Advertisement

அத்தியாயம் 12 2

ரங்கப்பா சசியோடு பேசிய தினமே மனைவியிடம் அனைத்தையும் தெளிவாக கூறினார். அனைத்தையும் தெரிந்து கொண்ட மதிநாயகிக்கு  மகளின் மேல் வருத்தம் வந்த போதிலும், இப்போது அதை நிவர்த்திக்க வாய்ப்பும் வந்துள்ளதே என்பதில் ஒரு ஆறுதல். கூடுதலாக, “இப்படி ஏதாச்சும் இருக்கும்னு நெனைச்சேன், இல்லன்னா ஒரே பொண்ணு வாழ்க்கைய நீங்க இப்படி அசால்டா விடுவீங்களா? ஆனா சரியா தெரியாம உங்கள திட்டிட்டே இருந்தேன் பாருங்க. நமக்கு எதோ போதாத காலம், கடவுள் கண்ணை திறந்துட்டார்-ன்னு வச்சுப்போம்”, என்று சொல்லி ரங்கப்பாவை திகைப்பில் ஆழ்த்தினார் அவர்.

ஆரவ் பிறந்தநாளிலேயே, அன்று முகூர்த்த நாளாக இருந்ததால் வீட்டில் கட்டிடம் உயர்த்த பூஜை செய்யும் நாளாக ரங்கப்பா ஏற்பாடு செய்தார். காலையில் பூஜை ஹோமம், மாலையில் பிறந்த நாள் கொண்டாட்டம் என்று ஏற்பாடு. அங்கே நறுமுகையின் நெருங்கிய உறவினர்களோடு சகஜமாய் பேசி சொந்தமாகினார் தாமோதர். சசி அதிகம் பேசாமல் ஹாய் யோடு நிறுத்திக்கொண்டான். அவன் கவனம் முழுதும் விது & ஆரவ் விடம்.

பிறந்தநாளுக்கு மகன்கள் இருவருக்கும் ஒன்று போல ஜீன்ஸ் டீ ஷர்ட் நறுமுகை எடுத்திருந்தாள். சசி விது ஆரவ் மூவரும் இயல்பாகவே எவ்வித நெருடலுமின்றி நெருக்கமாக இருந்ததாலும் ஏற்கனவே ஆரவ் பற்றி அவர்களுக்கு தெரிவித்திருந்ததாலும், உறவினர்கள் யாரும் எதுவும் கேள்வி கேட்டு குடையவில்லை, அந்த வகையில் நாகரீகமானவர்களே.

விழா நிறைவாக முடிந்ததும் மாலை சசி அவனது வீட்டுக்கு செல்ல விடைபெற ரங்கப்பாவிடம் வர, அவர் மனைவியின் அறையில் இருந்தார், கூட நறுமுகையும். சசி, மதிநாயகியிடம் சிறிது நேரம் பேசி வீட்டுக்கு கிளம்புவதாக சொல்ல, “ஒரு சில வேண்டுதல் இருக்கு. நீங்க ரெண்டு பேருமா மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் போய் எல்லா சன்னதிக்கும் பட்டு வேஷ்டி புடவை கொடுக்கணும். அதுக்கு நாளைக்கு வல்லிப்பா ஏற்பாடு பண்ணிடுவாரு. அப்பறம் வல்லி போட்டிருக்கிற இந்த சரடு எங்க குலதெய்வம் கோவிலுக்கு காணிக்கையா கொடுக்கனும்”

“ம் சரி ஆன்ட்டி”

“நம்ம ஜூவல்லரி-ல தாலியும் சரடும் வேணும்னு போன் பண்ணி சொல்லிடு வல்லி”, நறுமுகையிடம் சொன்னார் மதிநாயகி.

அவசரமாக.., “இல்ல, நான் பாத்துக்கறேன் ஆன்ட்டி”, சசி.

சசியை ஏறிட்டுப் பார்த்தவர், “ம்ம்”, என்றார்.

திரும்பி பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த ரங்கப்பாவிடம், “அது அப்பா அன்னிக்கே சொன்னார், நாங்கதான் வாங்கணும்னு”, சசி சொன்னான்.

