Advertisement

மதுரை வீரன் பொம்மி 1

“கந்தன்.. கந்தசாமி யாருங்க..” உரத்த குரல் அந்த வங்கியில் எதிரொலித்தது.

“நான் தான் சார்..” என்று ஒருவர் அடித்து பிடித்து ஓட, அவருக்கான பணத்தை மறுமுறை மெஷினில் போட்டு எடுத்து கொடுத்தான் அவன். ஜனகன்! அந்த வங்கியின் கேஷியர். கந்தசாமி பணம் வாங்கி நகர்ந்துவிட, அடுத்த டோக்கனை அழைத்தான்.

இடையில் ஒருவர் சந்தேகம் கேட்டு நிற்க, “அங்க போய் பாருங்க..” என்று வேறு ஒரு ஊழியரை கை காட்டிவிட்டு, அவன் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டான். மீறி எதாவது கேட்கலாம் என்றால் அவன் இவர் பக்கம் திரும்புவதாகவே  இல்லை.

கண்கள் கூர்மையாக எண்களை கணக்கிட, கைகள் பரபரப்பாக சிஸ்டமிலும், பணத்திலும் விளையாடியது. அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் முடித்தவன், அன்றய நாளையும் முடித்து வைத்தான். ஆளில்லா வங்கி அவன் கைகளுக்கு, கண்களுக்கு விடுதலையை கொடுத்தது.

இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி சோம்பல் முறித்தவன், சேரில் நன்றாக சாய்ந்தமர்ந்தான். கண்களை மூடி அதற்கும் சில நொடி ஆசுவாசம் கொடுத்தான். “சார் டீ..” என்ற குரலில்,

“வைங்க வரேன்..” என்று ஓய்வறை சென்று வந்தான். டேபிளில் அவன் போன் சத்தம் கேட்க, டக் இன் செய்திருந்த சட்டையை வெளியே எடுத்து விட்டிருக்க, ஈர முகத்தை கர்சீப்பில் துடைத்து வந்தவன், அதை பார்த்து கொண்டே டீ எடுத்து குடிக்க ஆரம்பித்தான்.

அழைக்கும் காரணம் தெரியும். எடுத்து பேச விருப்பமில்லை. மறுமுறை வந்த போனையும் எடுக்காமல், வழக்கமான வேலைகளை முடித்து, ஷோல்டர் பேக்கை தூக்கி கொண்டு வெளியே வந்தான். இருள் சூழ ஆரம்பித்திருக்க, பைக்கை உதைத்து கிளம்பினான்.

மதுரை மாவட்டத்தின் வாசியான ஜனகன் பைக்கை தன் கிராமம் பக்கம் திருப்பினான். இளங்காற்றும் ஊருக்கேற்ப சீறலாய் அவனை உரசி செல்ல, தன் வீட்டின் முன் பைக்கை நிறுத்தி இறங்க, ராஜலக்ஷ்மி வாசலுக்கே வந்துவிட்டார்.

“ஏய்யா இவ்வளவு நேரம் பண்ணிபுட்ட..? எல்லாம் உனக்கு தான் காத்திருக்கோம்..” அவர் கை பிசைந்து பரபரக்க, ஜனகன் பதிலே இல்லாமல், வெளிப்படிகட்டு வழியே அவன் அறைக்கு ஏறிவிட்டான்.

“எங்க போயிட்டான்ம்மா..?” என்று ராஜலக்ஷ்மியின் மூன்றாவது மகள் வர,

“குளிக்க போயிருக்கான் வந்துடுவான்..” என்றவர், மகனுக்காக காபி கலந்து எடுத்து ரூம் சென்றார்.

தலையை துவட்டியபடி வேஷ்டி,  ஷர்ட்டில் வந்த மகன், அம்மா மூட்டு  வலிக்கு மூச்சு வாங்க, “உங்களை யாரு மேல ஏறி வர சொன்னா, உட்காருங்க..” என்று அவர் கை பிடித்து அமர வைத்தான்.

“நீ காபி குடிய்யா.. அங்க போகணும்..” என்றார் அவர்.

