அத்தியாயம் 17:

சிவபெருமானை இருகரம் கூப்பி வணங்கிவிட்டு, பின்னரே சுற்றியிருந்தவற்றை உற்று நோக்கினாள். குகை நீண்டு கொண்டே சென்றது. சிவலிங்கத்தைச் சுற்றியிருந்த தூண்களில் உயிர்ப்புடன் செதுக்கப்பட்ட சிங்கச் சிற்பங்கள் கம்பீரமாகக் காட்சியளித்தன.

சுற்றிலும் இருந்த சிற்பங்களைக் கண்டு வியந்த ருத்ரா, கீழே பார்க்க, பரமேஷ் அமர்ந்திருந்த நிலையைக் கண்ட கணம், அறியாமலே அவளின் இதயம் அவனுக்காக வலித்தது. இருப்பினும், அவனை விட்டு விலகி இருப்பதுதான் நல்லது என்று தோன்ற, அந்த இடத்தை விட்டு நகர்ந்து முன்னோக்கிச் சென்றாள்.

மீண்டும் ஆபத்தை உணராமல் செல்பவளைப் பார்த்த பரமேஷின் கண்கள் சிவந்தன. கோபத்தில் எழுந்து அவளின் அருகில் சென்றவன்,

“இப்படிப் போய் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாகத் தெரிந்த. இனி நீ முன்னாடி போக வேண்டாம்!” என்று அவளைப் பின்னால் வரக் கூறிவிட்டு முன்னால் நடந்தான்.

கோவிலை ஒட்டி அமைந்திருந்த பரந்து விரிந்த குளத்தைப் பார்த்த அனைவரின் கண்களும் வியப்பில் விரிந்தன. ‘எப்படி இங்கு இந்தக் குளம் உருவாகியிருக்க முடியும்?’ என்று அனைவரின் மனதிலும் கேள்வி எழுந்தது.

“இதுக்கு மேல போக வழி இல்லை டா… வா, வந்த வழியே திரும்பிப் போகலாம்,” என்றான் அஜித்.

“அஜித் சொல்றதுதான் சரி. வா, பரமேஷ், நம்ம திரும்பிப் போயிடலாம்,” என்றாள் ரோஸினி.

இவர்கள் பேசுவதைக் கவனிக்காமல் குளத்தின் அருகில் சென்ற முகில், அதிலிருந்த நீரைச் சிறிது கைகளில் எடுத்து குடித்துப் பார்த்தாள்.

அவளின் செய்கையைப் பார்த்த அஜித், “என்ன முகில் பண்ற? அது என்ன தண்ணீனே தெரியாம குடிக்காத!” என்றான்.

அதைக் கண்டுகொள்ளாமல் மீண்டும் தன் கைகளால் சிறிது தண்ணீரை எடுத்து பருகியவள்,

“இது நல்ல தண்ணீதான், அஜித். நீ பயப்படுற மாதிரி வேற எதுவும் இல்லை. எனக்குத் தெரிஞ்சு, இங்க மண் அதுவா உருவாக்குன நீரூற்று இதுனு நினைக்கிறேன்,” என்றுவிட்டு அமைதியானாள்.

ருத்ரா முன்னால் வந்து நீரைப் பருக, மற்றவர்களும் ஒவ்வொருவராக நீரைப் பருகினர். அதன் இனிப்புச் சுவை அனைவரையும் கவர்ந்தது. இவர்கள் தண்ணீரின் சுவையில் ஆழ்ந்திருந்தபோது, திடீரென்று நிழல்களைப் போல் அங்கு வந்த நான்கு பேர் அவர்களைச் சுற்றி வளைத்து நின்றனர். என்னவென்று புரியாமல் ஐவரும் திடுக்கிட்டனர்.

