Advertisement

ப்ரீத்தி ரேணுவோடு கீழே வரவும் “மாப்பிள்ளை எங்க ப்ரீத்தி அவரையும் கூட்டிட்டு சாப்பிட வா” என்று ஆதிக்கு உணவை ஓட்டிக்கொண்டு இருந்த வசுமதி கூறவும், 

‘சரிம்மா’ என்று தலை அசைத்தவள் கீழே எங்கும் விஷ்வா இல்லாததை கண்டு அவனுக்கு அழைத்தாள்.., 

‘தேவ் எங்க இருக்கீங்க..??’

‘எதுக்கு நீ கேட்கிற..??’ 

“எதுக்கா..?? டைம் என்ன ஆச்சு டின்னர் ரெடி சாப்பிட வாங்க”

‘வர முடியாது போடி’ என்று அழைப்பை துண்டிக்க, 

‘போடி’ என்றதில் அவன் பிடிவாதம் புரிய புன்னகையுடன் அவனை தேடி சென்றாள்.

எதிரே குழந்தைகளுடன் வந்த எழில் அவள் அவசரமாக செல்வதை கண்டு, ‘ப்ரீத்தி எங்க அவசரமா போற..??’ என்றான்.

‘மாமா நீங்க வெளியே தேவ் பார்த்தீங்களா..?? அவரை தான் தேடிட்டு இருக்கேன்”

‘வெளியேவா இல்லையே.., நான் பார்க்கலையே ப்ரீத்தி ஆனா கடைசியா நான் கிளம்பினப்போ சரணும் அவனும் பேசிட்டு இருந்தாங்க’

‘எங்க மாமா..??’ 

“மாடில தான் எல்லாரும் இருந்தோம் அவனுங்க இன்னும் இறங்கலையா..??” என்று ப்ரீத்தியையே கேட்க, 

“கீழ எங்கயும் இல்ல மாமா அப்படி தான் இருக்கனும் இருங்க நான் போய் பார்க்கிறேன்” என்றவள் உடனே மாடிக்கு  சென்றாள். 

அங்கு விஷ்வா மும்முரமாக சரணுடன் பேசிக்கொண்டு இருந்தான். இருவரும் எதிரெதிரே நின்று பேசிக்கொண்டு இருந்ததில் சரண் பின்னே வந்து நின்ற ப்ரீத்தியை பார்த்தவன் பார்க்காதது போல சரணுடன் பேசிக்கொண்டே செல்ல, 

கைபேசியில் எதோ சுட்டி காட்டி கொண்டிருந்த சரண் தன் பின்னே அரவத்தை உணர்ந்து  திரும்பியவன் , ‘என்ன ப்ரீத்தி’ என்று கேட்டிட அவள் பார்வை விஷ்வா மீது இருப்பதை கண்டு,

“சரி விஷ்வா நான் கிளம்புறேன் அப்புறம் பேசலாம்” 

“இல்லல்ல சரண் டின்னர் ரெடி ஆகிடுச்சி அதை சொல்ல தான் வந்தேன் நீங்க பேசி முடிச்சிட்டே வாங்க நோ ப்ராப்ளம் நான் கீழே போறேன்” என்று திரும்பி நடந்தவள் மாடியின் ஆரம்பத்தில் சென்று ஒரு நொடி நின்று திரும்பி விஷ்வாவை பார்த்தாள்.  

அவள் பார்வை உணர்ந்தார் போல அவனும் இப்போது கைபேசியில் இருந்து தலை உயர்த்தி  ‘என்ன’ என்பதாக  புருவம் தூக்கி வினவ ,

‘சாப்பிட வாங்க’ என்று அவனுக்கு சைகை செய்து அழைத்தாள்.

அவனோ ‘போடி’ என்று வாயசைத்து விழிகளாலே அவன் மறுப்பை தெரிவிக்க ப்ரீத்தி முகத்தில் புன்னகை அரும்பியது.

