சிந்தை நிறை தண்மதியே -3

அத்தியாயம் -3

சஞ்சனாவின் காதலன் மூலமாக ரவிபிரகாஷ்தான் தன் சித்தியின் தம்பி என்பதை தெரிந்து கொண்டு விட்டாள் தண்மதி.

திருமணத்தில் பங்கு பெறாமல் அவள் திரும்பி வந்த சமயம் யாரும் வீட்டில் இல்லை. கணேசன் அவரது விடுமுறை தினத்தின் வழக்கமாக வெளியில் சென்று விட்டார், பாட்டியும் பக்கத்து வீட்டு பாட்டியுடன் கோயிலுக்கு சென்று விட்டார். ஆகவே அவள் நேரமாகவே வீடு திரும்பிய விஷயம் இருவருக்குமே தெரிந்திருக்கவில்லை.

மதியத்துக்கு மேல் அவர்களும் வீடு வந்தார்கள். திருமணத்தில் கலந்து கொண்டுதான் வந்திருக்கிறாள் தண்மதி என்றே நினைத்துக்கொண்டனர். ஆடை கிழிந்த விவரமெல்லாம் தெரிந்தால் கவலை படுவார்கள் என அவளும் எதையும் சொல்லியிருக்கவில்லை.

ரவியின் ஸ்வெட்டரை எப்படி அவனிடம் கொண்டு போய் சேர்ப்பது என தெரியாமல் தன்னிடமே வைத்துக் கொண்டாள்.

அப்படியிருக்கதான் தனக்கு உதவி செய்த மேனஜர்தான் சித்தியின் தம்பி என்பதை தெரிந்து கொண்டாள். அவன் இப்போது தங்கியிருக்கும் விலாசமும் அவளின் கைக்கு கிடைத்திருந்தது.

ரவி யார், எப்படி தனக்கு உதவினான் என எல்லாம் சஞ்சனாவிடம் பகிர்ந்து கொண்டாள்.

“நீ சொல்றத பார்த்தா நல்லவர் மாதிரிதான் இருக்கு, பேங்க் மேனேஜர்னா உன் சித்தப்பாவை தெரியாதா அவருக்கு, இல்லை உன் சித்தப்பாக்குத்தான் அவரை தெரியாதா?” என கேள்வி எழுப்பினாள் சஞ்சனா.

தண்மதிக்கும் இந்த கேள்விகள் எழாமல் இல்லை, “அவரை மீட் பண்ணினாதான் எதுவா இருந்தாலும் தெளிவா தெரியும்” என்றாள்.

“எப்ப மீட் பண்ணலாம்னு இருக்க?” எனக் கேட்ட சஞ்சனாவுக்கு, “நாம சேர்ந்துதான் அவரை பார்க்க போறோம்” என பதில் சொன்னாள் தண்மதி.

“அடிப்பாவி!” என்றாலும் ஒத்துக் கொண்டு விட்டாள் சஞ்சனா. வங்கிக்கு சென்றால் சித்தப்பாவுக்கு தெரிந்து விடும் என்பதால் ரவியின் வீட்டுக்கே செல்வது என முடிவு செய்தனர்.

அந்த வாரத்தின் ஒரு நாளில் யாரோ இரண்டு பெண்கள் ரவியை பார்க்க வந்ததாக அவனிடம் வீட்டு ஓனர் சொன்னார்தான். யாரென கேட்டதற்கு ‘உறவுக்காரர்கள்’ என சொன்னதாக மட்டும் சொன்னார்.

அக்கா சம்பந்த பட்டவர்களோ என எண்ணம் ஓட, வரட்டும் பார்த்துக் கொள்கிறேன் என இருந்து கொண்டான்.

வார நாட்களில் அவன் வீடு வந்து சேரும் நேரத்தில் அவனை சந்திக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட தண்மதி, ஞாயிற்றுக் கிழமையை தேர்வு செய்தாள்.

தோழியொருத்தியின் வீட்டுக்கு சஞ்சனாவுடன் செல்கிறேன் என வீட்டில் சொல்லி விட்டு கிளம்பினாள்.

தாமதமாக எழுந்து சோம்பலாகவே அந்த நாளை ஓட்டிக் கொண்டிருந்தான் ரவி.

கதவு திறந்தே இருக்க, மாடிப் படிகளில் யாரோ நடந்து வருவதை கொலுசொலி வைத்து உணர்ந்தவன் எழுந்து போய் வாசல் பக்கமாக நின்றான்.

யாரென அவன் எட்டிப் பார்ப்பதற்குள் அவன் முன் தோன்றினாள் தண்மதி.

 அவனது மார்புக் கூடு வேலை நிறுத்தம் செய்திருக்க, கண்களோ அதிகமாக வேலை செய்து அவளை நிரப்பிக் கொண்டன.

என்ன பேசுவது எனத் தெரியாமல் புன்னகைத்தாள் தண்மதி. மறுதலிப்பாக குறுநகை சிந்தினான்.

அடுத்த வார்த்தை பேச தெரியாமல் அவள் பார்க்க, “வாங்க” என சொல்லிக் கொண்டே அவள் உள்ளே வர வழி கொடுத்து நகர்ந்து நின்றான்.

அவளின் பின்னாலேயே இன்னொரு பெண்ணும் வர, ஓனர் சொன்ன பெண்கள் என புரிந்து கொண்டான்.

முதலில் அவனுடைய ஸ்வெட்டரை அவன் வசம் ஒப்படைத்த தண்மதி, இன்னொரு முறைஅவனுக்கு நன்றி சொன்னாள்.