“ஏன் அவங்க இங்க வர மாட்டாங்களாமா..?” காபியை வாங்கி கொண்டு வேண்டுமென்றே கேட்டான் மகன்.

“விதண்டாவாதம் பேச கூடாதுப்பு.. அது முறை இல்லைன்னு உனக்கே தெரியும் இல்லை, கிளம்புய்யா..” என்றார் அன்னை கெஞ்சலாக. இன்றோடு இதற்க்கு ஒரு முடிவு கிட்டினால் நல்லது தான் என்று மகனும் மறுக்காமல் அம்மாவுடன்  கிளம்பி வந்தான்.

அடுத்த காம்பவுண்ட் தான் அவர்கள் செல்லும் வீடு. ஜனகன் குடும்பம் மட்டுமாக தான் சென்றனர். அதற்கே ஒரு கூட்டம். ஜனகன் உடன் பிறந்தோர் நான்கு பெண்கள். இவன் தான் கடை குட்டி, எல்லோருக்கும் திருமணம் முடிந்து அவரவர் கணவன், பிள்ளைகள் என்று எண்ணிக்கை உயர்ந்து தான் போனது.

அம்மாவுடன் மகன் இறங்கி வர, “போலாமாப்பு..” என்று வேலய்யன், ஜனகனின் அப்பா கேட்க, மகன் தலையசைத்தான். பெரியவர்கள் மட்டும் பக்கத்து வீட்டுக்கு செல்ல, அங்கும் ஆட்கள் தலை கூடியிருந்தது.

இவர்களை முறையாக வரவேற்று, அமர வைத்தனர். “சாப்பாடு..” என்று ஒருவர் ஆரம்பிக்க, வேலய்யன் கை காட்டி மறுத்துவிட்டார்.

உறவு தொடருமா, முறியுமா என்று தெரியாமல் அங்கு கை நனைக்க முடியாதே..? ஒரு கனமான அமைதி நிலவ, யார் முதலில் ஆரம்பித்து வைப்பது என்று மற்றவர் முகம் பார்த்து, ஜனகன் முகத்தையும் பார்த்தனர். அவன் யாருக்கோ வந்தது போல கை கட்டி மரத்தில் சாய்ந்து நின்றான்.

அவனுக்கு பின் ஜன்னல் அசையும் சத்தம் கேட்க, தலை திரும்பி பார்க்க தோணவில்லை. யார் என்று தெரியும், பார்த்து என்னவாக போகிறது என்ற நிலை தான். நீடித்த அமைதி தாங்க முடியாமல் இடை நிலையில் இருப்பவர், “என்ன முடிவுன்னு இரண்டு பக்கமும் சொல்லிட்டா நல்லா இருக்கும்..” என்றார்.

எல்லாம் வேலய்யன் முகத்தை பார்க்க, அவரோ, “அவங்க சொல்லட்டும், என் பக்கம் எந்த பிரச்சனையும் இல்லை..” என்றார்.

மகனுக்கென ஆரம்பித்த சம்மந்தத்தில் தடங்கலை கொண்டு வந்தது அவர் இல்லையே. இப்போதும் அவர் தயாராக தான் இருக்கிறார். ஆனால் நிபந்தனையற்ற உறவுக்கே ஒழிய, கட்டுப்படுத்தும் உறவுக்கு இல்லை.

மறுபக்கம் தலைகள் திரும்ப, பெண்ணை பெற்றவர், “நாங்களும் சூழ்நிலைக்கு கட்டுப்பட்டு தான் நிற்கிறோம், சொந்த மச்சானுக்கு பார்க்கிறதா இல்லை ஒன்னு விட்ட மச்சானுக்கு பார்க்கிறதான்னு முழிக்கிறோம், இவங்க பஞ்சாயத்துல என் மக வாழ்க்கை தான் சிக்கிட்டு நிக்குது, எங்களை பார்க்க, யோசிக்க யாரும் தயாரா இல்லை..” என்றார் அளவில்லா வருத்தத்துடன்.

