Advertisement

அத்தியாயம் -12
 கேக் வெட்டி இருவருமாக மாறி மாறி ஊட்டி முடித்து தங்களின் காதலை பரிமாறிக் கொண்டு கற்பனை உலகை விட்டு நிஜத்துக்கு திரும்பி வந்தனர்.
“வஞ்சு! உங்க வீட்டுல நம்ம லவ்வ ஒத்துக்குவாங்களா? உங்க அப்பா அம்மா எப்படி?”
ராம்குமார் தன் தோளில் சாய்ந்திருந்த வஞ்சுவை கொஞ்சம் கவலையோடு தான் கேட்டான்.
உள்ளுர அவன் மனதுக்குள் இன்னும் உதைப்பு தான். ரஞ்சனியைப் பற்றி ஒரு முடிவும் சொல்லாமலே ஊரில் இருந்து கிளம்பி வந்திருந்தான்.
“பொண்ணு வீட்டுல கேப்பாங்களே? என்னடா சொல்லட்டும்?” ஊருக்குக் கிளம்பும் போது ஏற்கனவே பல முறை கேட்டு பதில் வராமல் போன கேள்வியை மறுபடி கேட்டார் பானு.
எல்லா விதத்திலும் பொருத்தமாக இருக்கும் இந்த நல்ல சம்பந்தத்தை விடக்கூடாது என்று அவருக்கு துடிப்பு. அதனால் கணவர் மகனை யோசிக்க விடு என்றதைக் கூட கேட்கவில்லை. 
இப்போது ஊருக்குப் போனால் மகன் மறுபடி வீட்டுக்கு வர ஒன்றிரண்டு மாதங்களாவது ஆகும் என்று பரபரத்தார்.
ராம்குமார் எடுத்த முடிவு அவருக்குத் தெரியாதே. ராம்குமார் வஞ்சுவின் மனம் அறிந்தாலும் அவளிடம் பேசாமல் அம்மாவிடம் தங்கள் காதலை சொல்ல விரும்பவில்லை.
அதனால் மேலே எம்பிஏ படிக்க இருப்பதாகவும் ஒரு வருடம் கழித்து கல்யாணம் செய்வதாகவும் சொல்லித் தட்டிக் கழித்து இருந்தான்.
அப்போதும் பானு விடவில்லை.
“ஏன் தம்பி? எப்படியும் வேலைல இருந்துட்டே கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸா தான படிக்கப் போறே? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”
பானுவின் விடாப்பிடியான கேள்விக்கும் ராம்குமார் பதில் சொல்லாமலே நழுவ மூர்த்திக்கு தான் முதலில் சந்தேகம் வந்தது.
“தம்பி! நீ யாரையும் மனசுல நினைச்சிருக்கியா? இருந்தா சொல்லு!”
மூர்த்தி இப்படி கெட்டதும் பானுவிற்கு முகம் சுண்டிப் போனது. அவர் கைக்குள் வளர்த்த மகன் கை மீறி காதல் கீதல் என்று சொல்லி விடுவானா என்று பயம்.
அதனால் அவனைக் கேட்காமல் கணவர் மேல் பாய்ந்தார்.
“என்ன பேசறீங்க நீங்க? என் பையனுக்கு அப்படி ஒரு மட்டமான புத்தி ஏதும் கிடையாது. என் விருப்பம் கேட்டு தான் அவன் எதா இருந்தாலும் செய்வான். இந்த காதல் கண்றாவி எல்லாம் என் புள்ளைக்கு சுட்டுப் போட்டாலும் தெரியாது. நானும் அப்படி வளக்கல.”
கணவரிடம் பேசினாலும் மகனுக்கு மறைமுகமான எச்சரிக்கை அதில் இருந்தது.
  ராம்குமார் என்னவென்று பதில் சொல்வான்? வஞ்சுவிடம் பேசாமல் பெற்றோர்களிடம் பேச முடியாது என்று மட்டுமே தோன்ற பூசி மெழுகி இதோ இங்கே வந்து வஞ்சுவிடம் காதலும் சொல்லியாச்சு.
ராம்குமாரின் கேள்வியில் வஞ்சுவின் சிந்தனை அவள் வீட்டைப் பற்றி திரும்பியது. இதுவரை குரு அவள் காதலை ஏற்க வேண்டும் என்ற கவலை இருந்ததே தவிர அதற்கு மேல் யோசித்ததில்லை.
