Advertisement

ஜெயப்ரகாஷின் வீட்டில், கீழே தினேஷ்  ஒவ்வொரு வேலையாட்களையும் தனி தனியாக விசாரிக்க, லாவண்யா தோட்டத்தில் இருந்து வீட்டை சுற்றி பார்வையிட்டவாறே தோட்டக்காரனை விசாரித்துக் கொண்டிருக்க, தியாகேஷ்வர் மேலே சுபாஷினியின் அறையை  பார்வையிட்டவாறே  நிர்வாகியை விசாரித்துக் கொண்டிருந்தான்.

தியாகேஷ்வர், “JP சார் எப்படிபட்டவர்?”

நிர்வாகி, தங்கமானவர் சார்.. கோபமே பட மாட்டார்” 

ஒரு தடவ கூட கோபப்பட்டது இல்லையா!” 

இல்லை சார்.. யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவர்.. வேலைக்காரர்களை தாழ்வா பார்க்குற பணக்காரர்கள் மத்தியில் தாழ்வின்றி சக மனிதனா பார்ப்பார் சார்.. என் வயதிற்கு மரியாதை கொடுத்து வாங்க போங்கனு மரியாதையா தான் பேசுவார்.. அவரை மாதிரி தங்கமான ஒருவரை பார்ப்பது ரொம்ப கஷ்டம் சார்

மிசஸ்.JP  எப்படி?” 

அமைதியானவங்க சார்.. பிள்ளைங்க மேல் அதிக பாசம்.. அய்யா போனதும் பாதியாளா  ஆனவங்க, சின்னமா போனதும் முழுசா உடைஞ்சு போய்ட்டாங்க.. சுரேந்தர் தம்பி மட்டும் இல்லைனா தானும் மேல போய்டுவேன்னு புலம்புறாங்க.. கடவுளுக்கு கண்ணே இல்லை சார்” 

உங்களுக்கு எந்த ஊர்?” 

வல்லநாடு சார்” 

“JP சார் சொந்த ஊர் வீரவநல்லூர் தானே!” 

ஆமா சார்” 

நீங்க இங்க எப்படி வேலைக்கு சேர்ந்தீங்க?” 

என் மச்சான் வக்கீல் அய்யா வீட்டுல டிரைவரா இருக்கான்.. வக்கீல் அய்யா மூலமா தான் இங்க வேலைக்கு சேர்ந்தேன்” 

வக்கீல் அய்யானா கார்த்திகேயன் சாரை சொல்றீங்களா?” 

ஆமா சார்” 

எப்போதிருந்து இங்க  வேலை பார்க்குறீங்க?” 

அஞ்சாறு வருஷம் இருக்கும் சார்..  அய்யா குடும்பத்தை கூட்டிட்டு வரதுக்கு முன்னாடி இருந்தே நான் வேலை பார்க்குறேன்” 

கூட்டிட்டு வரதுக்கு முன்னாடினா?” 

முதல அய்யா மட்டும் தான் இருந்தாங்க.. தொழில்ல காலூன்றி நின்ன பிறகு தான் குடுபத்தை கூட்டிட்டு வந்தாரு” 

குடுபத்தை எப்போ கூட்டிட்டு வந்தார்?” 

அது.. ஒரு நாலு நாலரை வருஷம் இருக்கும் சார்” 

ஹ்ம்ம்.. சுபாஷினி எப்படி?” 

நல்ல பொண்ணு சார்.. செல்லம் கொஞ்சம் ஜாஸ்தி.. அய்யா எப்பவாது திட்டினாலும் அம்மா திட்ட விடமாட்டாங்க அதனால கொஞ்சம் பிடிவாதம் உண்டு” 

சுபாஷினிக்கு நண்பர்கள் அதிகம் உண்டா?”

எனக்கு தெரியாது சார்.. சின்னமா வீட்டுக்கு யாரையும் கூட்டிட்டு வந்ததில்லை” 

உங்க சின்னம்மா வீட்டுல இருக்கும் நேரத்தில் என்னலாம் செய்வாங்க?” 

எப்போதும் பாட்டு கேட்டுட்டு இருப்பாங்க.. தம்பினா உயிர்.. தம்பி கூட  தோட்டத்துல விளையாடுறது, ஆடுறது, பாடுறது, பாடம் சொல்லி குடுக்குறது.. அப்புறம் ஏதாவது படிச்சுட்டு இருப்பாங்க..”  

வீட்டுக்கு அதிகமா யார் யார்லாம் வந்து போவாங்க” 

விஜயன் அய்யாவக்கீல் அய்யா, டாக்டர் அய்யா பொண்ணு”  

ப்ரதாப் சார் வந்தது இல்லையா?” 

விஜயன் அய்யா அண்ணனா? சொத்தை பார்த்துக்கணும்னு பெரிய அய்யா சொன்னவுகளா?” 

