Advertisement

திருநெல்வேலியை நெருங்கியதும் கீர்தன்யா இறுகிய குரலில்,
“சேகர் எங்க போறோம்?” என்று கேட்டாள்.

சேகர் புன்னகையுடன், “அதான் சஸ்பென்ஸ்னு சொன்னேனே!” என்று கூற,

கீர்தன்யா பல்லை கடித்துக் கொண்டு, “வண்டியை நிறுத்து” என்றாள்.

கீர்தன்யாவின் மாற்றத்தை கவனித்த சேகர், “என்ன கீர்த்தி?”

“வண்டியை நிறுத்துனு சொன்னேன்”

“ஏன்?”

“நீ எங்க போறனு தெரியும்.. வண்டியை நிறுத்து”

“கண்டிப்பா உனக்கு தெரியாது”

கீர்தன்யா எரிச்சலுடன் குரலை சற்று உயர்த்தி, “ஏன் தெரியாது! இது திருநெல்வேலி போற வழினு தெரியும்”

“ஓகே.. ஆனா உனக்கு எங்க போறோம்னு தெரியாதே!”

“எங்கேயும் போகலை.. வண்டியை நிறுத்து”

“கீரத்…………………”

கீர்தன்யா கோபமாக, “நிறுத்துறியா.. நான் வண்டியைவிட்டு குதிக்கட்டுமா?” என்று கேட்டபடி கதவில் கைவைத்தாள்.

“என்ன கீர்த்தி இது?”

—————————————————————————————————————————————–

தியாகேஷ்வரும் லாவண்யாவும் சுபாஷினி படித்த கல்லூரியை நோக்கி காரில் வந்துக் கொண்டிருந்த போது திடீரென ஒரு இருசக்கர வண்டி ஒரு திருப்பத்தில் இருந்து இவர்கள் வண்டியின் முன் குறுக்கே வந்து தடுமாறி நின்றது.

காரோட்டி இருசக்கர வண்டியில் வந்தவனை பார்த்து சரமாரியாக திட்ட தொடங்க, அவனோ அவர் திட்டை சிறிதும் கவனிக்கவில்லை. தடுமாறி வண்டியை நிறுத்தி நிமிர்ந்தவன், காரோட்டி அருகே அமர்ந்திருந்த தியாகேஷ்வரனை பார்த்ததும் பயமும் பதட்டமுமாக வேகமாக வண்டியை கிளப்பிக் கொண்டு சிட்டாக பறந்தான்.

அவன் சென்றபிறகும் திட்டிக் கொண்டிருந்த காரோட்டியிடம் தியாகேஷ்வர்,
“விடுங்க சார்.. வண்டியை எடுங்க” என்றான்.

காரோட்டியை விட சொன்னவனின் சிந்தனையோ இருசக்கர வாகனத்தில் வந்தவனை பற்றி தான் சிந்திக்க தொடங்கியிருந்தது.

சில நொடிகளில் கண்களை இறுக்கமாக மூடி வலது கை ஆள்காட்டி விரலை நெற்றியில் வைத்து அவன் படு தீவிரமாக யோசிக்கவும், லாவண்யா,
“என்ன சார் உங்களையே இந்த கேஸ் குழப்புதா?” என்று கேட்டாள்.

“ஹ்ம்ம்.. என்ன கேட்டீங்க?”

“உங்களையே இந்த கேஸ் குழப்புதானு கேட்டேன்”

“ஏன் அப்படி கேட்குறீங்க?”

“ரொம்ப தீவரமா யோசிச்சுட்டு இருக்கீங்களே”

—————————————————————————————————————————————

கீர்தன்யா கதவை திறக்க முயற்சித்து, திறக்க முடியவில்லை என்றதும் சேகரை பார்த்து, “சேகர் என்னை டார்ச்சர் பண்ணாம வண்டியை நிறுத்து” என்று கோபமாக கத்தினாள்.

சேகர் வண்டியை நிறுத்தி, வண்டியினுள் இருந்த தண்ணீர் பாட்டிலை அவளிடம் கொடுத்து தண்ணீர் பருக செய்தான். பிறகு மெல்லிய குரலில்,
“கீர்த்தி நாம இப்போ உன் B.E சர்டிபிகேட் வாங்க உன் காலேஜ்க்கு தான் போறோம்.. ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் வொர்க் தான்.. ப்ளீஸ்” என்றான்.

