எபிலாக் 

சில வருடங்களுக்குப் பிறகு – 

“மம்மி…”, இரண்டு வயதை நெருங்கும் குட்டிப் புயல் ஓடி வந்து கீர்த்தியின் மீது மோத, வேகமாக அடுப்பை நிறுத்தியவள், மகனை அள்ளிக்கொண்டாள்.  அடுக்களை வாசலில் சிறு புன்னகையோடு நின்றான் ஜோ.  எப்போதும் குரல் தரவேண்டும். அம்மாவை தீடீரென்று பாய்ந்து பயமுறுத்தக்கூடாது என்பது ஜோ ட்ரெயினிங். அவனுமே அதை கடைப்பிடித்தான். சின்ன விஷயம்தான், அவள் சறுக்கிவிடாமல் இருக்க இது போன்று பல சின்னச் சின்ன விஷயங்கள், வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. 

பிள்ளையிடம் பாசம் வருமோ என்று பயந்ததெல்லாம், ஜோவுடன் ஒரு குழந்தை, ஜோவின் சாயலில் ஒரு குழந்தை என்ற ஆசையில் காணாமல் போய்விட்டது. குழந்தை என்று உறுதி ஆனதும், ஜோவின் மகிழ்வும் பூரிப்பும் பார்க்கும்போதே, கைகள் தானாக அவள் வயிற்றை சுற்றி பாதுகாப்பாக அணைத்துக்கொண்டது.  ஜெயராணி உடன் வந்து தங்கியிருந்தார். சரோஜினியின் காலும், வேணுகோபாலின் உடல் தளர்ச்சியையும் காரணம் காட்டி பிரசவத்திற்குக் கூட ஜோ சரோஜினியிடம் அனுப்பவில்லை. “வேணாம் கீர்த்தி, அவங்க வாய் சும்மா இருக்காது. உன்னை அங்க அனுப்பிட்டு என்னால கவலைப்பட முடியாது”, என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டான். 

மகனை உச்சி முகர்ந்தவள், “விளையாடி முடிச்சாச்சா தங்கம்?, குளிச்சுட்டு சாப்பிடலாமா?”, என்று கேட்டு வாயிலை நோக்கி நகர, “ஹ்ம்ம்… சாப்பிட்டதும் தூங்கிடுவான் அவ்வளவு டயர்ட் ஆக்கி வெச்சிருக்கேன்”, கண்ணடித்த கணவனை பொய்யாக முறைத்தவள், சிரிப்பை மறைத்து அறைக்குள்  நுழைந்தாள். 

சிரித்தபடியே, வரவேற்பறை சோஃபாவில் தண்ணீர் பாட்டிலோடு சரிந்தவன் கைப் பேசி அழைத்தது. 

“அம்மா… எப்படி இருக்கீங்க” 

“நல்லாயிருக்கோம்டா. சர்ச்சுக்கு போயிட்டு வந்தியா?” 

“ஹ்ம்ம்…ஆச்சுமா.” 

“ஜெபாவை கூட்டிட்டு போனியா தம்பி”, அடுத்து இந்தக் கேள்விதான் வரும் என்று தெரிந்து முகத்தை சுளித்தான்.  

“ம்மா… காலையில் ஏழரைக்கு கிளம்பினேன். குழந்தை தூங்கிட்டு இருந்தான். இப்ப போனாலும் அவனுக்கு ஒன்னும் புரியாது. அஞ்சாறு வயசாகட்டும்” 

“ம்க்கும்… ஷீத்தல் அவ பொண்ணை ஆறு மாசத்துலர்ந்தே அழைச்சிட்டு வரா. அதெல்லாம் குழந்தைங்க மனசுல பதியும் ஜோ. இதுக்குத்தான் அவ்வளவு தூரம் பெங்களூர்ல இருக்காதீங்கன்னு சொன்னேன்.” 

