திடீரென்று இவர்களுக்கு முன்னால் வந்து வழியை மறைத்துக்கொண்டு நின்றது பிரம்மாண்டமான கருநாகம் ஒன்று.
அது தாரகையைவிடப் பல மடங்கு பெரிதாகத் தோன்றியது. அவர்களை நோக்கிச் சீறிய அந்த நாகத்தைப் பார்த்த மூவரும் அச்சத்தில் பின்வாங்கினார்கள்.
ஆனால், தாரகை மட்டும் அஞ்சாமல் துணிச்சலுடன் நாக உருவம் எடுத்து அதனோடு மோதச் சென்றாள். அவளை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாத கருநாகம், தன் வாலைச் சுழற்றி அவளை ஓங்கியடித்தது. அதில் தாரகைக்குக் காயம் ஏற்பட்டது. அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் சண்டையிடச் சென்றாள். தாரகையைத் தன் வாலால் உடல் முழுவதும் சுருட்டிய கருநாகம், அவளை விசிறியடித்தது. சற்று தள்ளிப்போய் விழுந்தவளின் நெற்றியில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழியத் தொடங்கியது.
அதைக் கண்ட பரமேஷ், கம்பை மீண்டும் திரிசூலமாக்கிக் கருநாகத்தை நோக்கிப் பாய்ந்தான். தன் வாலைச் சுழற்றி அவனையும் தாக்கியது அந்த நாகம். அடுத்த நொடியே சில அடிகள் தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்டுப் பரமேஷ் கீழே விழுந்தான்.
இதுவரை நடந்தவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த ருத்ரா, “பரமேஷ்!” என்று பதறியபடி அவனை நோக்கி ஓடினாள்.
தரையில் விழுந்திருந்த பரமேஷைப் பிடித்து மெதுவாக எழுப்பியவள், தன் தலையைத் தாரகை விழுந்த பக்கம் திருப்பிப் பார்த்தாள். அதிசயிக்கும் வகையில், தாரகையின் காயங்கள் சிறிது சிறிதாக ஆறிக்கொண்டிருந்தன. அதைக் கண்டு சிறிது தெம்படைந்த தாரகை எழுந்து பரமேஷின் அருகில் வந்தாள். சைகையால் எதையோ கூறினாள். அதனைப் புரிந்துகொண்டவன், “சரி” என்று தலையசைத்தான்.
தாரகை மீண்டும் நாக வடிவம் எடுத்தாள். தன் பிரம்மாண்டமான தலையைத் தாழ்த்த, அதன்மீது ஏறிக்கொண்டான் பரமேஷ். அவள் வேகமாக முன்னேற, அவளுடைய முதுகின் மீது நின்றபடி திரிசூலத்தை இறுகப் பிடித்துக்கொண்டு கருநாகத்தின் அசைவுகளை உற்றுக் கவனித்தான்.
இருவரும் ஒன்றிணைந்து தாக்குவதை எதிர்பாராத கருநாகம், தன் வாலைச் சுழற்றி அவர்களை அடிக்க முயன்றது.
அந்தத் தருணத்திற்காகக் காத்திருந்த பரமேஷ், தன் கையில் இருந்த திரிசூலத்தால் அதன் உடலில் ஓங்கிக் குத்தினான். திரிசூலம் குத்தியதால் ஏற்பட்ட வலியில் கருநாகம் மேலும் ஆக்ரோஷமாகச் சீறியது. தாரகை அதனைச் சுற்றி நகர, பரமேஷ் மீண்டும் மீண்டும் திரிசூலத்தால் கருநாகத்தைக் குத்தினான்.
வலியைப் பொறுக்க முடியாமல் கருநாகம் தன் உடலைச் சுருட்டிக்கொண்டது.
அதனைப் பயன்படுத்திக் கருநாகத்தைக் கொல்லும் நோக்கில் திரிசூலத்தை ஓங்கினான் பரமேஷ்.
“வேண்டாம், பரமேஷ்!” என்று திடீரென்று கத்திய ருத்ரா அவனைத் தடுத்து நிறுத்தினாள்.
கருநாகம் வலியில் துடித்துத் தன் உடலைச் சுருட்டிக்கொள்வதைக் கண்ட ருத்ராவின் மனம் ஏனோ கலங்கியது. அது தங்களைத் தாக்கிய எதிரிதான் என்றாலும், அதுவும் ஓர் உயிர்தானே! தன்னைக் காத்துக்கொள்ளப் போராடிய அந்த உயிரைத் தன் கண் முன்னே கொல்வதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
உடனே குத்துவதை நிறுத்திய பரமேஷ், ருத்ராவை நோக்கிப் பார்த்தான். அவளுடைய கண்களில் தெரிந்த இரக்கத்தைப் புரிந்துகொண்டவன், திரிசூலத்தைத் தாழ்த்திவிட்டுத் தாரகையின் மீதிருந்து மெதுவாகக் கீழே இறங்கினான்.
