அவன் பேசி முடிக்க ப்ரீத்தி யோசனையானாள். “ஹர்ஷியோட பாதுகாப்புங்கற அளவுலதான் யோசிச்சேனே ஒழிய இந்த விஷயமெல்லாம் நான் நினைக்கலை”, என்றவள் “நல்லவங்களா கிடைச்சா தத்து குடுக்க எனக்கு சம்மதம். நீங்க சொன்ன மாதிரி எட்ட நின்னு பார்த்துக்கணும் அந்த வாக்குறுதி மட்டும் குடுங்க போதும்”, கைக்கூப்பினாள். 

அவன் அம்மாவை சரிகட்டத்தான் இன்னுமே மெனக்கெட வேண்டியிருந்தது. துபாயிலிருந்து திரும்பியதும் கீர்த்தி வளர்க்கலாமே, ஏன் தத்து தரவேண்டும். அவள் ஏன் வேண்டாமெங்கிறாள் என்று குடைந்து குடைந்து கேட்டுக்கொண்டிருந்தார். 

“ம்மா. எங்ககிட்ட வளர்ந்தா, என்னிக்கும் அவ எங்க குழந்தைக்கு அடுத்தபடியாத்தான் இருப்பா. என்னிக்கும் ஹர்ஷிக்கு நாங்க அப்பா அம்மா ஆகிட முடியாது. அப்படி ஒரு ஏக்கத்தோட எதுக்கு குழந்தையை வளர்க்கணும்? பிள்ளை வரம் வேணும்னு காத்திருக்கவங்க வீட்டுக்குப் போனா, அங்க அவதான் இளவரசியா இருப்பா. அவளுக்குன்னு முதன்மையா ஒரு குடும்பம் இருக்கணும். நாங்க ஒரேடியா விலகிடப்போறதில்லை, தள்ளி நின்னு பார்த்துக்கறோம்”, என்றபின் அவன் கூறியதில் இருந்த உண்மையை யோசித்தவர், அவர்கள் சர்ச், பாதிரியார் மூலம் விசாரிக்க ஆரம்பித்தார். 

ஆனால் இறுதியில் ஷீத்தல் பெற்றவர்கள் மூலமாக டேனியல் ஜெசிக்கா தம்பதியர் தெரியவந்தனர். ஜெசிக்காவிற்கு குழந்தை இறந்து பிறக்க அதில் கருப்பையும் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு சென்றது. வேறு மணம், அல்லது டேனியல் உயிரணுவுடன் வேறு கருமுட்டை சேர்ந்து வாடகைத் தாய் மூலம் குழந்தை என்ற எதையுமே வசதியிருந்தும் டேனியல் ஏற்கவில்லை. தத்து எடுத்துக்கொள்கிறோம் என்று அரசு தத்தெடுக்கும் மையம் காராவில் பதிந்துகொண்டார். 

டேனியலுடன் பேசிய ஜோவிற்கு இதுவே ஒரு மரியாதையை தோற்றுவித்தது. ஜெசிக்கா கிண்டர்கார்டன் டீச்சர்,  சிறு குழந்தைகளை கையாளத் தெரிந்தவர் என்பதும் ஏற்புடையதாகவே இருந்தது. ஷீத்தலின் அம்மா வகையில் அவர்கள் சொந்தம் என்றதும் சேர்ந்துகொள்ள, முதல் கட்டமாக ஜெயராணி அவர்கள் பற்றிய விசாரணையை மேற்கொண்டார். ஜெயராணியே வேணுகோபாலுடன் பேசி, அடுத்து ப்ரீத்தி, ஹர்ஷிதாவின் சந்திப்பையும் ஏற்பாடு செய்தார். ஒரு வாரம் போல சென்னையில் இருந்து அவர்களோடு பேசி  குழந்தையோடும் பழகிட, அவர்கள் இந்து இல்லையே என்ற சரோஜினியின் முணுமுணுப்பைத்தாண்டி மற்ற எல்லா வகையிலும் பொருந்திப்போக, ஜோ கீர்த்தி திருமணம் முடிந்த மறுனாள் வக்கீல் அலுவலகத்தில் ஹர்ஷிதா இரகுராமன், ஹர்ஷிதா டேனியலானாள். கீர்த்தியை அந்த நிகழ்விற்கு அழைத்துச் செல்லவில்லை ஜோ. 