ரங்கப்பா சரி என்பது போல லேசாக தலையசைத்தார், “.. கோவிலுக்கு காலைல ஒரு பத்து பதினோரு மணி போல போனீங்கன்னா, free யா இருக்கும், அங்க அர்ச்சகர் கிட்ட விஷயம் சொல்லி சுவாமி பாதத்துல சரடு வைச்சு கொடுக்க சொல்லுங்க, மேற்கொண்டு என்ன பண்ணணுமோ அவங்களே பண்ணுவாங்க”

“நீங்க வரலையாப்பா?”

“இல்ல, என்னை பொறுத்தவரைக்கும் உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு. அது பொய்ன்னு புத்தி சொல்லுது, ஆனாலும் என் பொண்ணு கல்யாணம் ஆகாம தப்பு பண்ண மாட்டான்னு ஒரு குருட்டு நம்பிக்கை, அது.. அப்படியே இருந்துட்டு போட்டும்”, சில விஷயங்களை அவர் விட்டுக் கொடுப்பதாக இல்லை.

நறுமுகை குற்ற உணர்வுடன் தாயைப் பார்க்க.., “நான் உங்கப்பாவ அனுப்பி வைக்கிறேன்டா, முகத்தை தூக்கி வைக்காத”, என்றார் மகளின் கைபிடித்து ஆறுதலாக.

சசியும் முகம் சுணங்கிதான் இருந்தான். அங்கிருந்த மௌனம் சங்கடமாக இருக்க, இருக்கையில் இருந்து எழுந்து கொண்டவன், “ஓகே நேரமாச்சு, நா கிளம்பறேன். ஆரவ்.. விது.. “, மகன்களை கூப்பிட்டவன்..,  “வந்து பசங்க இன்னிக்கு என்னோட இருக்கட்டுமே?”, என்றான். தினமும் பகல் முழுதும் விதுவோடு இருக்கும் ஆரவ் இரவானதும் சசியோடு அந்த வீட்டுக்கு சென்று விடுவான். இன்று ‘விதுவோடு தான் படுத்துக் கொள்வேன்’ என்று காலையிலே இங்கு வரும்போதே ஆரவ் சொல்லி இருந்தான். சசி கோரிக்கையை வைக்க.. நறுமுகை தன்னியல்பாய் அப்பாவை பார்த்தாள். விது குறித்த முடிவுகள் எல்லாமே அவர்தானே?

“ம்ம்”, ஒற்றை வார்த்தையில் அனுமதி கொடுத்தார் ரங்கப்பா. நாளை இரவு சசி கனடா செல்ல ஏற்பாடாகி இருந்ததும் ஒரு காரணம். பிள்ளைகள் இருவரும் தந்தையோடு புறப்பட துள்ளலோடு தயாராக.. விது, “மாம் நீங்களும் வாங்க, நைட் மதிம்மாவை ரங்கப்பா பாத்துப்பாருல்ல, நாம காலைல இங்க வந்திடலாம்”, என்றான் சலுகையாக.

அவளுக்கும் விதுவை சசியோடு அனுப்பிவைக்க தயக்கம் இருந்தது, அவனுக்கு அம்மா தேவையில்லை என்ற எண்ணம் வந்துவிடுமோ என்ற பயம் மெலிதாக வந்தது. இங்கே இருக்கும்போதும் அவன் எதற்கும் ரங்கப்பாவைத்தானே தேடுவான்? அவளை அல்லவே? இரவு உறங்கும்போது மட்டுமே அவனோடு அவள். சின்னதாய் கதை சொல்லி, அன்றைய தினசரி நிகழ்வுகளைக் கூறி, என்று மகனுடன் இருக்கும் நேரம் அது. முன்பு பள்ளி சென்று வரும்போது அரட்டை இருந்தது. இப்போதோ பள்ளிக்கு விது ஆரவ்-வை கூட்டி செல்வது சசி.

மகனோடுடனான உறவு விரிசல் ஏற்படுமோ என்று அடி மனதில் ஒரு அச்சம். ஆனால் அதற்காக சசி வீட்டுக்கு போவதா? என்ற தயக்கமும் இருந்தது, ஆரவ் எப்போதும் போல விது-வை ஒத்துப்பாட, சசி இவாவை தீர்க்கமாக ஒரு பார்வை.