தன்னைத் தாக்குவதை நிறுத்தியதைக் கண்ட கருநாகம், மனித ஆண் உருவத்திற்கு மாறியது.
“என்னைக் கொல்லாமல் விட்டதற்கு நன்றி!” என்று கூறிப் பரமேஷையும் ருத்ராவையும் வணங்கியது.
அவர்கள் இருவரையும் வணங்குவதைக் கண்ட தாரகை அதனை முறைத்துப் பார்த்தாள். உடனே அவளை நோக்கித் தலைவணங்கிய கருநாகம், “நன்றி, ராணி!” என்றது.
அதனை அமைதியாக ஏற்றுக்கொண்ட பரமேஷ், தாங்கள் அந்த ராஜ்யத்திற்குள் நுழைந்ததற்கான காரணத்தைப் பற்றி விரிவாகக் கூறினான்.
அதனைக் கேட்ட கருநாகம், உடனே அருகிலிருந்த சிறிய குகைக்குள் சென்றது. சிறிது நேரத்தில் இரண்டாம் பாகச் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே வந்து ருத்ராவிடம் நீட்டியது.
அதனை மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டவள், “நன்றி!” என்றாள்.
நடந்துகொண்டிருந்த அனைத்தையும் சற்றுத் தூரத்தில் பயத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அஜித்திற்குச் சாவியின் இரண்டாம் பாகத்தைக் கண்டதும் கண்கள் மின்னின.
எல்லாம் முடிந்ததும் அவர்களுடன் வந்து சேர்ந்தான் அஜித். காட்டை விட்டு வெளியேறிய அனைவரும் அந்த ராஜ்யத்தைவிட்டுப் புறப்பட்டனர்.
இதுவரை உள்ளுக்குள் உறுத்திக்கொண்டிருந்த தன் கேள்வியைத் தாரகையிடம் கேட்டாள் ருத்ரா.
“நீங்கதான் போனா உயிரோட திரும்பி வர முடியாதுன்னு என்னென்னவோ சொன்னீங்க… ஆனா, கடைசிவரை அந்த ராஜ்யத்தோட ராஜாவையே பார்க்கலையே!” என்று யோசனையுடன் கேட்டாள்.
அதைக் கேட்டுச் சிரித்த தாரகை, “நீங்க பார்த்த அந்தக் கருநீல நாகம்தான் ராஜா!” என்ற புதிய தகவலைக் கூறினாள்.
தன் எதிரியைத் தோற்கடித்த திருப்தி தாரகையின் மனதில் நிரம்பியிருந்தது. ஆனால், ருத்ராவிற்கோ தங்களைத் தாரகை பயன்படுத்திக்கொண்டாள் என்ற எண்ணமே தோன்றியது.
பரமேஷைப் பொறுத்தவரை, தாரகை அவனைக் காப்பாற்றியதிலிருந்து அவள் அப்படி ஒன்றும் கொடூரமானவள் அல்ல என்ற எண்ணம் உருவாகியிருந்தது.
பரமேஷிற்கும் ருத்ராவிற்கும் இடையிலான நெருக்கம் மேலும் அதிகரித்திருந்தது. இருவரையும் பார்க்கப் பார்க்க ரோஷினிக்குக் கோபம் அதிகமானது.
ஐவருடன் தாரகையும் சேர்ந்து அந்தக் குளத்தைவிட்டு வெளியேறி, மனித உருவில் மீண்டும் சிவன் கோவிலுக்கு வந்தனர்.
கோவிலிலிருந்து எடுத்த திரிசூலத்தை மீண்டும் அதே இடத்தில் வைத்துவிட்டுச் சிவபெருமானை வணங்கினான் பரமேஷ். பின்னர், குகையின் வழியாக நடந்து ஆறு பேரும் வெளியே வந்தனர்.
நிலவு ஒளிவீசிக்கொண்டிருப்பதைப் பார்த்த அனைவரும் மலையிலிருந்து இறங்கித் தங்கும் விடுதியை நோக்கிக் காரில் சென்றனர்.
