Advertisement

அத்தியாயம் 11 2

இரவு வந்தது, பிள்ளைகள் இருவரும் வீட்டுப்பாடத்தை முடித்து உணவு உண்டு தொலைக்காட்சியின் முன் அமர்ந்து கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பா அம்மா சாப்பிட்டாயிற்று. அம்மாவிற்கு இரவுக்கான மருந்து கொடுத்து அவருக்கு பிடித்த பழைய பாடல்கள் அறையில் ஓடிக்கொண்டிருந்தது. அப்படியே பாடல்கள் கேட்டுக் கொண்டே உறங்கி விடுவார். நடுவே ஏதேனும் தேவைப்பட்டால், அவர் கை எட்டும் தூரத்தில் ஒரு பஸ்ஸர் இருக்கும், அழுத்தினால், வீட்டின் எல்லா இடத்திலும் சப்தம் கேட்கும்.

அம்மாவிற்கு போர்வை போர்த்திவிட்டு அவர் அறையிலிருந்து வெளியே வந்த நறுமுகைக்கு பசியில்லை, பதட்டம் இருந்தது, அப்பா என்ன பேசுவார்? எப்படி பேசுவார் தெரியுமே?சசியும் பேச்சில் சளைத்தவனில்லையே? சுருக்கென பேசுவதில் இருவருமே டாக்டரேட்.

சசி அவனது பைக்-ல் வந்து இறங்கினான்.”வாங்க”, என்று அழைத்த ரங்கப்பா, “வல்லி”, என்று குரல் கொடுத்தார்.

வீட்டில் இருந்து வெளியே வந்த நறுமுகை, வா என்பது போல தலையசைத்தாள். ரங்கப்பா அவளை நிமிர்ந்து பார்த்த பார்வையில் கண்டனம் இருந்தது. தானாக “வா…ங்க சசி”, வந்தது.

“ஹலோ ஸார்”, அவனது சின்ன சம்பிரதாய சிரிப்பில் தயக்கம் + அசவுகரியம்.

“குடிக்க சூடா பால் எடுத்துட்டு வா வல்லி”, மகளை உள்ளே அனுப்பினார்.

“ம்ம்”, முன்புற தோட்டத்தில் இருவரும் அமர்ந்து கொள்ள வசதியாக வட்ட டேபிளோடு இருக்கைகள் இருக்க, அப்பா சசியை அங்கே அழைத்துச் சென்றார்.

“உக்காருங்க”, ரங்கப்பா.

“விது ஆரவ் எங்க?”

“டிவி பாத்துட்டு இருப்பாங்க, கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடலாம்”

“யா.. “, ஆமோத்திப்பாக தலையசைத்து, “சொல்லுங்க அங்கிள், என்கிட்டே பேசணும்னு சொன்னீங்களாம், இவா சொன்னா”

“ம்ம். உங்களுக்கு இன்னும் எத்தனை நாள் லீவ் இருக்கு?”

“லீவ் ஒன் வீக் எக்ஸ்ட்டெண்ட் பண்ணியிருக்கேன், ஒரு நாள் முன்னாடியே அங்க ரீச் ஆனாத்தான், ஜெட் லாக் இல்லாம இருக்கும், அண்ட் நெக்ஸ்ட் டே-க்கு பிளான் பண்றதுக்கு ஈஸியா இருக்கும். சோ, ஒரு 3 டேஸ்  இருப்பேன். டிக்கெட்ஸ் அரேன்ஜ் பண்ண சொல்லி இருக்கேன், வந்தாத்தான் தெரியும்”

“இப்ப எங்க இருக்கீங்க? எப்ப இந்தியா வருவீங்க?”

” எட்மான்டன்-ல இருக்கேன், வரணும்னு தான் இருக்கேன். பட் கொஞ்சம் எக்ஸ்பான்ஷன் நடக்குது, இங்க இந்தியா ஹெட் ஆபிஸை திருச்சிக்கே கொண்டு வர்ற ஐடியா இருக்கு, மாக்சிமம் மூணு மாசத்துல வந்துடுவேன்”

“உங்க விஷயத்தை விது  & ஆரவ் கிட்ட நீங்க சொல்லறீங்களா? இல்ல நா சொல்லட்டுமா?”

“ம்ம்”, சில நிதி யோசித்து, “நாங்களே சொல்றோம், இன்னிக்கி இல்ல நாளைக்கு.. ”

“உங்கப்பா கிட்ட பேசினேன். அவர் இங்க நம்ம வீடு பக்கத்துல வீடு மாத்திட்டு வர்றேன்ன்னு சொல்லி இருக்கார், இல்லன்னா இங்கயே இன்னொரு மாடி எடுத்து கட்டிடலாம்னு ஐடியா இருக்கு”.