ஏனெனில், சசி கோரிக்கையாக வைத்த ஒரே விஷயம், ஆரவ். “இவா, அவனுக்கு அப்பாம்மா இல்ல, இத்தனை நாளா அது தெரியாம அவனை வளத்துட்டேன், இனியும் அது தெரியக்கூடாது, பட் எனக்கே தெரியும் இப்போ கேக்கலன்னாலும் இன் ஃபியூ இயர்ஸ், அவனுக்கும் விதுக்கும் சந்தேகம் வரும். அவங்க டேட் ஆப் பர்த் பத்தி யோசிச்சாங்கன்னா நிச்சயமா கேள்வி வரும். அப்போ ஆரவ் பத்தி சொல்லலாம்னு இருக்கேன். ஆனா, அவன் என்னை தள்ளி நிறுத்தினா. தட் வில் பி ஹார்ட் ஃபார் மீ”, புரிந்ததா என்பது போல நறுமுகையை பார்த்து..

“அதுக்காக தப்பு பண்ணினா கண்டிக்கிறது, அடிக்கிறது அதெல்லாம் கூடாதுனு சொல்லல, ஜஸ்ட் விது மாதிரி அவனை ட்ரீட் பண்ணு, அவ்ளோதான்”

இவன் சொல்லவேண்டிய அவசியமின்றி நறுமுகைக்கு தானாகவே ஆரவ் மீது பாசம் ஏற்பட்டிருந்தது, அவன் சந்த்ருவின் மகன் என்று தெரிவதற்கு முன்பே சென்னை செல்லும்போது கூட வந்ததால் அவனது நடை உடை பாவனைகள், விருப்பங்கள் அனைத்தும் அவளுக்கு அத்துப்படி. இப்போதோ ஷீத்தல் பற்றி தெரியவர, தாய் அருகாமையே அறியாதவன் அல்லவா என்று மனதளவில் ஆரவ் இன்னமும் நெருங்கி இருந்தான். தவிர இரண்டு வருடங்கள் முன் வரை கனடாவில் சசியின் பொறுப்பில் இருந்தவனாயிற்றே? அப்படியே அவனது பழக்கங்கள் இவனில் ஊறியிருந்தது. அவளை பொறுத்தவரை விது வாழ்க்கை என்றால் ஆரவ் வரம்.

“டோன்ட் ஒர்ரி, அவன் இங்க வந்ததும் ஆட்டோமேடிக்கா ரங்கப்பா கிட்ட கண்ட்ரோல் போயிடும், அவர்தான் விதுக்கு ஃபிரண்ட், பிலாஸஃபர், கைட் எல்லாம், சோ விது மாதிரி ஆரவ் வும் அவர்க்கு பழகிடுவான்”, என்றிருந்தாள்.

இப்போது விதுவோடு ஆரவ்-வும் நறுமுகையை வீட்டுக்கு கூப்பிட்டதும் சசி அவளை கூர்மையாக ‘என்ன செய்ய போறா?’, என்பதுபோல பார்த்தான். சின்ன தயக்கமிருந்தாலும் பிள்ளைகளுக்காக அவளும் சசியோடு புறப்பட்டாள்.

அங்கு சசியின் வீடு வாசலில் இவர்கள் நான்கு பேரையும் நிற்க வைத்து, தாமோதர்  சமையல் செய்பவரின் மனைவியை வைத்து இவர்களுக்கு ஆரத்தி சுற்றி வரவேற்றது, நறுமுகைக்கு நல்ல சகுனமாக பட்டது.

இருள் மெல்லிய போர்வையாக பூமியை வளைத்த நேரம். வீட்டுக்குள்ளே சென்றதும், ஆரவ் & விது நீச்சல் போகவேண்டும் என்று அடம் பிடிக்க, “காலைலேர்ந்து ஒரே ஆட்டம், நைட்டாக போகுது வேண்டாம்”,  என்று நறுமுகை தடுத்தும் இருவரும் கேட்கவில்லை, “அங்க ஸ்விம்மிங்பூல் சுத்திலும் பளீர்னு லைட் இருக்கு மாம்”, ஆரவ். அவனுக்கு மேம் மாம் இரண்டும் மாறி மாறி வருகிறது. “எஸ் மாம் ப்ளீஸ் ப்ளீஸ்…”, விது.