தாரகைக்குத் தனி அறையைப் பதிவு செய்து கொடுத்தான் பரமேஷ். அனைவரும் தங்கள் அறைகளுக்குச் சென்றுவிட, பரமேஷ் மட்டும் தாரகைக்கு அறையைக் காட்டுவதற்காக அவளுடன் சென்றான்.
அறையைக் காட்டிவிட்டுத் தன் அறைக்குச் செல்லலாம் என்று நினைத்த பரமேஷைத் தன் பக்கம் இழுத்தாள் தாரகை.
அவனைத் தன் மெத்தையில் அமரவைத்தவள், கண்கொட்டாமல் அவனுடைய கண்களைப் பார்த்து ரசிக்கத் தொடங்கினாள். அது தாரகைக்கு இனிமையைக் கொடுத்தாலும், பரமேஷிற்கோ எரிச்சலை ஏற்படுத்தியது. அவளுடைய கைகளை உதறிவிட்டு விறுவிறுவென்று எழுந்தவன், தன் அறைக்குச் சென்றுவிட்டான்.
தாரகையின் கண்கள் ஏமாற்றத்தில் ஆழ்ந்தன.
‘இந்த ஜென்மத்திலாவது நீ எனக்கு வேணும், பரமேஷ்!’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.
மறுபுறம், தாரகையும் பரமேஷும் நெருங்கிப் பழகுவதை நினைத்த ருத்ராவின் உள்ளம் வருத்தத்தில் ஆழ்ந்தது. அதுவும், கருநாகத்திடமிருந்து தன்னால் பரமேஷைக் காப்பாற்ற முடியவில்லை என்ற குற்ற உணர்வு அவளை இன்னும் காயப்படுத்தியது.
அவளுடைய மனமே, ‘தாரகைதான் பரமேஷிற்குப் பொருத்தமானவள்’ என்று விபரீதமாக யோசித்தது.
அறையிலிருந்து வெளிவந்த அஜித், மீண்டும் அந்த நபருக்கு அலைபேசியில் தொடர்புகொண்டு இரண்டாவது பாகம் கிடைத்துவிட்டதைத் தெரிவித்தான்.
அலைபேசியைக் காதிலிருந்து எடுத்துவிட்டுத் திரும்பிய அஜித், அங்கே பரமேஷ் நின்றுகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தான். ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை. குப்பென்று நெற்றியில் வியர்க்கத் தொடங்கியது; இதயம் படபடத்தது.
“என்னடா, இங்கே நின்னுட்டு இருக்க? ரூமுக்குள்ள வா!” என்றான் பரமேஷ்.
‘அப்பாடா! எதையும் கேட்கவில்லை!’ என்று மனதிற்குள் நினைத்துத் திருப்தியடைந்தான் அஜித்.
“வரேன்டா!” என்றவன், பரமேஷுடன் சேர்ந்து அறைக்குள் நுழைந்தான்.
இருவரும் மெத்தையில் சென்று அமர்ந்தனர். அஜித்திற்கு இன்னும் சிறிது படபடப்பாகவே இருந்தது. இருப்பினும், சாவியை அபகரிக்க நினைத்தவன், “அந்தச் சாவிப் பாகங்களையெல்லாம் ஏன்டா அந்தப் பொண்ணுகிட்ட கொடுக்கிற? நீயே வச்சுக்கலாம்ல?” என்றான்.
“அது அவகிட்ட இருக்கிறதுதான்டா சரி” என்ற பரமேஷ், அதற்குமேல் எதுவும் கூறவில்லை.
அவனைக் காதலிக்கக் கூடாது என்று மனதைக் கட்டுப்படுத்த முயன்றாலும், அவளால் அது முடியவில்லை. அவளுடைய மனம் மீண்டும் மீண்டும் அவனையே தேடியது.
அதோடு, தாரகை அவனைப் பார்த்த பார்வையும் அன்று ருத்ராவின் மனதைக் குழப்பியது.
முகிலும் ரோஷினியும் எப்பொழுதும்போல் சீக்கிரமாகத் தூங்கிவிட, மனதில் தெளிவு கிடைக்குமென்று மெல்ல ஓலைச்சுவடியை வெளியே எடுத்தாள் ருத்ரா.
வழக்கம்போல், ஓலைச்சுவடியில் இருப்பதைப் புரிந்துகொள்வதற்காக அதன் புகைப்படத்தை சாட்ஜிபிடியில் பதிவேற்றி உதவி கேட்டாள்.
