Advertisement

அறையினுள் இருந்த கீர்தன்யாவிற்கு அலை அலையாய் சந்துருவின் நினைவுகள்.

கீர்தன்யா 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது முதல் முறையாக பஞ்சு போன்ற பிஞ்சு  குழந்தையை பரவசத்துடன்  கையில் ஏந்தியதும், சில நொடிகளில்  குழந்தை தன் குட்டி கண்களை திறந்து திறந்து மூடியது, பிறகு மெல்ல திறந்து அவளது முகத்தை பார்த்து அழகாக  சிரித்தது.

அவள், என்ன ஒரு குளுமையான சிரிப்பு.. இவனுக்கு சந்திரன்-னு பேர் வைக்க போறேன் பா” என்றதும் குழந்தைக்கு என்ன புரிந்ததோ, தனது  போக்கை வாய் விரிய சிரித்தது. கீர்தன்யா பெரும் மகிழ்ச்சியுடன் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டதும்  குழந்தை மீண்டும் சிரித்தது.

சண்முகம் சிறு புன்னகையுடன், அதை சித்தி தான் சொல்லணும்” என்றதும்,
கீர்தன்யா செல்ல கோபத்துடன் வேகமாக திரும்பி, அதுலாம் இல்ல.. நான் வச்சா சித்தி ஓகே தான் சொல்லுவாங்க” என்று கூற,

அமுதா, “குழந்தையை கையில வச்சுட்டு என்ன வரத்து வர.. முதல்ல குழந்தையை கொடு” என்று கடிந்துக் கொண்டு குழந்தையை வாங்க வர,

அவள், முடியாது போ” என்று கூறியபடி குழந்தையின் அன்னை அருகில் கட்டிலில் அமர்ந்து, செல்ல குரலில், நீங்க சொல்லுங்க சித்தி.. இவனுக்கு சந்திரன்னு தானே பெயர் வைப்பீங்க” என்றாள்.

குழந்தையின் அன்னை புன்னகையுடன் சரிஎன்பது போல் தலையை ஆட்டி அவள் தலையை வருடி, “அவனுக்கு எல்லாமே நீ தான் செய்யப் போற” என்றதும் அவள் பெரும் மகிழ்ச்சியுடன் துள்ளி எழுந்து, ஏய்! பார்த்தீங்களா!” என்றாள்.

சரி.. சரி.. குழந்தையை கொடு.. அவன் பால் குடிக்கட்டும்.. நீயும் அப்பாவும் வெளிய போங்க” என்று கூறியபடி குழந்தையை அமுதா பெற்றுக் கொண்டார்.

கீர்தன்யா குதித்தபடி, வாங்க பா வீட்டுக்கு போகலாம்.. அந்த ஸ்நேக்ஸ்னேகா கிட்ட இந்த குட்டி பையனை பற்றி சொல்லணும்.. அவனுக்கு மட்டும் அண்ணா இருக்கான்னு பீத்துவான்ல.. இப்ப நான் போய் சொல்றேன்.. எனக்கே எனக்குனு ரொம்ப அழகா குட்டி தம்பி வந்திருக்கான்னு.. சீக்கிரம்.. சீக்கிரம்.. கிளம்புங்க” என்று அவசரப்படுத்தினாள். 

சரி சரி.. போகலாம்.. எல்லாத்துலையும் உனக்கு அவசரம்.. அம்மா கிட்ட ஏதாவது வாங்கி தரணுமானு கேட்டுட்டு கிளம்பலாம்”

அமுதா, இப்பதைக்கு ஒன்னும் வேணாம்.. முதல்ல இவளை கூட்டிட்டு ஹாஸ்பிட்டலை விட்டு கிளம்புங்க” என்றார்.

அன்னைக்கு அழகு காட்டிவிட்டு  தந்தையுடன் கிளம்பிச் சென்றாள்.

குழந்தையின் அன்னை குழந்தையின் கன்னத்தை வருடியபடி, அக்கா.. கீர்தன்யா மாதிரி இவனையும் உங்க சொந்த பையனா பார்த்துபீங்க தானே!” என்றார்.

போர்வையை  சீர்செய்துக்  கொண்டிருந்த அமுதா சிறு அதிர்ச்சியுடன் திரும்பி, என்ன சொல்ற வசந்தி?” என்று கேட்டார். 

இன்னும் கொஞ்ச நாள் தான் நான் இருப்பேன்…….…..”

