அத்தியாயம் – 18 

காலை நேரம் பரபரப்பாக சமையலில் இருந்தாள் கீர்த்தி. இயந்திரத்தனமாக வேலைகள் நடந்து கொண்டிருந்தன.  நேற்று ப்ரீத்தி வீசிய அணுகுண்டின் அதிர்வலைகளில் ஹாஸ்பிட்டலிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறியிருந்தாள். 

மனம் கொதித்துக்கொண்டிருந்தது. நான் பழிவாங்க வேண்டி குழந்தையை ஏற்றுக்கொள்ள மாட்டேங்கிறேனா? என் பக்கமிருந்து கொஞ்சமும் பார்க்க மாட்டார்களா? எப்படியெல்லாம் தன்னை முடக்குகிறார்கள் என்று எண்ண எண்ண, எவ்வளவு தூரம் நடந்தே வந்திருக்கிறாள் என்பது ஒரு ஆட்டோகாரர் இடிப்பது போல வந்து திட்டிய பின்புதான் புலப்பட்டது. 

வெயிலில் வேர்த்து விறுவிறுத்து, மூச்சு வாங்க முழிப்பவளைப் பார்த்து அவரே சற்று பரிதாபப்பட்டு, “எங்கம்மா போகணும்? நான் கொண்டு போய் விடவா?”, என்று கேட்டார்.  சுற்றிப் பார்த்தவள், அருகில் ஒரு கோவில் தெரிய, அவரை மறுத்துவிட்டு, அருகில் ஒரு பெட்டிக் கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி குடித்துக்கொண்டே, கோவிலில் சென்று அமர்ந்துவிட்டாள். 

கைப்பேசியில் அவள் அன்னை அழைக்க, அணைத்து வைத்துவிட்டாள். துபாய் கிளம்பிவிட்டால், திரும்ப வரவே வேண்டாம் என்று தோன்றிவிட்டது. தன்னைக் கேட்காமலேயே எவ்வளவு பெரிய முடிவு எடுத்திருக்கிறார்கள்? அதுவும் அம்மாவும் உடந்தை. அப்பாவிற்கு தெரியுமா? தெரிந்தும் அப்போது போலவே அமைதியாக இருக்கிறாரா ? தனக்காக யாருமே இல்லையா? என்று யோசிக்க ஜோ நானிருக்கிறேன் என்றது நினைவில் வந்தது. 

மணியைப் பார்த்தாள், அங்கே வகுப்பில் இருப்பான். கண்ணீர் பொங்கியது. ஒரு வாய்ஸ் மெசேஜ் பதிவு செய்து அனுப்பியிருந்தாள். என்ன பேசினாள் என்று கூட தெரியாது ஆனால், நீயாவது என்னை புரிஞ்சுக்கோ ஜோ என்ற மன்றாடலுடன் நிறுத்தியிருந்தாள். 

மதியம் போல் பசி உரைக்க, ஹோட்டலில் ஒரு தயிர் சாதம் உண்டுவிட்டு, வீடு வந்து சேர்ந்தாள்.  

“போன் என்னம்மா ஆச்சு? உங்க அம்மா நிறைய வாட்டி ட்ரை பண்ணாளாம்? நானும் பண்ணேன், ஜோசஃப் தம்பி இப்ப பண்ணுச்சு, நீ வந்த உடனே கூப்பிட சொன்னாரு.”, சாதாரணமாகப் பேசும் தந்தையிடம் என்ன கேட்பது என்று தெரியவில்லை.  

“சார்ஜ் போடணும்பா. இப்ப பேசறேன்”,  என்றவள், அறைக்குள் நுழைந்துகொண்டு கைப்பேசியை உயிர்பித்தாள். 

ஜோ மிஸ்ட் கால் மற்றும் மெசேஜ்கள் இருந்தது. தலையில் தட்டிக்கொண்டவள், வேகமாக அவனுக்கு அழைத்தாள். 

