமல், ஓலைச்சுவடியைப் பரமேஷின் கையில் கொடுத்தாள்.
அதை வாங்கிப் படிக்கப் படிக்க, பரமேஷின் கண்கள் வியப்பில் விரிந்தன. இதுவரை நடந்த அனைத்தும் அதில் எழுதப்பட்டிருந்தன. ‘மணல் கடல்’ என்று பாலைவனத்தைக் குறிப்பிட்டிருந்ததுடன், அதற்கு மேல் உள்ள பக்கங்கள் அனைத்தும் வெறுமையாக இருந்தன.
“இது எப்படி உனக்குக் கிடைச்சது?” என்று புருவங்களைச் சுருக்கிக்கொண்டு கேட்டான்.
“என் அம்மா கொடுத்தாங்க” என்று எச்சில் விழுங்கியபடி, தன்னைத் தவறாக நினைத்துக்கொள்வானோ என்ற பயத்துடன் கூறினாள்.
சிறிது நேரம் யோசித்த பரமேஷ், “நாம உன் ஊருக்குப் போறோம். அங்கதான் இதுக்கு விடை கிடைக்கும்னு நினைக்கிறேன்” என்றான்.
அவன் கூறுவதும் சரியென்று ருத்ராவிற்குத் தோன்றவே, “ம்…” என்றாள்.
“ருத்ரா கிராமத்துக்கு எதுக்குப் போகணும்?” என்று யோசனையுடன் கேட்டாள்.
அதற்குப் பதிலாகத் தன் கையில் இருந்த ஓலைச்சுவடியைக் காட்டினான் பரமேஷ்.
ஏற்கெனவே வட்டெழுத்துகள், தமிழி எழுத்துகள் எனப் பழங்கால எழுத்து முறைகளை முகில் பயின்றிருந்தாள். ஓலைச்சுவடியை வாங்கிப் படிக்கப் படிக்க, அவளுடைய முகத்தில் அதிர்ச்சி பரவியது. இதுவரை நடந்த அனைத்தும் முன்னரே அதில் குறிப்பிடப்பட்டிருப்பதை நம்ப முடியாமல் திகைத்தாள்.
“இது எப்படி முடியும்? நடக்கப் போறதெல்லாம் முன்னாடியே எழுதியிருக்கே, பரமேஷ்! இது எப்படி உனக்குக் கிடைச்சது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“அதைப் பத்தில்லாம் நான் அப்புறமா சொல்றேன். நீ முதல்ல கிளம்பு. ரோஷினியையும் எழுப்பிவிடு” என்றுவிட்டு, அறையை விட்டு வெளியேறி அஜித் இருக்கும் அறைக்குள் நுழைந்தான்.
மெத்தையில் படுத்துக்கொண்டு தன் அலைபேசியில் இன்ஸ்டாகிராம் வீடியோக்களைத் தள்ளிப் பார்த்துக்கொண்டிருந்தான் அஜித்.
“டேய், ரீல்ஸ் பார்க்க நேரமா இது? கிளம்பு, நாம ருத்ரா கிராமத்துக்குப் போறோம்” என்று பரமேஷ் படபடவென்று பேசினான்.
“ஆனா, டார்லிங்தானே எனக்குப் பிடிச்சிருக்கு!” என்று சிறுபிள்ளையைப் போலச் சிணுங்கியவளைப் பார்த்தவனுக்கு, தான் பார்த்த நாகராணி இவள்தானா என்ற சந்தேகமே எழுந்தது.
இதற்கு மேலும் அவளிடம் வாதாட விரும்பாதவன், “ரெடியாகுங்க, ருத்ரா ஊருக்குப் போறோம்” என்றுவிட்டு, அவளிடமிருந்து தப்பித்தால் போதும் என்று தன் அறைக்குச் சென்றுவிட்டான்.
அனைவரும் தயாராகி ஹோட்டலில் செக் அவுட் செய்துவிட்டு வெளியே வந்தனர். காரில் அனைவரும் ஏறிக்கொள்ள, பரமேஷ் காரை இயக்கினான். அவனுக்கு அருகில் அமர்ந்தான் அஜித்.
“இப்பவாவது சொல்லுடா? ஏன் நாம ருத்ரா ஊருக்குப் போறோம்?” என்று கேட்டான் அஜித்.
