Advertisement

வியூகம்.1

குறள்:

ஒற்று உறைசான்ற நூலும் இவையிரண்டும்

தென்றென்க மன்னவன் கண்.

விளக்கம்:

ஒற்றன் எனக் கூறப்படும் உளவாளி திறம்பட்டவனாய் எதிரி நாட்டில் நடப்பவைகளை தேர்ந்து தெளிந்து அரசனுக்கு அறிவிப்பனாய் இருப்பவனையும், நீதிகளை போதிக்கின்ற சாஸ்திரத்தையும் அரசன் இரண்டு கண்களாக சமமாக பாவித்து பாதுகாக்க வேண்டும்.

டெல்லி சர்வதேச விமான நிலையம். அந்த இரவு நேரத்திலும் பரபரப்பாக தான் காணப்பட்டது.

சற்று முன் வந்து தரை இறங்கிய விமானத்தில் இருந்து இறங்கியவன் லக்கேஜ் என எதுவும் எடுத்து வராததால் லக்கேஜ் கிளைம் செய்யும் இடத்திற்கு சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாததால் விமானநிலைய வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

வெளியே வந்த அகத்தீஸ்வரன் தன் விழிகளால் சுற்றி பார்த்தான். தன்னை அழைத்து செல்ல வந்திருப்பவரை பார்த்ததும் அவரின் அருகில் சென்றான்.

தன் அருகில் வந்து நின்றவனின் தோரணையை பார்த்ததுமே தான் அழைத்து செல்ல வந்த ஆள் அவன் என்பதை நொடிக்குள் புரிந்துக் கொண்டார். புரிந்துக் கொண்டது சரியா என்பதை அவருக்கு வந்திருந்த குறுஞ்செய்தியை பார்த்து கன்பார்ம் செய்து கொண்டவர் அவனுக்கு கதவை திறந்து விட்டார்.

காரில் ஏறி அமர்ந்தவன், “எதாவது துணிக்கடைல நிறுத்துங்க.” என்றான்.

அவரும் அவன் சொன்னதை போலவே ஒரு துணிக்கடையில் நிறுத்தினார்.

இறங்கி உள்ளே சென்றவன் அடுத்த பத்து நிமிடத்தில் கையில் ட்ரெஸ் எடுத்ததுற்கு அடையாளமாக பை உடன் வெளிவந்தான்.

மீண்டும் காரில் ஏறி அமர்ந்ததும், “ஹோட்டல் போங்க.” என்றான்.

கார் அவனுக்கு என முன்பே பதிவு செய்து இருந்த ஹோட்டல் வாயிலில் சென்று நிற்கும் வரை இருவரிடத்திலும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை.

கார் வாயிலில் வந்து நின்றதும் இறங்கியவன், “உங்களுக்கு வேலை இருந்தா நீங்க கிளம்புங்க.” என்றான்.

“சாரி சார். உங்க கூடவே இருந்து கூட்டிட்டு போகனும்னு எனக்கு ஆர்டர். நீங்க போங்க. நான் பாத்துக்கறேன்.”

‘நான் சொல்வதை சொல்லிவிட்டேன். அதற்கு மேல் உங்கள் விருப்பம்’ என்பதை போல வேறு எதுவும் பேசாமல் ஹோட்டலுக்குள் சென்று விட்டான்.

உள்ளே சென்றவனை சில நொடிகள் பார்த்தவர் தனக்கு வேலை குடுத்தவர்க்கு அவன் வந்துவிட்டதை தகவல் அனுப்பி வைத்துவிட்டு அங்கையே அவரும் தங்கிக் கொண்டார்.

மறுநாள் காலை அவன் கூறிய நேரத்திற்கு சரியாக கிளம்பி வந்து காருடன் ஹோட்டலின் நுழைவாயில் நின்றவாறே அவன் வருகிறானா என்று பார்த்துக் கொண்டிருந்தார்.

சரியாக அந்த நேரம் ஹோட்டலில் இருந்து வெளியே வந்தவன் காரை பார்த்து விட்டு அருகில் சென்று அதில் ஏறி அமர்ந்தவனை பார்த்ததும் “தம்பி யார் நீங்க?” என்று விட்டார்.

