Advertisement

தியாகேஷ்வர் அறிவியல் மையத்தில் இருந்து வீடு சென்றதும் அவன் தந்தை, “என்னப்பா.. MLAக்கு முடிவு நெருங்கிருச்சா?” என்று கேட்டார்.

ஹ்ம்ம்.. வாய்க்காபாலம் கேஸ் மட்டுமில்லாம அவனுக்கு தெரியாம வேற சில ஆதாரங்களும் திரட்டிட்டு இருக்கிறேன்.. மேக்ஸிமம் ஒரு வாரத்தில் முடிஞ்சுரும்.. ஏன்?”

ஒரு மிரட்டல் போன் வந்துது”

அம்மா பயந்துட்டாங்களா?”

அவர் புன்னகையுடன், பதிலுக்கு அவனை மிரட்டிட்டு போனை வச்சதே அவ(ள்) தான்”

எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க”

பார்டர்ல பாகிஸ்தான்காரன் சுட்டப்ப போகாத உயிர் இந்த  சல்லி  பசங்களாலையா போய்ட போகுது! நீ உன் வேலையைப் பாரு”

சிறு புன்னகையுடன் தலையசைத்துவிட்டு அறைக்கு சென்றவன் சிறிது நேரம் யோசனையின் பின்,  அப்பா அம்மா பொறுத்தவரை பயம் இல்லை.. பட்  தயா!  என்னால் அவளுக்கு எந்த ஆபத்தும் வந்துறக் கூடாது.. கேஸ்  முடிச்ச  பிறகு போய் பார்த்துக்கலாம்..‘ என்று முடிவெடுத்தான்.

 

 

 

ரண்டு நாட்கள் கழித்து, அவன் அலுவலகம் கிளம்பிய போது அவனது பெற்றோர்கள் கிளம்பி தயாராக இருக்கவும், அவன், என்னப்பா, கல்யாணத்துக்கு கண்டிப்பா போகனுமா?” என்று கேட்டான்.

அம்மாவோட தாய்மாமா(அழுத்தம் கொடுத்து கூறினார்) பேத்தி கல்யாணம்.. போகலைனா எப்படி?”

அதுக்கில்லைப்பா…………..…” என்றவனின் பேச்சை இடையிட்ட அவன் அன்னை கணவரை முறைத்துவிட்டு  அவனிடம், மாமா ராதிகாவை உனக்கு கல்யாணம் பண்ணிவைக்க ஆசைபட்டாங்க.. அது முடியலை.. இப்போ கல்யாணத்துக்கு போகலைனா சரி வராது.. எங்களைப் பற்றி கவலைப்படாத.. நாங்க பத்திரமா போயிட்டு வந்துருவோம்..” என்று புன்னகையுடன் அவன் கன்னத்தை தட்டினார்.

சிறிது யோசித்தவன், சரி.. நானும் வரேன்” என்றான்.

அவர்கள் மறுக்கும் முன் அறைக்கு சென்று உடையை  மாற்றிவிட்டு வந்தவன், வண்டியோட்ட கான்ஸ்டபில் துரைராஜை வர சொல்லி இருக்கிறேன்.. ரெண்டு மணி நேரம் பெர்மிஷன் சொல்லி இயிருக்கிறேன்” என்று கூற,

தந்தை,அதுக்குள்ள வீட்டுக்கு வந்துரலாம்” என்று உறுதியளித்தார்.

வண்டியை சோதித்துவிட்டு மூவரும் திருமணத்திற்கு கிளம்பிச் சென்றனர்.

திருமணமண்டபத்தின் முன் இறங்கியதும் சுற்றுபுறத்தை கவனித்தபடி உள்ளே சென்றவன் வரவேற்பில் கீர்தன்யா நின்றுக் கொண்டிருந்ததை அருகில் சென்ற பிறகே கவனித்தான்.  முதல் முறையாக அவளை புடவையில் பார்த்த  இன்ப அதிர்ச்சியில் ஒரு நொடி நின்றவன், தன்னை  சுதாரித்துக்கொண்டு புன்னகையுடன் அவளைப் பார்த்து கண்ணடித்துவிட்டு உள்ளே செல்ல,  அவள் முறைத்தாள்.

அருகில் இருந்த உறவுக்கார பெண்ணிடம் ஏதோ காரணம் சொல்லிவிட்டு சில நிமிடங்களில் மண்டபத்தின் உள்ளே வந்தவள் அவனை விழிகளால்  தேடினாள். அவள் உள்ளே வருவதை பார்த்துவிட்ட தியாகேஷ்வர் கூட்டத்தின் மறைவில் இருந்தபடி அவளது செய்கைகளை கவனித்துக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் இருவரின் பார்வையும் நேர் கோட்டில் சந்தித்தன.

