மறுபுறம், பெண்கள் அறைக்குள் நுழைந்த அஜித், ருத்ராவின் பையில் எதுவும் இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தான். கதவு திறக்கப்படும் சத்தம் கேட்க, அவசரமாக அவளது பையை மூடிவிட்டு எதுவும் தெரியாததுபோல் திரும்பி நின்றான்.

கதவு திறக்கப்பட, பரமேஷும் ருத்ராவும் அறைக்குள் நுழைந்தனர். அங்கே அஜித் தனியாக நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த பரமேஷ், “என்னடா, இங்க என்ன பண்ற?” என்று கேட்டான்.

சற்று என்ன சொல்வதென்று யோசித்தவன், “முகில் பையில என் சென்ட் பாட்டில் இருந்தது, அதை எடுக்க வந்தேன் டா,” என்று பதில் கூறினான்.

அதைக் கேட்டுப் புன்னகைத்தபடியே தலையசைத்தான் பரமேஷ்.

“நம்ம ரூமுக்குப் போகலாம் வா,” என்று அஜித் அழைக்க, பரமேஷும் அவனுடன் கிளம்பினான். அறையை விட்டு வெளியேறும்போது, ஒற்றைக் கண்ணால் புருவத்தை உயர்த்தி ருத்ராவைப் பார்த்தபடியே சென்றான் பரமேஷ்.

அறையில் தனியாக இருப்பது ருத்ராவிற்குச் சாதகமாகத் தோன்றியது. உடனே, அவளது அம்மா கொடுத்த ஓலைச்சுவடிகளைப் பையிலிருந்து எடுத்து வாசிக்க முயற்சித்தாள். ஆனால், அதில் இருந்த எழுத்துகளை முழுமையாக வாசிக்க முடியவில்லை. சிறிது நாட்களாக வட்டெழுத்துகளைக் கற்றுக்கொண்டு வந்ததால், சில எழுத்துகளின் வடிவங்களை அவளால் அடையாளம் காண முடிந்தது. ஆனாலும், ஓலைச்சுவடியில் இருந்த எழுத்துகளைப் புரிந்துகொண்டு வாசிப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

கூகுளில் வட்டெழுத்துகளின் வடிவங்களைத் தேடிப் பதிவிறக்கம் செய்து, ஓலைச்சுவடியில் இருப்பவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தாள். ஒவ்வொரு எழுத்தாகப் பொருத்திப் பார்த்தவளால், “மு…டி…” என்ற இரண்டு எழுத்துகளை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது.

அதற்கு மேல் என்ன முயற்சி செய்தும் அவளால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நீண்ட நேரமாக எழுத்துகளையே பார்த்துக்கொண்டிருந்ததால் சோர்வடைந்தவள், ‘கிழிஞ்சது கிருஷ்ணகிரி’ என்று மனதிற்குள் அலுத்துக்கொண்டாள்.

அப்போதுதான் சாட்ஜிபிடியின் நினைவு வர, உடனே மொபைலை எடுத்தாள். ஓலைச்சுவடியைப் புகைப்படம் எடுத்து அதைப் பதிவேற்றியவள், ‘இந்த ஓலைச்சுவடியில என்ன எழுதியிருக்கினு வாசிச்சு சொல்லு ’ என்று கேட்டாள்.

சிறிது நேரத்தில் சாட்ஜிபிடியிடமிருந்து பதில் வந்தது.

“முடி துறந்த மங்கை, முடி தாங்கிய நினைவால் மண் வாயில் திறப்பாள்.”

அந்த வரிகளைப் படித்த ருத்ராவின் கண்கள் விரிந்தன.

“முடி துறந்த மங்கை என்றால் ராணிதானே! முடி தாங்கிய நினைவால் மண் வாயில் திறப்பாள் என்றால் என்ன அர்த்தம்? மண் வாயில் என்பது புதையல் இருக்கும் இடத்தைக் குறிக்கிறதா?” என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டாள்.

அதைவிட, அந்த ஓலைச்சுவடியில் தன்னைப் பற்றிய குறிப்பு இருப்பதுபோல் தோன்றியதுதான் அவளுக்குப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

‘இது எப்படி முன்னமே என்னைப் பற்றிக் கூறியிருக்கிறது?’ என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. உடனே ஓலைச்சுவடியை மடித்துத் தன் பைக்குள் மறைத்துவைத்தவள், எதுவும் தெரியாததுபோல் மெத்தையில் அமைதியாகப் படுத்துக்கொண்டாள்.

கதவைத் திறந்துகொண்டு முகிலும் ரோஸினியும் உள்ளே நுழைந்தனர்.

