“என்ன பிரச்சனை மதி உனக்கு? வெயிட் பண்றேன், உன் படிப்பு முடிஞ்சு கல்யாணம் பண்ணிக்கிறேன்னுதானே சொல்றேன்?”

வேகமாக திரும்பியவள், “உங்க வீட்ல சம்மதிக்க மாட்டாங்க. திரும்ப திரும்ப என் சித்தப்பா வாழ்க்கைக்கு தொல்லை கொடுக்க எனக்கு விருப்பமில்லை” என்றாள். 

“என் பேரெண்ட்ஸ் பத்தி என்ன தெரியும் உனக்கு? ப்ச்… அதெல்லாம் எந்த தொல்லையும் வராது”

“நீங்க சொன்னா ஆச்சா? அது அப்படித்தான் ஆகும். உங்க பாட்டிக்கு நான்னா சுத்தமா ஆகாது”

“ப்ச், என் அப்பயியை கட்டிக்க கேட்கல நான், என்னை கட்டிக்கத்தானே கேட்கிறேன், என்னை பிடிச்சிருக்கா இல்லையா அதை மட்டும் சொல்லு” 

“அப்படிலாம் என் மைண்ட்ல எதுவும் இல்லை” என அவள் பட்டென சொல்ல, அவனது தோள்கள் தளர,  மனமும் தளர்ந்து போனது. 

அவளுக்கு அவனது வேதனை பிடிக்கவில்லை. 

“நீங்க நல்லவங்க, இப்படிலாம் பேசாதீங்க. என் மேல உங்களுக்கு பரிதாபம், அதுல இப்படி ஏதேதோ சொல்றீங்க, பழைய படி இருங்களேன் ப்ளீஸ்” என்றாள். 

“எனக்கு அட்வைஸ் பண்றியா? இரக்கம் கருணை பரிதாபம்…” என்றவன் குரலை செருமி, காதல் என்ற வார்த்தையை தவிர்த்து, “விருப்பம் இதுக்கெல்லாம் வித்தியாசம் தெரியாதவன் இல்லை மதி நான்” என்றான். 

ரவியிடம் யாரால் என்ன குறை கண்டு விட முடியும்? உலக விவரங்கள் அதிகம் அறியாத வயதுக்கு மீறிய மன வலியை சுமந்து கொண்டிருப்பவள் அவள். நல்லவன் ஒருவன் வலிய வந்து கரம் பிடிக்க காத்திருக்கிறேன் எனும் போது… சம்மதிக்கும் நிலையில் அவள் இல்லையே. 

இயலாமையில் அவளது கன்னங்கள் இரண்டையும் கண்ணீர் தொட்டது. 

“ப்ச் மதி! என்ன சொல்லிட்டேன்னு அழற? ‘ம்’னு மட்டும் சொல்லுமா, மத்ததை நான் பார்த்துக்கிறேன்” என சொல்லிக் கொண்டே அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தான். 

அதற்கு மேல் அங்கே நின்றிருந்தால் எங்கே ம் என சொல்லி விடுவோமோ என அவளுக்கு பயம் வந்து விட்டது. “நான் வர்றேன்” என்றவள் கீழே ஓடிச் சென்று விட்டாள். 

முழுதாக இரண்டு நிமிடங்கள் அங்கேயே நின்று தன் உணர்வுகளை கட்டுக்குள் வைத்த பின்தான் கீழே வந்தான் ரவி. 

பாட்டியிடம் வந்த பிறகு கூட தண்மதிக்கு அழுகை நின்றிருக்கவில்லை. தான் திட்டியதால் அழுகிறாள் என்றே நினைத்துக் கொண்டார் பாட்டி.

 நான் விருப்பத்தை சொன்னதில் சரியான புரிதல் இல்லாமல் அழுகிறாள் என நினைத்த ரவிக்கு தன் மீதே கோவமாக வந்தது. 

“அட அழுவாதங்கிறேன்ல? வயசானவ என்னவோ வாயை போட்டு சலம்பிப்புட்டேன், அதுக்கேன் இம்புட்டு தண்ணி கண்ணுல வைக்கிற? எதிர்த்து ஏதாவது பேசிப்புட்டு போவியா…” என கரிசனமாக பேசிய பாட்டி தன் புடவை முந்தானை கொண்டு அவளின் முகத்தை துடைத்து விட்டார். 

அவளும் நிதானத்திற்கு வந்திருக்க, பாட்டியும் பேத்தியும் அவனிடம் விடை பெற்றுக் கொண்டு சென்று விட்டனர்.