இவன் புன்னகையுடன் புருவம் உயர்த்த, அவள் பிடிபட்ட உணர்வுடன் பார்வையைத் திருப்பிக் கொண்டு வேலை இருப்பது போல் வேறுபுறம் சென்றாள்.

முகூர்த்த நேரம் முடிந்ததும் மணப்பெண்ணிடம் பரிசை கொடுத்துவிட்டு மூவரும் உணவுண்ண பந்திக்கு சென்றனர். தியாகேஷ்வர் முதலில் உண்டுவிட்டு கைகழுவ செல்ல, அங்கே தனது சேலையில் கொட்டிய சாம்பாரை துடைத்துக் கொண்டிருந்தாள் கீர்தன்யா.

மலர்ந்த புன்னகையுடன், மாப்பிள்ளை வீடு உனக்கு சொந்தமா?”  என்று கேட்டான்.

அவன் குரல் கேட்டதும் தன் உணர்ச்சிகளை கட்டுபடுத்திக் கொண்டு  நிமிர்ந்து பார்த்தவள்  பதில் கூறாமல் விலக தொடங்க,

அவன், பெயரில் தான் தயாஇருக்குது.. கொஞ்சமாவது தயவு காட்டி காதலை சொல்றியா?” என்றான்.

சட்டென்று திரும்பி முறைத்தவள், உங்க பெயரில் கூட தான் தியாகம்‘-னு வருது.. எனக்காக உங்க காதலை தியாகம் செய்வீங்களா?” என்று கேட்டாள்.

அவன் புருவத்தை உயர்த்தியபடி,எதுக்கு தியாகம் செய்யணும்?” என்று கேட்டான்.

“….”

அவள் முகத்தை உன்னிப்பாக கவனித்தபடி, நீயும் என்னை காதலிக்கும் போது நான் ஏன் காதலை தியாகம் செய்யணும்?” என்று மறுமடியும் கேட்டான்.

நான் ஒன்னும்……..”

அவன் தீவிரமான குரலில், என்னை காதலிக்கலைனு பொய் சொல்லாத.. எது உண்மைனு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.. பட் எதுக்காக உன் காதலை மறைக்கிறனு தான் எனக்கு புரியலை” என்றான்.

ஆட்கள் கை கழுவ வரவும், அவள் அவன் முகத்தை பாராமல், என் மனதில் காதல் இல்லை.. இது தான் உண்மை” என்று கூறிவிட்டு அவசரமாக கலங்கிய விழிகளை மறைத்தபடி சென்றுவிட்டாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனை யாரோ சொடக்கு போட்டு அழைக்கவும் திரும்பினான்.

சந்துரு ,இனி என் அக்கா கூட நீங்க பேசுறதை பார்த்தேன்!!!” என்று சுட்டுவிரலை மிரட்டலாக ஆட்டிவிட்டு செல்ல,  புன்னகைத்தான்.

அவன் தோளைப் பற்றிய தந்தை சந்துருவைப் பார்த்தபடி,யாருடா அது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

அவன் தன்னை மறந்து, உங்க மருமகளோட தம்பி” என்று கூறிவிட்டு, அடுத்த நொடியே தான் கூறியதை உணர்ந்து அவசரமாக தந்தையைத் திரும்பி பார்த்து, அது வந்து பா..” என்று சற்றே தடுமாறினான்.

அவர் புன்னகையுடன், பொண்ணு வீடு மகேந்திரன் வீட்டுக்கு பக்கத்துல இருக்குதா இல்லை அவனை பார்க்க போறேன்னு சொல்லிட்டு……………”

அப்பா”

சரி.. சரி.. பொண்ணு யாரு?”

கொஞ்சம் வெயிட் பண்ணுங்கப்பா”

பொண்ணு யாருனு தான் கேட்டேன்”

முடிஞ்சா நீங்களே கண்டுபிடிச்சுக்கோங்க”

நான் உனக்கு அப்பன்டா”

அப்பொழுது அங்கே வந்த அன்னை, என்ன விஷயம்?” என்று கேட்டார்.

அவன் ஏதோ கூற வர,

அதை நான் சொல்றேன்.. நீ கை கழுவிட்டு வா” என்று கூறி மனைவியை அனுப்பிவைத்த தந்தை, அவனிடம், இனி இதில் நீ தலையிடாத” என்று கறாராக கூறினார். அவன் தோளைக் குலுக்கிவிட்டு நகர்ந்தான்.

