Advertisement

“மாமா! அப்படியெல்லாம் இல்லை மாமா! நீங்க தான் எப்படியாவது அக்காவ சமாதானம் செஞ்சு எனக்காக அம்மா அப்பா கிட்ட பேசணும். ப்ளீஸ் மாமா! 
இங்க வந்து வஞ்சு கிட்ட நீங்களும் அக்காவும் பேசிப் பாருங்க. அப்புறம் சொல்லுங்க. நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்கறேன். ஆனா உங்களுக்கு வஞ்சுவ கண்டிப்பா பிடிக்கும்! எனக்காக ஒரு தடவை இங்க வாங்க மாமா!”
ஏகப்பட்ட மாமா போட்டு கெஞ்சும் மைத்துனனை ஷ்யாம் சுந்தரும் அதிசயமாக பார்த்தான்.
புவனா இவ்வளவு நேரமும் புலம்பியதன் காரணம் புரிந்தது. இதுவரை ஒரு சட்டை வாங்குவதாக இருந்தால் கூட வீட்டில் சொல்லி விட்டு வாங்குபவன் இவ்வளவு பெரிய முடிவை வீட்டில் ஒருவரிடமும் கலக்காமல் எடுத்தது அவனுக்கே ஆச்சரியம் தான்.
எல்லாம் காதல் செய்யும் மாயம். வயசுக்கோளாறு என்று ஷ்யாம் சமாதானம் செய்து கொண்டாலும் மனைவியின் பிறந்த வீட்டை நன்கு அறிந்திருந்ததால் இது எப்படி சாத்தியம் என்ற சந்தேகம் தான்.
அதுவும் பானுவின் குணத்துக்கு குடும்பப்பழக்க வழக்கங்களை விடக்கூடாது என்று மகளிடமே கண்டித்து சொல்லும் அவர் எப்படி இந்த காதலை ஒத்துக்கொள்வார் என்றே புரியவில்லை.
காதலிக்கும் வரை மட்டும் தான் இருவரின் மனது மட்டும் சம்மந்தப்படும். அது கல்யாணமாக கனியும் போது இரு குடும்பமும் சம்பந்தப்படுகிறதே!
அதில் ஜாதி, மதம், பழக்க வழக்கங்கள், உணவு முறை என்று எத்தனை வித்தியாசங்கள்! 
ஷ்யாம் இதையெல்லாம் யோசித்தாலும் ராம்குமாரின் கெஞ்சலை ஒதுக்க மனம் வரவில்லை. மனைவியை சமாதானப்படுத்தி வாரக்கடைசியில் பெங்களூருக்கு அழைத்துக்கொண்டு வருவதாக சொல்லியே வைத்தான்.
ஒரு வழியாக பேசி முடித்து மனைவியைப் பார்க்க புவனா மொபைலை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். தீபுவுக்கு போர்வை போர்த்தி ஏசியை குறைத்து வைத்து விட்டு மனைவியின் பக்கத்தில் வந்து அமர்ந்தான் ஷ்யாம்.
அவள் என்ன செய்கிறாள் என்று எட்டிப் பார்க்க அவள் முகநூலில் எதோ படித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
“ஓய்! உன் தம்பியும் உன்ன மாதிரி தத்தினு நினைச்சேன். அவன் திறமையா ஒரு பொண்ண உஷார் பண்ணி இருக்கான்…அதுவும் உங்க யார் கிட்டயும் சொல்லவே இல்லாம…”
புவனாவுக்கு அவன் வம்பிழுத்தாலும் கணவனின் மனம் நன்கு தெரியும். 
அதனால் புரண்டு அவன் மடியில் படுத்தவள் “உங்கள கல்யாணம் பண்ண என்ன மாதிரி பட்டிக்காட்டு தேன்மொழியே போதும்.. ஆனா என் தம்பி அப்படியா? பெரிய படிப்பு படிச்சு கை நிறைய சம்பாதிக்கிறான். அவனுக்கு ஏத்த பொண்ணா இருக்க வேணாமா?”
அவள் நெற்றியில் புரண்ட தலைமுடியை அன்பாய் ஒதுக்கி விட்டவன் அதற்கு முற்றிலும் வேறான நக்கல் குரலில் கேட்டான்.
“பாருடா! இதுவரை பாசமலரா இருந்தவ இப்ப சந்திரமுகியா மாறிட்டா? நேத்து வரை தம்பி தம்பின்னு பாசத்த காட்டிட்டு இப்ப அவன் லவ் மேட்டர் தெரிஞ்சதும் நாத்தனாரா ஒரே நிமிஷத்துல மாறிட்ட பாரு!”
“நா அப்படில்லாம் இல்ல. என் தம்பிக்கு நல்ல பொண்ணா அமையணும்னு ஆசைப்பட்டா அது தப்பா?”
“அத இந்த ரூமுல உக்காந்து எப்படி பாப்ப? பெங்களூர் போய் அந்த பொண்ணப் பாத்தா தானே தெரியும். உன் தம்பிக்கு அந்த பொண்ணு பொருத்தமா இல்லையான்னு?”
