“ஒவ்வொரு முறையும் உனக்காக பரிஞ்சு பேச நான் ஓடி வர முடியாது மதி, உனக்காக நீயே நிக்கலைனா தப்பு” என்றான்.

“அவ பதிவுசு தம்பி, அதெல்லாம் வராது” என்றார் பாட்டி.

“ம்ம்… படிப்பை முடிச்சி வேலையும் கிடைக்கட்டும், அப்புறம் எப்படி பேசுவான்னு பாருங்க. அதுக்குத்தான் வெயிட் பண்ணுங்கன்னு சொல்றேன் பாட்டி” என்றான் ரவி.

அரைகுறையாக தலையாட்டினார் பாட்டி.

 “உலகமே தலைகீழ் ஆனாலும் உங்க பேத்தியைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன். ஜாலியா கோயில் குளம்னு சுத்துங்க” என்றவன் மதியிடம் தண்ணீர் தரும் படி சொல்லி பின் பக்கம் சென்றான்.

ஷஷ்டி உற்சாகமாக எதைப் பற்றியோ ரவியுடன் பேசிக் கொண்டிருக்க, தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள் தண்மதி. ஷஷ்டி சற்று தள்ளிப் போய் ஸ்கிப்பிங் விளையாட ஆரம்பித்தாள்.

தண்ணீர் பருகியவன், “எல்லாம் உன்னாலன்னு நினைக்க கூடாது, கண்டதையும் யோசிக்காம ரிலாக்ஸா இரு” என்றான்.

“ம்…” என மட்டும் மதி சொல்ல, “ஏன் குரல் உள்ள போகுது?” என்றவன் ஷஷ்டியை வீட்டுக்குள் அனுப்பி வைத்து விட்டு, “என் கூட லைஃப் எப்படி போகுமோன்னு பயமாயிருக்கா?” எனக் கேட்டான்.

வேகமாக மறுத்தாள்.

“அப்புறம்?”

“நான் ஏன் லேட்டா பொறந்தேன்னு யோசிச்சேன்” என்றவள் அவனிடமிருந்து தப்பிக்க போக, “ஹேய் நில்லு!” என அதட்டி அவளை அங்கேயே நிற்க வைத்தான்.

அவள் வெட்கமும் சிரிப்புமாக இருக்க, அவனுக்கும் சிரிப்புதான்.

“நைட் ஒழுங்கா தூங்குறியா இல்லை கனவு கண்டுக்கிட்டு இருக்கியா?” என பொய்யான கண்டிப்போடு கேட்டான்.

“ஹையோ!” என அதிர்ந்தாள் அவள்.

“உன் வயசு அப்டி மதி. ஆனா…”

“அதெல்லாம் கவனமா படிப்பேன், நல்லா ஸ்கோர் பண்ணுவேன், உங்களுக்கு ஏத்தவளா மாறுவேன்” என ரோஷமாக சொன்னாள்.

விழிகளை விரித்தவன், “இப்பவும் நீ எனக்கு ஏத்தவதான். அக்கா பத்தி, என் வீட்ல உள்ளவங்க பத்திலாம் கவலை படாம இரு” என சொல்லி எழுந்து கொண்டான்.

உள்ளிருந்த படியே அடிக்கடி எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தார் பாட்டி.

“இதுக்கு மேல நான் இங்க இருந்தா உன் ஆத்தா சாமியாட ஆரம்பிச்சிடுவாங்க. வரட்டா?” என அவன் கேட்க, சரியென தலையாட்டினாள்.

பாட்டி பார்க்கவில்லையே என உறுதி படுத்திக் கொண்டவன் அவளது கன்னத்தை தாங்கிப் பிடித்தான். அவனது கரத்தின் கத கதப்பை உணர்ந்து கொண்டே கண்களை மூடினாள்.

“ஹேய் என்ன?” எனக் கேட்டான்.

கன்னத்திலிருந்த அவனது கரத்தை பிடித்துக்கொண்டவள் எந்நேரம் வேண்டுமானாலும் அழுது விடுவேன் என்ற நிலையிலிருந்தாள்.

“மதி…”

“இல்லையில்லை அழுதிட மாட்டேன். சித்தி பேசினப்போ கஷ்டமா இருந்ததுதான், இப்ப இல்லை. யாருக்கும் எந்த தீங்கும் நான் செய்யல, அவங்களா என்னைய தப்பா நினைச்சுக்கிட்டா மாற வேண்டியது அவங்கதான், நான் ஏன் அழணும்? அழ மாட்டேன்” என ஒருவித பிடிவாதத்தோடு சொல்லிக் கொண்டே கண்ணீர் விட்டாள்.

