Advertisement

அத்தியாயம் 3

பள்ளியின் வாகனம் நிறுத்துமிடத்திற்கு வித்யுத்துடன் வந்த நறுமுகை, அவளது கார் கதவை திறக்கும் நேரம், “மேம்”, என்று குரல் வர திரும்பினாள். அங்கே அந்த நான்காம் வகுப்பு மாணவன், விபத்தில் இல்லை.. பழத்தில் சிக்கியவன்.

ஆர்வத்தோடு நின்று கொண்டிருந்தவனைப் பார்த்து புன்னகைத்து, “யெஸ்”, என்றாள்.

“எங்க தாத்தா உங்களை பாக்க வெயிட் பண்ணிட்டு இருக்காரு”

“ஓ… எதுக்கு?”

“என்னை கூட்டிட்டு போக தாத்தா வந்தார், நான் மத்தியானம் நடந்ததை சொன்னேன், அதான் உங்க கிட்ட பேசணும்னு சொன்னார்”

“ஹ்ம்ம், யா”, என்று பத்தடி தொலைவில் இருந்த டஸ்ட்டர் அருகே சென்றாள். உள்ளே அமர்ந்திருந்த அந்த தாத்தா, இளமையாக இருந்தார், அல்லது இருப்பது போல பாவித்தார் என்று சொல்லலாம்.

“ஹெலோ ஸார் வணக்கம், என்னைப் பாக்க வெயிட் பண்றதா பையன் சொன்னா..ன்”

“ம்ம், எஸ்”,என்று நறுமுகையிடம் அவளை பாராமலே சொல்லிவிட்டு, பேரனிடம் திரும்பி “ஆரவ் நீ போய் உன் friends கிட்ட பேசிட்டு இரு”, கட்டளை குரலில் சொன்னார்.

இந்த நேரத்திற்கு ஒன்றிரண்டு பேரைத் தவிர எல்லாரும் வீட்டுக்கு சென்று இருப்பார்களே? என்ற யோசனையுடன், “ஆரவ், விது .. வித்யுத் கார்ல இருக்கான் பாரு, அவன் கூட பேசிட்டு இரு”, என்றாள் நறுமுகை.

அவன் செல்லும் வரை காத்திருந்தவர், கடுகடுவென முகம் மாற (அது ஏற்கனவே அப்படித்தான் இருந்தது) “ஆரவ்-வை வேற ஸ்கூலுக்கு மாத்திடலாம்னு இருக்கேன். டி சி கொடுத்துடுங்க”, என்றார் அந்த டஸ்ட்டர் கார்க்காரர்.

அவரது குரலில் துணுக்குற்றவள், அப்போதுதான் தனது வணக்கத்திற்க்கு பதில் ம்ம் தான் அவரிடமிருந்து வந்தது என்பதை உணர்ந்தாள். “யா, கண்டிப்பா, நாளைக்கே வந்து ஃபார்ம் வாங்கி ஃபில் பண்ணி கொடுங்க, ஒன் வீக்-ல தந்துடுவோம்”, என்றாள் தோரணையாக.

படக்கென கார் கதவைத் திறந்து இறங்கி நறுமுகையின் முன் ஜீபூம்பா மேஜிக் போல வளர்ந்த பனைமரமாக நின்று, “இவ்ளோ பெரிய ப்ளெண்டர் பண்ணிட்டு, ஃபார்ம் தர்றோம்-ன்னு சொல்லறீங்களா? என்ன பாதி வருஷத்துல போனா எந்த ஸ்கூல்லயும் சேக்க முடியாதுன்னு நினைப்பா? நான் நினச்சா எங்க வேணா எப்ப வேணா ஆரவ்வை சேர்த்து படிக்க வைக்க முடியும் தெரியுமா?”, அனல் கக்கினார்.

அவரது கோபம் கண்டு நறுமுகை சற்று அதிர்ந்து.. பின், இவர் ஆரவ்-விற்கு விபத்து ஏற்பட்ட அதிர்ச்சியின் விளைவாக பேசுகிறார் என்பதைப் புரிந்து, அவரிடம் அமைதியாக பேசினாள், ஆனால் அழுத்தமாக. “ஸார் எங்க ஸ்கூல் ஃபார்மாலிட்டி தான் நான் சொன்னேன், நீங்க யாரு என்ன பண்ணுவீங்கன்னு எல்லாம் எனக்கு தெரியாது, தேவையில்லாததும் கூட. இவ்வளவுதான் விஷயம்-னா.. , இத நீங்க ஆபிஸ்-ல கேட்டிருக்கலாமே?  கிளம்பறேன்”, என்று நடக்க ஆரம்பிக்க..

