ஏதோ தோன்ற, “கீர்த்தி….” என்று ஆரம்பித்தவன், பின் இப்போது வேண்டாம் என்று அமைதியாகிவிட்டான்.
“என்ன ஜோ?”
“ஹ்ம்ம்… ஒன்னுமில்லைடா. நான் ஏற்கனவே சொன்னதுதான். எதுனாலும் நான் இருக்கேன் உங்கூடங்கறதை மறந்துடாத”, என்று வலியுறுத்தியவன், ஜெய ராணி அவளைப் பற்றி நிறைவாகப் பேசியதை பகிர்ந்துகொண்டான்.
“நேர்ல இன்னும் நல்லா இருக்கா ஜோ, பக்குவமான பொறுப்பான பொண்ணுதான்னு சர்டிஃபிகேட் குடுத்துட்டாங்க எங்கம்மா”, என்று சிலாகித்து சொல்ல, கீர்த்தி முகத்திலும் புன்னகை.
“ஆன்ட்டி உன்னை பத்திதான் கேட்டாங்க. கொஞ்சம் நான்-வெஜ் சமைச்சு தரணுமாம் உனக்கு. நேரத்துக்கு சாப்பிடறயான்னு பார்த்துக்கணுமாம்”, அவங்க சொன்னதுக்கெல்லாம், சரி ஆன்ட்டின்னு சொன்னேனே, அதுக்கே பிடிச்சிருக்கும்”, என்று கீர்த்தியும் கலாய்த்தாள்.
சற்று சகஜமாகப் பேசி வைத்தார்கள். சிறு புன்னகையுடன் வீட்டினுள் வந்த கீர்த்தியைப் பார்த்த ப்ரீத்தி, ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்து, “ஜோசஃப் கிட்ட பேசிட்டு வரியா கீர்த்தி?” என்றாள்.
“ஓ…உன்னை பார்த்துட்டு போய் அவர்கிட்ட என்ன சொன்னாங்களாம்?”
“நல்ல விதமாத்தான் சொல்லியிருக்காங்க. முதல்ல பேசும்போது கொஞ்சம் டெரர்ராதான் இருந்தாங்க. இப்ப பரவாயில்லை.”
“ஹ்ம்ம்… என் மாமியா மாதிரி கிடையாதுன்னு பார்க்கும்போதே புரியுது. கொஞ்சம் ஆளுமையா இருக்காங்க, ஆனா அதே நேரம் நிதானமும் இருக்கு. நீ நல்ல பேர் எடுத்துடுவடா. எனக்கு சந்தேகமே இல்லை”, பாராட்டுபவளிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
மறு நாள் அப்பல்லோ வந்து சேர்ந்திருந்தார்கள். அவள் இரவு இருக்க மாட்டாள் என்று சொன்னதில் ஹர்ஷி ஒரே அழுகை. பேசிப் பேசி ஒரு வழியாக சமாதானப்படுத்திவிட்டு வந்திருந்தாள் ப்ரீத்தி.
ஒரு நாள் இரவுக்கே இந்தப் பாடு. குழந்தை ஏற்கனவே தந்தையை பிரிந்திருக்க, தாயை இறுகப் பற்றிக்கொள்ள நினைக்கிறாள். இதில் ப்ரீத்தியும் போய்விட்டால் என்று நினைக்கும்போதே கீர்த்திக்கு கலக்கமானது.
பரிசோதனைகள் செய்து முடித்து, அன்று இரவிலிருந்து மருந்து சலைன் மூலம் செலுத்த ஆரம்பிக்கப்பட்டது. உடனடியாக பெரிதாக எதுவும் இருக்காது என்று அறிவுறுத்தியிருக்க, அமைதியாக படுத்திருந்தாள் ப்ரீத்தி.
“பாட்டு எதுவும் கேட்கறியா ப்ரீத்தி?”
