அத்தியாயம் 10:

பரமேஷ் அவனைத் துரத்த, “தனியா போகாத டா… நாங்களும் வரோம்!” என்று அஜித் அவனின் பின்னால் ஓட, மற்ற மூவரும் அஜித்தைப் பின்தொடர்ந்து ஓடினர். காட்டிற்குள் இருக்கும் ஆபத்து தெரியாமல் அனைவரும் ஓடிக்கொண்டிருந்தனர்.

மாலையில் சூரியன் மெல்ல மறைய ஆரம்பித்திருக்க, முன்னால் ஓடிக்கொண்டிருந்த மனிதன் திடீரென்று ஓரிடத்தில் அசைவற்று நின்றான்.

அதைக் கண்ட நண்பர்களும் ஓடுவதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தனர். இதுவரை ஓடி வந்ததில் அனைவருக்கும் மூச்சு வாங்க, சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டனர்.

பரமேஷ் மட்டும் முன்னால் சென்று அவனைப் பிடிக்க நெருங்கினான். அப்பொழுது, நின்றுகொண்டிருந்த நபர் வித்தியாசமாகத் தலையைத் திருப்பி அனைவரையும் ஒருமுறை பார்த்தான். பின் என்ன நினைத்தானோ, அருகில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் ஓடிச் சென்று குதித்துவிட்டான்.

“தொப்…” என்ற சத்தத்துடன் அவன் உள்ளே குதித்ததையே அனைவரும் கிணற்றுக்குள் உற்றுப் பார்த்தனர். நேரம் கடந்ததே தவிர, அந்த ஆள் மேலே வரவில்லை.

“என்னடா இது? உள்ள குதிச்சவனை வெளிய வரக் காணும்?” என்று யோசனையுடன் பரமேஷிடம் கேட்டாள் முகில்.

அவன் குதித்து இரண்டு நிமிடங்களுக்கு மேல் கடந்திருந்தது.

“அதுதான் எனக்கும் தெரியலை முகில். இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் பார்ப்போம்” என்றான் பரமேஷ்.

அவனின் வார்த்தைகளைக் கேட்ட அனைவரும் சிறிது நேரம் அமைதி காத்தனர்.

சிறிது நேரத்தில், கிணற்றின் இருண்ட நீர்ப்பரப்பில் ஏதோ ஒன்று மெதுவாக மேலே வரத் தொடங்கியது. முதலில் துணியின் ஒரு பகுதி மட்டுமே தெரிந்தது. அடுத்த சில நொடிகளில் அந்த மனிதனின் உடல் முழுவதும் நீரின் மேற்பரப்பில் மிதந்தது.

அதனைப் பார்த்த முகில், “இது எப்படி டா சாத்தியம்? விழுந்து இரண்டு நிமிஷத்துல எப்படி பொணமா மிதக்க முடியும்?” என்று அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயமாக இது இருப்பதால் கேட்டாள்.

“சும்மா நடிக்கிறான்னு நினைக்கிறேன் முகில். இரு, நான் செக் பண்றேன்” என்ற அஜித், அருகில் இருந்த கம்பு ஒன்றை எடுத்துவந்து சற்று அந்த உடலைத் தள்ளினான்.

அதில் எந்தவித அசைவும் தெரியாமல் இருக்க, கம்பை வைத்து மல்லாந்து கிடந்த உடலைத் திருப்பினான். சில நொடிகளுக்கு முன்பு தங்களைக் கடந்து ஓடிய அந்த மனிதனின் முகம் தெரிந்தது. ஆனால், அந்த முகத்தின் சில பாகங்கள் அழுகிய நிலையில் காட்சியளித்தன.

அதைப் பார்த்ததும் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். யாருக்கும் ஒரு வார்த்தைகூட வெளிவரவில்லை. அஜித் கையில் வைத்திருந்த கம்பை அப்படியே கீழே போட்டுவிட்டு, பரமேஷின் அருகில் வந்து நின்றுகொண்டான்.

“இது எப்படி டா? இப்ப குதிச்ச ஆளோட பாடி அதுக்குள்ள அழுக முடியுமா?” என்று அமைதியைக் குலைத்து கேட்டாள் முகில்.

“அதுதான் எனக்கும் புரியலை முகில்” என்ற பரமேஷ், தீவிரமாக யோசிக்கத் தொடங்கினான்.