“ஓஹ்…?, அப்பா இதெல்லாம் சொல்லலியே?”

“நாங்க பேசும்போது சொன்னார். எப்படியிருந்தாலும் வல்லி இங்க தான இருப்பா..”

“சரீ..?”

“ஆரவ்-வையும் இங்க கூட்டிட்டு வந்துடலாம்னு இருக்கோம். நீங்க வந்தா நீங்களும் இங்க இருக்க வேண்டி இருக்கும், அப்ப உங்கப்பா தனியா பீல் பண்ண கூடாதில்ல?”

‘ஆரவ் இங்க, நான் இந்தியா வந்தா இங்க.. அப்போ அப்பா? அவர் மட்டும் வேற இடத்திலயா?’, யோசித்தவன்.., “இதெல்லாம் யாரை கேட்டு டிசைட் பண்ணினீங்க?”, சற்றே அழுத்தமான குரலோ?

‘நானும் உங்கப்பாவும் ‘, என்று சொல்ல வந்தவர்.., அவனது அதிகாரக் குரலில் ரங்கப்பாவுக்கு சினம் துளிர்த்தது. “யாரை கேக்கணும்? உங்கப்பாவேதான் இந்த ஐடியா சொன்னார். எது எப்படியிருந்தாலும் விது என் கண் பார்வைலதான் இருக்கணும். ஆரவ்-க்கும் அதே வயசு, ரெண்டு பேரும் நல்ல க்ளோஸ்-ங்கிறதால அவனும் இங்க இருக்கட்டும், அவங்களாவது உங்களை மாதிரி ஆகாம..”

உடனே குறுக்கிட்டு.. “என்ன எங்களை மாதிரி ஆகாம..? நாங்க எதுல அங்கிள்  கம்மியாயிட்டோம்? இல்ல தெரியாமத்தான் கேக்கறேன், எங்கப்பாவும் இதேதான் சொன்னார், ஒரே ஒரு தப்பு.., அது கூட எனக்கு தெரிஞ்சிருந்தா அப்போவே சரி பண்ணியிருப்பேன்”, புருவம் சுருக்கி கண்கள் இடுங்க அவரிடம் பேசினான். ரங்கப்பாவிற்கு பின்னால் ட்ரேயில் இரண்டு கப் பாலுடன் நறுமுகை டென்ஷனாக நின்றிருந்தாள்.

“அப்ப கூட தப்பை சரி பண்ணியிருப்போம்னு சொல்லறீங்களே தவிர, தப்பு பண்ணாம இருக்க மாட்டீங்க?”

“அங்கிள் நீங்க ப்ரொவோகேட்டிவ்-வாவே பேசறீங்க, well, என்னோட ஸ்டாண்ட்-டை தெளிவா சொல்லிடறேன். அப்போ நான் இவாவை மேரேஜ் பண்ணிக்கறதா இருந்தேன், வி வேர் டீப்லி இன் லவ். அப்படியிருக்கும்போது நாங்க ஒண்ணா இருந்தது எனக்கு தப்பா தெரில, அஃப்கோர்ஸ் அதுக்கப்பறம் எங்களுக்குள்ள சரியான புரிதல் இல்ல.  Suppose, நான் இங்க இருந்திருந்தா, அல்லது எனக்கு வேற ப்ராப்ளம்ஸ் வராம இருந்திருந்தா எங்க மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்-கை நாங்களே சரி பண்ணியிருந்துருப்போம்”

“அதைத்தான் நானும் சொல்றேன். நீங்க ரெண்டு பேருமே பொறுமை இல்லாதவங்க, quick decision makers , நீங்கன்னு இல்ல இந்த ஜெனெரேஷன் எல்லாருமே அப்படித்தான் இருக்கீங்க..”

“அங்கிள், நாங்க.. பர்டிகுலரா எங்க ஜெனரேஷன் வேகமா முடிவெடுக்கறவங்கதான். அண்ட் ஹுரிஸ்டிக் டூ. எங்களுக்கு சரின்னு தோனறத நாங்க செய்யறோம், எஸ்,  பட்.ட்டுதான் தெரிஞ்சிக்கறோம், நீங்க சொல்லி.. நாங்க அதை இம்ப்ளிமென்ட் பண்றதுங்கிறதை விட நாங்களே ப்ராக்டிகலா பாத்து புரிஞ்சி மேல வர்றோம், இதுனால தான் நாங்க சக்ஸஸ்ஃபுல்லா இருக்கோம்”.