“ம்ம் சரி பட் பி கேர்ஃபுல்.”, என்ற சொன்னதுதான் தாமதம், வராண்டாவில் இருந்தே, “டாட் நாங்க வாம் அப் பன்னிட்டு இருக்கோம், டவல் எடுத்திட்டு வந்துடுங்க”, சசிக்கு சொல்லினர்.

“ஓ…க்கே, ஓகே, பட் நா வராம உள்ள இறங்க கூடாது”, கண்டிப்பாக சொன்னவன் மாற்றுடை எடுக்க அவனது அறைக்கு விரைந்தான். நீச்சல் குளம் சிறுவர்களுக்கானதுதான் ஆழம் அதிகமில்லை ஆனாலும், விது நீச்சலுக்கு புதியவன் அல்லவா?  ஆரவை கூட தனியே அனுப்ப மாட்டான்.

நறுமுகை ஹாலுக்கு வர.. தாமோதர், “நைட் டிஃபன் என்ன பண்ணனும்னு மணி கிட்ட சொல்லிடு வல்லி”, என்றார்.

“எப்போவும் என்ன பண்ணுவாங்க அங்கிள்?”

“ஜெனெரலா இட்லி, தோசை, சப்பாத்தி ரொட்டி, தால் ப்ரை, ஏதாவது சாலட் இருக்கும், எனக்கு அங்க விருந்து சாப்டதே டொம்னு இருக்கு, கூடவே சாயங்காலம் கேக் கூல் ட்ரிங்க்ஸ் வேறயா? மோர் மட்டும் போதும்னு தோணுது, உங்களுக்கு என்ன வேணுமோ பாத்து..”

“ஸார்..”, குக் மணி.

“என்ன வேணும்னு அம்மா சொல்லுவாங்க, பாத்துக்கோங்க, எனக்கு ஒரு மணி நேரம் பொறுத்து ஒரு க்ளாஸ் மோர்”, என்று சொல்லி உடை மாற்ற அவர் அறைக்கு சென்றார்.

“இட்லி சாம்பார் ரெடி பண்ணி ஹாட் பேக்-ல வச்சிடுங்க”, இலகு சாப்பாடு தயாரிக்க சொன்னாள்.

“சரிங்கம்மா”, மணி சென்று விட..

சசி இடுப்பில் துண்டோடு கையில் மாற்றுடையும் எடுத்துக்கொண்டு அவனது அறையிலிருந்து வந்தான். தாமோதரும் நைட் சூட்டிற்கு மாறியிருந்தார். “இவா-க்கு ரூம்ஸ் காமிங்கப்பா”,என்று விட்டு நறுமுகையிடம், “நீ நம்ம ரூம்ல சேன்ஞ் பண்ணிட்டு ரெஸ்ட் எடு இவா”, சொல்லி அவசரமாக சென்றான்.

நறுமுகை இந்த வீட்டிற்கு முன்பே வந்திருந்தாள்தான், ஆனால் எது.. யார் அறை, வீட்டின் அமைப்பு அதுவும் தெரியாதே?, தாமோதர் உதவினார்.

வீட்டைப் பார்த்து விட்டு, சசியின் அறைக்கு போக… அவன் சொன்ன நம்ம ரூம்,  ரூ…….ம் மாக இருந்தது. வில்லா டைப் வீடு அல்லவா? ஃபிரெஞ்ச் விண்டோ, கிங் சைஸ் ? இல்லை அதையும் விட பெரிய கட்டில், ஆர்டர் செய்து வாங்கி இருப்பான் போல, மெத்தையில் உக்கார்ந்தால், புதைந்தே போகுமளவுக்கு நுரைபோல் இருந்தது. அங்கிருந்து பார்த்தால் நீச்சல் குளம் தெரிந்தது. மூவரும் விளையாடிக் கொண்டிந்தனர். கண்ணை உறுத்தாத மெலிதான வெளிச்சமும், தொடுதிரை டிவி, bosh ஹோம் தியேட்டர் என்று அமர்க்களமாகவே இருந்தது. மொத்தத்தில் அவனது ரசனைகேற்ப இருந்தது அவன் அறை (வீடும்).

