இப்போது இன்றே கணேசன் வருகிறார் என்றதும் இதற்கு மேல் தடுக்க வேண்டாம் என விட்டு விட்டான். தண்மதியின் பாட்டி வருவதால் இவனது பாட்டியுடன் மோதல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது, தண்மதியை யாரும் காயப்படுத்தி விடக்கூடாது, அதெல்லாம் இவனுக்கு கூடுதல் பொறுப்பு என்றாலும் சமாளிப்போம் என திடமாகவே இருந்தான்.
கணேசன் குடும்பத்தினர் வந்த கார் வீடிருந்த காம்பவுண்ட்டிற்குள் நுழையும் போதே, அவர்களை வரவேற்க தயாராக நின்றனர் ரவியும் சீனுவும்.
கணேசனின் கை பிடித்து குலுக்கி தன்னை அறிமுகம் செய்து கொண்டார் சீனு.
தங்களின் வருகையை எதிர் பார்த்து காத்திருக்கிறார்களே என் வியந்த கணேசன் குழப்பத்தோடு தன் அண்ணன் மகளை பார்த்தார்.
தண்மதி துணுக்குற, “பேங்க் விஷயமா பாலைய்யா ஸார் கால் பண்ணிருந்தார், அவர் சொல்லலைனா உங்களை மீட் பண்ண ஷஷ்டியை ரெடி பண்ணிருக்க முடியாது, எதுக்காக ஸார் என்கிட்ட கூட சொல்லாம திடீர் விசிட்?” எனக் கேட்டு தண்மதியை காப்பாற்றினான் ரவி.
“பொண்ணை பார்க்க வந்திட்டார், விடு ரவி” என மகனிடம் சொன்ன சீனு, “வாங்க நம்ம வீட்டுக்கு போலாம்” என சொல்லி முன்னே நடந்தார்.
கணேசனுக்கு திருமணம் ஆன சமயத்தில் இந்த காம்பவுண்ட் உள்ளே ஒரேயொரு வீடுதான் இருந்தது. சீனு இங்கு வந்த பிறகு அவருக்கென புதிதாக கட்டியிருக்கிறார் என கணித்தார்.
“நீங்க இருக்கிறது கூட எங்களுக்கு தெரியாது தம்பி, கல்யாணம் ஆன நாள்லேருந்து மாப்ள வீடுன்னு மட்டு மரியாதையே கிடையாது இங்குட்டு உள்ளவகளுக்கு” என புலம்பினார் பாட்டி.
அவருக்கு ஆறுதலாக ஏதோ சொல்லிக் கொண்டே தன் வீட்டை அடைந்தார் சீனு. பூர்ணிமாவும் வெளியில் வந்து மூவரையும் வரவேற்றார்.
அமைதியாக தயக்கமாக ஸ்திரத்தன்மை இல்லாமல்தான் அந்த வீட்டின் வாசற்படியில் காலடி எடுத்து வைத்தாள் தண்மதி. அவளை அவ்வப்போது கவனித்துக் கொண்டேதான் இருந்தான் ரவி.
மற்றவர்கள் உள்ளே சென்று விட, மெதுவாக நடந்த தண்மதி பின்தங்கியிருந்தாள். உள்ளே சென்றிருந்த ரவியும் யார் கவனத்தையும் கவராமல் மெல்ல வெளியில் வந்தான்.
ஷஷ்டி அமைதியாக இருந்தாள். கணேசனின் அருகில் அவளை அமர வைத்து அவளின் பக்கத்தில் ரவி அமர்ந்து கொண்டான். மகள் முன் அழுது விடாமல் கட்டுப் பாட்டோடு தைரியமாகவே இருந்தார் கணேசன்.
ஓரமாக நின்றிருந்த தண்மதிக்கு இருக்கை கொடுத்து அமர வைத்தார் பூர்ணிமா.
மகளின் கைப் பிடித்து, “ஸ்கூல் போகலையாடா?” என பேச்சை ஆரம்பித்தார் கணேசன்.
“இன்னிக்கு சண்டே, ஸ்கூல் லீவ் ப்பா” என ஷஷ்டி சொல்லவும் அவளின் அப்பா என்ற அழைப்பில் கண்கள் கலங்கிப் போனார் கணேசன்.
மெல்ல தன் மகளை தன் மடியில் இருத்திக் கொண்டார். அப்பா என்ற உறவுக்கான ஏக்கம் குழந்தை மனதில் இருக்கும்தானே, அப்பாவின் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.
முதலில் தயக்கமா கூச்சமா எனத் தெரியாமல் அவளுக்கு சரளமாக பேச்சு வரவில்லை. உணர்ச்சிப் பெருக்கிலிருந்த கணேசனிடமும் அவ்வளவாக பேச்சுக்கள் இல்லை. மகளை உணர்ந்து அந்த நொடிகளை உள்வாங்கிக் கொண்டிருந்தார்.
பூர்ணிமா அவர்களுக்கு பருக எடுத்து வந்தார். சீனு அவரின் திருமணம், அப்பா அண்ணின் இறப்பு, தாங்கள் இங்கு வந்த கதை என சுருக்கமாக சொல்லிக் கொண்டிருந்தார்.
மகளின் கை விரல்களை வருடி விட்டுக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார் கணேசன்.
சீனு தன் பேச்சுக்கு கொஞ்சம் இடைவெளி விடவும் பாரதி வீட்டினர் மீதான குற்றங்களை அடுக்க ஆரம்பித்தார் பரமேஸ்வரி. கணேசன் தன் பார்வையால் அம்மாவை அடக்கினார்.
“அம்மாகிட்ட போலாமா ப்பா” எனக் கேட்டாள் ஷஷ்டி.