கீழே இறங்கியவளை எதிரே வந்த கீர்த்தி, “அலர் சொன்னது நிஜமா ப்ரீத்தி..?? ” என்று பிடித்து கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்க தொடங்கியவள்,

“இன்னுமா நீ அத்தான் கிட்ட லவ் சொல்லலை” என்றவள் “நீ எவ்ளோ போல்ட்டா இருப்ப இப்போ என்னாச்சு உனக்கு..?? அலர் கிட்ட யோசனை கேட்டியாமே..??” என்று கேட்டவள் என்னால நம்பவே முடியலை என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே அங்கு வந்த அலர், 

‘அது நிஜம் தான் நம்பு கீர்த்தி’ என்றாள்.

எப்படி..??

‘ஒருத்தங்க மேல நமக்கு அதீதமான அன்பு இருந்தா அதனாலேயே நமக்கு சில நேரம் வார்த்தை வராம போகும் யோசிக்க முடியாம திண்டாடுவோம்… நானே அப்படி இருந்திருக்கேன் என்று கூற ப்ரீத்தி கீர்த்தி இருவரும் அவளை வியப்புடன் பார்க்க,

“ஆமா எனக்கும் அப்படி ஒரு நேரம் வந்தது..!! அப்போ மாமாவை தாண்டி என்னால யோசிக்க முடியலை அப்போ என்ன பண்றதுன்னு புரியாம குழம்பி இருந்த நான் கடைசியா தாமரை கிட்ட போய் நின்னு ஏதாவது யோசனை சொல்லுடின்னு  அவளை கேட்டு அதுக்கு அவ என்னை திட்டி அதை பார்த்து வெற்றி அண்ணா கோபப்பட்டு எனக்காக அவளை திட்டி அப்புறம் அவ அழுது,  கீழ விழப்போய் அதுக்கு மாமா அண்ணாவை அடிச்சின்னு எங்கயோ ஆரம்பிச்ச பேச்சு கடைசில  அடிதடில முடிஞ்சது” என்றவள் கீர்த்தியிடம், 

‘ஏன் நீ கூட அப்படி தானே இருந்த மறந்துட்டியா..??’ என்று கேட்க,

‘அதை எப்படி மறக்க முடியும் அலர்..?? மாமாக்கு நல்லதுன்னு யோசிச்சி, சரியா பேசுறதா நெனச்சி தப்பு தப்பா பேசி சொதப்பி அவர்கிட்ட எவ்ளோ திட்டு வாங்கி இருப்பேன்…’  என்று கூற, 

“அதே தான் இப்போ உங்க அக்காக்கும்” என்று ப்ரீத்தியை பார்த்தவள், “ஆமா அப்போ நீயும் திட்டு வாங்கினியா..??” என்று கேட்க,

வரும் வழியில் விஷ்வா கூறியதும் பாடிய பாடலும் நினைவு வர அவன் கோபத்தில் சட்டென சிரித்து விட்டாள்.

“என்ன சிரிக்கிற..?? இன்னும் வாங்கலையா..??அப்போ கூடிய சீக்கிரம் வாங்குவ ஆல் தி பெஸ்ட்” என்று இருவரும் கிளம்பினர்.

இன்னும் விஷ்வா வராததை உணர்ந்தவள், “ஹப்பா பாட்டி சொன்னது சரி அப்படியே தாத்தா மாதிரி  என்ன ஒரு பிடிவாதம்..??” என்றவாறே ப்ரீத்தி மேலே செல்ல முற்ப்பட அதே நேரம் சரண் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான்.

அவனுக்கு வழி விட்டு நின்ற ப்ரீத்தி சரண் செல்லவும் உடனே மாடிக்கு விரைந்தாள். 

அங்கு விஷ்வா கைபேசியில் பேசியவாறே நடந்து கொண்டிருந்தான்.

