உள்ளே சரோஜினியும் , ப்ரீத்தியும் மட்டுமே இருந்தனர்.  சுற்று முற்றும் பார்த்தவன், “ஹர்ஷிதா எங்க?” என்ற கேள்வியில், 

“அது, ப்ரீத்தி வாந்தி எடுக்க, குழந்தை பயப்படப் போறான்னு எதிர்க்க இருந்த ஒரு பாட்டிமா, அவங்க ரூமுக்கு கூட்டிட்டு போனாங்க தம்பி. கீர்த்தி வீட்டுல வெச்சிருந்திருக்கலாம்…”, குறையாக சரோஜினி ஆரம்பிக்கவும், 

“நாளைக்கு கிளம்பப்போறவளை எதிர்பார்க்காதீங்க ஆன்ட்டி.  அதுக்கப்பறம் நீங்கதான பார்த்தாகணும்? துணைக்கு வேற ரிலேஷன் யாரும் வரவெச்சிக்கலையா?”, என்று அவர் கவனத்தை தன்புறமே திருப்பினான். 

“எனக்கு இப்பவே இது எல்லாருக்கும் தெரிய வரதுல விருப்பமில்லைங்க. அதுதான்…” பதில் ப்ரீத்தியிடமிருந்து வந்தது. 

“வயசானவங்க சமாளிக்கணுமே? உறவுக்காரங்க இல்லைன்னா உங்க ஃப்ரெண்டு யாராவது வர சொல்லலாமே? எல்லா பாரத்தையும் குடும்பத்துல இருக்கவங்களே உங்களுக்காக எல்லா நேரமும் சுமக்க முடியுமாங்க?” 

“…” 

ப்ரீத்தி எந்த பதிலும் சொல்லாது அமைதியாக இருக்கவும், “சரி, அது உங்க விருப்பம். நான் திடீர்னு கிளம்பி வந்தது,  எங்க சம்மந்தப்பட்ட சில விஷயங்களை பேசி தெளிவுபடுத்திடணும்னுதான்”, பார்வை வட்டத்துள் ப்ரீத்தியும் சரோஜினியையும் கொண்டுவந்தான். 

“நேத்து நீங்க குழந்தை பத்தின உங்க எதிர்பார்ப்பை சொன்னீங்கன்னு கீர்த்தி சொன்னா…”, என்று நிறுத்தினான். இருவருமே அவன் முகத்தைத்தான் பார்த்திருந்தனர். அவள் நேற்று சொன்னதும், இப்படி காலையில் வந்து நிற்பவனைக் கண்டு சற்று மிரட்சிதான். ஏன் அவனிடம் சொன்னாய் என்றும் கேட்க முடியாது. அவர்களோடு ஹர்ஷி வளர அவனும் சம்மதிக்க வேண்டுமே. 

“உங்க நிலைமையில இப்ப இதை பேசறது கஷ்டமா இருந்தாலும், நான் உடைச்சே பேசறேனே? ஏற்கனவே கீர்த்தி மண்டையை கழுவி குழந்தையை பெத்துக்க வெச்சீங்க. உங்களுக்கு வேணான்னு இருந்தா திருப்பி குடுக்க அவ என்ன அமெசான் ஆர்டரா? கீர்த்தி இல்லாம வேற வாடகை தாய் மூலமாவே பெத்திருந்தீங்கன்னா, இப்படித்தான் தேடிப்போய் ரிட்டர்ன் குடுப்பீங்களா?”, சுட்டெரிக்கும் அவன் பார்வையையும், சுள்ளென்று வந்த கேள்விகளையும் தாங்க முடியாது, 

“தம்பி… அவளே நாளை எண்ணிட்டு இருக்கா…”, என்று கண்ணீர் விட்டபடி பெரிய மகளுக்காக சரோஜினி பேச, 

“தெரியுங்க. அதனாலதான பேச வேண்டியிருக்கு? எந்த தைரியத்துல ப்ரீத்தி குழந்தையை  கீர்த்தி பார்த்துப்பான்னு அவளைக் கூட கேட்காம நீங்களே முடிவு பண்ணீங்க?” 