தங்களைச் சுற்றி நின்றவர்களை விசித்திரமாகப் பார்த்தனர். அவர்கள் மனித முகமும் பாம்பின் உடலும் ஒன்றிணைந்த விசித்திர உருவம் கொண்டிருந்தனர். தன் அண்ணனை நினைவுபடுத்தும் உருவத்தைக் கண்ட ருத்ரா, பயப்படுவதற்குப் பதிலாக அவர்களிடம் ஏதாவது தகவல் கிடைக்குமோ என்ற எண்ணத்தில் தயக்கத்துடன் அருகில் சென்றாள்.

தங்களைத் தாக்கவே அவள் முன்னேறி வருகிறாள் என்று நினைத்த நாகங்கள், அவளைக் கடிக்கச் சீறின. அதைப் பார்த்த பரமேஷ், ருத்ராவின் கைகளைப் பிடித்து அவளைப் பின்னோக்கி இழுத்தான்.

மீண்டும் நான்கு நாகங்களும் ஒன்றுபோல் சீறிக்கொண்டு வர, சுற்றிலும் ஏதாவது ஆயுதம் கிடைக்குமா என்று தேடியவனின் கண்களில் சிவபெருமானின் திரிசூலம் பட்டது. உடனே அதைப் பிடுங்கி, ஒரு நாகத்தின் முன்பாகத் தற்காப்புக்காக நீட்டினான்.

அவனது கைகளில் திரிசூலத்தைப் பார்த்த நாகங்கள் ஆச்சரியத்துடன் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன. அந்தத் திரிசூலத்தை அவர்களால் எடுக்க முடியாமல் போனதை நினைத்துப் பார்த்தவர்கள், பரமேஷை வியப்புடன் நோக்கினர்.

சற்று அமைதியான நாகங்களுள் ஒன்று, “நீங்கள் யார்? எதற்காக எங்கள் இடத்திற்குள் அத்துமீறி நுழைந்தீர்கள்?” என்று கேள்வி கேட்டது.

“நாங்கள் தெரியாமல் இந்தக் குகைக்குள் நுழைந்துவிட்டோம். மன்னித்து விடுங்கள்,” என்று அவர்களுடன் சண்டையிட்டு வெற்றி கொள்ள முடியாது என்பதை உணர்ந்த பரமேஷ், பணிவாகக் கூறினான்.

“இதுவரை நாங்கள் எத்தனை முறை முயற்சித்தும் எடுக்க முடியாத திரிசூலத்தை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக நீங்கள் சாதாரண மனிதர்களாக இருக்க முடியாது. உண்மையைச் சொல்லுங்கள், யார் நீங்கள்?” என்றது மற்றொரு நாகம்.

இதற்கு மேலும் உண்மையை மறைப்பது ஆபத்து என்று உணர்ந்த பரமேஷ், காட்டிற்குச் சென்றதிலிருந்து இப்போது நடந்தது வரை அனைத்தையும் கூறி முடித்தான்.

அதைக் கேட்ட நாகங்கள் ஆச்சரியத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பின்னர்,

“நீங்கள் எங்களுடன் வரவேண்டும்,” என்ற கோரிக்கையை அனைவரிடமும் வைத்தனர்.

அதைக் கேட்ட ஐவருக்கும் ஒன்றும் புரியவில்லை. இருப்பினும், வேறு வழியில்லாமல் அதற்குச் சம்மதித்துத் தலையசைத்தனர்.

முதலில் ஒரு நாகம் குளத்திற்குள் குதிக்க, அதைத் தொடர்ந்து இன்னொரு நாகமும் குதித்தது.

“இதற்குள் எப்படி நாங்கள் வர முடியும்? எங்களால மூச்சு விட முடியாது,” என்றான் பரமேஷ்.

“அதனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் நீருக்குள் குதியுங்கள்,” என்றது மற்றொரு நாகம்.

வேறு வழியின்றி ஐவரும் ஒருவர் பின் ஒருவராக நீருக்குள் குதித்தனர். அவர்களுக்குப் பின்னால் மீதமிருந்த இரண்டு நாகங்களும் வந்தன.