சுற்றி முற்றிலும் பயத்துடன் அனைவரும் இப்போதுதான் கவனிக்கத் தொடங்கினர். பலரும் இந்தக் கிணற்றின் அருகில் இருக்கும் துர் ஆத்மாக்களைப் பற்றி கூறியது நினைவுக்கு வர, அனைவரின் முகமும் பயத்தில் வியர்த்து வழியத் தொடங்கியது.

சூரியன் மறைந்து, இருள் சூழ ஆரம்பித்திருந்த காட்டுப்பாதையில் வெகுதூரம் ஓடிவந்திருந்தனர். மீண்டும் வெளியில் சென்று பாதையைக் கண்டுபிடிப்பது கடினம்; அதைவிட, அந்தக் கிணற்றைப் பார்க்கப் பார்க்க அனைவரின் உடலும் பயத்தினால் நடுங்க ஆரம்பித்தது.

வானில் பறவைகள் தங்கள் கூட்டை நோக்கிப் புறப்படும் சத்தங்கள் மட்டுமே கேட்க, காடு அமைதியாக இருந்தது.

அருண் கொடுத்த கயிற்றை பரமேஷ் மெதுவாகத் தொட்டுப் பார்த்தான்.

சில நொடிகளுக்கு முன்பு வரை இருந்த நிறம் இப்போது மாறியிருந்தது. கயிறு முழுவதும் மெல்ல சிவப்பு நிறம் பரவிக்கொண்டிருந்தது.

ஆபத்தை உணர்ந்த பரமேஷ், “இங்க இருந்து உடனே போயிடுவோம்… வாங்க” என்று கூற, அனைவரும் காட்டிலிருந்து வெளியேறும் பாதையைத் தேடத் தொடங்கினர்.

அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம், மரத்திற்குப் பின்னால் இருந்து வந்தான் நேற்று இரவில் ருத்ராவைச் சந்தித்த கிட்டன்.

அவனைப் பார்த்ததும் தன் புருவங்களை உயர்த்திப் பார்த்தான் பரமேஷ். மற்ற அனைவரும் என்னவென்றே தெரியாமல் விசித்திரமாக கிட்டனைச் சற்று பயத்துடன் பார்த்தனர்.

ருத்ராவுக்கு அவனைப் பார்த்ததும் தான் கத்தி நினைவுக்கு வந்தது. நீர்வீழ்ச்சிக்கு அருகிலேயே கொண்டு வந்த சிறிய பையை விட்டுவிட்டு ஓடிவந்தது நினைவுக்கு வர, தன்னைத்தானே நொந்துகொண்டாள்.

அதனைப் புரிந்துகொண்ட கிட்டன், மறைத்து வைத்திருந்த சிறிய பையை அவளிடம் எடுத்து நீட்டினான். அது தன் பை என்பதைப் பார்த்ததும் புரிந்துகொண்டவள், வேகமாக  பையை வாங்கி, கத்தி உள்ளே இருக்கிறதா என்று பரிசோதித்தாள்.

கத்தி உள்ளேதான் இருந்தது. அதைப் பார்த்தவளின் மனதில் திருப்தி ஏற்பட, கிட்டனை நோக்கிப் பார்த்தாள்.

“என்னோடு வாருங்கள்” என்று கிட்டன் அழைத்தான்.

இந்த இருட்டில் தெரியாத நபரை நம்பிப் போவது சரியாகப் பரமேஷிற்குத் தோன்றவில்லை.

“எதுவானாலும் நாளைக்குக் காலையில வரோம். இப்ப வரலை” என்று உறுதியாகப் பதில் கூறினான் பரமேஷ்.

“முதல்ல நீ யாரு? உன்னை நம்பி நாங்க ஏன் வரணும்?” என்று முகில் கேட்டாள்.

“என் பெயர் கிட்டன். நான் உங்களை அழைக்கவில்லை. என் முன்னால் இருக்கும் பெண்ணையே அழைக்கிறேன்” என்று அனைவருக்கும் பதில் கூறினான்.

ருத்ராவின் மனதில், கிட்டனைப் பார்த்ததும் நேற்றைய தினத்தைப் போலவே ஏதோ ஓர் இடத்திற்கு தன்னை அழைத்துச் செல்லத்தான் வந்திருக்கிறான் என்பது புரிந்திருந்தது. பரமேஷிற்கும் அது புரிந்திருந்தது. ஆனால், ஆபத்தில் ருத்ராவைத் தவிக்கவிட பரமேஷின் மனம் ஒப்பவில்லை.