அதற்குள் தன்னை மீட்டுக்கொண்ட ப்ரீத்தி, “ஹர்ஷி அவ இரத்தம். அந்த உரிமையிலதான்..” என்றவளை கையமர்த்தியவன், 

“உரிமை..? நக்கலாக இடைமறித்தான். “ அவ சம்மதிமில்லாம் ஜனிச்ச உயிரை, விருப்பமேயில்லைன்னாலும்  உங்க வற்புறுத்தல்ல பெத்து குடுத்துட்டா. உயிரை அழிச்ச பாவம் வேணாம், புண்ணியம் சேரும்னு  சொன்னீங்க. இப்ப உன் இரத்தம், காப்பகத்துல விட்டா உனக்கானது மாதிரி அவளுக்கும் ஆயிடும், பழி வாங்கறியான்னு கார்னர் பண்றீங்க. இதுக்கு பேர் என்ன தெரியுமா? 

உங்க புருஷன் ஒரு தரம் அவ உடம்பை ரேப் பண்ணான்…. நீங்க…  அவ உழைப்பை, அவ மனசை, உணர்வுகளை திரும்பத் திரும்ப அழிக்கறீங்க. இதுவும் ரேப் தான். எமோஷனல் ரேப்”, என்று அழுத்தமான குரலில் பேசியவன், 

“உங்க பணம் உங்ககிட்ட இருக்கணும், நகை இருக்கணும், ஆனா அவ காசு எடுத்துக்கலாம். கல்யாணம் தள்ளி போட்டுக்கலாம். நீங்களே சம்மந்திகிட்ட பேசுவீங்க? எனக்கு புரியலை …இந்த குடும்பம் அப்படி என்ன கீர்த்திக்கு பண்ணுச்சு? அவ எதுக்கு எல்லா பிரச்சனைக்கும் தீர்வா இருக்கணும்? 

இரகுராமன் அவளை நாசம் பண்ணதும், உங்கூட வாழ முடியாதுன்னு சண்டை போட்டு கீர்த்திக்காக உங்க புருஷனை விட்டுட்டு வந்தீங்களா ப்ரீத்தி? அவருக்காகத்தான வாதாடினீங்க?”, ப்ரீத்தி தலை குனிய, சரோஜினியைப் பார்த்தவன்,  

“நீங்க அவனுக்கு தண்டனை வாங்கி குடுத்தீங்களா? தப்புன்னு தெரிஞ்சும் ப்ரீத்தி அவ புருஷனுக்கு நின்னா, உன் உறவே வேணாம்னு அவளை தள்ளி வெச்சிட்டு உங்க சின்ன பொண்ணுக்காக பெத்தவங்களா நீங்க நின்னிருக்கணும். செய்யலை.  சரி அட்லீஸ்ட் குழந்தை எதுவும் வந்துடாம இருக்க, ஒரு டாக்டரையாவது பார்த்து எதாவது செஞ்சீங்களா? இல்லை. குழந்தை வந்ததும் என்ன பண்ணிருக்கணும்? கீர்த்தி வேணாம்னு சொன்னதை மதிச்சு கலைச்சிருக்கணுமா இல்லையா? அதுக்கு அம்மாவா அக்காவா  நீங்க அவ கூட நின்னீங்களா? அது என்ன? கெட்டதுல நல்லதா குழந்தை வந்தது? பிள்ளை பெத்து தரணும்ன்றது கீர்த்தி விதியா? முன் ஜென்ம கடனா?”, கோபத்தில் அவன் குரல் சற்றே ஓங்க, சரோஜினி,  

“இப்படியெல்லாம் ஆகும்னு அப்போ தெரியாதுங்களே! நடந்ததை மாத்த முடியாது. அதோட விளைவுனால ஒரு பிரச்சனையாவது முடியும்னு இருக்கவும், அந்த முடிவை எடுத்தேங்க. இவங்க நல்லபடியா குழந்தையை வளர்ப்பாங்கன்னுதானே நினைச்சேன்”, முந்தானைக்குள் கேவினார். 