அவன் முன்னே சென்று நின்றவள் ‘சாப்பிட வாங்கன்னு சொன்ன அப்புறமும் இது என்ன பிடிவாதம்..??’ என்று மெல்லிய குரலில் கேட்டவள் 

‘வாங்க’ என்று அவன் கையை பிடித்து இழுக்க முற்படவும் அவனை தொட்ட மறுநொடியே அவன் இழுத்த இழுப்பில் அவனை மோதி நின்றிருந்தாள்,

‘நீங்க சொல்லுங்கப்பா’ என்று ப்ரீத்தியை பார்த்தவாறே அவன் கூறவும்,

‘அச்சோ மாமாவா..??’ என்று விழி விரித்து அவனை பார்த்தவள் அவனிடம் இருந்து  விலக முற்ப்பட  விஷ்வாவோ அவளை அசையவிடாமல் இடையை வளைத்து பிடித்து இன்னுமே தன்னோடு  இறுக்கமாக சேர்த்து கொண்டான்.

‘தேவ்’ என்று அவளிதழ்கள் முனுமுனுக்க,

‘கண்ணுக்கு காஜல் போடாதடி சாதாரணமாவே என்னை தூங்க விடாது..” என்று கைபேசியை சற்று தூக்கி பிடித்து  ரகசிய மொழி பேசியவனின் இதழ்கள் சத்தமின்றி அவள் விழிகளில் முத்தமிட,

ப்ரீத்தியோ இன்னுமே கருவிழிகள் அசைந்தாட அவனை பார்த்தாள், 

‘என்ன கண்ணுடி இது முதல் நாள் இதுல விழுந்தவன் தான் இன்னமும் எழ முடியலை என்றவாறே தன் அதரங்களால் அவள் விழிகளை மூடியவன் தன்னை காந்தமென இழுக்கும் அவள் கண்களுக்கு மென் முத்தம் வைத்து கொண்டாட தொடங்கிவிட்டான்.

அவன் ஒவ்வொரு முத்தத்திற்கும் ப்ரீத்தியின் கரம் மெல்ல மெல்ல மேலெழுந்து அவன் தோளோடு சேர்ந்து கழுத்தை கட்டி கொண்டது.

அவனோ விழிகளில் இருந்து மெல்ல கீழிறங்கி அவள் நாசியில் இளைப்பாறியவன் மெல்ல அவள் இதழ்களை நெருங்கவும் ப்ரீத்தி சட்டென அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டாள்.

அதே நேரம் மறுபுறம் இருந்த சிவசங்கரன், ‘தேவ்.. தேவ்.. கேட்குதாடா..??’ என்று உரக்க கேட்க, 

‘ஹான்’ என்று கைபேசியை கீழிறக்கியவன் அவசரமாக காதில் வைக்க ,

‘டேய் கேட்குதாடா..?? ஏன் பதில் சொல்ல மாட்டேங்கிற..??’

“என்னன்னு தெரியலப்பா சடன்னா சிக்னல் கட் ஆகிடுச்சி போல இப்போ கேட்குது சொல்லுங்கப்பா” என்றான் குரலை செருமி,

‘சாப்ட்டியாடா..??’

“இன்னும் இல்லப்பா..!! நீங்க..??” என்றவன் மறுபுறம் அவர் எதுவோ கேட்க ‘சரிப்பா நாளைக்கு பார்த்து சொல்றேன்’ என்று கைபேசியை அணைத்தான் கூடவே மனைவியையும்.

‘தேவ்’

‘சாப்..பிட.. போகலாம் வாங்க’

‘போலாம் இருடி’ என்றவன் இதழ்கள் அவள் பின்னங்கழுத்தில் உரச,

‘தே..வ்வ்..’ 

‘ஹ்ம்ம்’

“யா..யார..” என்று அவள் ஆரம்பிக்கவும் உரசிக்கொண்டு இருந்த அவன் இதழ்கள் அழுத்தமாக அங்கு முத்தமிட தொடங்கிவிட்டதில் அவள் வார்த்தைகள் தொண்டையினுள்  அமிழ்ந்து போனது. 