கீர்தன்யா அவன் முகத்தை பார்க்காமல், “நான் எங்கேயும் வரலை” என்றாள்.

“ப்ளீஸ் கீர்த்தி”

“…”

“கீர்த்தி”

“வண்டியை எடு” என்றவள் சிறு இடைவெளி விட்டு, “இலஞ்சிக்கு போ” என்றாள்.

“ச்ச்.. என்ன கீர்த்தி! நான் இவ்வளவு சொல்லியும்………………………..”

அவன் முகத்தை நேராக பார்த்து, “நீ கூட்டிட்டு போறியா இல்ல நான் பஸ்ல போகவா?”

எரிச்சலுடன் வண்டியை கிளப்பியவன், “நானே கூட்டிட்டு போறேன்.. ஆனா தர்ட்டி மினிட்ஸ் கழிச்சு” என்றான்.

கீர்தன்யா அவனை முறைத்து, “நான் கத்தி ஊரை கூட்டுவேன்”

சேகர் சிறு புன்னகையுடன், “நீ கத்துறது வெளியே கேட்காது”

கோபமாக கதவை குத்தியவள், “ஏன்டா என்னை இப்படி டார்ச்சர் பண்ற?”

“சில்லியா பேசாத கீர்த்தி”

“நான் சில்லியாவே இருந்துட்டு போறேன்.. ப்ளீஸ் திருநெல்வேலி போக வேண்டாம்டா.. என்னால முடியாது”

“இன்னும் டென் மினிட்ஸ்-ல உன் காலேஜ் வந்துரும்.. அங்க பைவ் மினிட்ஸ் வொர்க் தான்.. அப்புறம் உடனே கிளம்பிடலாம்.. டோன்ட் வொர்ரி கீர்த்தி”

“இப்போ என்னத்துக்கு அதை வாங்கணும்னு படுத்துற?”

“என்ன கீர்த்தி இப்படி கேட்குற? நீ படிச்ச படிப்பு வீண் ஆகலாமா?”

“அதை வச்சு நான் ஒன்னும் கிழிக்கப் போறதில்லை”

“இப்போ தேவை இல்லைனாலும் பின்னாடி……………”

“எப்பவும் எனக்கு தேவை படாது..” என்று கூறிக் கொண்டிருந்தவள் அப்பொழுது தான் வண்டி திருநெல்வேலி வந்துவிட்டதை கவனித்து அவனை கடுமையாக முறைக்க,

அவன், “ப்ளீஸ் கீர்த்தி.. மாமாகிட்ட வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டேன்” என்றான்.

“அப்போ நீ போய் வாங்க வேண்டியது தானே.. என்னை எதுக்கு கூட்டிட்டு வந்த?”

“நீ வந்தா தான் தருவாங்க.. மாமா ரெண்டு நாள் முன்னாடியே இங்க வந்து விசாரிச்சுட்டாங்க”

அவள் இயலாமையுடன் கண்களை இறுக்கமாக மூடி அமர்ந்திருக்க, ஐந்து நிமிடத்தில் அவள் படித்த கல்லூரியின் முன் வண்டி நின்றது.

—————————————————————————————————————————————

தியாகேஷ்வர் சிறிது திரும்பி லாவண்யாவை சிறு புன்னகையுடன் பார்த்தபடி,
“கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி டி.வி.எஸ்.50யில் வந்து மோதியவனைப் பற்றி தான் யோசிச்சுட்டு இருந்தேன்” என்றான்.

லாவண்யா ஆச்சரியத்துடன் பார்க்கவும்,

“அவனது அதிகமான பதற்றம் என்னை யோசிக்க வைத்தது” என்றான்.

“அது.. அக்சிடென்ட் தவிர்த்த பயமா இருக்கலாமே!”

அவன் தோளை குலுக்கி, “இருக்கலாம் ஆனா அவன் என்னை பார்த்து தான் பயந்தான்”

“நீங்க போலீஸ்னு………….”

“இப்போ நாம போலீஸ் வண்டியிலோ போலீஸ் டிரெஸ்-லயோ இல்லையே!”

“உங்களை பேப்பர்ல பார்த்து போலீஸ்னு தெரிந்திருக்கலாம்”

அவன் மென்னகையுடன், “இது எல்லாத்தையும் விட.. எனக்கு அவனை எங்கேயோ பார்த்த ஞாபகம் பட் எங்கனு தெரியலை.. அதான் யோசிச்சிட்டு இருந்தேன்”

“ஓ”

தியாகேஷ்வர் தன் கைபேசியை எடுத்து தினேஷை அழைத்தான்.

