அதுவே அடிக்கடி நடக்க, மாமியாரிடம் கோவமாக பேசி விட்டாள் பாரதி. அத்தோடு நில்லாமல் சிறு பெண் என்றும் பாராமல் தண்மதியையும் திட்டி விட்டாள்.
ஆவேசம் கொண்ட பரமேஸ்வரி, “பச்ச புள்ளைய வெளில அழைச்சிட்டு போறது கொடுமையா தெரியுதா உனக்கு? எம் பேத்தி என்ன உங்க ரெண்டு பேருக்கும் ஊடாலயா வந்து படுத்துக்கிட்டா?” என கேட்டு விட்டார்.
கணேசன் அப்போது வீட்டில் இருக்கவில்லை. மாமியாரிடம் கோவித்துக் கொண்ட பாரதி பிறந்த வீட்டுக்கு சென்று விட்டார்.
விஷயம் தெரிந்த பின் அம்மாவை கடிந்து கொண்ட கணேசன் அவரையும் அழைத்துக் கொண்டு மனைவியை காண சென்றார். மகளுடன் தனிக் குடித்தனம் போவதாக இருந்தால் அவளை அனுப்புகிறோம் என தீர்மானமாக சொல்லி விட்டனர் பாரதியின் வீட்டினர்.
அம்மாவையும் அண்ணன் மகளையும் தனியாக விட தயாரில்லை கணேசன். இனி பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்கிறேன் என மனைவியிடம் பேசி பார்த்தார்.
‘என்னை விட அப்படியென்ன அவர்கள் உனக்கு முக்கியம்?’ என பாரதிக்கு கோவம்.
‘பெற்ற தாயையே தள்ளி வைக்க சொல்வீர்களா?’ என பரமேஸ்வரியும் சம்பந்தி வீட்டாரிடம் காட்டமாகவே பேசி விட்டார்.
சில நாட்கள் ஆற போட்டால் சரியாகலாம் என நினைத்தார் கணேசன். விவாகரத்து நோட்டீஸ்தான் வந்து சேர்ந்தது. மனைவியை காண அவர் மட்டும் சென்றார். பாரதி அங்கில்லை, மைசூரில் இருப்பதாக சொல்லப் பட்டது. அவரது பெற்றோரால் மோசமாக அவமான படுத்த பட்டு அனுப்ப பட்டார்.
பாரதியின் கைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டால் அவளின் அம்மாதான் எடுத்து பேசினார். மனைவியை எப்படி தொடர்பு கொள்ளவென தெரியாமல் தவித்தார் கணேசன்.
கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்த போது இவர் சம்மதிக்காத காரணத்தால் கேஸ் கொஞ்சம் இழுபட்டது. பாரதியின் வக்கீலைதான் பார்க்க முடிந்தது, பாரதிக்கு உடல்நிலை பாதிக்க பட்டிருப்பதாக சொல்லி அவளை இந்த பக்கம் அழைத்து வரவே இல்லை.
மனைவியின் பெயரில் அவர் எழுதி அனுப்பிய கடிதங்கள் பிரிக்க படாமலே திருப்பி அனுப்ப பட்டன.
பின்னொரு நாள் பாரதியிடமிருந்து இவருக்கு கடிதம் வந்தது. எதிர்பார்த்த வாழ்க்கையை வாழ விடாமல் தண்டித்தது போதும், இனியாவது சுதந்திரமாக மூச்சு விட அனுமதி தர வேண்டும் என்ற பொருளில் எழுதப் பட்டிருந்தது கடிதம்.
அடுத்த முறை அவர் கோர்ட் சென்ற போது பாரதியும் வந்திருந்தாள். கணேசனால் தன் மனைவியை அணுக முடியாத படி பாரதியின் வீட்டினர் அரணாக நின்றனர். பாரதி கூட கணவரை திரும்பியும் பார்க்கவில்லை.
என்னவோ சலிப்பு வந்து விட்டது கணேசனுக்கு, இனியும் போராடி அப்படியென்ன இழுத்து பிடிப்பது என நினைத்தவர் விவாகரத்துக்கு ஒப்புதல் வழங்கி விட்டார்.
ஆனாலும் வேறொரு வாழ்க்கையை அவரால் நினைத்து பார்க்க முடியவில்லை. ஆற அமர யோசித்த போது தன் பக்கமும் தவறுகள் இருப்பது அவருக்கு புரிந்தது.
‘இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்க அண்ணன் மகள் மட்டும் போதும்’ என முடிவெடுத்து விட்டார். இடைப்பட்ட காலத்தில் நகைக் கடை சரியாக போகாமல் இழுத்து மூட வேண்டியதாகி போனது.
அந்த குடும்பத்தின் மீது ஊராரின் கேலிப் பார்வை படிய ஆரம்பித்தது. இருந்ததை விற்று நிரந்தர வைப்பாக வங்கியில் போட்டு விட்டார். பக்கத்து ஊரில் எப்போதோ வாங்கிப் போட்ட இடத்தில் சின்னதாக வீடு கட்டிக் கொண்டு வந்து விட்டார்.