அவளது அந்த பேச்சை அலட்சியம் என்று எண்ணினார் போலும்,”என்ன அவ்ளோ சீக்கிரம் தப்பிக்கலாம்னு நினைக்கறீங்களா ? உங்க மேல போலீஸ் கம்பளைண்ட் தரப்போறேன், இந்த ஸ்கூலையே இழுத்து மூட வைக்கல.. நான் தாமோதர் இல்ல”

ஈரடி வைத்து காருக்கு செல்ல இருந்த நறுமுகை, அவரது பேச்சில்  வெகுண்டு, நின்று திரும்பி அவரது முகம் பார்த்து, “சார் உங்க வயசுக்கு மரியாத குடுத்து பேசணும்னு அமைதியா இருக்கேன், என்ன பயமுறுத்தி பாக்கறீங்களா? கம்பளைண்ட் கொடுங்களேன், எங்கன்னு சொல்லுங்க நாங்க வர்றோம்”

“ஏன் குடுக்க மாட்டேன்னு நினைக்கறியா?”, சட்டென ஒருமைக்கு தாவினார். நறுமுகை சிறியவள் என்பதாலா? அல்லது மரியாதை தரத் தேவையில்லை என்பதாலா?

அமர்த்தலாக, “ப்ளீஸ்.. குடுங்கன்னு தான் சொல்றேன், ஒரு கிளாசுக்கு நாப்பது பசங்க, இண்டெர்வெல் டைம் பதினஞ்சு நிமிஷம், எல்லாரும் ஏதாவது  சாப்பிடறாங்களா-ன்னுதான் ஒரு டீச்சரால பாக்க  முடியுமே தவிர, எடுத்து ஓரோருத்தருக்கா ஊட்டி விட முடியாது. கட்டி கொடுக்கற பேரன்ட்ஸ்-க்கு பொறுப்பு வேணும்”

“முழு பழத்தை ஸ்னாக்ஸ்க்கு வைக்கும்போது ஸ்லைஸ் ஸ்லைஸா கட் பண்ணி வைக்கணும்னு கூட தெரியாத.. உங்க வீட்டு பொம்பளைங்க கிட்ட தப்பை வச்சிக்கிட்டு…, குழந்தைகிட்ட பழத்தை நல்லா சவைச்சு சாப்பிடணும்னு சொல்லி தராத.. பெரியவங்க உங்க மேல தப்பை வச்சிக்கிட்டு, சமயத்துல ஃபர்ஸ்ட் எயிட் பண்ணி காப்பாத்தின எங்க மேல கம்பளைண்ட் பண்ண போறீங்களா?”

“எங்க பக்க சாட்சியா வேற யாரையும் கூப்பிட வேண்டாம், ஆரவ் போதும் நடந்ததை அப்படியே சொல்றதுக்கு, அண்ட் அவனோட TC சீக்கிரமா தரதுக்கு ஏற்பாடு பண்றேன். நாளைக்கு வந்து பீஸ் ஏதாவது பேலன்ஸ் இருந்தா கட்டிடுங்க”, என்றாள் கணீர்க் குரலில்.

நறுமுகை சொன்ன காரணங்கள் அனைத்தையும் கேட்டாரா என்பதும் அது அவரது மூளையில் உரைத்ததா என்பதும் புரியாதவாறு முகம் சுண்டியபடி, “எங்க வீட்ல பொம்பளைங்க கிடையாது”, என்றார் பாக்கு வெட்டினாற்போல்.

அவரது குரலில் இருந்த வெறுப்பு நறுமுகையை நிமிர்ந்து பார்க்க சொன்னது. ஆனாலும், பிடியை விடாது, “அது எங்க தப்பில்ல”, என்றுவிட்டு அவளது வாகனத்துக்கு சென்றாள்.

“ஆரவ்.. தாத்தா கூப்பிடறார் பாரு”, என்று கார் உள்ளே அமர்ந்து சலசலத்துக் கொண்டிருந்த ஆரவ் விடம் சொல்லி, “விது போலாமா?”, என்று மகனிடம் கேட்டாள்.