“ம்ப்ச்… எதைக் கேட்டாலும் மனசு இருக்கற பிரச்சனையிலேயே சுத்தி வருது கீர்த்தி. எத்தனை நாள் இந்த மருந்தால என் வாழ்க்கையை இழுத்து நிறுத்த முடியும்னு தெரியலை”, என்றவள்,
“ நீ சீக்கிரமே, நான் இருக்கும்போதே, கல்யாணம் வெச்சிடு கீர்த்தி. உனக்கு கல்யாணம் செய்து வெக்கணும்னு எங்களுக்கு தோணுச்சே தவிர, நீ சொன்ன காதலைப் பத்தி சுத்தமா மறந்துட்டோம். அவருக்கு மட்டும் ஞாபகம் இருந்து விசாரிச்சு, மெனக்கெட்டு போய் ஜோசஃப்கிட்ட பார்த்து, பேசி..என் புருஷன் ஏற்பாடு செஞ்ச கல்யாணம், நானாவது பார்த்துட்டு போறேன்”, என்றாள்.
ப்ரீத்தியை பார்த்தவள், “ராகினிகிட்ட எப்படியும் ஜோ பேசியிருப்பார், என்னைப் பத்தி தெரிஞ்சு வந்திருப்பார் ப்ரீத்தி. அதுக்கப்பறமும், நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சதே ஜோவால, அவருக்கு இருக்க நம்பிக்கையிலதான். யாரும் ஏற்பாடு செஞ்சிடலை” என்றாள் எரிச்சலை அடக்கிக்கொண்டு.
அதில் ப்ரீத்திக்கு சற்றே முகம் மாறியது. அமைதியாகி விட்டாள். ஆனாலும் கீர்த்தியால் ஒரு பேச்சுக்குக் கூட அவன் உதவினான் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மறு நாள் காலையில் சரோஜினி உணவோடு, ஹர்ஷியையும் சேர்த்து அழைத்துவந்தார். அம்மாவைக் கண்டதும் ஓடி வந்த குழந்தை, கையில் இருந்த ஊசி, சலைன் பாட்டில் எல்லாம் பார்த்து, மிரண்டு நின்றாள்.
மகளை அழைத்து கட்டிலில் தன் வலதுபுறம் அணைத்த வாக்கில் படுக்க வைத்துக்கொண்டு கொஞ்சினாள் ப்ரீத்தி.
“இப்ப சிரிப்பை பாரு இந்த குட்டிக்கு! நேத்து ராத்திரி படுத்தி எடுத்திட்டா? அம்மாக்கு என்ன ஆச்சு ? ஏன் அங்க இருக்கா? நாளைக்கு எப்ப போகலாம்னு எத்தனைவாட்டி கேட்டு, சாப்பிட அடம் பண்ணி… இந்தா காலையில பால் மட்டும்தான் குடிச்சா. உங்கூடதான் சாப்பிடுவேன்னு சொல்லவும் இட்லியை எடுத்துகிட்டு வந்துட்டேன்.”, சரோஜினி பேத்தியை செல்லமாக முறைத்துக்கொண்டே புகார் வாசித்தபடி, தட்டில் இட்லி, சட்டினியை வைத்து ஒரு ஸ்பூன் போட்டு அருகில் வந்தார்.
“கீர்த்தி, நீ வாங்கி ஊட்டு. அம்மா கொஞ்சம் உட்காரட்டும்”, என்று ப்ரீத்தி சொல்லவும், கீர்த்தி வாங்கி ஸ்பூனை விடுத்து ஒரு சிறிய துண்டை சட்னியில் தொட்டு ஹர்ஷியிடம் நீட்டினாள். தாய் அருகில் இருப்பதாலோ என்னவோ, ஹர்ஷியும் சமத்தாக வாங்கிக்கொண்டாள்.