கிட்டன் கூறுவதைக் கேட்ட ரோஸினியின் மனம் குதூகலித்தது. எப்படியாவது ருத்ரா தங்களை விட்டு சென்றால் போதும் என்ற நிலைக்கு வந்திருந்தாள் அவள்.

“என்னுடன் வாருங்கள்” என்று மீண்டும் ருத்ராவை அழைத்தான் கிட்டன்.

உடனே அவனுடன் செல்ல தயாரானாள் ருத்ரா. அவளைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொண்டான் பரமேஷ். எவ்வளவு சொன்னாலும் அவள் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டாள் என்பதனை அறிந்தவன், “நானும் உன்கூட வரேன்” என்றான்.

அதனைக் கேட்ட மற்றவர்களும், “நாங்களும் வரோம்” என்று கூற, அனைவரும் கிட்டனின் பின்னால் நடக்கத் தொடங்கினர்.

இருண்ட காட்டிற்குள் தங்களது அலைபேசியின் வெளிச்சத்தில், ஒவ்வொரு செடிகொடிகளையும் விலக்கிவிட்டு அனைவரும் நடக்க ஆரம்பித்தனர்.

பெரிய பாழடைந்த கிணறு இன்னொன்று வர, அதன் படிக்கட்டுகளில் இறங்க ஆரம்பித்தான் கிட்டன். சுற்றிலும் பரவியிருந்த இருளைப் பார்த்துக்கொண்டு, பயத்துடன் மெதுவாகப் படிகளில் காலை வைத்து அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக இறங்கி வந்தனர்.

கிணற்றுச் சுவரில் கம்பி போன்றிருந்த அமைப்பை கிட்டன் பிடித்து இழுக்க, குகை ஒன்று கண்ணுக்கு எட்டியவரை இருட்டாகத் தெரிந்தது. அதற்குள் அனைவரும் நடக்கத் தொடங்கினர்.

சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்ட அஜித், “இந்தப் பாதை எங்க போய் முடியுது?” என்று கேட்டான்.

எந்தப் பதிலும் கிட்டனிடம் இருந்து வரவில்லை.

“கிட்டன்… கிட்டன்!” என்று ருத்ரா அழைத்தாள்.

இப்பொழுதும் எந்தப் பதிலும் இல்லை.

சுற்றிலும் அலைபேசியின் வெளிச்சத்தை முன்னால் செலுத்தி கிட்டனைத் தேடினர். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை சுவர் மட்டுமே நீண்டுகொண்டு சென்றது; அவனைக் காணவில்லை.

“கிட்டன்… கிட்டன்!” என்று அழைத்தான் பரமேஷ்.

மீண்டும் பதில் எதுவும் இல்லை.

இப்போதுதான் முன்னால் போய்க்கொண்டிருந்த கிட்டனைக் காணவில்லை என்றதும், அனைவரது முகமும் பீதியில் உறைந்தது.

“இதுக்குத்தான் யாரையும் நம்பி வரக்கூடாதுன்னு சொல்றது. சொல்லச் சொல்லக் கேட்காம வந்த… இப்ப பார்த்தியா? அவனைக் காணோம்!” என்று பரமேஷ் கோபத்தில் ருத்ராவிடம் கத்தினான்.

இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்த ரோஸினி, “இவளை நம்பி வந்து நம்மளும் இந்தக் குகையில மாட்டிக்கிட்டோம். எல்லாம் உன்னாலதான்” என்று எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றினாள்.

முன்னால் சென்றுகொண்டிருந்த ருத்ரா திரும்பி, “உங்களை யாராவது நான் கூட வாங்கன்னு கூப்பிட்டேனா? நீங்களா வந்ததுக்கு நான் பொறுப்பில்லை” என்று ஆக்ரோஷமாகக் கூற, அனைவரும் அமைதி காத்தனர்.

வேறு வழியில்லாமல் ருத்ரா முன்னால் நடக்க, மற்ற அனைவரும் அந்தக் குகையின் முடிவை நோக்கி நடந்தனர்.

சிறிது தூரம் சென்றதும் வெளிச்சம் தெரிய, அனைவரும் பெருமூச்சொன்றை விட்டபடி, என்ன இடத்திற்கு வந்துள்ளோம் என்று எட்டிப் பார்த்தனர். அது ஒரு பழங்காலக் கட்டிடத்தின் அறை என்பது பார்த்ததும் தெரிந்தது.

