சிந்தை நிறை தண்மதியே -20 (final)

 

அத்தியாயம் -20

 

ரவி பணிக்கு திரும்பி இரண்டு வாரங்கள் ஆகின்றன. எட்டு மாதங்கள் நோயுடன் போராடியவனின் உடல்நிலை தொண்ணூறு சதவீதம் குணமாகி விட்டது. கால் விரல்களில் மட்டும் மத மதப்பு இருக்கிறது, அதுவும் போக போக சரியாகி விடுமென நம்பிக்கை அளித்திருக்கிறார் மருத்துவர்.

Advertisements

 

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அரசு விடுமுறை. இன்று குடும்பத்தினர் அனைவரும் குல தெய்வ கோயிலுக்கு புறப்படுகின்றனர்.

 

கணேசன், பாரதி தம்பதியினர் தங்கள் பிள்ளைகளுடன் வந்திருந்தனர். ஜோதியின் கணவரிடம் கைப்பேசி வழியாக பேசி குடும்பத்துடன் வரவேண்டும் என ரவியே அழைப்பு விடுத்திருந்தான். ஜோதியின் கணவருக்கு ரவியை எதிர் கொள்வதில் சங்கடம், ஆகவே தனக்கு வேலை என சொல்லி மனைவியையும் மகளையும் அனுப்பி வைத்திருந்தார்.

 

“என்னக்கா, ரேஷ்மி வருவான்னு சொன்ன, வரலையா அவ?” என ஜோதியிடம் கேட்டான் ரவி.

 

“அவ உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்ன விஷயம் உனக்கும் தெரிஞ்சதுல ரொம்ப எம்பாரஸிங்கா ஃபீல் பண்றாடா, அம்மா வீட்ல இருக்கா” என ஜோதி சொல்லவுமே, சின்ன சிரிப்புடன் அங்கு சென்றான் ரவி.

 

அவனை காணவுமே ஒரு வித பதற்றத்துடன் எழுந்து நின்றாள் ரேஷ்மி. அவனை ஏறெடுத்து பார்க்க முடியாத படி தவித்து போனாள்.

 

இயல்பாக அவளின் அருகில் சென்று அவளின் தலையை பிடித்து ஆட்டி விட்டவன், “எப்போடி இவ்ளோ வளர்ந்த நீ?” எனக் கேட்டான்.

 

கலங்கிய விழிகளுடன் அவள் அவனை பார்க்க, “இந்த மாமான்னா ரேஷ்மி குட்டிக்கு பிடிக்கும், இப்பவும் பிடிக்கும்தானே?” எனக் கேட்டான்.

 

அவள் வேகமாக ஆம் என தலையாட்ட, “உனக்கு சரியா புரிஞ்சுக்க தெரியாம குழப்பிகிட்ட, நான் நல்லாருந்திருந்தா பேசி புரிய வச்சிருப்பேன். எப்பவும் போல இருக்கணும் சரியா?” எனக் கேட்டான்.

 

தோள்கள் தளர, பெரிய மூச்சை வெளியேற்றியவள், “ஸாரி மாமா” என்றாள்.

 

“எதுக்குடா ஸாரி? உன்னை போய் மாமா தப்பா நினைப்பேனா?”

 

“அவங்க… அது” என்றவள் மதியை என்ன உறவு சொல்லி குறிப்பிடுவது என ஒரு நொடி தடுமாறி உதவிக்காக மாமனை பார்த்தாள்.

 

“மதியா?” என கேட்டறிந்து கொண்டவன், “உன் அக்காவும் உன்னை தப்பா நினைக்க மாட்டா. வா அங்க” என சொல்லி அவளின் கையை பிடித்து இழுத்தான்.

 

“மாமா இருங்க, மூஞ்சு கழுவிட்டு வர்றேன்” என்றாள்.

 

“ஹையோ நீ அடிச்சு வச்சிருக்க வெள்ளை பெயிண்ட் கரைஞ்சு போயிடுமேடா” என கிண்டல் செய்து, பின் அவளை தோளோடு அணைத்து, “சீக்கிரம் வா” என சொல்லி சென்றான்.

 

அவனது வீட்டில் தண்மதியை தவிர அனைவரும் தயாராகியிருந்தனர். அவளுக்கு முக்கியமாக முடித்துக் கொடுக்க வேண்டிய வேலை, விடியலில் லேப்டாப் எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தவள் சற்று முன்தான் தயாராக சென்றிருந்தாள்.

 

“எல்லாரும் கிளம்பியாச்சு மகாராணிக்காக வெயிட்டிங்” என பாரதியிடம் நொடித்தார் சொர்ணம் பாட்டி. பாரதி சலிப்பாக பார்த்தாளே தவிர பதில் சொல்லவில்லை.

 

சொர்ணம் பாட்டி அப்படியேதான் இருக்கிறார், அவரின் குணத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இந்த வீட்டுக்கு வருவதே அரிது, ஏதாவது வில்லங்கமாக பேசி வைத்தாலும் அவரை நேரடியாக திட்டி விடுகிறார்கள், ஆகவே தன் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள இப்படி சத்தம் குறைத்து யாரிடமாவது குறை பேசிக் கொள்வார். வெளிப்படையாக எதுவும் சொல்வதில்லை.

 

பூர்ணிமாவும் கோசலையும் கோயில் பூஜைக்கு தேவையானது இருக்கிறதா என ஒரு முறை பார்த்து எடுத்து வைத்தனர். மாலைகள் இருந்த  பையை பூர்ணிமா கையில் எடுக்க, “வெயிட்டா இருக்குமா அது, என்கிட்ட கொடு” என வாங்கிக் கொண்டான் ரவி.