வஞ்சுவின் குடும்பம் கீழ் நடுத்தர குடும்பம். மூன்று வேளை பட்டினி இல்லாமல் சாப்பிட்டு மானத்தை மறைக்க துணி வாங்கித் தரும் நிலையில் தான் அவள் அப்பாவின் வருமானம். 
டிரைவருக்கு என்ன பெரிதாக வருமானம் கிடைத்து விடப்போகிறது.?
மகளை அதற்காகவே அரசு பள்ளியில் சேர்த்து விட்டு சக்திக்கு மீறி என்றாலும் மகனை மட்டும் தனியார் பள்ளியில் சேர்த்து இருந்தார். அவனும் இப்போது தான் பதினோராம் வகுப்புக்கு வர வஞ்சுவின் சம்பளம் வந்த பிறகு தான் அவர்களின் வாழ்க்கைத்தரம் கொஞ்சம் உயர்ந்தது.
அவள் இந்த ஒன்றரை ஆண்டுகளாக அனுப்பி இருந்த பணத்தில் தான் ஒரு சிறு மனையை வாங்கி சிறிய அளவில் வீட்டை கட்டி இருந்தனர். 
அவள் அம்மா பவானி இப்போது மகளின் புண்ணியத்தில் கழுத்தில் காதில் சிறு தங்க நகைகளோடு முகத்தில் சிரிப்போடு வலம் வந்து கொண்டிருந்தார். 
அதோடு மகளுக்கு பத்து பவுன் நகையும் சேர்த்து வைத்திருந்தனர். வீட்டுக்கும் டிவி,பிரிஜ் என்று வாங்கிப் போட்டு இருந்தனர்.
வீடு கட்டி பொருள்கள் வாங்கிப் போட்டதில் கடன் இருந்தாலும் மகளின் சம்பளத்தில் அடைத்து விடலாம் என்று நம்பிக்கை இருந்தது.
இன்னும் மகனின் படிப்புக்கும் மகள் உதவுவாள் என்று நம்பிக்கை இருந்தது. வஞ்சுவுக்கும் இப்போது தான் இருபத்தி மூன்று ஆரம்பம் என்பதால் இப்போதைக்கு கல்யாணம் செய்யும் எண்ணமே அவர்களிடம் இல்லை. 
அதனால் ராம்குமார் கேட்டதும் வஞ்சுவிற்கு என்ன பதில் சொல்வது என்றே புரியவில்லை. அவள் குருவை விரும்பியதைத் தாண்டி யோசிக்கவே இல்லை.
“தெரியல குரு! இதுவரைக்கும் எங்க வீட்டுல என் கல்யாணத்தைப் பத்தி பேச்சே வந்ததில்லை. என்ன சொல்வாங்கனே தெரியலை.”
வஞ்சு கவலையோடு பேச ராம்குமார் யோசனையில் ஆழ்ந்தான். அப்போது ஓட்டல் சிப்பந்தி ஒருவர் வந்து எட்டிப் பார்க்க மணி ஒன்பது ஆனதை அப்போது தான் இருவரும் உணர்ந்தனர்.
இந்த ஒரே மாலையில் அவர்கள் இருவரிடமும் எத்தனை விதமான உணர்ச்சிகளின் வெளிப்பாட?
அன்று இரவு வஞ்சு இன்று என் வாழ்வில் மிக அதிகமாக மகிழ்ச்சியோடு இருந்த நாள் என்று முகநூலில் போஸ்ட் போட்டு ராம்குமாரை டேக் செய்திருந்தாள்.
ராம்குமார் அதற்கு லவ் ரியாக்ஷன் கொடுத்து எனக்கும் தான்    என்று கமென்ட் போட்டு ஒரு லவ் ஸ்டிக்கரும் போட்டு விட அவர்கள் காதல் ஒரே போஸ்டில் ஊருக்கே தெரிந்து போனது. 
இரவு முழுதும் நெருங்கிய நண்பர்களின் தொடர் அழைப்பில்  இருவருக்கும் தூக்கம் இல்லை.