அதில் இருந்த எழுத்துகளை வாசித்த சாட்ஜிபிடி, “அயலார் நால்வர்தம் அடியொடு வனம் சேர்வாள்; காலம் மறைந்த கோயில் அவள் வருகையால் தோன்றும்” என்று பதிலளித்தது.
அதனைப் படித்துவிட்டு அதன் அர்த்தத்தைச் சிறிது நேரம் யோசித்தாள்.
‘அயலார் நால்வர்’ என்பது பரமேஷ், அஜித், முகில், ரோஷினி ஆகிய நால்வரும் காட்டுக்குச் சென்றதைக் குறிக்கிறது என்றும், ‘காலம் மறைந்த கோயில்’ என்பது அந்தக் கல்லுக்கு அடியில் இருந்த குழிக்குள் அமைந்திருந்த கோவிலைக் குறிக்கிறது என்றும் புரிந்துகொண்டாள்.
அடுத்த ஓலையைப் புரட்டி, அதன் புகைப்படத்தையும் சாட்ஜிபிடியில் பதிவேற்றினாள்.
அதுவும் அதிலிருந்த எழுத்துகளை வாசித்துக் கூறியது.
“அருள் மறைத்த அண்ணல், ஐந்தலை நாக வடிவில் தோன்றும்; அவன் உரைத்த குறியால் ஐந்து திறவின் வழி திறக்கும்.”
இதனைப் படித்ததுமே அவளுக்குச் சரியாகப் புரிந்துவிட்டது. தன் அண்ணன் ஐந்தலை நாகமாக வந்ததையும், ஐந்து பாகச் சாவிகளையும் அந்த வரிகள் குறிக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டவள், அடுத்த ஓலையைப் புரட்டிப் புகைப்படமாக எடுத்து மீண்டும் பதிவேற்றினாள்.
அதிலிருந்த எழுத்துகளை வாசித்த சாட்ஜிபிடி, “குறுமகன் வழி காட்ட, குன்றின் மடி ஏறுவாள்; உயிர் நீங்கா மைந்தன் நிழல் உரைக்கும் மெய்யால் முதற்திறவு கைகூடும்” என்று கூறியது.
இந்த வரிகள் குள்ளன் வழிகாட்டியதையும், அதன் பிறகு முதல் பாகச் சாவி கிடைத்ததையும் குறிக்கின்றன என்று புரிந்துகொண்டாள். அடுத்த பக்கத்தை ஆவலுடன் திருப்பினாள் ருத்ரா.
அதற்குப் பின்பு, அவர்கள் குகைக்குச் சென்று தாரகையைச் சந்தித்தது முதல் இரண்டாம் பாகச் சாவியைப் பெற்றது வரையிலான நிகழ்வுகள் அதில் எழுதப்பட்டிருந்தன.
மூன்றாம் பாகச் சாவியைப் பற்றிய குறிப்பை அறியும் நோக்கில் அடுத்த பக்கத்தை எதிர்பார்ப்புடன் திருப்பினாள். அதையும் புகைப்படமாக எடுத்து சாட்ஜிபிடியில் பதிவேற்றி உதவி கேட்டாள்.
“மணல் கடலின் மையத்தில் மறைந்த மூன்றாம் பாகம் தன்னை வெளிப்படுத்தும்” என்று அதில் எழுதப்பட்டிருப்பதாகக் கூறியது.
‘மணல் கடல்’ என்றதும் யோசிக்கத் தொடங்கினாள் ருத்ரா. வெகுநேரமாக அதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தவள், அப்படியே தூங்கிப்போனாள்.
மறுநாள் காலையில் எழுந்தவளுக்கு, ‘மணல் கடல்’ என்பது பாலைவனத்தைக் குறிக்கிறது என்பது நினைவுக்கு வந்தது. பதிலைக் கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்.
ஆனால், அடுத்த நொடியே அவளுக்குள் இன்னொரு கேள்வி எழுந்தது.
‘இதை எதுக்கு இவ்வளவு நேரம் யோசிச்சேன்? சாட்ஜிபிடி கிட்டேயே மணல் கடன்னா என்னன்னு கேட்டிருக்கலாம்!’ என்று இவ்வளவு நேரம் யோசித்துத்ததை நினைத்துச் சிரித்துக்கொண்டவளின் மனதில் மீண்டும் ஒரு கேள்வி எழுந்தது.
‘சரி, பாலைவனம்னு தெரிஞ்சாச்சு… ஆனா, அந்தப் பாலைவனம் எங்கே இருக்கு?’
தொடரும்…
படித்துவிட்டு உங்கள் விமர்சனங்களை கூறுங்கள் நண்பர்களே 😊😊😊..