நீருக்குள் குதித்ததும் மூச்சு முட்டும் என்று எதிர்பார்த்த அனைவருக்கும் வியப்பாக, அவர்களால் இயல்பாகச் சுவாசிக்க முடிந்தது. ஒருவரையொருவர் வியப்புடன் பார்த்துக்கொண்டே நாகங்களைப் பின்தொடர்ந்தனர்.

நீரின் ஆழத்தில் மறைந்திருந்த பிரம்மாண்டமான மாநகரம், கனவுலகைப் போல ஐவரின் கண்களையும் கவர்ந்தது. நகரத்தைச் சுற்றிலும் வாயு போன்றதொரு படலம் படர்ந்திருந்தது. அந்தப் படலத்தைக் கடந்து உள்ளே சென்றதும், தங்களைச் சுற்றிலும் நீர் இல்லாததைக் கண்டு ஐவரும் வியந்தனர். நீருக்கடியில் இருந்தாலும், அந்த நகரம் தனி உலகமாகவே காட்சியளித்தது. பூமியைப் போன்ற தரைத்தளமும் பிரம்மாண்டமான கட்டிடங்களும் அங்கே அமைந்திருந்தன.

‘இதுதான் கதைகளில் சொல்லப்படும் நாகலோகம் போல,’ என்று மனதில் நினைத்துக்கொண்டாள் ருத்ரா.

பெரிய அரண்மனையைப் போன்ற பிரம்மாண்டமான கட்டிடத்தை நோக்கி நான்கு நாகங்களும் அவர்களை அழைத்துச் சென்றன. உள்ளே சென்றதும், அரியணையில் கம்பீரமாகவும் பேரழகுடனும் அமர்ந்திருந்த பெண்ணொருத்தியைக் கண்டனர்.

ஐவரையும் பார்த்துக்கொண்டிருந்தவளின் கண்கள் பரமேஷைக் கண்டதும் மாறின. அவளது முகத்தில் புன்னகை பூத்தது. அதேசமயம், ருத்ராவைப் பார்த்ததும் அவளது கண்களில் கொடூரம் நிறைந்தது.

நாகலோகத்தில் ராஜா இருப்பார் என்று எதிர்பார்த்திருந்த ருத்ரா, இப்படி ஓர் அழகிய பெண்ணை எதிர்பார்க்கவில்லை. பரமேஷைப் பார்த்துப் புன்னகைத்ததையும், தன்னைப் பார்த்ததும் கோபத்தில் அவளது முகம் மாறியதையும் கவனித்தவளுக்கு, ‘ஏதோ நம்மைப் பற்றி இவளுக்குத் தெரிந்திருக்கிறது,’ என்று மனதில் ஊகித்துக்கொண்டாள்.

தன் அரியணையிலிருந்து கம்பீரமாக எழுந்து வந்தாள் நாகராணி தாரகை. மெதுவாகப் பரமேஷின் அருகில் வந்தவள், அவனது முகத்தை உற்று நோக்கினாள். அவளது கண்களில் ஏதோ ஓர் உணர்வு மின்னியது. நீண்ட காலத்திற்குப் பிறகு தொலைத்த ஒன்றைக் கண்டடைந்தவளைப் போல அவளது முகம் மாறியது.

“இவர்தான் சிவபெருமானின் திரிசூலத்தை எடுத்தது, ராணி,” என்று கூறினார் நாகங்களுள் ஒருவர்.

அதைக் கேட்க விரும்பாத தாரகை, தன் கையின் சைகையால் அவர்களைத் தடுத்தாள்.

“போதும்… நீங்கள் செல்லலாம்,” என்றாள்.

அவர்கள் சென்றதும் பரமேஷின் கன்னத்தைப் பிடித்துத் தடவ ஆரம்பித்தாள் தாரகை.

அவளது கண்களின் ஓரத்தில் துளிர்த்த நீரை மறைத்துக்கொண்டு, “உன் பெயர் என்ன?” என்று பரமேஷிடம் கேட்டாள்.