ராம் ஊருக்குக் கிளம்பும்போது திருமணத்திற்கு பிடிகொடுக்காமல் நழுவிய போதும் பானு சும்மா விடவில்லை. எப்படியாவது மகனை இந்த திருமணத்தில் பிடித்துப் போட வேண்டும் என்று அடுத்து மகளின் மூலமாக முயன்றார்.  
  புவி! உங்க அப்பா சொன்னத கேட்டதுல இருந்து கெதுக்குன்னு இருக்கு. நீ சொன்னா அவன் கேப்பான். எப்படியாவது நீயும் மாப்ளையும் சேர்ந்து அவன்ட பேசி கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சிடுங்க.”
பானு மகளிடம் புலம்பலாய் வேண்டுகோள் வைக்க புவனா தான் சமாதானப்படுத்தினாள்.
“அம்மா! ராமை அவசரப்படுத்த போய் அப்பா சொல்ற மாதிரி அவன் வீம்புக்கு எதுலயாச்சும் குதிச்சிட்டா இன்னும் கஷ்டம். கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்மா!”
அவரின் பயம் நியாயமானது தான் என்று தெரிந்தாலும் அவசரமாக முடிக்கிற விஷயம் இல்லை இது என்று புரிந்ததால் பானுவை சமாளித்து இருந்தாள்.
அன்று தற்செயலாக முகநூலில் வலம் வந்து கொண்டு இருந்த புவனாவுக்கு வஞ்சுவின் போஸ்ட் நோடிபிகேஷனில் காட்ட அந்த போஸ்டைப் போய் பார்த்தவளின் பார்வைக்கு உடனே எதுவும் தவறாகத் தெரியவில்லை.
இருவரும் ஏதேனும் ப்ரொஜெக்ட் அல்லது டீமாக எதோ நிர்வாகம் செய்திருக்கலாம் என்று வாழ்த்தப் போனவளுக்கு கீழே அவர்களின் நண்பர்கள் போட்ட கமெண்ட்ஸ் தான் போஸ்ட் எதைப் பற்றி என்று புரிய வைத்தது. 
மணி பதினொன்றைக் காட்ட எதைப் பற்றியும் யோசிக்காமல் உடனே தம்பிக்கு போனடித்தாள்.
“தம்பி! ராம்! என்னடா நடக்குது? யாருடா அந்த வஞ்சு? பேஸ்புக்ல அந்த பொண்ணு போட்டிருக்கிற போஸ்ட் அதுல வர கமெண்ட்ஸ் எதுவும் சரியா படலியே?”
புவனா அப்போதும் தம்பி வாயால் வரட்டும் என்று தன் சந்தேகத்தை சொல்லாமலே விசாரணையில் ஈடுபட ராம்குமார் இந்த சந்தர்ப்பத்தை தானே எதிர்பார்த்து அந்த கமெண்டை போட்டான்.
தானாக வீட்டில் இந்த விஷயத்தை சொல்வதை விட தன் அக்காவின் கவனத்திற்கு போனால் அவள் மூலம் எளிதாக பெற்றோரை சம்மதிக்க வைத்து விடலாம் என்று ஒரு எண்ணம்.
அக்காவிடமும் தானே போய் தங்கள் காதலை சொல்ல தயக்கம் தடை போட வஞ்சு இந்த போஸ்டில் தன்னையும் டேக் செய்து போட்டதால் அக்காவின் பார்வைக்கு அது கண்டிப்பாக போகும்; அக்கா கேட்டதும் சொல்லிக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டான். 
உடனே அழைப்பு வரும் என்று எதிர்பார்க்காவிட்டாலும் ஓரிரு நாட்களில் எதிர்பார்த்து இருந்தான். அன்றே அக்கா அழைக்கவும் மறைக்காமல் உண்மையை அப்படியே சொல்லி விட்டான்.
“ஆமாக்கா!  வஞ்சுவை லவ் பண்றேன். காலேஜ்ல என்னோட ஜூனியர் அவ. ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு. நீங்க தான் அம்மா அப்பா கிட்ட பேசி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கணும்.”
“தம்பி! நீ செஞ்சது கொஞ்சம் கூட சரி கிடையாது. ஊருல அம்மா அப்பா அத்தினி தடவ கேட்டாங்க தானே? ஒரு வார்த்தை சொன்னியா நீ?”
புவனா கோபத்தை மறைக்காமல் கண்டிப்பாக கேட்டாள்.