“define சக்ஸஸ்..”, வெட்டினார் ரங்கப்பா.

“வாட்..?”

“சொல்லுங்க சசி, எதை நீங்க வெற்றின்னு சொல்லறீங்க? பணம்? அந்தஸ்த்து? உங்க வேலைல நீங்க அடைய முன்னேற்றம்? எது சக்ஸஸ்?”

“அது..  ஆளுக்கு ஆள் மாறுபடும், சிலருக்கு நல்ல family, சிலருக்கு நல்ல job, சிலருக்கு பதவி, பொருளாதாரம். எங்களுக்கு.. எனக்கு எல்லாமே”.

“சரி, நீங்க எடுத்த வேகமான முடிவுகள்னால எல்லாமே கிடைச்சதா?”

சசி, இருக்கையின் பின் சாய்ந்து அமர்ந்து தனது கைகளைக் கோர்த்துக் கொண்டு நறுமுகையை ஒரு நொடி பார்த்து ஒரு வித தீர்மானத்தோடு ரங்கப்பாவோடு பேச ஆரம்பித்தான். “க்கும். எப்பவாவது எங்க முடிவுகள் தப்பா இருக்கும், இவா விசயத்துல நா தப்பு பண்ணினா மாதிரி. ஆனா எல்லாமே தப்பு தப்பா முடிவெடுக்கறோம்னு சொன்னீங்கன்னா நா ஒத்துக்க மாட்டேன்”

“நீங்க அவசரமா முடிவெடுக்கறோம்ன்னு சொல்ற விஷயம்தான் எங்களை நாங்களா நிக்க வைக்குது, எங்களோட வேகம்தான் எங்க பலம். நாங்க வேகமா இல்லன்னா, எங்களை விட வேகமா இருக்கறவன் எங்களை தூக்கி சாப்டுட்டு போயிடுவான். எங்க தலைக்கு மேல கத்தி எப்பவும் தொங்கிட்டு இருக்கும், வேலைல சுணங்கினா, சரியா பண்ணலைன்னா அடுத்த நிமிஷம் எங்க சீட் காலி, அந்த பிரஷர் எங்களுக்கு எப்போவும் உண்டு, அதை ரிலாக்ஸ் பண்ணத்தான் பப், வீகென்ட் டூர், ஸ்டாண்ட் அப் காமெடி ஷோஸ்.. “, என்றவன்…

“யார் தப்பு பண்ணல? எங்க ஜெனெரேஷன் மட்டும்தான் தப்பு பண்ணுதா?”, என்று ரங்கப்பாவைப் பார்த்து கேட்டு,

“என்ன..? நாங்க பண்றத தெளிவா எல்லாருக்கும் தெரியறா மாதிரி பன்றோம், அதான் பிரச்சனை. ஏன்னா எங்களுக்கு யாரைப் பாத்தும் பயமில்லை, நாங்க சுயமா எங்க கால்ல நிக்கறோம். இவ்ளோ சொல்ற நீங்க.. எங்க சின்சியாரிட்டி, டெடிகேஷன், டிசிப்பிளீன் அதெல்லாம் சொல்ல மாட்டீங்க, ஒரு தப்பு பண்ணினா அத மட்டும்..”, சசியின் முகம் வெகுவாக சிவந்திருந்தது. அங்கே அவனது வீட்டில் அப்பா தாமோதர் கொடுத்த திட்டு + இடி.. இங்கே சரவெடியாக அவனை வெடிக்க வைத்தது.

சசியின் முகம் பார்த்த ரங்கப்பா கொஞ்சம் தணிந்தார். “ஓகே விடுங்க, நடந்து முடிஞ்சிடுச்சு அத பத்தி பேச வேணாம். ஆனா விதுவை விட்டு.., எனக்கும் மதிக்கும்…”, சில நொடி விட்டு, “வல்லி இல்லாமக்கூட நாங்க இருந்துடுவோம், அவனை பாக்காம அவனோட பேசாம முடியாது, அப்படி பழகிட்டோம். நீங்க இந்தியா வாங்க, அதுக்குள்ள உங்களுக்கு மாடில வீடு ரெடியாயிடும். அதுவரைக்கும் இப்படியே போயிட்டு வந்திட்டு இருக்கோம்”, என்றார்.

ரங்கப்பா இப்படி முதலிலேயே விளக்கி சொல்லியிருந்தால் இத்தனை பேச்சு தேவையிருந்திருக்காதே என்று சசிக்கு தோன்றியது.

Advertisement