அவரின் கேள்வியில் துளியும் கோபப்படாமல் “நேற்று இரவு நீங்க இறக்கி விட்ட ஆள் நான் தான்.” என்றான்.

அவர் அவனை சந்தேகமாக பார்த்தார். அவருடன் வந்தவனுக்கும் இப்போது காரில் ஏறியவனுக்கும் துளிக்கூட சம்பந்தமே இல்லை. அந்த அளவுக்கு ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருந்தான். நேற்று முகத்தில் அரை அடிக்கு தடியும் தலையில் குல்லா, ஒரு பைஜமா தொலதொலவென அணிந்து கிட்டதட்ட ஐம்பது வயது ஆளை போல் இருந்தவன் இப்போது க்ளீன் சேவ் செய்து ப்ளாக் & ஒயிட் ஃபார்மல் உடையில் கூலிங் கிளாஸ் என ஒரு இளைஞனை போல் வந்து நின்றால் அவரும் தான் என்ன செய்வார்.

சந்தேகத்துடன், “உங்க ஐடி கார்டு காட்டுங்க.” என்றார்.

அவன் காட்டியதும் அதை வாங்கி பார்த்தார். அவர் அழைத்து செல்ல வந்த நபரின் பெயர் அவனுடைய பதவி எல்லாம் சரியாக இருந்தாலும் அவரால் நம்பமுடியவில்லை.

அவரின் குழப்பமான முகத்தை பார்த்து விட்டு லேசாக சிரித்தவன், “இன்னும் சந்தேகமா இருந்தா உங்கள அனுப்புன additional secretary மிஸ்ரா சார்கிட்ட கன்பார்ம் பண்ணிக்கோங்க.” என்றான்.

அவன் சொல்வதும் சரியென தோன்ற உடனே அவனை ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு சிறிது தள்ளி சென்று பேசிவிட்டு வந்தவர், “சாரி சார். வாங்க போலாம்.” என்றார்.

அவனும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் காரில் அமர்ந்துக் கொண்டான்.

காரை எடுத்துவிட்டாலும் அவரின் பார்வை என்னவோ மிரரில் தெரிந்த அவன் முகத்தை தான் அடிக்கடி பார்த்துக் கொண்டு வந்தார்.

அவரால் இன்னும் நம்பமுடியவில்லை. ஒரே இரவுக்குள் ஒரு ஆளின் தோற்றம் மாறமுடியுமா? என்ற கேள்வி தான் எழுந்தது.

அவருக்கு ஒன்று புரியவில்லை. அவன் மட்டும் அல்ல இந்த பணியில் ஈடுபடும் ஒவ்வொருத்தரும் இடத்திற்கும் சூழலுக்கும் தகுந்தவாறு தங்களை மட்டும் அல்லாமல் நடை, உடை, பேச்சு என அனைத்தையும் மாற்றிக் கொள்ளும் திறமை வாய்ந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் தங்களை தகவமைத்துக் கொள்ள கூடியவர்கள்.

அவர்களுக்கென எந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் கிடையாது. தன் தேசத்திற்காக உயிரை குடுக்க வேண்டும் என்றாலும் கூட குடுக்க யோசிக்க மாட்டார்கள். குடும்பம் குழந்தை எல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம்.

உளவு பார்ப்பதில் யாரும் நண்பனும் இல்லை யாரும் எதிரியையும் இல்லை என்பதே அடிப்படை கோட்பாடு. இன்று நண்பனாக இருப்பவன் நாளை துரோகியாகவும் ஆகி காட்டியும் குடுக்கலாம். எதிரியாக இருப்பவன் நண்பனாகவும் ஆகலாம். எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணர்ந்தவர்கள். இவர்களுடைய ஒரே குறிக்கோள் நாட்டின் பாதுகாப்பு. இவர்களை போல பல வீரர்கள் நமக்காக உயிரை பணயம் வைத்து இன்றும் பல நாடுளில் நம் நாட்டிற்காக உளவு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் உளவு அமைப்பான RAW வில் பணிபுரிய NADI (National Aptitude Test In Intelligent) தேர்வு எழுத வேண்டும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மன உறுதி சோதிக்கப்படும். அதன் பின்னர் பல மாதங்கள் பயிற்சிகள் அளிக்கப்பட்டு பணியில் அமர்த்துவார்கள்.