தன்னை சற்றே நிதானித்துக்கொண்டவன், “யாரும் தீர்க்கதரிசி இல்லைங்க. எல்லாருக்கும் இக்கட்டான சூழ்நிலை வரும். அந்த நேரத்துல நமக்குத் தெரிஞ்சதை வெச்சுத்தான் முடிவெடுக்கணும். இல்லைன்னு சொல்லலை. ஆனா அதை நியாய தர்மம் பார்த்து மனசாட்சியோட எடுத்திருந்தா, முடிவு தப்பா போனாலும் குறை சொல்ல முடியாது. ஆனா நீங்க அப்படியா செஞ்சீங்க? எடுக்கற முடிவு தப்புன்னு தெரிஞ்சுதானே இரண்டு பேருமே முடிவுகளை எடுத்தீங்க? இதுல பாதிக்கப்பட்டவளோட நியாயத்தை கருத்துலையே வெக்கலை!“ 

“தெரியாமத்தான்  கேட்கறேன்…”, ப்ரீத்தியைப் பார்த்தவன், “என்ன முயற்சி பண்ணியும் குழந்தை உதிக்கலைன்னா, கடவுள் நமக்கு குடுக்கலை, வேற எதுவோ மனசுல வெச்சிருக்காருன்னு நீங்க ஏன் நினைக்கலை? இதோ இப்படி இரண்டு பேருமே அல்பாயுசல போகப் போறீங்கன்னு தெரிஞ்சுதான் உங்களுக்கு குழந்தை வரம் தராம இருந்திருக்கார் போல”, வார்த்தையின் உஷ்ணம் தாங்காது முகத்தை கைகளுக்குள் புதைத்துக் கொண்டாள் ப்ரீத்தி. 

“அப்படியும் குறுக்கு வழியில வந்தாக்கூட… தப்புன்னு தெரிஞ்சும், குழந்தைக்காகத்தான் அப்படி நடந்துச்சுன்னு நீங்களா சப்பை கட்டு கட்டி  உங்களுக்கு வேண்டியதை சாதிச்சிகிட்டு கீர்த்தியை இன்னும் சிதைச்சிட்டீங்களே!  ஆனா அதைப் பத்தி ஒரு குற்ற உணர்வும் கிடையாது. இருந்திருந்தா இப்ப இப்படி பேச நாக்கு எழாது.”, கனல் தெரித்தது வார்த்தைகளில். 

அழுகையைத் தவிர பதில் இல்லை யாரிடமும். அத்தனையும் கேட்கப்பட வேண்டிய கேள்விகள்தான். அதுவும் வரப்போகும் மருமகன் கேட்கக் கேட்க உடம்பு கூசியது இருவருக்குமே. 

ஜோ பேசப் பேச கீர்த்தியுமே அழுது கொண்டிருந்தாள். தன் குடும்பம் இப்படி கூண்டில் நிறுத்தப்பட்டு கேள்விகளால் துளைக்கப்பட அவளுக்குமே துயரம்.  