வீட்டுக்கு வந்த பின் பாட்டி சும்மாயிருக்கவில்லை. ஒழுங்காக உன் வாழ்க்கையை வாழப் பார் என மகனிடம் சத்தம் போட்டார். மலேசியா வரன் பற்றியும் பாட்டி பேச, அம்மாவை நன்றாக திட்டி விட்டார் கணேசன். அடுத்து வந்த நாட்களிலும் அம்மாவுக்கும் மகனுக்கும் சண்டையாகத்தான் இருந்தது. 

பத்து நாட்கள் கடந்திருக்கும், ரவி வங்கிக்கு சென்று கொண்டிருக்க, வழியில் பேருந்து ஒன்று பழுதாகி நின்றிருந்தது. அந்த பேருந்திலிருந்து இறங்கிய மக்கள் கூட்டத்திலிருந்து வேறு பேருந்து வருகிறதா என பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள் தண்மதி. அவனது பார்வையிலிருந்து அவள் தப்பவில்லை. 

மனம் கேளாமல் பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு அவளை நோக்கி நடந்தான். 

அவனை கண்டவள் தயக்கமாக ஓரடி பின்னால் எடுத்து வைக்க, அவனும் அப்படியே நின்று விட்டான். 

அவனது கண்களில் தெரிந்த வருத்தத்தில், தான் அப்படி செய்திருக்க கூடாது என தன்னை தானே கடிந்து கொண்டவள், அவளாகவே முன்னேறி அவனிடம் போய் நின்றாள். 

இறுகிய முகத்தோடு அவன் பார்த்திருக்க, “வீட்லேருந்து கிளம்ப லேட் ஆகிடுச்சு, காலேஜ் பஸ்ஸை விட்டுட்டேன், டவுன் பஸ்ல வந்தா அதும் பிரேக் டவுன் ஆகிடுச்சு” என விளக்கம் சொன்னாள். 

அடுத்து ஒரு பேருந்து வந்து கொண்டிருந்தது. ஏற்கனவே கூட்டத்தில் பிதுங்கி வழிந்த பேருந்தில் ஆடவர்கள் சிலர் முட்டி மோதி ஏறிச் சென்றனர். 

எப்படி செல்வது என அவள் பதற்றமாக வழியையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள். 

“வா கொண்டு போய் விடுறேன்” என்றான். 

“ஐயோ வேணாம்” என பதறினாள். 

கைகளை கட்டிக் கொண்டு முறைத்தவன், “இடைல நமக்குள்ள நடந்ததை விடு, அதுக்கு முன்ன என்னை மாமான்னு கூப்பிட்டியே, உறவா நினைச்சு மனசார அப்படி கூப்பிடலையா நீ?” எனக் கேட்டான். 

“அப்படி இல்லை, உங்களுக்கு லேட் ஆகிடும்” என்றாள். 

“அதை நான் பார்த்துப்பேன் மதி. இப்ப மட்டும் நீ பஸ் ஏறுற வரை இங்க நிக்காம போயிடுவேன்னு நினைச்சியா? எப்படியும் எனக்கு லேட் ஆக போகுதுதான்” என அவன் சொல்லியும், அவளிடம் மிகுந்த தயக்கம். 

ஒதுங்கி போகும் பெண்ணிடம் வழியக்க போய் நிற்பாயாடா? என அவனது மனசாட்சி அவனை காறித் துப்பாமல் இல்லை. 

விருப்பம்,  அதிலும் முதல் விருப்பம், நன்றாக முதிர்ச்சி அடைந்த பருவத்தில் வந்த ஆசை, கை நழுவ விடாமல் காக்க நினைப்பது வேறு. இப்போது சாலையில் அவள் நிற்கையில், தன்னை வேண்டாம் என ஒதுங்கி நிற்கையில் கூட, கோவம் வரும் போது கூட, எனக்கென்ன என செல்ல முடியாத படி அவனை கட்டிப் போட்டிருந்தது எதுவென அவனுக்கே தெரியவில்லை. 

அவளை கோவமாக பார்த்தவன் கட கடவென சாலையை கடந்து சென்று விட்டான். அங்கே நிறுத்தியிருந்த தன் பைக்கில் சாய்ந்த படி மறுபுறமிருந்த வயல் வெளிகளை பார்த்த படி கைப்பேசியில் யாருக்கோ பேசினான், ஆனால் இவள் பக்கம் திரும்பவில்லை. 

அவளுக்குத்தான் மனம் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது. 