சரியே.. அவர் சொல்வதும் சரியே. வேலய்யன் அவர்கள் வருத்தத்தை ஏற்று அமைதி காக்க, “ண்ணா.. நீங்க கொஞ்சம் விட்டு கொடுத்து போனா..” என்ற ஒன்று விட்ட தங்கையின் பேச்சில் முகம் இறுகிவிட்டார்.

“உன்னோட உறவு வேணும்ன்னு தான் அசல் பக்கமே போகாம இங்க வந்து பொண்ணுக்கு நின்னேன், ஆனா நீ என்ன இருந்தாலும் நான் ஒன்னு விட்ட அண்ணன் தானேன்னு காட்டிட்ட இல்லை..” என்று தங்கை முகம் பார்க்க, அவர் பதில் பேச முடியாமல் நின்றார்.

“வேலா அவங்க பக்கமும் பார்க்கணும்ப்பா, சொந்த அண்ணன் இங்க பொண்ணு கொடுத்தா அவன் உறவு முடிஞ்சிடும் சொல்லும் போது பாவம் அவளும் என்ன பண்ணுவா..? யோசிப்பா..” என்றனர் நடுநிலையில் இருப்பவர்கள்.

“எங்களுக்கும் அது புரிய போய் தான் பொறுமையா பேச குடும்பத்தோட வந்திருக்கோம், என்ன தான் நான் பெரியப்பா பையனா இருந்தாலும் என் சொந்த தங்கச்சியா நினைச்சு தான் என் மகனுக்கு பொண்ணு கேட்டு எங்கேயும் போகாம நேரா இங்க வந்து நின்னேன், இன்னைக்கும் அவங்க மறுத்து, உறுதியை நிறுத்தியும் பேச வந்திருக்கேன், இதுக்கு மேல நான் என்ன பண்ணனும்ன்னு  எனக்கு  தெரியல..” என்றார் வேலய்யன் பெருமூச்சோடு.

வலையில் மாட்டி கொண்ட உறவுகளுடன், வெளி வர முடியாமல் போராடும் சாதரண  மனிதர் அவர்.

“அய்யா இவர் கொஞ்சம் மனசு வைச்சா இந்த சம்மந்தம் நடக்கும், அந்த கோவில் நிலம்.. அது என்னமோ, அதை இடையில கொண்டு வராம..”

“இல்லைங்க.. முன்னமே இது பத்தி பேசியாச்சு, இப்போவும் சொல்றேன் என் கடமைல இருந்து நான் விலகிறதா இல்லை. அந்த  நிலம் என்னோட பொறுப்பு, சாமிக்கு நாங்க காணிக்கையா கொடுத்ததை சாமானியன் எங்க கண்ணை கட்டிட்டு எடுத்துட்டு போனா விட்டுட முடியாது..” வேலய்யன் இடையிட்டு கணீரென்று சொல்ல,

“அப்போ இந்த சம்மந்தம் சரி வராதுங்க, வேணாம், பேச்சுல பேசினது தானே, முடிச்சுக்கலாம்..” என்றார் பெண்ணை பெற்றவர்.

“பேச்சுல பேசினது தானேன்னு ரொம்ப சாதாரணமா சொல்றார், யாரை விடவும் நம்ம நாக்கும், வாக்கும் தான் நமக்கு எசமான், அதை மதிக்காத இவர் சம்மந்தம் எனக்கும் வேணாம்..” வேலய்யன் முடித்து எழுந்து நின்றுவிட்டார். அவரின் மொத்த குடும்பமும் அவரை பின்பற்றி எழுந்து நின்றுவிட்டனர்.

“வேலா இருப்பா அவசரபடாத.. எதுக்கும் உன் மகன்கிட்ட ஒரு வார்த்தை..” என்று ஜனகனை இடையில் நிறுத்த பார்க்க, வேலய்யனிடம் ஒரு சிரிப்பு.

“கேட்டுக்கோங்க..” என்று கையசைக்க, ஜனகனை பார்த்தனர்.

அவன் நேரே நின்றவன், “கட்டுத்திட்டத்துக்குள்ள வர சொந்தம் எனக்கு வேண்டாம்..” என்றான். அவனுக்கு பின்னால் ஒரு விசும்பல் சத்தம். அந்த கட்டுத்திட்டம் வார்த்தை அதற்கு தானே.