அமுதா அவர் வாயை சட்டென்று  மூடி, குழந்தை பிறந்த அன்னைக்கு என்ன பேச்சு பேசுற..” என்று கடித்துக்கொள்ள,

இல்ல (அக்)கா.. அவர் இல்லாம என்னால்…………” என்று கூறி கண்கலங்கியவர், மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு, இவன் மட்டும் என் வயித்துல இல்லனா அவர் போனதும் நானும்…….. என்றவர் அழத் தொடங்கினார்.

அமுதா கலங்கிய விழிகளை துடைத்துக் கொண்டு, என்ன பேச்சு இது வசந்தி.. நாங்கலாம் சுந்தரே மறுபடியும் வந்து பிறந்திருக்கான்னு சொல்லிட்டு இருக்கோம்.. நீ அசடு மாதிரி பேசிட்டு.. கண்ணைத் துடை..” என்றபடி கண்களை துடைத்துவிட, அவர் விரக்தியாக புன்னகைத்தார்.

அமுதா சாமான்களை ஒதுக்கி வைக்கும் வேலையை பார்க்க, குழந்தைக்கு பால் கொடுக்க தொடங்கிய வசந்தி சில நொடிகளில், உங்களுக்கும் பெரிய அத்தானுக்கும் சுந்தர் மேல் ரொம்ப பிரியம்ல (அ)க்கா..” என்றார்.

அமுதா சிறு புன்னகையுடன் வேலையை விட்டுவிட்டு கட்டில் அருகே  இருக்கையில் அமர்ந்து வசந்தி கையை மென்மையாக பற்றிக் கொண்டு, ஹ்ம்ம்.. எனக்கும் கீர்த்தி அப்பாக்கும் கல்யாணமானப்ப சுந்தரத்துக்கு 9 வயசு.. கீர்த்தி அப்பாக்கு அப்புறம் ஏழெட்டு குழந்தைங்க பிறந்து இறந்த பிறகு சுந்தரம் பிறந்ததால் எல்லோருக்கும் சுந்தரம் செல்லம்..  அவருக்கும்  தம்பினா உயிர்.. எங்களுக்கு அவன் முதல் குழந்தை மாதிரி தான்..
நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாம்.. அவசரப்பட்டு வீட்டை எதிர்த்து.. ஹ்ம்ம்.. இப்ப எதுக்கு பழசெல்லாம்.. சுந்தர் தான் உனக்கு மகனா பிறந்திருக்கான்.. இனி உன் உலகம் இவன் தான்.. சந்தோசமா இவனை வளர்க்குறதை பத்தி யோசி..” என்று கூறியபடி தூங்கிய குழந்தையை தொட்டிலில் போட, வசந்தி அமைதியாக கண்களை மூடிக்கொண்டார்.

வசந்தியின் மனக்கண் முன் ‘அவரும் சுந்தரமும்(சண்முகத்தின் ஒரே தம்பி) காதலித்தது, இரு வீட்டினரையும் எதிர்த்து காதல் திருமணம் செய்தது, சந்தோசமாக வாழ்ந்தது, கருவுற்றதும் சுந்தரம் மகிழ்ச்சியுடன் அவரை தூக்கி சுற்றியது, தெருவிற்கே இனிப்பு வழங்கியதும், அடுத்த சில நாட்களில் அவர் வாய் திறந்து கூறாத போதும் அவரது மனதை புரிந்துக்கொண்டு அவரை அழைத்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு சென்று அவமானப்பட்டதும், அதற்கு சிறிதும் கோபம் கொள்ளாமல் அவருக்கு ஆறுதல் கூறியதும், பிறகு ஒரு சாலை விபத்தை சுந்தரம் சந்தித்ததும், உயிரை விடுவதற்கு முன் தன் தமையன் சண்முகத்தை அழைத்து வசந்தியை ஒப்படைத்துவிட்டு காதலுடன் அவர் முகத்தையும், ஏக்கத்துடன் அவர் வயிற்றை பார்த்துக்கொண்டே கண் மூடியது’ அனைத்தும் படமாக ஓட, மூடிய விழிகளிலிருந்து கண்ணீர் நிக்காமல் வழிந்தது.

 

குழந்தை பிறந்து மூன்று நாட்கள் கழித்து வசந்தியையும் குழந்தை சந்திரன் என்ற சந்துருவையும் அழைத்துக் கொண்டு சண்முகம் தனது இலஞ்சி வீட்டிற்கு சென்றார். கீர்தன்யாவிற்கு நாட்கள் ரெக்கை கட்டி பறந்தது. பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் சந்துருவுடன் தான் கழித்தாள். பள்ளியிலும் தம்பி புராணம் தான். சந்துருவின் வருகையில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர், ஆனால் வசந்தி மட்டும் வாழ்வில் பிடிப்பே இல்லாமல் சில நாட்களில் நோயில் அவதிப்பட்டு உயிரை விட்டார். அதன் பிறகு அமுதாவும் சண்முகமும் சந்துருவின் தாய் தந்தையாக மாறினர்.

