ஷஷ்டி முகத்தை சுருக்க, “மாமா!” என அதட்டினாள் தண்மதி.
‘சவுண்ட் பார்டா!’ என மனதில் வியந்து கொண்டே , தலையை கையில் தாங்கி மதியின் பக்கமாக ஒருக்கலித்து படுத்தான்.
“சின்ன புள்ளகிட்ட போய் வம்பு செய்வீங்களா? அவகிட்ட நல்லா பேசுங்க” என்றாள் தண்மதி.
“அவ ஆட்டத்தை கலைச்சுதுதான் தப்பு, அவதான் என்கிட்ட ஸாரி கேட்கணும்” என வம்பு செய்தான் ரவி.
“அதான் கேட்டாளே” என்றாள் மதி.
“ம்ம்… அப்புறமும் என்ன? முடிஞ்சது எல்லாம், நான் தூங்குறேன். இப்பலாம் நம்ம யார் கண்ணுக்கு தெரியறோம்?” என்ற ரவி, கண்களை மூடிக் கொண்டு வம்பை தொடர்ந்தான். கோவித்துக் கொண்ட ஷஷ்டி உள்ளே ஓடிச் சென்று விட்டாள்.
“பாவம்ல மாமா அவ? நான் சொல்லியும் கேட்க மாட்டீங்களா?” எனக் கேட்டவள் அவனது ரசனைப் பார்வையில் மௌனமானாள்.
“உரிமைக்குரல் எல்லாம் பலமா இருக்கே, ஹ்ம்ம்… குட்!” என சிலாகித்தவன், “என்கிட்ட பேசணும்னு தோணிச்சா உனக்கு?” என தீவிரமான தொனியில் கேட்டான்.
அவனை பாராமலே ஆம் என்றாள்.
“நீயே கால் பண்ணிருக்கலாம்ல மதி?” எனக் கேட்டான். நிறைய முறை அப்படி யோசித்தவளுக்கு செயல் படுத்தத்தான் முடியவில்லை.
இருவரும் ஏதும் பேசாமல் சில நொடிகள் கரைந்தன. திருத்தமான முகம், நேர்த்தியான உடை, ஒளி மிளிரும் கண்கள் என ஆர்ப்பாட்டம் இல்லாமல் அவனை ஈர்த்தாள்.
“நீ ரொம்ப லேட்டா பொறந்திட்ட, ரெண்டு மூனு வருஷம் முன்ன பொறந்திருக்க கூடாது?” என அவன் கேட்டுக் கொண்டிருக்க, பாட்டி வந்து விட்டார்.
அவனது பேச்சில் குழைந்து தழைந்து போயிருந்தவள் பாட்டியின் வரவில் நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள்.
அவனும் எழுந்தமர்ந்து கொள்ள, “உள்ள போ, உன் சித்திக்கு ஒத்தாசையா இரு” என பேத்தியை அனுப்பி வைத்து விட்டார் பாட்டி.
“அடுத்தது நீங்களா பாட்டி? நான் எதுவும் பண்ணிட மாட்டேன் அவளை” என்றான் ரவி.
“கல்யாணம் முடியற வரைக்கும் பொண்ண வச்சிருக்கவங்களுக்கு பயந்துதான் வரும் தம்பி. நீங்கதான் கல்யாணம் இப்ப வேணாம்னுட்டீய, கட்டிக்கிட்டப்புறம் யாரு உங்களை என்ன கேட்பாகன்னேன்? தேதி பார்க்கட்டுமா?” என்றார் அவர்.
சுற்றி வளைத்து அதிலேயே வந்து நின்றால் அவனும்தான் என்ன செய்வான்? அப்போதைக்கு வெறுமனே சிரித்து வைத்தான்.
விருந்து சாப்பிட்ட பிறகு பாரதியும் கணேசனும் ஓய்வெடுக்க சென்று விட்டனர். ஷஷ்டிக்கு இப்போதுதான் மாமன் கண்களுக்கு தெரிந்தான். அவனோடு குழந்தை சலுகையாக உறவாடி கொண்டிருக்க, தண்மதியும் அங்குதான் இருந்தாள்.
பாட்டிக்கு உறக்கம் வந்தாலும் வயதுப் பிள்ளைகள் தனியாக இருப்பதை விரும்பாமல் அவர்களிடம் வந்தமர்ந்து கொண்டார்.