குழந்தைக்கென்று முதல் முறையாக ஒரு வேலை செய்கிறாள். இதுவரை எட்டியே நின்றிருந்தாள். ப்ரீத்தியும் குழந்தையை பார்த்துக்கொள்ள சொன்னதே இல்லை.
சரோஜினி ஏதோ கூறிக்கொண்டிருக்க, அதில் கவனமில்லாமல், உணவு உண்ணும் தன் குழந்தையை பார்த்துக்கொண்டிருந்த ப்ரீத்தி, “ம்மா, இன்னிக்கு வேணா நீ இங்க தங்கிடு. கீர்த்தி ஹர்ஷியோட வீட்டுக்குப் போகட்டும். அவளும் பழகிக்கணுமே”, என்றாள்.
“நான் இரண்டு நாள்ல கிளம்பறேன் ப்ரீத்தி. இருக்கற வரைக்கும் நானே இருக்கேன். நான் கிளம்பிட்டா அப்பறம் அம்மாதான இருக்கணும்?” என்ற கீர்த்திக்கு அவள் சொன்ன பழகிக்கணும் புரியவில்லை.
“ம்ம்… ஆனா நீ இருக்கற வரைக்கும் ஹர்ஷி உன்னை பழகிக்கட்டும் கீர்த்தி.”
புருவம் சுருக்கியவள், “எதுக்கு?”
கீர்த்தியை பார்த்து ஒரு சோபையான சிரிப்பை உதிர்த்தவள், “நான் போயிட்டா ஹர்ஷி உன் கிட்டதான வருவா? அதுதான் நான் இருக்கும்போதே கொஞ்சம் பழகிக்கோன்னு சொல்றேன்.”
தான் கேட்டது, புரிந்து கொள்வது சரிதானா என்று ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றாள் கீர்த்தி.
“என்ன கீர்த்தி? நீ யோசிக்கலையா? அப்பாவும் இல்லாம, அம்மாவும் இல்லாம குழந்தை என்னாவா?”, அவள் அதிர்ச்சியைப் பார்த்து ப்ரீத்தி வினவினாள்.
குழந்தை வாய் துடைத்து வர சரோஜினியுடன் பாத்ரூம் சென்றிருந்தாள்.
“நான்… நான் பார்த்துக்க முடியாது ப்ரீத்தி. நீயா எப்படி நினைக்கலாம்?”, இன்னும் அதிர்வு மீளாமல்தான் கேட்டாள் கீர்த்தி.
“உன் இரத்தம்டி… நான்..”
“ஷ்ட் அப்… ஜஸ்ட் ஷட் அப்…. நான் இல்லை… இவ என் பொறுப்பும் இல்லை. உனக்கு தேவைப்பட்டா உன் புருஷன் குழந்தை, இல்லைன்னா என் இரத்தமாகிடுமா? நோ வே… அம்மாவை வளர்க்கச் சொல்லு”
அதற்குள் சரோஜினி திரும்பி வர, கலங்கும் ப்ரீத்தியின் முகத்தைப் பார்த்து, “என்ன ப்ரீத்தி, உடம்புக்கு எதுவும் பண்ணுதா?” , என்று பதறி அருகில் வந்தார்.
குழந்தையும் அவளைப் பார்க்க, சற்றே சமாளித்துக்கொண்ட ப்ரீத்தி, “ஹரிஷிகுட்டி, மாஷா வீடியோ பார்க்கறீங்களா அம்மா போன்ல?”, என்று கேட்டு, கீர்த்தியையே அடென்டர் படுப்பதற்காக போடப்பட்டிருந்த படுக்கையில் காதில் ஈயர் போன் மாட்டி அமர வைக்கக் கூறினாள்.
குழந்தை கவனம் முற்றிலுமாக கைப்பேசி கவர்ந்துகொள்ள, சரோஜினியை நோக்கியவள், “அம்மா… கீர்த்தி ஹர்ஷியை பார்த்துக்க மாட்டாளாம்… என் பொறுப்பு இல்லைங்கறா மா. என் பொண்ணு கதி?”, எனும்போதே குரல் தழுதழுத்து கண்ணில் நீர் முட்டியது.
