இப்போது மீண்டும் ரவி ஆசையாக நெருங்க, “டிராவல் பண்ணினதுல டயர்ட் ஆகியிருப்பீங்க, ரெஸ்ட் எடுத்திட்டு எதுவா இருந்தாலும் நைட் பேசிக்கலாம்” என்றாள் மதி.

இடுப்பில் கை வைத்து நன்றாக முறைத்தான் ரவி.

“ப்ளீஸ் மாமா, எனக்கு பயமாயிருக்கு”

“உன்னை ஏதாவது பண்ணிடுவேன்னு நினைச்சு பயந்தா கூட பரவாயில்லை, எனக்கு ஏதாவது ஆகிடும்னு பயப்படற பாரு… நைட் பேசிக்கிறதாம்! என்ன இன்னும் பேச்சு?” என கடுப்பாக சொன்னான்.

அவனது மோவாய் பிடித்து கெஞ்சலாக பார்த்தவள், “இப்ப படுத்து எந்திரிப்பீங்களாம்” என்றாள்.

“நைட்டும் ஏதாவது காரணம் சொல்லுவ, போ” என்றான்.

“அப்படிலாம் இல்லை, இப்ப படுங்க” என அதட்டி அவனை படுக்க வைத்து விட்டாள். அவனது உணர்வுகளை தூண்டி விடக்கூடாது என நினைத்தவள் ஆடை மாற்றிக் கொண்டு வேலை இருப்பதாக காட்டிக் கொண்டு லேப்டாப் எடுத்து வைத்துக் கொண்டாள்.

அவன் உறங்கிய பிறகுதான் அவனது பக்கத்தில் போய் படுத்தாள். மனமெங்கும் அவன் மீதான அன்பும் ஆசையும் நிறைந்து கிடக்கிறது. தன் பயத்தை ஓரம் தள்ளி விட்டு அவனை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான் நினைத்திருந்தாள். தனக்கு சோர்வாக இருக்க, அவனுக்கும் அப்படித்தானே இருக்கும் என்றெண்ணியே இன்று இப்போது அவனை தடுத்து விட்டாள்.

 மாலையில் அவன் எழுந்த போது அவனது கையணைவுக்குள் இருந்த படி உறங்கிக் கொண்டிருந்தாள் மதி. இப்போதெல்லாம் அவள் மீதான ஆசை கரையுடைக்கும் வெள்ளமாக அவனை படுத்தி எடுக்கிறது. அவளின் மனநிலையும் அவனுக்கு நன்றாகவே புரிய, அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு, அவளை தொந்தரவு செய்யாமல் விலகி எழுந்து கொண்டான்.

ரிதி இணைய வழி வகுப்பில் இருக்க, பூர்ணிமா பூ தொடுத்து கொண்டிருந்தார். ரவிக்கு நேரம் நகராமல் போக, அப்பாவுடன் தானும் வருவதாக சொல்லி கடைக்கு சென்று விட்டான்.

உறங்கி எழுந்து மாமியார் மற்றும் நாத்தனாருடன் தேநீர் பருகும் போதுதான் ரவி வீட்டில் இல்லை என்பதை தெரிந்து கொண்டாள் மதி. தன் மீது கோவம் கொண்டுதான் சென்று விட்டார் என்றே  நினைத்தாள் அவள்.

மகளுக்கும் மருமகளுக்கும் பூ வைத்து விட்ட பூர்ணிமா, “என்ன மதி ஏன் டல்லா இருக்க?” என விசாரித்தார்.

“என் அண்ணாத்தே வைஃபை விட்டுட்டு பேனா பென்சில் விக்க போயிட்டார், அப்ப முகம் வாடத்தானே செய்யும்?” என்றாள் ரிதி.

“ஹையோ நான் நல்லாத்தான் இருக்கேன் அத்தை” என்றாள் மதி.

“நல்லாதான் இருக்கணும் நீ, அவன் பழைய படி ஆகிட்டான், சரியா?” என சொல்லி சென்று விட்டார் பூர்ணிமா.

தலை கவிழ்ந்து யோசனையிலிருந்த மதியை ரிதியும் குனிந்து கொண்டு பார்த்தாள்.

“என்ன ண்ணி?” என சிணுங்கினாள் மதி.

“இருங்க…” என்றவள் அண்ணனுக்கு அழைத்து, “இங்க அண்ணி உன்னை கன்னா பின்னான்னு மிஸ் பண்றாங்களாம், உடனே வருவியாம்” என சொல்லி மதியின் கையில் கைப்பேசியை கொடுத்து விட்டாள்.

அங்கே கடையில் ரவியின் கைப்பேசி எப்படியோ லவுட் ஸ்பீக்கர் பயன்பாட்டுக்கு சென்று விட, அவனது அப்பா மற்றும் கடையில் வேலை பார்க்கும் பையன் இருவரும் கேட்டு விட்டனர்.

“விளையாட்டுக்கு அளவில்ல, வீட்டுக்கு வந்து பேசிக்கிறேன்” என கடிந்து அழைப்பை துண்டித்து விட்டான் ரவி. மதிக்கு மனம் சுணங்கி போனாலும் ரிதியிடம் ஏதும் சொல்லிக் கொள்ளவில்லை.

இரவு அப்பாவுடன் வீடு திரும்பிய ரவி சகஜமாகத்தான் இருந்தான். தங்கையிடம் கூட ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை. மதிக்குதான் அவன் இன்னும் கோவத்தில் இருப்பது போலவே தோன்றியது.