“ரகசியமாய் ரகசியமாய்,
புன்னகைத்தால் பொருள் என்னவோ?

அதிசயமாய் அவசரமாய்
மொழி தொலைந்தால் பொருள் என்னவோ?

சொல்ல துடிக்கும் வார்த்தை கிரங்கும்
தொண்டை குழியில் ஊசி இரங்கும்”

என்று பாடிக்கொண்டே சென்றவன் அவள் முகம் நிமிர்த்தி, ‘முன்ன போகும் போது எதுக்கு சிரிச்ச..??’ என்று கேட்க,

எப்போ என்று ஒரு கணம் யோசித்தவள் நினைவு வரவும் ‘ஒண்ணுமில்ல’ என்று தலையசைத்து மழுப்பியவாறே மீண்டும் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள்.

விஷ்வாவோ விடாமல் அவள் நாடி நிமிர்த்தி அவளை பார்த்து, ‘அப்படியா..?? சரி ஏதாவது சொல்லனுமா..?’ என்று கேட்க,

அவளோ கண்கள் புன்னகைக்க, ‘இல்லை’ என்று மீண்டும் தலை அசைத்து அவன் பிடியில் இருந்து நழுவ,

‘போடி’ என்று அவனே அவளிடம் இருந்து விலகி நிற்க,

“வெள்ளி தரை போலவே, என்னிதயம் இருந்தது…

மெல்ல வந்து உன் விரல், காதல் என்று எழுதுது”

என்று புன்னகையுடன் பாடலை தொடர்ந்த ப்ரீத்தி விஷ்வா அவளை நெருங்கவும் அவன் கையில் சிக்காமல்,

‘சீக்கிரம் வாங்க எல்லாரும் வைட் பண்றாங்க’ என்றுவிட்டு  ஓடியிருந்தாள்.

செல்லும் அவளை கண்டு புன்னகைத்த விஷ்வாவோ,

“சிரித்த சிரித்த சிறையிலே,
சிக்கிக்கொள்ள அடம் பிடிக்கும்” என்று பாடியவாறே அவள் பின்னே சென்றான்.

*********************************

விஷ்வா கீழே வர வசுமதி கையில் இருந்த ஆதி ‘ப்பா’ என்றவாறு அவனிடம் தாவிக்கொண்டான்.

அவனுடன் பேசியவாறே கூடத்திற்கு சென்றான். அங்கு எழில் தன் இரு மகள்களையும் உணவு மேஜையில் அமர்த்தி அவர்களுக்கு ஊட்டி கொண்டிருந்தவன் அவனை கண்டதும்,

‘டேய் எங்க போன..?? ப்ரீத்தி உன்னை தேடிட்டு இருந்தாளேடா ..??’

‘பார்த்துட்டேன்ண்ணா’ என்றவன் ஆதியோடு அவன் எதிரே அமர அதே நேரம் ஆர்ப்பாட்டமாய் உள்ளே நுழைந்தான் வெற்றி அவனுடன் பாலனும் கதிரும்.

“எப்படி இருக்க விஷ்வா உன்னை பார்த்தே வருஷத்துக்கு மேல ஆச்சு..??”

“நல்ல இருக்கேன் வெற்றி எங்க உங்களை தான் பிடிக்க முடியறதில்லை போல ரொம்ப பிஸியா..??” என்று கேட்க,

“அதை ஏன் கேட்கிற விஷ்வா..?? எப்போ கவுன்சிலர் ஆனேனோ அப்போ இருந்தே மக்கள் கூட்டம் ஈ மாதிரி மொய்க்க தொடங்கிடுச்சி.., கல்யாணமோ, காது குத்தோ , கடை திறப்போ, கடை அடைப்போ எல்லாமே என் தலைமையில தான் நடக்கணும்ன்னு சொல்லிட்டு வராங்க..,  அதோட எங்க எந்த பிரச்சனைன்னாலும் முதல் போன் எனக்கு தான்” என்றவன்,

‘டேய் கதிரு அந்த ஏசியை ஆன் பண்ணு’ என்றவாறே சட்டையின் இருபட்டன்களை அவிழ்த்து விட்டவாறே நாற்காலியில் சாய்ந்தமர்ந்தான்.