சுற்றிலும் எங்கு இருக்கிறோம் என்று புரியாமல் அனைவரும் விழிக்க, “இது ஏதோ பழைய அரண்மனை மாதிரி இருக்கு. அநேகமாக இது அரசரின் அறைன்னு நினைக்கிறேன். அரசர் தப்பிச்சுப் போக இந்த வழியை உருவாக்கியிருக்கலாம்” என்று யோசனையுடன் கூறினாள் ருத்ரா.

அதனைக் கேட்ட மற்றவர்களுக்கு அப்பொழுதுதான் படைவீடு கோட்டை நினைவுக்கு வந்தது. பழங்கால மன்னர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படும் கோட்டை அது!

ஆனால், வெகுதொலைவில் இருந்த அந்த இடத்திற்குள் எப்படி வந்து சேர்ந்தோம் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உருவானது. அதேசமயம், சிறிது பயமும் அவர்களுக்குள் எட்டிப் பார்த்தது.

அறையை விட்டு வெளியே காலை வைத்த ருத்ரா திடீரென்று அப்படியே நின்றாள்.

அவளுக்குப் பின்னால் வந்தவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு நின்றனர். அதில் முகிலின் தலை அஜித்தின் தலையோடு முட்ட, “ஆ…!” என்று அலறியபடி பின்னால் திரும்பி முறைத்தான் அஜித்.

“இங்க பார்க்காம முன்னாடி பாரு டா” என்று கண்களினாலேயே முகில் கூற, திரும்பிப் பார்த்தவன் பேயறைந்தது போல் உறைந்து நின்றான்.

அறையின் இருபுறமும் இருவர் நின்றுகொண்டிருந்தனர். உடலில் பழங்காலக் கவசம். கையில் நீண்ட வேலுடன் நின்றிருந்தனர். அவர்களின் உடைகளே அவர்கள் பழங்காலக் காவலாளர்கள் என்பதனைப் பறைசாற்றிக்கொண்டிருந்தன.

அனைவரும் அசையாமல் நின்று இரு காவலர்களையும் பார்த்துவிட்டு, ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர்.

“இங்க எப்படி காவலாளர்கள் டா? அதுவும் இந்நேரத்தில?” என்று மெதுவாகக் கேட்டாள் முகில்.

“அதுதான் எனக்கும் புரியலை டி” என்றான் அருகில் நின்றிருந்த அஜித்.

“உஷ்…” என்று பரமேஷ் கூற, அந்த இடத்தில் அமைதி நிலவியது.

இதுவரை எல்லாம் அறிவியல்தான் என்று நினைத்த முகிலுக்கே, இரு காவலர்களைப் பார்க்க உள்ளுக்குள் பீதி கிளம்பியது. ஒரு நிமிடம் அவர்கள் உண்மையான காவலர்கள்தானா என்றே தோன்றியது அவளுக்கு. அவர்கள் அணிந்திருந்த பழங்காலக் கவச குண்டலங்களும், கையில் பிடித்திருந்த வேலும், அவர்களை அப்படியே அரசர்கள் காலத்து காவலர்களைப் போலக் காட்சியளிக்கச் செய்தன.

காவலர்களை, அதுவும் ஆவியாகப் பார்த்தால் யாருக்குத்தான் பயம் வராது?

அஜித்தின் கைகளைப் பயத்தில் இறுகப் பிடித்துக்கொண்டாள் முகில்.

“அடியே… கை வலிக்குதுடி, விடுடி” என்று அஜித் கூற, தன் சுயத்திற்கு வந்தவள் இதழோரமாக மெல்லிய புன்னகையைப் படரவிட்டாள்.

அனைவரும் காவலர்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்க, ருத்ரா மட்டும், ‘எப்படி அவர்களைத் தாக்கிவிட்டு வெளியில் செல்வது?’ என்று தீவிரமாக மனதில் யோசித்தாள்.

காவலர்களில் ஒருவன் இவர்கள் பேசிக்கொள்ளும் சத்தத்தைக் கேட்டுவிட்டு, அந்த இடத்தை நோக்கி ஈட்டியுடன் நடக்கத் தொடங்கினான்.

இனி இவர்களின் நிலை என்னவாகும்?

அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம் 🤗 நண்பர்களே…