Advertisement

மாலையில் சேகரும் கீர்தன்யாவும் சற்று விரைவாக வீடு திரும்பினர். கீர்தன்யா வீட்டினுள் சென்றுவிட, வரவேற்பறையில் யோசனையுடன் அமர்ந்திருந்த சண்முகம் அருகே சேகர் சென்று, என்ன மாமா அதுக்குள்ள வந்துட்டீங்க! போன காரியம் காயா பழமா?” என்று கேட்டான்.

ரைஸ் மில் விஷயம் கிட்டத்திட்ட முடிஞ்ச மாதிரி தான்!”

அப்புறமென்ன யோசனை?”

அது ஒன்றுமில்லை.. தெரிஞ்ச ஆளை வச்சு கீர்த்தி டிகிரி சர்டிபிகேட் வாங்கிரலாம்னு பார்த்தேன், ஆனா காலேஜ்ல கன்டிடேட் கண்டிப்பா வரணும்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க”

“B.E சர்டிபிகேட்டா!” 

ஹ்ம்ம்.. அவ பரீட்சை முடிஞ்ச கொஞ்ச நாள்லேயே கிளம்பிட்டோமே!”

இப்போ எதுக்கு அதை வாங்கணும்னு சொல்றீங்க?”

என்ன சேகர் இப்படி சொல்ற! சர்டிபிகேட் இல்லாம படிச்ச படிப்புக்கு ஏது மதிப்பு?”

அது எனக்கும் தெரியும் மாமா.. நான் என்ன கேட்குறேன்னா இப்பவே ஏன் வாங்கணும்னு சொல்றீங்க?”

இப்பவே ரெண்டு வருஷம் முடிஞ்சு போச்சு.. காலேஜ்ல ஸேப்-ஆ வச்சிருப்பாங்க தான் இருந்தாலும் நாம எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்?”

ஹ்ம்ம்.. இப்போ என்ன பண்றது?”

நீ கூட்டிட்டு போறியா?”

சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தபடி,என்ன மாமா விளையாடுறீங்களா?” என்றான்.

சண்முகம் யோசனையுடன் சேகரை பார்க்க,

அவன்,மாமா இது ஆவுறதுக்கில்லை” என்றான்.

கொஞ்சம் ட்ரை பண்ணிப் பாரேன்”

மாமா!”

ப்ளீஸ் சேகர்”

என்ன மாமா ப்ளீஸ்லாம் சொல்லிட்டு.. ஹ்ம்ம்.. பஸ்ட் திருநெல்வேலி பத்தி பிட் போட்டு பார்க்கிறேன்.. அப்புறம் இதை பத்தி யோசிக்கலாம்” என்று கூறி ஏதோ கேட்க வந்தவன், கீர்தன்யா வருவதை பார்த்துவிட்டு பேச்சை மாற்றினான்.

 

சிறிது நேரம் கழித்து சிறுவயதில் தாங்கள்  கொட்டமடித்த  தோட்டத்திற்கு கீர்தன்யாவை அழைத்துச் சென்றான்.

தோட்டம் மாறியிருந்தாலும் கிணறு மட்டும் அப்படியே இருந்தது. தோட்டத்தை சுற்றி பார்த்துவிட்டு கிணற்றருகே வந்ததும் கீர்தன்யாவின் இதழில் புன்னகை பூத்தது.

அதை கவனித்த சேகர் புன்னகையுடன், என்ன மலரும் நினைவுகளா! அப்பளபூவா!” என்றான். 

ஹ்ம்ம்.. அந்த இன்சிடென்ட்க்கு அப்புறம் ரெண்டு நாள் இந்த பக்கமே வரலையே!” என்று புன்னகையுடன் கூறியவள், சொட்ட தலை எப்படி இருக்கிறார்?”

சொட்ட தலை இப்போ மொட்ட தலையா இருக்கார்” என்று ஆரம்பித்து சிறுவயது சேட்டைகள் சண்டைகள் என்று வெகு நேரம் பேசியவர்கள் இருட்ட துவங்கியதும் வீடு திரும்பினர்.

கீர்தன்யா மனம் சற்று லேசானது போல் உணர்ந்தாள். இப்பொழுது அவள் இதழில் இயல்பாகவே மென்னகை அரும்பியிருக்க, முன்தினம் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தவள் இன்று அவளாகவே பேசியதோடு வெகு சில சமயங்களில் சேகரை கிண்டல் செய்ய கூட தொடங்கி இருந்தாள்.

