அவள் முறைத்துக் கொண்டிருக்க, “அது… உன்னை சுத்திகிட்டு பின்னால போய் நெருக்கி விட்டா டைம் எடுக்கும்ல… அதான்” என்றான்.
அவள் பூ வைத்துக் கொள்ள போக, “வேற ஹெல்ப்?” எனக் கேட்டான்.
“இப்படி பக்கத்துல நின்னு என் மனசை கெடுக்காம தள்ளி நில்லுங்க” என்றாள்.
“என்னை பத்தி எப்படி வேணா நினைக்கலாம் நீ, அதெப்படி மனசு கெடுறதா ஆகும்?”
“அதெல்லாம் அப்படித்தான், வாங்க வாங்க டைம் ஆச்சு…” என்றவள் அவனது கையை பிடித்திழுக்க, அவளை ஆசையாக ஒரு முறை அணைத்து சில நொடிகள் சென்று விடுவித்து பின்னர்தான் வெளியே செல்ல நடந்தான் ரவி.
அவனை செல்லமாக திட்டிக் கொண்டே அவளும் வெளியேறினாள்.
அனைவரும் ஒன்றாக போகலாம் என வேனுக்கு சொல்லியிருந்தனர். பாடல்கள் ஓட விசாகன் ஒரே துள்ளாட்டம். ரேஷ்மியையும் எழுப்பி நிறுத்தி ஆடினாள் ஷஷ்டி.
மதி மலர்ந்த முகமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, ரவியோ அவளைத்தான் பார்த்திருந்தான்.
எதேச்சையாக அவன் பக்கமாக திரும்பியவள், “ஜன்னலோர சீட்ல உட்கார்ந்திட்டு வெளில கண்ணு போகுதா? அதுக்கு நானே அங்க உட்கார்ந்திருப்பேன்” என சின்னக் குரலில் சொன்னாள்.
“வேடிக்கை பார்க்க இங்க உட்கார்ந்தேன்னு நினைச்சியா? உன்னை பார்க்க நல்லா வசதியா இருக்குமேன்னுதான்” என்றான் ரவி.
“ஆமாம் என்னை நீங்க பார்க்கிறதே இல்லை, இப்பதான் புதுசா பார்க்குறீங்க”
“தப்பா சொல்லாத, உன்னை எங்க நான் முழுசா பார்த்திருக்கேன்? ம்ஹூம் எங்க பார்க்க விட்ட?” என குறும்பாக கேட்டான்.
“மாமா… கோயிலுக்கு போறப்ப இப்படியா பேசுவாங்க?”
“எப்படி பேசினாங்க?”
“ம்ம்… உங்களை…” ஒன்றும் சொல்ல முடியாமல் அவனிடமிருந்து பார்வையை திருப்பிக் கொண்டாள்.
சத்தமில்லாமல் அவளது கையை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டவன், நன்றாக சாய்ந்து கொண்டு மதியை ரசிக்க ஆரம்பித்தான்.
ஒரு மணி நேரப் பிரயாணத்தில் கோயில் வந்தது. கிராமத்தின் எல்லை என்பதால் கூட்டமே இல்லை. தண்மதிதான் பொங்கல் வைத்தாள். நிறைவாக வழிபட்டனர்.
சற்று தள்ளியிருந்த வேப்ப மரத்தின் நிழலில் உறங்கிப் போயிருந்த விசாகனை தோளில் அணைவாக வைத்துக் கொண்டு நின்றிருந்த ரிதி, அவன் சிணுங்கவும் தட்டி கொடுத்து கொண்டே இங்குமங்கும் நடந்தாள்.
பைக்கில் வந்த யாரோ ஒரு இளைஞன் ஹார்ன் அடிக்க, திரும்பிப் பார்த்து, “ஷ் ஷ்… குழந்தை தூங்குது” என்றாள்.
அவளை ஏற இறங்க பார்த்தவன், “இது சர்க்கார் ரோட், கொஞ்சம் என் பைக்குக்கு வழி விட்டு அப்படி ஓரமா நின்னு உங்க குழந்தையை தூங்க வைங்க” என்றான்.
என்னவோ சொல்ல கூடாததை சொல்லி விட்டான் என்பது போல அவனை பார்த்தவள், “என் குழந்தை இல்லை, என் அக்கா குழந்தை” என சொல்லிக் கொண்டே நகர்ந்தாள்.
தன்னிடம் கோவம் கொண்ட முன்பின் தெரியாத அந்தப் பெண்ணை சுவாரஷ்யமாக பார்த்துக் கொண்டே, சிணுங்கிய தன் கைப்பேசியை எடுத்து பேசினான் அவன்.
“ஊருக்கு வந்திட்டேன்டா, சரியா சிக்னல் இல்லை, நீ அனுப்பின லொகேஷன் ஓபன் ஆக மாட்டேங்குது. என்ன… இங்கதான் இருக்கியா? எங்க?” எனக் கேட்டுக் கொண்டே திரும்பி பார்த்தான்.
“டேய் சித்து… இந்த பக்கம் வா” என சொல்லி அழைத்தான் பைக்கில் வந்திருந்த இன்னொரு இளைஞன்.
“சித்து கொத்து… ஆளும் மூஞ்சும் பாரு!” என காரணமே இல்லாமல் மனதிற்குள் அவனை திட்டினாள் ரிதி.