“கீர்த்தி? என்னாச்சு? நீ ஓகேதான?”, வேகமாய் கேட்டான். 

“சாரி ஜோ. அம்மா திரும்ப திரும்ப கூப்பிடவும் எரிச்சலாகி ஆஃப் பண்ணிட்டேன்.” 

“ஷ்….”, நிதானித்துக்கொண்டவன்,  “என்ன மெசேஜ் விட்ட? அழுகையில புரியவே இல்லை. எப்பவும் உன் கூடத்தான் இருக்கேன். என்ன விஷயம்?” , என்று கேட்டதுதான் தாமதம், மீண்டும் அழுகை பொங்கியது.  

மெல்ல அவளிடம் கொஞ்சம் கொஞ்சமாய் நடந்ததைக் கேட்டவன் “அவங்க என்ன வேணாலும் சொல்லட்டும். நீ எதுவும் பேசாத, ஹாஸ்பிட்டல் பக்கம் போகாத.   நான் இருக்கேன்”, என்றதோடு வைத்துவிட்டான். 

சற்றே ஏமாற்றமாக இருந்தாலும், அவனும் துபாய் வந்துவிட சொல்கிறான் என்பது வரை புரிய, தன்னை தேற்றிக்கொண்டு படுத்துவிட்டாள். 

மாலை தந்தை வந்து எழுப்பவும். “அம்மாவை கான்டீன்ல பார்த்துக்க சொல்லுங்கப்பா. நமக்கு இட்லி வார்க்கறேன். எனக்கு முடியலை”, என்றாள். மகளின் நலுங்கிய தோற்றத்தில் வேணுகோபாலும் “சரிம்மா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரு. அப்பறமா ஊத்திக்கலாம்”, என்று விட்டார். 

இரவு “கீர்த்திமா, நாளைக்கு காலையில் கொஞ்சம் சாப்பாடும் , குழந்தைக்கு இட்லியும் பண்ணி எடுத்துட்டு வர முடியுமான்னு கேட்கறா உங்கம்மா. ஹர்ஷிக்கு கான்டீன் சாப்பாடு பிடிக்கலையாம். அப்படியே மாத்து ட்ரெஸ் வேணுமாம்.” 

“சரிப்பா” என்றவள்தான் இப்போது சமைத்துக்கொண்டிருக்கிறாள். சற்றே வெறுப்பு வந்தது. ‘இப்பவும் ஆர்டர் போடறாங்க, நான் ஆடறேன்’, என்று தோன்றவும், “ம்ப்ச்… முடியாம படுத்துகிடக்கறா, குழந்தைக்குன்னும்போது என்னத்தை செய்யறது”, என்று  நினைப்போடு தாளிப்பை முடித்தாள். 

ஆனால் இவள் எடுத்துச் செல்லப்போவதில்லை. போனில் போர்ட்டர் சர்வீஸ் புக் செய்திருந்தாள். இன்னேரம் வரவேண்டும். அவன் கொண்டு போய் கொடுத்துவிடுவான். அவசரமாக டப்பர்வேர் டப்பாக்களை நிரப்பினாள். வாசலில் மணியடித்தது. 

வேகமாக சென்று கதவு திறந்தவள், “ஒரு டூ மினிட்ஸ் இருங்க, பையில….”, என்றவள் குரல் தேய்ந்து அதிர்ச்சியில் நின்றது. 

எதிரில் ஜோ நின்று கொண்டிருந்தான். கண்களை இமைத்தவள் அவன் பிம்பம் இல்லை என்று புரிந்து, கை நீட்டி அவனை தொட்டவள், “ஜோ… இங்க… எப்படி?” 

அவள் முழிப்பதை ரசித்தவன், “உள்ள கூப்பிட மாட்டியா? இங்கயே விசாரணையா? யார்னு நினைச்சு டூ மினிட்ஸ் கேட்ட?” 