தினேஷ், “ஹலோ சார்”

“தினேஷ் TN72D3003 டி.வி.எஸ்.50 வண்டி ஓனர் டிடேல்ஸ் இம்மிடியட்டா எனக்கு வேணும்”

“ஓகே சார்.. விசாரிக்க சொல்றேன்.. என்ன விஷயம் சார்?”

“அப்புறம் சொல்றேன்”

“ஓகே சார்”

“நீ இப்போ எங்க இருக்க?”

“டாக்டர் வீட்டுக்கு பக்கத்துல தான் சார் இருக்கிறேன்.. இன்னும் பைவ் மினிட்ஸ்ல போய்டுவேன்”

“ஓகே.. கர்ரி ஆன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.

—————————————————————————————————————————————

கீர்தன்யாவின் சான்றிதழை பெற்றுக் கொண்டு அலுவலக அறையை விட்டு வெளியே வந்ததும் சேகர், “மாமா சொன்னதால் முன்னாடியே எடுத்து வச்சுருப்பாங்க போல.. இவ்ளோ சீக்கிரம் முடியும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றான்.

“ஜஸ்ட் பைவ் மினிட்ஸ்னு சொன்ன!”

சேகர் சிறிது அசடு வழிந்தபடி, “அது சும்மா உன்னை சமாதானம் செய்ய” என்றான்.

அவள் முறைக்கவும், அவன், “சரி சரி முறைக்காத.. வா கன்டீன் போய் ஜூஸ் குடிச்சுட்டு கிளம்பலாம்”

“வேண்டாம்.. முதல திருநெல்வேலியை விட்டு வெளிய போகலாம்”

“ஹே ப்ளீஸ் கீர்த்தி.. ஜஸ்ட் ஜூஸ் தானே”

அவள் அவனது பேச்சை கேட்காமல் வண்டி இருந்த இடத்தை நோக்கி செல்லவும் சேகர் அவளது கையை பற்றி நிறுத்தி கெஞ்சி ஒருவழியாக கல்லூரி உணவகத்திற்கு அழைத்துச் சென்றான். உணவு பொருட்கள் வழங்கப்படும் இடத்திற்கு அருகே இருந்த மேசையில் அவள் அமர அவன் ‘டோக்கன்’ வாங்க சென்றான்.

அப்பொழுது அங்கே(கல்லூரி உணவகம்) வந்த தியகேஷ்வர் கீர்தன்யா அமர்ந்த மேசைக்கு அருகே இருந்த மேஜையில் அவளுக்கு பின்னால் அமர, லாவண்யா அவனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

உணவு வழங்கப்படும் இடத்தில் இருந்து இரண்டு பழச்சாறுடன் வந்து கீர்தன்யாவின் இடதுபுறம் அமர்ந்த சேகர், கீர்தன்யாவை இயல்பிற்கு மாற்றும் பொருட்டாக,
“ஹே கீர்த்தி உன் பின்னால உட்கார்ந்திருக்குற பொண்ணு சூப்பரா இருக்கிறா” என்றான்.

“என் பின்னால இருந்தா, நான் எப்படி பார்க்க முடியும்”

“உன் பின்னாலனா பின்னால இல்லை.. உன் பின்னாடி ஒருத்தன் உட்கார்ந்திருக்கான், அவனுக்கு எதிர அவ உட்கார்ந்திருக்கா.. செமையா இருக்கா..”

அப்பொழுது அலுவலக பணியாள் ஒருவன் ஒரு மாணவனுடன் தியாகேஷ்வர் அருகே வந்து, மாணவனிடம், “இவங்க தான் உன்னை பார்க்க வந்திருக்காங்க” என்று கூறி வெளியே சென்றான்.

அந்த மாணவன், “நீங்க யார்?”

தியாகேஷ்வர் லாவண்யாவை பார்க்க, அவள் பாலிதீன் பையில் இருந்த ப்ரெஸ்லெட்-டை காட்டி, “இது உன்னுடையது தான்னு எங்களுக்கு தெரியும்….” என்று பேசி முடிக்கும் முன்,

அவன் சிறு பதற்றத்துடன், “நீ..ங்க நீங்க யாரு?” என்று கேட்டான்.

