Advertisement

மதுரை வீரன் பொம்மி 6

“இவ்வளவு நேரமா பண்ணுவீங்க, எங்க அவன், மூணு நாள்ல கல்யாணத்தை வைச்சுட்டு வெளியே ஏன் அனுப்பினன்னு எல்லார்கிட்டேயும் திட்டு வாங்கிட்டு இருக்கேன்..” வாசலில் நின்றிருந்த  பானுமதி மகள் வரவும் படபடவென பொரிந்து, பின்னால் தம்பியை தேடினார்.

“சாரிமா.. புடவை வாங்கிட்டு வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு, மாமா என்னை விட்டுட்டு கேட்டோட  கிளம்பிட்டார்..” என்றாள் பொம்மி.

“கிளம்பிட்டானா..?” பானுமதி முகம் சுருங்கி போனது. “வெளியே சாப்பிட்டீங்களா..?” என்று கேட்க,

“இல்லம்மா.. நேரம் ஆச்சேன்னு வந்துட்டோம்..” என்றாள் மகள்.

“சாப்பிடலையா..? அப்போ ஜனாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சாப்பிட வைச்சு அனுப்பியிருக்கணும் இல்லை, என்ன பண்ற நீ..?” என்று மகளை கடிந்து கொண்டார்.

“ம்மா.. நான் கூப்பிட்டேன், மாமா தான் வேணாம்ன்னு..”

“அவன் அப்படி தான் சொல்வான்., சரி நீ வா, ஆமா எடுத்ததை எல்லாம் நீ வைச்சிருக்க..” என்று மகள் கையில் இருந்த பைகளை வாங்கி கொண்டு கேட்டார்.

“அச்சோ மாமாகிட்ட கொடுக்க மறந்துட்டேன்ம்மா..” மகள் நுனி நாக்கை கடிக்க,

“இருக்கட்டும்.. எப்படியும் பிளவுஸ் ஸ்டிச் பண்ண புடவை வேணும் தான், நாளைக்கு கொடுத்துவிட்டுடலாம்..” என, கீர்த்தி போன் ஒலித்தது.

“அப்பா தான்.. கூப்பிட்டுட்டே இருக்கார்ம்மா..” என்று எடுத்தவள், “மாமாவா அவர் என்னை விட்டுட்டு கிளம்பிட்டாரேப்பா..” என்றாள்.

தேவேந்திரன் உடனே வைத்துவிட,  “என்னவாம் உன் அப்பாக்கு.. ஈவினிங்ல இருந்து நான் கூப்பிட்டுட்டு இருக்கேன், என் போனை எடுக்கலை, உனக்கு இத்தனை போன்..” என்றார் பானுமதி நொடிப்பாக.

“ஹோட்டல்ல ஏதோ பிரச்சனைன்னு..”

“ஹோட்டல்லவா..? பெரிய மாமாங்க இப்போ தான் தொழில் எல்லாம் பார்த்துட்டு வீட்டுக்கு வந்தாங்க, அப்படி எதுவும் சொல்லலையே..”

“அப்படி தான் மாமாகிட்ட அப்பா சொல்லியிருக்கார்ம்மா..” கீர்த்தனா யோசனையாக சொல்ல, பானுமதிக்கும் சந்தேகம் வந்தது.

கீர்த்தனா போன் திரும்ப ஒலிக்க, “அப்பா..” என்று எடுக்க, “எப்போ கிளம்பினான்..? எவ்வளவு நேரம் ஆச்சு..? அங்க நம்ம ட்ரைவர் யாராவது இருந்தா பின்னால போய் பார்க்க சொல்லு..” என்று தொடர் ஆணைகள்.

பானுமதிக்கு என்னவோ ஏதொன்று பதறி போனது. “என்னங்க ஆச்சு..? ஏன் இதெல்லாம்..?” என்று போன் வாங்கி பேச,

“சொன்னதை செய்ங்க..” என்று கத்திவிட்டு வைத்தார் மனிதர்.

இப்படி ஒரு கோவமா..? ஏதோ நடக்கிறது.. பானுமதிக்கு படபடப்பில் வேர்த்து போனது. கீர்த்தனா அப்பா சொன்னதை செய்ய ஓடினாள். அவர்கள் ட்ரைவர் கிளம்பியிருக்க, பக்கத்து வீடான பெரியப்பா வீட்டுக்கு தடுத்த புடவையை தூக்கி கொண்டு ஓடினாள்.