“பாவம் வெற்றி நீங்க எப்படி இதெல்லாம் சமாளிக்கிறீங்க..??” என்று கேட்ட விஷ்வாவின் இதழ்கள் புன்னகையில் துடித்து அடங்கியது.

அதே நேரம் அங்கு வந்த நாதன் எழிலிடம், ‘அகனா இன்னுமா நீ சாப்பிடலை..??’ என்றார்.

“இல்ல மாமா இன்னும் கொஞ்சம் தான் முடிச்சிட்டு சாப்பிடுறேன்” என்று கூற அவன் மகள்களோ ஆளுக்கு ஒருபுறமாக எழில் தோளில் சாய்ந்து போதும் என்பது போல அவன் கன்னத்தில் முத்தமிட்டனர்.

‘என்னடாமா..??’ என்று அவர்களை பார்தத்தவன், அவர்கள் விழி மொழி  புரிந்தார் போல,

‘இன்னும் கொஞ்சம் மட்டும் அப்புறம் அப்பா கொடுக்க மாட்டேன் எங்க வாய் திறங்க பார்ப்போம்’ என்றிட, 

அதற்குள் நாதனோ தட்டில் பரிமாறியவர், ‘சரி நீ அவங்களுக்கு ஊட்டு நான் உனக்கு ஊட்டுறேன்’ என்று அவன் முன் இட்லியை நீட்ட,

“மாமா என்ன இது..?? எனக்கு என்ன அவசரம் நீங்க சாப்ட்டீங்களா..?? மாத்திரை போடணுமே..” என்று அவரை பார்க்க,

“இல்லடா முதல்ல நீ சாப்பிடு.. நீதான் பசி தாங்க மாட்ட” என்று அவன் அருகே அமர்ந்து ஊட்ட தொடங்கிவிட்டார்.  

அதேநேரம் விஷ்வா வெற்றியிடம் கேள்வி கேட்டு கொண்டிருந்த போதே, “எனக்கும் அதே சந்தேகம் தான் விஷ்வா..” என்றவாறே அவன் அருகே வந்து அமர்ந்த சரண் வெற்றியிடம்,

“எப்படி வெற்றி மூணு குழந்தைங்க குடும்பம், வேலைன்னு என்னாலேயே பல நேரம் சமாளிக்க முடியாம போகுது ஆனா நீங்க எப்படி இதோட சேர்த்து மக்கள் சேவையும் பண்றீங்க எனக்கு உங்களை நெனச்ச்சாலே பிரமிப்பா இருக்கு.. போங்க நீங்க வேற மாதிரி”

“என்ன பண்ண சரண் பிரபலம் ஆனாலே இப்படி பட்ட அன்பு தொல்லை எல்லாம் தவிர்க்க முடியாது அதனால நேரம் காலம் பார்க்காம பொது சேவை செஞ்சே பழகிட்டேனா..!! என்று பேசிக்கொண்டே செல்ல அங்கு எழிலுக்கு புரை ஏறியது..,

அப்போது தான் அவனை பார்த்த வெற்றி, “மச்சான் நீயும் இங்க தான் இருக்கியாடா நான் பார்க்கல மச்சி” என்றவன் நாதன் அவனுக்கு ஊட்டுவதை கண்டு,

‘நைனா என்ன இது..??’ 

‘பார்த்தா தெரியல ஊட்டிட்டு இருக்கேன்டா’

‘அதான் ஏன்..? அவனுக்கு என்ன கையா இல்ல எதுக்கு நீங்க ஊட்டனும்..??’

“அப்படி கேளுங்கண்ணா இதுவரை எனக்கு கூட ஊட்டினது இல்ல மாமாக்கு மட்டும்..” என்று ஆரம்பிக்கவும் எழிலின் பார்வை கதிர் மீது ஆழமாக படிந்தது.

