Advertisement

பொம்மி சேரியில் இருக்க, ஜனகன் கண்கள் அவள் மேல் நொடி படிந்து விலகியது. “முதல்ல உனக்கு எடுத்துடலாம்..” என்று ஜனகனுக்கு எடுத்தனர்.

“நீங்களே செலக்ட் பண்ணுங்க..” என்று அக்கா மகள்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டான். அதிதி மிக உற்சாகத்துடன் செலக்ட் செய்து மாமனிடம் காட்ட, “உன் அக்கா ஓகே சொன்னா எடுத்துடு..” என்றவன், தேவேந்திரனிடம் சென்றான்.

அவர் தள்ளி போனில் தீவிரமாக பேசி கொண்டிருக்க, என்ன மாமா..? என்றான் சைகையில். “நான் கூப்பிடுறேன்..” என்று வைத்தவர், “இது அங்க ஹோட்டல்ல ஏதோ டென்ஷன்.. நீங்க எடுத்துட்டீங்களா..?” என்று கேட்டார்.

“பார்த்துட்டு இருக்காங்க..” என்ற ஜனகனுடன் வந்தவர், பத்து நிமிடத்தில் வேலையை முடித்தார்.

“ஏன்ப்பா இவ்வளவு அவசரம்..? மாமாக்கு இன்னும் செயின் மாடல் பார்க்கலாம்ன்னு இருந்தேன்..” அதிதி முகம் சுருக்க,

“நீ எனக்கு பார்த்த மாதிரி தெரியல, செயின் எடுத்து உன் கழுத்துல தான் வைச்சுட்டிருந்த..” ஜனகன் கேலியாக சொன்னான்.

“மாமா..” என்று அதிதி சிணுங்க, அதற்குள் பணம் கட்டிவிட்டு வந்துவிட்ட தேவேந்திரன் “நாம கிளம்பலாம்..” என்றார்.

“கிளம்புறதா..? பொம்மிக்கு நகை எடுக்கணும்ன்னு சொன்னேன் இல்லை….” என்றான் ஜனகன்.

“இன்னொரு நாளைக்கு பார்த்துக்கலாம் ஜனா, இப்போ போகணும்..” என்று பரபரத்தார் மனிதர்.

“இன்னொரு நாளுக்கு நம்மகிட்ட நாள் எங்க இருக்கு..? நீங்க வேணும்ன்னா போங்க, நான் எடுத்துட்டு கொண்டு வந்து விட்டுடுறேன்..” என்றான்.

“சரி.. பத்திரம்..” என்ற தேவேந்திரன் சிறிது தூரம் சென்று திரும்பி வந்தவர், “பைக்ல எப்படி இரண்டு பேரை கூட்டிட்டு வருவ, நான் அதிதியை கூப்பிட்டுக்கிறேன், நீங்க சீக்கிரம் முடிச்சுட்டு வந்து சேருங்க..” என்று இளைய மகள் மறுப்பை கண்டுகொள்ளாமல் அழைத்து கொண்டு கிளம்பிவிட்டார்.

“என்ன ஆச்சு உன் அப்பாக்கு இந்த பரபரக்கிறார்..? ஹோட்டல்ல ஏதோ பிரச்சனை போல..”  ஜனகன் தோளை குலுக்கி கொண்டவன், “என்ன எடுத்துகிற..?” என்று நகைகளை பார்வையிட்டவண்ணம் கேட்டான்.

“பட்ஜெட் மாமா..” என்று பெண் கேட்க, ஜனகன் திரும்பி எதிர்காலத்தவளை பார்த்தான். தொண்டையை செருமி கொண்டு, “தாய்மாமா சீர்க்கு நகை.. உனக்கு வேணும்ன்றதை எடு.. பட்ஜெட் எல்லாம் இல்லை..” என்றான்.

பொம்மி என்ன எடுக்க என்று குழம்ப, “அந்த மாங்காய் மாலை பார்ப்போமா..?” என்று டிஸ்பிளேவில் இருந்ததை காட்டி கேட்டான்.

“அது பவுன் கூட வரும் மாமா..” அக்கா மகள் மறுக்க,

“வரட்டும்.. பார்ப்போம்..” என்றவன், எடுத்து தர சொல்லி பார்த்தான். பதினைந்து பவுனுக்கு இருந்தது.

மெல்ல குனிந்து மொபைலில் கணக்கு பார்த்தவள், “இது ரொம்ப பெருசா இருக்கு மாமா.. நாம அந்த நெக்லஸ்  பார்ப்போம்..” என்றாள்.

