பாரதிக்கு திருமண வாழ்வில் பிரச்சனை ஏற்பட்ட சமயம்தான் சீனுவை அவரது குடும்பத்தோடு சேர்த்துக்கொண்டிருந்தனர். பாரதி கோவித்துக் கொண்டு பிறந்த வீடு வந்த சில வாரங்களில் அவளை சீனுவுடனே மைசூருக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
அங்கேதான் பாரதிக்கு பிரசவம் நடந்தது, ரவியின் அம்மாதான் அக்கறையாக கவனித்து கொண்டார்.
பாரதிக்கு முறையாக விவாகரத்து ஆனதும் அண்ணன் மகளுக்கு மைசூரிலேயே வேலை வாங்கி கொடுத்து விட்டார் சீனு.
ஷஷ்டிகாவை வளர்த்ததில் ரவியின் அம்மாவுக்குத்தான் பெரும் பங்கு, ரவிக்கும் அந்த குட்டிப் பெண்ணுடன் நல்ல ஒட்டுதல்.
ரவியின் தாத்தா மூன்று வருடங்களுக்கு முன் காலமாகி விட்டார். அதன் பின்னர்தான் மைசூரிலிருந்து திருச்சிக்கே வந்து விட்டனர்.
பல வருடங்களாக பாரதிக்கு மறுமணம் செய்வது குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அவள் எப்போதுமே பிடி கொடுத்தது இல்லை. அது குறித்து ரவி பேசிய போதும் ‘ஒரு முறை பட்டதும் ஏமாந்ததும் என் வாழ்க்கைக்கு போதும்’ என சொல்லி முடித்துக் கொண்டார்.
சில மாதங்களுக்கு முன்புதான் பாரதியின் அம்மா, அழுது ஆர்ப்பாட்டம் செய்து, மிரட்டி என பாரதியை இரண்டாம் திருமணத்துக்கு தலையாட்ட வைத்திருந்தார். அது கூட முழு மனதுடன் அக்கா சம்மதிக்கவில்லை என்பதை அறிவான் ரவி.
நல்ல பொருத்தமான நபராக பார்ப்போம், அக்காவை சந்திக்க வைக்கலாம். பார்த்து பழகும் போது அக்காவின் மனம் தெளிந்து அந்த உறவை ஏற்றுக் கொண்டு விடும் என நினைத்திருந்தான் ரவி.
இப்போதுதான் தனக்கு தெரியாத கதையும் இருக்கிறது என்பதே அவனுக்கு தெரிகிறது.
அக்காவின் மனதிலும் இன்னும் அவளின் முன்னாள் கணவர்தான் இருக்கிறாரோ என்ற சந்தேகத்துடன், தண்மதியை பார்த்தவன், “உங்க பேரெண்ட்ஸ்க்கு என்னாச்சு?” எனக் கேட்டான்.
இந்த கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தலை குனிந்தாள் தண்மதி.
இருவரும் இறந்து விட்டார்கள் போலும் என எண்ணியவன், “ஓ ஸாரிங்க” என்றான்.
நிமிர்ந்த தண்மதி, “அம்மா அவங்களுக்கு பிடிச்சவனோட போயிட்டாங்க, அதனால அப்பா வாழ பிடிக்காம இறந்து போயிட்டாங்க” என்றாள்.
திட்டுக்கிட்டு போய் தலையை பின்னுக்கு இழுத்து, “என்ன…” என்றான் ரவி.
தோழியை பாவமாக பார்த்தாள் சஞ்சனா.
“எதுக்குடி மறைக்கணும்? என் தப்பென்ன இதுல? சித்தி வீட்டுக்கும் எல்லாம் தெரியுதானே, ஸாரும் தெரிஞ்சுக்கட்டும். அப்போதானே சித்தப்பா ஏன் என்னை தனியா விடலைன்னு இவரால புரிஞ்சுக்க முடியும்?” என்றாள் தண்மதி.
அவளின் நிலையை எண்ணி சொல்லத் தெரியாத வேதனை உணர்வு உள்ளமெங்கும் விரிந்து பரவ, எழுந்து சமையலறை சென்று விட்டான் ரவி. அவளிடம் என்ன பேச, அடுத்து என்ன செய்ய என புரியாமல் ஒரு கையை இடுப்பில் வைத்து, இன்னொரு கையால் தலையை கோதி கொண்டே நடை போட்டான்.
“என் கதை உனக்கெல்லாம் பழகி போயிடுச்சு, பாவம் அவருக்கு ஷாக்கிங்கா இருக்கு போல. சித்திகிட்ட நம்பர் வாங்கி நாம பேசறது விட இவரே பேசி புரிய வச்சா எஃபெக்டிவா இருக்காது?”
“அவர் செய்வாரா?”
தன்னை சுட்டிக் காட்டியவள், “யாரோ ஒரு பொண்ணுக்காக இவ்ளோ ஃபீல் பண்றாரே?” என்றாள்.
“அதுக்கு?”