என்னை வைத்து என் அப்பாவை கட்டுப்படுத்த நினைக்கும் பெண் எனக்கு மனைவியா..?

திரும்பியும் பார்க்காமல், அப்பாவுடன் தன் வீடு சென்றான்.

அமைதியான கடலில் திடீரென கிளம்பும் சுனாமி போல் தான் இவர்கள் சூழ்நிலையும் தற்போது. சேதாரம் அதிகம் என்பதாய் ஒரு உறவுக்கு இரண்டு உறவு முறிவு.

வேலய்யன் குடும்பத்தினரின் குலதெய்வ கோவில். அதனை சார்ந்த நிலம் தான் அந்த சுனாமி. வேலய்யனின் அப்பா கோவிலை ஒட்டியுள்ள அவரின் மூன்று ஏக்கரை கோவிலுக்கென்று கொடுத்திருக்க, அது இப்போது வேறு ஒருவருக்கு சொந்தமாகி இருந்தது.

சில தினங்களுக்கு முன்பு தான் இந்த விஷயம் வேலய்யன் காதுக்கு வர, மனிதர் பொங்கிவிட்டார். யாருடா அது கோவில் நிலத்தை சொந்தம் கொண்டாடுறது என்று விசாரிக்க, தலையில் இடி தான் விழுந்தது. அவரின் சொந்த சித்தப்பா மகன், இவரின் ஒன்றுவிட்ட தம்பி பசுபதி பெயரில் மூன்று ஏக்கரும் சுத்த கிரயம் ஆகியிருந்தது.

கோவம் போய் வருத்தம், ஆதங்கம் மனிதருக்கு. “கோவிலுக்கு கொடுக்கிறது போல கொடுத்துட்டு பெரியவங்க குடும்பமே எடுத்துகிட்டாங்க..” ஊர்க்காரர்கள் பேச்சு வேறு.

அன்று ஒன்றுமே இல்லாத நிலமாக இருந்தது இன்று கோடி கணக்கில் பெறுமதி பெரும் என்று தெரிந்திருந்தால் சட்டப்படி எழுதி வைத்திருப்பார்கள். தாத்தாவிடம் இருந்து பங்கு வந்த நிலத்தை வாக்கு அடிப்படையில் கோவிலுக்கு கொடுத்தது. பத்திரம் எழுதி பதியவில்லை. இன்று பசுபதி மூல பத்திரத்தை வைத்து தாத்தா சொத்து பேரனுக்கு என்று தன் பெயருக்கு எழுதி கொண்டார்.

வேலய்யன் மீட்கும் வழி தெரியாமல் விழித்து நிற்கிறார். கோவிலுக்கான மண்டபம், மைதானம் எல்லாம் அந்த மூன்று ஏக்கரில் தான்.  ஊர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து கட்டியிருந்தனர். இப்போது கோவிலுக்கு செல்லவே பாதை  கேட்டு நிற்கும் நிலை.

நிலம் கொடுத்தவரிடம் நியாயம் கேட்கின்றனர். “உங்களை நம்பி தான் நாங்க எல்லாம் செஞ்சோம், பணம் போய் கோவிலுக்கு போகவே வழி இல்லைன்னா எப்படி..? இந்த வருஷம் பூஜை வேற வருதே, உங்க சித்தப்பா குடும்பம் தானே, உங்க தம்பிகிட்ட பேசுங்க..” என்று  இவரை நெருக்குகின்றனரே தவிர, பசுபதியிடம் சென்று கேட்க யாரும் தயாரில்லை.

அவர்களை சொல்லியும் குற்றமில்லை. பசுபதி கந்துவட்டிக்காரன்.  பிரபலமான கட்சியின் மாவட்ட செயலாளர். தன்னை நெருங்க பயப்படும் அளவு ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தான். மாய பிம்பம். மற்றவர்களை வைத்து தனக்காக உருவாக்குவது தானே இந்த மாயபிம்பம். ஊசி ஒன்றே போதும் வெடிக்க, அந்த ஊசி எது என்று தான் வேலய்யனுக்கு தெரியவில்லை.