“வேணாம் கீர்த்தி. கண்டிப்பா ப்ரீத்தியை, உங்கம்மாவை உன்னால பார்க்க முடியாது. அங்க வெச்சு அந்த நேரம் எதாவது பேசினாலும் பேசிடுவாங்க. உனக்கு எதுவும் தெரிய வேணாம். நான் பார்த்துக்கறேன்”, என்று விட்டுச்சென்றிருந்தான். 

தத்துக் கொடுத்துவிட்டாலும், ப்ரீத்தி, தான் நடமாடிக்கொண்டிருக்கும் வரையிலாவது குழந்தை என்னோடு இருக்கட்டுமே என்று கேட்டுக்கொண்டதில் அவள் நிலையறிந்து டேனியல் தம்பதியர் திரும்பிச் சென்றுவிட்டனர். 

ஜோ திருமணம், வரவேற்பு, ஸ்டீஃபன் ஷீத்தல் திருமணம் எல்லாம் இவர்கள் விடுப்பெடுத்து வந்திருந்த இரு வாரங்களில் நடந்தேற அனைவருமே அதிகம் யோசிக்க நேரமின்றி சுற்றிக்கொண்டிருந்தனர். 

பொங்கல் விடுமுறையில் ஹர்ஷிதாவைப் பார்க்க இருவரும் சென்னையிலிருப்பதாக நேற்றுதான் டேனியல் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவளோடு வண்டலூர் சென்று வந்திருந்தனர். கூடவே, ப்ரீத்தியின் உடல் மேலும் மோசமாகியிருப்பதாகவும், ஹர்ஷிதாவை தங்களோடே அழைத்து செல்லுமாறு கூறியிருப்பதாக சொல்லியிருந்தார். 

திங்கள் வீடு திரும்பியதும் கீர்த்தியிடம் பக்குவமாகச் சொல்ல வேண்டும். இப்போது சென்று பார்த்தால், ப்ரீத்தியின் இறப்பிற்கு போக கண்டிப்பாக விடுமுறை கிடைக்காது. அல்லது ஒரு சனி ஞாயிறு சென்று வரவேண்டும். யோசனைகளோடே உறங்கிப் போனான். 

அபுதாபி சென்று வந்து ஒரு மாதம் முடியும் முன்னரே ப்ரீத்தி இறந்திருந்தாள். செய்தி வந்தபின்  கீர்த்தி கிளம்பிச் சென்றாள். “ப்ரீத்தி இறந்துட்டா அங்க எல்லா வேலையும் பார்க்க நான் இருக்கணும் ஜோ.  அதுக்கு முன்னாடி போய் அப்படி ஒரு கோலத்துல அவளை என்னால பார்க்கமுடியாது. அவளை பார்த்து பார்த்து புழுங்கிட்டு இருக்கற அப்பா அம்மாவையும் பார்க்க முடியாது”, என்று கூறியிருந்தவள், இதோ செய்தி கேட்டதும் புறப்பட்டுவிட்டாள். ஜோ செல்லவில்லை. டெய்லர் மேடம் என்னதான் அவர்கள் சூழ் நிலையை புரிந்துகொண்டாலும், மீண்டும் மீண்டும் விடுப்பெடுப்பது தர்மசங்கடமாகிப் போகும். கீர்த்திக்குமே எண்ணி ஐந்து நாட்கள்தான் கிடைத்தது. சனி ஞாயிறு உட்பட.  