கதவைத் திறந்த ஆரவ், “மேம், ஒன் மினிட்…”, என்று கூறி கார் பார்க்கிங் ஓரத்தில் பாத்தி கட்டி வரிசையாக  நடப்பட்டிருந்த வாடாமல்லி பூக்கள் சிலவற்றை பறித்து, பொக்கே கொடுப்பதுபோல, நறுமுகையின் அருகே வந்து கொடுத்துவிட்டு, “தேங்க்ஸ் மேம்”, என்றான் வெட்கம் + தயக்கம் கலந்த குறுஞ்சிரிப்போடு.

பெரியவர்கள் மேலுள்ள கோபத்தை சிறுவனிடம் எப்படி காண்பிப்பது? அதுவும் மலர்ந்த முகத்தோடு நன்றியறிவித்தலும் சேர்த்து சிரிக்கும் பிள்ளையிடம்?, “ஓஹ்.. யு ஆர் வெல்கம் மை டியர்”, என்று புன்னகையோடு (வரவழைக்கப்பட்ட) வாங்கினாள். அப்போதுதான் கவனித்தாள், அவனும் இடது கை பழக்கமுடையவன் என்பதை.

அதை கவனித்தது நறுமுகை மட்டுமல்ல, வித்யுத்தும்தான். “ஹேய்.. ஆர் யூ எ லெஃப்டி?”, என்றவாறே இடது கையால் ஹை பை கொடுக்க கையை உயர்த்த….

“யூ டூ?”, சிரித்துக் கொண்டே ஆரவ்-வும் வித்யுத்தின் கையைத் தட்டினான்.

பிள்ளைகள் இருவரது சிரிப்பும், குறிப்பாக மகன் விதுவின் சிரிப்பு நறுமுகைக்கு ஒரு முகத்தை நினைவு படுத்தியது. வலிந்து அம்முகத்தை மனதிலிருந்து அகற்றி, வித்யுத்-துடன் வீடு திரும்பினாள்.  சென்றதும், பள்ளி முதல்வருக்கு போன் செய்து நாளை யாரேனும் பள்ளிக்கு மாற்றுச் சான்றிதழைக் கேட்டு வந்தால், உடனடியாக அதற்க்கு ஏற்பாடு செய்யும்படி கூறினாள். ‘ஆனா அரைப்பரீட்சை வரப்போகுது? இப்போ யார் TC …?’ என்று அவர் இழுக்க.. “சப்போஸ் யாராவது கேட்டு வந்தா என்ன ஃபோர்மாலிட்டி உண்டோ அதை பண்ணுங்க மேம்”, என்று கத்தரித்தாள்.

ஆனால், மறுநாள் மட்டுமல்ல, அதற்கடுத்த நாட்களும் ஆரவ்-வின் தாத்தா சாண்றிதழ்  கேட்டு வரவில்லை. மாறாக, வித்யுத் ஆரவ் தோழமை நெருக்கமானது, எங்கு சென்றாலும் இருவரும் இணைபிரியாமல் செல்வது, பள்ளி முடிந்ததும் அரை மணிநேரம் மைதானத்தில் விளையாடுவது, வகுப்பில் இடைவேளையின் போது கூட இருவரும் ஒன்றாகவே உணவருந்துவது என்று விது-வும் ஆரவ்-ம் ஒன்றிப்போயினர்.

நறுமுகை கூட முதல் இரண்டு மூன்று நாட்கள் ‘அய்யோ, இவனானால் TC வாங்கி செல்லப்போகிறான், இப்போது போய் இருவரும் நட்பு பாராட்டுகின்றார்களே, என்ற கவலை இருந்தது. ஆனால், ஆரவ்-வின் தாத்தா மாற்று சான்றிதழுக்கு வரவில்லையாதலால், சரி சமாதானமாகி விட்டார் போல, என்று நினைத்துக் கொண்டாள்.

அடுத்து நறுமுகை செயல்படுத்த நினைத்த முதலுதவி குறித்த பயிற்சியை, அவளது பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அட்டெண்டர்கள் பயின்றனர். கூடவே, பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தின் போது, ஆரவ்-க்கு நேர்ந்த விபத்தினைப் பற்றி கூறி, பள்ளி வேலை நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்காக ஒரு மருத்துவரை பள்ளியிலேயே இருக்கும்படி செய்யப்போவதாக நறுமுகை அறிவிக்க, அனைத்து பெற்றோர்களும் அதை வரவேற்று அதற்கான செலவில் பங்கேற்பதாக மனமுவந்து ஒப்பினர்.