பரமேஷின் உடலின் மீது வேறொரு பெண்ணின் கைகள் படுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ருத்ரா, பல்லைக் கடித்துக்கொண்டு,”பரமேஷ்,” என்றாள்.

அவளைப் பொருட்படுத்தாத தாரகை,

“நா உங்கிட்ட கேள்வி கேட்கலையே, ருத்ரா. நா கேட்டது இங்க,” என்று பரமேஷைக் கைகாட்டினாள்.

தான் கூறாமலேயே தன் பெயர் எப்படி அவளுக்குத் தெரியும் என்று யோசித்தாள் ருத்ரா.

அதைக் கண்டுகொள்ளாத தாரகை, இதழ்களின் ஓரத்தில் புன்னகையுடன், “பரமேஷ்… பரமேஷ்…” என்று மீண்டும் மீண்டும் உச்சரித்தாள். அந்தப் பெயர் அவளுக்கு மேலும் இனிமையைத் தந்தது.

அவளது தொடுதலைச் சகித்துக்கொள்ள முடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டான் பரமேஷ்.

“கையை எடுங்க!” என்றான் அழுத்தமான குரலில்.

அவனது எதிர்ப்பைக் கண்டு தாரகையின் இதழ்களில் புன்னகை விரிந்தது.

“இத்தனை வருஷமாகியும் நீ இன்னும்  மாறவே இல்லை ” என்றாள் மெதுவாக. அவளது வார்த்தைகளைக் கேட்ட பரமேஷ் புரியாமல் விழிக்க, ருத்ராவின் மனதில் இருந்த சந்தேகம் இன்னும் அதிகமானது.

தாரகையின் வார்த்தைகளில் ஏதோ ஓர் பழக்கமான நெருக்கம் தெரிந்தது. ஆனால், அவளுக்கும் பரமேஷுக்கும் இடையே என்ன தொடர்பு இருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் ருத்ரா தவித்தாள்.

“நீங்க எல்லாரும் அந்தச் சாவி தேடித்தானே வந்திருக்கீங்க?” என்று பரமேஷிடம் கேட்டாள் தாரகை.

“ஆமாம்,” என்று தலையசைத்தவனுக்கு, தாரகையின் தொடுதல் பிடிக்கவில்லை என்பதை அவனது முகமே காட்டியது.

“சாவி உங்களுக்கு வேணும்னா… ஒரு நிபந்தனை ?” என்று நிறுத்திவிட்டு அனைவரின் முகங்களையும் பார்த்தாள்.

” என்ன நிபந்தனை னு சொல்லுங்க ” என்றான் பரமேஷ்.

“நீ எனக்கு வேணும்!” என்று வித்தியாசமான நிபந்தனையை முன்வைத்தாள் தாரகை.

இதனைச் சற்றும் எதிர்பாராத பரமேஷ் திகைத்தான் என்றால், ருத்ராவின் மனம் அதைக் கேட்டு இன்னும் திகைப்பில் ஆழ்ந்தது.

அஜித்தின் கண்கள் மட்டும் அவளின் அழகை ரசித்துக்கொண்டிருந்தன. காந்தமாய் கவர்ந்திழுக்கும் கண்களும், கோவாப்பழம் போல் சிவந்த கன்னங்களும் அவளது அழகைக் கூட்டின. அவளது முகத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று தோன்றியது. தேவலோகத்திலிருந்து இறங்கி வந்த மங்கை என்றே அவனுக்குத் தோன்றியது. அவளின் அழகை அஜித் ரசித்துக்கொண்டிருப்பதை உணர்ந்த முகில், அவனை முறைத்தாள். அதில் நிதானமடைந்தவன், உடனே தலையைக் குனிந்துகொண்டான்.

“கண்டிப்பா முடியாது!” என்று தாரகையின் கோரிக்கைக்குப் பதிலளித்தான் பரமேஷ்.