அவளது முகத்தை இரண்டு கைகளாலும் தாங்கிக் கொண்டே கட்டை விரல் கொண்டு கண்ணீரை துடைத்து விட்டவன், “நம்ம சூப்பரா வாழ போறோம், அதுக்கு… இதோ கொஞ்ச தூரம் டிராவல் பண்ணினா போதும்” என்றான்.

அவளின் வருத்தமெல்லாம் வடிந்து போய் விட்டது.

“எதுல மாமா டிராவல் பண்றோம் பஸ்லயா ட்ரெயின்லயா? நூறு கிலோ மீட்டர் இருக்குமா நம்ம ரீச் ஆக?” என குறும்பு கொப்பளிக்க கேட்டாள்.

அவன் சிரித்து விட, அவளும் சிரித்தாள். அவளது தலையை செல்லமாக இட வலமாக அசைத்து விட்டு விலகி நின்றான்.

கணேசனும் பாரதியும் வந்தனர். சட்டென இறுக்கம் படர, ஒதுங்கி நின்றாள் தண்மதி.

“நைட் சாப்பிட்டு போலாம் இருடா” என்றாள் பாரதி.

“இல்லையில்லை கிளம்பறேன் நான்” என அவன் சொல்ல, கணவருக்கு கண் காண்பித்தாள் பாரதி.

“அட இருங்க” என அவனது கையை பற்றிக் கொண்டு வற்புறுத்தலாக சொன்னார் கணேசன்.

“இப்ப எல்லாம் பேசி தெளிஞ்சிட்டோம், எனக்கு எந்த ஹார்ட் ஃபீலிங்ஸ்ம் இல்லை. பசியே இல்லை, சாப்பிட லேட் ஆகும்” என்றான் ரவி.

“பேசினோம் சரி, தெளிஞ்சோம்னு எல்லாம் சொல்லாத. பத்து வருஷம் நான் கூட இருந்தா அவளை பார்த்தேன், நான் இல்லாமலே அவ சாப்பிடறது மூச்சு விடுறது ஸ்கூல் போறதுன்னு எதுவும் நிக்கல, அதனால இப்பவும் அவளை கண்டுக்காம இருக்கணும்னு சொல்லிட்டியே, அப்படியே இருந்துக்கிறேன். உன் விருப்பம் உன் முடிவு, அதை எதிர்த்தா பெத்தவங்க பேச்சையே கேட்க மாட்டேன்னு சொல்லி என்னை வேஸ்ட் பீஸ்னு சொல்லாம சொல்லிட்டியே, நான் பட்டுக்காமலே இருந்துக்கிறேன்” என நொடிப்பாக சொன்னாள் பாரதி.

ஏன் இப்படி பேசுகிறாய் என கண்டித்தார் கணேசன்.

“ஹையோ இவங்க ரெண்டு பேரும் அடல்ட்ஸ்ங்க, இவங்க லைஃப் பார்ட்னரை செலக்ட் பண்ணிக்க உரிமை இருக்குதாம், இவனுக்கு இவன் அப்பாம்மா இவளுக்கு நீங்களும் உங்க அம்மாவும் ஓகே சொன்னா அது போதுமாம், உங்க அண்ணன் பொண்ணு மட்டும் முயற்சி செய்யலைனா இன்னும் என் வாழ்க்கை சரியாகியிருந்திருக்காதாம், என் வாழ்க்கைல மட்டும் நான் கான்சென்ட்ரேட் பண்ணினா போதுமாம்” தம்பி பேசியவற்றை குற்றம்  போலவே சொல்லிக் காண்பித்து, “அதனால நான் என் கண்ண காதை மூடிக்கிட்டு இருந்திடுறேன்” என்றாள் பாரதி.

அக்காவுக்கும் தம்பிக்கும் எந்த மாதிரியான பேச்சு நடந்திருக்கும் என கணேசனால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.

அக்காவை சமாதானம் செய்யவோ அவள் பேசியதற்கு மறுப்பு தெரிவித்தோ ஏதும் சொல்லவில்லை ரவி, மாறாக, “வந்த வேலை முடிஞ்சுது, கிளம்பட்டா க்கா?” என சாதாரணமாக கேட்டான். முறைத்தாள் பாரதி.

சிறு சிரிப்புடன், “நான் அப்படி இப்படினு எக்ஸ்பிளைன் பண்ணிலாம் உறவை தக்க வச்சுக்க முடியாது க்கா. உன் மனசுக்கு எல்லாமே தெரியும், எனக்கும் எல்லாமே தெரியும். அதனால நாளைக்கு நடக்க வேண்டியதை பார்ப்போம். நான் வர்றேன்” என்றான் ரவி.