அவளது இந்த மாற்றம் பெற்றவர்கள் மனதில் பன்னீரை தெளித்தது போல் இருந்தது.

—————————————————————————————————————————————-

பகல் முழுவதும் வேலைகளை தன் சிந்தனைக்கு முட்டுக்கட்டையாக பயன்படுத்திய தியாகேஷ்வரால் இரவில் தன் சிந்தனையை தடுக்க முடியவில்லை. காட்டாற்று வெள்ளத்தைப் போல்  அவனது கட்டுப்பாட்டையும் மீறி  அவனது சிந்தனை அவளிடத்து சென்றது.

தன் உணர்ச்சிகளின் வடிகாலாய் கவிதை எழுதினான்.

மென்மையை கற்பித்தவளே!
கற்றதை கற்பிக்கும் முன்
மறைந்ததேனோ?

தென்றலாய் வீசியவளே!
புயலில் சிக்க விட்டு
சென்றதேனோ?

என் எதிர்காலத்தை
நம் எதிர்காலமாய்
நினைத்தேனே!

மனம் கூடி மணவாழ்வில்
சஞ்சரிக்கும்  முன்
உனை பிரித்தது
விதியா? இறைவனின்
சதியா?

அவனது மனம் சிறிதும் சாந்தமின்றி தவித்தது. எப்பொழுதும் நிகழ்வது தான் என்றாலும் கடந்த ஒரு வாரமாக வேலையின் நடுவிலும் அவளது நினைவுகள் அவனை தடுமாற செய்து கொண்டிருக்கிறது. மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும் இன்று நடந்தது போல் அவனது சிந்தனையில் புது பொலிவுடன் இருந்தது.

அவளை முதல் முதலாக சந்தித்ததை நினைத்துப் பார்த்தான்.

 

ரு நாள் தியாகேஷ்வர் நண்பனின்(வழக்கறிஞர்) வீட்டில், நண்பனின் அறையில் அவனுடன் ஒரு வழக்கு சம்பந்தமாக முக்கியமாக பேசிக் கொண்டிருந்த போது சில நிமிடங்களாக பூனையின் சத்தம் ஓயாமல் கேட்டுக் கொண்டிருந்தது.

அவன், ச்ச்” என்று சிறு எரிச்சலுடன் எழுந்து ஜன்னலின் திரையை விலக்கி வெளியே பார்த்தான்.

தியாகேஷ்வரின் செயலை புரிந்துக் கொண்ட அவனது நண்பன், ஏதோ பூனை குட்டி போட்டிருக்கும் போல, இந்த மழைக்கு தாக்குபிடிக்க முடியாம குட்டி கத்திட்டே இருக்குது” என்றான்.

தியாகேஷ்வர் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு இளம் பெண் பக்கத்து வீட்டில் இருந்து மதில் சுவற்றில் ஏறி சிரமத்துடன் அவனது நண்பன் வீட்டினுள் குதித்தாள்.

முதலில் சிறிது அதிர்ந்தவன் அந்த பெண் குடையுடன் பூனை குட்டிகள் இருந்த இடத்தை நோக்கி செல்லவும் யோசனையுடன் அவளை நோக்கினான். அவள் ஐந்தரை அடி உயரத்தில் உயரத்திற்கு ஏற்ற எடையில் மாநிறத்தில் இருந்தாள். பார்த்தவுடன் கவரும் அழகில்லை என்றாலும் முகலட்சனத்துடன் இருந்தாள்.

குட்டிகள் அருகே சென்றவள் குட்டிகள் மீது மழை நீர் விழாதபடி குடையை தரையில் வைத்தவள் குனிந்து குட்டிகளை மெல்ல வருடினாள். குட்டிகளில் சத்தம் மெல்ல தேய்ந்தது.

தியாகேஷ்வர் இதழில் மிக சிறு புன்னகையுடன், அவள் மீதிருந்த பார்வையை விலக்காமல், மகி.. யாருடா இந்த மதர் தெரசா?” என்று வினவ, அவனது நண்பன் எழுந்து வந்து ஜன்னல் வழியாக பார்த்தான்.