ருத்ராவைப் பார்த்த முகில், “நீயும் எங்க கூடக் குளிக்க வந்திருக்கலாம். எவ்ளோ ஜாலியா இருந்தது தெரியுமா? நீதான் மிஸ் பண்ணிட்ட!” என்றாள்.

அதற்குப் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்த ருத்ராவின் நினைவுகள் பரமேஷுடன் கழித்த நேரத்தை நோக்கிச் சென்றன. அவனுடன் இருந்த அந்த இனிய தருணங்களை நினைத்ததும் அவளது இதழோரத்தில் புன்னகை பூத்தது.

அவளின் புன்னகையைப் பார்த்து உள்ளுக்குள் எரிச்சலடைந்த ரோஸினி, அதை வெளிக்காட்டாமல் முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு, “நீ இந்த ரூம்லேயே தனியா அடைஞ்சு கிடந்தியா, ருத்ரா?” என்று அவள்மீது அக்கறை இருப்பதுபோல் காட்டிக்கொண்டு கேட்டாள்.

“இல்லை, பரமேஷ் கூட இருந்தேன்,” என்று ருத்ரா பதிலளித்தாள்.

அதைக் கேட்டதும் இதுவரை சாந்தமாக இருந்த ரோஸினியின் முகம் கோபத்தில் சிவந்தது. அவளது முகத்தில் தோன்றிய மாற்றத்தை ருத்ரா கவனிக்கவில்லை. அவளுடைய சிந்தனை முழுவதும் அடுத்து ஓலைச்சுவடியில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் படிப்பதிலேயே இருந்தது.

“ஓஓ… அப்ப சரி, ருத்ரா!” என்று முகில் கூறிவிட்டு, மெத்தைக்குச் சென்று களைப்புடன் படுத்தாள். அவளுக்கு அருகில் சென்று ரோஸினியும் படுத்துக்கொண்டாள்.

முகிலின் நினைவுகள் அனைத்தும் நீச்சல் குளத்தில் அஜித்துடன் ஒன்றாக விளையாடிப் பொழுதைப் போக்கியதிலேயே இருந்தன. இதுநாள் வரை தன் காதலை அஜித்திடம் கூறாமல் உள்ளுக்குள்ளேயே தயக்கத்துடன் வைத்திருந்தாள். என்ன இருந்தாலும், முதலில் அஜித்தான் தன்னிடம் காதலைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் இருந்தது. அதுவே இன்றுவரை தன் காதலை வெளிப்படுத்தாமல் இருக்க அவளைத் தடுத்துக்கொண்டிருந்தது.

இங்கு முகில் இப்படியென்றால், அஜித்தோ அதற்கு மேல் கற்பனைக் கடலில் மிதந்துகொண்டிருந்தான். முகிலின் முகம் மட்டுமே அவனது மனக்கண்ணில் மீண்டும் மீண்டும் வந்து சென்றது. தன் காதலைக் கூறினால், ‘உன்னை நண்பனாக மட்டுமே பார்த்தேன்’ என்று அவள் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில், தன் காதலை வெளிப்படுத்தாமல் நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தான்.

அஜித் எதையோ நினைத்துத் தனக்குள் சிரித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த பரமேஷ், “என்னடா, ஒரே சிரிப்பா இருக்கு! ஏதோ சரியில்லையே,” என்று யோசனையுடன் கேட்டான்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல டா,” என்று கூறிச் சமாளித்தான் அஜித்.

“இதுதான்டா வேண்டாங்கிறது! யாருடா அந்தப் பொண்ணு?” என்று முகத்தில் புன்னகையுடன் கேட்டான் பரமேஷ்.

“அப்படியெல்லாம் யாரும் இல்லை டா.”

“டேய், என்கிட்டயே மறைக்கப் பார்த்தியா? யாருன்னு சொல்லுடா!”

“அது வந்து… நம்ம முகில்தான் டா.”

அதைக் கேட்ட பரமேஷின் கண்கள் விரிந்தன.

“என்னடா சொல்ற? நம்ம முகில லவ் பண்றியா நீ?”

“ஆமா டா,” என்று சிறிது வெட்கத்துடன் தலையைக் குனிந்து ஆட்டினான் அஜித்.

“என்னடா, பொண்ணு மாதிரி வெட்கப்படுற?”

இதைக் கேட்ட அஜித் அசடு வழிய, “நீ லவ் பண்ணா உனக்குத் தெரியும் டா,” என்றான்.

இரவுப் பொழுதை ருத்ராவுடன் கழித்த நினைவுகள் கண்முன்னே வர, அதை நினைத்து இதழோரத்தில் பூத்த புன்னகையை மறைத்துக்கொண்டான் பரமேஷ்.