தியாகேஷ்வர் அந்த மாணவனின்(அசன்குமார்) முகபாவனைகளை கவனித்துக் கொண்டிருக்க,

லாவண்யா, “சுபாஷினி இறப்பை பற்றி விசாரிக்க வந்திருக்கோம்” என்றாள்.

லாவண்யா அசன்குமாரை விசாரித்துக் கொண்டிருக்க, சேகரோ அவளது அழகை பற்றி கீர்தன்யாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

சேகர், “உன்னை விட அழகா இருக்கா.. கொஞ்சம் பாரேன்”

“வைஷ்ணவியை விட அழகா”

சேகர் ஒரு நொடி மௌனமானான். தன்னை சுதாரித்துக் கொண்டு, “நிஜமா அழகா தான் இருக்கா.. போய் பேசட்டுமா?” என்றான்.

கீர்தன்யா சிரிக்கவும், “என்ன நக்கலா! நிஜாமா போய் பேசுறேன் பாரு” என்று கூறி அவன் எழும்ப,

அதே நேரத்தில் ‘சுபாஷினி இறப்பை பற்றி விசாரிக்க வந்திருக்கோம்’ என்று லாவண்யா சொன்னதை கேட்ட அசன்குமார் பதற்றத்துடன் சுற்றி பார்க்க, அவன் கண்ணில் உணவு வழங்கப்படும் இடத்தில இருந்த கத்தி தென்பட்டது. தியாகேஷ்வர் சுதாரித்து எழவும், அசன்குமார் அவசரமாக அந்த கத்தியை எடுக்கவும் சரியாக இருந்தது.

அசன்குமார் கத்தியை வலது கையில் வைத்துக் கொண்டு, “நான் எந்த தப்பும் செய்யலை.. என்னை போக விடுங்க” என்று பதற்றத்துடன் மிரட்டினான்.

சேகர் நின்ற இடத்தில் இருந்தபடியே சிறு அதிர்ச்சியுடன் நிகழ்வதை பார்த்துக் கொண்டிருக்க, கீர்தன்யா உட்கார்ந்த நிலையில் தலையை இடதுபுறம் திருப்பி அசன்குமாரை பார்த்தாள்.

தியாகேஷ்வர், “ரிலாக்ஸ் அசன்குமார்.. நாங்க விசாரிக்க தான் வந்தோம்” என்று சொல்லிக் கொண்டிருக்க, அவன் மெல்ல மெல்ல தனது இடதுபுறம் நகர்ந்து கீர்தன்யா அருகே வந்துக் கொண்டிருந்தான்.

தியாகேஷ்வர் குரலில் சட்டென்று திரும்பி பார்த்த கீர்தன்யா அதிர்ச்சியுடன் எழுந்துக் கொள்ள, கண்ணிமைக்கும் நேரத்தில் அசன்குமார் அவள் கழுத்தில் கத்தியை வைத்து, “என்னை போக விடுங்க, இல்லை இவ கழுத்தை அறுத்துருவேன்” என்று மிரட்டினான்.

சேகர் செய்வதறியாது அதிர்ச்சியும் கவலையும் பதற்றமுமாக நிற்க, கீர்தன்யாவை பார்த்த தியாகேஷ்வரின் மூளை சில நொடிகள் செயலிழந்தது.

கீர்தன்யாவோ பதற்றம் சிறிதுமின்றி தியாகேஷ்வரை வெறுப்பும் கோபமுமாக பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தாள். அவள் மனதில் தற்போதிய அபாய நிலையின் தாக்கத்தை விட தியாகேஷ்வரின் மேல் கோபம் தான் அதிகமாக இருந்தது.

லாவண்யா, “அசன்குமார் அவளை விட்டுரு.. நாங்க சில டிடேல்ஸ் கேட்க தான் வந்திருக்கிறோம்.. அதை நீ சொல்லிட்டா போய்டுவோம்.. உன்னை ஒன்றும் செய்ய மாட்டோம்” என்று அசன்குமாருடன் தனியாளாக போராடிக் கொண்டிருக்க,

தியாகேஷ்வரின் பார்வையோ கீர்தன்யா முகத்தில் இருந்து சிறிதும் விலகவில்லை.