அதைக் கேட்ட தாரகை, மாளிகையே அதிரும்படி சத்தமிட்டுச் சிரித்தாள். இதுவரை தேவதையாகத் தெரிந்தவள், இப்போது அனைவரின் கண்களுக்கும் அரக்கியாகத் தெரிய ஆரம்பித்தாள்.

“அப்படியில்லை என்றால், இதோ நின்றுகொண்டிருக்கிறாளே, அவளை என்னிடம் கொடு!” என்று அடுத்த இடியை இறக்கினாள்.

இதுவரை பொறுமையாக இருந்த பரமேஷின் முகம் இறுகியது. அவனது கண்கள் கோபத்தில் சிவந்தன.

“கண்டிப்பா முடியாது!” என்று மீண்டும் ஆத்திரத்துடன் கத்தினான்.

ருத்ராவைக் கேட்டதும் அவனுள் ஏற்பட்ட மாற்றம் தாரகைக்கு மேலும் எரிச்சலை உண்டாக்கியது. இருப்பினும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் புன்னகைத்தாள்.

“அப்ப உங்களுக்கு இருப்பது ஒரே ஒரு வழிதான்,” என்றுவிட்டு அமைதியானாள்.

இதைத்தவிர வேறு வழி இருக்கிறது என்றதும் பரமேஷின் கண்கள் மின்னின.

“அந்த வழியைச் சொல்லுங்க?” என்றான்.

“அதைச் சொன்னா எனக்கு என்ன கிடைக்கும்?” என்று மீண்டும் புதிர் போட்டாள் தாரகை.

“என்னை, ருத்ராவைத் தவிர வேற எது கேட்டாலும் நான் தரேன்!” என்று அவசரத்தில் கூறிய பரமேஷ், தான் கொடுத்த வாக்குறுதியால் சிக்கிக்கொண்டான்.

‘இதைத்தானே நானும் எதிர்பார்த்தேன்!’ என்று மனதிற்குள் மகிழ்ந்த தாரகை, “உங்க பயணத்துல நானும் கூட வருவேன்!” என்று அடுத்த கோரிக்கையை முன்வைத்தாள்.

முதல் இரண்டு கோரிக்கைகளையும் விட இது என்னவோ பரமேஷுக்கு எளிதாகவே தோன்றியது. அதனால், “சரி,” என்று தலையசைத்து ஒப்புக்கொண்டான்.

“இப்ப சொல்லுங்க, சாவி எங்க இருக்கு?” என்று கேட்டான்.

“அது பக்கத்து ராஜ்யத்துல இருக்கு,” என்றாள் தாரகை.

இதைக் கேட்ட ஐவரின் முகத்திலும் ஏமாற்றம் தெரிந்தது. தாரகை கேட்ட கேள்விகளை வைத்துப் பார்த்தால், அவளிடம்தான் சாவி இருக்கும் என்றும், அதை வாங்கிக்கொண்டு சென்றுவிடலாம் என்றும் நினைத்திருந்தனர். ஆனால், அவள் கூறிய பதிலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

“இங்க வேற ராஜ்யம் கூட இருக்கா?” என்று இதுவரை வாய்திறக்காத முகில் கேட்டாள்.

“ஏன் இல்லை? இங்கேயும் பூமி மாதிரி பல ராஜ்யங்கள் இருக்கு,” என்று பதிலளித்தாள் தாரகை.

“என்னது, பல ராஜ்யமா?!” என்று வாயைப் பிளந்து அதிர்ச்சியுடன் கேட்டாள் ரோஸினி.

“ஆமா,” என்று தலையசைத்தாள் தாரகை.

“சரி, அந்த ராஜ்யம் எங்க இருக்குன்னு சொல்லுங்க. நாங்க அவங்ககிட்ட போய் சாவியை வாங்கிக்கிறோம்,” என்றான் அஜித்.

அதைக் கேட்ட தாரகை வாய்விட்டுச் சிரித்தாள். அவளது சிரிப்பில் மாளிகையே அதிர்ந்தது. அதைக் கேட்ட அனைவரின் மனதிலும் ஒருவிதத் திகில் உண்டானது.