“ஏய்… அழாத ப்ரீத்தி. உள்ள போற மருந்து வேலை செய்ய வேணாமா? பேசிக்கலாம். கீர்த்தி சொன்னா புரிஞ்சுக்குவாடா”, என்று சமாதானம் செய்ய பார்த்துக்கொண்டிருந்த கீர்த்திக்கு பி.பி எகிறியது.
“மா… என்ன பேசற? நான் எதுவும் புரிஞ்சிக்கறா மாதிரியே இல்லை. உன் பேத்தி நீ வளர்த்துக்கோ. எங்கிட்ட வராதீங்க”, சீறினாள்.
“கீர்த்தி கண்ணு… உடனேல்லாம் இல்லைடி. நீயும் கல்யாணம் முடிச்சு, துபாய்லர்ந்து வந்தப்பறம். அதுவரைக்கும் ஒன்னு இரண்டு வருஷம் எப்படியோ நான் பார்த்துக்கறேன். உங்கப்பா திடமா இருந்தா நானே என் ஆயுசு வரைக்கும் பார்த்துக்குவேன். அவரையும் குழந்தை மாதிரி பார்த்துக்க வேண்டியிருக்கு. என் முட்டியும் சதி பண்ணுது. இதுல..”
“இரு… நான் துபாய்லர்ந்து வந்துடப் போறேன்னு யார் சொன்னது? நான் திரும்பி வர மாதிரியெல்லாம் இல்லை. அங்கேயேதான். என்னை கேட்காம நீங்க பாட்டு ப்ளான் பண்ணிட்டே போறீங்க?”, இப்போது எரிச்சல் மண்டியது. ஆக இருவரும் இதைப் பற்றி பேசி முடிவே எடுத்துவிட்டார்கள். மீண்டும் தானே பலிகடா என்று தோன்றியதும் கீர்த்தியின் முகம் இறுகியது.
“ஒன்னு இரண்டு வருஷம், வீட்டு லோன் எல்லாம் முடிச்சுட்டு, அங்க அவங்ககூடவே குழித்துறைக்கு வந்துடுவீங்கன்னு உன் மாமியார் சொன்னாங்களே? நாளைக்கு உனக்கே குழந்தை பிறந்தா அங்க வெச்சு எப்படி பார்த்துக்குவ?”
“என் விதி மறுபடி மறுபடி உன் கால்லையே விழ வெக்குது. நான் உயிரோட இருந்தா உன்னை ஏண்டி கேட்கப் போறேன். எங்க பொண்ணை எப்படில்லாம் வளர்க்கணும்னு ஆசைப்பட்டோம் தெரியுமா?”, எனும்போதே தொண்டை அடைத்தது ப்ரீத்திக்கு. சரோஜினிக்குமே கண்ணீர் பொங்கியது.
“உன் அக்கா குழந்தைக்கு வேற யாரும் இல்லைன்னா, நீ வளர்க்கறதை உன் மாமியார் ஒன்னும் தப்பு சொல்ல மாட்டாங்கடி. அதுவும் ஹர்ஷிக்கு அவ அப்பா பணம் மொத்தம் வரும். நாங்க பேசறோம் அவங்ககிட்ட”, சரோஜினியும் சொல்ல,
“ஆக போன முறை மாதிரியே குடும்பம் மொத்தம் ஒன்னு கூடி முடிவெடுத்துட்டீங்க? இளிச்ச வாய் கீர்த்தியை வெச்சு நம்ம காரியத்தை சாதிச்சுக்குவோம், அவ வாழ்க்கை எப்படி போனா என்ன? அதுதானே?”, பல்லிடுக்கில் சிதறி வந்தன சொற்கள்.