தியாகேஷ்வரை ரௌதிரத்துடன் முறைத்த கீர்தன்யா, அவனை பார்த்துக் கொண்டே தன் கழுத்தில் கத்தி வைத்திருந்த கையை பலமாக பிடித்து முறுக்கினாள். அத்தோடு நிறுத்தாமல் தியாகேஷ்வரை கோபமும் வெறுப்புமாக பார்த்துக் கொண்டே மறு கரத்தால் அசன்குமாரின் தலையை மேசையில் ஓங்கி அடித்தாள்.

இந்த தாக்குதலை சிறிதும் எதிர்பார்த்திராத அசன்குமார் வலியில் துடித்தபடி துவண்டு விழ, பெரும் அதிர்ச்சியுடன் நிகழ்ந்ததை பார்த்துக் கொண்டிருந்த சேகரை இழுத்துக் கொண்டு கீர்தன்யா கிளம்பினாள்.

கிளம்பும் முன் தியாகேஷ்வரை பார்த்தவள் அசன்குமாரின் நிலைமையை சுட்டிக் காட்டி ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றாள். அந்த பார்வை உனக்கும் இந்த நிலை தான் என்று சொல்லாமல் சொல்லியது.

வெளியே சென்றவளையே பார்த்துக் கொண்டிருந்த தியாகேஷ்வர் அந்த கோர சம்பவத்தை நினைத்துப் பார்க்க, சட்டென்று கல்லூரிக்கு வரும் வழியில் பார்த்த அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டியவன் யாரென்று நினைவிற்கு வந்தது. உடனே தன் கைபேசியை எடுத்து தினேஷை அழைக்க நினைக்கையில், அவனே அழைத்தான்.

“சொல்லு தினேஷ்”

“சார் நீங்க கேட்ட டிடேல்ஸ் கிடைச்சுருச்சு..” என்று கூறி சில விவரங்களை கூறினான்.

“ஓகே.. நீ போன காரியம் என்னாச்சு?”

“ரேஷ்மா(மருத்துவர் மூர்த்தியின் மகள்) காலேஜ் டூர் போயிருக்கா சார்.. ஸோ பார்க்க முடியலை.. அவள் மொபைல் நம்பர் வாங்கிட்டேன்.. ரேஷ்மா காலேஜ்ஜில் விசாரித்தவரை டூர் போயிருக்கிறது நிஜம் தான் பட் டாக்டர் மேல் எனக்கு சந்தேகம் இருக்குது சார்”

“ஹ்ம்ம்.. அவர் போன் காள்ஸ் ட்ராக் பண்ணச் சொல்லு”

“சொல்லிட்டேன் சார்”

“குட்”

“சார் விசாரணை என்னாச்சு?”

“அசன்குமாருக்கு கொஞ்சம் அடிபட்டுருக்கு.. நீ உடனே ‘கலக்ஸி’ ஹாஸ்பிடல் வந்து லாவண்யாக்கு ஹெல்ப் பண்ணு.. நான் நீ சொன்ன அட்ரெஸ்க்கு போய் பார்த்துட்டு வரேன்”

“சார்.. அந்த அட்ரெஸ்……………..”

“நான் வந்து பேசுறேன் தினேஷ்.. நீ உடனே கிளம்பி வா” என்று கூறி தியாகேஷ்வர் அழைப்பைத் துண்டித்துவிட, லாவண்யாவிற்கு தான் உதவுவதா என்று எரிச்சலுடன் நினைத்த தினேஷ் தியாகேஷ்வரின் கட்டளையை மீற முடியாமல் கிளம்பினான்.

கீர்தன்யாவின் செயலில் சிறு அதிர்ச்சியும் குழப்பமுமாக லாவண்யா, “சார்” என்று அழைக்க, தியகேஷ்வர், “நம்ம வந்த காரில் இவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க லாவண்யா.. தினேஷ் கொஞ்ச நேரத்தில் வந்துருவான்.. எனக்கு முக்கியமான வேலை ஒன்னு இருக்குது” என்று கூறி விரைவாக வெளியே சென்றவன் ஒரு ஆட்டோ பிடித்து தினேஷ் கூறிய முகவரிக்கு சென்றான்.

தினேஷை போல் லாவண்யாவும் ‘ச்ச் இந்த சார் எதுக்கு அந்த குரங்கை வர சொன்னார்’ என்று மனதினுள் எரிச்சல்பட்டபடி அசன்குமாரை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ‘கலக்ஸி’ மருத்துவமனைக்கு சென்றாள்.

Advertisement