“அம்மா…நான் விரும்பின வேலை, இந்த காலேஜ்க்கு இருக்க பேரு, இந்த சம்பளம், நான் செய்யற ரிசர்ச்க்குகான நேரம்…இதெல்லாம் கன்யாகுமரியில இல்லமா. இதெல்லாம் நிறைய வாட்டி பேசிட்டோம். வேற சொல்லுங்க”, என்று பேச்சை மாற்றினான். 

ஸ்டீஃபன், ஷீத்தல் தம்பதிகளுக்கு முதலில் ஒரு மகன் ஆன்டனிராஜ், அடுத்து மகள் ஸ்டெல்லா ஆறு மாதக் குழந்தை.  

“ஸ்டெல்லா ஞானஸ்தானத்துக்கு வந்ததோட சரி. எப்ப தம்பி ஊருக்கு வரப்போறீங்க? ஜெபா கண்ணுக்குள்ள நிக்கறான்.” 

“அப்போ நான் வேணாம். குழந்தையும் கீர்த்தியும் அனுப்பி வெச்சா போறுமா?”, அம்மாவிடம் வம்பு பேசி்னான். 

விஜய் ஜெபராஜ் குளித்து முடித்து, ஈர  உடலை துடைத்துக்கொண்டிருந்த கீர்த்தியிடமிருந்து விடுபட்டு, “அப்பா…” என்று ஓடி வந்தான். 

அவனை மடியில் அமர்த்தி வீடியோ காலுக்கு மாற்றினான் ஜோ. அடுத்த பத்து நிமிடமும் பாட்டியோடு மழலை பேசி, முத்தம் கொடுத்துக்கொண்டே, கீர்த்தி மாட்டிவிட்ட உடையை அணிந்து கொண்டு, உணவை வாங்க ஆரம்பித்தான். மகனிடமும் மருமகளிடமும் ஊருக்கு வந்து செல்லும்படி மீண்டும் கூறிவிட்டு வைத்தார் ஜெயராணி. ஜெபாவிற்கு அவர் விருப்பம்போல ஞானஸ்தானம் செய்ய கீர்த்தி சம்மதித்ததும் ராசியானவர், அவள் பதினோராம் மாதம் வேணுகோபால் ஆசைப்படி திருத்தணியில் மொட்டை போடவும் முறுக்கிக் கொண்டார். பேரனின் முதல் பிறந்த நாள் குமரியில் வைத்துக் கொண்டாடவும் குளிர்ந்தார். இப்படியாக மாற்றி மாற்றி சமாளித்துக்கொண்டிருக்கிறார்கள். 

ஒரு வழியாக குழந்தைக்கு ஊட்டி, அவன் விளையாடிக்கொண்டிருக்கையில் இவர்களும் உணவு உண்டு முடிக்க, கீர்த்தி மகனை தூங்க வைக்க அள்ளிக்கொண்டாள்.  ஜோ பாத்திரங்களை ஒழுங்கு படுத்தி சுத்தம் செய்துவிட்டு உள்ளே வர மகன் உறங்கியிருந்தான். 

கீர்த்தியை நோக்கி ஜோ கைவிரிக்க, அவளே எழுந்து வந்து அவன் அணைப்பில் பொருந்திக்கொண்டாள். “வா அந்த பெட்ரூமுக்கு போலாம்”, கிசுகிசுத்தான். 

அவன் இதழ்களில் ஒரு ஆறுதல் முத்தம் பதித்தவள், “பத்து நிமிஷம் ப்ளீஸ். வீட்டுக்கு பேசிட்டு வந்திடறேன்”, என்றாள். 

ஒழுங்கு காட்டியவன், “டைம் பார்த்துட்டே இருப்பேன். பத்து நிமிஷத்துல போனை பிடுங்கிடுவேன். பேசும் போது நீ எதாவது அப்செட் ஆனா, உடனே நடக்கும்”, எப்போதும்போல எச்சரித்தான். 