பெரியப்பா பரபரப்பாக போனுடன் வெளியே வந்தவர், கீர்த்தனாவை பார்த்ததும், “நான் அதுக்குதான் போறேன்..” என்று கார் எடுத்து கொண்டு கிளம்பினார். பானுமதி மகள் பின்னே வந்துவிட்டிருந்தவர், பெரியவர் தானே கார் எடுத்து கொண்டு சென்றதில், கலங்கி போய் வாசலிலே அமர்ந்துவிட்டார்.

கீர்த்தனாவிற்கு கைகால்கள் எல்லாம் வேர்க்க, தூணை பிடித்து வலுவாக கால் ஊன்றி நின்றாள். குடும்பமே கூடிவிட, “பானுமதி.. உங்க வீட்டுக்கு கூப்பிட்டு பேசி பாரு..” என்றார் தேவேந்திரனின் இரண்டாம் அண்ணன்.

“ஆஹ்ன்.. ஆமா..” என்று கீர்த்தனா உடனே தாத்தாக்கு போன் செய்ய, அவர் எடுக்கவே இல்லை. அடுத்து பாட்டிக்கு அழைத்து ஸ்பீக்கரில் போட, அவர் சாதாரணமாக “ஹலோ..” என்றவர், அவளை நலம் விசாரித்தார்.

அதிலே அவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்று புரிய, “வைச்சிடு..” என்று பெரியப்பா சைகை காட்டினார். கீர்த்தனா இரண்டொரு வார்த்தை பேசி வைத்துவிட்டாள்.

நேரம் சென்று கொண்டே இருக்க, யாருக்கு எது பேசவும் பயமாக இருந்தது. விஷயம் என்னவென்று தெரியாமல் பேசவும் முடியாதே. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அமர்ந்திருக்க, அங்கு ஜனகன் வீட்டில் ராஜலக்ஷ்மி மகனை எதிர்பார்த்து கேட்டிற்கே வந்துவிட்டிருந்தார்.

“ம்மா.. தம்பி வர நேரம் ஆகும்ன்னு அப்பா போன் பண்ணி சொன்னார் இல்லை, வீட்டுக்குள்ள வா, கேட்டிலே தவம் பண்ணிட்டிருக்க..” என்று கடைசி மகள் சொல்ல,

“ஒருமாதிரி இருக்கு சின்னவளே..? நேரம் பத்து மணி ஆகிப்போச்சே, நான் ஜனாக்கு  திரும்ப  போன் பண்ணி பார்க்கிறேன்..” என்றழைக்க, ஸ்விட்ச் ஆப். இவ்வளவு நேரம் ரிங் சென்று கொண்டிருந்தது. உடனே அவர் கணவருக்கு அழைத்துவிட்டார்.

முதல் முறை எடுக்காமல், அடுத்த முறை எடுத்தவர், “வெளியே இருக்கோம், சும்மா சும்மா போன் பண்ணாத..” என்றார் கோவமாக. பக்கத்தில் தேவேந்திரன் குரல் கேட்க,

“மாப்பிள்ளை உங்ககூடவா இருக்கார்..” ராஜலக்ஷ்மி கேட்டவர், “நீங்க மகன்கிட்ட போனை கொடுங்க, ஒரு வார்த்தை பேசிக்கிறேன்..” என்றார்.

“அவன்.. அவன் தள்ளி இருக்கான், மாப்பிள்ளை நாங்க எல்லாம் இங்க.. இந்த  மண்டபம் பார்க்க வந்திருக்கோம், நாங்க வர லேட் ஆகும், சொல்ல முடியாது விடிஞ்சிடும், நீங்க தூங்குங்க..” என்று வைத்துவிட்டார்.