சிறிது நேரம் கழித்து வண்டியை மீண்டும் சோதித்துவிட்டு கிளம்பினர்.

 

 

வீட்டிற்கு சென்றதும் தியாகேஷ்வர், என்னப்பா ரொம்ப அமைதியா இருக்கிறீங்க? அந்த  பெண்ணை  கண்டுபிடிக்க முடியலைனு இவ்வளவு பீலிங்க்ஸ்ஸா!”  என்று சிரித்துக் கொண்டு கூறியவன், அவர் முகத்திலிருந்த தீவிரத்தை பார்த்து,என்னப்பா?” என்று கேட்டான்.

அவர் ஏதோ கூற வர, அன்னை தடுக்கும் முயற்சியாக  அவர்  கையை பற்றிக்கொள்ள, அவர், எப்படி இருந்தாலும் தெரிந்து தானே ஆகணும்” என்று கூறிவிட்டு அவனைப் பார்த்து,

கீர்தன்யா அப்பா கிட்ட பேசினேன்.. அவருக்கு இதில் விருப்பம் இல்லைனு சொல்லிட்டார்” என்றார்.

அன்னை அவன் கைகளை ஆதரவாக பற்றிக்கொள்ள, அவன், என்ன காரணம்?” என்று அமைதியாக கேட்டான்.

உன் வேலையைப் பார்த்து பயப்படுறார்” 

அப்பொழுது அவன் கைபேசிக்கு அழைப்பு வரவும், அதை  எடுத்துப் பார்த்தவன், சரி நான் கிளம்புறேன்.. இதைப் பற்றி இப்போதைக்கு பேச வேண்டாம்”  என்று கூறிவிட்டு கிளம்பினான்.

சக்கரபாணி சம்பந்தப்பட்ட வழக்கில் மும்முரமாக  அவன் இருந்த போதும் அவ்வபோது அவன் சிந்தனையில் கீர்தன்யா வந்து செல்ல, அடுத்து என்ன செய்வது?’ என்று யோசித்துக் கொண்டே இருந்தவன் இரண்டு நாட்கள் கழித்து காலை 10 மணியளவில் சாதாரண உடையில் கீர்தன்யாவின் தந்தையை அவர் கல்லூரிக்கு சென்று பார்த்தான்.

தன் காதலைப் பற்றி எடுத்து கூறி, அவளை தன் உயிராய் நேசிப்பதாகவும், அவளுக்கு தன்னைத் தெரியும் என்றும், அவள் கண்டிப்பாக திருமணத்திற்கு சம்மதிப்பாள் என்றும் கூறியவன் அவளை பத்திரமாக பார்த்துக் கொள்வதாகவும் கூறினான். ஐந்து நிமிடங்கள் அவன் பேசியதை அமைதியாக கேட்ட சண்முகம் யோசித்துக் கூறுவதாக சொல்ல, அவன் வேறெதுவும் கூறாமல் கிளம்பிச் சென்றான்.

சக்கரபாணி வழக்கை முடித்த பிறகு கீர்தன்யா வீட்டிற்கு நேரில் சென்று பேசிக் கொள்ளலாம் என்று அவன் அமைதியாக இருக்க, அவன் அன்னை பொறுமைகாக்க முடியாமல் கணவரை பேச கூறினார்.

இரண்டு நாட்கள் கழித்து அவன் தந்தை சண்முகத்தை கைபேசியில் அழைத்துப் பேச, சண்முகம் வீட்டினரிடம் கேட்டுச் சொல்வதாக கூறவும், அவர் ‘சரி‘ என்றார்.

 

 

கீர்தன்யாவின் பொறியியல்  இறுதியாண்டு இறுதித்தேர்வு முடிந்த அடுத்த நாள் காலை சண்முகம் அவளிடம், கீர்த்தி உனக்கு ஒரு வரன் வந்திருக்கு” என்று ஆரம்பிக்க,

தியாகேஷ்வர் மேல் கொண்ட காதலை ஏற்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவள் எரிச்சலுடன், எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்ப்பா.. நான் M.E  படிக்கப் போறேன்.. இனி இதைப் பற்றி பேசாதீங்க” என்று கறாராக கூறிவிட்டாள்.

 

 

 

சக்கரபாணி வழக்கில் தலைமறைவாக இருந்த ஒருவனை  கைதுசெய்ய  தியாகேஷ்வரும் தினேஷும் மதுக்கடைக்கு சென்றனர். இவர்களை பார்த்ததும் அவன் ஓட முயற்சிக்க, தியாகேஷ்வர்  அவனைப் பிடித்து கையில் விலங்கை மாட்டினான்.