அப்போதும் அவர்களை பற்றி யாருக்கும் ஏதும் தெரியாது என்றில்லை, ஆனால் வெளிப்படையாக குத்தி பேசி விடாமல் பட்டும் படாமல் நடந்து கொண்டனர், அவர்களுக்கும் இட மாற்றம் ஓரளவு நல்ல மன நிலையை கொடுத்தது.
கணேசனுக்கு ஓடி ஓடி பொருள் ஈட்டும் எண்ணமெல்லாம் இல்லை, இருப்பது போதும் என்ற மன நிலைக்கு வந்து விட்டவர் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக சேர்ந்து கொண்டார். முன்னர் அதே பகுதியில் வேறு வேறு கிளைகளில் பணி புரிந்தவர் வீடிருந்த ஊரில் உள்ள கிளைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்புதான் பணி மாற்றம் பெற்று வந்திருந்தார்.
“சித்தப்பாவே எப்பவாவதுதான் இப்படி அசந்து தூங்குவாங்க, எழுப்ப வேணாம் ஆத்தா, நான் பஸ்ல போயிக்கிறேன்” என்றாள் தண்மதி.
“பஸ் ஸ்டாண்ட்க்கு போவணும்லடி?”
“பக்கம்தானே, நான் நடந்து போயிக்கிறேன்”
“அவன் தூங்கட்டும், தனியாலாம் போவ வேணாம், நான் வர்றேன்” என்றார் பாட்டி.
“உனக்கும்தான் எதுக்கு சிரமம்?”
“எது பத்து தப்படி நடக்கிறதா? நானெல்லாம் பத்து மைல் தூரத்த பத்து நிமிஷத்துல கடக்கிறவடி”
“அப்படி நடந்தா உலக சாதனை ஆத்தா”
“இந்த உலகத்துல வாழறதே சாதனைதான், வா வா…” என்ற பாட்டி கட்டியிருந்த புடவையையே கொஞ்சம் திருத்தி கட்டி பேத்தியுடன் புறப்பட்டார்.
பத்து நிமிட நடையில் பேருந்து நிறுத்தம் வந்து விட்டது. வெளிச்சம் தோன்றியிருந்தாலும் விடுமுறை நாள் என்பதாலோ என்னவோ அங்கே ஆட்கள் யாருமில்லை.
“முகூர்த்த நாளுல கூட கூட்டத்த காணோமே, அதிசயம்தான்” என வியந்தார் பாட்டி.
“ரொம்ப நல்லது, சீட் கிடைச்சிடும், ஜம்முனு உட்கார்ந்திட்டு போவேன்” என அவள் சொல்லும் போதே, திருச்சியிலிருந்து திருவாரூர் நோக்கி செல்லும் தனியார் பேருந்து ஒன்று வந்தது. இடையில்தான் அவள் செல்ல வேண்டிய ஊர்.
தண்மதி ஏறிக் கொள்ள, பேருந்து கண்களை விட்டு மறைந்த பிறகுதான் புறப்பட்டார் பாட்டி.
சொந்த ஊருக்கு சென்றிருந்த ரவியும் அதே பேருந்தில்தான் திரும்பிக் கொண்டிருந்தான். அனேகம் பேர் உறக்கத்தில் இருக்க, ரவி விழித்துக் கொண்டுதான் இருந்தான்.
வழக்கமாக தன் இரு சக்கர வாகனத்திலேயே ஊருக்கு சென்று விட்டு திரும்பி விடுவான். வாகனத்தை சர்வீஸுக்கு விட்டிருக்கிறான். நெரிசலில் பயணிப்பதை தவிர்க்க அதிகாலையே ஊரிலிருந்து புறப்பட்டிருந்தான்.
குளிர்ச்சியான காலை நேரம், கண்களுக்கு இதமாக பெண் ஒருத்தி ஏறவுமே அவனை மீறி ஆர்வமாக தண்மதியை பார்த்தான். புடவையில் இருந்தவள் பெரிய பெண்ணாக தெரியவே கல்லூரியில் படிப்பவள் என அவனுக்கு தோன்றவில்லை.
பார்க்கிற பெண்களை எல்லாம் வெறிக்கும் ரகம் இல்லையென்றாலும் என்னவோ அந்த நீல புடவைக்காரி அவனை வசீகரித்தாள், அவனது பார்வையை, சிந்தனையை தன் பக்கமாகவே ஈர்த்தாள்.
முதல் பார்வையில் தோன்றும் காதலில் எல்லாம் அவனுக்கு நம்பிக்கையில்லை, பழகிப் பார்த்து ஒத்து வருமா என தெரியாமல் குண நலன்களில் பிடித்தம் ஏற்படாமல் அதெப்படி தோற்றத்தை வைத்து ஒருவருடன் வாழ்க்கையை பிணைத்துக் கொள்ள முடியும் என பக்கம் பக்கமாக பேசுவான்.
இப்போதும் அவள் ஈரக்கிறாள் என தெரிந்தாலும் இந்த நொடி இப்படியொரு உணர்வு என சாதாரணமாகவே எடுத்துக் கொள்ளப் பார்த்தான்.
அவன் பார்வையில் சிக்கும் படியான இருக்கையில் வசதியாக அமர்ந்திருந்தவள் அவனை இனிதாக இம்சை செய்தாள். வலிந்து தன் பார்வையை ஜன்னல் பக்கமாக திருப்பிக் கொண்டு விட்டான்.