இரகுராமனுக்கு செய்த அனுபவம் இருக்க, ப்ரீத்தியின் இறப்பு சாங்கியங்களை சென்றதும் கையில் எடுத்துக்கொண்டாள். ஹர்ஷிதா டேனியல் ஜெசிக்கா வர சரோஜினி பேத்தியை கட்டிப்பிடித்து அப்படி ஒரு அழுகை. குழந்தையும் பயத்தில் இன்னும் அழ,  

“அம்மா…. அவ பட்ட வேதனையெல்லாம் முடிஞ்சு நிம்மதியா போயிட்டா. அதை நினை. அப்பாவை பாரு”, என்று அதட்டினாள்.  

“அப்பா… அம்மாக்குன்னு இருக்கறது நீங்கதான். போனவளை நினைச்சு நீங்களும் அம்மாவை விட்டுட்டு போயிடாதீங்கப்பா.”, என்று தந்தைக்கும் அறிவுரைத்து அவர்கள் சாய்ந்து கொள்ள தூணாய் நின்றாள்.  

ஐந்தாம் நாள் இவள் கிளம்பும் முன்னரே காலையில் ப்ரீத்தியின் காரியம் முடிந்தது. “ஹர்ஷிதாவை அப்பப்ப தாத்தா பாட்டி கூட பேச வைங்கக்கா. அவ மட்டும்தான் இப்போதைக்கு அவங்களுக்கு ஆறுதல்”, என்று ஜெசிக்காவிடம் கூற, “திருநெல்வேலி வந்து எங்களோட கொஞ்ச நாள் இருக்கச் சொல்லி நாங்களே சொல்லியிருக்கோம் மா. ஹர்ஷி எங்களோட இருந்தாலும், அப்பப்ப அம்மா நினைப்பு வருது. இந்த இரண்டு வாரம் ப்ரீத்திக்கு பேச முடியலை. ப்ரீத்தி அவளுக்கு அனுப்பன வாய்ஸ் மெசேஜ் கேட்டு சமாதானமாகிடுறா. எனக்கே அதை பார்க்க தாளலை. ஹர்ஷியை எப்படி மீட்டு கொண்டு வரதுன்னு கேட்டுக்க ஒரு சைல்ட் சைக்காலஜிஸ்ட் கிட்ட போறோம். என் உயிரா பார்த்துப்பேன் அவளை.  நீ கவலைப் படாத கீர்த்தி”, என்றதும் கீர்த்தியின் கண்கள் கலங்கிவிட்டது. 

கனத்த மனதோடுதான் துபாய் வந்திறங்கினாள் கீர்த்தி.  ஷீத்தலும் ஜோவும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.  

“கீர்த்தி…”, என்று கட்டிக்கொண்டாள் ஷீத்தல். இரவு ஷீத்தலும் உண்டு பேசி விடைபெற ஜோ மடியில் படுத்துக்கொண்டாள் கீர்த்தி. எல்லாவற்றையும் ஒற்றையாளாக சமாளித்து வந்து இதோ அவனிடம் இளைபாறும் மனைவியைக் கண்டு பெருமிதமாக உணர்ந்தான். என்னதான் அவளை அவர்கள் முன்னிருத்தவில்லை என்றாலும், கீர்த்தி அவள் கடமை தவறவில்லை. ஹர்ஷி விஷயத்தில் நான் தப்பு செய்தேனா என்று பலமுறை அவனிடம் கேட்டிருந்தவள், இந்த முறைதான், “கண்டிப்பா என்னால ஜெசிக்கா மாதிரி ஹர்ஷியை பார்த்துக்க முடியாது ஜோ” என்று கூறியிருந்தாள். 

“நமக்குன்னு ஒன்னு வரும்போது தானா வரும் கீர்த்தி”, அவள் பயம் என்ன என்று உணர்ந்து சொல்லவும், அவன் வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டாள். 

“உனக்கு மட்டுமில்லை, உன் குழந்தைக்கு கூட எல்லாம் பழசுதான் ஜோ” 

“என்னது..?” 