அவனிடம் பழிப்பு காட்டி ஹாலுக்கு நடந்தாள். சரோஜினிக்கும் முட்டி மிகவும் மோசமாகிடட, வாக்கர் வைத்துதான் நடக்கிறார். அறுவை சிகிச்சைக்கு மறுத்துவிட்டிருந்தார். வேணுகோபால் கடந்த ஓராண்டாக செய்து கொண்டிருந்த பகுதி வேலையையும் விட்டுவிட்டு வீட்டோடு இருக்கிறார். மேல் வேலைக்கு ஒர் ஆள் வந்து செல்ல, மெஸ்சிலிருந்து உணவு வந்துவிடுகிறது. வீட்டு வாடகையை கீர்த்தி செலுத்துகிறாள். அவர் ரிடையர்மென்ட் பணம், டேனியல் வேண்டாமென்று மறுத்துவிட்ட ஹர்ஷியின் பணம் இரண்டிலிருந்தும் வரும் வட்டி வைத்து அவர்கள் பிழைப்பு ஓடுகிறது.  

“அப்பா, எப்படி இருக்கீங்க?”, என்று ஆரம்பிக்க சம்பிரதாய குசல விசாரிப்புகள் முடிய, சரோஜினி “ஹர்ஷிகிட்ட பேசினேன் கீர்த்தி. ஒரு பாசமாவே பேசலை”, அவரது ஆஸ்தான குற்றப் பத்திரிக்கையை ஆரம்பித்தார். 

“எட்டு வயசு பிள்ளைகிட்ட என்னம்மா எதிர்பார்க்கற? சாப்பிட்டியா, நல்லா படிக்கறியான்னு ஒரே கேள்வியை மாசா மாசம் கேட்டா அவளும்தான் வேற என்ன சொல்லுவா?” 

“எனக்கு பேச தெரியலை. நீதான் பேசறது?” 

“ஜோகிட்ட போன் தரேன். நீயே சொல்லு” 

“இல்லல்ல…  அப்பறம் நான் பேசறதுக்கே தடை சொல்லிடுவாரு”, அவசரமாக மறுக்கவும், கீர்த்தி முகத்தில் புன்னகை. 

“சரி… கால் எப்படி இருக்கு? அந்த புது எண்ணெய் எதாவது பெட்டரா இருக்கா?”, பேச்சை மாற்றினாள். 

அடிக்கடி போன் செய்து குழந்தைக்கு இதை செய்தாயா, அதை செய்தாயா என்று டேனியல் தம்பதிகளை விசாரணை செய்வது ஜோவிற்கு சொல்லப்படவும், துபாயிலிருந்தவன் போன் செய்து ஒரு ஆட்டம் ஆடித் தீர்த்துவிட்டான். ஒரு வருடம் வரையிலும் ஹர்ஷி, டேனியல் குடும்பத்தோடு பேசவே சரோஜினிக்குத் தடை. அவ்வப்போது குழந்தை போட்டோ மட்டும் அனுப்பி வைத்தான். 

மெல்ல மெல்ல தன் புது தாய் தந்தையோடும் உறவுகளோடும் குழந்தை ஒட்டிக்கொள்ள, அவள் இழந்த சிரிப்பை மீட்டெடுத்தார்கள். 

கீர்த்தியிடம் புலம்பினாலும் ஜோவிடம் பயம். மறந்தும் நீ வளர்த்திருக்கலாம் என்று கீர்த்தியிடம் புகார் படிக்கவில்லை. அதற்கும் ஜோ மிரட்டலே காரணம். அவன் குழந்தை பற்றி சொல்லும் தகவல்களை மட்டும் கேட்டுக்கொள்வார். 

பத்து நிமிடம் முடியவும், கட்டிலில் அமர்ந்து அவளை அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்த ஜோ ஹாலுக்கு எழுந்து வரவும், அம்மாவிடம் சொல்லிக்கொண்டு இணைப்பை துண்டித்தாள். 

“அநியாயம் பண்ற ஜோ”, என்று சிரிக்க, அவளை இழுத்துக்கொண்டு இரண்டாவது படுக்கை அறைக்குச் சென்றபடியே, “நீதான் கீத்துமா அநியாயம் பண்ற. அவன் தூங்கறதே ஒரு மணி நேரம்தான். அதுல பத்து நிமிஷம் போச்சு”, என்று கதவடைத்தான். 