“என்ன ம்ம்?” என அவள் கேட்க, முறைத்துப் பார்த்தார் பாட்டி.
“என்ன பாட்டி?” என தணிவாக கேட்டான் ரவி.
“உங்களுக்கே நல்லாருக்கா தம்பி இது? யாராவது வெளியாளுங்க வந்தா வயசு பொண்ணோட இவர் என்ன பேசிட்டு இருக்கார்னு நினைக்க மாட்டாங்க? அவளுக்குத்தான் ஏதும் புரியாது? உங்களுக்குமா?” எனக் கேட்டார்.
“ஆத்தா! என்ன பேசுற நீ?” என கடிந்து கொண்டாள் தண்மதி.
“வெளக்கமாத்து கட்டை! சும்மான்னு இருடி, பொம்பள புள்ள உனக்கில்லடி கூறு இருக்கணும்? ஈன்னு எல்லா பல்லையும் காட்டிகிட்டு உட்கார்ந்து கிடக்க” என திட்டினார் பாட்டி.
ரவிக்கு வந்த கோவத்தில் ஏதாவது சொல்லியிருப்பான், அதனால் பாட்டி இன்னும் பேசுவாரே தவிர்த்து புரிந்து கொள்ள போவதில்லை, ஏதாவது சண்டையானால் அக்காவுக்கு தெரிந்து போகும் என்பதால் அமைதியாக இருந்தான்.
பாரதிக்கு தெரிந்து போவதில் அவனுக்கு பயமொன்றும் இல்லை. இப்போதுதான் சேர்ந்து வாழ ஆரம்பித்திருக்கும் கணவன் மனைவிக்கு இடையில் தங்களை முன்னிட்டு பிரச்சனைகள் எழுவதை அவன் விரும்பவில்லை.
இன்று கூட வற்புறுத்தி அழைத்ததால்தான் வந்திருக்கிறான், அவனுக்கும் மதியின் நற்பெயர் பற்றி அக்கறை இருப்பதால்தான் கொள்ளை கொள்ளையாக அன்பும் ஆசையுமிருந்தும் அடக்கி வாசிக்கிறான்.
இதற்கு மேலும் தான் அங்கு இருந்தால் சரியாக இருக்காது என நினைத்தவன் புறப்பட ஆயுத்தமானான். பாரதி எழுந்து வரட்டும், தேநீர் பருகி விட்டு செல்லலாம் என சொல்லத்தான் செய்தார் பாட்டி. பரவாயில்லை என சொல்லி கிளம்பிச் சென்று விட்டான்.
நான்கரை மணி போல எழுந்து வந்த பாரதி, ரவியை காணாமல் எங்கே என டிவி பார்த்துக் கொண்டிருந்த மகளிடம் கேட்டாள்.
சற்று முன் நடந்ததின் சாராம்சம் புரியவில்லை என்றாலும் யார் என்ன பேசினார்கள் என்பதை அப்படியே செய்தி வாசித்தாள் ஷஷ்டி.
கோவத்தோடு மாமியாரிடம் சென்ற பாரதி, “என் தம்பி அபப்டியென்ன பொறுக்கி பையனா? என்னன்னு நினைச்சு அவனை பேசி துரத்தி விட்ருக்கீங்க?” எனக் கேட்டாள்.
“திடு திப்புனு வந்து நின்னு சத்தம் போடாதடி” என்றார் பரமேஸ்வரி.
மகள் சொன்னதை சொல்லி, “வயசுக்கு தக்க நடக்க தெரியாதா உங்களுக்கு?” என இரைந்தாள் பாரதி.
பாட்டிக்கும் கோவம் வந்து விட, “எதுவும் புரயாம தாம் தூம்னு குதிக்காத. இள வயச கடந்து வந்தவதானே நீயி?” என கேள்வி கேட்டார்.
பாரதியும் பாட்டியும் பதிலுக்கு பதில் பேசிக் கொண்டனர்.
ஒரு கட்டத்தில் “என்னாடி இப்போ? ரவி தம்பிதான் மதியை கல்யாணம் செஞ்சுக்க போவுது, ஆசை படறவங்க தனியா இருக்க வேணாம்னுட்டுதான் பேசினேன்” என சொல்லி விட்டார் பாட்டி.
“என்ன உளறுறீங்க?”