“இதை கொடுக்க வந்தீங்களா? பேங்க்ல யார்கிட்டேயும் விசாரிச்சு அட்ரஸ் தெரிஞ்சுக்கிட்டீங்களா?” எனக் கேட்டான்.

“பேங்க் வரை எதுக்கு அலையனும் ஸார்? உங்க மொபைல் நம்பர் வச்சே ட்ரேஸ் பண்ணிட்டோம்”  என சஞ்சனா சொல்ல, குழப்பமாக பார்த்தான் அவன்.

“அது… உங்களுக்கு நான் கால் பண்ணி பேசினேனே… நீங்க கூட என் நம்பரை பிளாக் பண்ணிட்டீங்க” என குறையாக சொன்னாள் தண்மதி.

கணேசன், பாட்டி, கல்லூரி படிக்கும் இளம்பெண் என ஒன்றிணைத்து அவன் யோசித்துக் கொண்டிருக்க, தண்மதி யாரென விளக்கமாகவே சொன்னாள் சஞ்சனா.

நன்றாகவே அதிர்ந்து போய் விட்டான் ரவி. உண்மையா என்பது போல தண்மதியை பார்த்தான்.

“என் சித்தப்பா சித்திய இன்னும் மறக்கல, நான் இனிமே அவங்களுக்கு எந்த வகையிலும் தொந்தரவா இருக்க மாட்டேன்னு சித்திகிட்ட சொல்லணும், அவங்கள நான் பார்க்கணும், நீங்க ஹெல்ப் பண்ணுவீங்கன்னு ரொம்ப நம்பிக்கையோட வந்திருக்கேன்” என்றாள் தண்மதி.

தன்னை மீட்டெடுத்துக் கொண்டவன், “என் அக்காக்கு மேரேஜ் நடந்தப்போ அவங்களுக்கு டிவோர்ஸ் ஆனப்போலாம் நான் இங்க இல்லை, அது பத்தின விவரமும் எனக்கு பெருசா தெரியாது. அக்காவோட ஹஸ்பண்ட், மாமியார் எல்லாம் சரியில்லை, ஒத்து வரலை, தான் குழந்தைய விட அண்ணன் ஃபேமிலி முக்கியம்னு ஒதுங்கிட்டார் இப்படித்தான் எனக்கு சொல்லியிருந்தாங்க” என சொல்லிக் கொண்டிருந்தான் ரவி.

அவனது இறுதி வாக்கியத்தில் தண்மதி திகைக்க, சஞ்சனாவும் ‘என்னடி இது?’ என தன் தோழியைப் பார்த்தாள்.

“என்ன தப்பா சொல்லிட்டேன்னு ரெண்டு பேரும் ஷாக் ஆகுறீங்க?” எனக் கேட்டவன், தொடர்ந்து, “இப்ப உங்க பக்கமும் என்னன்னு தெரிஞ்சுக்க நினைக்கிறேன். என்ன நடந்து ரெண்டு பேரும் பிரிஞ்சாங்க?” என விசாரித்தான்.

“சித்திக்கு… அது குழந்தைன்னு சொன்னீங்களே…” என தவிப்பாக கேட்டாள் தண்மதி.

அவளை ஒரு மாதிரியாக பார்த்தவன், “ஆமாம், ஷஷ்டிகா, டிவோர்ஸ் கேஸ் நடந்திட்டு இருந்தப்போ பொறந்தவ” என்றான்.

தண்மதியின் கண்களில் கட கடவென கண்ணீர் உருள, “ஹேய் என்னாச்சு?”என பதறிக் கொண்டே எழுந்தான் ரவி.

தோழியின் தோளை ஆதரவாக  சஞ்சனா பிடிக்கவும் அடக்க முடியாமல் நன்றாக அழ ஆரம்பித்து விட்டாள் தண்மதி.

அவளின் அழுகையை நிறுத்த, சமாதானம் செய்ய என சில நிமிடங்கள் சென்றது. சஞ்சனாதான் ‘குழந்தை இருக்கும் விஷயமே இங்கு யாருக்கும் தெரியாது’ என்பதை சொன்னாள்.

அழுகையை நிறுத்தியிருந்த தண்மதியும் சித்திக்கும் சித்தப்பாவுக்கும் தன்னை முன்னிட்டு  உரசல் ஏற்பட்டதையும் அதை பெரியவர்கள் எப்படி பெரிதாக்கி விட்டனர் என்றும் சொன்னாள்.

‘அடடா இப்படி நடந்திருக்கிறதா?’ எனும் பாவத்தில் முகத்தை வைத்திருந்த ரவியும் முன்னர் நடந்தவற்றை நினைவு படுத்திக் கொண்டான்.

ரவியின் அப்பா சீனு அவர் வேலை பார்த்த இடத்தில் சந்தித்த பெண்ணை காதலித்து சந்தர்ப்ப வசத்தால் வீட்டினரிடம் சொல்லிக் கொள்ளாமலே திருமணம் செய்து கொண்டவர். விஷயம் தெரிய வரவும் அவரை வீட்டை விட்டு தள்ளி வைத்து விட்டனர்.

ரவியின் சிறு வயதில் எல்லாம் அவன் அவனது தாத்தா வீட்டிற்கு வந்ததே இல்லை. காலம் போக போக சீனு மட்டும் சொந்த ஊருக்கு வந்து போக இருந்தார். பாரதியின் திருமணத்திலும் அவர் மட்டும்தான் கலந்து கொண்டிருந்தார்.

தன் மனைவி பிள்ளைகளை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில் மூன்றாம் நபர் போல சீனு ஓரமாக இருந்திருக்க, கணேசன், பரமேஸ்வரி யாருக்கும் அவரை பற்றி தெரியாமலே போனது.