“பெத்துக்குடு பெத்துக்குடு…பொட்டப் புள்ளை பெத்துக்குடு”, என்று பாட்டிக்கொண்டே டீ-ஷர்ட்டை கழட்டி வீச, “ஒரு மாசமா இதை ஜெபம் பண்றதுக்கு சாமி பேரை ஜெபம் பண்ணா புண்ணியமாச்சம் கிடைக்கும்”, என்றவளின் இதழை அடைத்தவன், சற்று நேரம் சுவைத்து, “உன் மனசுதான் வேணும், புண்ணியமெல்லாம் வேணாம்”,  என்று எப்போதும்போல் அவன் படுக்கையில் விழுந்து, அவளை தன் மேல் போட்டுக்கொண்டான். 

“ஹ்ம்ம்… நோ”, என்றவள்,  தான் தள்ளிப் படுத்து, “நீ மேல வந்தாதான்”, என்று அழைத்தாள். “அண்ட் சும்மா என் மேல வெயிட் படாத மாதிரியெல்லாம் வேணாம்”, என்றாள் கட்டளை போல். 

“ஷ்… படுத்தாதடி… “, என்று அவளை இழுக்க, “ஜோ… நான் சொல்றேன் தானே. எனக்கு பிடிக்கலைன்னா உடனே சொல்லுவேன். எங்க அதுக்கு முன்னாடியே உனக்கே தெரிஞ்சிடுதே…”, என்று கைகளை விரித்தாள். 

உண்மைதான். இத்தனை வருடங்களில் அவள் அசைவுகள் அவனுக்கு அத்துப்படி. ஏதோ ஒரு நேரம் அவள் சற்று சங்கடப்பட்டாலும் “ஜோ..”என்று அவனை கண்டு, நுகர்ந்து என்று தளர்வாள். உடனே விலகுபவனை விடாது இழுத்துக்கொள்பவள், செயலை தனதாக்கிக்கொள்வாள். 

வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டிருந்தது.  அவ்வப்போது வரும் சிறு குடைச்சல்களை துணையின் துணை கொண்டு கடக்கப் பழகிக்கொண்டார்கள். குழந்தை வளர்ப்போடு சேர்த்து, பி.எச்.டியும் செய்து கொண்டிருக்கிறாள். அடுத்த குழந்தை வேண்டுமென்று ஜோ ஆசைப்பட, சீக்கிரமே பெற்றுக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர்.  

“உன்னை மாதிரி ஒரு குட்டி பொண்ணு வேணும்னு கேட்டா, நீ என் சாயல்ல மகனை பெத்து குடுத்துட்ட. இந்த முறை என் ஆசைக்கு “ என்றவன் தான் இந்த பாட்டை தினமும் பாடிக்கொண்டிருந்தான். 

“எப்பவும் நானே ஹக் பண்ணனுமா? எனக்கும் டைட் மசாஜ் வேணும் ஜோ. நீ வா”, என்று ஒற்றை விரலால் மையலாய் அழைத்தாள் தையலாள். 

“சரி எழுந்து நில்லு”, என ஜோ எழுந்து கொள்ள, 

“ம்ப்ச்… அதில்லை, இப்போ இப்படி…” , அடமாய் படுத்திருந்தாள். 

“ஏன் கீத்துமா? “ 

“அஞ்சு வருஷம் முடியறதுக்குள்ள, எல்லா தடையும் உடைக்கறதா சொல்லியிருந்தேன். அதுல முக்கியமானது இது.  நீ வா”, மீண்டும் அழைத்து கைகள் விரித்தாள். 

மனைவியின் ஒவ்வொறு ஆசையும் பார்த்துப் பார்த்து  நிறைவேற்றுபவன் இதையா நிராகரிப்பான்? அவளது முயற்சிக்கு அடி பட்டாவது உறு துணையாக இருப்பது என்ற வைராக்கியத்தோடு நெருங்க, அவன் காதலும் பரிவும் இவள் வைராக்கியமும் துணைசேர தடையை திறம்படத் தாண்டினாள். ஜோ அவளிடம் சொல்லாத அவன் விருப்பத்தை உணர்ந்திருந்தவள் ஆண்டுகள் சில எடுத்துக்கொண்டாலும், நிறைவேற்றிவிட்டாள். 