“போலாம் டா போலாம்” என்ற கணேசன் இருக்கையை விட்டு அசையவே இல்லை.
கணேசனின் வருகையை ரவி சொன்ன போதே சொர்ணம் பாட்டி ஒரே ஆர்ப்பாட்டம். ரவி சற்று கடுமையாகவே பேசி விட்டான். இப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் உங்கள் மகளின் வாழ்க்கை அவ்வளவுதான் என பெரியம்மாவையும் கொஞ்சம் ஏற்றி விட்டிருந்தான்.
கோசலை தன் மாமியாரை கடிந்து கொண்டிருக்க, கோவித்துக் கொண்ட சொர்ணம் அதே ஊரிலிருக்கும் பாரதியின் அக்காவின் வீட்டுக்கு சென்று விட்டார்.
பாரதியின் அக்காவுக்கும் கணேசன் விஷயம் தெரிந்து போய் விட்டது. தன் தங்கைக்கு அழைத்து இனியாவது வாழ்க்கையை சரி செய்து கொள் என அறிவுரை சொல்லி சொர்ணம் பாட்டியை வீட்டிலேயே சிறை பிடித்துக்கொண்டார்.
பாரதியை சந்திக்க கணேசனை அந்த வீட்டுக்கு அழைத்தான் ரவி.
மகளின் கை பிடித்துக்கொண்டு கணேசன் எழ, “அவ இங்கேயே இருக்கட்டும்” என சொல்லி விட்டான். கணேசனுக்கும் அதுவே சரியென பட்டது.
தண்மதிக்கு அங்கு வர என்னவோ பயம், சங்கடம்; ஷஷ்டியுடன் இங்கேயே இருப்பதாக சொன்னாள்.
“நீயும் கணேசனுக்கு பொண்ணுதான், உன்னை எப்பவும் விட்டுத் தர முடியாதுன்னு எல்லாருக்கும் தெரியணும். வா நீ” என அதட்டலாக சொன்னார் பரமேஸ்வரி.
“பாட்டி பாட்டி… ஃபர்ஸ்ட் அக்காவும் மாமாவும் பேசட்டும். ஏன் என் வீட்ல இருக்க கூடாதா உங்க பேத்தி? வாங்க நீங்க” என பாட்டி ஏதும் சொல்ல முடியாத படி அவரை அழைத்துக் கொண்டு சென்றான் ரவி.
தண்மதிக்கு அப்பாடா என இருந்தது. ஷஷ்டியும் அவளும் மட்டுமே அங்கிருக்க, தங்கையை வாஞ்சையாக அணைத்துக் கொண்டாள். நவ்ரிதி போலவே அக்காவையும் உணர்ந்த ஷஷ்டி அவளுடன் இணக்கத்தை காண்பித்தாள்.
சற்று நேரத்தில் ரவி மட்டும் இங்கு வந்தான். ஷஷ்டி டிவி பார்த்துக் கொண்டிருக்க, வேடிக்கை போல வீட்டையே கண்களால் சுற்றிக் கொண்டிருந்த தண்மதி ஆவலாக ரவியை ஏறிட்டாள்.
ஷஷ்டியை கண்களால் காட்டி அவளை தள்ளி அழைத்துச் சென்றான் ரவி.
“ஷஷ்டி நிறைய கேள்வி கேட்டா, என்னால சமாளிக்க முடியலை மாமா. அங்க வரணும்னு வேற சொல்ல ஆரம்பிக்கவும் டிவி பார்க்க சொல்லிட்டேன். எல்லாம் ஓகேதானே மாமா அங்க?” எனக் கேட்டாள் தண்மதி.
“எல்லாம் ஓகேதான் மதி. பொண்ணு வாழ்க்கை நல்லாருக்கணும்னு நினைக்கிறாங்க பெரியம்மா, அதனால வீம்பு காட்டாம இறங்கி வந்து பேசுறாங்க. உன் பாட்டிதான் உன்னை பத்தி சொல்லி, நீ கணேசன் ஸார் பொறுப்புதான்னு இடையிடைல சொல்லிட்டு இருந்தாங்க” என்றான்.
“ஆத்தாக்கு வேற வேலையே இல்லை. எது முக்கியம்னு தெரியாம…” அலுத்தாள் தண்மதி.
“இப்பவே உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறது பத்திலாம் பேச்சு ஓடுது, வீட்ல அப்படி ஏதும் பேசினாங்களா?” என விசாரித்தான்.
“ஆத்தாக்கு என்னமோ ஆகிடுச்சு” என்றாள்.
“ப்ச் பதில் சொல்லு, இந்த பேச்சு முன்னாடியே வந்திடுச்சா?”
ஏன் இத்தனை தீவிரமாக கேட்கிறார் என யோசித்துக் கொண்டே, “நேத்துதான் என் கல்யாணம் பத்தி ஆத்தா பேசினது எனக்கு தெரியும். சித்தப்பா ஷாக் ஆகல, அப்ப முன்னாடியே அவர்கிட்ட இந்த பேச்சு எடுத்திருக்கணும்” என்றாள்.
வயதாகி விட்ட பரமேஸ்வரிக்கு பெரிய பேத்தியின் வாழ்க்கை குறித்து பயம். இதுநாள் வரை தனக்கு எதுவென்றாலும் கூட மகன் பார்ப்பான் என நம்பியிருந்தார். இப்போதும் மகன் தன் கடமையை கை கழுவி விடுவான் என கருதவில்லை. இளமையை தொலைத்து விட்டு நிற்பவன் இனியாவது அவனது வாழ்வினை நன்றாக வாழ்ந்திட வேண்டும்; அதற்கு எந்த விதத்திலும் தடை இருந்திட கூடாது என்ற நினைப்பு.