அப்பொழுது அவள், கார்த்தி… கார்த்தி”  என்று கத்திக் கொண்டிருந்தாள்.

தியாகேஷ்வரின் நண்பன், தெரியலையே! யாருடா அது?” என்று கேட்டான்.

இப்பொழுது நண்பனின் முகத்தை பார்த்து, “நான் உன்னை கேட்டா, நீ என்னை கேட்கிறியா!” என்றான்.

பக்கத்து வீட்டில் சுவற்றோரம் இருந்த பெரிய தண்ணி தொட்டி மேல் குடையுடன் நின்ற  மற்றொரு  இளம் பெண், ஹே! மழைல நனைஞ்சுட்டு  அங்க என்ன பண்ணிட்டு இருக்க?”

அவள், மழைல பூனை குட்டிங்க ரொம்ப கத்திட்டே இருந்துதா…………..”

பொறுக்க முடியாம அதை காப்பாத்த போய்ட்டீங்களாக்கும்”

அவள் புன்னகையுடன் தலையை ஆட்ட,

அவளது தோழி, சரி இப்போ எதுக்கு என் பெயரை ஏலம் விட்ட? இதை பார்க்கவா?”

இல்ல.. இப்போதைக்கு காப்பாத்திட்டேன் பட் காத்து அதிகமாச்சுனா குடை பறந்துருமே!” என்று கவலையுடன் கூற,

தொட்டி மேல் நின்று எட்டிப் பார்த்த சிறுவன், ஹை.. எவ்ளோ அழகா இருக்கு.. கார்த்தி க்கா நாம அதை வளர்க்கலாமா?” என்று கேட்டான்.

அவள் தோழி, சும்மா இருடா.. அம்மா தொலைச்சுடுவாங்க”

அதுலாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. நான் போய் தூக்கிட்டு வாரேன்” என்று கூற,

அவள் அவசரமாக, இரு சுரேன் அவசரப் படாத.. பெரிய பூனை எப்படியும் இந்த ஏரியால தான் இருக்கும்.. கொஞ்சம் நேரம் கழிச்சு அது வந்தா, குட்டியை தேடும்.. ஸோ குட்டிங்க இங்கேயே இருக்கட்டும்” என்றாள்.

சிறுவனின் முகம் வாடவும்,  டோன்ட் வொர்ரிடா.. எப்படியும் குட்டிங்க இங்கேயே தானே இருக்கும்.. இங்க வந்து பார்த்துக்கோ” என்றாள்.

அவள் தோழி, இவன் கிடக்குறான்.. நீ முதல மழைல நனையாம இங்க வா”

எப்படி வர?”

எப்படி வரவா? எப்படி போனியோ அப்படித் தான்”

அவள் சிறிது அசடு வழிந்தபடி, அது குட்டிங்களை பார்த்ததும் ஆர்வ கோளார்ல செ(சு)வரேறி குதிச்சுட்டேன்”

அடி பாவி!”

சரி சரி.. அதை விடு இப்போ எப்படி வர? வந்த மாதிரியேவா இல்லை கேட் வழியாவா? பட் கேட் திறக்குற சத்தத்துல வீட்டுக்குள்ள இருந்து யாராச்சும் வந்தா என்ன பண்ண? ஸோ நீ என்ன பண்ற ஒரு சேர் எடுத்துட்டு வந்து குடு.. அது மேல ஏறி ஈஸியா வந்துருவேன்.. அப்புறம்  டேன்க் மேல நின்னு சேரை எடுத்துரலாம்” என்று கூறி தலையை சிறிது சரித்து புன்னகையுடன், எப்படி?” என்று கேட்க, அவள் தோழி இவளை முறைத்தாள்.

அப்பொழுது தியாகேஷ்வரின் நண்பன் ஜன்னல் வழியாக, பரவால கார்த்திகா உன் பிரெண்டை கேட் வழியாவே போக சொல்லு” என்று கூற,

அவள் தோழி சங்கடத்துடன், சாரி ணா” என்று கூறினாள்.

ஆனால் அவளோ சற்று குரலை உயர்த்தி, ஹலோ மிஸ்டர்! எப்படி நாங்க பேசினதை ஒட்டு கேட்கலாம்?” என்று சண்டைக்கு தயாரானாள்.