ஒரு மாணவனின் மருத்துவர்களான பெற்றோர், பள்ளி ஒரு டிஸ்பென்சரி போன்ற அறையை ஏற்பாடு செய்து தந்தால், தாங்களே சுழற்சி முறையில் பார்த்துக் கொள்வதாக வாக்கு தர, ஒரே வாரத்தில் அதற்குண்டான ஏற்பாடுகளையும் செய்து தந்துவிட்டாள், நறுமுகை. அந்த கூட்டத்தில் ஒருவராக ஆரவ்-வின் தாத்தாவும் இருந்ததை நறுமுகை கவனித்திருக்க வாய்ப்பில்லாமல் போனது.

இடையிடையே, அவளது சென்னை பிளாட்டின் பக்கத்து வீட்டு பெண்மணி வேறு நறுமுகைக்கு அலைபேசியில் அழைத்து, அவர்களது இல்லத் திருமணத்திற்கு வரவேண்டும் என்று நினைவு படுத்திக் கொண்டே இருந்தார். இன்றும் காலை ஆறரை மணிக்கே அழைத்துவிட்டார். அன்னையின் உடல்நிலை சீராக இருந்தததாலும், வித்யுத்-திற்கு / பள்ளிக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வந்ததாலும், திருமணத்திற்கு சென்னை செல்ல தீர்மானித்தாள்.

ரங்கப்பா வராண்டாவில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அவர் அருகே சென்று, “ப்பா ரமா ஆன்ட்டி பொண்ணோட மேரேஜ் வருது, அவங்க கூப்டுட்டே இருக்காங்க, சோ நாளைக்கு விதுவை கூட்டிட்டு சென்னை போலாம்னு இருக்கேன்பா”, என்றாள்.

“ம்ம், டிக்கெட் ..?”

“இப்போ புக் பண்ணப் போறேன், விதூ….”, சின்னவனை அழைத்தாள்.

“மாம்”, தண்ணீர்க் குழாயை செடியின் அடியில் போட்டு விட்டு விது வர..

“நாளைக்கு சென்னை போறோம் நாலு நாள் லீவ்க்கு, ஓகேவா?”, நறுமுகை கேட்க..

அவனோ ரங்கப்பாவை பார்த்தான், அவர் போ என்பதுபோல தலையசைத்து சம்மதம் தந்ததும், ‘ஹுர்ரே…’ என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தான். வெளியூர் பிரயாணம் என்றால் பிள்ளைகளின் துள்ளலுக்கு கேட்கவா வேண்டும்?, ஆனால் அதற்கு ரங்கப்பா சம்மதம் தேவையா? அவளுக்கு புரியவில்லை. அது மட்டுமல்ல, வித்யுத் பேச ஆரம்பித்ததில் இருந்து, அவள் எதிர்நோக்கியிருந்த ஒரு கேள்வியை இதுவரை அம்மாவிடம் அவன் கேட்டதேயில்லை. இதற்கும் காரணம் தந்தையாகத்தான் இருக்கும் என்று ஒரு ஊகம் நறுமுகைக்கு உண்டு.

ஆனால் விதுவின் அந்த துள்ளல் எல்லாம் மதியம் காணாமல் போனது. பள்ளி உணவு இடைவேளையில் அதிசயமாக  நறுமுகையின் அலுவலக அறைக்கு வந்து நின்ற வித்யுத், “மாம்.. நானும் உங்களோட சென்னைக்கு வரணுமா?”, என்று தயங்கி தயங்கி கேட்க..

வேலை நேரத்தில் அலுவலகத்திற்கு அனாவசியமாக வரக்கூடாது, ஏனென்றால் குடும்பத்தின் சொந்தப் பள்ளி என்று மகனுக்கு கர்வம் ஏற்படக்கூடாதென்பதில் நறுமுகை கவனமாக இருந்ததால் கட்டுப்பாடு விதித்திருந்தாள். வித்யுத்-ம் அதை கடைபிடிப்பவனே, இருந்தும் இன்று இந்நேரத்தில் இங்கே வந்திருப்பது…? அதுவும் இப்படி கேள்வியோடு?  என்ற யோசனையோடு, “ஏன்டா கண்ணா என்ன விஷயம்? காலைல போறோம்னு சொன்னதும் அப்படி குதிச்ச?, இப்போ என்னாச்சு?”

“இல்லமா, நம்ம ஆரவ் இல்ல?, அவங்க வீட்ல அவங்கூட விளையாட ஆளே இல்லயாம், அவங்க தாத்தா எப்பவும் கம்ப்யூட்டரும் விடியோ கேமும் தான் விளையாட சொல்லுவாராம், இல்லன்னா ஸ்விம்மிங் பூல் போவாராம், அதுகூட அவர் free யா இருந்தாத்தானாம். அதனால அவனை தினமும் நம்ம வீட்டுக்கு விளையாட வா-ன்னு சொல்ல நினச்சேன்..”