“இது உனக்கு நல்லா இருக்கும்டி பொம்மை..” என்று அவளின் காதுக்கருகில் கிசுகிசுத்தான். மாமனின் புதிதான மூச்சு காற்றில் அவள் காதுகள் சூடாகி சிலிர்க்க,  முடியை ஒதுக்குவது போல காதை தேய்த்துவிட்டு கொண்டவள்,

“சின்னதா இருந்தா அடிக்கடி போட்டுக்க முடியும் மாமா.. அம்மா எனக்கு எடுத்த நகையிலே காசு மாலை, முள் மாலை எல்லாம்  பெருசா இருக்கு, இதுவும்ன்னா போட்டுக்கவே மாட்டேன்..” என்றாள் பெண்.

ஜனகன் யோசித்தவன், “சரி அந்த நெக்லஸையே காட்டுங்க..” என்றான். பவுனும் சரியாக  இருக்க, கீர்த்தனா அதுவே ஓகே என்றுவிட்டாள். ஜனகனுக்கு  கண்கள் அந்த மாலையிலே இருந்தது.

அவனின் அக்கா பானுமதியோ  மகளிடம், “ஜனா செய்ற தாய்மாமா சீர் உன்னோட  முடியறதில்லை. உனக்கு பின்னாடி எல்லோருக்கும் செய்யணும், இன்னைக்கு உனக்கு செய்றது தான் நாளைக்கு எல்லோருக்கும், பார்த்து குறைஞ்ச பவுன்ல எடு..” என்று சொல்லியே அனுப்பியிருந்தார். அதை வைத்து இவள் மறுத்திருக்க, மாமனுக்கு விட மனமில்லை போல.

“சரி போட்டு மட்டுமாவது காட்டு..” என்றான். விற்பனையாளர் எடுத்து கொடுக்க, கீர்த்தனா அணிந்து காட்டினாள். அவளின் மாம்பழ வண்ண சில்க் புடவைக்கும், அந்த மாலைக்கும் அள்ளியது.

பொம்மை அழகி..!

“நல்லா இருக்குடி.. எடுத்துக்கலாமா..?” என்றான் மீண்டும்.

“மாமா.. நெக்லஸ் ஆல்ரெடி எடுத்தாச்சு, நாம கிளம்பணும், அப்பா போன் பண்ணிட்டாங்க..” என்றவள், மாலையை கழட்ட போக,

“இருடி..” என்று நிறுத்தி மொபைலில் போட்டோ எடுத்து கொண்டான். பில் போட்டு முடியவும், “புடவை எடுக்கணும் பொம்மா..” என்றான்.

“நகை மட்டும்ன்னு நினைச்சேன் மாமா.. லேட் ஆகிடுச்சே..”  என்றாள் அப்பா மறுமுறை அழைத்ததில்.

“சீர்ல புடவை வைக்கணும்ன்னு தெரியாதா,  பக்கத்திலே கடை.. எடுத்துட்டு போயிடலாம்,  நான் பேசிக்கிறேன்..” என்றுவிட்டவன்,  புடவை எடுக்க சென்றான்.

“பட்டு சேரி கிராண்டா எடு.. இங்க பணம் பார்க்காத..”  என்றான்.

“மாமா.. அது..”

“எடு எடு.. இந்த மரகத பச்சை நல்லா இருக்கு..” என்று அவள் மேல் வைத்து காட்ட, அதையே எடுத்து கொண்டான். விலை அதிகம் தான். மறுத்தால் நிச்சயம் கோவப்படுவேன் என்று கண்ணாலே மிரட்டினான் மாமன்.

பில் போட்டு வருவதற்குள் தேவேந்திரன் பல முறை அழைத்துவிட்டார்.  கடுப்பானவன் எடுத்து, “யோவ் மாமா இன்னொரு முறை கூப்பிட்ட உன் பொண்ணை என் வீட்டுக்கே தூக்கிட்டு போயிடுவேன் பார்த்துக்கோ..” என்றான் மிரட்டலாக.

“நேரம் ஆச்சுடா.. சீக்கிரம் கிளம்புங்க, இல்லை.. நீங்க அங்கேயே இருங்க, கார் அனுப்புறேன்..” என,

“நாங்க கிளம்பியாச்சு..” என்று வைத்துவிட்டான் இவன். பைக்கில் அவனின் பொம்மையை ஏற்றி கொண்டவன், “சாப்பிட்டு போலாமா..?” என்றான்.

“மாமா நோ மாமா.. கண்டிப்பா வீட்ல திட்டு வாங்குவேன்.. போலாம்..” என்றாள் பெண்.

“அப்பாவும் மகளும் ரொம்ப பண்றீங்க..” என்று பைக்கை ஊர்ப்பக்கம் விட்டான். வழியில் பூ விற்க வண்டியை நிறுத்தி வாங்கினான்.