“லவ் பண்றேனா? சொல்ல வேண்டியதுதான்டா! இப்படியே மனசுக்குள்ளேயே வச்சிட்டு இருந்தா, தாடி வளர்த்துட்டுத்தான் அலையணும்,” என்று சிரித்தபடியே கூறினான்.

“அதை நான் பார்த்துக்கிறேன். நீ படு டா!” என்று கோபமாகக் கூறிவிட்டு, பரமேஷுக்குத் தன் முதுகைக் காட்டித் திரும்பிப் படுத்துக்கொண்டான் அஜித்.

மறுபுறம், முகிலும் ரோஸினியும் எப்போது உறங்குவார்கள் என்று காத்திருந்த ருத்ராவுக்கு, ஓலைச்சுவடியை எடுத்து அதில் மீதமுள்ள வரிகளைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

நேரம் மெல்ல நகர்ந்தது. இரவு மணி பதினொன்றைத் தொட, முகிலும் ரோஸினியும் விளையாடிய களைப்பில் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றனர்.

இதுதான் சரியான சமயம் என்று நினைத்த ருத்ரா, மெல்லத் தன் பையிலிருந்து ஓலைச்சுவடியை எடுத்து மீண்டும் சாட்ஜிபிடியிடம் அனுப்பினாள்.

“கொன்ற கரமே குற்றம் தீர்க்கும்; பிரிந்த உயிரே பந்தம் சேர்க்கும்” என்று பதில் கொடுத்தது.

அந்த வரிகளைப் படித்தவளின் மனம் உடனே சம்பன் கூறிய வார்த்தைகளை நினைத்துப் பார்த்தது.

‘அப்படியானால், இந்த ஜென்மத்திலாவது நாங்க ஒன்றாக இணைவோமா?’ என்று மனதிற்குள் நினைத்தாள்.

அவளது நினைவுகள் படகுச் சவாரியின்போதும் கடற்கரை மணலில் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த தருணத்தின்போதும் நடந்த சம்பவங்களை நோக்கிச் சென்றன. பரமேஷுடன் இருந்த அந்த இனிய நினைவுகள் அவளுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தின. ஆனால், அதே நேரத்தில் சம்பன் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வரவே, அந்த மகிழ்ச்சி மெல்லக் குழப்பமாக மாறியது.

அவளது நினைவுகளில் சம்பனின் குரல் மீண்டும் ஒலித்தது.

அந்த ஓவியத்தை எடுத்து நீட்டிய சம்பன், “இவர் என் தந்தை மற்றும் மன்னர்,” என்று பரமேஷின் ஓவியத்தைக் காட்டினான்.

அதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்ற ருத்ராவை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக அடுத்த குண்டை இறக்கினார்.

“உங்களைக் கொன்று என்னிடமிருந்து பிரித்த பாவி இவன்தான்ம்மா! எந்தக் காலத்திலும் இவனை நம்பாதீர்கள்,” என்று எச்சரித்திருந்தான்.

பரமேஷுடன் பழகிய நாட்களில் அவனுடைய நல்ல குணங்களை மட்டுமே ருத்ரா கண்டிருந்தாள். அவளிடம் அவன் நடந்துகொண்ட விதத்திலும் எந்தத் தவறும் இருக்கவில்லை. ஆனால், சம்பன் கூறிய வார்த்தைகளை அவளால் அத்தனை எளிதாகப் புறக்கணிக்க முடியவில்லை.

‘பரமேஷ் அப்படிப்பட்டவனா? அவன் முகத்தில் அப்படியொரு எண்ணம்கூடத் தெரியவில்லையே! ஆனால், சம்பன் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்?’

அவளது மனம் இருவரின் வார்த்தைகளுக்கும் இடையில் சிக்கித் தவித்தது. ஒருபுறம் பரமேஷுடன் பழகிய நாட்கள் அவனை நம்பத் தூண்டின. மறுபுறம் சம்பன் கூறிய எச்சரிக்கை அவனை முழுமையாக நம்பவிடாமல் தடுத்தது.

இனியும் ஓலைச்சுவடியைப் படிக்க மனமில்லாமல் அதை மூடிப் பைக்குள் வைத்தாள். பரமேஷைப் பற்றிய எண்ணங்கள் மனதை ஆக்கிரமித்திருக்க, எப்போது உறங்கினாள் என்றே தெரியாமல் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

மறுபுறம், தன் அறையில் பரமேஷ் உறங்கிவிட்டதை உறுதிசெய்துகொண்ட அஜித், மெல்ல எழுந்து அறையை விட்டு வெளியே வந்தான்.

யாரும் தன்னைப் பார்க்கவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டவன், தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தான்.

தொடரும்…

அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்…படித்துவிட்டு மறக்காமல் உங்கள் விமர்சனங்களை கொடுங்கள் நண்பர்களே …