தியாகேஷ்வரின் நண்பன் சிறு அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்க, திரை மறைவில் நின்று கொண்டிருந்த தியாகேஷ்வர் வாய்விட்டு சிரித்தான்.

அவள் தோழி பல்லை கடித்துக் கொண்டு மெல்லிய குரலில், நீ அவர் வீட்டுக்குள் குதித்தது மட்டும் தப்பில்லையா! வாயை மூடிட்டு சீக்கிரம் வா” என்றாள்.

அப்பொழுது தான் தன் தவறை உணர்ந்தவள் அவசரமாக ஜென்னலை நோக்கி, சாரி அண்ணா.. பூனை குட்டிகளை காப்பாத்த தான் இப்படி பண்ணிட்டேன்.. சாரி” என்று கூறி அவசரமாக வெளியேறினாள்.

அதன் பிறகு சிறிது நேரம் தியாகேஷ்வரும் அவனது நண்பனும் சிரித்தபடி அவளை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். பிறகு வழக்கை பற்றி பேசிவிட்டு தியாகேஷ்வர் கிளம்பினான்.

அதன் பிறகு வெகு நாட்களாக அவன் அவளை சந்திக்கவே இல்லை ஆனால் சில நேரம் மழையில் நனைந்த அவளது முகம் அவன் மனதினுள் மின்னும். அந்த தருணங்களில் இதழில் மிக சிறு மென்னகையுடன் சில நொடிகள் அந்த சம்பவத்தை பற்றி நினைத்து பார்த்துவிட்டு வேலையை தொடர்வான்.

இரண்டு மாதங்கள் கழித்து  நண்பன் மகேஷின் புது வீட்டிற்கு சென்ற போது  அவளை பார்த்தான். பார்த்து அவளின் முறைப்பைப்  பெற்றதோடு தன் மனதை பற்றியும் அறிந்துக் கொண்டான்.

அந்த சம்பவத்தைப் பற்றி நினைக்க தொடங்கியவனின் சிந்தனையை தடை செய்தது அவனது கைபேசி.

—————————————————————————————————————————————-

இலஞ்சி கணேசன் வீட்டில் அனைவரும் சிரித்து பேசியபடியே  இரவு உணவை உட்கொண்டிருந்த போது கீர்தன்யா மர்ம புன்னகையுடன் சேகரை ஓரப்பார்வை பார்த்துவிட்டு கணேசனிடம், கூடிய சீக்கிரம் நம்ம வீட்டுல டும் டும் டும் சத்தம் கேட்க போகுது மாமா” என்றதும், பெரியவர்கள் நால்வரின் பார்வையும் மகிழ்ச்சியுடன் சந்தித்துக் கொண்டன.

கீர்தன்யா, என்ன சேகர் நான் சொல்றது சரி தானே!” என்று அவனை வம்பிழுக்க,

அவன், என்னை கேட்டா எனக்கென்ன தெரியும்?”

உன் கல்யாணத்தைப் பற்றி உன்னை தானே கேட்கணும்”

என்ன?”

பெரியவர்கள் இப்பொழுது குழம்பினர்.

கணேசன் கீர்தன்யாவை நோக்கி, என்ன கீர்த்தி?”  என்று வினவ,

அவள் புன்னகையுடன் கணேசனையும் சேகரையும் மாற்றி மாற்றி பார்த்தபடி, நான் நிஜமா தான் மாமா சொல்றேன்.. இன்னைக்கு ஒரு ரோமன்ஸ் ப்ரீ ஷோ பார்த்தேன்.. அது ஒன்-வே தான் பட் கூடிய சீக்கிரம் டூ-வே ஆகிடும்” என்றாள்.

சேகர் அவளை பார்க்க, அவள், என்ன பார்க்கிற? இன்னைக்கு ஸ்கூல்ல வைஷ்ணவியை பார்த்து நீ விட்ட லுக்கை தான் சொல்றேன்” என்றவள் அந்த காட்சியை யோசிப்பது போல் பாவனை செய்து, என்ன ஒரு ரோமன்ஸ்! என்ன ஒரு ரோமன்ஸ்!” என்று கூற, பெரியவர்கள் அதிர,

சேகர் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், ஏய் எட்டபி, இன்னும் இந்த போட்டு கொடுக்குற வேலையை நீ விடலையா!” என்று பல்லை கடித்துக் கொண்டு கூறினான்.