“இந்தக்கதை இருக்கட்டும். மொதல்ல அந்த பொண்ணு ரஞ்சனி வீட்டுல நம்மளப்பத்தி என்ன நினைப்பாங்க? பையன் யாரையோ லவ் பண்றது தெரிஞ்சும் இவங்க பொழுதுபோக்குக்கு நம்ம வீட்டுக்கு பொண்ணு பாக்க வந்திருக்காங்கன்னு நினைக்க மாட்டாங்க? 
அம்மா ரஞ்சனிய பத்தி சொன்னதுமே நீ லவ் பண்ற விஷயத்த சொல்லி இருக்க வேணாம்? அதுக்கு அப்புறமும் அப்பா எத்தன தடவ கேட்டாங்க? நீயா இப்படின்னு இருக்கு தம்பி. நீ நடந்துகிட்ட விதம் ரொம்ப தப்பு….”
புவனா ராம்குமாரை பேசவே விடாமல் பிடிபிடி என்று பிடித்து விட்டாள்.
அவள் பேசிய எதற்கும் ராம்குமார் வாயே திறக்கவில்லை. மெளனமாக கேட்டுக்கொண்டான். அவனுக்கும் உள்ளூர உறுத்தல் இருந்தது தானே?
“சாரி அக்கா! நா ஊருக்கு வரும்போது வஞ்சுவைப் பத்தி எந்த முடிவும் எடுக்கல கா. இங்க வந்த பிறகு தான் ரெண்டு பேரும் பேசினோம். அதுவும் ஒருத்தருக்கொருத்தர் ப்ரொபோஸ் கூட இன்னிக்கி தான் பண்ணிக்கிட்டோம். இல்லனா கண்டிப்பா சொல்லி இருப்பேன்.”
ராம்குமார் தான் செய்தது தப்பு என்பதால் தழைந்தே பேச புவனா லேசில் சமாதானம் ஆகவில்லை.
“அக்கா! நீங்க ஒரு தடவ வஞ்சு கூட பேசிப் பாருங்க. அவ ரொம்ப நல்ல பொண்ணுகா. அவ கூட பழகினா உங்களுக்கே அவள ரொம்ப பிடிச்சிடும்…
வீக் எண்டு தீபு குட்டியயும் மாமாவையும் கூட்டிட்டு இங்க பெங்களூர் வாங்க கா. குட்டிக்கும் பொழுது போகும். ஷாப்பிங் போகலாம். உங்களுக்கும் தீபுக்கும் நிறைய வஞ்சுவ அறிமுகப்படுத்தி வெக்கறேன். பேசிப் பாருங்க. உங்களுக்கே பிடிக்கும். அப்புறம் சொல்லுங்க கா…”
“டேய்! உன் தொழில் திறமை பேச்சு சாமர்த்தியம் எல்லாம் என் கிட்டயே காட்டறியா? எனக்கும் என் பொண்ணுக்கும் வேண்டியத வாங்கித் தர என் புருஷன் இருக்காருடா. இவ்வளவு பெரிய விஷயத்தையே எங்க கிட்ட சொல்லாம மறைச்சிட்டு இதுக்கு மட்டும் என்ன?”
கோபத்தில் புவனா பாதி பேசிக்கொண்டிருக்கும் போதே போனை வைத்து விட ராம்குமார் அவனுக்கிருக்கும் ஒரே வாய்ப்பை விடுவதாக இல்லை.
அவன் அப்பாவைக் கூட பேசி சம்மதிக்க வைத்து விடுவான். ஆனால் அம்மாவை ஒத்துக்கொள்ள வைக்க கண்டிப்பாக அக்காவின் தயவு வேண்டுமே!
பல முறை அக்காவை சமாதானம் செய்ய போனடித்த போதும் புவனா எடுக்கவே இல்லை. விடாமல் முயன்று பார்த்தவன் அடுத்து ஷ்யாம்சுந்தருக்கு அழைத்தான். 
அவர் எடுத்தவுடனே “என்ன மாப்ள நடக்குது? உங்கக்கா இங்க போனுல உன் கூட பேசறதெல்லாம் கேட்டேன்! என்னென்னவோ சொல்லுறா? நீயா இப்படி மாறிட்டே?” என்று நேராக அவனே விஷயத்தை தொட்டான்.
 

Advertisement