அப்போதும் பின் வாங்காத ஜோ, “நேத்து கீர்த்திகிட்ட என்ன சொன்னீங்க? ஹர்ஷிக்கு எதாவது ஆச்சுன்னா அவ பழிவாங்கறாளா? மனசாட்சின்னு ஒன்னு இருக்கா உங்ககிட்ட? அப்பா அம்மா செஞ்ச புண்ணியம் புள்ளைங்களைக் காக்கும். அதே மாதிரிதான் பெத்தவங்க செஞ்ச பாவமும் பிள்ளைங்க தலையில வந்து விடியும். நீங்க கீர்த்திக்கு பண்ண பாவம்தான் ஹர்ஷிதா இப்படி அப்பா, அம்மாவை தொலைச்சிட்டு  நிக்கற நிலைமைக்கு கொண்டு வந்திருக்குன்னு நான் சொல்றேன். அவளுக்கு எதுன்னாலும் அதுக்குக் காரணம் நீங்கதான். இதுல கீர்த்தியை எங்கேயும் கொண்டு வராதீங்க”, கை நீட்டி எச்சரித்தான். 

அழுதபடியே தலையை மறுப்பாக ஆட்டிய ப்ரீத்தி “எனக்கு இல்லைன்னே இருக்கட்டும். உங்களுக்கு மனசாட்சி இருக்குல்ல? எங்களை காரணம் காட்டி என் மகளை ஏன் தண்டிக்கறீங்க? சொந்தம்னு இருந்தும் ஏன் அனாதையாக்கறீங்க?”, என்று தழுதழுத்தாள். 

 “இப்பவும் உங்க சுயநலம்தான் நிக்குது. உங்க குழந்தைக்கான சுய நலம். ஒரு வகையில உங்க தவிப்பு நியாயம்தான். ஆனா  கீர்த்திக்கான முடிவை நீங்களே எடுத்துட்டு, எப்படி அவளை  நிர்பந்திக்க முடியும்? அவ்வளவு ஈசியா போயிட்டாளா? பாவம், புண்ணியம், பழி வாங்கறியான்னு எதாவது சொன்னா, வழிக்கு வந்துடுவாங்கற அலட்சியம்?”, கோபமாகக் கேட்டான். 

“அப்படியெல்லாம் இல்ல தம்பி. எங்க நிலைமை அப்படி. வேற வழி தெரியலைங்க. கல்யாணமெல்லாம் தள்ளி போட வேணாம். குழந்தையும் ஒன்னு இரண்டு வருஷம் நான் வளர்க்கறேன். என்னாலையும் முடியாத போது….”, சரோஜினி பதில் கூற 

“உங்களுக்கு கீர்த்தின்னு ஒரு மக இல்லைன்னு நினைச்சிக்கோங்க. உங்க பிரச்சனையை நீங்க பாருங்க. இதுக்கு மேல இந்த குடும்பத்துக்கு அவ எதுக்கு செய்யணும்? ”, ஜோவின் கேள்வியில் அப்பட்டமாக தெரிந்தது சரோஜினியின் பயம். 

அடுத்து ப்ரீத்தியைப் பார்த்தவன், “அவ உழைப்பு அவ பெத்தவங்க, கூடப் பிறந்தவங்கற முறையில உங்க செலவுக்கு போறதைக் கூட ஏத்துக்க முடியும். உங்க புருஷன் சாவும் காரிய செலவும் அவ ஏன் பார்க்கணும்? அந்த நேரம் காசில்லைன்னு நீங்க கேட்காமலேயே உங்களுக்குக் குடுத்து உதவினா, அதை திரும்ப குடுக்க வேணாமா? அதிலேயும் அலட்சியம்? கொஞ்சம் கூட உறுத்தவே இல்லையா? இப்படி அடுத்தவங்க மனசை காயப்படுத்தி உங்க பொண்ணுக்கு சேர்த்து வைக்கறது பணமில்லை பாவம்னு புரியுதா?” 

“…” 

சரோஜினியின்புறம் திரும்பியவன், “பெரியவங்களா நியாயத்தை சொல்ல வேண்டிய நீங்களும் …”, என்று கடுப்பாகத் தலையாட்ட, 

“தப்புதான் தம்பி. ஒன்னு மேல ஒன்னு பிரச்சனை வந்திட்டு இருந்தது. ப்ரீத்தி மாமியார்..”, என்று சரோஜினி ஆரம்பிக்க, அவரை கை காட்டி நிறுத்தினான். 

