காலை நேரத்தில் பர பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த சிற்றூரில் இருந்த தேசிய மயமாக்கப் பட்ட வங்கி. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அந்த வங்கியின் கிளையில் நகைகள் வைத்து பணம் பெற நிறைய வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
மேலாலருக்கு என கண்ணாடி தடுப்பு போடப் பட்டு தனியறை இருக்க, அங்கே சாந்தமான முகமும் சலனமில்லாத பார்வையுமாக தன் அலுவல்களை பார்த்துக் கொண்டிருந்தான் ரவிபிரகாஷ். இந்த கிளைக்கு பணி மாற்றம் பெற்று இரண்டு வாரங்கள்தான் ஆகின்றன.
அந்த வங்கியின் வாடிக்கையாளரான பரமேஸ்வரி அங்கே காத்திருக்கும் சமயத்தில் எதேச்சையாக ரவியை பார்த்தார். எங்கேயோ பார்த்த முகமாக தோன்றவும் நெற்றி சுருக்கி யோசனை செய்தார்.
நினைவு படுத்திக் கொள்ள முடியாமலும் அவனிடமிருந்து கவனத்தை திசை திருப்ப முடியாமலும் ஒரு வித அசௌகர்யத்தில் அவர் நெளிய, ரவியும் அவரை பார்த்தான்.
அனிச்சையாக பரமேஸ்வரி புன்னகை செய்ய, யாரிவர் என்ற யோசனையோடு அவனும் தலையாட்டிக் கொண்டே புன்னகைத்தான்.
பெரிதாக படித்திராத பரமேஸ்வரிக்கு அறுபது வயதுக்கும் மேலிருக்கும். உழைப்பை கை விட்டிராத உடம்பு இன்னுமே திடமாக இருக்க, வயது மூப்பின் காரணமாக தோல் சுருங்கி, தலைமுடியும் மொத்தமாக நரைத்து போயிருந்தது.
கண்ணாடியை கழட்டி புடவை முந்தானை கொண்டு நன்றாக துடைத்தவர் மேலாளர் அறையின் வெளியே மாட்டப் பட்டிருந்த பெயர்ப்பலகையை எழுத்து கூட்டி வாசித்தார்.
“யாரு இந்த புள்ள…” என வாய் விட்டு அவர் விசாரித்ததில், பக்கத்தில் இருந்த ஆள், “என்ன பெரியம்மா… என்ன கேட்டீங்க?” என்றான்.
“ஹ்ஹ… மேனேசர் சேர்ல ஆளு யாரோ புதுசா இருக்காகளே?” என விசாரித்தார் பரமேஸ்வரி.
“ஆமாம் புதுசுதான், பழைய சிடு சிடுப்பு ஆளு கிளம்பி போயிட்டார், இந்த மேனேஜர் சிரிச்ச முகமா நல்ல மாதிரியா நடந்துக்கிறாப்லயாம்” என தகவல் சொன்னான் அவன்.
தயக்கத்துடனே மேலாலாரின் அறைக்கு சென்றார் பரமேஸ்வரி. அவரை அமர வைத்த ரவி, “என்ன பாட்டி, என்ன வேணும்?” என இன் முகமாக கேட்டான்.
“உன்னை…” என ஆரம்பித்த பாட்டி, “உங்களை” என திருத்தி, “எங்குட்டோ பார்த்த மாதிரி இருக்கு, உங்க பூர்வீகம் எங்குட்டு சார்?” என விசாரித்தார்.
“அப்படியா! நான் திருச்சிக்காரன் பாட்டி” என்றான்.
“சரிதான் சார், வயசாயிடுச்சே, ஏதோ நெனப்பு. ரொம்ப வருஷம் முன்ன மலைக்கோட்டை சமயபுரம்னு வந்து போயிருக்கேன். அப்ப எங்குட்டாவது பார்த்திருப்பேன்” என்றார் பாட்டி.