“ஆனா நாமதான் ஊருக்கு போறோமே?”

“அது..  அங்க எனக்கு போர் தான் அடிக்கும், கல்யாணத்துல நீங்க.. பெரியவங்களா இருப்பீங்க பேசுவீங்க, நான் என்ன பண்ணுவேன்? சோ இங்கயே இருக்கேனே?, நீங்க போயிட்டு வாங்க, நா ரங்கப்பாவையும், மதிம்மாவையும் பாத்துக்கறேன்”, தலை சாய்த்து ஏற்ற இறக்கங்களுடன் மகன் பேசுவதைக் கேட்க சிரிப்புதான் வந்தது.

ஓஹோ.. காலையில் ஹுர்ர்ரே என்றவன் இப்போது வேண்டாம் என்பதற்கு ஆரவ் தான் காரணமா? “ஆனா டிக்கெட் புக் பண்ணிட்டேன்டா”

“அது கேன்சல் பண்ணிடுங்கம்மா”, அவசரமாக வர, அம்மாவின் மறுப்பான புருவச் சுழிப்பைப் பார்த்து சில நொடி யோசனையான பிள்ளை, “இல்லன்னா ஒரு ஐடியா, நாம ஆரவ்-வையும் சேர்த்து கூட்டிட்டு போலாமா?”, என்றான் வித்யுத்.

“அதெல்லாம் வேண்டாம், அடுத்த வீட்டு பசங்களை…? அதுவும் ஆரவ்?”, ஆரவ்-வின் தாத்தா சிடுசிடு முகம் நினைவுக்கு வர, தீர்மானமாக, “நோ”, என்று கத்தரித்து, “த்ரீ ஃபோர் டேஸ் ஊர் சுத்திப் பாக்கறோம், சென்னைல நிறைய இடம் போறதுக்கு பிளான் பண்ணியிருக்கேன். கடைசி நாள்தான் மேரேஜ். அன்னிக்கு நைட்டே வந்துடுவோம். உனக்கு போரடிக்காம நா பாத்துக்கறேன், ஓகே?”

“ம்மா அதில்..ல..மா….”

“விது க்ளாஸுக்கு டைமாச்சு, கிளம்பு”, என்றாள் கட்டளையாக.

மகன் முகம் சூம்பி வெளியில் செல்வதை கண்ணாடி கதவு வழியாக பார்த்தாள். இவனுக்காக கதவின் வெளியே காத்திருந்த ஆரவ்-வுடன் வித்யுத்-ம் சேர்ந்து கொள்ள, இருவரின் முகமும் வாடியவாறே வகுப்புகளுக்கு செல்வதை பார்த்தாள்.

‘வித்யுத் மூன்றாம் வகுப்பு, ஆரவ்-வோ நான்கு, வேறு வேறு செக்க்ஷன், வகுப்புகளும் இவனது ஒரு கோடியில், ஆரவ்-வினுடையது மாடியில், ஆனாலும் எப்படி இருவரும் இத்தனை நட்பு கொண்டனர்? அதுவும் ஒரு நான்கு நாள் பிரிவு கூட தங்கா வண்ணம்? இந்த பிள்ளைகளை புரிந்து கொள்வதென்பது தலையால் தண்ணீர் குடிக்கும் சமாச்சாரம்’, என்ற எண்ணம் மேலோங்க, இடவலமாய் தலையசைத்து அவளது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள், நறுமுகை.

***********************************

Friends,

மல்லிகா மேம் சைட்-ல எல்லா நவரசமும் குடுக்கற பெரிய பெரிய எழுத்தாளர்கள் நிறைய பேர் இருக்காங்க. அங்க.. அப்படிப்பட்ட தளத்துல.. தனிப்பட்ட அடையாளம் இல்லாம ஒரு கதை, அந்த கதைக்காக மட்டும் ஓரளவுக்கு ரீச் பண்ணுமா? -ங்கிற எண்ணத்தின் ப்ரதிபலி தான் எழுத்தாளர் யாருன்னு சொல்லாம கதை குடுக்க முதல் காரணம்.

அடுத்த காரணத்தை கதை முடியும் போது, அநேகமாக பத்தாவது அத்தியாயத்தில் சொல்றேன். உங்கள் அன்புக்கும் ஆதரவும் my heartful thanks to you all.

உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி.. 2k story.

Advertisement