“என் கருப்பையிலிருந்து, தாய்ப்பால் வரைக்கும் எதுவும் புதுசில்லைதானே?”, வருத்தமாய் கேட்க, மனம் கசிந்தவன், “கீத்து, உன் காதல் எனக்கும், தாய்ப்பாசம் நம்ம குழந்தைக்கு மட்டும்டா. அதுல யாருக்கும் பங்கில்லை. புரியுதா? இப்படி பாசிடிவ்வா யோசிமா…” 

அதில் புன்னகைத்தவள், “எப்படி ஜோ… ?”, அவள் கன்னம் கிள்ளி கொஞ்சினாள். அதுதான் கீர்த்தி. சட்டென்று தேறிக்கொண்டாள். அதைக் கேட்டால், அவள் சறுக்கும்போது தாங்கிப்பிடிக்க ஜோ இருக்க, அதற்கும் பழகிக்கொண்டதாகக் கூறுவாள். 

மதியம் உணவு  நேரம், ஜோ, கீர்த்தி, ஷீத்தல் வந்து அமர்ந்தார்கள். “என்ன ஷீத்து..கான்ட்ராக்ட் முடிய இன்னும் நாலு மாசம்தான். ஹஸ்பென்ட் பார்க்க வெயிட்டிங்கா?”, வணிகவியல் ஆசிரியர் ஷர்மாஜி கேட்க, 

“ஆமாம் ஷர்மாஜி”, என்று புன்னகைத்து அனுப்பிவிட்டு, “அதுவும் நீங்க பண்ற அலப்பறையைப் பார்த்து இன்னும் கஷ்டாமாயிருக்கு”, என்று எதிரில் இருப்பவர்களைக் கண்டு நொடித்தாள். 

“ஹே… நாங்க என்ன பண்றோம்?“, ஜோ பதற, 

“ம்க்கும்… கீர்த்தி ஊர்ல இருந்த இந்த அஞ்சு நாளும் சோக கீதம் வாசிக்கலை? என்னடா மாசக் கணக்கா ஒருத்தி பிரிஞ்சிருக்காளேங்கற எண்ணமே இல்லாம, கீர்த்தி புராணமா படிச்சீங்களே ஜோஅத்தான்…”, என்று பொய்யாய் அழுக, அதுவரை புன்னகை பூத்திருந்தவள், 

“அத்தான் நொத்தான்னு சொன்ன கொன்னுடுவேன்”, கீர்த்தி உறுமினாள். 

“அப்போ ஜோ மாம்ஸ் ஓகேவா?” 

“உனக்கு கொழுப்பு கூடிப்போச்சு. ஒழுங்கா அண்ணா சொல்லுடி”, கீர்த்தி அதட்ட, 

“அய்ய அத்தை புள்ளை எப்படி அண்ணா முறை வரும்? அப்ப என் புருஷனும் எனக்கு அண்ணனா? அய்யய்ய….இந்த சென்னை மக்களுக்கு எல்லாரும் அண்ணா, அக்கா முறைப்பா”, ஷீத்தல் நொடித்தாள். 

கீர்த்தி முறைக்க அதை கண்டுகொள்ளாதவள், “அப்போ  நான் வேணா இந்த புஷ்பா புருஷன் மாதிரி கீர்த்தி புருஷன்னு கூப்பிடவா?”, என்று பல்லைக் காட்டினாள். 

“வெட்டிருவேன்…” 

“ஏன் ஷீத்தல் அவளை டென்ஷன் பண்ற?”, பொங்கும் சிரிப்பை அடக்கி ஜோதான் இடையிட்டான். 

“நான் ஜோசஃப் சார்னு கூப்பிட்டா எங்க அண்ணன் இன்னும் உனக்கு சாரான்னு உங்க தம்பி திட்டறார். இவங்க மத்தியில நான் படற பாடு இருக்கே…”, என்று நெற்றியை பிடித்துக்கொண்டாள். 

ஷீத்தலில் பாவனையில் கீர்த்தியும் ஜோவுடன் இணைந்து சிரிக்க, தோழியின் மனதை இலகுவாக்கும் தம்பி மனைவியின் மீது ஜோவிற்கு இன்னுமே மரியாதை உண்டானது. 