இந்த நிழல் உலக நாயகர்கள் இல்லை என்றால் இந்தியா என்ற நாடு இவ்வளவு நிம்மதியாக இருக்காது. ஒரு நாட்டிற்கு ராணுவம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிற்கு நாட்டின் உளவாளிகள் முக்கியம். அவர்கள் தங்கள் நாட்டுக்காக சுயத்தை மறைத்து போலியான முகமூடியுடன் எதிரியின் கோட்டைக்குள்ளேயே நுழைந்து நமக்காக போராடும் RAW உளவாளிகள். அவர்கள் மட்டும் இல்லை என்றால் இந்தியா என்ற நாடு இல்லை. புவிசார் அரசியலில் நம்மை வீழ்த்த காத்திருக்கும் நாடுகளின் பட்டியல் ஏராளம். அவர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு நம் நாட்டை இரவு பகல் பாராமல் காத்துக் கொண்டிருக்கும் நிழல் நாயகர்களில் ஒருவன் தான் அகத்தீஸ்வரன்.

இரண்டு வருடங்களுக்கு மேலாக நமது நம் நாட்டிற்காக தீவிரவாத குழுவில் இணைந்து நம் நாட்டின் போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதியை அவன் கோட்டைக்குள்ளேயே புகுந்து முடித்து விட்டு வந்திருக்கிறான்.

டெல்லியில் உள்ள ராவின் தலைமையகம் குண்டுகள் துளைக்காத இருபத்தி மூன்று அடுக்குகளை கொண்ட கட்டிடத்தின் முன்னாள் கார் வந்து நின்றதும் இறங்கி உள்ளே சென்றான்.

“ஹாய் சார்…” என குரல் கேட்டதும் திரும்பி பார்த்தான். அங்கு அவனுடன் சேர்ந்து இரண்டு வருடத்திற்கு மேலாக தீவிரவாத குழுவில் இருந்த நான்கு பேர் இருந்தனர். அவர்கள் நால்வரும் இந்தியர் அதுவும் நம் நாட்டிற்காக உளவு வேலை பார்க்கிறார்கள் என்பதே இறுதி கட்ட ஆப்ரேஷனில் தான் அவனுக்கு தெரியும். அவர்களுக்கும் அப்படித்தான். இங்கு வரும் வரை இவர்கள் யாருக்கும் அவர்களுடைய உண்மையான பேர் கூட தெரியாது.

அவனும் அவர்களின் அருகில் சென்று அவர்களிடம், “ஹாய். ஐ அம் அகத்தீஸ்வரன்” என்றவரே,

அவர்களுக்கு கை குடுத்து தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

“ஐ அம் நந்தகுமார் ப்ரம் தமிழ்நாடு. “

“ஐ அம் வேணுகோபால் சர்மா. ப்ரம் ஆந்திரா.”

“ஐ அம் அப்துல் ரஹீம். ப்ரம் மேற்கு வங்கம்.

“ஐ அம் பிரதாப் சிங் ப்ரம் பஞ்சாப் ” என ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

இதில் ஒவ்வொருவரும் வெவ்வேறு மாநிலம். வெவ்வேறு மொழியை தாய் மொழியை கொண்டவர்கள். ஆனாலும் இவர்களெல்லாம் ஒன்றாக இணைய காரணம் இந்தியா என்ற ஒரு தேசத்திற்காக மட்டுமே.

அனைத்து வித பரிசோதனையும் முடித்துக் கொண்டு அவனுடைய டீம் ராவின் தலைமை அதிகாரியை சந்தித்தனர்.

“ஹாய் யங் மேன்ஸ். வாங்க வாங்க…” என உற்சாகமாக அவர்களை வரவேற்றார் தலைமை அதிகாரி.