“நீ… ப்ச்… இப்படி நீ கிளம்பினா எனக்கு என்னவோ போல ஆகும். நாளைக்கு ஊருக்கு போயிடுவேன், உன்னை எப்ப பார்ப்பேன்னு தெரியாது. எப்ப பசிக்குதோ அப்ப சாப்பிடு, தனியா இருக்கவன் லேட்டா வீட்டுக்கு போனாலும் என்னடா?” கெஞ்சலாக ஆரம்பித்து, அதட்டலில் முடித்தாள் பாரதி.

“சரி வெளில போய்ட்டு, சாப்பிடற நேரம் வர்றேன்” என்றான் ரவி.

“என்னடா ரொம்ப பண்ற?” எனக் கேட்ட பாரதி, மதியை பார்த்து, “நீ சொல்லு அப்பதான் துரை கேட்பாரு” என இடக்காக சொல்லி சென்று விட்டாள்.

கணேசன் நெற்றியை அழுத்தி விட்டுக் கொள்ள, “அக்கா ரொம்ப பவ்யம், சமாளிக்க நல்லா சாப்பிட்டு தெம்பா இருங்க மாமா” என கிண்டலாக சொன்னான்.

‘உடம்புல தெம்பு இருந்தப்பவே சண்டையெல்லாம் போட்டு தீர்த்திருந்திருக்கணும், புரிதல் வராட்டா கூட இப்படிதான்னு ஏற்று வாழ்க்கையை ஓட்டியிருக்கலாம். அப்ப விட்டு இப்ப அனுபவிக்கிறேன்’ என பதிலுக்கு சொல்ல நினைத்தவர், மதியிருந்ததால் சொல்லாமல் சங்கடமாக சிரிக்க மட்டும் செய்தார்.

“சித்தப்பாவோட ஸ்பெக்ஸ் உடைஞ்சு போச்சு” என்றாள் தண்மதி.

“ம்ம்… உள்ள வரும் போதே டேபிள்ல இருந்ததை பார்த்தேன், சேதாரம் கம்மியாதான் இருந்திருக்கு” என்றவன், கணேசனின் கை பிடித்து, “கண்ணு பொழச்சுதே” என்றான். அவரும் இலகுவாக சிரித்தார்.

 “வாங்க மாமா, உங்க ஸ்பெக்ஸ் சரி பண்ண கொடுத்திட்டு வரலாம்” என்றான்.

“நாளைக்கு நானே பார்த்துக்கிறேன்” என்றார் கணேசன்.

“உங்களை மாதிரி இல்லை நான், ஸ்டார்டிங்லேயே எஸ் மேடம் இதோ மேடம்னு சொல்ல ஆரம்பிச்சு  ஸேஃப் ஸோன்லேயே இருந்துப்பேன்” என அவன் சொல்ல, புரியாமல் பார்த்தார் கணேசன்.

“உங்க பொண்ணு ‘ஸ்பெக்ஸ் உடைஞ்சுது’னு மட்டும் சொல்லலை, ‘சரி பண்ணி தரணும்’னு எனக்கு ஆர்டரும் போட்ருக்கா, வாங்க வாங்க” என அவரை இழுத்துக் கொண்டு சென்றான் ரவி.

அக்காவுக்கு புரிய வைத்து விடும் நோக்கில் சாந்தமாகத்தான் பேச்சை தொடங்கியிருந்தான் ரவி, கருத்தில் ஏற்றிக் கொள்ளாமல் அவன் ஏதோ மாபாதகம் செய்து விட்டான் என்பது போல பாரதி பேசவும் கொஞ்சம் கடினமாக பேச வேண்டியதாகி விட்டது.

பாரதியின் வாழ்க்கையில் பெரியவர்கள் தலையிட்டுத்தான் அவளது பத்து வருடங்களை வீண் செய்தார்கள், இப்போது இவனது வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்பே அதே பெரியவர்களை காரணம் காட்டினால் அவனால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

தன் விஷயத்தில் அவர்களின் தலையீட்டை எல்லாம் எப்படி இவன் பொறுத்துக் கொள்வான், எப்படி அவர்களின் விருப்பத்துக்கு வளைந்து கொடுப்பான்? இனி ரவி தண்மதி விவகாரத்தில் ஒரு வார்த்தை உதிர்க்க வேண்டுமென்றாலும் பலமுறை யோசித்து பேச வேண்டும் எனும் எண்ணத்தை அக்காவுக்கு ஏற்படுத்தும் படி அவளுக்கு வைத்தியம் பார்த்திருந்தான் ரவி.