“ம்ம்… நியாயமா அவங்களுக்கு செட்டில் பண்ணும்போதே கீர்த்திக்கும் தந்திருக்கணும். கீர்த்தி வெளினாட்ல வேலை பார்க்கறா, இந்த இரண்டு லட்சம் அவகிட்ட குடுத்து என்னாகப்போகுதுன்ற உதாசீனம். அதுதானே?”, ஜோவின் கேள்வியில் சரோஜினி தலை குனிந்தார். 

“என் வாழ்க்கையை சிதைச்சவன் சாவுக்கும் காரியத்துக்கும் கூட காசு செலவு செஞ்சு கௌரவமா அனுப்பிவெக்கறேனேன்ற அவ மன உளைச்சல்லாம் ஒரு பொருட்டே இல்லையா உங்களுக்கு? ஜடமா நீங்கல்லாம்?” 

“ஜோ… ப்ளீஸ்… போதும்” , அதற்கு மேலும் தாள முடியாது கீர்த்தி சொல்லவும் அவளையும் முறைத்தான். “உங்கப்பா கேட்க வேண்டிய கேள்வி…அவரையும் சேர்த்து கேட்டிருக்கணும்…தாங்க மாட்டாரேன்னு இவங்களை நான் கேட்டுட்டு இருக்கே..” 

“அம்மா…தண்ணி..”, கதவைத் தள்ளிக்கொண்டு ஓடி வந்த ஹர்ஷி, அங்கே புதிதாக ஒருவன் நிற்கக்கண்டு, ப்ரேக் அடித்து நின்றாள். வாசலில் ஒரு வயதான அம்மா சரோஜினியிடம், “பார்த்துக்கோங்கமா. நான் வரேன்”, என்றவர் என்னவென்று புரியாவிட்டாலும் அறையின் அடர்த்தியை உணர்ந்து சட்டென்று வெளியேறினார். 

ஜோவின் பார்வை மொத்தமும் ஹர்ஷிதாவையே மொய்த்தது. இதற்கு முன் அவள் போட்டோ கூட பார்த்ததில்லை. பார்க்கத் தோன்றியதில்லை அந்தக் கண்கள், மோவாய் எல்லாம் அப்படியே கீர்த்திதான். குழந்தை தாயிடம் ஒன்றி, படுக்கையில் ஏறப் பார்க்க, கீர்த்தி அவள் தண்ணீர் பாட்டிலோடு வந்து அவளை தூக்கி அமர வைத்து, பருகக் கொடுத்தாள். 

“கீர்த்தி… குழந்தையை பக்கத்துல கடைக்கு அழைச்சிட்டு போய் சாப்பிட எதாவது வாங்கி குடுத்து கூட்டிட்டு வா”, என்றான் ஜோ இலகுவான குரலில். 

கீர்த்தி அவனைப் பார்க்க, என்னை நம்ப மாட்டியா என்றது அவனது பார்வை. “சாக்கி வாங்கிட்டு வரலாமா ஹர்ஷி?”, என்று கீர்த்தி கேட்க, குழந்தை தாயின் முகத்தைப் பார்த்தது.   ப்ரீத்தி தன்னை சமாளித்து, “போயிட்டு வா செல்லம்”, என்று சொல்ல, கீர்த்தி அவள் கைப்பையை எடுத்துக்கொண்டு ஜோவை மீண்டும் திரும்பி ஒரு பார்வை பார்த்துக்கொண்டே ஹர்ஷியின் கைபிடித்து அழைத்துச் சென்றாள். 

சற்று முன் ஹர்ஷி அவனைப் பார்த்ததைப் போன்றே இருந்தது கீர்த்தியின் மருண்ட பார்வை. இருவரும் செல்வது அவன் கண்ணுக்குள் நின்றது.