“வெரி ப்ரிலியன்ட் மூவ். இவ்வளவு சீக்கிரமா மிஷன முடிச்சிட்டு வந்துட்டிங்க அகத்திஸ்வரன். உங்க டீம் பாய்ஸ்க்கும் வாழ்த்துகள்.” என பாராட்டினார்.

“தேங்க்யூ சார்!” என அவரின் பாராட்டை சிறு புன்னகை மூலம் நால்வரும் ஏற்றுக் கொண்டனர்.

“உங்கள எதுக்கு இங்க வர சொன்னேன்னா இந்த மிஷன சக்சஸ் ஃபுல்லா முடிச்சதலால பிரைம் மினிஸ்டர் உங்க எல்லார்கிட்டையும் நேர்ல பார்த்து பேசப் போறார். அப்படியே இன்னைக்கு நைட் உங்க கூட சேர்ந்து டின்னர் சாப்பிட போறார்.” என்றார்.

அவர் சொன்னதை கேட்டதும் அகத்தீஸ்வரனனை தவிர மற்ற நால்வரும் சந்தோஷத்தில் திக்கு முக்காடி போய் நின்றனர்.

அவர்கள் செய்த மிஷனுக்கு பிரதமரிடம் இருந்து கிடைக்கும் அதிகபட்ச மரியாதை இதுவே. இதை வெளியில் சொல்லி பெருமை பட்டுக் கொள்ள முடியாது என இவர்களுக்கும் தெரியும். ஏன் தன் குடும்ப ஆட்களிடம் கூட காட்டி மகிழ்ச்சி அடைய முடியாது. ஆனாலும் அவர்களுக்கு இதுவே மிகப்பெரிய கௌரவம் தான். இதை ஒவ்வொரு உளவாளியும் விரும்புகின்றனர்.

மற்றவர் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி அகத்தீஸ்வரன் முகத்தில் மட்டும் தெரியாததால் “என்ன அகத்தீஸ்வரன் நான் சொன்னதுக்கு உங்க முகத்துல மகிழ்ச்சியே தெரியல. உங்களுக்கு வேற ஏதாவது ப்ரோக்ராம் இன்னைக்கு இருக்கா?” என்று கேட்டார்.

“நோ சார். இன்னைக்கு ஃப்ரீ தான்.” என்றான்.

“ஓகே அகத்தீஸ்வரன். நைட் நம்ம பிரைம் மினிஸ்டர் வீட்டில் பார்க்கலாம்.” என்றார்.

“ஓகே சார். அப்ப நாங்க கிளம்புறோம்.” என்றுவிட்டு தன் டீம் சகாக்களுடன் வெளியே வந்தான்.

நந்தகுமார் “நான் சீப் செகரட்டரி பாத்துட்டு இன்னைக்கு ஊருக்கு போகலாம் என்று நினைச்சு டிக்கெட் எல்லாம் போட்டு வச்சிட்டேன். இப்ப அதை கேன்சல் பண்ணனும் போல.” என்ன புலம்பினான்.

“இந்த மாதிரி ஆப்பர்சுனிட்டி எல்லாம் திரும்ப கிடைக்குமோ என்னவோ! அத அனுபவிக்காம. இப்ப போய் டிக்கெட் போச்சுன்னு புலம்பறிங்க.” என்று கேட்டான் அப்துல்.

“நானும் தான் போட்டு வச்சிட்டேன். அதுக்காக என்ன பண்ண முடியும். நமக்கு கிடைக்கிற பெரிய கவுரவமே பிரைம் மினிஸ்டர் கிட்ட இருந்து கிடைக்கிற பாராட்டும் இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோசமும் தான். அத போய் விட முடியுமா?”

சரியா சொன்னீங்க பிரதாப். பிரைம் மினிஸ்டர் கூட உட்கார்ந்து டின்னர் சாப்பிடற வாய்ப்பு எல்லாம் எல்லாருக்கும் கிடைக்குமா என்ன? நான் எல்லாம் இப்ப இருந்தே அவர் கூட எப்படா செல்பி எடுத்துக்கலாம்னு இருக்கேன்.” என்றான் வேணுகோபால்.