ஜோ பேசப் பேச, அவன் நிஜமாகவே தன்னைத் தேடி பறந்து வந்துவிட்டான் என்ற நெகிழ்வில் இருந்தவளுக்கு பேச்சே வரவில்லை. 

“யாரும்மா”, என்று கேட்டு வேணுகோபால் வர, வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்தவர் நெற்றியை சுருக்க, 

“நகரு”, என்று உள்ளே வந்தவன்,  தோளிலிருந்த பையை அவளிடம் தந்துகொண்டே, “அங்கிள், நான் ஜோசஃப்”, என்றான். போனில் பேசியிருந்தார், போட்டோ மட்டுமே பார்த்திருந்தார். அதில் சட்டென்று அடையாளம் தெரியவில்லை. 

“அடடே… என்ன திடீர்னு? கீர்த்தி சொல்லவே இல்லை. வாங்க வாங்க”, என்று திணறி வரவேற்றார். 

“ஹ்ம்ம்…அவளுக்கும் தெரியாது. சர்ப்ரைஸ்“, என்று சொல்ல, வாசலில் மீண்டும் மணி அடித்தது. 

இந்த முறை போர்ட்டர் சர்வீஸ் ஆள்.  “இதோ இரண்டு நிமிஷங்க. பையில போட்டு எடுத்துட்டு வரேன்”, என்று உள்ளே ஓடினாள். 

“நீங்க உட்காருங்க. அது ஹாஸ்பிட்டலுக்கு டிஃபன், மதியம் சாப்பாடு கட்டி அனுப்பறா. அவளுக்கு போக முடியலை அதான் குடுத்து அனுப்பிடலாம்னு புக் பண்ணா”, என்று வேணுகோபால் விளக்கிக் கொண்டிருக்கையிலேயே பையோடு கீர்த்தி வந்தாள். 

ஜோ அவளை முறைக்க, கண்களை சுருக்கியவள், வந்தவனிடம் பையை கொடுத்து, மீண்டும் ஒரு முறை ரூம் நம்பர், பெயர் எல்லாம் சொல்லி அனுப்பி வைத்தாள். 

“உடம்பு முடியலைன்னா அங்க பக்கத்துலேயே சுவிகி போட்டு விடறதுதானே மா? ப்ரீத்திக்கு எப்படியும் அவங்க ஹாஸ்பிட்டல்ல தர சாப்பாடுதானே?”, என்றான் மையமாக. 

“ஆமாங்க தம்பி. ஆனா ஹர்ஷி சாப்பிட மாட்டங்கறாளாம்”, வேணுகோபால் நேற்று சரோஜினி சொன்னதை சொல்ல,  

“நீங்க போய் ஃப்ரெஷ் பண்ணிட்டு வாங்க ஜோ. காஃபி ரெடி பண்றேன்”, என்று அனுப்பி வைத்தாள் கீர்த்தி. 

அடுத்த இருபது நிமிடங்களில் காஃபியுடன் அமர்ந்தான் ஜோ. வேணுகோபால் நலம் விசாரித்தவன், அடுத்து பேசும் முன், 

“அம்மா வந்திருந்தாங்க தம்பி. கல்யாணம் சீக்கிரம் வைக்கணும்னு சொன்னாங்க. நீங்க உங்க இரண்டு பேர் தோது பார்த்துட்டு சொல்லுங்க. கல்யாணத்துக்குன்னு அவ சேர்த்து வெச்சது கரையறதுக்கு முன்ன முடிச்சிடணும். நானும் ப்ரீத்தியும் இருக்கும்போதே உங்க கல்யாணத்தைப் பார்த்துடணும்”, என்றார். துக்கத்தில் குரல் பிசறடித்தது. 