அப்பொழுது கைதியை ஒருவன் சுட, அந்த குண்டு கைதியின் கையில் பட்டது. தியாகேஷ்வரும் தினேஷும் துப்பாக்கியை கையில் எடுக்க, குண்டு சத்தத்தில் கடையில் இருந்தோர் பதற்றத்துடன் இங்கும் அங்கும் ஓடத் தொடங்கினர்.

சுட்டவனை பார்த்துவிட்ட தியாகேஷ்வர் தினேஷிடம் கைதியை ஒப்படைத்து, இவனை பத்திரமா கூட்டிட்டு போய் நம்ம கஸ்டடில வை” என்றான்.

நம்ம இடம் தானே சார்!”

ஹ்ம்ம்”  என்று கூறியவன் அவசரமாக சுட்டவனை துரத்திக் கொண்டு ஓடினான்.

சில நிமிட ஓட்டத்திற்கு பிறகு சுட்டவன் ஒரு வண்டியில் ஏறி  தப்பிவிட, தியாகேஷ்வர் எரிச்சலுடன் தரையை உதைத்தான்.

அப்பொழுது, ஹலோ மிஸ்டர்.. ஒரு தடவ சொன்னா உங்களுக்கு புரியாதா?” என்ற மிரட்டலான இளங்குரல் கேட்கவும், திரும்பி பார்த்தவன், சந்துருவை கண்டதும் ஒரு நொடி தடுமாறினான்.

தன்னால் அவனுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாதே என்று தடுமாறியவன் சுற்று புறத்தை உன்னிப்பாக கவனித்தான்.

ஹலோ மிஸ்டர்.. உங்களைத் தான்.. போலீஸ்னா பயந்துருவேன்னு நினைச்சீங்களா?”

தியாகேஷ்வர் சிறு புன்னகையுடன், நீங்க மிரட்டின பிறகு உங்க அக்காவை நான் பார்க்கவே இல்லையே” என்றான்.

சந்துரு கைகளை இடையில் வைத்தபடி, என்ன நக்கலா?” என்றான்.

புன்னகையை மறைத்து தீவிரமான குரலில், இல்ல பாஸ்.. நிஜமாவே நீங்க மிரட்டின பிறகு உங்க அக்காவைப் பார்க்கவே இல்லை.. ப்ராமிஸ்” என்றான்.

————————————————————————————————————————————-

தியாகேஷ்வர் இருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் வலதுபுற தெருமுனையில் வண்டியை நிறுத்தக் கூறியவன்(சுட்டவன்) கீழே இறங்கி சாலையை எட்டிப் பார்த்தபடி தன் கைபேசியில் சக்கரபாணியை அழைத்தான்.

அய்யா முத்து  கைல குண்டு காயத்தோடு  மாட்டிக்கிட்டான்.. அந்த ACP என்னை துரத்திட்டு வந்தான், ஆனா நான் தப்பிச்சுட்டேன்.. இப்போ அவன் என் கண் பார்வையில் தான் இருக்கான்.. கார்ல அடிச்சு தூக்கிறவா?” என்றான்.

டேய் மடையா.. இப்போ அவனைக் கொன்னா, அது நாம தான்னு  தெளிவா தெரிஞ்சுரும்.. அவனுக்கு வேண்டியவங்களை தான் அக்சிடென்ட்னு நம்புற மாதிரி  தூக்கணும்”

அந்த கல்யாண வீட்டுலயே அவன் அம்மாவ தூக்க முயற்சி பண்ணேன்.. ஆனா கிழவி தப்பிச்சிருச்சு.. இப்போ என்னய்யா பண்றது?” என்று கேட்டபடி சாலையை எட்டிப் பார்த்தவன், அய்யா.. அவன் ஒரு சின்ன பையன் கூட பேசிட்டு இருக்கான்” என்றான்.

டேய்! அவன் கூட பேசுறவங்களை எல்லாம் தூக்கிடாத”

இல்லையா.. இதுக்கு முன்னாடி அவன் அந்த பொடியன் கூட பேசுறதை பார்த்திருக்கேன்”

இருந்தாலும் ஒரு பொடிப்பயலையா தூக்குறது!”

பொடியனா இருந்தாலும் அவனிடம் பாதிப்பு இருக்கும்னு தான் நினைக்குறேன் அய்யா” 

என்னவோ செஞ்சுத்தொலை.. முத்து-வ முடிக்க மாரியை அனுப்புறேன்” என்றபடி அழைப்பைத் துண்டித்தான்.

Advertisement