“அவ்வளவு ஈஸியா அந்தச் சாவியை எடுத்திடலாம்னு நினைக்கிறீங்களா?” என்றுவிட்டு, நக்கலாக அனைவரையும் ஒருமுறை பார்த்தாள்.

அவளது கேள்விக்கு யாரிடமிருந்தும் பதில் வரவில்லை. அனைவரிடமும் மௌனம் மட்டுமே நிலவியது.

“நீங்கள் நினைக்கிற மாதிரி அந்த ராஜ்யத்துக்குள்ள நுழைறது அவ்வளவு சுலபம் இல்லை. அப்படியே உள்ளே நுழைஞ்சாலும், நீங்க யாரும் உயிரோட வெளிய வர முடியாது!” என்று மேலும் பயமுறுத்தினாள் தாரகை.

அனைவரின் கண்களிலும் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால், ருத்ராவின் கண்கள் மட்டும் எதற்கும் அசைந்து கொடுக்காமல் இருப்பதைத் தாரகை ஓரக்கண்ணால் கவனித்தாள். மீண்டும் பரமேஷின் அருகில் நெருங்கினாள்.

தாரகையின் செய்கை ருத்ராவுக்குள் மேலும் கோபத்தை உண்டாக்கியது. அவளது கோபத்தைத் தாரகை ரசித்துக்கொண்டிருக்க, பரமேஷ் பேச ஆரம்பித்தான்.

“அந்த ராஜ்யம் எங்க இருக்கு? எப்படிப் போறதுன்னு மட்டும் சொல்லுங்க. மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்,” என்று சற்றுத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கூறினான்.

இதைக் கேட்ட முகில் பதற்றமடைந்தாள்.

“பரமேஷ், இது தேவையில்லாத வேலைன்னு தோணுது. இந்தச் சாவி தேடுற வேலையை விட்டுட்டு வந்த வழியே போயிடலாம்,” என்று உயிர்ப்பயத்துடன் கூறினாள்.

“நான் சாவியைத் தேடிப் போகப்போறேன். யார் என் கூட வரீங்களோ வாங்க!” என்று தன் முடிவைத் தெரிவித்தான் பரமேஷ்.

அவனுக்குக் கிடைக்கப்போகும் புதையல் அஜித்தின் கண்களுக்கு முன்பாக விரிந்தது.

“நானும் உங்கூட வாரேன் டா!” என்றான் உடனே.

“நானும் வாரேன்!” என்று சற்றுக் குரலை உயர்த்திப் பதில் கூறினாள் ருத்ரா.

“நான் இங்கேயே இருக்கேன். நீங்க போயிட்டு வாங்க,” என்று நடுக்கத்துடன் கூறினாள் முகில்.

முகில் அங்கேயே இருக்க முடிவெடுத்ததைக் கேட்ட ரோஸினி, தன் பயத்தை மறைத்துக்கொண்டு முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டாள்.

“நான் முகிலுக்குத் துணைக்கு இங்கேயே இருக்கேன். பாவம், அவ மட்டும் தனியா இங்க எப்படி இருப்பா?” என்று கூறினாள்.

ருத்ராவைப் பார்த்து, அவள் தன்னைவிடத் துணிச்சலானவள் என்று பரமேஷ் நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவே ரோஸினி இப்படிக் கூறினாள்.

“நாங்க மூணு பேரும் அங்க போக ரெடி. எங்க அந்த ராஜ்யம் இருக்கு?” என்று மீண்டும் தாரகையிடம் கேட்டான் பரமேஷ்.

“என் பின்னாடியே வாங்க,” என்றாள் தாரகை.

மூவரையும் அழைத்துக்கொண்டு சாவி இருக்கும் ராஜ்யத்தை நோக்கி நடந்தாள்.