ராஜலக்ஷ்மி பேச வாய்ப்பே கொடுக்காமல் வைக்க, இவர் பானுமதிக்கு போன் செய்தார். அதிதி அம்மாவிடம் கொடுக்க, விரல்கள் நடுங்க எடுக்க, “பானு.. அப்பா, தம்பி கூடத்தான் மாப்பிள்ளை இருக்கார் போல, தம்பி உன்கிட்ட பேசினானா..? எப்போ வந்தாங்க கடையில இருந்து, அங்க வீட்ல சாப்பிட்டானா..? உன் அப்பா போன் பண்ணா ரொம்ப கோவப்படுறார், இவன் போன் ஸ்விட்ச் ஆப் ஆகி போச்சு, ஒரு வார்த்தை மகன்கிட்ட பேசிக்கலாம்ன்னா போனை கொடுக்க மாட்டேங்கிறார், அதான் நீ எதுவும் பேசினியான்னு கேட்டேன்..” என,  பானுமதிக்கு சந்தேகம் உறுதியாக தொண்டை அடைத்து கொண்டு வந்தது.

“பானு.. பெரியவளே.. கேட்குதா, ஹலோ..” என்று ராஜலக்ஷ்மி அந்த பக்கம் கூப்பிட்டு கொண்டே இருக்க, தொண்டையை செருமி கொண்ட பானுமதி,

“நா.. நான் பேசினேன்ம்மா, வந்திடுவாங்க, நீங்க மாத்திரையை போட்டுடீங்களா..? முழிச்சா உடம்பு ஆகாது, தூங்குங்க..” என்று வைத்துவிட்டார்.

ஸ்பீக்கரில் கேட்டு கொண்டிருந்த வீட்டினருக்கும் சந்தேகம் உறுதியானது. ஏதோ பிரச்சனை..? என்று புரிந்து போனது. பானுமதி வெடித்து அழுதவர், “மாமா.. ப்ளீஸ் மாமா.. என்ன நடக்குதுன்னு உங்க தம்பிகிட்ட கேட்டு சொல்லுங்க, எனக்கு பைத்தியமே பிடிச்சிடும், கேளுங்க மாமா..” என்று அழுக, அவரும் தம்பிக்கு விடாமல் போன் செய்தார்.

எடுக்காமல் போக  அண்ணனுக்கும் அழைக்க, அவரும் எடுக்கவில்லை. “எங்க இருக்காங்க தெரிஞ்சா நேர்ல போலாம், இப்போ என்ன பண்ண..?” என்று புலம்பியவர் அண்ணனுக்கு திரும்ப அழைக்க, நல்லவேளை எடுத்தார் மனிதர்.

“இங்க ஒரு பிரச்சனை, ஜனகன் காணோம். யார் வேலை, எதுக்காகன்னு எதுவும் தெரியல, பசுபதிகிட்ட தான் விசாரிச்சிட்டு இருக்கோம், எனக்கு தெரியாதுன்னு கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்றான், பார்க்கணும், வீட்ல இப்போதைக்கு தெரிய வேணாம்..” என்று சொல்ல, அமைதியில் மொத்த பேருக்கும் கேட்டுவிட்டது.

“ஐயோ என் தம்பி..” என்று பானுமதி கதறிவிட,

“டேய் என்னடா பண்ற..?” அண்ணன் போனில் கத்தினார். “வைச்சுட்டு சமாளி.. வெளியே விஷயம் கசியக்கூடாது, அங்கேயே இருந்து பார்த்துக்கோ..” என்று அதட்டி வைக்க, கீர்த்தனா நடுங்கி போய் கீழே அமர்ந்துவிட்டாள். இழுத்து பிடித்த நம்பிக்கை உடைய கண்ணீர் அதன் வேலையை செய்தது. கீர்த்தி என்று வீட்டு பெண்கள் அவளை அணைத்து கொள்ள, மாமா, மாமா என்று அவ்வளவு அழுகை.

இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமான பசுபதியோ அங்கு எனக்கு எதுவும் தெரியாது  என்று சாதித்து கொண்டிருந்தான். கெஞ்சி, மிரட்டி, ஏன் வேலய்யன் அடிக்கவே சென்றும் அவனிடம் இருந்து ஒரு வார்த்தை கூட வாங்க முடியவில்லை.

“நான் தான் கற்பூரம் அடிச்சே சத்தியம் பண்ணிட்டேன் இல்லை, அப்படியும்  நம்பலைன்னா துண்டு போட்டு தாண்டுறேன், ஜனகன் காணாம போனதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அப்பறம் உங்க இஷ்டம்..” என்றான் நெஞ்சை நிமிர்த்தி தெனாவட்டாக.