“ஹ்ம்ம்….ப்ரீத்திக்கு இப்படிங்கறது வருத்தம்தான். கேட்கறேன்னு தப்பா நினைக்காதீங்க, குழந்தையை என்ன பண்ணப் போறீங்க அங்கிள்?”, பார்வையும் குரலும், தனக்கு சம்மந்தமில்லாத விஷயத்தை கேட்டுக்கொள்வதைப்போல இருந்தது. 

முகம் கசங்கிய வேணுகோபால், “என்ன செய்யமுடியுங்க? நானும் சரோஜினியும்தான் வளர்க்கணும். ஆண்டவன் அதுக்கான ஆயுசைக் கொடுக்கணும்.”, வேதனை மண்டியது அவர் குரலில். 

சமையலறை வாசலில் சிலையாக நின்றிருந்தாள் கீர்த்தி.  “உங்க ஆயுசுக்கப்பறம் அவளை நாங்க பார்த்துக்கணும்னு எதிர்பார்ப்பு எதுவும் இருக்கா?” 

ஜோவின் கேள்வியில் சங்கடமாக, “நாங்க கேட்கறதுக்கு எந்த உரிமையும் இல்லையே தம்பி. ஆனாலும் எங்க காலத்துக்கு அப்பறம்,  நல்ல ஹாஸ்ட்டல்ல சேர்த்து, படிக்கவெச்சு, ஒரு கார்டியனா இருந்து அவளுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சு குடுத்தா நல்லாயிருக்கும்”, என்று இறைஞ்சுதலாக கைகூப்பிக் கேட்டார். 

“உங்க பெரிய மகளுக்கும், மனைவிக்கும் வேற எதிர்பார்ப்பு இருக்கும் போல இருக்கே? உங்களுக்கு தெரியாதா இல்லை  அவங்க அதிகபட்சமா கேட்டு நீங்க குறைஞ்சபட்சமா கேட்கறீங்களா?”, ஜோவின்  ஊடுருவும் பார்வையும், கேள்வியின் போக்கும் புரியாமல் கீர்த்தியை பார்த்தார் வேணுகோபால். 

கல்லாக சமைந்திருந்தவள் முகத்தில்  எதுவும் படிக்க முடியாமல், “நீங்க என்ன கேட்கறீங்கன்னு புரியலை தம்பி. நான் என் எதிர்பார்ப்பை சொன்னேன். முடியாதுன்னு மறுக்க எல்லா உரிமையும் உங்களுக்கு இருக்கு. ப்ரீத்தி என்ன சொன்னா? எனக்கு தெரியலைங்களே?”, மீண்டும் மகளையும் மருமகனாகப் போகிறவனையும் மாறி மாறிப் பார்த்தார். 

“என்னம்மா…அம்மா எதுவும் சொன்னாளா?”, சொன்னால் அவருக்கு எதுவும் ஆகிவிடப் போகிறதோ என்ற பயத்தில் லேசாய் தலையை இல்லை என்று அசைத்தாள். 

“உங்க அப்பாக்கு வேண்டியது எடுத்து வெச்சி்டு, நாம டிஃபன் சாப்பிட்டு கிளம்பலாம் கீர்த்தி. போய் உங்க அக்காவை பார்த்துட்டு வரலாம்.”, என்றான். 

“எதுவும் பிரச்சனையாமா? தம்பியும் திடீர்னு வந்திருக்காரு…” 

“ஒன்னுமில்லை அங்கிள். நாங்க போய் பார்த்து பேசிட்டு வந்து சொல்றோம். நீங்க மனசை போட்டு உழப்பிக்க வேணாம். அவங்களுக்கும் சொல்லாதீங்க. சர்ப்ரைசா இருக்கட்டும்”, என்று விசனப்படும் அவரை சமாதானம் செய்தவன் கீர்த்தியை பார்க்க, அவள் அடுக்களைக்குள் புகுந்துகொண்டாள். 

மதியம் பார்வையாளர்  நேரம் தொடங்கும் போது ப்ரீத்தி இருந்த அறைக்கு வந்தார்கள் இருவரும். 