அவள் குறும்பு புன்னகையுடன் அவனை ஆசிர்வதிப்பது போல் கையை உயர்த்தி, நாரதர் கலகம் நன்மையில் முடியும்” என்றாள்.

சாந்தி, சேகர்…………” என்று ஏதோ கூற வர,

கணேசன், அப்புறம் பேசிக்கலாம் சாந்தி” என்று கூற,

அதே நேரத்தில் சேகர், அப்படிலாம் ஒன்றுமில்லை மா.. இந்த லூசு சும்மா உளறுது” என்றான்.

நீ தான்டா லூசு.. நான் உளறுறேனா? நான்………………”

சண்முகம், கீர்த்தி” என்று அழுத்தமாக அழைக்கவும் அவள் அடங்கினாள்.

சில நிமிடங்கள் அமைதி நிலவியது. தங்கள் எண்ணம் பொய்த்துவிடுமோ என்ற கவலையுடன் சாந்தியும் அமுதாவும் ஒருவரை ஒருவர் பார்க்க, சண்முகமும் கணேசனும் அர்த்தம் பொதிந்த பார்வையை பார்த்தனர்.

தட்டில் கை கழுவிய கணேசன் எழுந்துக் கொண்டு உணர்ச்சியற்ற குரலில், சேகர் சாப்டுட்டு என் ரூம்க்கு வா.. கொஞ்சம் பேசணும்” என்று கூறி செல்ல, கீர்தன்யா கவலையுடன் சேகரைப் பார்த்தாள்.

அவள் எப்பொழுதும் போல் விளையாட்டாக தான் இந்த விஷயத்தை பேசினாள்,  ஆனால்  அவள் பேசியதும் பெரியவர்களின் அமைதியும், கணேசனின் கூற்றும் அவளை கலவரபடுத்தியது.

குற்ற உணர்வுடன் சேகரை பார்த்து மெல்லிய குரலில், சாரி சேகர்.. நான் சும்மா தான்…” என்று தயங்க,

சேகர் மென்னகையுடன், நோ ப்ராப்ளம்.. நான் பார்த்துக்கிறேன்” என்று கூறி தந்தை அறையை நோக்கி சென்றான்.

மற்றவர்களின் முகத்தை பார்க்க மனமின்றி கூடத்திற்கு சென்று தொலைகாட்சியை இயக்கினாள். பார்வை தொலைகாட்சியில் இருந்தாலும் அவளது கவனம் முழுவதும் கணேசன் அறைக் கதவில் தான் இருந்தது.

உள்ளே சென்ற சேகர், அப்பா….” என்று ஆரம்பிக்கவும் அவர்,

முதல நான் சொல்லி முடிச்சுக்கிறேன்” என்று கூறி அவனை பார்த்தார்.

அவன் அமைதியாக தந்தை முகத்தை பார்க்கவும், அவர் பேசத் தொடங்கினார்.

உனக்கே கீர்த்தி நிலைமை தெரியும்..
(‘கீர்த்தி பத்தி ஏன் பேசுறார்?’ என்று மனதினுள் சேகர் கேட்டுக் கொண்டான்.)
அவ ரெண்டு வருஷம் கழிச்சு இன்னைக்கு தான் கொஞ்சம் இயல்பா சிரிச்சு பேசுறானு சண்முகம் சந்தோசப் பட்டான். உனக்கே தெரியும் அவளது இந்த மாற்றத்திற்கு காரணம் நீ தான்னு” என்று கூறி மகனை பார்த்தார்.

அவன் குழப்பத்துடன் ஆம்‘ என்பது போல் தலையை ஆட்டினான்.

அவர், இப்போ ஏன் கீர்த்தி பத்தி பேசுறேன்னு உனக்கு குழப்பமா இருக்கும்.. கீர்த்தி இங்க வந்ததுக்கு முக்கிய காரணமே (சேகர் கூர்மையாக தந்தை முகத்தை பார்த்தான்) நான் அவளை என் மருமகளா, உன் மனைவியா ஏத்துக்க விரும்புறேன்னு சொன்னதால் தான்”

சேகர் அதிர்ச்சியுடன், அப்பா!!!” என்றான்.

Advertisement