அவரின் கூற்று படி திருச்சியில் கூட இவனை அவர் சொன்ன காலத்தில் சொன்ன இடங்களில் பார்த்திருக்க வாய்ப்புகள் இருக்காதுதான். ஆனாலும் அதை அவரிடம் சொல்லாமல், எதற்காக வந்திருக்கிறீர்கள் என விசாரித்தான்.
பையில் பத்திரமாக வைத்திருந்த விண்ணப்பத்தை எடுத்து காண்பித்தார் பாட்டி.
வங்கியின் சேமிப்பு அட்டை காணாமல் போனதால் வேறு வழங்கும் படி ஆங்கிலத்தில் சில இலக்கணப் பிழைகளோடு குண்டு குண்டு எழுத்துக்களில் எழுதப் பட்டிருந்த விண்ணப்பம் அது, கையெழுத்து மட்டும் கோணல் மாணலாக போட்டிருந்தார் பாட்டி.
“இதை கொடுத்து புது கார்டு வாங்க வந்தேன், இந்த கடுதாசி எம்பேத்தி எழுதினது” விண்ணப்பத்தையும் அவனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே பெருமை பொங்க சொன்னார் பாட்டி.
சின்ன சிரிப்புடன் கேட்டுக் கொண்டவன், “புது கார்டு வாங்க இங்கேயே படிவம் கொடுப்பாங்க, வெளில மூனாவது சேர்ல இருக்கிறவரை போய் பாருங்க, தேவையானது செஞ்சு தருவாங்க” என்றான்.
“ஹ்ம்ம்… எம்புட்டு நல்ல விதமா சொல்றீங்க, அந்த கணேசன் பயலுக்கும் இப்படி தன்மையா பேச சொல்லி கொடுங்க, காலைல விஷயத்தை சொல்லி என்னடா செய்றதுன்னு வெவரம் கேட்டதுக்கு உர்ருனு பார்த்துப்புட்டு நான் வச்ச சட்னியிலயும் குறைய கண்டு பிடிச்சு கத்தி பேசிட்டு சோக்கா இங்க கெளம்பியாந்திட்டான். அவனுக்கு மேல உள்ள ஆபீசர் நீங்கதானே, புத்தி சொல்லி விடுங்க” என்றார் பாட்டி.
“அவனைத்தான், வயசு நாப்பத்தியொன்னு ஆவ போவுது, கட்டினவளோட ஒழுங்கா குடும்பம் பண்ணியிருந்தா அவளே எனக்கும் சேர்த்து வக்கணையா ஆக்கி போட்ருந்திருப்பா. இப்படி ஒத்தையா கெடந்து என் உசுர வாங்கிட்டு இருக்கான்” என அவர் புலம்பித் தள்ளினார்.
பிறகுதான் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணி புரியும் கணேசனின் தாயார் இவர் என்பதை விளங்கிக் கொண்டான் அவன்.
இன்னும் மகன் பற்றிய புலம்பலை நிறுத்தாமலே எழுந்து சென்று விட்டார் பாட்டி.
ரவி இந்தக் கிளைக்கு புதியவன், மேலும் தங்கியிருப்பது கூட சில கிலோ மீட்டர் தொலைவில் வசதிகள் நிறைந்த பெரிய ஊரில் என்பதால் மற்ற அலுவலர்களின் குடும்ப விவரங்கள் எல்லாம் தெரிந்து வைத்திருக்கவில்லை.
இந்த சில நாட்களில் அவன் கவனித்த வரை கணேசன் நல்ல பொறுமையான ஆள்தான், மனைவியை பிரிந்தவர் என இப்போதுதான் தெரியும்.
‘ஹ்ம்ம்… மணமாகியும் தனிக் கட்டையாகி விட்டால் வீட்டில் இப்படி சிடு சிடுப்பாக இருப்பது இயல்புதான்’ என எண்ணிய ரவி மீண்டும் தன் அலுவல்களில் மூழ்கி விட்டான்.