“குருட்டு பயலே குழந்தைகளுக்கு  ஊட்டிட்டு இருக்கிறது தெரியலை அவன் பசி தாங்க மாட்டான்டா” என்றவாறே ஊட்ட,

‘அதுக்கு..?? என்று நாதனை பார்த்தவன் இதெல்லாம் கொஞ்சம் கூட சரி இல்ல நைனா அவனை இப்படி நீங்க ஊட்டி’ என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே அங்கே வந்த அலரின் கையில் இருந்த பாத்திரம் கைநழுவி கீழே விழ அனைவரும் அவள் புறம் திரும்பினர்.

அலரோ வெற்றி அருகே வந்து நின்றவள் எதிரே இருந்த இருவரையும் ஒரு நொடி நிதானமாக பார்த்து வெற்றியிடம் திரும்பி, “உங்க சத்தம் கேட்கவும் தான் வந்தேன்ண்ணா, தேங்க்ஸ்” என்று கூறி மேலே செல்ல. 

எழிலோ கண்களில் கனன்ற கனலோடு வெற்றியை தான்  பார்த்திருந்தான்.

‘அமுலு இந்த அநியாயத்தை பார்த்தியா நைனா இவனுக்கு ஊட்டிட்டு’ என்று ஆரம்பிக்கவும் உடன் இருந்த கதிரும் ‘ஆமாக்கா’ என்றிட அவர்கள் அருகே அமர்ந்து  இருந்த பாலன் மெல்ல நழுவி எழில் அருகே வந்து அமர்ந்தவர் அவனிடம்,

“மாப்பிள்ளை எனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லடா, வீட்ல சிவனேன்னு இருந்தவனை உன் மச்சானும் இவனும் தான் இழுத்துட்டு வந்தாங்க..”

‘இப்போ எதுக்கு இந்த டீடெயில்’ என்று எழில் அவரை பார்க்க, 

“இல்ல உன் பார்வையே சரி இல்ல..!! அவன் கூட வந்ததால அவன் பக்கத்துல உட்காந்ததால என்னையும் இல்ல எனக்கும்..” என்றவருக்கு எழில் வெற்றியை பார்த்த பார்வையே நெஞ்சில் திகில் பரப்ப, எழிலின் இடது கரத்தை எடுத்து நெஞ்சோடு பிடித்து, 

“மாப்பிள்ளை எனக்கு வயசு பொண்ணு இருக்குடா..!! எதுவா இருந்தாலும் அவனுங்க ரெண்டு பேரோட நிறுத்திக்க நான் தாங்க மாட்டேன்” என்று கூற, 

திரும்பி அவரை பார்த்த எழில், ‘இன்னொருமுறை உங்களை நான் இவனுங்க கூட பார்க்க கூடாது அப்புறம் எங்க அக்காவுக்காக கூட பார்க்க மாட்டேன்’ என்று கூற, 

“கண்டிப்பாடா இதோ பார் உன் பக்கத்துல வந்து உட்காந்ததுலையே உனக்கு தெரியலையா..??” என்று கேட்கவும் 

‘சரி’ என்று கண்மூடி திறந்தவன், எழுந்து சென்று கை கழுவிக்கொண்டு வந்து வெற்றியிடம், ‘நான் திரும்ப வரும்போது நீ இங்க இருக்க கூடாது’ என்றவன் கதிரிடம் ‘என் கண்ணுல பட்டுடாத உன் நல்லதுக்கு தான் சொல்றேன்’ என்று எச்சரித்து அலரை தேடி சென்றான்.

“என்னண்ணா சொல்றாரு..?? என்று கதிர் புரியாமல் வெற்றியை பார்க்க அவனோ நாம என்ன சொல்லிட்டோம்ன்னு இப்படி  முறைச்சிட்டு போறான்..??” என்று புரியாமல் அவன் சென்ற திசையை பார்த்து கொண்டிருந்தனர். 

Advertisement