ஆனால் நறுமுகையால் அதில் ஒன்ற முடியவில்லை. இதை, இந்த வசதியை விட்டு அங்கே நம் வீட்டுக்கு தாமோதர் வருவாரா? ஆரவ் இருந்து கொள்வான் பிரச்சனையில்லை, சசி..? ‘அடச்சே, இதென்ன புது தலைவலி?’, என்று தோன்றியது.

மெத்தையில் அமர்ந்திருந்தவள் எப்போது தூங்கினாளோ அவளுக்கே தெரியாது, காலையில் இருந்து கட்டிட துவக்க பூஜை, ஆரவ் பிறந்தநாள் கொண்டாட்டம் வேலை சுற்றியடித்ததால், அலுப்பில் அப்படியே தூங்கிப் போனாள். மகன்கள், சசி விளையாடிவிட்டு வந்ததோ, உணவுண்டதோ வந்து அதே மெத்தையில் படுத்ததோ தெரியாத அளவு தூக்கம்.

அப்போதும் கனவு..”மாம் ஷால் ஐ ஸ்டே வித் டாட்?”, விது கேட்டான். நறுமுகை உலுக்கி பிடித்து எழுந்…, எழ முடியவில்லை, சசி அவளை அணைத்தபடி உறங்கியிருந்தான். அவனை அடுத்து விது, ஆரவ். நறுமுகையின் உலுக்கி எழுந்த அசைவில், பாதி தூக்கத்திலேயே அரைக்கண் திறந்து, “வெல்கம் ஹோம் இவா”, என்று முனகிவிட்டு இன்னமும் வசதியாக அவளைக் கட்டிக்கொண்டு தூங்கிப் போனான், சசி.

இவளுக்கு தூக்கம் ?, மொட்டு மொட்டு என்று அசையாமல் விழித்திருந்தாள். “அவ்ளோதானா? இத்தனை நாளா இருந்த மெண்டல் அகோனி, லோன்லின்ஸ்  எல்லாமே முடிஞ்சதா? இனி இதான் லைஃப்-ஆ? ஆனா ஒரு சந்தோசம், ஜாய்..?  ஒண்ணுமே தோண மாட்டேங்குதே? என்னோவோ கம்ப்ளீட் ஆகாத ஃபீல்.., எதனால?”

‘சசி ஈஸியா அக்சப்ட் பண்ணினா மாதிரி ஏன் என்னால எடுத்துக்க முடில? என்ன என்னை குழப்புது?… இவனில்லாம இருந்த இந்த ஒன்பது வருஷமா? அப்பா திட்டினதா? சித்தி மாமல்லாம் எனக்காக புலம்பினதா? நவநீத், பிரதீப் யாருன்னு சொல்லு, கண்டுபிடிச்சு இழுத்துட்டு வர்றோம்’ ன்னு சத்தம் போட்டதா? வேலையும் வீடும் விதுவும்னு நா சுருங்கிப்போனதா? எது? எது குழப்புது? இப்போ எல்லாம் மேஜிக் மாதிரி திடீர்னு சரியாப்போச்சுன்னு ரெண்டு பேரும் சேர்ந்திருங்க-ன்னு சொன்னா எப்படி?’

“தோ.. கட்டிட்டு படுத்திருக்கான், இவனை இன்ச் இன்ச் சா தெரியும், அன்னிக்கு உறவே இல்லாம எந்த சம்பந்தமும் இல்லாம, இவனோட இருந்தேன். இப்போ எங்க ரிலேஷன்ஷிப்க்கு சாட்சியா விது இருக்கான், ஆனா மரக்கட்டை மாதிரி இருக்கேன் , சசி சொன்னானே லவ் இருக்கா தெரிலன்னு.. இனிமே வருமா?’, என்று இதையும் அதையும் சிந்தித்து தெளிவு காண முடியாமல் விடியும் நேரம் அசந்து கண் மூடினாள்.