“நல்ல ஊருடா! நடு ரோட்ல நின்னு குழந்தைக்கு தாலாட்டு பாடுறத இங்கதான் பார்க்கிறேன்” என சொல்லிக் கொண்டே ‘சித்து’ என அழைக்கப் படும் சித்தார்த் புறப்பட, அவனை நன்றாக முறைத்து வைத்தாள் ரிதி.
“இன்னும் தூங்குறானா, எழுப்பி விடுக்கா” என வந்து நின்றாள் ரேஷ்மி.
“சும்மான்னு இருடி, இப்பதான் ஒரு குரங்கை அடிச்சு தொரத்தி விட்டேன், அடுத்து நீயா?” என ரிதி கேட்க, இங்கே ஏது குரங்கு என சுற்றும் முற்றும் பார்த்தாள் ரேஷ்மி.
“அந்த குரங்கு பைக்ல போயிடுச்சு, நீ போ, இவன் எந்திரிச்சுதும் நானே வரேன்” என ரிதி சொல்ல, “உன்கிட்ட மாட்டின அந்த குரங்கை நினைச்சு கவலையா இருக்கு” என கேலி பேசி விட்டு சென்றாள் ரேஷ்மி.
மதிய உணவெல்லாம் வீட்டிலேயே சமைத்து பேக் செய்து எடுத்து வந்திருந்தனர். வெளி சாப்பாடு என்றாலே ரவிக்கு பயந்து வருகிறது. அங்கேயே அமர்ந்து சாப்பிட்டார்கள்.
விசாகனுக்கு பாரதி உணவூட்டி முடிக்க, அவனை வாங்கிக் கொண்டு, “நீயும் சாப்பிடு” என்றார் கணேசன்.
“அவனுக்கு வாயெல்லாம் துடைக்கணும்” என அவள் சொல்ல, “நான் பார்க்க மாட்டேனா? கண்ண பார்த்தாலே பசி வந்தது தெரியுது, போ நீ” என்றார் கணேசன்.
அப்பாவின் மூக்கு கண்ணாடியை விசாகன் எடுக்க, மகனிடமிருந்து வாங்கி அதை நன்றாக துடைத்து கணவருக்கு அணிவிக்க போனாள் பாரதி.
“கொடு கொடு என்கிட்ட…” என்றார் கணேசன்.
“ஏன் ஏன்… நான் போட்டு விட்டா என்ன?” என பாரதி வம்பாக கேட்க, “யாராவது பார்ப்பாங்க பாரதி” என்றார்.
“நல்லா கண்ண விரிச்சுகிட்டு பாக்க சொல்லுங்க” என்ற பாரதி, தானே கண்ணாடியை போட்டு விட்டு, அவரது கன்னத்தில் இல்லாத தூசியை வேண்டுமென்றே அழுந்த துடைத்து விட்டு, ‘இப்ப என்ன செய்வீங்க?’ என கேலி பார்வை பார்த்து சென்றாள்.
“இவளோட…” என அலுத்துக் கொண்டாலும் கணேசனுக்கு சிரிப்பு வரத்தான் செய்தது.
திட்டமிட்ட நேரத்திலேயே கோயிலிலிருந்து புறப்பட்டு விட்டனர். வழியிலேயே கணேசன் தன் குடும்பத்துடன் இறங்கிக் கொண்டார், கேப் வைத்து வீட்டுக்கு சென்று விடுவார். ஜோதியும் ரேஷ்மியும் அவர்கள் வீடு இருக்கும் தெரு முனையில் இறங்கிக் கொண்டனர்.
ரவி குடும்பம் மூன்று மணிக்கெல்லாம் வீடு வந்து விட்டனர். சிகை கலைந்து, ஆடை நலுங்கி, தலையிலிருந்த பூ வாடி, பயணக் களைப்பு தெரிய இருந்தாலும் ரவியை ஈர்த்தாள் தண்மதி.
அவளின் புடவையை கலைத்தவன் மயக்கம் கொண்டவனாக செயல் பட, “மாமா… இப்ப வேணாம் ரெஸ்ட் எடுங்க” என சொல்லி விலகினாள் அவள்.
“மதி…” என கெஞ்சலாக அழைத்தவன் பின் கண்டிப்போடு அழைக்க, அவளோ வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தாள்.
ஒரு மாதத்திற்கு முன்பே மருத்துவரிடம் ஆலோசனை செய்திருந்தான் ரவி. அவர்கள் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடலாம் என சொல்லியிருந்தவர், கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும், பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் உடனே வந்து சொல்லுங்கள் என்றெல்லாம் கூறியிருக்க மதி பயந்து விட்டாள்.
அப்போதே அவன் அவளிடம் ஆசையாக நெருங்க, பயத்தோடு அவனை பார்த்தவள் பின் அழுதே விட்டாள்.
“இவ்ளோ நாள் காத்திருந்தோம், முழுசா சரியாகட்டுமே உங்களுக்கு” என கெஞ்சலாக அவள் கேட்டிருக்க, அவளை கட்டாயப் படுத்த அவனுக்கும் மனம் வரவில்லை.
இந்த மாதம் மருத்துவரை பார்க்க போன போதுதான் மதியின் பயத்தை ஓரளவு தெளிவித்திருந்தார் மருத்துவர். ஆனாலும் முன்பு ஏற்பட்ட பயத்தின் தாக்கம் அவளிடம் இருக்கத்தான் செய்தது. பின் அவளுக்கு மாத விலக்கு வந்து விட, அவர்கள் விலகியே இருந்தனர்.