மாலையில் வாடிக்கையாளர் சேவை முடியவும் வங்கியை உள் பக்கமாக அடைத்து விட்டு மற்ற அலுவல்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் பிரச்சனை ஒன்று உருவாகியிருப்பது தெரிந்தது.
ரத்தினம் என்பவனது பெயரில் நகை அடகு பிடிக்கப் பட்டு பணமும் வழங்கப்பட்டு விட்டது, ஆனால் நகைகளை இப்போது காணவில்லை, ஐந்து சவரன் நகை. கணேசனின் கவனமின்மையால் நிகழ்ந்து விட்ட தவறு.
நகையை கவரில் போட்டு விட்டு பணம் பெற்றுக் கொள்வதற்கான ரசீதை ரத்தினத்திடம் வழங்கியிருக்கிறார், அவர் அசந்த நேரம் பார்த்து நகையையும் எடுத்துக் கொண்டு, ரசீதை கொடுத்து பணத்தையும் பெற்றுக் கொண்டு சென்று விட்டான் ரத்தினம்.
கண்காணிப்பு கேமரா பழுதாகியிருந்தாலும் அவன்தான் எடுத்து சென்று விட்டான் என உறுதியாக சொன்னார் கணேசன்.
“ரத்தினம் பேர்ல உள்ள நகைதான் மிஸ்ஸிங் ஸார், அவன் ஆளும் ஒரு மாதிரி, இன்னிக்கு நல்ல கூட்டம், நானும் எப்படியோ கவன பிசகா விட்டுட்டேன், அவன்தான்னு நல்லா தெரியும் ஸார். ஆனா ஒத்துகிட்டு திருப்பி தருவானான்னு தெரியலை” என கவலையாக சொன்னார் கணேசன்.
கவனமாக இருப்பதில்லையா என அவரை கடிந்து கொண்ட ரவி, “அந்தாளு வீடு தெரியமா உங்களுக்கு?” என கேட்டான்.
“தெரியும் சார், ஆனா தெரிஞ்சு என்ன பிரயோஜனம்? அவன் கொடுக்க மாட்டான் ஸார், எம்மேலதான் தப்பு” என புலம்பினார் அவர்.
அவரை அமைதியாக இருக்கும் படி சொன்ன ரவி, “முதல்ல அவன் வீட்டுக்கு போலாம், வாங்க” என சொல்லி முன்னே நடந்தான்.
ரவியை பற்றி கணேசனுக்கு நல்லெண்ணம்தான், ஆனால் சாதுவான இவன் அந்த அடவாடியிடம் போய் என்ன பேசி நகையை மீட்பான் என எண்ணிக் கொண்டே அவனுடன் சென்றார்.
அவர்கள் சென்ற நேரம் அந்த ரத்தினம் வீட்டில்தான் இருந்தான். அவர்களை எதிர் பார்த்திருப்பான் போலும், ஆனாலும் பொய்யாக தன் வியப்பை வெளிப் படுத்தினான்.
ரவி நேரடியாக விஷயத்தை சொல்லி கேட்க, “என்ன சார் விளையாடுறீங்களா? என் நகை எங்க போச்சு? நாளைக்கே பணத்தை திருப்பி கொடுக்க போறேன், என் நகை எனக்கு வேணும்” என்றான்.
பயமும் சங்கடமுமாக ரவியை பார்த்தார் கணேசன்.
முகத்தில் ஒரு வித இறுக்கம் படர அவனை ஏறிட்ட ரவி, “பேங்க்னா சும்மான்னு நினைச்சியா? ஒரே ஊர்க்காரன் போலீஸ் கேஸ் ஆக்க வேணாம்னு அப்ரைசர் கேட்டுகிட்டதாலதான் இங்க வந்து பேசிட்டு இருக்கேன். பாவம் பார்த்தா அதுக்கெல்லாம் ஒர்த் இல்லைனு சொல்லி காட்டுறியா நீ?” என்றான்.