அவர் தடுமாறி நின்றாலும்  மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை வேலய்யனுக்கு தான் உண்டு.

இதில் போதாக்குறைக்கு பசுபதியின் தங்கையும் அண்ணனுக்கு ஏற்று கொண்டு, இவருடனான சம்மந்தத்தை முறித்து கொண்டாள். கோவில் நிலம் என்று ஆரம்பித்து, மகன் வாழ்க்கையில் வந்து நின்றது. இரண்டையும் எப்படி சரி செய்ய போகிறோம் என்ற கவலை, கலக்கம் அதிகமே.

வீடு வந்த மொத்த பேரும் பேச்சின்றி அமர்ந்திருக்க, ராஜலக்ஷ்மி அடக்கி வைத்த கண்ணீர் தேம்பலாக வந்துவிட்டது. ம்மா.. என்று பெண்கள் அவரை சூழ்ந்து கொள்ள, அவருக்கான தண்ணீர் வேகமாக வந்தது.

“க்கா.. இப்போ என்ன ஆகி போச்சுன்னு இந்த அழுகை, தண்ணீர் குடிங்க முதல்ல..” என்ற அக்கறையில் ராஜலக்ஷ்மி இன்னும் அழுதார்.

“தம்பி..” என்று தேவேந்திரன்  கை பிடித்து அழுதார். தேவேந்திரன் அந்த வீட்டின் மூத்த மருமகன். ஜனகனுக்கு நான்கு வயது ஆகும் போது, அவனின் அக்கா, பெரிய மகள் பானுமதியை திருமணம் செய்து கொண்டவர். மச்சான் மாலை போட, ஜனகனை தோளில் தூக்கி கொண்டவர். ஊரே அதை பார்த்து சிரிக்க, பெருமையாய் அந்த உறவை ஏற்றவர்.

இப்போதும் அந்த உறவை முறைப்பாய் பார்க்க, அவனோ முகம் திருப்பி எங்கோ பார்த்தான்.

“முதல் முதலா என் மகனுக்கு கல்யாண பேச்சு ஆரம்பிச்ச கையோட  முறிஞ்சு போச்சே மறுமவனே..? கிழடுங்களாகிட்டோமே, நாங்க நல்லா இருக்கும் போதே அவனுக்கு ஒரு துணை அமைச்சு கொடுத்துடலாம்ன்னு பாடுபட்டோமே..? எல்லாம் போச்சே, என் மகனுக்கு நல்லது நடக்காம போச்சே, நான் என்ன பண்ணுவேன்..” என்று ராஜலக்ஷ்மி புலம்பி அழுக,

“க்கா..   என்ன பேசுறீங்க நீங்க..? இந்த சம்மந்தம் இல்லன்னா வேற சம்மந்தமே இல்லையா..? எதோ மாமாக்கு சொந்தம் வேணும்ன்னு அங்க பொண்ணு கேட்டோம், இப்படி ஆகி போச்சு, விட்டுட்டு அடுத்து பொண்ணு  பார்ப்போம்ன்னு இல்லாம..”

“அடுத்து ஏன் பார்க்கணும் ண்ணா, நீங்க மனசு வைச்சா எல்லாம் உடனே நடக்கும்..” என்றார் அதுவரை அமைதியாக இருந்த இரண்டாம் மருமகன். அவர் பேச்சின் அர்த்தம் அங்கு யாருக்கும் புரியாமல் இல்லையே..?

“மாமா ப்ளீஸ் இந்த பேச்சு வேண்டாம்..” ஜனகனிடம் இருந்து உடனடி மறுப்பு.

“ஏன்.. ஏன் வேண்டாம்..?”

“ஏய்யா..”