அவளை தெரிந்தவர்கள் என அங்கே யாருமில்லை, ஆனாலும் வயது பெண்ணிடம் ஒரு ஆடவன் அவளை தெரிந்தவன் போல வந்து பேசி விட்டு, பின் கோவமாக எதிர்புறம் போய் நிற்கிறான் என்பதில் பெரும்பாலானோர் ரகசியமாக பேசிக் கொண்டனர். 

ஒரு நடுத்தர வயது பெண்மணி, “உனக்கு தெரிஞ்சவராமா? அவரோட போக வேண்டியதுதானே?” எனக் கேட்டார். 

சட்டென ஏதும் பொய் சொல்லி சமாளிக்க கூட அவளுக்கு வரவில்லை. அவளது முகத்தை உற்று நோக்கி விட்டு நகர்ந்து நின்று கொண்டார் அந்தப் பெண்மணி. 

கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள், அவளும் அசையவில்லை, அவனும் அங்கிருந்து போவதாக இல்லை. 

இன்னொரு பேருந்து வந்தது. அமர இருக்கை இல்லையென்றாலும் கூட்டமாக இல்லை. ஆனால் ஏற்கனவே நின்றிருந்த மக்கள் முண்டியடித்து ஏறியதில் அந்தப் பேருந்தும் நிறைந்து வழிந்தது. 

பரவாயில்லை கொஞ்ச நேரம்தானே? என்றெண்ணிக் கொண்டு பேருந்தின் முதல் படிக்கட்டில் காலை வைத்தாள். சில மீட்டர் இடைவெளியில் தனக்காக ஒருவன் நிற்கிறான் என்பது அவளை சிந்தனையிழக்க செய்ய, “ஏறுறியா இல்லையாமா?” என சத்தம் போட்டார் நடத்துனர். 

“இவ்ளோ கூட்டத்துல எப்டி போவ, இறங்கு கீழ” என ரவி அதட்டல் போடவும், அனிச்சையாக இறங்கி விட்டாள் தண்மதி. பேருந்தும் புறப்பட்டு விட்டது. 

இவர் எப்போது இந்தப் பக்கம் வந்தார் என அவள் பார்க்க, வேறேதும் சொல்லாமல் சற்று தள்ளிப் போய் நின்று கொண்டான். இப்போது அந்த இடத்தில் இவர்கள் இருவரை தவிர வேறு யாருமில்லை. 

இரண்டு நிமிடங்களில் ஆட்டோ ஒன்று வருவதை கண்டாள். பணம் செலவானாலும் பரவாயில்லை காலியாக இருந்தால் ஏறி விடுவது என அவள் நினைத்திருக்க, அவளிடம்தான் வந்து நின்றது ஆட்டோ. 

ரவிதான் வரச் செய்திருப்பான் போலும். ஆட்டோக்காரனிடம் பணம் கொடுத்தவன், அவளிடம் “ஏறு” என்றான்.

அவனை சங்கடமாக பார்த்துக் கொண்டே ஏறி அமர்ந்து கொண்டாள். அவளை வசதியாக பார்க்க குனிந்தவனது முகம் இப்போது இயல்பாக இருந்தது. 

“ஒழுங்கா படிக்கணும், ம்?” என மென் குரலில் கேட்டான். 

அவள் தலையாட்ட, அவனும் தலையாட்டினான். காற்றில் அவனது சிகை அசைந்தாட, இயல்பாக சரி செய்து கொண்டே விலகி நின்று கொண்டான். 

அவனிடம் இழு படும் கால்களை கட்டுப் படுத்த முடியாமல் போகுமோ என்ற பயத்தில் அவனை திரும்பிப் பார்க்க பேரச்சமாக இருந்தது.

ஆட்டோ நகர, அவளுக்குத்தான் தன்னிடமிருந்த உருவமில்லாத உணர்வுப் பந்து போல எதுவோ ஒன்று எதிர்ப்புறமாக யாரையோ பின் தொடர்ந்து செல்வது போலிருந்தது. 

எது, என்ன, யார் என எதையும் ஆராய்ச்சி செய்து பார்க்கத்தான் அவளிடம் மனதைரியம் இருக்கவில்லை. 

தலை சாய்த்துக் கொண்டவள்  வேடிக்கை பார்த்து மனதை நிலைப்படுத்த பார்த்தாள். வயலில் காற்றில் அசையும் நாற்றெல்லாம் அவனது சிகையை நினைவுக்கு கொண்டு வர, கண்களையும் மூடிக் கொண்டு விட்டாள். 

சின்ன பெண்ணின் மனதை கலைத்து உள்ளே சென்று சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டான். 

‘விடாது காதல்!’, சரிதான் யாரைதான் விட்டது காதல்?