முகம் முழுதும் புன்னகையும் பூரிப்புமாக இருந்த மனைவியை ஆசையும் நெகிழ்வுமாக நோக்கியவன், “என் கீத்துமா ..சோ ப்ரேவ்”, என்று நெற்றியில் இதழ் பதித்தான். 

“ஹ்ம்ம்… நீ இருக்கற தைரியம்தான் ஜோ. உனக்குன்னா எதுவும் பண்ண முடியும் என்னால”, என்று பூவாய் சிரித்தாள். 

“நமக்காகன்னு சொல்லு. உன்னை கஷ்டப்படுத்திகிட்டு எதுவும் செய்ய வேணாம்.” 

“அப்போ பொண்ணு வேணாமா? கஷ்ட்டப்படாம எப்படி பெத்துக் குடுப்பேன்?”, புருவம் உயர்த்திக் கேட்டாள். 

“ஓஹ்… இல்லல்ல.. எனக்காக மட்டும்னா வேணாம் கீத்துமா. உனக்கு வேணாம்னா ஜெபா மட்டும் போதும்”, அவசரமாய் பின் வாங்கினான். 

அவன் நெற்றியில் முட்டிச் சிரித்தாள், “ஜோ…. ஹர்ஷி வளர வளர என்னை மாதிரி இருக்கா. அவளை பார்க்கவும், உனக்கு ஆசை. எனக்குத் தெரியும்” 

கண்டுபிடித்துவிட்டாள் என்று தெரிந்து ஜோ, “அப்படில்லாம் …”, மனைவியின் பார்வை பார்த்தவன், “ம்ம்..கொஞ்சம் அப்படித்தான்…. “, என்று கீழ் உதடு கடித்தான். 

“ஹ்ம்ம்… ஹர்ஷி கூடவே இருந்திருந்தா என்னால நம்ம வாழ்க்கையை சந்தோஷமா கொண்டுபோயிருக்க முடியுமான்னு தெரியாது. ஆனா நீ அவ நல்லாயிருக்கான்றதை அக்கறையா பார்த்துகிறது ப்ரீத்திக்காக மட்டும் இல்லை. அவ என்னை மாதிரியே இருக்கான்றதுனாலையும்தான். நமக்கும் ஒரு பொண்ணு இருந்து நானும் அவளும் உனக்காக போட்டி போடணும்னு எனக்கும் கொஞ்சம் ஆசையாத்தான் இருக்கு”, என்ற மனையாளை அள்ளி தன் மீது போட்டுக்கொண்டான் ஜோ. 

“ஹ்ம்ம்… என் பிள்ளை உன்னை மொத்தமா எடுத்துக்கிட்டான். இரு என் பொண்ணு வந்தா ஃபர்ஸ்ட் அவதான். அப்பத்தான் உனக்குத் தெரியும் என் அவஸ்தை!“ அவன் புகாரில்,  மார்பில் முகம் புதைத்துக் குலுங்கிச் சிரிக்கும் மனைவியைக் கண்டு உள்ளம் பூரித்தான் ஜோ. 

அவன் நெருக்கடிகளை, விருப்பங்களை உணர்ந்து நடக்கும் மனைவி. அவள் குணம் அறிந்து, அவள் தேவைகளை, கஷ்டங்களை புரிந்து, பாதுகாத்து, ஆற்றுப்படுத்தி, உற்சாகமூட்டும் கணவன் என்று ஆதர்ச தம்பதிகளாக இருந்தனர். அனுபவித்த துயரமெல்லாம் ஆயுசுக்கும் போதுமென்று நினைத்த இறைவன், இருவருக்கும் அழகான ஒரு வாழ்க்கையை அளித்துவிட்டான். 

முற்றும்