“ஒன்னு செய்யலாம்…” என்று எழுந்தவள் ஷர்மாவிடம் சென்று எதோ கேட்டுவிட்டு  வந்தாள். 

“ஓகே… இந்த பஞ்சாயத்தை இன்னியோட முடிச்சிக்கலாம்… இனி ஜோசஃப் சாரும் இல்லை, ஜோ அத்தானும் இல்லை, ஜோ மாம்ஸ்ம் கிடையாது… இன்று முதல் ஜீஜு… இந்தியில புருஷனோட அண்ணாவை இப்படித்தான் கூப்பிடுவாங்களாம். நீங்க எனக்கு ஜீஜூ ஓகே ?” 

“கொஞ்சம் ஜூ ஜூன்னு நாயக் கூப்பிடற மாதிரி இருக்கே? என்ன கீர்த்தி?”, ஜோ அவன் பங்குக்கு கலாய்க்க, 

“ஏன் ஜீஜா ஜீ… முழுசா அவசரமா கூப்பிட்டா சீசீசீன்னு சொல்லிடப் போறேன்னு அவர் சுருக்கி சொன்ன ஆப்ஷன் எடுத்துகிட்டு ஜீஜூன்னு சொன்னேன். அதுவும் வேணாமா?”, இம்முறை கவலையாக கேட்க, மீண்டும் ஒரு சிரிப்பலை. 

“நீ கிளம்பிட்டா கண்டிப்பா எங்களுக்கு  போர் அடிக்கப்போகுது ஷீத்தல்”, ஜோ உணர்ந்து கூறினான். 

“பொய்…நான் கிளம்பிட்டா, இரண்டு பேரும் இன்னும் உருகுவீங்க. இங்க கரடியா உட்கார்ந்திருக்கேன் நானு.” 

“உருகிட்டே இருக்க முடியுமா ஷீத்து?”, கீர்த்தி சமாதானம் செய்தாள். 

“உங்கூட? கொஞ்சம் கஷ்டம்தான். ஜீஜூ எதாவது சொல்ல, அதுல தப்பு கண்டுபிடிச்சு சண்டை போடுவ…அவர் சரண்டர் ஆவாரு…”, என்றவள், “இதெல்லாம் நம்ம மாமியார் பார்த்தா என்ன ஃபீல் பண்ணுவாங்கன்னு நினைக்கற கீர்த்தி? “, கன்னம் தட்டி கள்ளச் சிரிப்போடு கேட்டாள் ஷீத்தல். 

ஜோ சிரிக்க,  “ஹ்ம்ம்…அவங்க முன்னாடில்லாம் இப்படி இருக்க மாட்டேன்”, என்று சொல்லும்போதே கீர்த்திக்கும் புன்னகை தொற்றியது. 

“நீ என்ன, வேலைக்கெல்லாம் போகப்போறதில்லை. உங்க கூட வீட்டுல கொஞ்ச மாசம் இருக்கேன் அத்தைன்னு சொன்னியாம்? நிஜமாவா?”, கீர்த்தி வினவ, 

“அதுக்குள்ள உனக்கு சொல்லிட்டாங்களா? ஊருக்கு வந்துட்டு என்ன பிளான்னு கேட்டாங்க. உங்களுக்கு ஒரு பேரக் குழந்தையை பெத்து குடுக்கறதுதான்னு எப்படி சொல்ல? அதுதான், வீட்டுல இருக்கேன்னு சொன்னேன்”, வெட்கமே இல்லாமல் பெருமையாக ஷீத்தல் கூற, மீண்டும் சிரிப்பலை. 

“பாவம் என் தம்பி…”, என்றான் ஜோ. 