“சரி ஈவினிங் வரையிலும் என்ன பண்றது. ரூமுக்கு போனாலும் போர் அடிக்கும். எங்கேயாச்சும் வெளிய போலாமா?” அகத்தீஸ்வரன் தான் கேட்டான்.

அப்துல் ரஹீம், “ம்ம் போலாமே…” என்றான்.

வேணுகோபால் சர்மா, “சரி போலாம்னு எங்க சொல்லுங்க. அங்கேயே போலாம்.” என்றான்.

பிரதாப் சிங், “முதல்ல ஷாப்பிங் போலாம். ரொம்ப நாள் கழிச்சி எல்லாரையும் பார்க்க போறோம் வீட்டுக்கு ஏதாவது வாங்கிட்டு போகனும்.” என்றான்.

“அட ஆமாப்பா நானும் வாங்கணும். வாங்கிட்டு போகலேனா எம் பொண்ணு என்ன உண்டு இல்லைனு பண்ணிடுவா.” ரொம்ப நாட்களுக்கு பிறகு தன் குடும்பத்தை பார்க்க போகும் மகிழ்ச்சி அப்துல் குரலில் தெரிந்தது.

அந்த மகிழ்ச்சி மற்றவர்களையும் தொற்றிக் கொண்டது. 

இருக்காதா பின்ன… உயிருடன் தன் சொந்த நாட்டிற்கு திரும்புவோமா என்பதே தெரியாமல் இருந்தவர்களாச்சே… ஒருவேளை அவர்கள் உயிரே போயிருந்தாலும் வீட்டினருக்கு தெரிந்திருக்காதே…  

“அப்ப எல்லாரும் ஷாப்பிங் போயிடலாம் அத முடிச்சிட்டு வேணா டைம் இருந்தா எங்கயாச்சும் போலாம். எல்லாருக்கும் ஓகே தானே?” அகத்தீஸ்வரன் தான் கேட்டான்.

“எங்க எல்லாருக்கும் ஓகே தான் சார்.” என்றுவிட்டனர்.

அன்றைய பொழுது முழுவதும் டெல்லியை சுற்றிவிட்டு சரியாக ராவின் தலைமை அதிகாரி  சொன்ன டைம்க்கு 7 ரேஸ் கோஸ் சாலையில் அமைந்துள்ள பிதமர் இல்லத்திற்கு வந்து விட்டனர்.

SPG கமெண்டோஸ், CRPF வீரர்கள், டெல்லி காவல் துறை என மூன்று துறைகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு பலமாக இருந்தது.

அந்த கோட்டைக்குள் நுழையும் ஒவ்வொரு வாகனம், அதில் வந்த ஆட்கள் என அனைவரின் தகவல் அனைத்தும் வாங்கிக் கொண்டு உள்ளே அனுப்பினர். அடுத்து எஸ்பிபி அலுவலகம் உள்ள ஒன்பதாம் நம்பர் ப்ளாக்கில் அவர்கள் குடுத்த தகவல் அனைத்தையும் சரிபார்த்து பிறகே அனுமதித்தனர்.

அனைத்து ஃபார்மாலிட்டிஸையும் முடித்த பிறகே பிரதமரை அவர்களால் சந்திக்க முடிந்தது.

அந்த பிரமாண்ட ஹாலில் ப்ரைம் மினிஸ்டருடன் அமர்ந்திருந்த நபரை பார்த்ததும் அகத்தீஸ்வரனின் முகம் செந்தனலாக மாறிவிட்டது. அடுத்த அடி எடுத்து வைக்க கூட தோன்றாமல் உடல் இறுகிப்போய் நின்றான். அவன் மனம் இப்போதே இங்கிருந்து சென்றுவிட துடித்தது.

யாரை தன் வழ்நாள் முழுவதும் பார்க்கவே கூடாது என வெறுத்து  விலகி விலகிக் ஓடிக்கொண்டிருக்கிறானோ அந்த நபரை தன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தும் விதியை அறவே வெறுத்தான்.

Advertisement