“அவர் அக்கவோட பாப்பா அப்பா இல்லாம இருக்கிறதை வேடிக்கை பார்ப்பாரா? கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவார்” என உறுதியாக சொன்னாள் தண்மதி.
பெண்கள் பேசிக் கொள்வதெல்லாம் அவனது காதில் விழத்தான் செய்தது. ஷஷ்டி பற்றியெல்லாம் எங்கே சிந்தித்தான் அவன்? தண்மதி பற்றிய சிந்தனையிலேயே நின்று விட்டானே. இப்போது அவள் சொல்லவும்தான் அக்கா, அவளின் மகள் என ஞாபகம் வந்தது.
தண்ணீர் பருகியவன், தண்ணீர் பாட்டிலோடு ஹாலுக்கு வந்தான்.
பாட்டிலை தண்மதி வாங்கிக் கொள்ள, அவளை கண்களால் மிரட்டினாள் சஞ்சனா.
கவனித்திருந்தவன் புரிந்து கொண்டவனாக, “என்னை பார்த்தா தண்ணில மயக்க மருந்து கலந்து கொடுத்து தப்பு பண்றவன் மாதிரியா தெரியுது?” என கண்டனமாக கேட்டான்.
சஞ்சனா அசடு வழிய சிரித்தாள். “சேச்ச அப்படிலாம் இல்லை ஸார், இவளுக்கு உங்களை பத்தி தெரியாதுல்ல, அதான்…” என்ற தண்மதி, தோழியை பார்த்து, “என் சித்தப்பா உன் அப்பா அளவுக்கு நல்லவங்கடி இவங்க” என சொல்லி கட கடவென தண்ணீரை பருகினாள்.
தண்மதியின் மீது அவனுக்கு பிரத்யேகமாக வாஞ்சை பிறந்தது. சின்ன வயதில் என்னென்ன மாதிரியான துயரங்களை கடந்து வந்திருப்பாள் என நினைக்கும் போதே அவளுக்காக உள்ளம் உருகி துடித்தது.
சஞ்சனாவுக்கு அவளது அம்மாவிடமிருந்து அழைப்பு வரவும் வீட்டிற்கு வெளியில் வாசல் பக்கமாக சென்று பேச ஆரம்பித்தாள். எதையோ காணவில்லை என அம்மா கேட்க, இவள் இங்கே பார் அங்கே பார் என தேட சொல்ல அப்படியே நேரம் சென்றது.
“நம்ம கைல மட்டும் இல்லையே அது, அவங்க லைஃப் பத்தி அவங்களுக்கும் அக்கறை இருக்கணும். நாம ஸ்ட்ரெஸ் எடுத்துக்கிறதால என்ன ஆக போகுது? இவ்ளோ எமோஷனல் ஆக வேணாமே” என்றான்.
“என்னை பத்தி என் மூஞ்சுக்கு நேராவும் சரி, முதுகுக்கு பின்னாடியும் சரி… யார் யாரோ என்னென்னவோ பேசியிருக்காங்க. அந்த நேரம் கஷ்டம்தான்னாலும் அதுக்கு நான் காரணம் இல்லைனு என்னை நானே தேத்திட்டு இருந்திருக்கேன். என் சித்தப்பா லைஃப் மட்டுமில்லை ஸார்… சித்தி லைஃப்’ம் என்னாலதான் பாதிக்க பட்ருக்கு. என்னை எந்தளவு அது கஷ்ட படுத்ததுன்னா… எனக்கு சொல்ல தெரியலை ஸார். இப்போ பாப்பா வேற இருக்கான்னு சொல்றீங்க…” எனும் போது அடுத்த வார்த்தை எழாமல் கீழுதட்டை கடித்து தன் அழுகையை அடக்கினாள்.
அவள் கைப்பற்றி ஆறுதல் செய்ய விழைந்தவன் அப்படி செய்யாமல் அவளே பேசட்டும் என அமைதி காத்தான்.
சில நொடிகளில் அவளே சுதாரித்து, “சித்தப்பா ரொம்ப நல்லவங்க, என்னையவே இப்படி பார்க்கிறாங்கன்னா அவரோட சொந்த பொண்ணை எப்படியெல்லாம் வச்சு பார்த்திருப்பார்? அந்த பாப்பாக்கு பாசம் காட்ட எத்தனை பேர் இருந்தாலும் அப்பா மாதிரி வராதுதானே? எல்லாம் என்னாலன்னு நினைக்கும் போது…” என்றவள் தன்னிரு கைகளையும் கோர்த்து அழுத்திக் கொண்டாள்.
அந்தக் காட்சி அவளின் மன உணர்வுகளையும் போட்டு அழுத்துகிறாள் என்பது போலவே அவனுக்கு பட்டது.
அவனுக்கு அவளை அப்படி பார்க்க பிடிக்கவில்லை. என்ன செய்து இவளை இயல்பாக்குவது என நினைத்து, உதவிக்காக சஞ்சனாவை பார்த்தான்.