சந்துரு பேச தொடங்கியதும் ஒரு பிரச்சனை கிளம்பியது. அவன் அமுதாவை அம்மா அன்று அழைக்க, அக்கம் பக்கத்தில் இருக்கும் சிலர் அம்மா இல்ல பெரியம்மானு சொல்லு என்று அவனை திருத்த முயற்சிக்க, சிந்தனையில் ஆழ்ந்த சண்முகம் குடும்பத்தை அழைத்துக்கொண்டு திருநெல்வேலிக்கு சென்றார்.

கீர்தன்யா சந்துருவை தாயை போல் பார்த்துக்கொள்ள, அவனும் வளர வளர அவளுடன் தான் அதிக பாசமாக இருந்தான். தம்பியை விட்டு பிரிந்திருக்க முடியாமல், தாயிடம் சண்டையிட்டு, அவனது மூன்றாவது வயது நிறைவடைவதற்கு முன்பே தனது பள்ளியில் Pre.K.G.யில் சேர்த்தாள்.

பள்ளியில் சிறு இடைவெளி கிடைத்தாலும், கீர்தன்யா இருக்கும் இடம் சந்துருவின் வகுப்பறை தான். இப்படி இருவரும் பாசமலர் சிவாஜி சாவித்ரியை தோற்கடிக்கும் விதத்தில் பாச மழை பொழிந்தனர்.

சந்துரு படு சுட்டியான சிறுவன். அனைவரையும் எளிதில் கவர்ந்துவிடுவான். சந்துருவிற்கு இரண்டரை வயது இருந்த போது ஒரு நாள் அமுதா அவனுடன் காய்கறி சந்தைக்கு சென்றிருந்த போது, அவர் தெரிந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருக்க, சந்துரு சந்தையின் கூட்டத்தில் காணாமல் போனான். அவனை தெரு தெருவாக தேடி களைத்துப்போன அமுதா கண்ணீருடன் வீட்டிற்கு வந்தால் அவனோ வீட்டு வாசலில் அமர்ந்துக்கொண்டு, என்னை விட்டுட்டு எங்க மா போன?” என்று கேட்டான்.

அமுதா ஆனந்த கண்ணீருடன் அவனை அணைத்துக் கொள்ள, அந்த நேரத்தில் கீர்தன்யா பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாள். கீர்தன்யாவை பார்த்ததும் அமுதாவிடமிருந்து பாய்ந்து அவளிடம் சென்றவன் அழுகையுடன் அவளது கழுத்தை கட்டிக்கொண்டு தொங்கினான்.

முதலில் அவனை சமாதானம் செய்து, அன்னையிடம் நடந்ததை கேட்டு தெரிந்துக் கொண்டதும், கோபத்தின் உச்சிக்கு சென்று அமுதாவை திட்டத் தொடங்கியவள் சண்முகம் வந்து சமாதானம் செய்த பிறகே வாயை மூடினாள்.

அன்று இரவு உறங்கும் முன் சந்துரு கீர்தன்யாவிடம், நம்ம வீட்டு போன் நம்பர் என்ன (அக்)கா?”

எதுக்குடா?” 

சொல்லு” 

சரி சொல்றேன்.. ******* “ என்று அவள் கூற, அவன் ஒரு காகிதத்தில் எழுதினான். பிறகு இரண்டு நிமிடங்களில் மனப்பாடம் செய்து,“******* சரியா?”என்றான்.

அவள் ஆச்சரியத்துடன், “ஹ்ம்ம்.. எதுக்கு கேட்ட?” என்று கேட்டாள். 

ஒரு அங்கிள் போன் நம்பர் கேட்டாங்க”

அவள் கண்கலங்க அவனது கன்னத்தை மென்மையாக வருடி, எப்பிடி செல்லம் வீட்டுக்கு நீயா வந்த?” 

அது.. பார்க் வரை வந்தேன் அப்பறம் தெரில.. வீடு நம்பர் 2 சொன்னேன்.. ஊ(உன்) பேர் சொன்னேன்.. அப்பா பேர் சொன்னேன்.. ஒரு அங்கிள் கொண்டு வந்து விட்டாங்க”

தம்பியை பற்றி பெருமையாக நினைத்தாலும், அன்னை மீது குறைந்திருந்த கோபம் தலை தூக்க, அடுத்த ஒரு வாரத்திற்கு அமுதாவுடன் பேசாமல் அவரை தண்டித்தாள்.