“வா கீர்த்தி..”, என்ற சரோஜினி உடன் வந்த ஜோவைப் பார்த்து முழிக்க, மருந்தின் தாக்கம் ஆரம்பித்து, அப்போதுதான் காலை உணவின் மிச்சத்தை வாந்தியெடுத்துவிட்டு படுத்திருந்த ப்ரீத்தி அடையாளம் கண்டு, “வாங்க. எப்ப வந்தீங்க?”, என்று சற்று நிமிர்ந்து அமர்ந்தாள். 

“காலையிலதான் வந்தேன். கீர்த்திக்கும் நான் வரப்போறது தெரியாது”, என்று சொல்லவும், வந்திருப்பது யார் என்று புரிந்து, சரோஜினி அமரச் சொல்லி உபசரிக்க, அங்கிருந்த ஒற்றை நாற்காலியில் அமர்ந்தான். 

வரும் வழியில் கிடைத்த தனிமையில் “என்ன ஜோ? திடீர்னு வந்திருக்க? எத்தனை நாள் லீவு?”, என்று மனதில் குடைந்து கொண்டிருந்த கேள்வியை கேட்டாள் கீர்த்தி. 

“வராம ? மறுபடியும் உன்னை கார்னர் பண்ணி குழந்தையோட எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு அனுப்பிட்டா? இன்னொரு ப்ரேக்-அப் எல்லாம் தாங்கற சக்தி இல்லை எனக்கு”, என்றவனை முறைத்தாள். 

“நான் நடந்தது எல்லாத்தையும் உங்கிட்ட சொன்னேந்தானே? திரும்ப அப்படி செய்வேனா ஜோ?”, குறையாய் கேட்டவளின் தோளை இடித்தவன், 

“ஹ்ம்ம்…அப்ப நான் செய்யாம விட்டதை இப்ப செய்யணும்னுதான் கிளம்பி வந்தேன். இரண்டு நாள்தான். நாளைக்கு உன் கூடவேதான் கிளம்பறேன். உங்க அம்மாக்கும் ப்ரீத்திக்கும் சிலது புரிய வைக்கத்தான் வந்ததே“, என்றான்.  

“ஜோ…”, என்ற ஒற்றை அழைப்பிலேயே அவள் நெகிழ்ச்சியையும் நன்றியையும் கடத்தியிருந்தாள். அவன் கையை அழுத்தமாக பிடித்திருந்தாள். 

“இது நான் பேசணும் ஜோ. எனக்கு நான் தான் நிக்கணும்.”, என்று கூறினாலும் அவளின் சஞ்சலம் கண்ணில் தெரிந்தது.  

“இப்பவும் நீதான் நிக்கற. உன் முடிவு நீ சொல்லிட்ட. அது மாறப்போகுதா?” 

முகம் கசங்க அவனை நோக்கியவள், “அவ கடைசியா சொன்னது மனசை பிசையுது ஜோ. யாருக்குமே நான் பட்ட கஷ்டம் வரவேணாம். இருந்தாலும் நான் ரொம்ப சுயநலமா யோசிக்கறேனா ஜோ? ப்ரீத்தி சொன்ன மாதிரி, குழந்தையை தனியா பார்க்க கத்துக்கணுமா? ஆனாலும் என்னால …என்னால கூடவே…”, எனும்போதே கண்கள் கலங்கியது. 

ஓலா ட்ரைவரை கண் காட்டியவன், “நான் பார்த்துக்கறேன். இதுல சுயநலம் எல்லாம் இல்லைடா. உன்னோட நலன் எனக்கு ரொம்ப முக்கியம். எல்லா நேரமும் நீயே தனியா போராட வேணாம் கீத்துமா. நான் இருக்கேன். என்மேலையும் சாஞ்சிக்கலாம். தப்பில்லை”, என்று தேற்றி அழைத்து வந்திருந்தான்.