விஜயன் சார் அண்ணனானு தெரியாது பட் சொத்தை பார்த்துக்குறவர் தான்” 

அய்யா இறந்த வீட்டுலயும் சின்னம்மா இறந்த வீட்டுலயும் தானுங்க பார்த்தேன்” 

டாக்டர் அய்யானா டாக்டர் மூர்த்தியை சொல்றீங்களா?” 

ஹ்ம்ம்” 

டாக்டர் சார் பொண்ணு யாரை பார்க்க வருவாங்க?”  என்று கேட்டவாறே பால்கனியில் இருந்து தோட்டத்தை நோட்டமிட்டான். வெளியிருந்து யாருமறியாமல் பால்கனி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று ஒவ்வொரு கோணத்திலும் நின்று யோசித்து பார்த்தான். மூளை ஒரு பக்கம் யோசனையில் இருக்க, நிர்வாகியிடம் விசாரணையையும் தொடர்ந்துக் கொண்டிருந்தான்.

சின்னம்மாவை பார்க்க தான் வருவாங்க.. சின்னம்மாவை விட ஒன்னு ரெண்டு வயசு கூட இருக்கும்” 

உங்க சின்னம்மா டாக்டர் சார் வீட்டுக்கு போக மாட்டாங்களா?” 

எப்பவாது போவாங்கனு நினைக்குறேன் சார் “ 

உங்க சின்னம்மா இறந்த அன்னைகோ இல்லை முந்தின நாளோ டாக்டர் சார் பொண்ணு வந்தாங்களா?”

நியாபகம் இல்லை சார்” 

கொஞ்சம் யோசிச்சு பாருங்க” 

ஹ்ம்ம்………… ஹம்.. சின்னம்மா இறந்ததுக்கு ரெண்டு மூணு நாள் முன்னாடி வந்தாங்க” 

எவ்ளோ நேரம் இருந்தாங்க?” 

நான் கவனிக்கலையே சார்” 

வீட்டு நிர்வாகி இதையேல்லாம் கவனிக்க வேணாமா?” 

தெரிஞ்சுவாங்க தானே சார்.. இப்படி எல்லாம் நடக்கும்னு கனவுல கூட நினைச்சு பார்கலையே!” என்று சிறிது உடைந்த குரலில் கூறியவர், சின்னம்மா இறந்தது கொலைனு சொல்றீங்களா சார்?” என்று கேட்டார். 

கொலையா தற்கொலையானு கண்டு பிடிக்க தான் உங்களை கேள்வி கேட்டுட்டு இருக்கிறேன்”

நான் சொன்னதை வச்சு என்னத்தை சார் பெருசா கண்டுபிடிக்க முடியும்?”

தியாகேஷ்வரின் இதழோரம் சிறு புன்னகை அரும்பியது.

நிர்வாகி, “என்ன சார்?” 

நிர்வாகியின் கேள்வியை புறகணித்துவிட்டு அடுத்த கேள்வியை கேட்டான். 

விஜயன் அய்யா யாரு?”  

அய்யாவோட ஒன்னுவிட்ட  தம்பி.. ஊர்ல இருக்கிற அய்யாவோட சொத்துக்களை அவர் தான் பார்த்துக்கிறார். இங்க அய்யா மட்டும் இருந்தப்ப அய்யா குடும்பத்துக்கு துணையா அவர் தான் இருந்தார்” 

ஓ.. அவர் குணம் எப்படி?” 

நல்..லவர் தான்”

மேஜை மேல் இருந்த புத்தகங்களை பார்வையிட்டுக்   கொண்டிருந்த  தியாகேஷ்வர்  திரும்பி  அவர் கண்களை நேராக பார்த்து, எதுவா இருந்தாலும் மறைக்காம சொல்லுங்க.. நீங்க  சொல்ற ஒவ்வொரு விஷயமும் உங்க சின்னமா மரணத்தின்  மர்மத்தை விளக்கலாம்” என்றான்.

மர்மமா?” 

எதிர் கேள்வி கேட்காம நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க” 

தியாகேஷ்வர் குரலை உயர்த்தாத போதும் அதில் அழுத்தம் இருக்கவே, நிர்வாகி கேள்விகளை விடுத்து பதிலை கூறினார்.

கறாரா தான் பேசுவார்.. எங்களை அதட்டுவார்..” என்று கூறி தயங்க,

தியாகேஷ்வர், தயங்காம உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க.. நீங்க தான் சொன்னீங்கனு வெளிய தெரியாது” என்றான். 

அது.. ஒரு தடவ.. அய்யாக்கு தெரியாம பொய் கணக்கு எழுத சொல்லி காசு கேட்டார்.. எனக்கு ஒரு பங்கு தரேனும் சொன்னார் 

நீங்க என்ன பண்ணீங்க?” 