சந்துரு L.K.G. படித்துக் கொண்டிருந்த போது, ஒரு நாள் வகுப்பின் நடுவில் கீர்தன்யாவை அவளது அறிவியல் ஆசிரியை அழைத்தார். அவள் சென்று பார்த்த போது அவர் அருகே சந்துரு நின்று கொண்டிருந்தான். அவள் கண்ணசைவில் என்ன?’என்று கேட்க அவன் அமைதியாக நின்றான்.

அறிவியல் ஆசிரியை, தம்பி இருந்தா வேற யாரும் உன் கண்ணனுக்கு தெரியாதே” என்றார்.

அப்பொழுது தான் ஆசிரியையை பார்த்தவள் சிறு அதிர்ச்சியுடன், உங்க நெத்தில(நெற்றி) என்ன காயம் மேடம்?” என்று கேட்டாள். 

உன் தம்பியின் வீர தீர செயல் தான்”

அவள் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க, இப்பொழுதும் அவன் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தான்.

அவளது பார்வை தம்பி மீதே இருக்க, ஆசிரியை, கல்லால அடிச்சுட்டான்.. அடிச்சதை ஒத்துக்கிறான் ஆனா காரணத்தை கேட்டா சொல்லவே மாட்டிக்கிறான்.. உன் தம்பினு அமைதியா எவ்வளவோ கேட்டேன்.. ஹ்ம்ஹும்.. நானும் அரை மணி நேரமா போராடிட்டேன்.. நீ கேட்டா சொல்லுவான்னு தான் உன்னை கூப்பிட்டேன்” என்றார்.

கீர்தன்யா கண்டிப்புடன் பார்க்க, அவன் அமைதியான குரலில், அவங்க உன்னை திட்டுனாங்க அதான் கல்-ல எறிஞ்சேன்” என்றான்.

அவள் கண்டிப்பான குரலில், அதுக்காக” என்று கேட்க,

அதே நேரத்தில் ஆசிரியை, நான் எப்போடா இவளை திட்டுனேன்?” என்று கேட்டார்.

அவன் சிறு கோபத்துடன் அவரைப் பார்த்து, அன்னைக்கு திட்டுனீங்களே.. நான் பார்த்தேன்” என்றான்.

அவள்,சந்துரு முதல்ல மேடம் கிட்ட சாரி சொல்லு.. செஞ்சது தப்புனு தோப்பு கரணம் போடு” என்று கூற,

அதே நேரத்தில் ஆசிரியை மெல்லிய புன்னகையுடன், உன் அக்காவை திட்டுனா அடிப்பியா?” என்று கேட்டார். 

ஆமா”

அவள், சந்துரு” என்று குரலை மெலிதாக உயர்த்தி அழைக்க,

ஆசிரியை, இரு கீர்த்தி.. நான் பேசிக்கிறேன்” என்றார்.

அவர் அவனை நோக்கி மென்னகையுடன், உன் அக்கா இப்போ எதுக்கு உன்னை திட்டுறா?” என்று கேட்டார். 

அது.. அது..”

ஹ்ம்ம்.. சொல்லு”

“….”

அவர் புன்னகையுடன்,சரி சொல்ல வேணாம் ஆனா உனக்கு தெரியும்.. அப்படி தானே!” என்றார்.

அவன் அவரை அமைதியாக சிறு குற்ற உணர்வுடன் பார்த்தான்.

அவர், ஸோ ஒருத்தர் தப்பு பண்ணா திட்டுவாங்க.. நான்………….…………..”

என் அக்கா தப்பு பண்ண மாட்டா”

அவர் வாய்விட்டு சிரித்தபடி, டெஸ்ட்ல மார்க் கம்மியா வாங்கினா தப்பில்லையா?” என்று கேட்டார். 

உடம்பு சரி இல்லானா ஒழுங்கா படிக்க முடியுமா?” 

எப்பா!!! உன்னை ஒன்னு சொல்லிட்டா என்னமா கோபம் வருது.. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு நிரூபிக்கிறான்” 

கீர்தன்யா சிறு புன்னகையுடன், சாரி மேடம்” என்று கூற,

அவர் அவளிடம் தலையசைத்துவிட்டு அவனது தலை முடியை லேசாக கலைத்தபடி, உன் அக்காக்கு உடம்பு சரி இல்லைனு எனக்கு தெரியாதே.. அவள் சொன்னா தானே எனக்கு தெரியும்” என்றார்.