 

“என்னிட்டேயே கொடு” என பூர்ணிமா சொல்ல, சீனு ஓடி வந்து மகன் கையிலிருந்த பையை வாங்க முனைந்தார்.

 

“அட அட… விடுங்க. என்னால முடியறத செய்ய எந்த தடையும் இல்லைனு டாக்டர் சொல்லிட்டார். இதெல்லாம் செஞ்சாதான் மஸில்ஸ் இன்னும் ஸ்டராங் ஆகும்” என்ற ரவி, பையை வெளியில் போய் வைத்து விட்டு வந்தான்.

 

“டைம் ஆகுது பாருங்க” என ரவியிடம் சொன்னார் கணேசன்.

 

“ஏன் மதி இவ்ளோ லேட் பண்ணுது, உடம்புக்கு ஒன்னும் இல்லையே?” என அக்கறையாக விசாரித்தார் சீனு.

 

ரவி விவரம் சொல்ல, “எதிர்பாராம வேலைன்னு வந்தா இப்படி ஆகும்தானே? நாம வெயிட் பண்ணுவோம்” என கணேசனிடம் சமாதானமாக சொன்னார் சீனு.

 

இந்த வீட்டில் அண்ணன் மகள் எப்படி வாழ்வாளோ என்றெல்லாம் பயந்திருக்கிறார் கணேசன். அர்த்தமே இல்லாத பயம் என இப்போது நினைத்துக் கொண்டார்.

 

விசாகன் துறு துறு என ஓடியாடி விளையாடி கொண்டிருக்க, ஷஷ்டி அவனுடன் இருந்தாள். இருவருமே தண்மதி வாங்கிக் கொடுத்திருந்த ஆடைகளைதான் உடுத்தியிருந்தனர். மதி வெளியில் சென்றாலே சித்தப்பாவின் பிள்ளைகளுக்கு என ஏதாவது வாங்கினால்தான் திருப்தியடைவாள்.

 

ரேஷ்மி வரவும் விசாகன் ஷஷ்டி இருவரையும் கூட வீட்டுக்கு வெளியில் உள்ள இடத்திற்கு அழைத்து வந்து பொழுதை கழித்தாள் ரிதி.

 

மனைவி இன்னும் வராமலிருக்க அறைக் கதவை தட்டி, திறக்க சொல்லி உள்ளே போனான் ரவி.

 

வேக வேகமாக புடவை கட்டிக் கொண்டிருந்த தண்மதி, “டென் மினிட்ஸ் மாமா” என கெஞ்சலாக சொன்னாள்.

 

“ரிலாக்ஸா கிளம்பு” என்றவன் அவளின் கைப்பையை எடுத்து என்ன எடுத்து வைக்க வேண்டும் எனக் கேட்டு எடுத்து வைத்தான்.

 

மதி அவசரமாக தலை வாரிக் கொள்ள, அடர் கூந்தலில் சிக்கு ஏற்பட்டு பிரிந்து கொடுக்காமல் வலி கொடுத்தது. “அச்சோ…” என அலுத்தாள்.

 

“நான்தான் பொறுமையா கிளம்புன்னு சொன்னேன்ல மதி? முடியோட என்ன சண்டை போடற?” என கடிந்து கொண்ட ரவி, அவனே சிக்கை எடுத்து விட்டான்.

 

“அவசரத்துக்கு கிளம்ப முடியாம எவ்ளோ சிரமம் பாருங்க, நான் சின்னதா கட் பண்ணி விட போறேன்” என சொல்லிக் கொண்டே பின்னலிட்டுக் கொண்டாள்.

 

“யாரும் உன்னை அவசர படுத்தல, நீயா டென்ஷன் ஆகிக்கிற, முடில கை வச்ச அடி பிச்சிடுவேன்” என சொல்லிக் கொண்டே படுக்கையில் போய் அமர்ந்து கொண்டான்.

 

“என் முடி, நான் கட் பண்ணிப்பேன், உங்களுக்கென்ன?” என்றாள்.

 

“உன்னது ஏதும் உனக்கு சொந்தமில்லை, உன் ஓனர் நான்தான், புரிஞ்சுதா?”

 

“ஹையோ பேசாதீங்க, கிளம்பறது ஸ்லோ ஆகுது” என சொல்லி அவனை பேச விடாமல் செய்தாள். இல்லையென்றால் பேச்சை திசை மாற்றி அவளை சிவக்க வைக்காமல் விட மாட்டான்.

 

நீல வண்ண மென்பட்டில் இருந்தவளை விட்டு விழியகற்ற முடியவில்லை அவனால்.

 

அனைவரையும் காக்க வைக்கிறோமே என மதிக்கு சங்கடம். பர பரப்பாகத்தான் இருந்தாள். கைக்கு வளையல் அணிந்து கொண்டே கழுத்துக்கு அணிய வேண்டியதையும் பூவையும் கையில் எடுத்தவள், “வாங்க மாமா, போலாம்” என்றாள்.

 

“கைல உள்ளது எல்லாம்?”

 

“டைம் இல்லை, போறப்ப வழில பார்த்துக்கலாம்” என்றவளை பிடித்து நிறுத்தினான்.

 

“டூ மினிட்ஸ் ஆகுமா?” எனக் கேட்டவன் அவனே நகையை வாங்கி அவளுக்கு அணிவித்து விட்டான்.

 

“கொக்கி லூசா இல்லாம நெருக்கி விடுங்க மாமா” என அவள் சொல்ல, அவளுக்கு முன்னால் நின்ற படியே கொக்கியை பல்லால் கடித்து நெருக்கி விட்டு விலகினான்.