நான் மாட்டேன்னு சொல்லிட்டேன்” 

தைரியமான விஸ்வாசி தான்” 

என்ன இருந்து என்ன ப்ரியோஜனம் சார்.. எங்க அய்யாவே போய்ட்டார்” 

இந்த விஷயத்தை JP சார் கிட்ட சொன்னீங்களா?” 

இல்லை சார்.. திரும்ப சொன்னா பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்.. அவரும் திரும்ப வந்து அப்படி கேட்கலை” 

ஹ்ம்ம்.. இப்போ கடையை யார் பார்த்துக்குறா?” 

அதுலாம் எனக்கு தெரியாது சார்”  

ஹ்ம்ம்..” என்று கூறியபடி மேஜை மேல் இருந்த வைரமுத்து கவிதைகள் புத்தகத்தை கையிலெடுத்தான்.

நிர்வாகி சிறிது கரகரத்த குரலில், சின்னம்மா இந்த புத்தகத்தை படிக்கிறதை நிறைய தடவ பார்த்துருக்கேன் சார்”

தியாகேஷ்வர் அந்த புத்தகத்தின் பக்கங்களை புரட்டினான். பல பக்கங்களில் பல வரிகள்  எழுதுகோலால் கோடிட பட்டிருந்தது. பக்கங்களின் நடுவில் கவிதை எழுதிய ஒரு காகிதம் இருந்தது.

கவிதையின் கீழே, அதை எழுதிய நேரமும் தேதியும் இருந்தது ஆனால் எழுதியவர் பெயர் இல்லை. அந்த தேதி சுபாஷினி இறந்த தேதி.

அந்த கவிதை – 

கஷ்டங்கள் யாவும் வானில்
கரையும் மேகமே..
கஷ்டங்களில் புதைக்க படவில்லை
விதைக்க படுகிறாய்!

வாழ்க்கை வாழ்வதற்கே
துவண்டு போகாதே..

வீழ்வது தவறல்ல
நதியாய் பெருக்கெடு!

எத்தருணத்திலும் வாழ்வின் மகிழ்ச்சியை
தொலைக்காதே..
தருணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு
அனுபவம்!

எந்த இருட்டிற்கும் இறுதி
சூரியொளி..
இருட்டை கண்டு கலங்காதே
பக்குவப்படுவாய்!

உன்னுள் சக்தி கோடி
அதை உணரு..
சக்தியெல்லாம் ஒன்று கூட்டி
முளைத்து உயர்ந்திடு!

உன்னால் முடியாதது உண்டோ?
நம்பிக்கையோடு போராடு
வென்றிடுவாய்!”

இதன் கீழே தேதியும் நேரமும் எழுதியிருந்தது. அதன் கீழே ஒரு கோடிட்டுவிட்டு,

சக்தியெல்லாம் ஒன்று கூட்டி
முளைத்து உயர்ந்திடுவேன்..
வீழ்த்த நினைக்கும் துரோகியை
வீழ்த்தி வென்றிடுவேன்!”

என்று எழுதியிருக்க அதன் கீழே  மீண்டும்  தேதியும் நேரமும் எழுதபட்டிருந்தது. இரண்டு   தேதியும் ஒன்றாக  தான் இருந்தது, ஆனால் நேரம் வேறுபட்டது, பத்து  நிமிடங்கள்  இடைவெளி இருந்தது.

தியாகேஷ்வர், சரி நீங்க போகலாம்.. மிசஸ் JP கிட்ட சில கேள்விகள் கேட்க வேண்டியது இருக்குது.. அவங்க கிட்ட போய் சொல்லுங்கஎன்றான். 

சரி சார்” என்று கூறி நிர்வாகி  அறையை விட்டு வெளியேறியதும், தியாகேஷ்வர் தன் கைபேசியில் லாவண்யாவை அழைத்தான்.

லாவண்யா, எஸ் சார்” 

தோட்டக்காரனிடம் விசாரணை முடிஞ்சுதா?” 

இப்போ தான் சார் முடிஞ்சுது..  எனக்கு ஒரு தடையம் கிடைச்சுருக்குது சார்” 

என்ன?” 

ஒரு ஜென்ட்ஸ் ப்ரேஸ்லெட்.. சுபாஷினி ரூம் பால்கனி கீழ இருக்கும் குரோடன்ஸ் செடிகளுக்கு நடுவிலிருந்து கிடைச்சுது” 

செடில இருந்ததா, மண்ணுல கிடந்ததா?” 

மண்ணுக்குள்ள முக்கால்வாசி புதைஞ்சு இருந்தது சார்” 

சுபாஷினி ரூம்னு எப்படி சொன்னீங்க?” 