அறைக்கு வந்த பிறகு அவளாக அவனை அணைத்துக் கொண்டு, “என்கிட்ட கோவ படாதீங்க, இப்ப உங்களை… உங்களுக்கு மறுப்பா எதுவும் சொல்ல மாட்டேன்” என்றாள்.

“என்ன மதி?” என புரியாமல் கேட்டான்.

“உங்களை ரொம்ப கஷ்ட படுத்துறேன் நான். என்ன செய்ய… என் மூளை கண்டதையும் யோசிக்குது. இனிமே என் பேச்சை கேட்காதீங்க மாமா” என்றாள்.

“அதான் விஷயமா?” என்றவன் அவளை தன்னிடமிருந்து பிரித்து அமர வைத்து, தானும் அமர்ந்து கொண்டான்.

“ஈவ்னிங் ரிதிகிட்ட பேசினதை கேட்டியா?” என விசாரித்தான்.

“நீங்க திட்டினதே என்னைத்தான்” என உள்ளே போன குரலில் சொன்னாள்.

வாய் விட்டு சிரித்தவன் அவளின் முறைப்பில் சிரிப்பை நிறுத்தினான்.

“எனக்கு என்னமோ இந்த விஷயத்துல… ப்ச் நாந்தான் தப்பு பண்றேன்” என தன்னை தானே குறை சொன்னாள்.

“உம்மேல எந்த தப்பும் இல்லை, எனக்கு உம்மேல எந்த கோவமும் இல்லை. ஆனா இத நாம தள்ளி போடறது அவசியம் இல்லாதது. என்ன ஆகுமோன்னு நீ பயப்படாத, எனக்கு தெரியாதா நான் எப்படி இருக்கேன்… என்னால…” என்றவன் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல், “ம்க்கும்…” என குரலை செருமி, “முழு மனசா சரின்னு சொல்லு, என்னதான் ஆகுதுன்னு பார்த்திடுவோம், என்ன?” எனக் கேட்டான்.

அவள் அரை குறையாக தலையாட்ட, “நாளைக்கு காலைல இந்த பயமெல்லாம் ஓடியே போயிருக்கும் மதி, என்னை நம்பு” என்றான்.

தெளியாதவளாக அவனை நெருங்கி வந்து அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

“என்ன… இப்படி சாஞ்சுகிட்டா… வாய் தொறந்து ஏதாவது சொல்லு” என்றான்.

“எனக்கு தெரியாது, நீங்க என்ன சொன்னாலும் செஞ்சாலும் சரிதான்” என அவள் சொல்ல சிரித்து விட்டான். அவனது மார்பிலேயே ஒரு அடி வைத்து அவனது சிரிப்புக்கு தன் கண்டனத்தை தெரிவித்தாள்.

அவளை நேராக நிமிர்த்தி அமர வைத்து தோள்களை இதமாக பிடித்து விட்டுக் கொண்டே, “இப்படி பயந்து பயந்தா நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கிறது? இடைல எனக்கு முடியாம போனது எல்லாத்தையும் மறந்து போயிடு. ‘இப்படி சுத்தி சுத்தி வர்றானே இந்த ஆளு, எப்படா இவன் கூட சேர்ந்து வாழப் போறோம்’னு எப்பவாவது நினைச்சிருக்கியா?” எனக் கேட்டான்.

“நிறைய தடவ” என்றாள்.

“ம்ம்… அதிலேயும் எப்பவாவது ரொம்ப ரொம்ப ஓவர் ஃபீலிங்ஸ் ஆகிருப்பியே, அத நினைவு படுத்து” என்றான்.

கண்களை மூடிக் கொண்டாள் மதி. அவனுடனான நிறைய நினைவுகள் அலை மோதின. ஏதோ ஒரு முறை அப்படி அதீத உணர்வு என்றில்லாமல் அவன் அவளிடமிருந்து விடைபெற்று செல்லும் ஒவ்வொரு முறையும் அப்படித்தான் நினைத்திருக்கிறாள். அவள் இதழ்களில் முறுவல் மலர்வதை கண்டவனிடமும் குறுநகை.

தன் கழுத்தோரம் அவனது இதழ் ஸ்பரிசத்தை உணர்ந்தவள் கண்களை இன்னும் இறுக மூடிக் கொண்டாள். தட தடக்கும் அவளது இதயம் அவனது அணைப்பில் சமாதானம் கொள்ள, வெட வெடத்த அவளது தேகம் அவனது வாஞ்சையான அழைப்பில் அவன் வசமானது.

மோகம் மட்டுமே அவர்களின் ஆடையாக, முத்தங்கள் மட்டுமே மொழியாக, தீண்டல்கள் எல்லாம் ஆசை தீ வளர்க்க, பார்வையில் புரிதல்கள் பரிமாறப் பட அவர்களுக்குள் இனிதாக நல் இல்லறம் மலர்ந்தது.

விழிகள் திறந்து கணவனை பார்வையால் தழுவிக் கொண்டாள் மதி. அவன் குறும்பாக சிரித்து தலையசைத்து அவளின் நலம் விசாரிக்க, அவனது மார்போடு ஒண்டிக் கொண்டவள், “நான்தான் தேவையில்லாம பயந்திட்டேன் மாமா” என்றாள்.

உடலில் ஏற்பட்டிருந்த இனிய அயர்விற்கு இதமாக அவளை அணைத்த படியே அவனும் விழி மூடிக் கொண்டான்.