பாதுகாப்பிற்காகத் திரிசூலத்தைக் கையில் ஏந்தியபடி பரமேஷ் தாரகைக்குப் பின்னால் நடக்க, ருத்ராவும் அஜித்தும் அவனைப் பின்தொடர்ந்தனர்.

ருத்ராவின் மனம் தாரகையின் அழகைக் கண்டு சற்று பொறாமை கொள்ளவே செய்தது. அவ்வளவு அழகையும் ஒருசேரக் கொண்டிருந்தாள் தாரகை. அவளது அழகைப் பார்த்தபோது, தன்னையும் அறியாமல் ருத்ரா தன்னை அவளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டாள்.

சிறிது தூரம் நடந்ததும், இரண்டு பெரிய தூண்களைத் தாங்கி நின்ற பிரம்மாண்டமான நுழைவாயில் அவர்களின் கண்களில் பட்டது. அதைக் கண்ட மூவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

அதேநேரம், அவர்களைக் கொன்றுவிடுவது போல நுழைவாயிலில் வீரர்கள் அணிவகுத்து நின்றிருந்தனர். அவர்களின் தோற்றத்தைக் கண்டதும் மூவரின் மனதிலும் சிறிது அச்சம் ஏற்பட்டது.

அதைக் காட்டிய தாரகை, “இதுக்கு மேல என்னால வர முடியாது… உயிரோட திரும்ப வாழ்த்துகள்!” என்று கூறிவிட்டு மறைந்துவிட்டாள்.

அவள் திடீரென மறைந்ததைக் கண்ட மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நினைத்து இதயம் படபடத்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் முன்னேறிச் செல்லத் தொடங்கினான் பரமேஷ்.

அவனைத் தடுத்தாள் ருத்ரா.

“இப்ப ஏன் தடுக்கிற? உனக்கும் பயமா இருந்தா நீ முகில், ரோஸினி கூட இரு,” என்றான் பரமேஷ்.

“நான் தடுத்தது அதுக்காக இல்லை… இப்படித் திரிசூலத்தோட எப்படி உள்ள நுழைய முடியும்? அவங்களை நம்ம தாக்க வந்ததா நினைச்சுட்டா என்ன செய்றது?” என்று கேட்டாள் ருத்ரா.

அவளது கேள்வி பரமேஷை யோசிக்க வைத்தது.

அங்குள்ள மக்கள் அனைவரும் சாதாரண மனிதர்களைப் போலவே நடமாடிக்கொண்டிருந்தனர். கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்துவிட்டால் யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் உள்ளே சென்றுவிடலாம். ஆனால், கையில் இருக்கும் திரிசூலம் அவர்களுக்குப் பிரச்சினையாக அமைய வாய்ப்பிருந்தது. அதேநேரம், திரிசூலம் இல்லாமல் உள்ளே சென்றாலும் ஏதாவது ஆபத்தில் சிக்கிக்கொள்ள நேரிடலாம் என்று அவனது மனம் எச்சரித்தது.

என்ன செய்வதென்று புரியாமல் யோசித்துக்கொண்டிருந்தான் பரமேஷ்.

அப்போது அவனது கைகளில் இருந்த திரிசூலம் லேசாக அதிர்ந்தது.

மூவரும் என்ன நடக்கிறது என்று புரியாமல் அதைப் பார்த்தனர். அடுத்த கணம், அதன் முனையில் இருந்த கூர்மையான பகுதிகள் மறைந்து, அது சாதாரணக் கம்பைப் போல மாறியது.

நடந்ததை நம்ப முடியாமல் மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

‘எல்லாம் நன்மைக்கே!’ என்று நினைத்த பரமேஷ், ருத்ராவைப் பார்த்தான்.

“இப்ப போகலாமா?” என்று கேட்டான்.

“சரி,” என்று அவளும் தலையசைத்தாள்.

வரப்போகும் ஆபத்தைப் பற்றி அறியாமல், மூவரும் நுழைவாயிலுக்குள் நுழைந்தனர்.

தொடரும்…

வாசித்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள், நண்பர்களே! 🤗