தோட்டக்காரனிடம் விசாரித்தேன் சார்” 

ஓகே.. எனக்கும் ஒரு தடையம் கிடைச்சுருக்குது.. கவிதை எழுதிய பேப்பர்.. நீங்க தோட்டத்தில் இருந்ததை பார்த்தேன், இந்த பேப்பரை வைக்க, ஜீப்ல இருந்து சீல்டு கவர் எடுத்துட்டு வர சொல்ல தான் காள் பண்ணேன்” 

ஓகே சார்.. அஞ்சு நிமிஷத்தில் வரேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.

—————————————————————————————————————————————–

சேகர் கீர்தன்யாவிற்கு தனது பள்ளியை சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தான்.

கீர்தன்யா, கலக்குறடா.. லாஸ்ட் டைம் பார்த்ததுக்கு நல்லவே டெவலப் ஆகிருக்கு.. நல்ல ரன் பண்ற..” என்றாள். 

லாஸ்ட் டைம் இல்ல.. லாலாலாஸ்ட் டைம்னு சொல்லு.. ஸ்கூல் ஆரம்பிச்ச புதுசுல வந்தது தான்..” 

ஹ்ம்ம்..” 

 “10த் கொண்டு வர தான் போராடிட்டு இருக்கேன்.. எப்படியும் நெக்ஸ்ட் இயர் கொண்டு வந்துருவேன்” 

குட்.. ஆல் தி வெரி பெஸ்ட்”   

தன்க் யூ” 

எப்படிடா இந்த ஐடியா வந்தது?”

சேகர் சிறு புன்னகையுடன், நம்ம ஸ்கூல்ல கொடுமை படுத்தினத்தில் தோன்றியிருக்கலாம்.. தெரியலை” 

பிரின்சிபால் சாரை கேட்டா, நாம தான் கொடுமை படுத்துனோம்னு சொல்வார்” 

சுரேஷ் சார் காலத்தை நினைச்சு சொல்ற.. நீ விஜி மேம் பிரியட்ல இங்க இல்லையே!” 

விஜி மேம்னா சுரேஷ் சார் வைப் தானே! அவங்க நீ 12த் படிச்சப்ப தானே வந்தாங்க?”  

ஆமா ஆமா.. அந்த ஒரு வருஷமே போதுமே!” 

அவ்ளோ படுத்தினாங்களா?” 

ஹ்ம்ம்” 

அப்படி என்ன பண்ணாங்க?” 

ஒன்னா ரெண்டா.. விடு அதை பத்தி இப்ப என்ன பேசிட்டு!” 

நீ என்ன கஷ்ட பட்டனு தெரிஞ்சுக்க தான்”

நான் கஷ்ட பட்டதை கேட்க என்ன ஒரு ஆர்வம்! என்ன ஒரு சந்தோசம்!” 

பின்ன!”  என்று கூறி சேகரை திரும்பி பார்க்க, அவனோ கண்களை மூடி சிறு தலையசைவுடன் மெய்மறந்து நின்றுக் கொண்டிருந்தான்.

அவன் முகம் மென்னகையில் மலர்ந்திருக்க, அவனது காதுகள் லேசாக கேட்டுக் கொண்டிருந்த பஜனையில் லயித்துப் போயிருந்தன.

பஜனை நின்றதும் கண்களை திருந்தவன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கீர்தன்யாவிடம், என்ன?” என்றான்.

என்ன ஒரு பாவம்! என்ன ஒரு ரசனை! புல்லரிக்குது பா” என்று கூறியபடி  கையை அவள் தேய்த்துக் கொள்ள,

சேகர் கண்கள் மின்ன, நீயும் உணர்ந்தியா! செம வாய்ஸ்ல..” என்றான். 

நான் உன்னை பற்றி சொன்னேன்” 

ஓ! அந்த வாய்ஸ் தான் என் முகத்தில் ரசனையையும் பாவாத்தையும் கொண்டு வந்துது”

கீர்தன்யா சேகரின் கண்களை கூர்ந்து பார்க்க, சேகர், என்ன?” 

இல்ல நான் கிண்டல் பண்ணது உண்மையாவே உனக்கு புரியலையா இல்ல புரியாத மாதிரி நடிக்குறியானு பார்த்தேன்” 

“நீ வைஷ்ணவியை பார்த்து, நேரில் அவங்க பாட்டை கேட்டா, இப்படி சொல்ல மாட்ட..” என்றவன் கைகடிகாரத்தை பார்த்துவிட்டு, “இப்போ க்ளாஸ் முடிற நேரம் தான்.. வா இன்ட்ரோ கொடுக்கிறேன்.. என்று கூறி கீர்தன்யாவின் பதிலை எதிர் பாராமல் முன்னால் நடக்க, கீர்தன்யா அவனை தொடர்ந்தாள்.

Advertisement