மறுநாள் கோவிலில் மதிநாயகி சொன்ன வேண்டுதல்களை குடும்பத்தோடு சென்று நிறைவேற்றியதில் பாதி நாள் சென்றிருந்தது. முதலில் டெக்ஸ்டைல்ஸ் சென்று பட்டு வாங்கி, ஜூவல்லரி சென்றது, பின் கோவிலில் அர்ச்சனை etc .. கடைசியாக அர்ச்சகர், ஈஸ்வரனின் பாதத்தில் வைத்து பூஜை செய்த திரு மாங்கல்யத்தை சசியிடம் தந்து நறுமுகைக்கு அணிவிக்குமாறு சொல்ல, அவன் மூண்று முடி போட்டு மங்கள நான் பூட்டினான். அர்ச்சகர் தந்தது மஞ்சள் கயிற்றாலான மாங்கல்யம். அடுத்து இவர்கள் நகைக்கடையில் வாங்கிய சரடையும் அவர் தர, அதையும் நறுமுகையின் கழுத்தில் மாலையாக அணிவித்தான்.

இதை கைதட்டி ஆர்ப்பரித்தது விது & ஆரவ் என்றால்.., அட்சதை போட்டு ஆசிர்வதித்தது, தாமோதர், சித்தி தில்லைநாயகி, சித்தப்பா, மாமா, அவர் மனைவி அனைவரும் (ரங்கப்பா வரவில்லை, அவருக்கு பதிலாக அனைவரையும் வர வழைத்திருந்தார்). மற்றவர்களுக்கு இங்கு நடந்தது மதிநாயகியின் வேண்டுதல், ஆனால் சசிக்கும் இவாவிற்கும் திருமணம். நிஜமான திருமணம். சசி நறுமுகை இருவருக்குமே அவர்களது அலைப்புறுதல்கள் கொஞ்சம் அடங்கி மனம் அமைதியானது போல இருந்தது.

பின் உறவுகள் அனைவரும் ஹோட்டல் சென்று விருந்து முடித்து, ரங்கப்பா வீட்டிற்கு சென்று அவர்களிடம் ஆசி பெற்று, அவனது வீடு செல்ல மாலை ஆனது. பின் சசி எட்மாண்டன் போக பேக்கிங்,

‘எப்ப வருவீங்க டாட்?’,

‘3 மந்த்ஸ் ல’

‘எனக்கு கன்பார்ம் டேட் சொல்லுங்க’,

‘அவங்க ரிலீவ் பண்ணின உடனே சொல்றேன்’

‘வீக்லி போன் பண்ணனும், சண்டே காலைலயே…?’

‘ஓகே?’, பிள்ளைகளின் கேள்விகள், கேள்விகள்.. சசி, “இந்த சூட்கேஸ் இழுத்திட்டுட்டு போய் ட்ரைவர்ட்ட குடுத்து டிக்கில வைக்க சொல்லி, கார்ல உக்காருங்க, கமான் குவிக்”,  என்று சொல்லி அவர்களை அனுப்பும் வரை ஓயவேயில்லை.

அவர்கள் அறையை விட்டு சென்றதும், மனைவியை ஆரத்தழுவிக் கொண்டான். எதிர்பாராத சசியின் இந்த செயல் முதலில் தடுமாற்றம் தந்தாலும், பின் ஒருவாறு சமாளித்து நின்றாள் நறுமுகை. “ஐ வில் மிஸ் யூ டெரிப்லி.. மிஸ் யூ ஆல்”, என்றான். பின் வி. நி. சென்றது, ஆரவ் + விது கண்ணீரோடு சசியை வழியனுப்பியது, செக் இன் செய்யும் கடைசி நொடி, நறுமுகையின் கையை இறுக்கிப் பிடித்து, “சீக்கிரம் வந்திடுறேன்”, என்று சொல்லி விடை பெற்றது, எல்லாம் நடந்தது. அந்த நொடி.. அவளது சசியின் ஒரு ஹக் அண்ட் கிஸ்-ஸை, நறுமுகையின் அனைத்து செல்களும் கேட்டது மறுக்க முடியாத, அவளுக்கு மட்டுமே தெரிந்த நிஜம்.

 

Advertisement