“அவரா பாவம்? அப்பாவி லூக்ல இருக்க கேடி!” என்று நொடித்தவள், “இல்ல கீர்த்தி, இத்தனை வருஷம் ஓடி, காசு சேர்த்து, செலவு சமாளிச்சுன்னு லைஃப் திரும்பிப் பார்த்தா வெறும் ஓட்டமாவே இருக்கு. அதுதான் ஒரு வருஷம் பிரேக் எடுக்கணும்னு ஆசை. ஸ்டீஃபனுக்கும் அதுல சந்தோஷம்தான். எங்க வீட்டுலேயும் தம்பி இப்ப வேலைக்கு போறான். அப்பா விவசாயம் பார்க்கறது, அவங்க செலவுக்கு போதும். உங்களை மாதிரி வேலையில சாதிக்கணும்னு எனக்கு இல்லை. தேவைக்காகத்தான் வேலைக்கு வந்தேன். அதுதான்..”, தோளை குலுக்கினாள். 

எளிமையான அவள் எண்ணங்கள் பார்த்து கீர்த்திக்குமே புன்னகை. “அப்ப சரி. ஊருக்கு போனதும் டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரமே நல்ல செய்தி சொல்லு”, என்று தட்டிக் கொடுத்தாள். 

“நீங்க எப்ப குழித்துறைக்கு வந்து செட்டிலாவீங்க?இரண்டு வருஷம்னு சொன்னார் உங்க தம்பி?” 

“இந்தியா வந்தாலும் குழித்துறை டவுட் மா. அங்க வந்தா காலேஜ் லெக்சரரா சேரத்தான் இஷ்டம். சில ஐடியாஸ் இருக்கு. பார்க்கலாம். நீ அம்மாகிட்ட எதுவும் சொல்லிக்காதே.“  

“ஓ..”, என்று நிதானித்தவள், “அப்போ ஒரே வீட்டில இருந்து நாம ஒரகத்தி சண்டையெல்லாம் போட மாட்டமா கீர்த்தி? “, என்று நிஜமான வருத்தத்துடன் கேட்டாள். 

அதில் புன்னகைத்த கீர்த்தி, “பண்டிகை விசேஷம்னு வரும்போது போட்டா போச்சு. ஆனா …”, தோளை குலுக்கினாள். 

“ஆக எங்கிட்ட பொறுப்பை தள்ளிவிட்டுட்டு நீ ஜாலியா தனிக்குடித்தனம் இருக்கப் போற… ஹ்ம்ம்…  நடக்கட்டும். நமக்கெல்லாம் தனியா இருந்தா போர் அடிச்சிடும். இங்க இருந்ததே நீ இருக்கற தைரியத்துலதான். சோ எனக்கொண்ணும் பிரச்சனையில்லை”, ஷீத்தல் இலகுவாகக் கூற, ஜோ கீர்த்தி இருவர் முகத்திலுமே நிம்மதியின் சாயல். 

“அம்மாவை அப்பப்ப நாங்க கூட்டிட்டு வந்துக்கறோம் ஷீத்தல். உங்களுக்கும் ப்ரேக் வேணும்”, ஜோ சொல்ல, “அதெல்லாம் பார்த்துக்கலாம் ஜோ..ஜீஜூ”, என்று பெயரில் தடுமாற, ஜோ கீர்த்தி இருவர் முகத்திலும் புன்னகை. 

“எதுக்கு கஷ்டப்படற? அவங்க அம்மா ஜோவை தம்பின்னு சொன்னா, அவங்க அக்கா ஆயிடுவாங்களா? அண்ணான்னு சொன்னாதான் என்ன? அவ்வளவு வீம்பு”, ஷீத்தலிடம்  கீர்த்தி மல்லுகட்ட, ஜோ முகத்தில் நிறைவு.  

காலேஜ் நாட்களின் கீர்த்தி இப்போதெல்லாம் அடிக்கடி வெளி வருகிறாள். அவர்களின் தனிமை நேரங்கள் இன்னும் இனிமை ஆக ஆக, இருக்கும் கொஞ்ச நஞ்ச இறுக்கங்களும் பறந்துவிடும் என்று உறுதியாக தோன்றியது. கீர்த்தி ஐந்து வருடக் கனவாகக் கூறிய, அவர்களுக்கான ஒரு தனிக் கூடு. அதில் அவனுடன் அவர்களுக்கான ஒரு மழலை கண்டிப்பாக வசப்படும்.