தேவேந்திரனை விட்டால் அவன் எலும்பை எண்ணிவிடுவார், காரியம் பெரிது. பல்லை கடித்து நிற்க, அவரின் அண்ணன் தான் விடாமல் கேட்டு கொண்டிருந்தார். “இன்னும் மூணு நாள்ல கல்யாணம், இப்போ போய் இந்த வேலை பார்த்து வச்சிருக்கீங்க, உங்களுக்கு அப்படி அந்த நிலம் வேணும்ன்னா உட்கார்ந்து பேசி தொலைய வேண்டியது தானே..” என,

“அதெல்லாம் நிறைய பேசியாச்சு, உங்க சம்மந்தி தான் ஒத்து வரல..” பசுபதி சொல்ல,

“அது கோயில் நிலம்டா பன்னாடை..”  வேலய்யன் கத்தினார்.

“கோயில் நிலம் தானே, உன்னது இல்லையில்லை, அப்பறம் என்ன இதுக்கு நீ கிடந்து குதிக்கிற..” பசுபதி திமிராக சொல்ல,

“நான் குதிக்காம, என் அய்யா சாமிக்கு கொடுத்ததை என்ன தைரியத்துலடா உன் பேருக்கு எழுதின..? சொத்து ஆசை அவ்வளவு பிடிச்சுது ஆட்டுதா உன்னை..” வேலய்யன் திரும்ப அடிக்கவே போனார்.

“இந்தா இன்னொரு முறை கிட்ட வந்த அண்ணன் எல்லாம் பார்க்க மாட்டேன்..”

“உன் வாயால என்னை அண்ணன்னு சொல்லாத..” வேலய்யன் வெறுப்பாக சொன்னார்.

“எனக்கும் உன்னை அண்ணன்னு கொஞ்ச ஆசை ஒன்னுமில்ல, கழுதை நம்ம ரத்தம் அப்படி தானே சொல்லுது, இப்போ என்னத்துக்கு தேவையில்லாத பேச்சு, எல்லாம் இடத்தை காலி பண்ணுங்க.. நடுராத்திரில வீட்டு வாசல்ல  உட்கார்ந்து பஞ்சாயத்து பேசிகிட்டு..”

“என் மகன் எங்கன்னு தெரியாம நீ எங்கேயும் நகர முடியாது.. எங்க அவன் சொல்லு..”

“யோவ் அதான் சொல்றேன் இல்லை எனக்கு தெரியாதுன்னு திரும்ப திரும்ப கேட்டுகிட்டு.. ஏன் மகன்னு வரவும் நிலத்தை தூக்கி கொடுத்துடுவியா என்ன..?”  அவரை ஆழம் பார்க்க,

“நிலம் வேணும்ன்னா என் மாப்பிள்ளையை தூக்குவியோ..? சாவடிச்சிடுவேன், ஒழுங்கா சொல்லு எங்க  ஜனா..?” தேவேந்திரன் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவனுக்கு அருகில் சென்றுவிட்டார்.

“கிட்ட வந்தா பயந்திடுவோமா..” பசுபதி நக்கலாக சொல்ல,

“உன்னை பயமுறுத்த எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது, எனக்கு தேவை என் மாப்பிள்ளை..” என்ற தேவேந்திரன் பார்வையை பின்பற்றி தானும் பார்க்க, அங்கிருந்த காரில் உள்விளக்குகள் ஒளிர்ந்தன. அதில் அவன் பெரிய மகன் குடும்பமே  அடைக்கட்டிருந்தனர். சுற்றி நான்கு ஆட்கள்.

“என்.. என் மகன்..” என்று அவர் அலற,

“உன் சின்ன மகனையும், மகள் குடும்பத்தையும்கூட  தூக்கியாச்சு, இங்க தான் வந்திட்டிருக்காங்க..” என்றார் தேவேந்திரன். அவரின் அண்ணனே மிரண்டுதான் விட்டார் தம்பியின் வேகத்தில். பசுபதியிடம் இவ்வளவு நேரம் இருந்த தெனாவட்டு மறைந்து, வேர்த்த முகத்தை துடைத்து கொண்டார்.

Advertisement