ஓலைச்சுவடியில் படித்த அனைத்தையும் கூறிய பரமேஷ், அதனை ருத்ராவின் அம்மாவிடம் கொடுத்தது யார் என்பதைக் கண்டுபிடிக்கப் போவதாகத் தெளிவாகக் கூறி முடித்தான்.
நெடுநேரப் பயணத்திற்குப் பிறகு அனைவரும் ருத்ராவின் கிராமத்தை வந்தடைந்தனர். சரியாக அப்போது மழை பெய்யத் தொடங்க, மண் வாசனை மூக்கைத் துளைத்தது. நெற்பயிர்கள் வழிநெடுக வளர்ந்து உயர்ந்து, பச்சைப் பசேலென்று தங்கள் இருப்பைக் காட்டிக்கொண்டிருந்தன.
அனைத்தையும் ருத்ரா ரசித்தாள் என்றால், அவளைவிட அதிகமாகத் தாரகை ரசித்தாள். இதுவரை நீருக்குள் வாழ்ந்தவள் பல வருடங்கள் கழித்து மீண்டும் இப்போது தான் இயற்கையை ரசிக்கிறாள்.
நேராக ருத்ராவின் வீடு இருக்கும் தெருவிற்கு முன்பாகக் காரை நிறுத்தினான் பரமேஷ். முதலில் அவன் இறங்க, அவனுக்குப் பின்னால் ஒவ்வொருவராக இறங்கினர்.
குறுகிய தெருவில் அனைவரும் நடந்து ருத்ராவின் வீட்டை அடைந்தனர். இப்போதுதான் அனைவரும் ருத்ராவின் வீட்டை முதன்முதலாகப் பார்க்கின்றனர். சிறிய ஓட்டு வீடு, அழகிய திண்ணை, ஆட்டுக்கல், உரல், அம்மி என்று பழங்காலப் பொருட்களுடன் அந்த வீடு காட்சியளித்தது.
வீட்டிற்குள் அனைவரும் நுழைவதைப் பார்த்த கோகிலா, புன்னகையுடன் அவர்களை வரவேற்றாள். அவசரமாகப் பாய் ஒன்றை எடுத்து வந்து அனைவரும் அமர்வதற்கு ஏற்றவாறு விரித்தாள். அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக எதுவும் பேசாமல் அமர்ந்தனர்.
“எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க… என்ன தம்பி, சாப்பிடுறீங்க? காபி குடிக்கிறீங்களா? நான் போடவா?” என்று அக்கறையுடன் கேட்டார்.
“அதெல்லாம் வேண்டாம், மா” என்று மறுத்த பரமேஷ், “நீங்க கொஞ்சம் உட்காருங்க, மா. உங்ககிட்டதான் பேச வந்திருக்கோம்” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
அவன் ஓலைச்சுவடியைப் பற்றித்தான் கேட்க வந்திருக்கிறான் என்பதை முன்பே உணர்ந்த கோகிலா, ருத்ராவைப் பார்த்தாள். தன் தாயிடம் நடந்ததைச் சொல்ல முடியாமல் தலைகவிழ்ந்துகொண்டாள் ருத்ரா.
“சொல்லுங்க, தம்பி” என்றார் கோகிலா.
ஓலைச்சுவடியைப் பையிலிருந்து எடுத்தவன், “இது எப்படி உங்க கைக்கு வந்ததுன்னு சொல்லுங்க, மா?” என்று கேட்டான் பரமேஷ்.
தன் நினைவுகளில் பின்னோக்கிச் சென்றார் கோகிலா.
கிராமத்தில் உள்ள அனைவரும் சொந்தத்தில் மாணிக்கத்தை மாப்பிள்ளையாகப் பார்த்து, கோகிலாவுக்குத் திருமணம் செய்து வைத்தனர். சில மாதங்கள் கோகிலாவின் வாழ்க்கையும் மிக நன்றாக, எந்தக் கவலையும் இல்லாமல் சென்றுகொண்டிருந்தது. திருமணமாகி நான்கு மாதங்கள் கழித்து, தான் கருவுற்றிருப்பதைத் தன் கணவன் மாணிக்கத்திடம் தெரிவித்தாள் கோகிலா.
அதைக் கேட்டதும் சந்தோஷத்தில் தன் மனைவியைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார் மாணிக்கம்.