“ம்மா.. நான் பல வருஷத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன், இந்த பேச்சு நம்ம வீட்ல இருக்க கூடாதுன்னு, இப்போ என்ன.. ம்ம்ம்.. இத்தனை வருஷம் கழிச்சு திரும்ப இப்போ ஆரம்பிக்கிறீங்க.. வேண்டாம், இதோட விட்டுட்டு எல்லாம் தூங்க போங்க.. போங்க..” ஜனகன்  முழு மூச்சாக ஆரம்பித்த பேச்சை நிறுத்தி வீட்டுக்குள் செல்ல பார்க்க,

“மாமா.. என் பொண்ணை இந்த வீட்டு மருமகளா, உங்க மகனுக்கு கேட்கிறேன்.. என்ன சொல்றீங்க..?” தேவேந்திரன் பளிச்சென கேட்டுவிட்டார்.

“யோவ் மாமா..” ஜனகன் கோவமாக கத்த,

“அப்பு என்ன இது மரியாதை இல்லாம..” வேலய்யன் மகனை கண்டித்தார்.

ஜனகன் பல்லை கடித்து தன்னை சமாளித்தவன், “இந்த பேச்சு வேண்டாம் சொன்னேன்..” என்றான்.

“எனக்கு மாமாவை கட்டிக்க சம்மதம்..” என்று வீட்டுக்குள் இருந்தே குரல்.

“பொம்மா..” திரும்பி அப்படி ஒரு அதட்டல் ஜனகனிடம் இருந்து. அவள் வெளியே வர வேண்டுமே.

“என் பொண்ணும் சம்மதம் சொல்லிட்டா மாமா, இனி பேச்சு உங்க பக்கம் இருந்து தான் வரணும்..” தேவேந்திரன் சொல்ல, ஜனகன் வேகமாக வீட்டுக்குள் சென்றான்.

ஸ்கர்ட், ஷர்ட்டில் தூண் சாய்ந்து நின்றிருந்த பெண் இவன் வரவும் நேரே நிற்க,  “கிறுக்கச்சி.. இருபது வயசில உனக்கு என்னடி கல்யாணம் வேண்டிகிடக்கு..” அவளை நெருங்கி கடிந்தான்.

“இருபத்தி அஞ்சு வயசுல நீங்க கல்யாணம் பண்ணிக்கும் போது நானும் பண்ணிக்கலாம் மாமா..” என்றாள் பெண்ணோ  மெல்லிய குரலில் அசராமல்.

“கள்ளம்.. கள்ளம் படிக்க அவ்வளவு கள்ளம்..” ஜனகன் அவள் தலையில் கொட்ட, தேய்த்து கொண்டவள் உர்ரென்று முறைத்து வைத்தாள் மாமனை.

“ஒழுங்கு மரியாதையா எனக்கு இதுல இஷ்டம் இல்லைன்னு சொல்லி ஓடிடு, இல்லை கொன்னுடுவேன்..” என்று மிரட்ட,

“எனக்கு இப்போ லீவு தான் தாத்தா, தேதி குறிக்கிறதா இருந்தா குறிங்க..” என்றாள் பெண் கத்தி.

“பொம்மா இது விளையாட்டு இல்லை, சரியா பேசு..” ஜனகன் கண்டிக்க,

“ஏன் மாமா என்னை பார்த்தா உங்களுக்கு விளையாட்டுக்கு சொல்றது போல இருக்கா..?” என்றாள் பெண் நிமிர்ந்து நின்று அவனை நேராக கண்ணோடு கண் பார்த்து.

“ம்ப்ச்.. பொம்மா.. உனக்கு எப்படி புரிய வைப்பேன், நீ இந்த சூழ்நிலை பார்த்து ஏதோ குழம்புற நினைக்கிறன், அதான் இப்படி எல்லாம் உளறிட்டு இருக்க, அந்த பொண்ணு போனா மாமாக்கு பிரச்சனையே இல்லை, இன்னும் ஒரு வாரத்துல பொண்ணு பார்த்துடலாம், சரியா, நீ..”

“மாமா.. கதை சொல்லி என்னை தூங்க வைக்காத, எனக்கு ஏற்கனவே நல்ல தூக்கம் தான், நான் தூங்க போறேன், நீயும் தூங்க போ..” என்று பெண் மெல்ல ஓடிவிட்டாள்.

தேவேந்திரன் ஆரம்பித்த பேச்சை வைத்த நூல் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்.

Advertisement