“வைச்சிருக்கேனே மாமா..” பெண் சொல்ல,

“இருந்தா என்ன, வை..” என்று வாங்கி கொடுக்க, தலையில் இருந்ததை எடுத்து, இதை வைத்து கொள்ள, பைக் கிளம்பியது. ஊர் வரவும் ஹெல்மெட் கழட்டி டேங்கர் மேல் வைத்துக்கொண்டான்.

எதாவது பேச வேண்டும் போல மனது நமநமக்க, வேகத்தை குறைத்து கண்ணாடி வழி அவனின் பொம்மியை பார்த்தவன், “ஏன் இப்போ எல்லாம் முடியை கட் பண்ணிடுற..?” என்று கேட்டான்.

“மெயின்டைன் பண்ண முடியல மாமா..” பெண் அவனுக்கருகில் வந்து சொல்ல, மல்லிகை மணம் அவனை அணைத்தது.

“முடியை மெயின்டைன் பண்ண முடியாதளவுக்கா மேடம் பிசி..” என்று கேட்க,

“இனி கட் பண்ணல மாமா..” என்றாள் பெண். ஜனகன் பைக் வேகம் இன்னும் குறைந்து போனது.

“மாமா.. இதை விட சுலோவா போக முடியாதா..?” அழுவது போல கீர்த்தனா கேட்க,

“போலாமே..” என்றவன் முழுதும் குறைத்துவிட,

“மாமா.. படுத்தாதீங்க.. போங்க..” என்று தோள் தட்டினாள் பெண்.

“எனக்கே இன்னைக்கு தான் உன்கூட இருக்கணும் போல இருக்கு, நை நைன்னு அப்பாவும் மகளும் உயிரை வாங்குறீங்க..” என்றவன் வேகத்தை கூட்டினான்.

என்னது..? என்கூட இருக்கணும் போல இருக்கா..? அக்கா மகள்ல இருந்து கட்டிக்கிற பொண்ணா தெரியறேன் போல..

வீடு வர பைக் வெளிகேட்டிலே நிறுத்திவிட்டான். “ஏன் மாமா இங்கேயே நிறுத்திட்டீங்க, உள்ள வாங்க, சாப்பிட்டு போலாம்..” கீர்த்தனா சொல்ல,

“எனக்கு வேணாம், நான் சாப்பிட கூப்பிட்டதுக்கு மாட்டேன் சொல்லிட்டு இப்போ என்ன..?” என்றான் முறுக்கலாக.

“நேரம் ஆச்சுன்னு தானே மாமா..? அம்மா உங்களை கேட்பாங்க, வாங்க..” என்று இறங்கி நின்றாள்.

“என் அக்காகிட்ட நான் சொல்லிக்கிறேன், நீ உன் அப்பாகிட்ட போய் சேரு, என்னமோ அத்தனை போன் பண்றார், நேர்ல சிக்கட்டும்..” என, கீர்த்தனா முகத்தில் புன்னகை.

“என்னடி சிரிப்பு..?” ஜனகன் கிளம்ப போனவன் இறங்கி நின்றுவிட்டான்.

“புதுசா செய்றீங்க மாமா..” என்றாள் பெண் மறைக்காமல்.

“ஏன் உனக்கு எதுவும் இப்படி தோணலையா..?”

“இப்போ தானே உங்களுக்கு தோணியிருக்கு, எனக்கும் கண்டிப்பா தோண வைச்சிடுவீங்க..” என்றாள். ஜனகனிடம் வசீகர புன்னகை.

அவனின் கைகளை உரசிய சேலை முந்தானையை பற்றினான். கீர்த்தனா பார்த்து இழுக்க, “இருக்கட்டும்.. இப்போ என்ன..?” என்றவன் கைகள் நீண்டு பெண்ணை தன்னருகில் கொண்டு வந்தவன், அவளை மெல்ல தோளோடு அணைத்து கொண்டான்.

வாஞ்சனையான அணைப்பு. நல்லபடியே வாழ்வோம் என்று நம்பிக்கை முளைத்த வெள்ளி தினம் அது.

இருவருக்கும் இடையில் உரசும் நெருக்கமே தவிர இறுக்கும் நெருக்கம் இல்லை. இந்த அணைப்பே அவர்களின் இதய துடிப்பை எகிற வைத்து கொண்டிருந்தது. மூச்சு காற்றின் உஷ்ணம் கூட, அவளை விடுவித்தான். கீர்த்தனா முடியை ஒதுக்கி, முந்தியை பிடித்து கொண்டாள்.

இவனின் போன் ஒலிக்க, “உள்ள போ..” என்றபடி தேவேந்திரனின்  போனை கட் செய்தான். கீர்த்தனா தலையசைத்து செல்ல, பைக்கை கிளப்பி கொண்டு வீட்டு பக்கம் சென்றான். ஆனால் வீடு சென்று சேரவில்லை.

Advertisement