“வேற என்னதான் பண்றது கீர்த்தி? உறவெல்லாம் இருந்தும் அவளை கொண்டு போய்…அன்…அனாதை இல்லைத்துல சேர்க்கணுமா?”, என்று ப்ரீத்தி திணறிப்போய் கேட்க, கீர்த்தியாலும் பேச முடியவில்லை. எல்லோரும் சேர்ந்து இப்படி தன்னை மூலையில் முடக்குவது மூச்சை முட்டியது.
“இல்லை… என்னால முடியாது… ம்மா… என்னால கல்யாணமே பண்ண முடியாதுன்னு நினைச்சப்போ, ஜோ வந்து நம்பிக்கை குடுத்தான். இப்பதான் கொஞ்சமா கடந்து வர பார்க்கறேன். எதை மறக்கணும்னு நினைக்கறனோ, அது ஹர்ஷி ரூபத்துல கூடவே இருந்தா, சத்தியமா என்னால என்னை சரி பண்ணிக்க முடியாது. ஜோ… அவன் ஹர்ஷிதாவை பார்க்கறப்போல்லாம் என்ன நினைப்பான்?“, தலையை மறுப்பாக ஆட்டியவள் பேச,
“ஏய்.. குழந்தையை அவ பிறப்போட முடிச்சு போடாத கீர்த்தி. அவ ஜனிச்ச விதத்துக்கு அவளை காரணமாக்கி தண்டிக்காதே!“ ப்ரீத்தி அவசரமாக இடைபுகுந்தாள்.
ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்தவள், தாயையும் உடன்பிறந்தவளையும் நேராக நோக்கி, “இங்க பார், அவ என் வயத்துல இருந்த நேரம் முழுக்க, ஏன் பிறந்து எங்கிட்ட பால் குடிச்ச வரை அவ உன் புருஷனோட பிம்பமாத்தான் தெரிஞ்சா. மொத்தமா வெறுத்தேன். அப்ப உனக்கு அது வசதியா இருந்துச்சு. எங்க திடீர்னு தாய் பாசம் பொங்கிடப் போகுதுன்னு பயந்த, அவளை கண்ணுல படாமலேயே வெச்சிருந்த, இப்ப உனக்கு உடம்பு முடியாம போகற வரைக்குமே அதுதான் உன் எண்ணம். கரெக்டா?”, என்று கேட்கவும், உதட்டைக் கடித்த ப்ரீத்தி தலையை ஆம் என்று ஆட்டினாள்.
“இப்ப என்னால நினைப்பை மாத்திக்க முடியாது. அவ பிறப்பையும் அவளையும் தள்ளி வெச்சு பார்க்க முடியாது. என்னால குழந்தையே பெத்துக்க முடியாட்டாலும் ஹர்ஷியை என்னால வெச்சிக்க முடியாது. புரியுதா?”, கீர்த்தியின் கோபம் தெளிவாகத் தெரிந்தது இருவருக்கும். அவர்கள் இப்படி ஒரு எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை.
“ஏன் கீர்த்தி… அப்ப ஹர்ஷிய எதாவது காப்பகத்துல சேர்த்துடுவீங்க இல்லை? அங்க என்ன நடக்குதுன்னு பேப்பர்ல படிக்கறதான? இப்பல்லாம் பொண் குழந்தைங்க சின்ன வயசுன்னுகூட பார்க்காமா …”, என்றவள் வாய் பொத்தி அழுது கொண்டே, “உனக்கு நடந்தது அவளுக்கும் நடக்கணுமா? அப்படித்தான் எங்களை நீ பழி வாங்கணும்னு நினைக்கிறியா? அவ்வளவு கல் மனசாடி உனக்கு?”, என்று பேசிக்கொண்டே போக, காதுகளைப் பொத்திக்கொண்ட கீர்த்தி, அதற்கு மேலும் நிற்கத் திராணியின்றி மடங்கி அமர்ந்தாள்.