“என்ன உளறினேன்? ரவி தம்பிக்கு மதி மேல ஆசை, அவ படிக்கிற வரை காத்திருக்கேன்னு சொல்லியிருக்கு, வேணும்னா உன் புருஷன்கிட்ட கேளு” என்றார் பாட்டி.
அவசரத்தில் எதுவும் சொல்லவில்லை பாட்டி, பேத்தியின் திருமணத்தை நடத்தி விடும் ஆசையில்தான் கலகத்திற்கு வழி செய்தார்.
சத்தம் கேட்டு அங்கு வந்த கணேசனும் மதியும் பாட்டியின் பேச்சைக் கேட்டு திகைத்து போனார்கள்.
பாரதியோ தன் கணவரை சூடாக பார்த்தாள். அவர் பேச்சின்றி நிற்க, மதியை கோவமாக பார்த்தாள்.
சித்தியை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினாள் தண்மதி.
“ஏன்’டி ஏன்… எப்பவும் என்னை நிம்மதியா வாழ விடக்கூடாதுன்னு சபதம் எடுத்திருக்கியா நீ?” என பாரதி கேட்க, “ஹையோ அபப்டிலாம் இல்லை சித்தி” என்றாள் தண்மதி.
“ரவிக்கு மதியை கல்யாணம் முடிக்க என் வீட்ல உள்ள பெரியவங்க யாரும் பிரிய பட மாட்டாங்க. அவன் யாரையோ விரும்பி பெரியவங்க சொல்றத கேட்கலைனா கூட பிரச்சனை வராது, இவன்னா என் தலையை போட்டு உருட்டுவாங்க. மதிக்குன்னு யாரோ ஒருத்தன் கிடைக்காம போயிட மாட்டான், இவளுக்கு என்ன செய்யணுமோ எல்லாத்தையும் செய்ய இவருக்கு எந்த தடையும் நான் சொல்ல மாட்டேன், ஏன் நானே முன்ன நின்னு இவ கல்யாணத்தை நடத்தி தருவேன். ஆனா என் தம்பிய விட்ருங்க” என்றாள்.
“அமைதியா இரு பாரதி, எதுக்கு இவ்ளோ சத்தம், உள்ள வா” என்றார் கணேசன்.
“இவளை கட்டிக்க அவ்ளோ சீக்கிரம் யாரும் வர மாட்டாங்கன்னு என் தம்பியோட மண்டைய கழுவியிருக்கீங்க, ‘உன் அக்கா கூட நான் வாழணும்னா இவளை நீ கட்டிக்கணும்’னு ரவிகிட்ட பேசிட்டுத்தான் நீங்க என்னை தேடி வந்திருக்கீங்க” என அநியாயமாக குற்றம் சுமத்தினாள் பாரதி.
“பாரதி!” என அதட்டினார் கணேசன்.
“பேசாதீங்க! இங்க நீங்க எல்லாத்தையும் விட்டுட்டு நாங்க இருக்க இடத்துக்கு வந்தப்பவே நான் யோசிச்சிருக்கணும். எதுவா இருந்தாலும் உங்க அண்ணன் பொண்ண முன்னிறுத்திதான் செய்றீங்க, எப்பவுமே நான் உங்களுக்கு ரெண்டாம் பட்சம்தான்” என்றாள் பாரதி.
“ஐயோ இல்லை சித்தி!” இடையிட்டாள் தண்மதி.
எச்சரிக்கை போல அவளை நோக்கி ஒரு விரல் நீட்டிய பாரதி, “ஒழுங்கு மரியாதையா அவன்கிட்ட பழகறத நிறுத்துற, இல்லைனா அவ்ளோதான்” என்றாள்.
என் பேத்தியை எப்படி மிரட்டுவாய் என பாட்டி சத்தமிட, அவரை பிடித்து அடக்க பார்த்தாள் தண்மதி. அவர் விடுவதாக இல்லை.
கணேசனும் தன் மனைவியை பிடித்து இழுத்தார். மாமியாருக்கு பதிலடி தருவதில் விடாப் பிடியாக இருந்தாள் பாரதி. அதில் கணேசனின் மூக்கு கண்ணாடி தரையில் விழுந்து சிதறியது.
சட்டென ஒரு அமைதி படர, கோவமாக அறைக்கு சென்று விட்டாள் பாரதி.