ஷ்யாம் விளையாட்டாக பேசியதை விட்டு சீரியசாக கேட்க அதற்கு புவனாவிடம் பதில் இல்லை.அவள் மெளனமாக இருக்க ஷ்யாமே தொடர்ந்தான்.
“புவி! உங்க வீட்டுல வசதிக்கு எந்த குறையும் இல்ல. அதனால அந்த பொண்ணு கிட்ட நீங்க எதிர்பார்க்க வேண்டியது நல்ல பொண்ணா? அவள கல்யாணம் செஞ்சா உன் தம்பி சந்தோஷமா இருப்பானான்றத மட்டும் தான்.”
கணவனின பேச்சில் புவனா யோசனையில் ஆழ்ந்து விட இன்று இது போதும் என்று ஷ்யாம் அதோடுப் படுத்து விட்டான்.
ஆனால் ராம்குமார் விடவில்லை. அவன் காதலை வேண்டுமானால் யாரையும் கேட்காமல் வஞ்சுவிடம் சொல்லி விட்டானே தவிர கண்டிப்பாக கல்யாணத்திற்கு எல்லோரின் ஒப்புதலும் வேண்டும்.
அதனால் விடாமல் அந்த வாரம் முழுதும் அக்காவுக்கும் மாமாவுக்கும் போனடித்து அவர்கள் மனதை கரையாய் கரைத்தான்.
கூடவே ஷ்யாமும் அவன் சார்பாக பேச புவனா ஒரு வழியாக பெங்களூர் வர ஒத்துக்கொண்டாள். 
“தம்பி! உனக்காக தான் நா பெங்களூர் வரேன். வீட்டுக்கு ஏத்த பொண்ணா எனக்கு பட்டிச்சுன்னா தான் அம்மா அப்பா கிட்ட பேசுவேன். இல்லனா நோ தான்.” என்று கண்டிஷன் வைத்தே கிளம்பினாள்.
ராம்குமாருக்கு எப்படியும் வஞ்சுவை அக்காவுக்கு பிடித்து விடும் என்ற நம்பிக்கை இருந்ததால் அவன் பயங்கர சந்தோஷத்தில் இருந்தான்.
சொன்னபடியே வெள்ளி இரவு கிளம்பி புவனா குடும்பம் பெங்களூர் வர ராம்குமார் அவர்களுக்கு எல்லா ஏற்பாடும் செய்து வைத்திருந்தான்.
அவன் இருக்கும் வீட்டில் ஷேரிங் முறையில் ஆண்களாக இருந்ததால் நல்ல ஹோட்டலில் அறை எடுத்திருந்தான்.
சொன்ன மாதிரியே அவர்களை உடனே வஞ்சுவைப் பார்க்க அழைத்துப் போகவில்லை.
கார் வைத்து அவர்களை ஊர் சுற்றி காட்டி ஷாப்பிங் கூட்டிப்போய் அக்காவுக்கு தீபுவுக்கு மாமாவுக்கு என்று ஏகப்பட்டதை வாங்கிக் குவித்தான்.
தீபுவை அழைத்துக்கொண்டு தீம் பார்க், தியேட்டர் பெரிய ஹோட்டலில் விருந்து என்று சனிக்கிழமை முழுதும் அவர்களோடு சுற்றியவன் ஞாயிறு மதியம் லஞ்சுக்கு தான் வஞ்சுவை அழைத்திருந்தான்.
அவர்கள் ஞாயிறு இரவே ஊருக்கு கிளம்புவதால் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே இருந்த உணவகத்தில் சந்திப்பு நிகழ்ந்தது.
இவர்கள் தயாராகி இருக்க ராம்குமார் வஞ்சுவை அழைத்துக் கொண்டு ஒரு மணிக்கு சரியாக வந்து விடுவதாகப் பேச்சு.
அறையில் தாங்கள் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் எடுத்து புதிதாக தம்பி வாங்கித் தந்திருந்த ட்ராலி சூட்கேசில் அடுக்கிக் கொண்டிருந்தாள் புவனா. 
தீபு ராம்குமார் வாங்கித் தந்திருந்த நொறுக்குத்தீனியை சாப்பிட்டுக்கொண்டு கார்டூன் பார்க்க ஷ்யாம் மனைவியின் முகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சிந்தனையை கவனித்தான்.
“என்ன புவி யோசனை? தம்பி கிட்ட கேக்க வேண்டிய லிஸ்டில் ஏதும் விட்டுப் போச்சா?”
புவனா கணவன் தம்பி இருவரின் வற்புறுத்தலில் கிளம்பி வந்திருந்தாலும் என்னவோ உறுத்தியது. வெள்ளி அன்று கிளம்புமுன் அம்மாவுக்கு அழைத்து பெங்களூர் போவதை சொன்னதும் பானுவிற்கு ஒரே சந்தோசம்.