முதல் பிள்ளையாக அருண் பிறக்க, ஓராண்டு கழித்து இரண்டாவதாக ருத்ரா பிறந்தாள். அவள் பிறந்ததிலிருந்து மாணிக்கத்திடம் பல மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. மெதுவாகக் கோகிலாவை விட்டு விலக ஆரம்பித்தவர், சம்பந்தமில்லாமல் மனைவியிடம் சண்டையிடவும் தொடங்கினார். அடுத்த சில நாட்களிலேயே ஊரைவிட்டு மாயமாக மறைந்துவிட்டார்.
கோகிலாவும் எங்கெங்கோ தேடியும் தன் கணவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. கடைசியில் தன் இரு பிள்ளைகளையும் ஒற்றை ஆளாக வளர்த்தார்.
அருணும் ருத்ராவும் சிறு பிள்ளைகளாக இருந்தபோது, குடும்பமாக ஒருமுறை அனைவரும் சிவன் கோவிலுக்குச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக மாணிக்கத்தைச் சந்தித்தார் கோகிலா.
மாணிக்கம் காவி உடை தரித்து, கழுத்தில் ருத்ராட்சக் கொட்டைகள் தொங்க, சந்நியாசியாகக் காட்சியளித்தார். அவருடைய கோலத்தைக் கண்ட கோகிலாவின் மனம் உடைந்து, கண்களில் கண்ணீர் வழிந்தது.
அவளைப் பார்த்துச் சிரித்த மாணிக்கம், “எல்லாம் அவன் செயல்” என்றவர், கோகிலாவின் கைகளில் ஓலைச்சுவடியைக் கொடுத்தார்.
அதை வாங்கிக்கொண்ட கோகிலா, “இது எதுக்குங்க?” என்று கேட்டாள்.
“உன் பெண்ணிற்கு இருபது வயது நிறைவடையும்போது… பயங்கரமான காட்டிற்குள் செல்வாள். உயிரோட அவள் திரும்பி வந்தாள், இதை அவளிடம் கொடு” என்றார்.
” உங்க பொண்ணு இல்லையா அவ?” என்று கோகிலா கேள்வி கேட்க, அவரை கடந்து சென்றுவிட்டார் மாணிக்கம் .
நடந்த அனைத்தையும் கூறி முடிக்க, அங்கிருந்த அனைவரின் கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தன.
“என்னம்மா சொல்ற? அப்பா காணாமப் போயிட்டாருன்னுதானே சொன்ன! இப்ப என்னன்னா, அவர் சந்நியாசி ஆயிட்டாருன்னு சொல்ற?” என்று அதிர்ச்சியில் கேட்டாள் ருத்ரா.
“நான் சொல்றது உண்மைதான், ருத்ரா. உன் அப்பா சந்நியாசி ஆயிட்டாரு” என்ற கோகிலாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அதனைத் தன் முந்தானையால் துடைத்துக்கொண்டார்.
சில நொடிகள் அதிர்ச்சியில் உறைந்திருந்த ருத்ரா, தன் தாயின் முகத்தைப் பார்த்தாள்.
“அப்போ இத்தனை வருஷமா அவர் உயிரோடதான் இருந்திருக்காரா மா? நம்மளைப் பத்தி ஒருநாள்கூட நினைக்கலையா?” என்று கேட்டவளின் குரலில் அதிர்ச்சியுடன் ஏமாற்றமும் கலந்திருந்தது.
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் கோகிலா அமைதியாக நின்றார். தன் தாயின் வேதனையை உணர்ந்த ருத்ரா, அதற்கு மேல் எதுவும் கேட்காமல் அவரைக் கட்டி அணைத்துக்கொண்டாள்.
நடப்பவை அனைத்தையும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் தாரகை.
கோகிலா பழைய நிலைக்குத் திரும்பியதும், “அவரை எந்தக் கோவில்ல வச்சுப் பார்த்தீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்க, மா?” என்று கேட்டாள் முகில்.
ஒருவேளை அதே கோவிலுக்கு அருகில் அவர் இருக்கலாம் என்ற குருட்டு நம்பிக்கையில் கேட்டாள்.
கோகிலாவும் அந்தக் கோவில் இருக்கும் இடத்தைக் கூற, அனைவரும் வீட்டைவிட்டுக் கிளம்பினர்.
தொடரும்…
படித்துவிட்டு உங்கள் விமர்சனங்களை கூறுங்கள் நண்பர்களே….