ஓ!”

அவர் புன்னகையுடன், இனி என்னை அடிக்க மாட்டியே பெரிய மனிஷா!” என்று கேட்க, பெரிய மனிஷா என்ற வார்த்தையில் பெருமையுடன் தோளை உயர்த்தியவன் தமக்கையை பார்த்ததும் ஆசிரியையிடம், “சாரி” என்றான்.

ஆசிரியை, ஹ்ம்ம்.. உன் கோபம் சரியோ தப்போ எப்போதுமே வன்முறை தப்பு.. அதாவது.. உன் கோபம் சரியானதா இருந்தாலும் நீ யாரையும் அடிக்க கூடாது” என்று அமைதியாக எடுத்துக் கூறினார். 

அஜய் என்ன(னை) அடிக்கும் போது கூடவா?” 

அவர் புன்னகையுடன்,உன்னை அஜய் அடிச்சா நீ மேடம் கிட்ட சொல்லு” 

ஹ்ம்ம்..” 

கீர்தன்யா மீண்டும் ஒருமுறை ஆசிரியையிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தம்பியை அழைத்துச் சென்றாள்.

இப்படியே இருவரின் அன்பும் வளர்ந்துக் கொண்டே போனது.

 

கீர்தன்யா பொறியியல் இறுதி ஆண்டின் தொடக்கத்தில் இருந்த போது சந்துருவின் பள்ளியில் அவனது வகுப்பு பிள்ளைகளை இரண்டு நாட்கள் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்தனர். அவனது வகுப்பு பிள்ளைகள் அனைவரும் சுற்றுலா செல்ல இவன் மட்டும் வீட்டில் இருந்தான். காரணம் கேட்டதற்கு, அக்காவை பார்க்காம எப்படி இருப்பேன்?” என்றான்.

அமுதா, இவ தான் நீ பிறந்ததில் இருந்து டூர் போகவே இல்லைனா, இப்ப அதே காரணத்தை சொல்லி நீயும் ஆரம்சுட்டியா?” என்றார்.

இருவரும் சிரித்தபடி அன்னைக்கு அழகு காட்ட, அவர் தலையில் அடித்துக் கொண்டார்.

சந்துரு, இப்போ ஏன் தலைல அடிச்சுக்குறீங்க?” 

உங்களை அடிக்க முடியலையே” 

அவன் நெஞ்சை நிமிர்த்தி, எங்களை எதுக்கு அடிக்கணும்? நாங்க என்ன தப்பு பண்ணோம்?” என்று கேட்டான்.

சண்முகம்,அதுவா கண்ணா.. அம்மாக்கு உங்க மேல் பொறாமை” என்றார்.

அவன் புரியாமல் விழிக்க, அமுதா சிறு கோபத்துடன்,என் பிள்ளைகள் மேல் எனக்கு பொறாமையா! பேசுற பேச்சை பாரு” என்று கணவரை பார்த்து கூறியவர், சந்துருவைப் பார்த்து,அது சரி.. உன் அக்கா கல்யாணத்துக்கு அப்புறம் என்ன செய்வ?” என்று கேட்டார்.

அவன்,ஏன்.. கல்யாணம் ஆனா என்ன?” 

அக்கா வேற வீட்டுக்கு போயிடுவாளே”

அவன் அதிர்ச்சியுடன் சிறிது கண்கலங்க தமக்கையை பார்க்க, அவள் அவனை அணைத்துக் கொண்டு,”கவலை படாதடா.. நான் உன்னையும் கூட்டிட்டு போய்டுவேன்” என்றாள்.

அவன் புன்னகையுடன் வலது கை கட்டை விரலை ஆட்டி, ஏய்! இப்ப என்ன செய்வீங்க?” என்றான்.

அமுதா ஏதோ கூற வர, சண்முகம் கண்ணசைவில் அவரை தடுத்தார்.

 

சுவர் கடிகாரத்தின் சத்தத்தில் நிகழ் காலத்திற்கு திரும்பிய கீர்தன்யா கண்களை துடைத்துக் கொண்டு கோபத்துடன், “இப்படியே சந்தோசமா இருந்த என் வாழ்க்கையில், அந்த மழை நாளில் அவன் மட்டும் என்னை சந்திக்காமல் இருந்திருந்தால் என் சந்துருவை நான் இழந்திருக்கவே மாட்டேனே!” என்று வாய்விட்டு கூறியபடி கை முஷ்டியை இறுக்கமாக மூடி மெத்தையில் ஓங்கி குத்தினாள்.

Advertisement