திருமணம் ஆகி இந்த ஆறு வருடத்தில் இப்போது தான் முதல் முறையாக இருவரும் அங்கே போகிறார்கள். மகனைப் பார்க்க மகள் போகிறாள் என்றதும் நிறைய சொன்னார்.
மகனுக்கும் போன் செய்து மகள் மருமகனை நன்றாக கவனித்து கை நிறைய வாங்கிக் கொடுத்து அனுப்ப உத்தரவிட்டவர் மகளிடமும் தன் தேவையை சொல்லவே செய்தார்.
“புவி! நீ சொன்ன மாதிரி நானும் இந்த வாரம் பூரா சும்மா இருந்திட்டேன். இப்ப ரெண்டு நாள் முன்ன போன் செஞ்சு நாம என்ன முடிவு பண்ணிருக்கோம் என்று ரஞ்சனி வீட்டுல கேக்கறாங்க. அவங்களுக்கும் பதில் சொல்லணும் இல்ல? 
நீ தான் அவனைப் பார்க்க போறியே? நேராவே அவன் கிட்ட பேசி நல்லதா ஒரு முடிவ அவன் வாயில இருந்தே வாங்கிடு. என்ன புரியுதா? வீட்டுக்கு பெரிய பொண்ணு நீ தான். நீயும் மாப்பிள்ளையும் தான் முன்ன நின்னு தம்பிக்கு எல்லாம் பேசி முடிக்கணும். புரியுதா?”
பானு மறுபடியும் புவனாவிடம் தன் உள்ளக்கிடக்கையை சொல்ல அப்போதில் இருந்தே புவனாவிடம் ஒரு நெருடல்.
ஷ்யாம் நாம் பார்த்த பிறகு உன் அப்பா அம்மாவிடம் பேசலாம் என்று வஞ்சுவைப் பற்றி பேச விடாமல் தடுத்து விட்டான்.
அப்போது அது சரியான யோசனையாகப் பட்டது இப்போது நெருடியது. அம்மாவிடம் மறைத்து செய்வது போல இருந்தது. கூடவே வஞ்சுவைப் பற்றி தான் அறிந்து கொண்டது நல்லதா கேட்டதா என்றே தெரியாமல் குழம்பிப் போனாள். 
அன்று தம்பியிடம் பேசிய பிறகு வஞ்சுவின் போஸ்ட் முழுவதையும் படித்திருந்தாள்.
அவர்களின் அன்றைய காதல் போஸ்டுக்குப் பிறகு பின்னால் போய் பார்த்திருந்தாள். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக காதல் கவிதைகளாகவே இருக்க அதிலும் ராம்குமாரின் பெயரை டேக் செய்திருக்க அவள் வலை வீசித் தம்பியை பிடித்திருப்பாளோ என்று அவளை பார்க்காமலே பிடிக்காமல் போனது.
அதை யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு கணவன் கேட்டதும் மறைக்க முடியாமல் மனதில் இருந்ததை அப்படியே அவனிடம் சொல்லி விட்டாள்.
“ஏங்க! நீங்களுமா என்னை அப்படி நினைக்கறீங்க? ஆசையா வாங்கிக்குடுத்தானேன்னு வாங்கிட்டேனே தவிர இதெல்லாம் நீங்க வாங்கித் தராததா?”
கையில் இருந்ததை அப்படியே போட்டு விட்டு வருத்தத்துடன் கணவனை புவி பார்க்க ஷ்யாம் மனைவியை தோளோடு அணைத்துக்கொண்டான்.
“ஹே! என்ன இது? எப்பவும் நா சீண்டினா பதிலுக்கு பேசுவ? இன்னிக்கி என்ன? ஒரே பீலிங்கா பேசற? நாம வஞ்சுவ தான் பொண்ணு பாக்க போறோம். நீ ஏன் நெர்வஸ் ஆகறேடா?”
அவன் தோளில் வாகாக சாய்ந்து கொண்ட புவனா “உங்கள கல்யாணம் பண்ணி நா சந்தோஷமா இருக்கற மாதிரி என் தம்பியும் அவன் ஓய்ஃபோட சந்தோஷமா இருக்கணும். அதான் என் எதிர்பார்ப்பு. 
இப்படி அம்மாப்பாக்கு தெரியாம அந்த பொண்ணப் பாக்க வந்திட்டமேன்னு உறுத்தலா இருக்குங்க. அவங்களுக்கு தெரியாததா எனக்கு தெரியும்?”
“ஹே! ரொம்ப யோசிக்காத! உன் தம்பியும் இதெல்லாம் யோசிச்சு தான் அந்த பொண்ண செலக்ட் பண்ணி இருப்பான். எதா இருந்தாலும் நாம பாத்துட்டு முடிவு பண்ணிக்கலாம் சரியா?”
இங்கே ஷ்யாம் புவனாவை தேற்றிக்கொண்டு இருக்க அங்கே அதே வேலையை ராம்குமார் வஞ்சுவிடம் செய்து கொண்டிருந்தான்.
  
  

Advertisement